சக்களத்தியும் சக்களத்தியும்

ஐபக் மூர்ச்சைத் தெளிந்து விழிப்பதற்கும், பொழுது புலர்வதற்கும் சரியாயிருந்தது. சென்ற இரவு நிகழ்ந்த பயங்கரமிக்க சம்பாஷணைகள் கனவில் நடந்தவையா, அல்லது மானஸ உலகில் நடைபெற்றனவா

என்பதைக்கூட அந்த சுல்தானால் ஊகிக்க இயலவில்லை. இன்றைப்பொழுது எப்படிக் கழியப் போகிறதோ என்னும் நடுங்கிய உள்ளத்துடனே ஷ­ஜருத்துர்ரின் படுக்கையைப் பார்த்தார். அங்கே ஷ­ஜருத்துர் படுத்திருக்கவில்லை! எழுந்துச் சென்றுவிட்டதாகத் தோன்றியது.

“யா அல்லாஹ்! என்னை நீ என்ன கதிக்கெல்லாம் ஆளாக்கப் போகிறாய்? எப்படி இந்தச் சூனியக்காரியாகிய ஷ­ஜருத்துர்ரிடமிருந்து என்னை நீ மீள்விக்கப் போகின்றாய்? நிரபராதியான, கற்பிற்கரசியான என் பிரிய மைமூனாவை யான் இன்றுவரை தெரியாத்தனத்தாலும் அறியாமையாலும் பதவி மோகத்தாலும் அடியோடு மறந்துவிட்ட கொடிய பாபத்துக்காக என்னை நீ எப்படித் தண்டித்தாலும் தகும். ஆனால், என்னைத் தண்டிக்காமல், அச்சிறந்த பத்தினியை நீ இந்தப் பெண் பிசாசான அரக்கிக்குப் பலியிடப் பார்க்கிறாயே! என் மைமூனா என்ன பாபத்தைப் புரிந்துவிட்டாள்? அவளுக்கு என் ஊத்தை வாயினால் நான் எப்படித் தலாக்குக் கொடுப்பேன்? ஒரு தவறும் இழைக்காத ஓரபலையை விவகாரத்து செய்யும் குற்றத்துக்காக நான் எப்படி உன் முன்னே மன்னிப்புக் கேட்கப் போகிறேன்?

ஏ, இறைவா! என்னிடமிருந்து இந்த ஸல்தனத்தையும் இந்தப் பாதகி ஷ­ஜருத்துர்ரையுமாவது பிடுங்கிக்கொண்டுவிடு. ஆனால் என் இன்பக் கனிரசமாகிய பதிவிரதை மைமூனாவை என்னிடமிருந்து பிரிப்பதற்குத் துணைபுரியாதே! ஏ, ஆபத்பாந்தவா! அனாதரக்ஷகா! நான் மிகவும் ஆபத்தான சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறேனே! நீ எனக்கு நேர்வழி காண்பிக்க மாட்டாயா? நான் தலாக்குச் சொல்லா விட்டால், என் உயிரையே வாங்கிவிடுவாளே இந்தக் கிராதகி! தலாக்குச் சொல்லிவிட்டாலோ, நான் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழப்போதில்லையே! இறுதலைக்கொள்ளி எறும்பாக என்னை நீ ஆக்கிவிட்டாயே!

ஏ, ஆண்டவனே எனக்கு மீளும் மார்க்கம் ஏதுமில்லையா? எனக்குப் பேராசையையும் பதவி மோகத்தையும் நீயே மூட்டிவிட்டு, என்னை இந்தத் தர்மசங்கடமான நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டாயே! இத்தனை நாட்களாகத் திரஸ்கரித்திருந்த என் உத்தம மனைவியான பத்தினி முகத்தில் நானெப்படி இன்று விழிக்கப் போகிறேன்? அப்படி விழித்தவுடனே எப்படித் தலாக்குச் சொல்ல மனந்துணியப் போகிறேன்? ஏ, இறைவா! என்னை இந்தக் கொடுஞ் சோதனையினின்று எப்படியாவது தப்ப வைத்துவிடு; அல்லது ஷ­ஜருத்துர்ரின் மனத்தையாவது நீ மாற்றிவிடு. சுயநலத்தின்மீதே குறியாயிருக்கிற அவளை நீ எப்படியாவது தண்டித்துக்கொள். ஆனால், என் ஆருயிர் மனைவியை, அன்பின் அமுதை, காதலின் ஜோதியை வீணே கெடுத்துவிடாதே!” என்றெல்லாம் தம் மனத்துக்குள்ளே ஏதேதோ பேசிக்கொண்டார் முஈஜுத்தீன். படுக்கையை விட்டு எழுந்திராமல் படுத்தபடியே நீட்டிக் கிடந்தார்.

அரண்மனையிலே இப்படியிருக்க, மைமூனாவின் இல்லத்திலே என்ன நடந்தது, தெரியுமா? அந்தப் பெண்மணி வழக்கத்துக் கொப்ப அதிகாலையிலே எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ஆண்டவனை ஸுப்ஹு தொழுது வணங்கிவிட்டுத் தன் மைந்தன் நூருத்தீன் தூங்கி எழுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அச் சந்தர்ப்பத்தில் அரண்மனை அடிமையொருவன் மைமூன ஸாஹிபாவைக் காண வந்திருப்பதாக வெளியிலிருந்து செய்தி வந்தது.

“அரண்மனை அடிமையா? என்னைக் காணவா?” என்று துள்ளிக்கொணடே வினவினாள் மைமூனா. அவளுடைய கண்களில் நீர் மல்கியது. தன் வேண்டுதல்களுக்கு இறுதியாக இறைவன் சற்றே கருணைக் காட்டி விட்டான் போலும் என்று மனமகிழ்ந்து, தன்னிரு விழிகளையும் வானத்தின் பக்கல் உயர்த்தினாள். “அப்படியானால் அந்த அடிமையை இக்கணமே உள்ளே அனுப்புங்கள்!” என்று மைமூனா உத்தரவு கொடுத்தாள். என்னெனின், முஈஜுத்தீன் இறுதியாக மனமிறங்கி இத்தனை நாள் சென்ற பிறகாவது ஏதோ நற்செய்தி சொல்லியனுப்பியிருக்கிறார் போலுமென்று எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணம் உதித்த வேகத்திலேதான் அடிமையைக் கண்டதும் பேச்செடுத்தாள்.

“நூருத்தீனின் தந்தை சுகக்ஷேமத்துடனே இருக்கிறாரல்லவா?” என்னும் கேள்விதான் அவள் வாயிலிருந்து முதலில் பிறந்தது.

“யா உம்மு நூருத்தீன்! ஆண்டவனுதவியால் சுல்தானாவின் கணவர் நல்ல சுகக்ஷேமத்துடனேயே இருந்துவருகிறார். நான் அவரிடமிருந்து தூதுவரவில்லை; ஆனால், என்னை மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஸாஹிபாவே அனுப்பியிருக்கிறார்கள். தங்களை இக்கணமே அரண்மனையின் அந்தப்புரத்துக்கு அழைத்து வருமாறு ஆக்ஞாபித்திருக்கிறார்கள். எனவே, உடனே புறப்பட ஆயத்தமாகுங்கள்!” என்று அந்த அடிமை அறைந்து நின்றான்.

எவ்வளவுக்கெவ்வளவு பேரானந்தத்துடன் மைமூனாவின் வதனம் ஜொலித்துக்கொண்டிருந்ததோ, அவ்வளவுக் கவ்வளவு கடுஞ் சோகத்துடன், இப்பதிலைக் கேட்டதும், முகம் தொங்கிவிட்டது.

“என்ன! என்னை ஷ­ஜருத்துர் கூப்பிட்டனுப்பியிருக்கிறாளா! அவள் ஏன் என்னைக் கூப்பிட வேண்டும்? நான் அவளை இதற்குமுன் என்றுமே பார்த்ததில்லையே!”

“யா உம்மு நூருத்தீன்! தாங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அரசாங்க உத்தரவுக்குத் தாங்கள் முதலில் கீழ்படிந்து விட்டுத்தான் அப்புறம் ஏதும் பேச வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?”

“ஏ, அடிமையே! உங்கள் சுல்தானாவுக்கு என் கணவர் மீது எவ்வளவு உரிமையிருக்கின்றதோ, அதைவிட எனக்கு அதிகமான உரிமையே…….”

“உஸ்ஸ்! நேரமாகிறது. தாங்கள் பேசவேண்டியவற்றை எல்லாம் அங்கு வந்து பேசிக்கொள்ளுஙகள்; எனக்கொன்றும் தெரியாது. நான் ஜலாலத்துல் மலிக்காவின் கட்டளையை நிறைவேற்ற வந்த தூதுவன்தான். எனக்கு வேறு அதிகாரம் ஏதுமில்லை… புறப்படுங்கள்! சீக்கிரம் புறப்படுங்கள். நீங்களாகவே வரமறுத்தால், உங்களை கையோடு பிடித்திழுத்துச் செல்வதற்கான போதிய பநதோபஸ்துடனே நான் இங்கு வந்திருக்கிறேனென்பதை முற்கூட்டியே அறிவித்து விடுகிறேன்.”

உலர்ந்துபோன திராக்ஷையே போன்று சுருங்கிச்சுருண்ட மயிர்படைத்த கறுப்பு நீகிரோவ அடிமையாகிய அவனிடம் ஏதும் மேற்கொண்டு பேசுவதில் ஒருவிதப் பிரயோஜமும் விளையப்போவதில்லை என்பதை மைமூனா உணர்ந்துகொண்டு விட்டாள். ஒரு கணம் யோசித்தாள். புறப்பட மறுத்தால் என்ன நேருமென்பது அவளுக்கே நன்றாய்த் தெரியும். எனவே, நேரில் சென்று ஷ­ஜருத்துர்ரையும் தன் கணவரையும் சந்தித்து, எப்படியாவது வழக்காடி வென்று வருவதுடன், கணவரையும் கையோடே கொண்டுவந்து விடுவதென்ற தீர்மானமான முடிவுடனே எழுந்து நின்றாள். அப்போதுதான் தூங்கி விழித்த சிறுவன் நூருத்தீனுக்கு முகத்தைக் கழுவிவிட்டு, சிறிது உணவு ஊட்டிவிட்டு, வேறு புதிய ஆடையேதும் அணிந்து கொள்ளாமல், அடிமையை நோக்கி, “சரி. நான் தயார்!” என்று தைரியமாய்க் கூறினாள்.

“அம்மா! எங்கே புறப்படுகிறீர்கள்?” என்று சிறுவன் நூருத்தீன் வினவினான். அவன் இப்போது உத்தேசம் ஒன்பது வயது நிரம்பிய புத்திக் கூர்மையுள்ள பாலகனாய் இருந்தபடியால், எதையும் துடுக்காகவும் தைரியமாகவும் கேட்பான்.

“குழந்தாய்! நான் உன்னைத் தனியே விட்டுவிட்டுப் போகவில்லை. நீயும் என்னுடன் வா. உன் தந்தை நம்மைக் கூப்பிட்டனுப்பியிருக்கிறார்.”

“ஏன் அம்மா! என் அபூ இப்போது சுல்தானாக இருப்பதால் நம்மைக் காணச் சாவகாசமில்லையென்று நீங்கள் பலமுறையும் சொல்லியருக்கிறீர்களே!”

“நீ பேசாமல் என்னுடன் வா! இப்போது அவருக்கு அவகாசம் கிடைத்திருக்கிறதாம்.”

“அப்படியானால் அவர் ஏன் இங்கு வரக்கூடாது? நாம் ஏன் அங்குப் போக வேண்டும்? எனக்கு அரண்மனைக்குப் போகவே பயமாயிருக்கிறதே!”

“நூருத்தீன்! நீ பேசாமல் இருக்கமாட்டாய்?” என்று ஓர் அதட்டு அதட்டிவிட்டு, அடிமையை நோக்கினாள்.

அவ்வடிமை சிறது யோசித்தான். ஷ­ஜருத்துர் மைமூனாவை மட்டும் அழைத்துவரச் சொல்லியிருக்கிறாரன்றி, சிறுவனையும் கொணரச் சொல்லவில்லையே என்று யோசனை பண்ணினான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டு, வழிநடந்து அவ் வீட்டைவிட்டு வெளியேறினான். பின்தொடர்ந்து வந்த தாயும் தனயனும் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த கோவேறு கழுதையின் மூடியிட்ட வண்டிக்குள் ஏறிக்கொண்டனர்.

முஈஜுத்தீன் அரண்மனையில் பதவியேற்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு — ஏன், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கப்பால் இன்றுதான் மைமூனா வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றாள்.

காஹராவின் பற்பல வீதிகளையும் கடந்து அந்த வண்டி இறுதியாக அரண்மனையின் பின்புறமாகச் சென்று நின்றது.மைமூனா வழிநெடுகச் செய்துகொண்டு வந்த திட்டப்படி ஒன்றுக்கும் அஞ்சாமல் வண்டியை விட்டுக் கீழே குதித்து, இடது கையில் தன் மைந்தனைப் பிடித்துக்கொண்டு அந்தப்புரத்துக்குள்ளே சென்று சேர்ந்தாள்.

சுல்தானின் முதல் மனைவி இன்றுதான் முதன்முறையாக அங்கு விஜயஞ் செய்திருந்தும், அவளை வாவென்று கூப்பிடுவாருமில்லை; எங்கே வந்தாயென்று கேட்பாருமில்லை. அடிமை முன்னே செல்ல, மைமூனா பின்னே சென்றாள். எங்கெங்கெல்லாமோ சுற்றிக்சுற்றிக் கொண்டு அந் நீகிரோவன் இறுதியாக ஷ­ஜருத்துர்ரின் அறைக்கு முன்னே சென்று நின்றான். கதவு உட்புறம் தாளிடப்பட்டிருந்தமையால், அவன் அங்கேயே நின்று குனிந்து ஸலாம் செய்தவண்ணம், “யா ஸாஹிபா! தங்கள் அடிமை இதோ வந்து நிற்கின்றான்!” என்று மெல்லிய குரலில் பேசினான்.

சட்டென்று கபாடம் திறந்தது.

“எங்கேயடா அவள்?” என்று ஓர் அதட்டு அதட்டினார் ஷ­ஜருத்துர்.

“யா மலிக்கா! இதோ வந்து நிற்கிறார்கள்!” என்று தன்னை ஒருபுறமாக ஒதுக்கிக் கொண்டு, தன் பின்னே நின்ற மைமூனாவையும் நூருத்தீனையும் காண்பித்தான்.

“ஓஹோ! மாட்டுடனே கன்றுக்குட்டியும் வந்திருக்கிறார் போலிருக்கிறதே!” என்று கிண்டலாய்ப் பேசினார் ஷ­ஜருத்துர். அவ்வளவுடன் தன் தலை தப்பியது போதுமென்று, ஸலாம் போட்டுவிட்டு அவ்வடிமை அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.

“ஏன் அங்கே வெளியில் நிற்கின்றீர்கள்? இங்கே உள்ளே தாராளமாய் வரலாமே! இஃது உங்கள் கணவரின் அரண்மனை. இங்கே நுழைய உங்களுக்கில்லாத அதிகாரமா?” என்று மைமூனாவுக்கு ஷ­ஜருத்துர் வரவேற்பளித்தார்.

மைமூனாவோ, விழித்த இமை கொட்டாமல், கண்பார்வையை வேறெங்கும் செலுத்தாமல், ரூபலாவண்ய செளந்தரிய திலகமென்று எல்லாரும் புகழ்ந்து கேட்டிருக்கிற தன் சக்களத்தியை உற்று முறைத்துப் பார்த்துக்கொண்டே நின்றாள். ஷ­ஜருத்துர்ரின் சரித்திர விவரங்கள் முழுதையும் தன் தந்தையின் மூலம் நன்கு தெரிந்துகொண்டிருந்த இவள், இப்படிப்பட்ட பேரழகியைக் கண்டு முதலில் ஸாலிஹ் மன்னரும் பிறகு தன் புருஷனும் மதியிழந்து மண்டியிட்டுவிட்டதில் வியக்கத்தக்க விஷயம் ஒன்றுமில்லையென்று கண்டுகொண்டாள். பிறகு, எவ்வளவோ சாதுரிய ஞானம் படைத்தவள் ஷ­ஜருத்துர்ரென்று தான் கேள்விப்பட்டிருக்க, இவ்வளவு அற்பத்தனமாகவெல்லாம் தன் மாட்டு ஏன் நடந்துகொள்ள வேண்டுமென்று சிறிதே யோசித்தாள். குழல் மிழற்றும் மிக இனிமையான கீதம் போன்ற மென்குரலில் குயிலினும் மேலாக ஷ­ஜருத்துர் பேசிய சொற்களைக் கேட்டுக் காதுகள் எதிரொலி செய்தன. எனினும், அவ் வார்த்தைகளில் தொனித்த விஷம் மிகுந்த விஷமங்கள் இவளுடைய நெஞ்சைத் துளைத்தன.

“ஏ, என் சுல்தானின் மனைவியே! நீ என்ன ஊமையா? ஏன் இப்படி வாய்மூடி மெளனியாக என்னையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு நிற்கின்றாய்? இத்தனை நாட்களாக நான் உன்னை வந்து காணவில்லை என்பதற்காகவா? வாய்திறந்து பேசே!” என்று அதிகார தோரணையில் அதட்டிக் கட்டளையிட்டார் சுல்தானா ஷ­ஜருத்துர்.

“ஏ, துருக்கி நாட்டு நாரிமணி! என் கணவர் எங்கே?” என்று வெகு மிடுக்காகக் கேட்டாள் மைமூனா.

“என்ன! உன் கணவரா? ஏன், நீ அவரை எங்கேயாவது கைதவறி விட்டுவிட்டாயோ?”

“நான் கைதவறி விட்டுவிடவில்லை. அவரை என்னிடமிருந்து எவரோ நயவஞ்சகமாய்க் கவர்ந்து சென்றுவிட்டார். இந்த நாட்டுக்கு உன்னை நீ சுல்தானாவென்று அழைத்துக்கொள்ளுகிறபடியால், உன் குடிமக்களுள் ஒருத்தியாகிய நான் உன்னிடம் என் வழக்கைச் சமர்ப்பிக்க வந்திருக்கிறேன். நீ எல்லா மக்களுக்கும் நேர்மையான நீதிவழங்குவது மெய்யேயென்றால், என் கணவரைக் கண்டுபிடித்து என்னிடமே சேர்ப்பித்துவிடு. உனக்கு ஒருகோடி புண்ணியமுண்டு!”

ஷ­ஜருத்துர் இடியிடியென்று சிரித்த பேரொலியினால் அவ்வறை முழுதும் பயங்கரமாய் எதிரொலி கிளப்பிற்று.

“ஏது வின்னியாசமாக இருக்கிறதே, உன் வழக்கு! கணவனைக் கண்டுபிடித்துத் தரவேண்டுமென்று நீ இந்த சுல்தானாவிடம் முறையிட வந்திருக்கிறாய்! இன்னம் சில நாட்களில் பிள்ளையில்லாதவர்கள்கூடத் தங்களுக்குப் பிள்ளைகள் தர வேண்டுமென்று சுல்தானாவிடம் பர்யாத் சமர்ப்பிப்பார்கள் போலிருககிறதே!…ஊம்! அப்புறம்?”

“ஷ­ஜருத்துர்! நீ வாக்குச் சாதுரியமாய்ப் பேசுவாயென்பது எனக்கு முன்னமே நன்றாய்த் தெரியும். அந்த வித்தையை நீ என்னிடம் காண்பிக்க வேணடாம். எப்படியோ மயக்கி உன் மோக வலைக்குள்ளே போட்டுக் கொண்டுவிட்ட என் கணவரை நீ என்னிடம் சேர்ப்பித்துவிடு. ஒரு பத்தினிப் பெண்ணின் சாபத்தைப் பெற்றுக்கொண்டு நீ ஒருபோதும் உருப்படமாட்டாய். அல்லாஹ்வின் பெயரால் நான் மிகவும் மரியாதையுடன் உன்னை வேண்டிக் கொள்கிறேன்: என் கணவரை என்னிடம் சேர்ப்பித்துவிடு. நாங்கள் உன் கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய்ப் பிழைத்துக் கொள்கிறோம்.”

மைமூனா பேசிய இவ் வெளிப்படையான வார்த்தைகள் ஷ­ஜருத்துர்ரின் உள்ளத்தைக் குத்தின. முன்னாள் ஷ­ஜருத்துர்ராயிருந்தால், உடனே மனமிளகிப்போய் ஒழுங்காக நடந்திருப்பார்; ஆனால், அரசாட்சியென்னும் கண்ணில்லாத, கருணையற்ற, உயிரேயுங்கூட அற்றுவிட்ட தந்திர விளையாட்டில் ஊறிப்போய் மனமிறுகிப் போயிருந்த இந்நாள் ஷ­ஜருத்துர்ரால் எப்படி நேர்மையாய் நடக்கமுடியும்? ‘விதி’என்பது எல்லாவற்றையும்விட மிகவும் பொல்லாததன்றோ?

“ஏ, மைமூனா! நாம் இப்போது உன்னை இங்கு ஏன் அழைத்துவரச் செய்தோம், தெரியுமா? எம் கணவராகிய சுல்தானுல் ஐபக் உன்னிடம் ஒரு பெரிய விஷயத்தை நேரில் தெரிவிக்கவே உன்னைக் கூப்பிட்டனுப்பும்படி எமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த ஸல்தனத்துக்கும் எமக்கும் எம் கணவருக்கும் இதுவரை இழைத்திருக்கிற, இனியும் இழைக்கப் போகிற கொடுந்துரோகப் பெருஞ் செயல்களுக்காக உன் உயிரையே நாம் போக்கிவிட முடியுமென்றாலும், அதைவிடக் குறைவான தண்டனையை உனக்களிக்கவே அவர் கூப்பிட்டனுப்பியிருக்கிறார்.”

அபலை மைமூனா இக் கடுமையான சொற்களைக் கேட்டதும் மெய்பதறி விட்டாள். அவளுடைய காலடியிலிருந்த பூமி பிளந்துவிட்டாற் போலிருந்தது அவளுக்கு. அதே சமயத்தில், முன்னம் பலமுறை தன் தநதை எச்சரித்திருந்த எச்சரிக்கைகள் அவளுடைய மனக்கண் முன்னேவந்து நின்றன.

நிரபராதியாகிய எனக்கு ஒரு பெரிய சுல்தானாவாகிய நீயா துரோகிப் பட்டத்தையளிக்கிறாய்? உன்னை எப்படி மிஸ்ரிகள் மிகவும் நேர்மையான சுல்தானா என்று அழைக்கிறார்கள்?

“துரோகமா? யார் யாருக்குத் துரோகமிழைத்தார்? நிரபராதியாகிய எனக்கு ஒரு பெரிய சுல்தானாவாகிய நீயா துரோகிப் பட்டத்தையளிக்கிறாய்? உன்னை எப்படி மிஸ்ரிகள் மிகவும் நேர்மையான சுல்தானா என்று அழைக்கிறார்கள்? பழியோரிடம்; பாவமோரிடமா? என்ன அநியாயம்! என்ன தகடு தத்தம்!”

“ஏ, மைமூனா! நீ இப்பொழுது மாட்சிமை தங்கிய சுல்தானாவின் முன்னர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதையும், இதுபொழுது எம்மை நீ அவமதிக்க முற்படுவையாயின், இன்னம் பல குற்றங்கள் உன்மீது சுமத்தப்படும் என்பதையும் மறந்துவிடாதே! பேசாமல் வாய்மூடி நின்று, நீ செய்த மாபெரிய குற்றங்களுக்கான மிகச் சிறிய தண்டனையைப் பெற்றுக்கொண்டு, வெளியேறிவிடு. இன்றேல்…! அடே! யாரது அங்கே? கூப்பிடு சுல்தானை!”

மைமூனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் கண்ணெதிரில் நடப்பது கனவா, அல்லது நனவு நாடகமா என்பது ஒன்றுமே விளங்கவில்லை. அடுத்த நிமிடத்தில் முஈஜுத்தீன் ஐபக் சிரம் கவிழ்ந்தவண்ணம் வந்து ஷ­ஜருத்துர்ரின் பக்கத்தில் அமர்ந்து, மெல்லத் தலைநிமிர்த்தித் தம் பிரிய மனையாட்டியின் முகத்தைப் பார்த்தார் பதுமையை நிகர்த்தவண்ணம்.

உயிரற்ற பாறாங்கற்கூட கூழாய்க் குழைந்து விடுவது போலிருந்தது அச் சோகக் காட்சி. உலக இச்சைக்கும் நாடாளும் பேராசைக்கும் பரிதாபகரமாய்ப் பலியாகித் தம்முடைய சுய அறிவையெல்லாம் கடனுக்கு அடகு வைத்து விட்ட ஐபக், ‘ஆடுதன்’ ராஜாவே போலப் பரக்க விழித்தார். தமக்கு வலப்புறத்தில் வீற்றிருக்கிற கொடுஞ் சித்தம் படைத்த கடிய ஷ­ஜருத்துர் கருங்கற் சிலை மாதிரி குந்தியிருப்பதையும் கண்ணெதிரில் நிற்கிற கடைந்தெடுத்த சலவைக்கல் பிம்பம் போன்ற மைமூனா பேகம் அவலமே உருவாய் நின்றுகொண்டிருப்பதையும் பார்க்கச் சகியாமல் அவர் மீட்டும் தலைகுனிந்தார். இருசொட்டுக் கண்ணீர் திலகத்தில் நிலத்தில் துளித்தன.

மைமூனாவோ, கடுந்துயரம் கழுத்தை நெரிக்க, நெஞ்சங்குமுற, பீரிடும் துக்கத்தையடக்கிப் பிடித்துப் பெருமூச்சுடனே செறுமிச் செறுமிக்கொண்டு, கண்ணீர் சோனா மாரியெனப் பொழிய, உள்ளம் மெழகென உருகிட, உயிரெலாம் பதற, உடலெலாம் துடிக்க, தொண்டை வறள, நா மரக்க, கை கால்கள் விலவிலக்க, ‘விக், விக்’கென்று விக்கிவிக்கி வெதும்பினாள்.

இறுதியிலே “நா……தா!”என்று அலறித் துடித்துக் கதறியழுதாள். செயலற்றுப்போய்க் கிடந்த எரிமலையின் பிலத் துவாரத்தின் வழியே திடீரென்று பொங்கிப் பாய்ந்தெழும் தீப்பிழம்பு போலிருந்தது, அவ்வொரே சொல்லாகிய ‘நாதா’ என்பது, அக்குரலிலெழுந்த மின்சார அதிர்ச்சி ஷஜருத்துர்ரின் கல்நெஞ்சைக்கூட ‘ஜிவ்’வென்று உறுத்திவிட்டது.

தாய்த் துடித்துத் தேம்புவதைக் கண்ட நூருத்தீன் தன்னையறியாமலே “அபூ!” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு அலறித் துடித்தான்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்று எவனோவொருவன் சொன்னான். ஆனால், பன்னூற்றுக்கணக்கான பகல்களும் இரவுகளும் காத்துக்காத்து இளவுகாத்த கிளியேபோல் மரத்துப்போன மைமூனாவுக்கு இன்றைத் தினம் எப்படியிருந்திருக்கும்? இந்தச் சந்திப்பாவது பிரிந்தோரைச் சுமுகமாய்க் கூட்டிவைக்கும் சிறந்த சந்திப்பாய்ப்போய் முடியக் கூடாதா? அந்நோ! அந்தோ!

தம் மூத்த மனைவியின் பரிதபிக்கத்தக்க நிலையைக்கண்டு, முஈஜுத்தீன் மட்டுமே மனமுடைவில்லை; அவர் வீற்றிருந்த ஆசனங்கூட நெகிழ்ந்துவிட்டது. குழைத்த மாவைத் தூக்கி நிறுத்தினால், அஃதெப்படிச் சுருண்டு குழைந்து வீழ்ந்து விடுமோ, அதே மாதிரியாக, இடித்து வைத்த புளிபோலே குன்றி முடங்கினார் ஐபக் சுல்தான். அவருடைய கண்கள் மழுங்கிக் கலஙகின. ஆயினும், சர்வ வல்லமை பொருந்திய சாக்ஷாத் சுல்தானா ஷ­ஜருத்துர் அருகிலிருக்கும் பொழுது, இவரென்ன செய்ய முடியும்? ‘சஞ்சலங் கலந்தபோது தையலாரை உய்யவந்து, அஞ்சலஞ்ச லென்கிலாத ஆண்மையென்ன ஆண்மையே!’ என்று ஒரு கவி வருணித்தான். அதைப்போல், ஐபக் என்னும் போலி சுல்தான் – பொம்மை ஐபக் – நிஜமான ஆண்மை படைக்கப் பெற்றிருந்தாலல்லவோ மைமூனாவென்னும் தையலைத் தலைக்கை கொடுத்துத் தாங்கிப் பிடிக்கப் போகிறார்! தம் உயிரையே சுல்தானாவின் தயவில் விட்டு வைத்திருக்கிற அவர் எங்ஙனம் மற்றோருயிராகிய மைமூனாவைக் காப்பாற்றப் போகிறார்? அந்தோ, பொம்மை ராஜவே!

“நாதா! தாங்கள்….இந்த…. அபலையைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் மறுக்கின்றீர்களே! அடியேன் செய்த அபராதம்…அபசாரம் என்னவோ? என் முகத்தைச் சற்றே ஏறெடுத்துப் பாருங்கள்! தங்கள் பிள்ளையின் வதனத்தையேனும் சற்று உற்று நோக்குங்கள்! நாங்கள் என்ன பாவம் பண்ணினோம்? எங்களை ஏன் உயிருடனே திரஸ்கரித்து விட்டீர்கள்? நாதா! பேசுங்கள்! பேசுங்கள்! வீங்கிப் பருக்கும் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறதே! என்னைப் பாருங்கள்…! என்னைப் பாருங்கள்!” என்று துடிதுடித்துக் கதறினாள் கட்டழகி மைமூனா.

முஈஜுத்தீன் தலைநிமிர்த்தவுமில்லை; வாய்த்திறக்கவுமில்லை. உயிரற்ற பதுமையேபோல் அசைவற்றுக் குந்தியிந்தார்.

“ஏ, ஷ­ஜருத்துர் என்னும் சுல்தானாவே! இவரை ஏன் நீ இப்படி மயக்கி வைத்திருக்கிறாய்? உன் உத்திரவில்லாமல் என்னிடம் பேசக்கூட மாட்டார் போலிருக்கிறதே! தயவுசெய்து இவருடைய வாய்க் கட்டையாவது அவிழ்த்துவிடே! சென்ற ஆறு ஆண்டுகளாக என்னிடம் பேசியறியாதவர் இன்றாவது கொஞ்சம் பேசட்டுமே! நீ என் சக்களத்தியாய் இருப்பினும், என்மீது பெண்ணென்னு முறையிலே கொஞ்சமாவது கருணை காட்டமாட்டாயா? நான் உனக்கு என்ன கெடுதி நினைத்தேன்? என்னை நீ ஏன் இப்படியெல்லாம் பழிவாங்கிக் கொள்கிறாய்? ஏ, ஷ­ஜருத்துர்! உன்னைப்போல நானும் ஒரு பெண்மணியல்லவா? பெண்ணென்றால் பேயுமனம் இரங்குமென்பார்களே! காதல் என்பது உனக்கு மட்டுமேதான் ஏகபோக உரிமையா? என் வாணாளையெல்லாம் இதுவரை வீணாளாக்கிய நீ, இன்னம் என்னென்ன கேடுகாலங்களை எனக்கு விளைவிக்க நாடியிருக்கின்றாய்? போனதெல்லாம் போகட்டுமென்றால், இனியாவது எனக்காக, என் செல்வச் சேய் நூருத்தீனுக்காக இவரை என்னிடம் சேர்ப்பித்து வைக்க மாட்டாயா? — நீ ஏன் மெளனம் சாதிக்கிறாய்? உனக்குக் கொஞ்சமும் நெஞ்சிரக்கமில்லையா?

“சிலுவையுத்தம் புரிந்து, உன்னையே கைதியாக்கிச் சிறைபிடித்துச் செல்லக் கங்கணங் கட்டி வநத ரிதா பிரான்ஸையே அவனுடைய மனைவியிடம் நீ மீட்பித்துக் கொடுத்தாயென்று நான் கேள்வியுற்றிருக்கிறேனே! என் கணவராகிய இவர் அந்த லூயீயைவிடப் பொல்லாதவரா? உன் குடிமக்களுள் மிகவும் சாதுவாகிய நான் அந்த லூயீயின் மனைவியாகிய கொடிய நஸ்ரானீயைவிடக் கெட்டவளா? உனக்கு ஒரு கணவர் தேவைப்பட்டால், இப் பரந்த மிஸ்ர் தேசத்தில் வேறு ஒருவருமா கிடைக்கவில்லை? உன்னை மணக்க மன்னாதி மன்னர்களும் மண்டியிட்டு ஸலாம் போடுவார்களே! என்னை மணந்து, ஈருடலும் ஓருயிருமாய் இனிய வாழ்க்கையைச் சொகுசாய் நடத்திவந்த இந்த நிரபராதிதாமா உனக்கு கிடைத்தார்? — ஏன் பதில் தர மறுக்கின்றாய்? ஆண்டவன்மீது ஆணையாகக் கேட்கிறேன் : எனக்குப் பதில்சொல். அபலையாகிய என்னை இன்னமும் வீணே சோதிக்காதே!”

மைமூனா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஷ­ஜருத்துர்ரின் மூளையையும் ஹிருதயத்தையும் கூரிய குத்தூசியால் குத்திக் குத்தி இழுப்பது போலிருந்தது. அதிலும் அவள் தன்னை லூயீயின் மனைவியுடன் ஒப்பிட்டுக்காட்டிய உவமை ஷ­ஜருத்துர்ரின் நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. மைமூனா பேசப்பேசக் கேட்டுக்கொண்டே வந்த சுல்தானா இப்பால் சிந்திக்கத் தொடங்கினார்:

“இவ்வளவுதூரம் வந்துவிட்ட பிறகு நான் என் சூழ்ச்சித் திட்டங்களில் பின்வாங்கலாமா? நான் இப்பொழுது பின்வாங்கினால், என் எதிர்கால கதி என்னாவது? இந்த மிஸ்ரை நான் ஐயூபிகளுக்காகக் காப்பாற்றினேன். ஆனால், அல்லாஹுத் தஆலா இந்நாட்டை ஐயூபிகளிடமிருந்து பிடுங்கி என்னிடமே ஒப்பித்துவிட்டான். கலீஃபாவேகூட அப்பாலோர் ஐயூபியைத்தான் இங்கே அமர்த்த வேண்டுமென்று கங்கணங் கட்டினார். ஆண்டவன் கலீஃபாவின் எண்ணத்தையேக்கூட ஈடேற்றவில்லை. எனவே, நானேதான் இந்த என் ஸல்தனத்தை ஆட்சிஅபுரிய வேண்டுமென்று இறைவனே என்னிடம் திரும்பத் திரும்ப ஒப்படைத்திருக்கும் பொழுது, நானே இதை எப்படிக் காலால் உதைத்துத் தள்ளலாம்? இப்போது என் அரசாட்சிக்கும் என் ராஜதந்திர யுக்திகளுக்கும் மிகச் சிறந்த கவசமாய் விளங்கி வருகிற இந்த ஐபக்கை யான் மைமூனாவுக்காக இழந்து விட்டால், இவர் மீண்டும் புர்ஜீகளுடன் நேயம் பூண்டு, பெரிய படையைத் திரட்டிக்கொண்டு, என் கழுத்துக்கே கத்தியாய் வந்து முடிந்தால் என் கதி என்னாவது? ஐயூபிகளிடமிருந்து எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசாகிய இந் நாட்டினாட்சியை நான் எங்ஙனம் ஐபக்குகளுக்கு இரையாக்குவேன்?

“இதோ என் கண்ணெதிரில் நிற்கிற ஐயூபி சிறுவனைக் கண்டால் இவன் முகத்திலே ராஜகளை வீசுகிறது. நாளையொரு காலத்திலே இவனே இந்நாட்டின் சுல்தானாகிவிட்டால்? கேவலம், முஈஜுத்தீனை நான் மணந்த காரணத்தினால், என் பின்னே வரும் சந்ததிக்கு எதிரியாக இச்சிறுவனை எப்படி மிஸ்ரின் சுல்தானாக்குவதற்கு நான் இப்போது வித்திடுவது? நாளை எனக்கொரு மைந்தன் பிறந்தால், அவனுக்கு எவர் மிஸ்ரின் செங்கோலைக் கொடுக்கப் போகிறார்? முஈஜுத்தீனின் மூத்த குமாரன் நூருத்தீனேதான் பட்டத்துக்குரியவனென்று எல்லாரும் கூறிவிட்டால், என் மகனின் கதி யாதாவது? அநேக நாட்களாக அரும்பாடுபட்டு, பட்ட பாட்டுக்கெல்லாம் தக்க கூலியாகப் பெற்றிருக்கும் இம்மிஸ்ரை நான் எனக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளையை விட்டுவிட்டு, ஒரு தியாமும் புரியாத, ஒருவகையிலும் யோக்கியதையில்லாத என் சக்களத்தியின் பிள்ளைக்குக் கொடுக்க எப்படிச் சகிப்பேன்? – சை!

“இம்மாதிரியான நெருக்கடி மிக்க வேளையிலே என் சிந்தையைக் குலைத்துக் கொள்வதற்கா இத்தனை நாட்களாக நான் என் யுக்தி முழுதையும் செலவிட்டுப் பெரிய திட்டங்களையெல்லாம் போட்டு வந்தேன்? என் இந்தச் சக்களத்தியின் சிறுவன் உயிருடனே இருக்கிற வரை, அல்லது அரசபீடத்துக்கு இவன் உரிமை பெற்றிருக்கிறவரை எப்படிச் சும்மா இருப்பது? இவனுயிரைக் கவர்ந்து விடுவது எளிதென்றாலும், என் மனம் அது செய்யத் துணியவில்லை. நான் கொஞ்சமும் நெஞ்சிரக்கம் அற்றவளாய்ப் பிறந்திருப்பின், யோசிக்காமலே இவனை முன்னமே வேலைதீர்த்து முடித்துவிட்டிருப்பேன்! ஆனால், நான் மனுஷியேயல்லவா? — நான் தடங்கலின்றி ஆட்சி செலுத்துவதற்கும், என் மரணத்துக்குப் பின் சந்ததியே தலைமுறை தலைமுறையாக இந் நாட்டின் செங்கோலைப் பற்றுவதற்கும் ஒரே முட்டுக்கட்டையாயிருக்கும் இவளை இக்கணமே முஈஜுத்தீன் விவாகரத்து செய்துவிட்டால்தான் முடியும். இதனால் நான் எவ்வுயிரையும் கொல்லாதவளாய்ப் போவதுடன், எனக்கு வந்துற்ற இடையூறுகளைச் சாத்விகமான வழியிலே வெகு சுலபமாகத் தீர்த்துக்கொண்டு விட்டவளாகவும் எல்லா மக்களாலும் உலகம் உள்ளளவும் போற்றப் பெறுவேன். இன்றேல், என் கைக் கெட்டியதை வாய்க் கெட்டாமல் தடுத்துக் கொண்டவளாகப் போய், நியாயபூர்வமாக என் சந்ததியார்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை ஒன்றுக்கும் உதவாதவர்கள் கையிலே ஒப்படைத்துவிட்ட அற்ப மனுஷியாகவும் இழிந்துவிடுவேன்.

“இவளை என் கணவர் தலாக்குச் சொன்ன பின்னர் இவளுக்கே இவர்மீது உரிமையில்லாமற் போவதுடன், நாளையொரு காலத்தில் இந்த நூருத்தீன் உயிருடனிருந்த போதினும், எந்த உரிமையைக் கொண்டாடிக் கொண்டும், என் சந்ததியார்களுடனே போட்டியிட்டு, ஸல்தனத்தைக் கவர எத்தனிக்க முடியாமலும் போகுமன்றோ? இந்தச் சங்கடமெல்லாம், என் மைந்தன் கலீல் சாவாமலிருந்திருந்தால், இப்பொழுது வந்து என் மூளையைக் குழப்பப் போவதில்லை. ஆண்டவன் கலீலைப் பறித்துக்கொன்டான். அந்த ஸல்தனத்தில் எனக்கு இனிப் பிறக்கப்போகும் மற்றொரு குழந்தைக்கு போட்டியாய் விளங்குகிற இந்த நூருத்தீனை நான் எப்படியாவது என் சாகசக்கிய சாமார்த்தியத்தைக் கொண்டு விலக்கிக்கொள்ள வேண்டுமென்று விழைந்தே இறைவன் இச்சோதைனையைத் தந்திருக்கிறான். இதில் நான் அஞ்ச வேண்டுவதோ, பின் வாங்கவேண்டுவதோ என்ன இருக்கிறது? அல்லது எனக்கொரு பெண்மகவு பிறக்க வேண்டுமென்றும், அப் பெண் வளர்ந்து வாலிபமாகி, நாளையொரு காலத்தில் என் ஸல்தனத்திலே அமர்ந்து, என்னைவிடப் பெரிய சாமார்த்தியசாலியாக நாடாள வேண்டுமென்றும் ஆண்டவன் நாடியிருக்கிறான் போலும்!…சே, சே! விடக்கூடாது! ஒருகாலும் தருணத்தைக் கைந்நழுவ விடக்கூடாது! நான் பெற்ற இச்செல்வத்தை யான் இனிப் பெறப்போகும் செல்வச் சிறுமிக்குக் கிடைக்காமற் போகும்படி நான் முட்டாட்டனமாய் விட்டுவிடக் கூடாது! எனக்கு ஏற்பட்ட மிகக் கடுமையான சோதனையில், நான் பெண்புத்தியால் பின்வாங்கித் தட்டுக்கெட்டுத் தடுமாறிப் போய்விட்டேனென்று எனக்குப் பின்னால் வருகிறவர்கள் என்னைப் பார்த்துக் கைக்கொட்டி நகைக்கக்கூடாது! எது வரினும் சரியே! கடைசி வரை ஒருகை பார்க்காமற் போவதில்லை! சர்வ வல்லமையும் படைத்த ஷ­ஜருத்துர் இந்த அற்பச் சோதனைக்கு அஞ்சி ஒடுங்கிவிடக் கூடாது!” என்றெல்லாம் மின்வெட்டி மறைகிற வேகத்தில் உள்ளத்துக்குள்ளே எண்ணிக்கொண்டு விட்டார்.

“அம்மை ராணியே! உன்வாய் கூடவா அடைத்துப் போய்விட்டது? இவராவது ‘இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்ட’மென்று வாய்மூடி மெளனம் சாதிக்கிறார்! நீ கூட ஏன் வாய்திறக்க மாட்டேனென்கின்றாய்? லூயீயின் மனைவி நாலு லக்ஷ­ம் தீனாரைக் கொண்டுவந்து குவித்துத் தன் கணவனை உன்னிடமிருந்து விடுவித்துச் சென்றதைப் போல் நானும் பொன்பொதியைச் சுமந்துவர வில்லையென்றா என்னை உதாசினம் செய்கிறாய்? என்னிடம் அவ்வளவு பணமேது, தாயே! என்னிடம் என்ன கேட்கிறாய் என்பதையாவது தெரிவித்து விடே!” என்று ரோஷாங்காரத்துடனே பேசினாள் பதி விரதை மைமூனா.

“ஏ, பெண்பிள்ளை! சும்மா பேசிக்கொண்டே செல்கிறாயே! எம்முடைய நீதிமன்றத்துக்கு நியாயம் வழங்க உன்னையே எம் சார்பாக நியமிக்கலாம் போலிருக்கிறதே! லூயீயின் மனைவி என் கணவருக்குப் பெண்டாட்டியாய் இருந்ததில்லை என்பதையும் அவள் என்னுடைய ஸல்தனத்துக்கு என்னுடன் போட்டியிட்டதில்லை என்பதையும் நான் செத்துப்போன பின்னர் இப் பட்டத்துக்கு வரக்கூடிய எந்த வாரிஸையும் அவள் பெற்று வைத்திருந்ததில்லை என்பதையும் அவள் எனக்கு விரோதமாக எத்தகைய சூனிய மாந்திரத்தையம் பிரயோகித்ததில்லை என்பதையும், நீ அறியமாட்டாய். நாம் கூறுகிறோம்: நீ அந்த லூயீயின் மனைவியைவிட இந்தத் துறைகளிலெல்லாம் எமக்கு விரோதியாக — இல்லை, பெரிய துரோகியாகவே விளங்கிவருகிறாய். எனவே…”

“ஆ! என் சக்களத்தியே! நானா உன் கணவரின் மனைவியாகப் போய் உன்னைச் சூனியம் செய்கிறேன்? உன் புருஷனை நான் அபகரித்தேனா, அல்லது என் கணவரை நீ கவர்ந்தனையா? இங்கே நியாயம் கிடையாதா? நீதி கிடையாதா? இதற்குக் கேள்விமுறை இல்லையா? — ஏ, சுல்தான்! தங்கள் மனையாட்டியின் குதர்க்க வாதத்தைக் கேட்டீர்களா? ஏன் பதுமைப்போல் பார்க்கின்றீர்கள்?”என்று பாய்ந்து வீறிட்டாள் பத்மினி மைமூனா.

“உஸ்ஸ்! மரியாதையாய்ப் பேசு! இல்லையேல், மூடு வாயை! நீ குற்றவாளியாக எம்முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதும், இச் சந்தர்ப்பத்திலே என்னை நீ அவமதித்துப் பேசினால் என்ன நேரும் என்பதும் உன் ஞாபகத்தில் இல்லை போலும்! நாம் இது விஷயமாக முன்னமே ஒருமுறை எச்சரித்திருக்கிறோம். அரச ஆக்ஞைக்குக் கீழ்ப்படியாமல், சேரியிலும் கொல்லையிலும் சக்களத்திகள் நாய்போல் அடித்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் இருப்பதைப்போல் இந்த ராஜசதஸில் இழிவான வார்த்தைகளைப் பிரயோகிப்பை யாயின்….”

“ஜகஜாலக் கள்ளியாகிய உனக்கு நான் நான் ராஜ மரியாதையைக் கொடுக்க வேண்டுமோ? — பெருக்குகிற துடைப்பத்துக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியதே போல்! நீ சுல்தானாவாயிருந்தால், எனக்கென்னடி? நீ ஒரு திருடி! என் கணவரைக் கவர்ந்த கள்ளி! இந்த ஸல்தனத்தை நீ அயோக்கியத்தனமாய் அபகரித்தவள்! கட்டிய மனைவிக்குத் துரோகம் இழைக்குமாறு இவரை மயக்கிவிட்ட மாயக்காரி! சூனியக்காரி! பெண்ணுருவம் படைத்த பெரிய பிசாசு!” என்று துடிக்கத் துடிக்கக் கதறினாள் மைமூனா.

சக்களத்திகளுக்குள்ளே சண்டை வந்துவிட்டால், அது குடிசையாயினும் சரியே, சாதாரண வீடாயினம் சரியே, அல்லது மன்னர்கள் வாழும் அரண்மனையாயினும் சரியே! எல்லாம் ஒன்றேதான். அல்லாமலும், இப்போது நம் கதையில் தோன்றியுள்ள இரு சக்களத்திகளும் தம் புருஷனை எவர் ஏகபோகமாக எடுத்துக்கொண்டு விடுவது என்னும் பிரச்சினைக்காகப் போராடினரென்றாலும், இருவருக்குமிடையே நிரம்ப வித்தியாசமிருந்தது: ஒருத்தி தன் நியாயத்துக்காகப் போராடினாள்; மற்றொருத்தியோ, தன் பேராசைக்காகப் போராடினாள். ஷ­ஜருத்துர்ரின் தலைவிதியே இப்படியெல்லாம் சதி செய்ததென்பதைப் போகப் போகக் கண்டுக்கொள்வீர்கள்.

 

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment