‘ஒரே அளவு, எல்லோருக்கும் பொருந்தும்’ என்ற விளம்பர வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவிலுள்ள கடைகளில் கையுறை, காலுறை, குளிருக்குக் கதகதப்பு அளிக்கும் தலைக் குல்லாய் போன்ற சமாச்சாரங்களை, one size fits all என்று லேபிள் ஒட்டி விற்பார்கள். நல்லவேளை, இடுப்பு உள்ளாடைக்கு சைஸ் தரம் பிரித்திருக்கிறானே புண்ணியவான் என்று நினைத்துக் கொள்வேன். இந்த விஷயத்திற்கும் தலைப்பிற்கும் பிறகு வருவோம். அதற்குமுன் கிரேக்க சுற்றுலா. அதுவும் புராண கிரேக்கம்.

அட்டிகா (Attica) என்று கிரேக்க நாட்டில் ஒரு பிராந்தியம். அந்த நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் (Athens) இந்த பிராந்தியத்திற்குள் அடக்கம். இந்தப் பிராந்தியத்தில் கொள்ளைக்காரன் ஒருவன் இருந்தான். கத்தியைக் காட்டினோமா, மிரட்டினோமா, கொள்ளையடித்தோமா என்றில்லாமல் அவன் குரூரமான கொள்ளைக்காரன். தனது ஊரைக் கடந்து செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடு செய்திருந்தான் அவன்.

அவனது விடுதியில் இரும்புக் கட்டில் ஒன்றை செய்து வைத்துக் கொண்டு, “ஐயா வாங்க! அம்மா வாங்க! நீங்கள் நெட்டையோ குட்டையோ எப்படியான உயர அமைப்பாக இருந்தாலும் பிரச்சினையில்லை, என் கட்டில் எல்லோருக்கும் பொருந்தும். இரவு தங்கி இளைப்பாறி விட்டுச் செல்லலாம்” என்பது போல் மக்களை அழைப்பான் அவன்.

எலாஸ்டிக்கில் கட்டிலைச் செய்திருந்தாலாவது பிரச்சினையில்லை! இரும்பு கட்டில் அனைவரின் நீளத்துக்கும் எப்படிப் பொருந்தும்? அங்குதான் அவனது குரூரம் ஒளிந்திருந்தது.

பயணியைக் கட்டிலில் கால் நீட்டிப் படுக்கச் சொல்வான். கட்டிலை விட ஆள் நீளமானவரா? அப்படியே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு, அதிகப்படியான காலின் நீளத்தை வெட்டி எறிந்துவிடுவான். நீளம் குறைவானராக இருந்தால்? பெரிய சுத்தியலை எடுத்துவந்து, ‘உன்னைத் தட்டி, சப்பையாக்கி நீளமாக்குவேன் பார்’ என்று ஒரே போடு. எப்படிப் பார்த்தாலும் ‘ஆப்பரேஷனும் தோல்வி, பேஷண்ட்டும் டெட்’ கதைதான். ஒருவர்கூட அவனது கட்டிலுக்குப் பொருத்தமான அளவில் அமைந்ததே இல்லை என்கிறது புராணம்.

இந்த கொலைகாரனின் பெயர்தான் ப்ரொக்ரஸ்தீஸ் (Procrustes). இவனுடைய இரும்புக் கட்டில், ப்ரொக்ரஸ்தீஸ் கட்டில் (Procrustean bed) என்று பெயர் பெற்று, பல்வேறு வகையான விஷயங்களை ஒரு குறிப்பிட்ட தரத்தில் பொருந்திப் போகும்படி கட்டாயப்படுத்தும் செயல்களுக்கெல்லாம் ‘ப்ரொக்ரஸ்தீஸ் கட்டில்’ என்று கெட்டபெயர் பெற்றுவிட்டது.

வில்லன் என்று இருந்தால் ஹீரோ இருந்தே ஆக வேண்டும் இல்லையா? தீயவர்களை எல்லாம் அழிக்கும் கிரேக்க புராண ஹீரோ தெஸியஸ் (Theseus), ஏதென்ஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். முள்ளை முள்ளால் எடுப்பதைப்போல் ப்ரொக்ரஸ்தீஸை அவனது கட்டிலில் படுக்கப்போட்டு அளந்தான் தெஸியஸ். அந்தக் கட்டில் ப்ரொக்ரஸ்தீஸுக்கும் பொருந்திப் போகவில்லை. செத்தான் துஷ்டன்.

‘செருப்பு பொருந்தவில்லை என்றால், காலையா வெட்டிக்கொள்ள முடியும்?’ என்று நம் ஊர்களில் சொல்வது உண்டு. அப்படிக் குரூரமாக காலை வெட்டும் செயல்தான் ‘ப்ரொக்ரஸ்தீஸ் கட்டில்’.

புரியவில்லை, இன்னும் சற்று விளக்குங்கள் என்பவர்களுக்கு இன்னும் ஓர் உதாரணம்… ‘பொது சிவில் சட்டம்!

-நூருத்தீன்

புதியவிடியல் 2016 நவம்பர் 1-15 இதழில் வெளியானது

Related Articles

Leave a Comment