அல் முஹ்மல் – 4

by பா. தாவூத்ஷா

இன்னமும் மத்வ பாஷ்யத்தைப் (வியாக்கியானம்) பற்றியும் ராமானுஜ பாஷ்யத்தைப் பற்றியும் என்ன சொல்லுகிறீர்கள்? இவ்வாறே எண்ணிறந்த நூல்கள் நுங்கள் வேதங்களையே அடிப்படையாகக்கொண்டு பற்பல முரண்பட்ட அபிப்பிராயங்களை உடையனவாய்

வெளிவருமாயின், அவை எப்படித் தவறான நூல்களென்று எவரால் கூறுவது முடியும்?

தயானந்தரே சரியென்றும் மற்றையோர் சரியானவரல்லரென்றும் கூறுவீர்களாயின், தங்களைப்போலவே அவர்களும் வேதங்களுக்கு வியாக்கியானம் செய்யவில்லையா? இன்றேல் தங்களுடைய வியாக்கியானமே மெய்யானதென்று உரைத்துப் பார்க்கக்கூடிய உரைகல் தங்களிடந்தான் இருக்கின்றதோ? அதில் உரைத்துப் பார்த்த மாற்றின்பிரகாரம் அன்னவரின் வியாக்கியனங்களெல்லாம் பொய்யனவையென்று காணப்படுகின்றனவோ? அல்லது அவர்கள் வேதத்துக்கு வியாக்கியானம் செய்தபோது பயபக்தியுடன் செய்யவில்லையென்று கூறத் துணிவீர்களோ? அல்லது தயானந்தரைப்போல் மற்றவர்கள் சமாதிநிலையை அடையாமலே வேதங்களுக்கு வியாக்கியானம் செய்ய முற்பட்டனரா? அல்லது வேதத்தின் கருத்தை உணராமல் அவர்கள் அப்படி வியாக்கியானம் செய்துவிட்டனரா? ஆனால், அவர்களைனவரும் பரமேசுவரனுடைய சம்பந்தம் ஏற்பட்ட பிறகே வேத வியாக்கியானம் செய்யத் துணிந்ததாகக் கூறத்துணிகின்றனர்.

சமாதி நிலையால் யாருக்கு மெய்யான ஞானம் உதித்தது; யாருக்கு அவ்வாறு உண்மை ஞானம் உதிக்கவில்லை என்று அறிந்து கொள்வதற்குரிய அளவைக் கருவியும் தயானந்தரிடம் காணப்படவில்லையே. எனவே, எவருடைய பாஷ்யம் உண்மையானதென்று எவ்வாறு கண்டுபிடிப்பது? ஆதலின், தயானந்தர் மற்றவர்களையும் மற்றவர்கள் தயானந்தரையும் வேதங்களை ஒப்புக்கொள்ளாத நாஸ்திகரென்று ஒருவரையொருவர் ஏசிக்கொள்வதும் குற்றமாகாதே. ஆனால், ஒவ்வொருவரும் தத்தம் அபிப்பிராயத்தில் உள்ளதே சரியென்றும், மற்றவரின் அபிப்பிராயத்தில் உள்ளதெல்லாம் தவறென்றும் கொண்டுவிட்டனர் என்பதே மிகப் பொருத்தமான முடிபாகும்.

இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் வேத பாஷை ஏதேனுமொரு தேச பாஷையாய் இல்லாததேயாகும். எல்லோராலும் அங்கீகரிக்கப்படத்தக்க சட்டதிட்டங்களும் அகராதிகளும் அமையாததனால்தான் இது சரி, இது தப்பென்று ஒருவராலும் தீர்மானம் செய்வது சாத்தியமாகவில்லை. இக் காரணத்தினாலேயே வாமமார்க்கம், சைவ மதம், சங்கர மதம், ராமானுஜ மதம், மத்வ மதம், பௌராணிக மதம், விக்கிரகமார்க்கம், சக்திபூஜைமார்க்கம், பஞ்சதேவப்பூஜைமார்க்கம், ஸ்தலயாத்திரைமார்க்கம், சோலீமார்க்கம், கபீர்பந்திமார்க்கம், குருநானக்மார்க்கம், தாதுபந்திமார்க்கம், ராமசினேகமார்க்கம், ராமசரணமார்க்கம், கோசேனமார்க்கம், சுவாமி நாராயணருடைய மதம், லிங்காங்கிதமதம், பிரம்மசமாஜம் போன்ற ஆயிரக்கணக்கான பிரிவினைகள் வேதமதத்திலிருந்து இற்றை நாள்வரை கிளைத்திருக்கின்றன.

சங்கரரும் தயானந்தரும் வேதபாரகர்களென்று கூறப்படுவதே போலத்தான் மற்றைச் சாகைகளின் தலைவர்களும் உண்மையான பாஷ்யகாரர்களென்று அன்னவரின் சிஷ்யர்களால் கொண்டாடப்படுகிறார்கள்; அவ்வம் மதத்தையும் ஆராயப் புகுந்தால், அவரவரும் வேதமந்திரங்களைக் கொண்டே தம்முடைய சித்தாங்களை உறுதிப்படுத்துவதைக் காண்பீர்கள். பெற்ற தாயையும் உடன்பிறந்த சகோதரியையும் பெண்டாளலாமென்று அனுமதியளித்திருக்கும் வாமமார்க்கிகளும் உங்கள் (ஆரிய) வேதத்தினின்றுமே மேற்கோள் காட்டுகின்றனர்; ஆனால், உங்கள் தயானந்தரும் வேதமேற்கோளைக் கொண்டே மனைவியை இழந்த புருஷர்களும் மனைவியுள்ள புருஷர்களும் புருஷனை இழந்த ஸ்திரீகளும் புருஷனை இழக்காத ஸ்திரீகளும் அன்னிய ஸ்திரீ புருஷர்களிடம் பதினொரு நபர்வரை மாறிமாறி வியபிசாரம் (இல்லை! நியோகம்) புரியலாமென்று அனுமதி அளித்திருக்கிறார். எனவே, இவ்விருவருள் இன்னவரே தவறானவரென்று எவரால் கூறுவது முடியும்?

ஒருகால் சுவாமி தயானந்தரைக் காட்டினும் வாமமார்க்க ஆசிரியர்களே மிகச்சிறந்த ஸம்ஸ்கிருத பண்டிதர்களாய் இருக்கலாம். எனவே, அவர்களுடைய வாமமார்க்கத்துக்கும் உங்களுடைய நியோக மார்க்கத்துக்கும் உங்கள் ஸம்ஸ்கிரு வேதங்களே போதிய ஆதாரமாகும்.

அவரவரும் தத்தமக்கு விளங்கியவாறே வேதத்தை வெளியிடலாயினர். ஒருவர் இதுதான் சரியான வேதக்கருத்தென்று கூறுவாராயின், மற்றொருவர் அதை மறுக்காமல் இருப்பதில்லை. இக் காரணத்தினால்தான் அவரவரும் தத்தம் பாஷ்யமே சரியானதென்று நீலாம்புரி ராகம் பாடிக்கொண்டிருக்கின்றனர்; எனவே, ஆரிய வேதங்களுக்கு எழுதப்பட்டிருக்கும் வியாக்கியானங்களுள் இன்னதுதான் சரியானதென்று இவ்வுலகிலுள்ள எவராலும் எக்காலும் உறுத்திக் கூறுவது முடியாது.

இந்த வியாக்கியானங்களின் கதியே இவ்வாறிருக்கும்போது, அசல் வேதத்திலுள்ளது இன்னதென்று கண்டுபிடிக்க அந்தப் பரமேசுவரனேதான் வரவேண்டும். உலக முடிவுக் காலம்வரை இப்படித்தான் ஆரிய வேததர்மம் தன் மூலக்கொள்கையில் ஒன்றோடொன்று மாறுபட்டுக் கிடக்கும். நான் சொல்வதுதான் சரியென்றும், நீ சொல்வதெல்லாம் தவறென்றும் வாதிக்கக்கூடிய விவாதமனது நாளை மறுதினத்துடனே ஒழியப் போவதில்லை; ஒருகால் அந்தப் பரமாத்மாவே நேரில்வந்தால், இந்த வேதச்சண்டைகள் ஒருவாறு ஒழியலாமோ என்னவோ! ஆனால், அதுவும் இக் கலிகாலத்தில் நிறைவேறப் போவதில்லை; பரமேசுவரனே நேரில்வந்து தயானந்தரின் வியாக்கியானம் தவறானதென்று கூறிவிடுவாராயின், அவரைப்பிடித்து இந்த ஆரியசமாஜிகள் சிலுவையிலறைந்து எமலோகமா அனுப்பிவிடப்போகிறார்கள்?

இந்த “முஹ்மலான” வேதத்தின் கருத்தைப்பற்றிக் கூறுங்கால், எமக்கொரு வேடிக்கைக் கதையே ஞாபகத்திற்கு வருகின்றது; ஒரு முஸ்லிம் மௌலவீயும் ஒரு பண்டிட்ஜீயும் ஒரு லாலாஜீயும் ஒரு கசாப்புக் கடை ஸாஹிபும் சேர்ந்து ஓர் உத்தியானவனத்தில் உல்லாசமாய் உலாவிக் கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு கவுதாரி வந்து கத்திற்று. அப்பொழுது, “ஆண்டவனே! உனக்கே எல்லாத் தூய்மையும்,” என்று அந்தப் பறவை கத்தியதாக மௌலவீ சாஹிப் சொன்னார். “அப்படியன்று, மௌலவீ சாஹிப்! இந்தக் கவுதாரி சீதாராம் என்று கூவுகிறது,” என்று பண்டிட்ஜீ வியாக்கியானம் செய்தார். அதன்பின்பு லாலாஜீ பண்டிதரை நோக்கி, “இந்தக் கவுதாரி உப்பு, புளி, மிளகாய் என்று கூவுகின்றது,” என்று கூறினார். அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கசாப்புக் கடைக்காரர், “மிக நல்லவிதமாய் எல்லோரும் விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் சொல்வதுபோல் ஒரு வார்த்தையையும் அது கூறவில்லை; ஆனால், அந்தக் கவுதாரி தனக்கொரு கால் முறிந்துவிட்டதென்று கூறுகிறது,” என்று வியாக்கியானம் செய்தார்.

இவ்வாறாகவேதான் இந்துஸ்தான் மக்கள் தங்களுக்கு விளங்கியவாறும் தங்களுக்கு ஏற்றவாறும் ஆதிமுதல் வேதங்களுக்கு வியாக்கியானம் செய்துவந்திருக்கின்றனர். இதற்கு யாரேனும் சரியான தீர்ப்பை அளிக்க முன்வருவதற்குச் சரியான சட்டதிட்டங்கள் வேண்டும். ஆனால், ஆரியரின் வேதங்களோ உலகத்தில் காணப்படும் சகலவிதமான சட்டதிட்டங்களினின்றும் பாஷைகளினின்றும் விலகி, எங்குமில்லாத தேவ(?) பாஷையில் வந்துவிட்டபடியால், அத் தேவனே வந்துதான் வியாக்கியானம் செய்தல் வேண்டும்.

இந்தத் தேவபாஷையை மனிதர்கள் உணராததனால்தான் வேதங்களுக்கு வியாக்கியானம் பண்ணப் புகும்போது, மஹரிஷிகளெல்லோரும் தவற்றுள் வீழ்ந்து தத்தளிக்கின்றனர். ஆதலின், மேற்கூறப்பட்ட எல்லாவிதமான காரணங்களைக் கொண்டும் “அல் முஹ்மல்” என்ற பெயரையே நம் ஆரிய சகோதரர்களின் வேதங்களுக்குச் சூட்டுவது மிகப்பொருத்தமாய்க் காணப்படா நின்றது. மேலும், இம் முஹ்மல் தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே நம்முடைய தயானந்தர் தம்முடைய எழுதுகோலை கையிற் பிடித்துக்கொண்டு, இவ்வுலகத்திலுள்ள எந்த மதத்தையும் சற்றும் மதிக்காமல் அதிக தாறுமாறாய்த் தம்முடைய மனம்போன போக்கிலெல்லாம் வாயில் வந்தததை யெல்லாம் கையால் கிறுக்கித் தள்ளிவிட்டார். ஐயோ பரிதாபம் தயானந்த்ஜீ! –கபீர்.

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment