காஹிராவை விட்டுவிட்டு, நாம் பாக்தாதுக்குச் சென்று பார்ப்போம்:-

கலீஃபாவின் அடிமையொருவன் ஷஜருத்துர் மறுமணம் புரிந்துகொண்டதையும், அக் கணவரையே

மிஸ்ரின் சுல்தானாக உயர்த்திவிட்டதையும் ஓடிவந்து தெரிவித்தவுடனே, முஸ்தஃஸிம் பில்லாஹ் அளவு மீறிய ஏமாற்றத்தால் இடிந்துபோயினார். தாடியைக் கோதிக் கொண்டும் மீசையை முறுக்கிக் கொண்டும் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டும் இருந்தார். வஜீர் ஜகரிய்யாவோ, என்ன விபரீதம் விளையப் போகிறதோ வென்று நடுநடுங்கிக்கொண்டு நின்றார். பெண்ணொருத்தி மிஸ்ரின் ஸல்தனத்திலே வீற்றிருக்கிறாளென்று முதலில் கேள்விப்பட்டபோது கலீஃபாவுக்கு எவ்வளவு கோபம் வந்ததோ, அதை விட அதிகமான கோபம் பிறந்தது, தூதன் வந்து இந்தக் கதையைச் சொன்னதும். ஆனால், இப்போது இந்த அடிமை வந்து அந்தப் பெரிய இடியைப் போட்டதும், கலீஃபாவுக்கு உலகமே இருண்டுபோய் விட்டாற்போலிருந்தது. கண்கள் சுழன்றன; மூளை கிறுகிறுத்தது.

“என்ன அநியாயம்! என்ன அக்கிரமம்! இவள் யாரைக் கேட்டு மறுமணம் புரிந்துகொண்டாள்? எவருடைய அனுமதியைப் பெற்று மிஸ்ரின் ஸல்தனத்தைத் தன் கணவனுக்குத் தானமாய்த் தாரைவார்த்தாள்? இவளென்ன, நெருப்புடன் விளையாடுகிறாளோ? இத் திருட்டுக்கழுதை எல்லாவற்றுக்கும் துணிந்துவிட்டது போலும்! என்ன அக்கிரமம்! இவள் நம்மைச் சாம்பலுக்குச் சமானமாக வல்லவோ எண்ணி விட்டாள் போவிருக்கிறது? இவள் தன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இவளையும் இவளுடைய புருஷனையும் இக்கணமே எம் வாளுக்கு இரையாக்கித் துண்டு துண்டாகச் சந்தைக் கழித்து, காக்கை கழுகுகளுக்கு வீசி யெறியாவிட்டால், நாமும் ஒரு கலீஃபாவோ! ”.என்று எரிமலையில் பொங்கி வழிகிற தீக்குழம்புபோலே சீறிப் பதறினார்.

வஜீர் சிலையேபோல் மெளனமுற்று நின்றார்.

“ஏ, ஜகரிய்யா! இந்தச் சூனியக்காரிக்காக நீர் மிகவும் பரிந்து பேசினீரே – பார்த்தீரா, இவள் என்னென்ன கோலாகல மெல்லாம் பண்ணுகிறாள் என்பதை? இப்போது என்ன சொல்கிறீர்? இம்மாதிரியான துரோகியை நாம் இன்னம் உயிருடனே விட்டு வைப்போமானால், நம்முடைய கிலாஃபத் சாம்ராஜ்யம் என்ன ஆவது? இப்படியெல்லாம் வந்து மூளுமென்று தெரிந்துதானே நாம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமென்று துடியாய்த் துடித்தோம்? நீர் தாமே முன்னுக்கும் போக விடாமல், பின்னுக்கும் போகவிடாமல் வீண் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்தீர்? இப்போது என் செய்வது?- ஏன் திருதிரு வென்று திருடனைப்போலே விழிக்கின்றீர்? இக்கணமே சென்று நீர் படை திரட்டும். நாளையே காஹிராவின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வுலகிலுள்ள இத்தகைய வேறு துரோகிகளுக்கு இஃதொரு படிப்பினையா யிருக்கவேண்டும்! தெரிந்ததா?”

“யா அமீரல் மூமினீன்! விஷயம் இவ்வளவு விபரீதமாய்ப் போய் முடியுமென்பதை யான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் கூறுவதுபோல் நாம் இனியும் வாளா இருப்பதென்பது அறவே கூடாதுதான். அவளே பட்டத்தில் தொடர்ந்திருந்தாலும் பரவாயில்லை. என்னெனின், ஐயூபி சுல்தானொருவரின் மாஜீ மனைவி என்கிற ஹோதாவிலாவது விட்டுக் கொடுத்துக் கொண்டு சும்மா இருக்கலாம். ஆனால், அவள் வேறொருவனை மணந்து, அவனுக்கு மிஸ்ரின் ஸல்தனத்தைத் தாரை வார்ப்பதென்றால், நாம் எப்படி அதனை விட்டுக்கொடுப்பது? நாம் இக்கணமே அதில் தலையிட்டுத்தான் தீரவேண்டும்!”. என்று வஜீர் வெகு சாமர்த்தியமாக ஒத்தூதி, நிலைமையை ஒருவாறு சமாளித்துக்கொண்டார்.

“ஏ, ஜகரிய்யா! இப்போதாவது உமக்கு ஆண்டவன் நல்ல புத்தியைக் கொடுத்தானே! அடுத்து எடுக்க வேண்டிய விஷயத்தை இக்கணமே கவனியும். இனியும் காலந்தாழ்த்துவது ஆபத்தாய்ப்போய் முடியலாம். இவளையும் இவளுடைய புருஷனையும் இருக்கிற இடம்தெரியாமல் ஒழித்துக்கட்டவேண்டும்!”.

“யா கலீஃபத்தல் முஸ்லிமீன்! ஊர்க்குருவியைக் கொல்வதற்கு ஒரு கலீஃபாவின் பெரும் படையா போகவேண்டும்? கேவலம் ஒரு பெண்பிள்ளை; அற்பன் அவளுடைய கணவன். இவ்விருவரையும் வீழ்த்துவதற்காக இவ்வளவு பெரிய கலீஃபாவும் கலீஃபாவின் சேனைப் பரிவாரங்களுமா பாக்தாதிலிருந்து காஹிராவரை  செல்ல வேண்டும்? இதனால் கலீஃபாவின் நடவடிக்கைகள் எதிரிகளின் உள்ளத்துள் பெருநகைப்பை மூட்டாவா? பிற்காலத்தில் வருகிற சந்ததியார்கள் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?”

“பின்னே,, என்ன செய்யலாமென்று சொல்லுகிறீர்? முன்னம் நாம் அனுப்பிய தூதனை மிஸ்ரிகள் எப்படி அவமதித்தார்களென்பதைத்தான் நன்றாயறிவோமே! இப்போது படையெடுத்துச் செல்லாமல் வேறு எப்படி நிலைமையைச் செப்பனிடுவது? வைக்கோற் போரில் ஒரு சிறு பொறி விழுந்தாலும் அக்கணமே எப்படியும் அதனை அணைக்க முயல்வதுதானே அறிவுடைமை? சிறிய பாம்பாயிருந்தாலும், பெரிய தடியால் அடிக்க வேண்டாமா?”.

“ஹுஜூர்! நாம் நடவடிக்கை எடுக்கக்கூடாதென்று யான் சொல்லவில்லையே! எடுக்கிற நடவடிக்கை காரியத்துக்குப் பொருத்தமாயிருக்க வேண்டும்; கோரியபலனைக் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்றுதான் கூறவந்தேன். ஷஜருத்துர்ருக்குப் புத்திபுகட்ட வேண்டுமென்னும் ஓர் அற்பக் காரணத்துக்காக நாம் இவ்வளவு தூரம் ரத கஜ துரகபதாதிகளுடன் படையெழுந்து செல்ல வேண்டிய அவசியமே அணுத் துணையுமில்லை. நம் கண்ணியத்தையும் இழிவுபடுத்திக் கொள்ளாமல், மிஸ்ரின் மக்களையும் நம் பக்கல் திருப்பிக்கொண்டு, அவளையும் அவள் கணவனையும் இருக்கிற இடந்தெரியாமற் பறக்கச்செய்ய வேண்டுமென்றால், தாங்கள் இந்த பாக்தாதிலே, இந்த அரண்மனையிலே இப்படியே இருந்து கொண்டே, எல்லாவற்றையும் திறமையாகச் சாதித்துமுடித்து விட முடியுமென்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்.”.

“அஃதெப்படி முடியும், வஜீர்?”.

“யா அமீரா மூமினீன்! அதைத்தானே நானும் சொல்லவந்தேன்: ஐயூபி வம்சத்து மூஸா என்னும் சிறுவன் எங்கிருக்கிறானென்பதை முதலில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; அப்பால் அவனை இரகசியமாக இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பிறகு தாங்கள் தங்களுடைய விசேஷாதிகாரத்தைச் செலுத்தி, அவனையே மிஸ்ரின் சுல்தானென்று பிரகடனப்படுத்தி, அதற்காக ஒரு பர்மானையும் தயாரித்து, இங்கிருந்து பத்துப் பிரமுகர்களின் துணையுடனும், மிகச் சிறிய படைக்காவலுடனும் மிஸ்ருக்கு அனுப்பவேண்டும். மிஸ்ரிகள் வேறுவழியின்றி, கலீஃபாவாகிய தாங்கள் நியமனம் செய்தனுப்பும் மூஸாவையே சுல்தானாக ஏற்றுக்கொள்ள நேரும். அப்போது ஷஜருத்துர்ரின் கணவனும் ஷஜருத்துர்ரும் தாங்களாகவே காஹிராவைவிட்டுத் தலைமறைவாக நள்ளிரவிலே ஓடிப்போக நேரிட்டுவிடும். தாங்கள் நியமித்தனுப்புகிற சுல்தானை மிஸ்ரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து, ஏதும் கிளர்ச்சிசெய்து, ஷஜருத்துர்ரின் சார்பாக நின்று கலகம் விளைப்பதாயிருந்தால், அப்போது என்ன செய்யலாமென்பதை அப்பால் யோசித்துக் கொள்ளலாம். ஆனால், அவ்வளவு தூரத்துக்கு ஒன்றும் முற்றிப் போகாது. தாங்கள் நேரடி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், மிஸ்ரிகள் தங்களுடைய ஆணைக்குப் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். மேலும், ஷஜருத்துர்ரை ராணியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்க ளென்பதற்கு என்ன அத்தாட்சியிருக்கிறது? ஷஜருத்துர்ருக்கு மாற்றமாக அவளுடைய புருஷன் ஆண்டால்தானென்ன அல்லது தாங்கள் நியமிக்கிற மூஸா ஆண்டால்தானென்ன என்றுதான் அவர்கள் பேசாமலிருந்துவிடக் கூடுமென்றே நான் நினைக்கிறேன். ஆயினும், நாம் இனியொரு விஷ­யத்தையும் விளக்கமாய்த் தெரிந்துகொள்ள வேண்டும். அஃதாவது, ஸல்தனத்தில் சகல பொறுப்பையும் அவள் தன் கணவனுடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கிவிட்டாளா அல்லது பெயருக்காகவாவது அந்தக் கணவனை சுல்தானென்று சொல்லி நியமித்துவிட்டு, சூத்திரக் கயிற்றைத் தன் கையிலேயே கெட்டியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறாளா? என்னும் விவரத்தை நாம் முற்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தைத் தெரிந்துவரவும், மூஸாவைத் தேடிப் பிடித்து வரவும் இக்கணமே நாம் தகுதியான பேர்வழியை யனுப்பவேண்டும்.”.

வஜீர் கூறிய இவ்விஷயமெல்லாம் கலீஃபாவுக்கு முற்றும் பிடித்தமாயிருந்தபடியால், அக்கணமே ஆமோதித்து விட்டார். அபுல் ஹஸன் என்னும் விசே­ஷ சிப்பந்தி உடனே தருவிக்கப்பட்டான். அவன் வெகு சீக்கிரமாகக் காஹிராவுக்குப் புறப்பட்டுப் போகவேண்டுமென்றும் அங்கு நடைபெறுகிற சகல அரசியல் வியவகாரங்களையும் பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் சரியாய் அறிந்துவர வேண்டுமென்றும் சுல்தான் காமிலின் கொள்ளுப்பேரன் மூஸாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கையோடு பாக்தாதுக்கு அழைத்துவந்து சேரவேண்டுமேன்றும் கலீஃபா அவனுக்குக் கட்டளையிட்டனுப்பினார்.

உத்தேசம் ஒரு மாதஞ் சென்று அந்த அபுல் ஹஸன் மூஸாவைக் கூப்பிட்டுக் கொண்டு, அமீருல் மூஃமினீனின் திரு முன்னர் வந்து நின்றான். கலீஃபா தன்னை ஏன் ஆள்விட்டு இராகசியமாகக் கூப்பிட்டுவரச் செய்தாரென்னும் காரணந் தெரியாமல் மூஸா கலக்கத்துடனேதான் நின்றுகொண்டிருந்தான். வாய்பொத்தி, கைகட்டி அச் சிறுவன் கலீஃபாவுக்கு ஸலாம் பகர்ந்தான். அபுல் ஹஸனோ, தான் காஹிராவில் கண்டும் கேட்டும் வந்த கதை முழுதையும் விஸ்தாரமாக விளக்கிச் கொன்னான்.

“என்ன? முஈஜுத்தீன் என்பவன் முன்னமே விவாகமானவனா? மனைவியோடு வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த ஒருவனையா இந்த ஷஜருத்துர் மணந்துகொண்டாள்? வேறு தகுதியான ஏற்கெனவே விவாகமாகாத, அல்லது விவாகமாகி மனைவியை யிழந்துவிட்டிருந்த இன்னொருவன் அகப்படவில்லையா அவளுக்கு?”

“யா அமீரல் மூஃமினின்! அந்த இரகசியந்தான் ஒரு வருக்கும் விளங்கவில்லை. முஈஜுத்தீன் ஷஜருத்துர்ரை மணந்து கொண்டதால், ஒன்றும் பிரமாத சந்தோஷங் கொண்டதாகத் தோன்றவில்லை. அவருடைய முதல் மனைவி மைமூனாவோ, இரவும் பகலும் தன் கணவனைப் பறித்துக் கொண்ட ஷஜருத்துர்ரை வாயாரச் சபித்துக்கொண்டே யிருக்கிறாளாம். புர்ஜீகள் தாம் இந்த வின்னியாசமான விவாகத்தை முற்றிலும் வெறுக்கிறார்களென்றால், இதுவரை முழுக்க முழுக்க  ஷஜருத்துர்ருக்கு எல்லா விஷயத்திலும்  அந்தரங்கத்திலே உடந்தையாயிருந்து வந்த ஜாஹிர் ருக்னுத்தீனென்னும் பஹ்ரீ அமீரேயுங்கூடத் தூக்ஷித்துத்தான் பேசுகிறார். நான் தெரிந்து கொண்டதிலிருந்து, ஸாலிஹ் உயிரிழந்த போதே ஷஜருத்துர் ருக்னுத்தீனைக் காதலிக்க ஆரம்பித்ததாகவும் ஆனால் நாள் செல்லச் செல்ல அவள் முஈஜுத்தீன்மீது மோகத்தைத் திருப்பிவிட்டதாகவும் தோன்றுகிறது. அம்மாதிரி ‘திடீர் பல்ட்டி’ யடித்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கக் கூடுமென்று பலர் சொல்லுகிறார்கள்:

“ஒன்று, ருக்னுத்தீன் கண்களிலொன்று ஊனமா யிருப்பது; மற்றொன்று, மிகப்பெரிய லூயீயையே போர்க் களத்தில் வென்று மிஸ்ரைக் காப்பாற்றிய அத்துணைப் பெரிய திறமைசாலியான ஒருவரைக் கணவராக்கிக் கொண்டால், தன்னிஷ்டத்துக்கு அந்த அமீரை ஆட்டிப் படைக்க முடியாதென்று அவள் அஞ்சுவது. எனவே, தனது மனம் போன போக்கெல்லாம் போகக்கூடிய முஈஜை மணந்து கொண்டு, பெயருக்காகவாவது அவரை சுல்தானென்று பிரகடனப்படுத்திவிட்டு, கலீஃபாவாகிய தங்களை முழுக்க முழுக்க ஏமாற்றுவதற்கே இத்தனை தந்திரங்களையும் அவள் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. அந்த முஈஜூத்தீன் என்பவரும் ஷஜருத்துர்ருக்கு முற்றமுற்ற அடிமையாய்ப் போய், அவள் நீட்டுகிற இடத்திலே கையெழுத்தைப் போட்டுக் கொண்டு, தம் முதல் மனைவியையும் அவளுக்குப் பிறந்த மூன்று வயதுள்ள சிறு குழந்தையையும் அடியோடு மறந்து, – இல்லை, துறந்து, அரண்மனை வாழ்க்கையே அமரலோக வாழ்க்கையாகவும் ஷஜருத்துர்ரிடம் பெறுகிற சிற்றின்பக் காதலே பேரின்பப் பெரு வெளியாகவும் கருதி நாட்கடத்தி வருகிறார்.

“அன்றியும், சாகசக் கள்ளியும் சூன்யக்காரியும் மந்திரவாதியும் மோகன சுந்தரியும் சிற்றின்பக் கனிரசமுமாகிய ஷஜருத்துர் அந்தப் பரிதபிக்கத்தக்க முஈஜுத்தீனைப் பொல்லாத மருந்தெல்லாம் போட்டு மயக்கி வைத்திருப்பதாலேதான் அவர் அவளுக்கு முற்றிலும் அடிமையாய்ப் போனதுடன் ஆறாவதறிவையும் அடியோடிழந்து, அவளுடைய மாயவலைக்குள்ளே மாட்டிக்கொண்டு, கட்டிய மனைவியைக் கைகழுவி விட்டு, ஷஜருத்தர்ரே கதியென்று சாஷ்டாங்கமாய்த் தண்டனிட்டுக் கிடப்பதாகவும் நம்பத்தகுந்த பேர்வழிகளிடம் தீர விசாரித்து வந்திருக்கிறேன். மிஸ்ர் தேசத்தில் எத்தனையோ பரத்தைகள் எத்தனையோ வகைகளில் எவ்வளவோ கைஸர்களை எப்படியெப்படியோ வெல்லாம் மயக்கியிருக்கிறார்க ளென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ஷஜருத்துர் தன்னுடைய கணவரை மயக்கி வைத்திருக்கிற மாதிரியைப் பார்த்தால், எனக்கே பயமாக இருக்கிறது. தப்பித்தவறி அவளுடைய திருஷ்டி எவர் மீதாவது விழுந்து விட்டால், அவர் அக்கணமே பஸ்மமாய் நீற்றுவிடுவார் போல் தோன்றுகிறது!”

இது கேட்டு, கலீஃபாவானவர் தம்முடைய வஜீரை உற்று நோக்கினார். “ஏ, ஜகரிய்யா! கேட்டீரா கதையை? இவள் மாயக்காரியாகவும் மந்திரவாதியாகவும் சூனியக்காரியாகவும், சூது விளைப்பவளாகவுமே விளங்கி வருகிறாளென்று நாம் சொன்னால், நீர் நம்ப மறுத்தீரே: பார்த்தீரா இவளுடைய சூனிய வித்தைகளையும், சூக்ஷும விஷமங்களையும்!” என்று கர்வத்துடனே கடாவினார்.

“யா அமீரல் மூஃமினீன்! அவள் போனால் போகிறாள். இப்பொழுது ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நாம் எடுக்கிற நடவடிக்கையை யெடுத்தால், நடக்கிற காரியம் தானே நடக்கும். சூனிய வித்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பெண் பிள்ளை உலகம் முழுதையுமே ஏய்த்துவிட முடியுமா? அவள் முஈஜுத்தீனை மயக்கியிருக்கலாம். ஆனால், எல்லா மிஸ்ரிகளின் கண்களிலும் மண்ணைத் தெள்ளிப் போடமுடியாதல்லவா? தாங்கள் ஒன்றும் யோசிக்கத் தேவையில்லை. இக்கணமே ஏற்பாடு எடுங்கள்; எல்லாம் சரியாகிவிடும்,” என்று வஜீர் பதிலீந்தார்.

மூஸா என்னும் அந்த ஜயூபிச் சிறுவன் ஒன்றும் விளங்காமல் திகைத்தான். தன்னுடைய பாட்டியாரான ஜுலைகாவின் சகோதரர் ஸாலிஹின் மனைவி புரிகிற அழிச்சாட்டியங்களைப் பற்றித் தன் முன்னிலையில் கலீஃபா விசாரணை நடத்துவதன் மர்மமொன்றையும் அவனால் யூகிக்க முடியவில்லை. ஏனெனின், கலீஃபாவின் முன்னே வாய் திறந்து எதையும் கேட்கத் துணியாதவனாக மூஸா பேசாமல் வாய்புதைந்து நின்று கொண்டிருந்தான்.

“ஏ, மூஸா ! நீ ஓர் ஐயூபிதானே? ”என்று கலீஃபா கடாவினார்.

“யா அமீரல் மூஃமினீன்! அப்படித்தான் எல்லாரும் சொல்லுகிறார்கள். என் தாயாரும் என் வம்சாவளியைப்பற்றி என்னிடம் பேசும்போதெல்லாம் யானோர் ஐயூபி வம்சத்தினன் என்றே கூறிவருகிறார். ஆனால், எனக்கு விவரமொன்றும் தெரியாதென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்,” என்று பயந்த தொனியில் மிருதுவாய்ப் பேசினான் மூஸா.

“ஏ, மூஸா! இப்போது மிஸ்ரின் ஸல்தனத்துக்கு நீயே நியாயமாய் சுல்தானாக இருக்கவேண்டுமென்பதை நீ அறிவாயா?”

“யா அமீரல் மூஃமினீன்! யானோர் ஏழை. எனக்கேன் அவ்வளவு பெரிய பதவி? ஐயூபி வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தாங்கள் எனக்கு ஏதாவது  வெகுமதி கொடுக்க விரும்பினால், ஒருசில ஆயிரம் தீனார்கள் கொடுத்தால் மட்டுமே எனக்கும், என் விதவைத் தாயாருக்கும் போதுமானவையாயிருக்கும். எனக்கு மிஸ்ரின் ஸல்தனத்தும் வேண்டாம்; அன்றி, மற்றொரு ஸல்தனத்தும் வேண்டாம். ஏதாவது உபகாரச் சம்பளம் கொடுத்தீர்களானால், யான் என் ஆயுள் உள்ளளவும் திரிகரண சுத்தியுடன் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டு நிற்பேன். அவ்வளவே எனக்குப் போதும்! யானொன்றும் சுல்தானாக உயர்வதற்குரிய யோக்கியதையும் பெற்றில்லை; அல்லது அந்தப் பதவியை யான் ஆசிக்கவுமில்லை. என்னைத் தயவு செய்து மன்னியுங்கள், ஹுஜூர்!”

“அட பைத்தியமே! உனக்கு முற்றமுற்ற உரிமையிருக்கிற பாத்தியதையையா வேண்டாமென்று உதறித் தள்ளுகிறாய்? ஷஜருத்துர் என்னும் மாய்மாலச் சூனியக்காரி உன்னுடைய தந்தைவழிச் சொத்தைக் கபடமார்க்கமாக அபகரித்துக் கொண்டாள் என்பதற்காக நாம் அரும்பாடுபட்டு உன்னைத் தேடிக் கண்டுபிடித்து உனக்குள்ள உரிமையைக் கொடுக்க விழையும்போது, நீ ஏன் வேண்டாமென்று மறுதலிக்கின்றாய்?  ஒருசில ஆயிரம் தீனர்கள் மட்டும் எதற்குக் கேட்கின்றாய்? நாம்தாம் முழு மிஸ்ரையுமே உனக்குக் கொடுக்கிறோமே! முன்பின் தெரியாத ஒரு வேற்று நாட்டு விதவை ஸ்திரீ மிஸ்ரை இன்று தன்னிஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கத் துணிந்திருக்கும்போது, தலைமுறை தலைமுறையாக நேர்மையான ஆட்சி புரிந்துவந்த ஐயூபி சுல்தான்களின் சந்ததியில் வந்த கான்முளை வீரனாகிய நீ ஏன் பின்வாங்குகின்றாய்? கைஸருக்குரியதைக் கைஸரிடமே கொடுத்துவிட வேண்டுமென்று ஈஸா நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் கூடத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்களே!

“நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும், மிஸ்ர் உன்னுடைய சொத்துத்தான்; மிஸ்ரின் ஸல்தனத்தின் உரிமையும் உன்னுடையதேதான்; மிஸ்ரின் அரியாசனத்தில் நீயேதான் ஏறி அமரவேண்டும். கலீஃபாவென்னும் சர்வ அதிகாரத்துடனும் அதை நாம் கூறுகிறோம்: எம்மை எதிர்க்கவோ, அல்லது எம் கூற்றுக்கு மாற்ற முரைக்கவோ, எவராலுமாகாது. நாம் சொன்னது சொன்னதே! நீதான் மிஸ்ரின் சுல்தான்! உன்னையே நாம் மிஸ்ரின் ஸல்தனத்துக்குரிய ஏகபோக அரசனென்று இன்றே பிரகடனப் படுத்துகிறோம். கலீஃபாவாகிய எம்முடைய கட்டளையை நீ ஏற்காவிட்டால், பெரிய துரோகியாகக் கருதப்பட்டு, உரிய தண்டனையும் விதிக்கப்பெறுவாயென்பதை மறந்து விடாதே! உன்னை மிஸ்ரின் சுல்தானாக உயர்த்துவதுடன், உன் பாதுகாவலுக்கு வேண்டிய அத்தனை உபகரணங்களையும் நாம் இறுதிவரை அளித்துவருவோ மென்பதையும் உனக்கு ஞாபக மூட்டுகிறோம். என்ன சொல்லுகிறாய்?”

அகிலமெலாம் கண்டஞ்சுகின்ற ஏகபோக சக்ரவர்த்தியாகிய கலீஃபாவின் முன்னே நிற்கிற மூஸாவென்னும் இச்சிறுவன் எதிர்த்துப் பேசவேண்டுவது என்ன இருக்கிறது? அப்படி ஏதும் மீறிப்பேசினால், தலையே பறந்துபோய்விடுமென்று எச்சரிக்கை பிறந்திருக்கும் போது துணிச்சல்தான் எப்படிப்பிறக்கும்? எனவே, மூஸா பேசாது மெளனமுற்று நின்றான்.

கலீஃபா காலங்கடத்த விரும்பவில்லை. அக்கணமே எல்லா ஏற்பாடுகளையும் எடுத்தார். விசேஷ அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது; “மிஸ்ரின் ஸல்தனத்தைக் கபடமார்க்கமாக அபகரித்துக்கொண்டிருக்கிற ஷஜருத்துர்ரும்அவளுடைய கணவன் முஈஜுத்தீன் ஐபக் என்பவனும் இஸ்லாத்துக்கும், அமீருல் மூஃமினீனுக்கும் கொடிய துரோகிகளாவார்கள். அவர்களை எல்லா மிஸ்ரிகளும் திரஸ்கரித்து ஒதுக்கித்தள்ள வேண்டுமென்று இவ்வறிக்கை மூலம் பிரகடனப்படுத்தப்படுகிறது. கிலாஃபத்துக்கே பகிரங்க விரோதிகளாயிருந்து வரும் அவர்களுடனே எந்த மனிதனேனும் நேயம் பூண்டாலும், அல்லது நேயங் கொள்ளும்படி பிறரைத் தூண்டிவிட்டாலும், அவனும் ஓர் அரசாங்கத் துரோகியாகவே கருதப்படுவான். அல்லது அந்தச் சதிபதிகளுள் ஒருவரையோ அல்லது இருவரையுமோ, தெரிந்தோ தெரியாமலோ, அந்தரங்கமாகவோ பகிரங்கமாகவோ, இனியும் தொடர்ந்து மிஸ்ரின் ஆட்சியைப் பராமரிக்கும்படி தூண்டினாலும், அல்லது தூண்ட உதவிபுரிந்தாலும், மன்னிக்க முடியாத மாபெரும் ராஜதுரோகக் குற்றமாகவே அது கருதப்படும். இத்தகைய துரோகக் குற்றங்களைப் புரிவோரின் தலை துணிக்கப்படுவதுடன், அவர்களின் உற்றார் உறவினர்களும் சிறையிலடைக்கப்பட்டு, சொத்தெல்லாம் பைத்துல் மாலுக்குப் பறிமுதல் செய்யப்பட்டுவிடும்! மேலும், மிஸ்ரின் சட்டபூர்வமான சுல்தான் மூஸா என்னும் ஐயூபியேயாவார். மிஸ்ரின் சகல மக்களும் அல்மலிக்குல் அஷ்ரப் என்னும் இந்த மூஸாவுக்கே ராஜவிசுவாசப் பிரமாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். இவரை நாமே மிஸ்ரின் சுல்தானாக நியமனம் செய்வதால், இவருக்கு விராதமாகச் சூழ்ச்சி செய்கிறவர் எமக்கெதிராகச் சூழ்ச்சி செய்தவராகவே கருதப்படுவர். இவரை சுல்தானாக ஏற்க மறுப்பவர் எம்மையே கலீஃபா அல்லவென்று மறுப்பதற் கொப்பானவராகவே கருதப்படுவர். கலீஃபாவுக்கோ, அல்லது கலீஃபாவின் நியமனம்பெற்ற சுல்தானுக்கோ, எதிராகச் சூழ்ச்சி செய்கிறவர் எத்தகைய கொடிய சித்திரவதைக்கு ஆளாவாரென்பதை நாம் ஞாபகமூட்டத் தேவையில்லை. ஆண்டவன்மீதும் அவனனுப்பிய நபிமார்கள் மீதும் நன்னம்பிக்கை கொண்டு, நற்கருமம் புரிந்துவருகின்ற ஸாலிஹீன்களாய நீங்களெல்லீரும் எம்முடைய இந்த அரசாங்க அறிக்கையை ஏற்றுக்கொண்டு, மூஸாவையே சுல்தானாக அமர்த்திக் கொள்வீர்களாக! அந்த அபகரிப்பவளும் மாய சூனியக்காரியும் மாந்திரீக வித்தை கற்றவளுமாகிய ஷஜருத்துர்ரென்பவளையும் அவளுடைய கணவனையும் இக்கணமே நாடு கடத்துவதற்கு எல்லாவிதமான ஏற்பாடுகளும் எடுப்பீர்களாக!”

இவ்விதமாகத் தயாரிக்கப்பட்ட கலீஃபாவின் விசேஷ அறிக்கையின் கீழே முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களின் கையொப்பத்துடன், கிலாஃபத்தின் பெரிய முத்திரையும் பொறிக்கப்பட்டது. பிறகு அந்த அறிக்கையைப் பல பிரதிகளாக எழுதும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கலீஃபா நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தால் எல்லாம் எவ்வளவு விரைவில் நடைபெற்று முடியுமென்பதை நாம் விளக்கவா வேண்டும்?

இவ்விதமாக, அமீருல் மூஃமினீன் முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்கள் மூஸாவென்னும் ஐயூபிச் சிறுவனை மிஸ்ரின் சுல்தானென்று முடிவுகட்டி, அவனுக்கு அல்மலிக்குல் அஷ்ரப் என்று பட்டமுஞ்சூட்டி எல்லாக் காரியங்களையும் தீர்க்கமாய்ச்செய்து முடித்துவிட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment