வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 3

by பா. தாவூத்ஷா

பிரம்ம க்ஷத்திரிய வைசியர்களென்னும் மேற்குல மக்களெல்லாம் நியோகம் செய்துகொள்ளலாம். பத்துக் குழந்தைகளைப் பெறும் பொருட்டு ஒவ்வொரு தாரமிழந்தவனும் நான்கு விதவைகளை

ஒருத்திக்குப்பின் மற்றொருத்தியாய் நியோகம் செய்துவரலாம். இவ்வாறே ஒவ்வொரு விதவையும் நான்கு புருஷர்களை ஒருவர்பின் மற்றொருவராய் நியோகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

“இதையேதான் வேதமும் ஊர்ஜிதப்படுத்துகிறது.”

इमांतवमिन्रद मीड : सुपुत्रां सुभगांकृणु ।
दशसयां पुत्रानाधहि  पतिमकादशांकृधि ॥

ருக். 10. 85. 48

(ஆ வேத பகவானே! ஏ அருள் நிறைந்த பரமேசுவரா! உனக்கேற்றவாறே இவ்வித அதி சுலபமான சிற்றின்ப லீலைகளை ஏற்படுத்தி, மேற்குலத்தவரை இதுகாறும் இவ்வுலகில் நிலைத்திருக்கச் செய்தாய். இல்லையேல் இன்றளவும் உயர்குலத்தவரின் வாசனையே இத்தரணியில் இல்லாமல் ஒழிந்து போயிருக்குமே! அப்பொழுது யாதொரு பிரம்ம க்ஷத்திரிய வைசியரையேனும் ஈண்டுக் காண்பது அரிதாய்விடும். உன் நியோக தயையினால்தான் இக்காலையில் இத்துணை உயர்குல மக்களை இவ்வுலகில் காண்கின்றோம் போலும். ஆ என்ன விந்தை!

ஹே இந்த நியோகம் எத்துணைப் பெரிய தயைநிறைந்த புண்ணிய கைங்கரியமாய்க் காணப்படாநின்றது! ஏனெனின், உயர்குலத்தை நிலைநாட்டும் பொருட்டு ஓர் உயர்குலத்தான் தன்னுடைய மனைவிக்கு மற்றோர் உயர்குலத்தானைக் கொண்டு சுக்கிலதானம் செய்விப்பதையும் மனமுவப்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வேதம் அமைக்கப்பட்டுள்ளன. ஷாபாஷ்! உயர்குலத்தைச் சார்ந்த ஆண் பெண்களுக்கு இதுதான் அடையாளம்போலும்!

எனவே ஏன், எவ்வாறு இவர்கள் உயர்குல வியபிசாரர்களினின்றும் விலக்கப்பட் டிருக்கின்றனர்? இவ்விதமான உயர்குல மக்களாய் இருப்பதைக் காட்டினும் உத்தமமான தாழ்குல மக்களாய்ப் பிறப்பதில் என்னவிதமான ஈனமிருத்தல் கூடும்? இப்படிப்பட்ட உயர்குலத்தையும் இவர்களுடைய நியோகத்தையும் இவர்களுக்கு இதைக் கற்பிக்கும் வேதத்தையும் இவ்வேதத்தின் மஹரிஷியையும் கண்டு உத்தமசிகாமணிகள் நாணத்தால் தலைகுனியாது இருப்பர் என்று எண்ண ஏதுவில்லையே. கபீர்)

इमां तवमिन्रद …….  पतिमकादशांकृधि ॥

ருக். 10. 85. 45.

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்தததிகள் உடையவளாய்ச் செய்விப்பாயாக… ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக்கொண்ட புருஷனைக்கொண்டு பத்துப் பிள்ளைகளை ஈன்றெடுப்பாயாக…. பதினோராவது புருஷனை நியோகத்தினால் பெற்றுக் கொள்வாய்.” இவ் “வேத மந்திரப் பிரகாரம் ஸ்திரீ ஒருத்தி ஒவ்வொருவனாகப் பதினொரு புருஷர்களை நியோகத்தினால் அடைகிறதேபோல், புருஷர்களும் பதினொரு ஸ்திரீகளை அடையலாம்,” என்று தயானந்த்ஜீ எழுதுகிறார்.

(ஆஹா என்ன வேதம்! இவ் வேதத்தின் ஒழுக்கக் கற்பனையோ மகா மானமற்றதாய்க் காணப்படுகின்றது. இக் காரணத்தினால்தான் புத்தர்களும் ஜைனர்களும் பிரம்ம சமாஜிகளும் மற்றவர்களும் தயானந்தரின் வேதங்களுக்கு மாற்றமான அபிப்பிராயங் கொண்டு, அவ்வேதங்களை அருளிய ஈசுவரனையும் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களெல்லாம் வேதங்களை ஒத்துக்கொள்ளாததோடு நில்லாது, அவற்றின் மானக்கேடுகனைளயும் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். ஆரியர்களின் சொற்பிரகாரமும் அன்னவரின் குருவாகிய தயானந்த்ஜீயின் சொற்பிரகாரமும் உயர்தர மனிதர்களாகக் கருதப்படும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் பார்ஸீகளும் பிரம்மூக்களும் முஸ்லிம்களும் மற்றவர்களும் ஆரியவேதங்களின் அரைகுறையான தன்மையையும் அவற்றின் அறிவின்மையையுங் கண்டுமே அவற்றினின்றும் விலகிக்கொண்டனர். ஆனால், அவற்றை ஒப்புக்கொள்ளாது மறுத்தவரெல்லாரும் நாஸ்திகரென்று சுவாமி தயானந்த்ஜீ வாய்கூசாது கூறுகிறார்; மேலும் மற்ற மனிதர்களின் வேதங்களில் இப்படிப்பட்ட அனாசாரங்களும் அருவருப்பும் காணப்படாமலிருக்க, தயானந்தர் அவற்றையெல்லாம் தாக்கிப் பேசுவதில் மட்டும் அளவு கடந்த வீராவேசம் ததும்பியவராகவே காணப்படுகிறார். என்னே இவரின் பெண்மைத்தனமான பேடித்தனம்! கபீர்.)

வேதசாஸ்திரப் பிரகாரம் நியோகம் செய்துகொள்வதில் வியபிசார தோஷம், வெட்கம், பாபம் முதலியவை ஒன்றும் உண்டாகிறதில்லை என்று சுவாமிஜீ கூறுகின்றார். நியோகமென்பது வியபிசாரமாகாது; ஏனெனின், வியபிசாரத்தில் குறிப்பான ஒரு மனிதன் இல்லையாம்; அவளுடைய சேர்க்கைக்கும் நியாயக்கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதாம். ஆனால், நியோகத்துக்கு மட்டும் நியாய வரம்பென்பது உண்டாம்: தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து அவளுடைய ருது சாந்தியிலும் எவ்வாறு ஒருவன் வெட்கப்படுவதில்லையோ, அவ்வாறே நியோகத்திலும் வெட்கப்படுகிறதில்லையாம். வியபிசாரத் தொழிலில் இறங்கியவர்கள் கல்யாணமான போதிலும்கூட அந்தக் கெட்ட வழக்கத்தை விடுகிறதில்லையாம். நியோகத்துக்கு நல்ல மனிதர்களின் அனுமதியும், இருபக்கத்தின் பரஸ்பர ஒற்றுமையும் அவசியமாம். ஆதலின், மேலே கூறப்பட்ட தன் கருத்தாவது, ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரகாரம் எல்லோருக்கும் தெரியும்படியாய் வியபிசாரம் செய்துவரின், அதற்காக வெட்கப்பட வேண்டுவதின்று, என்பதேயாம். நாமும் இதைத்தான் தயானந்தருக்கு வலியுறுத்துகின்றோம். ஏனெனின், இவ்வாறாகவேதான் வேதசாஸ்திரப் பிரகாரம் வாமமார்க்கிகளும், சோலீமார்க்கிகளும்* மற்றும் பற்பல மார்க்கிகளும் தங்கள் தங்கள் காரியங்களும் பாபமற்றவை என்றும், வியபிசாரம் அல்லவென்றும், வெட்ககரமான செய்கைகளல்ல என்றுமே கூறாநிற்பர்.

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


*சத்தியார்த்த பிரகாசம் 11-ஆவது அத்தியாயம் பார்க்க. வாமமார்க்கம் இந்நூலின் மற்றோரிடத்தில் காணப்படும். சோலீமார்க்கமென்பது இவ்வாறாகும்: சோலீமார்க்கிகள்—தங்கள் மனைவிகள், புருஷர்கள், பிள்ளைகள், பெண்கள், சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், நாட்டுப் பெண்கள் ஆகிய அனைவரும்—ஒன்றாக ஓரிடத்தில் இரகசியமாய்க் கூட்டங்கூடி மதுபானம் செய்கிறார்கள். ஸ்திரீ ஒருத்தியை நிர்வாணமாகச்செய்து அவளுடைய இரகசிய இந்திரியங்களைப் பூஜித்து, துர்க்காதேவி என்று அழைக்கிறார்கள். மனிதனொருவனை நிர்வாணமாகச் செய்து அவனுடைய இரகசிய இந்திரியங்களுக்குப் பெண்களெல்லாரும் பூஜை செய்கிறார்கள். மதுபானம் செய்து மயக்கம் தெளிந்தபிறகு அங்குக் குழுமியிருக்கும் ஸ்திரீகள் எல்லோரின் ரவிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குலுக்கி ஒரு மட்பாண்டத்துள் போடுகிறார்கள். ஒவ்வொருவனும் தனித்தனியாக அங்கேபோய் அந்த மட்பாண்டத்துள் இருக்கும் ரவிக்கையொன்றை எடுத்துக் கொள்வான். ரவிக்கைக்கு உரியவள், தன் தாய், சகோதரி, குமாரி, நாட்டுப்பெண் யாராயிருப்பினும், அச்சமயம் அவனுடைய மனைவியாவாள்… பீஜமார்க்கிகள் என்னும் ஒருவகையார் சம்யோக சமயத்தில் ஜலத்தில் வீரியத்தைக் கலந்து குடிக்கிறார்கள். இத்தகைய ஈனக் காரியங்கள் முக்தியை அளிக்குமென்று நம்புகிறார்கள். ச.பி.


 

Related Articles

Leave a Comment