‘வீட்டிலிருந்து தப்பி வெளியேறியவர் வடக்கு நோக்கித்தான் நடையைக் கட்டியிருப்பார்; ஏனென்றால், அவருடைய புது மதத்தைத் தழுவியவர்கள் அத்தனை பேரும் யதுரிப் நகரில்தான் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். அவ்விடம்

நோக்கிச் செல்வதன்றி அவருக்கு வேறு மார்க்கமில்லை’ என்றெல்லாம் யூகித்துக் கொண்ட குறைஷிகள் அவரைத் துரத்திப் பிடிப்பதில் குறியானார்கள். காற்றினும் கடிதில் பறக்கும் உயர் ஜாதிக் குதிரைகள் அம்பு வேகத்தில் பாய்ந்தன. ஈட்டி, கத்தி, வாள், வேல் முதலிய எல்லா ஆயுதங்களையும் நீட்டிப் பிடித்துக் கொண்டு அந்த உதிரக் காட்டேறிகளான முரட்டுக் குறைஷிகள் நூற்றுக்கணக்கில் வடதிசை நோக்கிப் பலைவன வெளியிலே சூறாவளிபோல் சீறிப் பாய்ந்தனர். மாலைப்பொழுது வரை அத் திசையிலிருந்த மணல்வெளி முழுதையும் அவர்கள் சல்லடையாய்ச் சலித்ததுதான் மிச்சம். பன்னூறு கிலோ மீட்டர் பாய்ந்து சென்றும், கால்நடையாக ஏகிய முஹம்மதை அத்திறந்த வெளியில் எங்கும் காணோமே என்று பெருத்த ஏமாற்றத்துடன் அவர்கள் மக்காவுக்குத் திரும்பி வந்தார்கள்.

மறுநாள் விடிந்தது. ஆத்திரம், ஏமாற்றம், வெறி இத்தனைக்கும் ஆளாகிய அபூஜஹல் போன்ற கொடிய எதிரிகள் சற்றே யோசித்தார்கள்.

“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முஹம்மதைக் காணோமென்றால், அவர் இங்கே உள்ளூரிலேதான் எவர் வீட்டிலாவது புகலிடம் தேடி ஒளிந்து மறைந்து கொண்டிருக்க வேண்டும். எனவே, எல்லாருடைய வீட்டையும் சோதனையிட வேண்டும்,” என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். முன்பு உமருக்கு ஒரு சகோதரியிருந்து அவருக்கே தெரியாதபடி இஸ்லாத்தை ஏற்று ஏமாற்றி வந்ததுபோல், இப்பொழுதும் யாரோ ஒரு குறைஷி குலப் பெண் இவருக்குப் புகலிடம் தந்து இவரைப் பதுக்கி வைத்திருக்கிறாள் போலும்! என்று அவர்கள் ஐயங்கொண்டார்கள். மறுநிமிஷமே அத்தனை பேரின் இல்லங்களும், சட்டி பானை அடுக்கு மூலைகளும், பாய் ஜமக்காளங்களும், பரண்களும் துருவித் துளைக்கப்பட்டன.

பெருத்த ஏமாற்றந்தான் மிச்சம். ஆத்திரம் அதிகரித்து விட்டது. ஒருவன் ஓடி வந்து, “அபூபக்ரையும் காணோம்! அவருடைய வீடும் காலியாக இருக்கிறது,” என்று தகவல் கொடுத்தான். அபூஜஹலுக்குத் தாடி ரோமம் சிலிர்த்து விட்டது.

“அப்படியானால் அந்த இரண்டு பேரையும் சேர்த்துத் தேடுங்கள். அகப்பட்ட இடத்தில் கட்டிப் போட்டு, செத்த நாயை இழுத்து வருவதுபோல் இங்கே இழுத்து வந்து சேருங்கள். நம் தேவதைகளுக்கு நரபலியிட்டு நாளாகி விட்டது!” என்றான் அவன்.

மூன்றாம் நாள் விடிந்ததும் மக்காவிலிருந்த அத்தனை ஆண் வீரர்களும் ஆளுக்கொரு குதிரை மீது தாவியேறி நானா திக்கிலும் பறந்து சென்றார்கள். அப்படித் தேடி ஓடியவர்களுள் நாலைந்து பேர் தெற்குப் பக்கமாக ஏகி, தவ்ர் குகையினருகிலும் வந்துவிட்டார்கள். அப்பொழுது வெயில் மறைந்து கொண்டிருந்தது. வெளிறிய பிறை நிலவு அழுது வடிந்தது.

“இந்தப் பக்கமாக அந்த இரண்டு பேரும் வந்திருக்க முடியாது. வந்திருந்தாலும் பதுங்கிக்கொள்ள இந்தத் திறந்த குகையைத் தவிர வேறு மறைவிடம் கிடையாது,” என்றான் ஒருவன்.

“அதற்குள்ளேயும் நுழைந்துதான் பார்த்து விடுவோமே!” என்றான் மற்றொருவன்.

குகைக்குள் இருந்தபடியே இச்சொற்களைக் செவியேற்ற அபூபக்ர் (ரலி) உண்மையிலேயே பதறிவிட்டார். அந்தப் பதஷ்டத்தின் விளைவாக நபியை (ஸல்) நோக்கித் தாழ்ந்த குரலில், “இறைத் தூதரே! ஓர் ஆயுதங்கூட இல்லாமல் நாம் இருவர் மட்டுமே இங்கே தனியாக இருக்கிறோமே! எதிரிகள் அத்தனை பேரிடமிருந்தும் நாம் தப்புவது எப்படி?” என்று நடுக்கத்துடன் குழறினார்.

“என்ன நாமிருவரா?-இங்கே நாம் மூவர் இருக்கிறோமே, அதை மறந்துவிட்டீரோ?” என்றார்கள் நபியவர்கள்.

அபூபக்ருக்குப் (ரலி) பளிச்சென்று ஞானோதயம் ஏற்பட்டு விட்டது.

ஆம்! எல்லாம் வல்ல இறைவனொருவன் அங்கே பக்கத்தில் பாதுகாப்பு நல்கி வருகிறான் என்னும் உண்மை இப்போதுதான் இத் தோழருக்குப் புலனாயிற்று.

“மா நபியே! மன்னித்தருள்க! எல்லாம் வல்ல அல்லாஹ்வை யான் ஒருகணம் தெரியாத்தனமாய் மறந்து விட்டேன். தக்க சமயத்தில் தாங்கள் நினைவூட்டினீர்கள். ஆம், இறைவன் நம்மைக் காப்பாற்றி விடுவான்.”

திருக் குர்ஆனின் 9-ஆவது அத்தியாயத்தின் 40-ஆவது திருவாக்கியம் இந்த மறக்கொணா விஷயத்தை மிகவும் அழகாக வருணித்திருப்பதை நாம் இன்றும் காணலாம். “நீர் அஞ்சாதீர்! நிச்சயமாக நம்முடன் அல்லாஹ் துணை நிற்கிறான்!” என்று நபி (ஸல்) அபூபக்ரிடம் (ரலி) கூறினார்கள் என்று அத்திருவாக்கியம் குறிப்பிடுகிறது.

குகையை அந்தக் குறைஷி வீரர்கள் நெருங்கினார்கள். சுவரோரமாகச் சென்று எட்டிப் பார்க்க நினைத்த அவர்களை அங்கே குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிக் கிடந்த சிலந்தி வலையும், அதன்மீது படிந்திருந்த ஒட்டடைகளும் தடுத்து விட்டன.

“சிலந்தி வலையைச் சிதறடிக்காமல் எவன் இதனுள்ளே புகுந்திருக்க முடியும்?” என்று ஒருவன் சொன்னான்.

மற்றொருவனோ அந்தச் சுவர் ஓர முலையில் காட்டுப் புறாவொன்று முட்டையிட்டு அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினான்.

“மனித நடமாட்டமில்லாத வெற்றிடத்தில் தேடி நேரத்தை வீணாக்கியது போதும்! கிளம்புங்கள் வடக்கு நோக்கி! வடக்கே சென்றவர்களைத் தெற்கே தேடுவதற்கும் கானல் நீரை மான் தேடி ஓடுவதற்கும் வித்தியாசமில்லை,” என்றான் இன்னொருவன்.

மறுநிமிடமே அத்தனை பேரும் அங்கிருந்து வேறு திசை நோக்கிப் பறந்து பாய்ந்தார்கள்.

அபூபக்ர் (ரலி) ஆனந்தக் கண்ணீர் விட்டு நபியவர்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். அண்ணலோ ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ஆதுரத்துடன் அல்லாஹ்வுக்கு நன்றி நவின்றார்கள். இந்த இரண்டு பேரையும் அந்த மூன்றாமவன் காத்து ரட்சித்துவிட்டான்.

அப்போது ஒரு விஷப் பாம்பு கல்லிடுக்கிலிருந்து சீறி வந்தது. நபி (ஸல்) மீது தாக்காமல் தடுத்த அபூபக்ரின் (ரலி) கரத்தை அது தீண்டிவிட்டது. விஷம் ஏறுவதற்குள் பாம்பைக் கொன்று, கடிவாயில் நபி (ஸல்) தமது எச்சிலையுமிழ்ந்து தேய்த்துவிட்டார்கள். பொழுது விடிவதற்குள் விஷம் இறங்கிவிட்டது. அபூபக்ரும் (ரலி) தெளிவுற்றார். “கண நேரம் அல்லாஹ்வை மறந்த குற்றத்துக்காக நான் பெற்ற தண்டனை இது,” என்று பிற்காலத்தில் அவர் பல முறையும் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நான்காவது நாள் காலையில் இருவரும் மெல்ல வெளியே தலைநீட்டி எட்டிப் பார்த்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனித சஞ்சாரமே இல்லை. “இறைவனே மிகத் தூய்மையானவன்; அவனுக்கே அனைத்துப் புகழும்!” என்று இயம்பிய வண்ணம் நபி (ஸல்) முன்னே செல்ல, அபூபக்ர் (ரலி) அவரைப் பின் தொடர்ந்தார். இப்போது இருவரும் மேற்கு நோக்கி முன்னேறினார்கள். செங்கடல் கரையோரத்தை எட்டி, பிறகு வடகிழக்காக மதீனா நோக்கித் திரும்ப வேண்டும் என்பது நபி (ஸல்) வகுத்துக்கொண்ட திட்டமாகும்.

இவ்வாறு நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறிய நாள், ரபீஉல் அவ்வல் பிறை 4 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் (M. Caussin de Perceval என்பவர்) இதைக் கி.பி. 622, ஜுன் மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று கணித்திருக்கிறார். யாவரும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒருவன் தனது இல்லத்தைத் துறந்து வெளியேறும் செயல் ஹிஜ்ரத் (அல்லது ஹிஜ்ரா) என்று அரபி மொழியில் குறிப்பிடப்படும். எனவே, மா நபி (ஸல்) தமது பிறந்த ஊரைத் துறந்து வெளியேறிய இச்சம்பவம் ஹிஜ்ரா என்று சிறப்பாக அழைக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வரலாற்றில் இந்நிகழ்ச்சியே ஒரு பிரமாதமான திருப்பு முனையாக அமைந்து கிடக்கின்றமையால், இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமே இந்நிகழ்ச்சியை முன்னிறுத்தித்தான் தனது சகாப்தத்தைக் கணக்கிட்டு வருகிறது. பன்னிரண்டு சாந்திரமானங்கள் சுமார் 353 நாட்களே ஆதலால், ஒரு சூரிய ஆண்டைவிட 11 நாள் வித்தியாசப்படும். எனவே, கி.பி. 622 ஹி-1 என்று தொடங்கி, 1977 வரை 1397 ஆண்டுகளாகியிருக்கின்றன.

நபியும் (ஸல்) அவர்தம் தோழரும் மேற்கு நோக்கி நடந்து, கடற்கரையருகே பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார்கள். உடல் களைப்பினால் சோர்ந்து விட்டதென்றாலும், உள்ளம் மட்டும் சோர்வடையவில்லை. எதிரிகள் இந்தப் பக்கமாகத் தேடி வரும் ஆபத்தும் உண்டு ஆகையால், அவர்களது வேகம் குன்றாமல் மணற் காட்டில் விரைந்து சென்றார்கள். முன்பு மக்காவின் வடக்கெல்லைக்கு அப்பால் காத்துக் கிடந்த அபூபக்ரின் (ரலி) அபூஆமிர் என்னும் சேவகன், இரு ஒட்டகங்களையும் பண்டங்களையும் மதீனா நோக்கியே திருப்பி விட்டான். அவன் சென்று கொண்டேயிருக்கையில், சீக்கிரமே நபியும் (ஸல்) அபூபக்ரும் (ரலி) அவனை எட்டிப் பிடித்து விட்டார்கள். நடந்து அலைந்த களைப்புத் தீர அவர்கள் அந்த ஒட்டகங்களின்மீது ஏறியமர்ந்து வடக்கு நோக்கி விரைவாகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்கள்.

மக்காவிலோ குறைஷிகள் ஏமாற்றத்துக்குமேல் ஏமாற்றத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நானா திக்கிலும் வீணே அலைந்து திரிந்ததுதான் மிச்சம். ஓடிப் போனவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. “உயிரோடு முஹம்மதைப் பிடித்துக் கொடுப்பவருக்கு-அல்லது தலையை வெட்டிக் கொணர்ந்து சேர்ப்பவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும்!” என்னும் அறிவிப்பு நகரெங்கும் பறையறையப்பட்டது.

அபூத்தாலிபின் மைந்தர் அலீ (ரலி) தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையைச் சீக்கிரமே முடித்துக் கொண்டார். நபியிடம் (ஸல்) பொருளைப் பத்திரமாக ஒப்படைத்திருந்த ஒவ்வொருவரையும் இவர் தேடிக் கண்டுபிடித்து, அவரவருக்கும் திருப்பித் தந்தார். சிலர் பேசாமல் பெற்றுக் கொண்டார்கள். சிலர், “அல்அமீன் எங்கே போய் விட்டார்?” என்று கனிவுடன் அல்லது கள்ள நோக்குடன் அலீயிடம் (ரலி) கேட்டார்கள். மற்றும் சிலரோ, இனி எப்படி விலை மதிப்புள்ள பொருள்களைப் பத்திரப்படுத்தி வைப்பது என்று ஏங்கினார்கள்.

அலீ (ரலி) கடைசியாக மக்காவைவிட்டுப் புறப்படும்போது, மிகவும் குரூரமான முறையில் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டிருந்த சில முரடர்கள் அவரை மடக்கினார்கள். இந்தப் பேர்வழி நரித் தந்திரம் செய்து, நபியைத் தப்பி வெளியேறிப் போக உதவி செய்து விட்டாரே என்னும் சீற்றம் அவர்களைச் சூடேற்றிவிட்டது. எனவே, அவரைச் சிலர் அடித்தார்கள். வேறு சிலரோ நயமாக அவரைத் தாஜா செய்தார்கள்.

“அவர் எங்கே போனார்? எப்படிப் போனார்? என்பதை மட்டும் தெரிவிப்பீராக. நாங்கள் அவரைப் பிடித்து வந்து விடுகிறோம். கிடைக்கிற பரிசு முழுதையுமே உம்மிடம் தந்து விடுகிறோம்; இன்னம் மேலதிகமாகவும் சன்மானம் வழங்குகிறோம். உண்மையைச் சொல்லிவிடும்!”

“எனக்கொன்றும் தெரியாது. அன்றிரவு அவர் தமது படுக்கை மீது என்னைப் படுக்கச் சொன்னார். அசதி அதிகம். உடனே தூங்கி விட்டேன். எனக்கே தெரியாது, அவர் எப்படி வெளியேறினார், எப்போது வெளியேறினார் என்று. நானோ மூன்று நான்கு நாட்களாக அவரை இங்கே ஊர் முழுதும் தேடித் திரிகிறேன். நீங்களோ ஆளுக்கொரு பந்தயக் குதிரையை எடுத்துக் கொண்டு பல திக்கும் சென்று வேட்டையாடிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் கண்களுக்கே அவர் அகப்படவில்லையென்றால், எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?”

“அவர் திட்டமிட்டு வெளியேறிய வைபவம் உமக்குத் தெரியாது என்கிறீரே, அப்படியானால் அவர் வசமிருந்த அமானத் பொருள்களை உரியவர்களைத் தேடி ஒப்படைப்பதில் உமக்கென்ன அப்படிப்பட்ட அக்கறை வந்து விட்டது?”

“இதுவும் ஒரு கேள்வியா? அவரோ என் சிற்றப்பரின் மைந்தர்; பனூஹாஷிம் வமிசத்தின் குலவிளக்கு; அல்அமீன்! அவர் பாதுகாத்த பொருள்களை நான் திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால், பிறகு வேறு யார் ஒப்படைப்பார்? கடைசி நேரத்தில் அவர் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார் என்று நீங்களெல்லாரும் அவச் சொல்லைக் கற்பித்து விடுவதற்கு நானும் ஒரு கருவியாக இருப்பேனோ!”

“ஓடிப் போனவரை விட்டுவிட்டு இவரைப் பிடித்துக் கொண்டு இனியும் மாரடிப்பானேன்?” என்று ஒருவன் குறுக்கிட்டான். அதுவே தக்க வாய்ப்பு என்று அலீ (ரலி) நடையைக் கட்டிவிட்டார். பகலெல்லாம் பதுங்கிக் கிடப்பதும் இரவெலாம் நடந்து தீர்ப்பதுமாக இவர் அந்த 400 கிலோ மீட்டர் தூரத்தையும் கடக்கலானார். எந்நேரத்திலும் குறைஷிகள் மீண்டும் தம்மீது ஆத்திரத்துடன் துரத்தி வரக்கூடும் என்னும் அச்சம் அவரைப் பிடர்பிடித்து உந்திற்று.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment