அமெரிக்காவில் ஓர் ஊராம். அந்த ஊரில் ஓர் அப்பா, அம்மாவாம். அவர்களுக்கு ஒரு பிள்ளையாம். பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு வந்து டி.வி. பார்த்து, விடியோ கேம்ஸ் விளையாடி எல்லாம் அலுத்துப்போய் அவனுக்கு ஒரு நாய்க்குட்டி தேவைப்பட்டது. பெற்றோர்களிடம் கேட்டான். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். வார இறுதியில் மட்டும் ஓரளவு மகனுடன் விளையாட அவர்களுக்கு நேரமிருக்கும். ஆகவே, “சரி, நாய்தானே வாங்கிக்கொடுத்து விடுவோம். நம்மைவிட அது அவனிடம் நன்றாகப் பாசமாகத்தான் இருக்கும்” என்றுஅனுமதியளித்தார் அப்பா.
முடிவெடுத்தால் ஆச்சா? அதற்கு என்ன செலவாகும் என்று பார்க்க வேண்டாமா? அமெரிக்கநாய் என்ன சென்னை நாய் போல் ‘பொறையும், பிஸ்கெட்டும்’ தின்றா வளரும்? தம்பதிசமேதராய் ஆன்லைனில் ஷாப்பிங் விசாரித்தார்கள், பட்ஜெட் போட்டார்கள்.கம்ப்யூட்டரில் ஸ்பெரட்ஷீட்டே தயார் செய்துவிட்டாள் தாயார்.
தோராயமாய் 1000 டாலருக்கு ஒரு தரமான நாய் வாங்கலாம் என்று தெரிந்தது. மிச்ச மீதிசோற்றைப் போட்டெல்லாம் அமெரிக்க நாய் வளர்க்க முடியாது. “கேவலமாய் உணவளித்து நாயைக் கொடுமைப்படுத்தினீர்கள், இது மிருகவதை” என்று போலீஸ் வந்து பிடித்துக் கொண்டுபோய் கோர்ட்டில்நிறுத்திவிடும். எனவே ஸ்பெஷலாய் நாய்களுக்காக விற்கும் உணவுதான் வாங்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு மருந்துச் செலவு, நாய் விளையாட பொம்மை, லைசென்ஸ், மருத்துவஇன்ஷுரன்ஸ், முடிவெட்டும் செலவு, படுத்து உறங்கக் கூடாரம், அது அமர்ந்து ‘சூச்சா, மூச்சா’ போக உபகரணம் என்று எப்படியும் ஒரு வருடத்திற்கான செலவு 1600 டாலர் ஆகும் போலிருந்தது.
அலுத்துக் கொண்டார் அமெரிக்க அப்பா. “இதற்கு ஆப்கனிலிருந்து நல்லசாதி நாய் வாங்கிவரச் சொல்லலாம்”
“ஏனாம்?” என்று ஆச்சரியத்துடன் பார்த்த மனைவியிடம், “மனுஷனுங்களே அங்க ரொம்ப சகாயவிலையாம். நாய் 1 டாலருக்குக் கிடைக்கலாம். ஏதாச்சும் மீந்து போன நூடுல்ஸும் பர்கரும் தூக்கிப் போட்டால், சமர்த்தாய்ச் சாப்பிட்டு விட்டு வாலாட்டிக் கிடக்கும்”
மேற்சொன்னதில் உரையாடல் கற்பனைதான். ஆனால் உள்ளடக்கம் என்னவோ துரதிர்ஷ்டவசமாகஉண்மை.
தீவிரவாதத்தை ஒழிக்கப் போகிறோம், WMD பறிமுதல்செய்யப்போகிறோம் என்று தொடை தட்டி ஈராக்கிற்கும் ஆப்கனுக்கும் படையெடுத்துச் சென்றதல்லவாஅமெரிக்கா? தீவிரவாதத்தையும் ஒழிக்கவில்லை; சரவெடியையும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக ஈராக்கில் இருக்கும் எண்ணெயை எடுத்து மேலும் தீவிரவாதத்திற்கு ஊற்றிப் பற்ற வைத்ததுதான் மிச்சம். இரு நாடுகளிலும் போராளிகள் மேலும் மேலும் உருவாகி இப்பொழுதுஅவர்களுடன் யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு ஊர் வந்து சேரவும் முடியவில்லை. பிடித்திருப்பது புலி வாலல்லவா?
யார் போராளி, யார் அப்பாவிப் பொதுசனம் என்று தெரிந்து கொள்ள இயலாத குழப்பம் ஒருபுறம்.இழுத்துக் கொண்டு செல்லும் போரும், அதில் தன் பங்குக்கு ஏற்படும் உயிரிழப்புஒருபுறம், என்ற எரிச்சலில் உள்ள அமெரிக்க இராணுவம்,”எத்தைத் தின்றால் பித்தம்தெளியும்” என்ற கதையாக ஒண்ணுக்கு இருக்கச் செல்பவன், சாயா குடித்துக்கொண்டிருப்பவன், திருமண விருந்திற்கு அடுப்பு பற்ற வைப்பவன் என்று சகட்டுமேனிக்குஅவ்வப்போது சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
என்ன ஆகும்? பொதுமக்கள் மத்தியில் கோபம் பெருகி மேலும் ரௌத்திரம் பெருகும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளத்தைக் கவர்ந்து அமைதி நிலைநாட்டச்சென்றவர்கள், ஒட்டுமொத்தமாக அவ்விரு நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்றுக் கொண்டுநிற்கின்றனர்.
தனது தவறு புரிந்தது இராணுவத்திற்கு. ஆனால் நிறுத்த முடியவில்லை. அதற்கு இரண்டுமுக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று இயலாமை. அடுத்தது அகங்காரம். இவன் அப்பாவி, இவன்போராளி என்று இனம் பிரித்துக் காணும் வகையில் நிச்சயமான துப்பு கிடைக்காத துப்புக்கெட்ட நிலை முதலாவது. சக இராணுவ வீரனை பலி கொடுக்கும்போதுஏற்படும் குரோதத்தில் அப்பாவியாக இருந்தாலும் சரி. போட்டுத் தள்ளி விடுவோம் என்றுஏற்படும் வெறி இரண்டாவது. இவையெல்லாம் பிரச்சனையையோ போரையோ முடிவுக்குக் கொண்டுவராமல் நிலைமையை மோசமாக்கிக் கொண்டு தான் செல்கிறது என்பதை வெள்ளை மாளிகை அறியாமல்இல்லை.
சொந்தத்தையும் பந்தத்தையும் குண்டு வீச்சில் நிலத்தையும் பறிகொடுத்துக்கொந்தளிக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். “தெரியாமல் சுட்டு விட்டோம். தவறு நிகழ்ந்து விட்டது. உங்களது துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.எங்களது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தாருங்கள் … இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுஉறவுகளை இழந்து அழும் மக்களுக்கு லாலிபாப், வாழைப்பழத்திற்குப் பதிலாக டாலர்கள் கொண்டு வந்துகொடுத்தனர். ஆனால் அதுதான் மிகப் பெரும் அநியாயமாகிவிட்டது. ஏனென்றால்,
ஒரு குழந்தையோ, பெரியவரோ இறந்திருந்தால் அக்குடும்பத்திற்கு 1500லிருந்து 2500 டாலராம். சும்மா கைகால் போயிருந்தது, சொச்ச வாழ்நாளுக்கும் ஊனமாகும் வகையில்காயம் ஏற்பட்டிருக்கிறது என்றால் 600லிருந்து 1500 டாலராம்; ‘தவறான தாக்குதல்’களால் வாகனங்களைஅழித்திருந்தால் 500லிருந்து 2500 டாலராம்; விவசாய நிலம் இருக்கிறதில்லையா அதைஅழித்திருந்தால் 50லிருந்த 250 டாலர் தருவார்களாம். எப்படி இருக்கிறது பட்டியல்?
ஒரு டாலர் என்பது இன்றைய கணக்கில் உத்தேசம் ரூ.44.50. அதாவது ஓர் உயிரின் விலைரூ.67,000 லிருந்து ரூ.1,11,000 வரை. மற்றதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.அரசியல்வாதிகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் இந்த பட்டியலைப்பார்த்து கொதித்துப் போய்ப் பேசுகின்றனர்.
“அமெரிக்க இராணுவ வீரன் ஒருவன் கொல்லப்படுகிறானா, வந்து ஒரு கிராமத்தையேஅழிக்கின்றனர். எங்களது உயிர்களுக்கு மிருகத்தைவிடக் கேவலமாக ஒரு விலையைநிர்ணயித்துத் தூக்கியெறிகின்றனர். இதே ஓர் அமெரிக்கனை யாராவது கொன்றுவிட்டு, தவறுதலாய் கொன்றுவிட்டேன் இந்தா பிடி 10,000 டாலர்கள்என்று கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா அவர்கள்”என்று ஆப்கனைச் சேர்ந்த 55 வயதுஇஸ்மாயில் கேட்டதாகப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. 10,000 டாலர்களுக்கு 5 ஆண்டு பழைய கார்கூட அமெரிக்காவில் சுலபத்தில் கிடைக்காது. நிலத்திற்கு அளிக்கும் 50 டாலரில், அமெரிக்காவில் ஒரு பெண்மணி முடிவெட்டிக்கொள்ளத் தான் சரியாக இருக்கும். அப்படியே நகங்களை நீட்டி “ஒப்பனைசெய்” என்றால் அதற்குத் தனியாக 40 டாலர் கேட்பார்கள்! – இதல்லாம் அவருக்கு எப்படித் தெரியும்?
அமெரிக்க அதிகாரிகளோ, “அதிகாரபூர்வமான இழப்பீட்டுப் பட்டியலெல்லாம் எங்களிடம்இல்லை. பாதிப்படைந்தவர் குடும்பத்திற்கு அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையிலான ஏதோஎங்களின் சிறு நன்கொடைதான் இது” என்று இதை நியாயப்படுத்தியே பேசுகின்றனர்.
கந்தஹார் நகரைச் சேர்ந்த ஒருவர். ஏதோ தன் சோலியைப் பார்க்க பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தார். என்ன நினைத்துப் பயந்ததோ இராணுவம் தெரியவில்லை, பஸ்ஸை நோக்கி சுடஆரம்பித்துவிட்டது. இவர் இறந்து போனார். மூன்று நாட்கள் கழித்து,’நன்கொடை’ப் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சில அமெரிக்க இராணுவ அதிகாரிகள் வர, டாலரையும் அவர்களையும்வீட்டை விட்டுத் துரத்தியிருக்கிறார் இறந்வரின் தந்தை. இது மற்றொரு செய்தி.
இத்தனைக்கு இடையிலும் ஆப்கன் மக்களின் நகைச்சுவை உணர்வு குறைந்ததாய்த் தெரியவில்லை.பொதுமக்களை இப்படிப் பொறுப்பற்றத்தனமாய்க் கொல்லும் இரண்டு அமெரிக்கர்களுக்கு ஆப்கன்அரசாங்கம் மரண தண்டனை விதித்தால் அப்பொழுது மக்கள் ஆப்கன் அரசாங்கத்தைநம்புவார்கள். அமெரிக்கர்களும் அடுத்த முறை ஓர் எறும்பைக் கொல்லுவதாக இருந்தாலும்யோசிப்பார்கள்” என்று ஹெல்மான்ட் (Helmand) மாகாணத்தைச் சேர்ந்த ஓர் ஆப்கானியர்பேட்டியளித்துள்ளார். அந்த அப்பாவியை என்ன சொல்வது? ”
இதனிடையே கடந்த திங்களன்று பொதுமக்கள் பயணம் செல்லும் பஸ்ஸை நோக்கி அமெரிக்கத்துருப்புகள் சுட்டதில் நான்கு பேர் இறந்து போயுள்ளனர். டஜனுக்கும் அதிகமானோர்காயமுற்றுள்ளனர். மிகவும் கவலையடைந்துபோன ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் (Hamid Karzai), சர்வதேசப்பாதுகாப்புப் படைகள் இப்படியெல்லாம் பொதுமக்கள் உயிரைச் சுண்டைக்காயாய்நினைக்கக்கூடாது என்று முதன்முறையாக ஆதங்கப் பட்டிருக்கிறார். இதைக் குறித்து அமெரிக்கஅதிபர் ஒபாமாவுடன் கலந்துரையாடியிருக்கிறார். “ஆமாம்! ரொம்பப் பாவமாகத்தான்இருக்கிறது. ஏதாவது நடவடிக்கை எடுத்து கொஞ்சம் மீட்டருக்கு மேல் பார்த்துப்போட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்வோம்” என்று இருவரும் பேசிக்கொண்டதாக ஆப்கன் சார்பில்சியாமக் ஹெராவி (Siamak Herawi) தகவல் தெரிவித்துள்ளார்.
சென்ற வருடம் அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவிற்கு வழங்கப்பட்டதில்லையா? அதற்கானபரிசுத் தொகை பதினாலு இலட்சம் டாலர் அவருக்குக் கிடைத்தது. அந்த மொத்தப்பணத்தையும் 10 அறக்கட்டளைக்குப் பகிர்ந்து அளித்துவிட்டார் அவர். அதில் ஒரு இலட்சம்டாலர் Central Asia Institute எனும் அமைப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் உள்ள குக்கிராமங்களில் நற்பணியாற்றி வருகிறதுஎன்பது மட்டும் உபதகவல்.
மற்றபடி தினமும் ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியும் குண்டுகளும் வெடித்துக் கொண்டேதான்இருக்கின்றன. பலவேளைகளில், எல்லையோரத்தில் உள்ளவர்களையும் ட்ரோன் (drone) எனும் ஆளில்லா விமானம் குறிதவறிப்போய்த் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் எவரைக் குறைசொல்ல? ஏனெனில் அந்த விமானங்களில்தான் ஆளே இல்லையே!
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 28 ஏப்ரல் 2010 அன்று வெளியான கட்டுரை