சிறு வயதும் வாலிபப் பருவமும்

அபூதாலிப் தம் தம்பி மைந்தர் முஹம்மது (ஸல்) மீது அளவு மீறிய அன்பு சொரிந்து அருமையாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்ததற்கு முதற் காரணம், அச் சிறுவர் எப்பொழுதும் நேர்மையாக ஒழுகிக் கொண்டதும் தப்பித் தவறியும் பொய் புகலாததும் வேறு சிறுவர்களுடன் சேர்ந்து

சேஷ்டைகளோ விஷமத்தனங்களோ புரியாததும் வசைச் சொல்லோ அல்லது இழிவான வார்த்தையோ உதிர்க்காததும் எவரிடத்தும் கண்ணியமாக நடந்து கொண்டதும் கட்டுப்பாட்டைப் பேணியதும் கடமையுணரச்சியைத் தட்டிக் கழிக்காமையும் பெரியோர் மாட்டு நெறி தவறாமல் பெருமையுடன் பாடுபட்டமையுமாகும். எனவே, ஒரு கணமேனும் இருவரும் ஒருவரைவிட்டு மற்றொருவர் பிரிந்ததில்லை. அபூதாலிப் அவரை எப்பொழுதும் தம்முடன் கூடவே வைத்திருப்பார்; எங்கு ளெியிற் சென்றாலும் உடனழைத்துச் செல்வார். இரவு நேரங்களிலும் தமது படுக்கை மீதே அவரைத் தூங்க வைப்பார்.

அடிக்கடி அபூதாலிப் வர்த்தகத்தினிமித்தம் சிரியாவுக்குச் செல்வது வழக்கம். அவருடைய வர்த்தகப் பொருள்கள் ஹிஜாஸின் உயர்ரகப் பேரீந்துகளும் எமன் மாநில வாசனைத் திரவயிங்களுமாகும். இவற்றை திமஷ்க் (Damascus), பஸரா (Basra) முதலிய நகர்களில் விற்றுவிட்டு, பைஸாந்தியப் பேரரசின் வர்த்தகர்களிடமிருந்து பட்டுத் துணி முதலிய பண்டங்களை வாங்கி வருவார். ஒருமுறை அபூதாலிப் அவ்வாறு புறப்பட்டுச் செல்லும்போது, சிறுவர் முஹம்மதும் (ஸல்) அவருடன் சென்றார். அப்போது அவருக்கு வயது 12. மிக நீண்ட தூர, சிரமம் மிக்க இந்தப் பயணத்தை அச் சிறுவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுச் சென்றார். அபூதாலிபோ அவரை மிகவும் அக்கறையுடனும் ஆவலுடனும் பாதுகாப்புடனும் அழைத்தேகினார்.

இந்தப் பயணத்தின்போது வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் புஹைரா ராஹிப் என்னும் வைதிகக் கிறிஸ்தவப் பெரியார் ஒருவர் அவர்களைச் சந்தித்தார். சிறந்த ஞானியும், தெய்வ நியதி நம்பிக்கையாளரும், வரும் பொருளுரைக்கும் தீர்க்கதிருஷ்டி வாய்ந்தவருமான அந்த புஹைரா, பண்டை வேதங்களில் முன்னறிவிப்புக் கூறப்பட்டிருந்த, பெரு நபி ஒருவர் தோன்றப் போகிறார் என்னும் சுபச் செய்தியை நன்கு அறிந்திருந்தார். அப்படிப்பட்ட ஞானி நம் சிறுவரைக் கண்டதும் தம்மையறியாமலே மெய்துவண்டு அபூதாலிபை நோக்கி, “ஆ, இந்தச் சிறுவரின் வதனத்தில் நான் அந்தப் பெருமை பொதிந்திருப்பதைக் காண்கின்றேன்! ஏ அபூதாலிப்! சீக்கிரத்திலேயே உம் தம்பி மைந்தர் இறையருள் கடாக்ஷத்தையும், அவனுடைய சந்திப்பையும் பெற்றுக் கொள்ள இருக்கிறார். இந்த வருங்காலப் பெரு நபியை மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணித்து வருவீராக!” என்று களிப்புடன் கூறினார். இது கேட்டு அபூதாலிப் அக மகிழ்ந்தார்; பூரித்துப் போனார். புஹைரா மட்டுமின்றி, அச்சிறுவரைக் காணும் ஒவ்வொருவருமே அவருடைய இன்முகத்தையும் நல்லுரைகளையும் இனிய பேச்சையும் கேட்டுச் சொக்கிப் போனார்கள். காந்தம் இரும்பைக் கவர்வதுபோல், அவரது நல்லொழுக்க நற்செய்கைகள் யாவரையும் பரவசத்துக்கு உள்ளாக்கி விட்டன. எங்கோ ஒரு மூலையில் மக்காவில் பிறந்தவர், வெகு தூரத்திலுள்ள சிரியா நாட்டில் 12 வயதிலேயே பலரைப் பரவசப்படுத்தி விட்டார்.

சிரியாவிலிருந்து திரும்பி வந்து எட்டாண்டுகள்வரை முஹம்மது மக்காவாசிகளிடையே மேலும் நற்பெயரெடுத்தார்; கீர்த்தி பெற்றார். அவருக்கு 20 வயதானபோது மக்காவில் ஒரு கடும் போர் மூண்டது. 12 சாந்திரமானங்களுள் குறிப்பிட்ட 4 மாதங்களில் அரேபியாவில் எங்கும் எவரும் சண்டையிடக் கூடாது; முற்கூட்டியே சண்டை மூண்டிருந்தாலும அக் குறிப்பிட்ட மாதங்கள் இடைப்பட்டு விட்டால் சட்டென்று அமைதி காக்கப்பட வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் தொன்று தொட்டே ஒரு தடைமுறையைக் கடைப்பிடித்து வந்தார்கள். கட்டுப்பாடற்ற சமுதாயத்தினராகிய அரபிகள் இந்தச் சுயக்கட்டுப்பாட்டு விதிமுறையை மட்டும் என்றைக்கும் மீறியதில்லை. இதே விதமாக, ஆண்டு முழுதும் எந்த நாளும் கஅபா அடங்கியுள்ள வட்ட எல்லையாகிய ஹரம் என்னும் வட்டாரத்திலும் அவர்கள் அமைதி காத்தே வந்தார்கள். இப்படியிருக்க, அரேபியாவிலிருந்த கைஸ் என்னும் ஒரு கூட்டத்தினர் தடையை மீறி, அமைதி காக்க வேண்டிய மாதங்களில் போர் நிகழ்த்தினார்கள். இதனால் கோபங் கொண்ட குறைஷிகள் எதிரிகளை மடக்கிப் பிடிக்க எதிர்த்துப் போராட முற்பட்டார்கள். அமைதியை அக்கிரமமாய்க் குலைத்த எதிரிகள்மீது தாக்குதல் நிகழ்த்திய சிற்றப்பர், பெரியப்பர்களுக்கு முஹம்மது (ஸல்) போர்க்களத்தில் உதவி புரிந்தார்கள். எதிரிகள் தோற்றனர். அமைதி நிலை நாட்டப்பட்டது. முஹம்மது (ஸல்) தமது ஆயுளில் சந்தித்த முதற் போர்க்களம் இதுவே என்றாலும், அவர்கள் வில்லேந்தியோ, வாள் பிடித்தோ சண்டை செய்யவில்லை; களத்தில் உறவினர்க்கு உதவி புரிந்ததோடு நின்று விட்டார்கள். ஆனால், போர்க்களப் பயங்கர வெறி எப்டிபயிருக்குமென்பதை அவர்கள் கண்ணாரக் கண்டுகொண்டார்கள்.

நிரபராதிகள், அபலைகள், அனாதைகள், மெல்லியல் மங்கையர், துணையிலாப் பலஹீனர்கள் ஆகியோரெல்லாம் அக்கிரமம் புரிகிற அழிச்சாட்டியக்காரர்களான முரடர்களின் மிருகத்தனமான தாக்குதல்களக்கு அநியாயமாய்ப் பலியாவதையும் சொல்லொணா அவதிகளுக்கு ஆளாவதையும் எப்படியும் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்னும் உறுதி மனப்பான்மை அவர்களது உள்ளத்துள் அப்போதே தோன்றி விட்டது. இந்நிலையில், மக்காவில் ஒரு நேசப் பாதுகாவல் சங்கம் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் பலஹீனர்களுக்குப் பாதுகாப்பு நல்க வேண்டும், அடக்கியொடுக்கும் அக்கிரமக்காரர்களின் வெறித்தனமான பிடியினின்று அவர்களை விடுதலையடையச் செய்ய வேண்டும் என்பனவே அதன் முக்கியக் குறிக்கோள்களாம். இந்தச் சகாயம் நல்கும் அங்கத்தினர் உடன்படிக்கை ‘ஹில்ஃபுல் ஃபுஜூல்’ (Hilful Fuzool) என்று அழைக்கப்பட்டது. பாலைனத்தில் புல் முளைத்தாற்போல், சட்ட திட்டமோ கட்டுப்பாடோ கொஞ்சமுமில்லாத அந்த அராபியரிடையே முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு போலீஸ் காவல் திட்டம் என்று இதை நாம் கருதலாம். முஹம்மது (ஸல்) அவர்களின் கோத்திரத்தாரான ‘பனூஹாஷிம்’ என்னும் உறவினர்களே அச் சங்கத்துக்கு ஊன்றுகோலாய் விளங்கினார்கள். அந்த உடன்படிக்கைக் கூட்டத்தில் முஹம்மது (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். ஒடுக்கப்பட்டோர், நசுக்குண்டோர், உதவியற்றோர் முதலிய பலஹீனர்களக்குச் சகாயம் வழங்கத்தான் வேண்டும் என்னும் கழிவிரக்கம் அத்துணை இளம் பிராயத்திலேயே முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் உதயமாயிற்று.

எளியோர்க்குச் சகாயம் நல்க வேண்டும் என்னும் உணர்ச்சி மட்டும் அவரைத் தனிப் பெருமைக்கு ஆாளக்கவில்லை. ஆனால், எப்படிப்பட்டவனும் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே சத்புருஷன் முஹம்மதுவே என்று பாராட்டும் கீர்த்தியையும் சீக்கிரமே பெற்றுவிடடார். பொய்யும் புனைசுருட்டும் வஞ்சகமும் கபடத்தனமும் நம்பிக்கைத் துரோகமும் அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளும் ஆவேசமும் களவும் கொள்ளையும் திருட்டும் எத்திப் பொருள் பறிக்கும் ஏமாற்று வித்தையும் சரளமாக நிலவிய ஒரு சமுதாயத்தில் ஒரே ஒரு நேர்மையாளர் விதிவிலக்காய்த் தோற்றமளித்தாரென்றால், அவர் அனைத்து மக்களாலும் ஏகோபித்த குரலில் ‘நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்’ (அல் அமீன்) என்று புகழ்ந்து பாராட்டப்பட்டதில் வியப்பில்லையன்றோ!

அனைத்து மக்களாலும் ஏகோபித்த குரலில் ‘நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்’ (அல் அமீன்) என்று புகழ்ந்து பாராட்டப்பட்டதில் வியப்பில்லை

மக்காவாசிகள் அவரைப் பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘அல் அமீன்’ என்று குறிப்பிடுவதே ஏற்புடைத்தென்று, காரணப் பெயரைச் சிறப்புப் பெயராகவே சூட்டிவிட்டனர். தற்கால வங்கிகளின் பாதுகாப்பு அறைகளை (Safe Deposit Vault) மக்கள் எத்துணை பந்தோபஸ்தாகக் கருதுகிறார்களோ, மாஜிஸ்ட்ரேட்டின் இல்லத்துள் பாதுகாப்பைத் தேடிக்கொள்வது எந்த ஆபத்தையும் விளைக்காது என்று எவ்வாறு உறுதி கொள்கிறார்களோ அத்துணை நம்பிக்கையும் அராபியர்களுக்கு அவர்மீது ஏற்பட்டுவிட்டது. பொருளையும் உடைமைகளையும் மட்டும் அவரிடம் மக்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கவிலலை. ஆனால், சச்சரவுகளுக்குச் சரியான மத்தியஸ்தம் வழங்கும் ஒரே நெறியாளராகவும் நீதிமானாகவும் அவர்கள் அவரைப் பாராட்டினார்கள். விருப்பு வெறுப்பு அற்றவர்; நேர்மையான நீதி வழங்குபவர், கொஞ்சமும் பாரபட்சம் பாராட்டதாதவர் என்றெல்லாம்கூட முஹம்மது (ஸல்) அவர்கள் புகழெய்தி விட்டதால், ‘அல் அமீன்’ என்னும் சிறப்புப் பெயர் அவர்களைப் பிரியாமல் ஒட்டிக் கொண்டுவிட்டது. அயோக்கியர்கள் சூழ்ந்த ஒரு சமுதாயத்தில் முஹம்மது (ஸல்) ஒருவரே பரமயோக்கியராய் விளங்கினார்கள்.

அவர்களுக்கு முப்பத்தைந்து வயதாகியபோது ஒரு மறக்கொணா நிகழ்ச்சி நடந்தது. காலக் கிரமத்தில் கிலமாகிவிட்ட கஅபா ஆலயத்தைக் குறைஷிகளும் மற்றுமுள்ள மக்காவாசிகளும் செப்பனிட்டுப் புனர் நிர்மாணம் செய்தனர். எல்லாக் குலத்தினரும் கோத்திரத்தார்களும் மிகவும் ஒற்றுமையாக நின்று சம அளவில் அந்தப் பழுது பார்க்கும் பணியில் பங்கேற்றுக் கொண்டார்களென்றாலும், இறுதிக் கட்டத்தில் ஒரு சச்சரவு எழுந்தது. கஅபா ஆலயத்தில ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் என்னும் சிறப்பு மிக்க பவித்திரமான கல் பதிக்கப்பட்டிருக்கும். அந்தக் கல்லைத் தூக்கி அதற்கான மேடை மீது பொருத்தும் கட்டம் வந்தபோது, எவர் அதைத் தொட்டுத் தூக்குவது என்பதில் தகராறு ஏற்பட்டது. ஒவ்வொரு குலத்தாரும், ஒவ்வொரு கோத்திரத்தாரும் அந்த ஏகபோகப் பெருமைக்குரிய உரிமை தத்தமக்கு மட்டுமே உண்டென்றும் எனவே தாங்களே அதைத் தூக்க வேண்டுமென்றும் பிறர் ஒதுங்கி விலகி நிற்க வேண்டுமென்றும் உரிமை பெறாதவர் கை பட்டால் அக்கல் தீட்டுப்பட்டு விடும் என்றும் முணங்க ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் சச்சரவு முற்றி, அடிதடி தோன்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது. அப்போது போர் மூண்டிருந்தால் அது எத்தனை ஆண்டுகள் நீடித்திருக்கும் எப்பொழுது முடிவுற்றிருக்கும் இடையே எத்தனை தலைகள் உருண்டிருக்கும் என்பதை எல்லாம் கணக்கிட்டுரைக்க முடியாது; அப்படி ஒரு மஹா யுத்தமே உருவாகி விட்டிருக்கும். அப்போது ஒரு பெரியார் சச்சரவை அடக்கி, “பொழுது சாய்ந்து விட்டது. வீணே கலகம் வேண்டாம். நாம் எல்லாரும் நாளைக் கால விடியும்போது இங்கு வந்து சேரலாம். நாம் அனைவரும் வந்துவிட்ட பிறகு, கல் பதிக்கப்பட வேண்டிய இடத்துக்கு எதிர்த் திசையிலிருந்து எவர் முதலாவதாக ஒரு வழிப்போக்கராக இந்த வழியே வருகிறாரோ அவரிடம் நமது வழக்கை எடுத்துக் கூறி, அவர் வழங்கும் மத்தியஸ்தத்துக்குக் கட்டுப்படுவோம்,” என்று உபதேசம் வழங்கினார். இந்த யோசனை யாவராலும் அங்கீகரிக்கப்பட்டது.

மறுநாள் அதிகாலையில் அந்தப் போட்டிக் கட்சிக்காரர்கள் அனைவரும் வந்து குழுமி, முற்குறிப்பிட்ட திசையை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். தற்செயலாக அங்கே முஹம்மது (ஸல்) வந்து தோன்றினார்கள். பெருமகிழ்ச்சியுற்ற அத்தனை முதியோரும் பெரியோரும், “இதோ வந்துவிட்டார், அல் அமீன்! இவரே நமது சச்சரவைத் தீர்க்கும் நெறியான நீதிபதி. இவரிடம் முறையிடுவோம்,” என்றார்கள். அல் அமீன் எல்லாரையும் அமைதிப்படுத்தி, விஷயத்தை விசாரித்து அறிந்தார்கள். எவர் சார்பாகத் தீர்ப்பு வழங்கினாலும் போர் மூளப் போவது உறுதி என்பதை அவர்கள் யூகித்துக் கொண்டார்கள். எனவே. ஒன்றும் பேசாமல், தமது உடல் மீது போர்த்தியிருந்த போர்வைத் துண்டை எடுத்துக் கீழே விரித்தார்கள்; தமது கைப்படவே அந்தப் புனிதக் கல்லைத் தூக்கி அத்துணியின் நடுவில் வைத்தார்கள்; நாலு பக்கமும் துண்டின் முனையை நீட்டிப் பிடித்து, சச்சரவிட்ட குழுவின் தலைவர்கள் அத்தனை பேரின் கரத்திலும் கொடுத்தார்கள்; எல்லாரும் சேர்ந்து ஏக காலத்தில் அத் துணித் துண்டைப் பளுவுடன் தூக்கச் செய்தார்கள்; குறிப்பிட்ட உயரத்தை அச் சுமை எட்டியதும் அவரே மெல்ல அக் கல்லை அதற்கான இடத்தில் பொருத்திவிட்டு, துணியை உருவிவிட்டார்கள்ஹ. எல்லாரும் அகமகிழ்ச்சிப் பெருக்குடன், ‘அல் அமீன் வாழ்க!’ என்று ஆர்ப்பரிக்க, அனைத்தும் சுமுகமாக முடிந்தது. கல்லைத் தூக்கி வைத்த பெருமைக்கு எல்லாரும் சமமாக ஆளானார்கள். நீண்ட நெடும் யுத்தம் உருவாகும் பயங்கர ஆபத்து இவ்வாறு நீங்கிற்று. இதனால் முஹம்மது (ஸல்) அவர்களின் பெருமை மேலும் உயரந்துவிட்டது! கல்லைத் தொட்டவர், துணி மீது தூக்கி வைத்தவர், தக்க இடத்தில் பொருத்தியவர் இந்த அல் அமீனைத் தவிர வேறு எவராக இருந்திருந்தாலும் அங்கே அணுகுண்டு வெடித்த அவலமே உருவாகிவிட்டிருக்கும் என்பதை நாம் நினைவுகூர வேண்டும்,

ஆண்டுதோறும் மக்காவுக்கு யாத்திரிகர்கள் வந்து செல்லும்போது, இந்த அமைதிக் களஞ்சியமான, சமாதான விரும்பியாகிய, அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகியிருந்தவரான முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டு வியப்புற்றுச் செல்வார்கள். ஏனென்றால், மக்காவாசிகள் அவரை அத்தனை அளவக்கு நேசிக்கவும் புகழ்ந்துரைக்கவம் முற்பட்டிருந்தார்கள். எந்த ஒரு சாமிக்கும் பூஜை செய்யாத, எந்த நைவேத்தியத்திலும் பங்கு பெறாத, எந்த ஜோதிடனிடமும் சென்று யோசனை கேட்காத, எந்தச் சூதாட்டத்திலோ அல்லது குறி பார்க்கும் சடங்கிலோ பங்கு பற்றாத, ஒரு துளி மதுவைக் கூடத் தொட்டுப் பார்க்காத, கட்டிளக் காளைப் பருவத்திலும் எந்த ஓர் அன்னியப் பெண்ணின் முகத்தையும் அண்ணாந்து நோட்டமிடாத, பலிப் பொருள்களைக் கொஞ்சமும் சுவைத்தறியாத, பிறர் பொருள் மீது இச்சையோ பொறமையோ கொள்ளாத ஒரு விசித்திர மனிதர் அனைத்துத் துறைகளிலும் மிக நேர்மையாளராகவும் நடந்து கொண்டதை அக்கால அரபு மக்கள் அதிசயத்துடன் பார்த்ததில் வியப்பில்லை.

முஹம்மது (ஸல்) தம் பெரிய தந்தையுடன் சிரியா வரை சென்று வந்தார்கள் என்று முன்பு குறிப்பிட்டோமல்லவா? அப்பொழுதே அவர்கள் வர்த்தகத் துறையின் நுணுக்கங்களையும் நேர்மையாகத்தான் தொழில் நடத்த வேண்டும் என்னும் படிப்பினையையும் அச் சிறு பிராயத்திலேயே கற்றறிந்து கொண்டார்கள். எனவே, மக்காவில் அவர்கள் பிறர் ஒப்படைத்த அடைக்கலப் பொருள்களைக் காப்பாற்றி வந்த அதே நேரத்தில், வாணிபம் நடத்துவதற்கான நேரிய இலக்கணத்தையும் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்களுக்கு வயது 25 ஆனபோது, அந்நகரில் பெரிய பணக்கார மாது ஒருவர் இருந்தார்கள். அவர்களொரு விதவை; வயதோ 40; பெயர் கதீஜா (ரலி). அந்த மாது ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பெண்களுக்கு மதிப்போ மரியாதையோ கொஞ்சமும் இல்லாதிருந்த அந்தக் காலத்தில் அந்த அம்மணி தம்மளவில் நேர்மை மிக்க குணத்துடனும் பண்புடனும் ஒழுகி வந்த காரணத்தால் தாஹிரா (தூய்மை மிக்க பெண்மணி) என்று பலராலும் புகழப்பட்டு வந்தார்கள்.

இந்த மாதரசி அல் அமீனின் குணாதிசயங்களையும் புத்திக் கூர்மையையும் வர்த்தக நேர்மையையும் பற்றிக் கேள்வியுற்றார்கள். எனவே, தமது வர்த்தக நிறுவனத்துக்கும் வாணிக நடவடிக்கைகளுக்கும் அல்அமீனையே ஒரு நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்து, சகல பொறுப்புகளையும் அவர்களிடமே ஒப்படைத்தார்கள். மிகக் குறுகிய காலத்தில் வர்த்தகம் அபிவிருத்தி அடைந்ததுடன், லாபமும் பெருகிற்று. அப்பழுக்குக் கற்பிக்க முடியாத மிகவும் யோக்கியமான நடக்கை மூலம் முஹம்மது (ஸல்) இப்படிப் பெரும் பொருளீட்டித் தருவதைக் கண்டு கதீஜா (ரலி) பெரிதும் வியப்புற்றார்கள். போட்டி வர்த்தகர்கள் பொய் பேசி, மெருகு பூசி, கள்ள வர்த்தகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களை இழந்து வருவதையும் அவர்களெல்லாம் அல்அமீன் நிர்வகிக்கும் வர்த்தக நிறுவனத்துக்கு வந்து குழுமுவதையும் அப் பெண்மணி கண்டார்கள். பெருகிய வர்த்தகம் பிறருக்குப் பேராசையை வளர்த்து விடும்போது, முஹம்மது (ஸல்) மட்டும் நிலை தடுமாறாமல் தொடர்ந்து நேர்மை காண்பித்து ஒழுங்காகத் தொழில் நடத்தும் அருஞ் செயல் கதீஜா அம்மையாரை (ரலி) வியப்பில் ஆழ்த்தியது. வியப்பு முற்றி நேசம் பிறந்தது. நேசம் பெருகவே எப்படியும் அல் அமீனையே கணவராக அடைய வேண்டும் என்னும் ஆவலும் அதிகரித்தது. எனவே, அம்மாது அபூதாலிபிடம் தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டு, முஹம்மது (ஸல்) அவர்களின் சம்மதத்தையும் பெற்று, அவரைக் கணவராக ஏற்று மணந்து கொண்டார்கள். அப்போது கதீஜா (ரலி) அம்மையாருக்கு 40 வயது; முஹம்மது (ஸல்) அவர்களுக்கோ 25 வயது.

தம்மினும் 15 வயது மூத்த பெண்டிரை மனைவியாக ஏற்ற அவர்கள் தொடர்ந்து 24 ஆண்டுகள் வரை அந்த ஒரே மனைவியுடன் ஏகபத்தினி விரத இல்லறம் நடத்தி நான்கு மகள்களையும் இரண்டு மகன்களையும் ஈன்றெடுத்தார்கள். அவர்களின் பெயர்களாவன: (1) காஸிம் எனும் மைந்தன். இரண்டு வயது சிசுப் பிராயத்தில் இக்குழந்தை மரணமடைந்துவிட்டது. (2) ஜைனப் (ரலி) எனும் மகள். பிற்காலத்தில் அபுல் ஆஸ் (ரலி) என்பவருக்கு மனைவியாய் வாய்த்தவர். (3) ருகையா (ரலி) என்னும் மகள். உதுமான் (ரலி) என்பவரின் மனைவியாக உயர்ந்தவர்கள். முஸ்லிம்கள் மதினா அருகே தற்காப்புப் போரிட்ட பத்ரு என்னும் போர் முடிந்த அன்று மரணமடைந்தார்கள். (4) உம்மு குல்தூம் (ரலி) என்னும் மகள். இவர் தம் சகோதரி மரித்த பின், உதுமான் (ரலி) அவர்களையே கணவராய் அடைந்தவர். (5) ஃபாத்திமா (ரலி). இவர் அலீ (ரலி) அவர்களை மணந்தவர்கள்; ஹஸன் ஹுஸைனின் தாயானவர்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதம் வாழ்ந்தவர்கள். (6) ஓர் ஆண் சிசு; பெயரிடப்படுமுன்னே காலமாகிவிட்டது.

அந்தக் காலத்தில் எந்த அராபியரும் ஒரே மனைவியுடன் வாழ்க்கை நடத்தியதில்லை; எத்தனையோ பெண்களை மணந்து கொள்வார்; எண்ணிறந்த வைப்புகளை வைத்துக் கொள்வார். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு புதுச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் முஹம்மது (ஸல்) அவர்களே. அவர்களை ஒரு காமாந்தகர் என்று சில மேனாட்டு ஆசிரியர்கள் பழி சுமத்திவிடும் போது ஏனோ இந்த உண்மையை மறந்து விடுகிறார்கள்! அவர்களுக்கு 50 வயது சென்ற பின்னர் அரசியல் காரணமாகத் தோன்றிய பலதார மணத்தின் நுணுக்கத்தைப் பற்றிப் பிறகு நாம் காணலாம்.

கதீஜா (ரலி) அம்மையாரை மணந்த முஹம்மது (ஸல்) அந்த அம்மணியை எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்றால், அம் மனைவியை இழந்தபோது கடைசிவரை அதே நினைவாயிருந்தார்கள். மற்றொரு மனைவியாய் வந்து வாய்த்த ஆயிஷா பிராட்டியார் (ரலி) ஏதோ சற்று கவனக் குறைவாக கதீஜா (ரலி) அம்மையாரைக் குறிப்பிட்டுப் பேசியபோது, பெருமானார் வெகுண்டு, “என்னை அத்தனை பேரும் வெறுத்தபோது கடைசிவரை என்னை நேசித்த ஒரே உத்தமி கதீஜா அல்லவா?” என்று எதிர்த்துக் கேட்டு வாயடக்கினார்கள். அந்த அளவுக்கு அம் மாதுமீது அவர்களுக்கு அன்பிருந்தது. அல்லாமலும், கதீஜா (ரலி) அம்மையாரின் பணத்தை எல்லாம் முஹம்மது (ஸல்) அவர்கள் அள்ளி அள்ளி இறைவனது பாதையில் செலவிட்டார்கள். தம் கணவருக்குப் பணிவிடை செய்வதற்கென்று ஒரு பிரத்தியேக அடிமையைக் கதீஜா (ரலி) அவர்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். “என்ன, எனக்கோர் அடிமையா? கூடாது, கூடவே கூடாது!” என்று முஹம்மது (ஸல்) மறுத்து, அந்த அடிமைக்குப் பூரண விடுதலை வழங்கிச் சுதந்தர புருஷனாக்கி விட்டார்கள். இதே மாதிரி, கதீஜா (ரலி) அவர்களின் பணத்தைச் செலவிட்டு ஸைது (ரலி) என்னும் மற்றோர் அடிமைக்கும் விடுதலை வழங்கினார்கள். (ஆனால், அந்த ஸைது மட்டும் இறுதிவரை நபியவர்களை விட்டுப் பிரியாமல், உடனிருந்தே ஒத்தாசைகள் புரிந்துவந்தார்கள்.)

முஹம்மது (ஸல்) யாவரின் அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரராகி வந்தார்கள் என்றாலும் அவர்கள் தங்கள் முன்னோர்களைப் பின்பற்றி இஷ்ட தேவதைகளை வணங்குவதிலும், பூஜை நைவேத்தியங்கள் புரிவதிலும், சில அனாசார பழக்கங்களை விடாமல் பற்றிப் பிடிப்பதிலும் ஈடுபட்டிருந்தபோது முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் ஏனோ அந்தச் சாமிப் பூஜைகளிலும் பிற நியமங்களிலும் என்றைக்குமே பரவசம் கொண்டதில்லை. லாத், உஸ்ஸா, மனாத் என்னும் பிரபலமான முப்பெருந் தேவதைகளுக்கு ஹிஜாஸில் வாழ்ந்த மக்கள் உற்சவம் எடுப்பார்கள், திருவிழாக் கொண்டாடுவார்கள், சிறப்புப் பூஜை நிகழத்துவார்கள். ஆனால், பெருமானாரோ அவற்றில் எதிலும் கலக்காமல், தூர நின்றும் வேடிக்கை பார்க்காமல் முற்றிலும் விலகிச் சென்று விடுவார்கள். அவர்களுடைய பெரிய தந்தைமார், மற்றுமுள்ள நெருங்கிய உறவினர் ஆகிய எவர் நிகழ்த்திய எந்த உருவ வழிபாட்டுப் பூஜையிலும் அவர்கள் கொஞ்சங்கூட அக்கறை காண்பித்ததோ பங்கேற்றுக் கொண்டதோ கிடையாதென்பது குறிப்பிடத்தக்கதாம்.

பெருமானவர்கள் பிறக்குமுன் தந்தையையும் பிறந்து சில ஆண்டுகளில் அன்னையையும் இழந்துவிட்டிருந்த அனாதையாகையால், வேறு எந்த ஓர் அனாதையைக் கண்டாலும் மனமிளகி விடுவார்கள்; ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வரம்பிலாச் செல்வத்தை வாரி வாரி வழங்குவார்கள். விதவைகளுக்கும் எப்போதும் உதவி நல்கியே வந்தார்கள். சற்குணச் செம்மலாக விளங்கிய முஹம்மது (ஸல்) அவர்கள் நாளேற நாளேறத் தமது பெயரையும் புகழையும் வளர்த்துக் கொண்டு வந்தார்கள்.

‘புகழ்தற்குரியவர்’ என்னும் பெயர் படைத்த அவர்கள் தமது பெயருக்குரிய பண்பை நன்கு நிலைநாட்டிக் கொண்டார்கள். தங்கள் முன்னோர்கள் பின்பற்றும் மதச் சடங்குகளில் அவர் பங்கேற்க மறுக்கிறாரே என்று பலர் அவர்மீது அதிருப்தியுற்றிருக்கலாம். ஆனால், பெருமானாருடைய மற்றெல்லா நற்குணப் பண்புகளும் சேர்ந்து, அவரை யாவரும் மெச்சிப் புகழ்ந்து அகங் குளிருமாறு செய்து வந்தன. குறி கேட்பது, சோதிடம் பார்ப்பது, சகுனங்களை அனுசரிப்பது முதலியவற்றில் என்ன தவறிருக்கிறது என்று சில நண்பர்கள் அவர்களை ஒருமுறை கேட்டபோது, “அதோ அந்த மர உச்சியில் உட்கார்ந்திருக்கிற பறவை எப்போது எந்த நிமிஷத்தில் எழுந்து பறக்குமென்றோ, சோதிடம் வகுப்பவன் அவனே என்றைக்கு நோயுறுவான், என்றைக்கு மாள்வான், என்றோ கூற முடியுமா? நற்சகுனமென்று கருதப்பட்ட ஏதொன்றும் சதா நலனே விளைத்ததுண்டா? தீச்சகுனமென்பது சதா தீமையே உண்டு பண்ணியதுண்டா? நீங்களே நிதானமாக யோசித்து முடிவு கட்டுங்கள். மெய்ந் நம்பிக்கை கொண்டு மானிடன் வாழ வேண்டுமன்றி, பொய்ந் நம்பிக்கையை ஏற்று எவனும் தனது ஆத்மாவைப் பாழ்படுத்திக் கொள்ளக்கூடாது,” என்று பதிலீந்தார்கள்.

தூய எண்ணம், தூய நடக்கை, தூய வாழ்க்கை என்பனவே பெருமானாரை ஒரு மானிட உருவாகப் படைத்திருந்தன. மூட நம்பிக்கையும் பொய் அச்சமும் மக்களை மடயர்களாக்கி விடுகின்றன என்று அவர்கள் சொல்லி வந்தார்கள். அவர்களுக்கிருந்த செல்வாக்கையும், பொதுமக்கள் அவர்மீது கொண்டிருந்த அபார விசுவாசத்தையும் நம்பிக்கையையும் மட்டும் சுயநலத்துக்காக நபியவர்கள் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருப்பாராயின், நிச்சயமாக பெருமானாரை அராபியர் ஒரு கண்கண்ட கடவுளாக, அல்லது கடவுளவதாரமாக ஆக்கிவிட்டிருப்பார்கள். மாக்களை மக்களாக உயர்த்தவேண்டும் என்பதிலேதான் நபியவர்கள் குறியாயிருந்தாரன்றி, ஏற்கெனவே மடயர்களாக விளங்கிய அறிவிலிகளை மேலும் ஏமாளிகளாக்கி ஏய்த்து எத்திப் பிழைக்கக் கனவும் கண்டாரில்லை. மாயாஜால மந்திர வித்தைகளும், அற்புதமிக்க தந்திரச் செய்லகளும் புரிந்தால்தான் ஒருவன் மகானாக உயர முடியும் என்னும் கோட்பாடு நிலவும் இந்த உலகத்தில், ஓர் அற்புத அத்து சித்து வேலையையும் செய்து காட்டாமல், மந்திர தந்திர மயக்கங்களை உண்டு பண்ணாமல், வெறும் மானிடராகவே வாழ்ந்து, சாதாரண ஒழுக்க நியதிகளையே கடைப்பிடித்து, அனைத்து மாந்தரின் உள்ளத்துள்ளும் அவர் மகானாக உயர்ந்துவிட்டார். நாற்பது வயது நிரம்பும் வரை அவர் உலகில் சாதித்த சாதனை இவ்வளவே.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment