ஷஜருத்துர் சம்பந்தமான முழு விருத்தாந்தங்களையும் தூதன் ஒன்றுக்குப் பத்தாய்ச் சொல்லி முடித்தவுடனே கலீஃபா பெருமூச்செறிந்தார். புர்ஜீகள் சொன்ன விஷயங்களைக் கூட்டாமற் குறைக்காமல் உள்ளபடியே

அத்தூதன் உரைத்திருந்தாலே போதும். ஆனால், அவன் வேறு தன் சொந்தக் கைச்சரக்கைச் சேர்த்து, ஈரைப் பேனாக்கி வருணித்ததால், கலீஃபா அவர்களுக்கு மனவேதனை சகிக்க முடியாமற் போய் விட்டது. ஆயினும், ஐயூபி வம்சத்தில், சுல்தான் காமிலின் கொள்ளுப் பேரனொருவன் பட்டத்துக்கு வாரிஸாக இருப்பதாகவும் அவனை சுல்தானாக்குவதாயிருந்தால் புர்ஜீகள் ஒத்துழைப்பதாகவும் கலீஃபா கேள்வியுற்றதும் சிறிது மனச்சாந்தி அடைந்தார்.

“அப்படியானால் நாம் ஷஜருத்துர்ரை வீழ்த்தி விட்டு அந்த ஐயூபிச் சிறுவனைப் பட்டத்துக்கு ஏற்றுவதாயிருந்தால், புர்ஜீகள் நிச்சயமாக ஒத்துழைப்பார்களல்லவா?” என்று அமீருல் மூஃமினீன் அத் தூதனை நோக்கி வினவினார்.

“ஆம். நிச்சயமாக ஒத்துழைப்பார்கள். ஷஜருத்துரை வீழ்த்துவதற்கு அவர்கள் கங்கனங் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தங்களுடைய கட்டளையை மட்டுமே எதிர்பார்த்து நிற்கிறார்கள்.”

“அப்படியானால், அரசவையில் கூடியிருந்த அத்தனை பேரும் ஷஜருத்துர்ரை சுல்தானாவாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், கலீஃபா அவர்கள் நியமிக்க விரும்புகிறவரை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதாகவும் உன்னெதிரிலேயே கூறினார்கள் என்று சற்று முன் சொன்னாயே!” என்று வஜீர் ஜகரிய்யா குறுக்கு விசாரணை புரிந்தார்.

“ஆம், வஜீருல் முஅல்லம்! பொது மக்களெல்லாரையும் அந்த ஷஜருத்துர் மயக்கி வசப்படுத்தி வைத்திருக்கிறாள். ஆனால், அந்த மாயக்காரி தன் கைவரிசையை நம் புர்ஜீகள் மீது பிரயோகிக்க முடியவில்லை. இதுபோது கலீஃபா அவர்கள் ஷஜருத்துர்ருக்கு எதிராக என்ன நடவடிக்கையை யெடுத்தாலும், பொதுமக்கள் புர்ஜீகளுடனே தான் சேர்வார்கள்; அப்போது அவளை நேசிக்க மாட்டார்கள். நான் காஹிராவிலிருந்து புறப்பட்ட இத்தனை நாட்களுக்குள்ளே எல்லா மக்களும் கண்விழிப்படைந்திருப்பார்களே! கலீஃபாவைப் பகைத்துக் கொண்டால், ஸல்தனத்திலுள்ளவர்களின் கதி என்னவாகுமென்பதை இந் நேரம் நம் புர்ஜீகள் மிஸ்ரிகளுக்கு நன்றாய் விளக்கிக் காட்டி யிருப்பார்களல்லவா?”

“ஏ, ஜகரிய்யா! நீர் கேட்டதன் உட்கருத்து எனக்கு விளங்கவில்லையே! பொதுமக்களைப் பற்றி நமக்கு என்ன கவலை? அமீர்களும் பிரதானிகளுமான புர்ஜீகள் அவளை விரும்பாததும்வெறுப்பதும் போதாவோ? மேலும், அவள் அனாதையாயிருந்த காலத்தில் எந்த அமீர் அவளை வளர்ந்த்தாரோ, அதே இனத்தைச் சார்ந்த மற்றவர்கள் அவளைப்பற்றி இவ்வளவு கேவலமான அபிப்ராயம் கொண்டிருக்கையில். சந்தேகம் தோன்றுவானேன்?” என்று கலீஃபா குறுக்கிட்டு வினவினார்.

“ஹுஜூர்! இவ்வளவு நேரம் ஷஜருத்துர்ரைப் பற்றிய முழு விருத்தாந்தத்தையும் நான் கவனமாய்க் கேட்டுவந்ததிலிருந்து, அவளையொரு சூனியக்காரியென்றோ, மாயமந்திரவாதி யென்றோ என்னால் நம்ப முடியவில்லை. புர்ஜீகள் தங்களுடைய சுயநலத்தைக் கருதி ஏதேதோ இல்லாததும் பொல்லாததும் சொல்லியனுப்பியிருக்கக் கூடுமென்றே நான் நினைக்கின்றேன். இவ்வளவு பெரிய ஸல்தனத்தை ஆட்சிபுரியக் கூடிய அளவுக்கு அவள் உயர்ந்திருப்பதே அவள் தன்னுடைய தியாகங்களைக் கொண்டும் புத்தி தீஷண்யத்தைக் கொண்டுமேதாம் முன்னுக்கு வந்திருக்க வேண்டுமென்பதை நிரூபிக்கின்றது. தன்னை எவர் வளர்த்தாரோ, அவருடைய இனத்துக்கே அவள் எதிராக இருக்கிறாளென்பதிலிருந்து, இந்த புர்ஜீகள் மிகவும் பொல்லாதவர்களாயிருக்க வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேனே யொழிய, இதனால் அவளைப் பொல்லாதவளென்றேனும் துரோகி என்றேனும் என்னால் நம்ப முடியவில்லையே!”

“அவள் துரோகியா, அல்லவா என்பது நம் முன்னுள்ள பிரச்சனையன்று. ஐயூபி வம்சத்தினனொருவன் பட்டத்துக்கு வாரிஸாக இருக்கிற வரையில் அவள் எப்படித் தன்னை சுல்தானாவாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளலாம்? கலீஃபாவாகிய நம்மிடம் தான் அனுமதிகோரினால், நாம் எங்கே அந்த ஐயூபியைத் தேடிக் கண்டுபிடித்து அரியாசனத்தின்மீது அமர்த்தி விடுவோமோ என்று அஞ்சியேயன்றோ அவள் திருட்டுத்தனமாக ஸல்தனத்தை அபகரித்துக்கொண்டிருக்கிறாள்?”

“யா அமீரல் மூஃமினீன்! வம்சாவளி பிரகாரம் ஐயூபி வம்சத்தினன் எவனேனும் இன்னம் மிஸ்ரிலிருப்பது வாஸ்தவந்தானென்றால், அப்போது ஷஜருத்துர் மேலும் தொடர்ந்து சுல்தானாவாயிருப்பது நியாயமில்லைதான். ஆனால், மிஸ்ரிகள் எல்லாரும் ஐயூபியொருவர் சுல்தானாக இருப்பதைவிட, ஷஜருத்துர்ரே சுல்தானாவாய் இருக்கட்டுமென்று ஏகமனதாக விரும்பினால்”?

“ஏ, ஜகரிய்யா! எடுத்ததற்கெல்லாம் நீர் குயுக்தி வாதம் புரிகிறீரே! நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டிய வாரிஸை நாம் தேடிக் கணடு பிடித்து, சுல்தானாகப் பிரகடனப் படுத்தினால், மிஸ்ரிகள் நமக்கு விரோதமாகவும் அபிப்பிராயங்கொள்ள முடியுமோ? புர்ஜீகளோ, நாம் எதைச் செய்வதாயிருந்தாலும், நம்மை முற்றமுற்ற ஆதரிப்பதாகவும் முழுக்கமுழுக்க நம்முடன் ஒத்துழைப்பதாகவும் செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை கலீஃபாவுக்கு எதிராக அயோக்கியத்தனமாகச் சூழ்ச்சி செய்வது; அதை நாம் கண்டுங் காணாததேபோல் வாளா இருப்பதா? முடியாது! நீர் இக்கணமே சென்று நம்முடைய தஸ்தாவீஜ்கள் நிறைந்துள்ள கொட்டடியைத் திறந்து, ஐயூபி வம்சத்து விவரமடங்கிய அட்டவணையை இப்போதே கொண்டுவாரும்!”

வஜீர் ஜகரிய்யா ஐயூபி வம்சாவளி யடங்கிய அட்டவணையைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்துவந்து, கலீஃபாமுன் சமர்ப்பித்தார். கலீஃபா அதை வாங்கிக் கூர்ந்து கவனித்தார்:- ஸலாஹுத்தீன் காலஞ் சென்ற பிறகு மிஸ்ரின் ஸல்தனத்தை கலீஃபாவின் அனுமதியின்மீது ஸலாஹுத்தீனீன் தம்பி ஏற்று நடத்தி வந்தார். அந்தத் தம்பிக்கு முதலாவது ஆதில் சுல்தான் என்று பெயர். அந்த முதலாவது ஆதில் காலஞ் சென்ற பின்னர் அவர் மைந்தர் காமில் பட்டத்துக்கு வந்தார்.

காமிலுக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு புத்திரியும் உண்டு. மூத்த குமாரராகிய அபூபக்ர் இரணடாவது ஆதில் சுல்தான் என்னும் பெயருடனே, காமிலின் மரணத்துக்குப் பின் பட்டத்துக்கு வந்தார். ஆனால், அந்த இரண்டாவது ஆதிலை அமீர்கள் கொன்றுவிட்டு, அவருடைய தம்பியும், காமிலின் இளைய குமாரருமாகிய ஸாலிஹை பட்டத்துக்கு ஏற்றினார்கள். ஸாலிஹ் தம்முடைய ஒரே மைந்தனாகிய தூரான்ஷாவை விட்டுவிட்டு மாண்டுபோயினார். அப்பால் அந்தத் தூரான்ஷா மலிக்குல் முஅல்லம் என்னும் பெயருடனே பட்டத்துக்கு வந்தார். அவரை ஷஜருத்துர் கொன்றுவிட்டு தானே ஸல்தனத்தை அபகரித்துக் கொண்டாள். ஸாலிஹுக்கு வேறு புத்திரபாக்கிய மில்லாமையாலும் தூரான்ஷா விவாகம் செய்து கொள்ளும் முன்னரே கொலை செய்யப்பட்டு விட்டமையாலும், ஸாலிஹின் சந்ததியில் எந்த ஐயூபியும் கிடையார். ஸாலிஹின் அண்ணன் அபூபக்ர் ஆதிலின் வம்சத்தில் எவரேனும் இருக்கிறாரா என்று பார்க்கலாமென்றால், அந்த அபூபக்ர் குழந்தையே பெறவில்லை யென்று தெரிகிறது. ஆகவே, ஸாலிஹின் தங்கை ஜுலைகா என்னும் பெண் மூலமாகத்தான் ஐயூபிகள் வம்சம் இருக்கிறதா என்று துருவ வேண்டும்.

ஸாலிஹின் தங்கைக்கு ஒரு புத்திரர் இருந்தார். அவர் இளம் பிராயத்திலேயே விவாகமாகி, ஒரு மைந்தனைப் பெற்று மடிந்துவிட்டார். அந்த மைந்தன் மட்டுமே இன்னம் ஜீவித்திருக்கிறான். அவன் பெயர் மூஸா என்பதாகும். வயது சுமார் 15 தான் இருக்கும். வேறு எந்த ஐயூபியும் இல்லையாதலால் காமிலின் குமாரியாகிய ஜுலைகாவின் பௌத்திரனான இநத மூஸாவே பட்டத்துக்கு வரவேண்டுமென்று கலீஃபாவுக்கு அபிப்பிராயம் பிறந்தது. அபிப்பிராயம் பிறந்ததும் அட்டவணையை மூடினார்; வஜீரை நோக்கினார்.

“கண்டுபிடித்து விட்டேன்! நியாயமாகப் பார்க்கப்போனால், மலிக்குல் முஅல்லம் கொல்லப்பட்டுவிட்ட பிறகு அவருடைய அத்தை ஜுலைகாவின் பேரன்தான் தான் மிஸ்ரின் சுல்தானாக வேண்டும்! அந்த மூஸா என்னும் யுவன் உயிருடனிருக்கிற வரையில் ஷஜருத்துர்ருக்கு மிஸ்ரின்மீது யாதொரு வித உரிமையும் கிடையாது!” என்று கலீஃபா அதிகாரத் தொனியில் கர்ஜித்துக் கூறினார்.

“யா அமீரல் மூஃமினீன்! மிஸ்ரின் ஸல்தனத்திலே ஐயூபிகள் மட்டுமே இறுதித் தீர்ப்புநாள்வரை இருந்து ஆட்சி செலுத்துவதென்பது முடியுமா? தாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு வம்சாவளி அட்டவணையைத் துருவித் துருவிப் பார்த்து மூஸா என்னும் சிறுவனுக்குப் பாத்தியதை இருக்கிறதா என்று ஏன் துழவிப் பார்க்க வேண்டும்? யார் மிஸ்ரின் ஆட்சியைக் கவனித்தால்தான் என்ன? ஜனங்கள் யாதொரு குறைவுமின்றிச் சுபிக்ஷமாக வாழ்ந்தால், போதாதா? மிஸ்ர் மக்கள் தங்களிடம் வந்து முறையிட்டுக் கொண்டாலல்லவோ தாங்கள் வேறு ஒருவரை நியமிப்பதற்காக ஆராய்ச்சி செய்யவேண்டும்? அல்லது அந்த மூஸா என்கிறவனாவது தங்களிடம் வந்து தனக்கே ஸல்தனத் உரியதென்று பர்யாத் மூலம் உரிமை பாராட்டினாலல்லவோ நாம் தீர்ப்புக் கூறவேண்டும்? சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுப்பானேன்? எவரோ சில புர்ஜீகள் தங்களுடைய சுயநலம் காரணமாக ஏதோ இல்லாததையும் பொல்லாததையும் கோட்சொல்லி அனுப்பினால், இதற்காக நாம் ஏன் நம்முடைய மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? பொறுத்திருந்து பார்ப்போமே!

இப்போதெல்லாம் ஜனங்களுக்கு ஜனநாயகப் பித்துப் பிடித்திருக்கிறது. ஷஜருத்துர் மிஸ்ரிகளின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமாகி, சுல்தானாவாயிருப்பதால், அம் மக்கள் ஏதும் நற்பயனடைவதாய் இருப்பின், அதை நாம் வீணாகத் தலையிட்டுக் கொடுத்து விட்டோமென்னும் அபக்கியாதியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். ஒருகால் மிஸ்ரிகள் அதிருப்தியடைந்து. கலீஃபா அவர்களிடம் சொல்லி நியாயத்தைப் பெறறுக் கொள்ளலாமென்று இங்கே வந்தால், அப்போது தாங்கள் தீர்ப்புக் கூறலாமே!”

“ஏ, வஜீர்! கலீஃபாவாயிருக்கிற நாம் எந்தவித அசம்பாவிதமும் வராமல் வருமுன் காப்போனாய் முற்கூட்டியே தடுப்பதை விட்டுவிட்டு, வந்த பிறகு பார்த்துக் கொள்வோமென்று நீர் உபதேசிப்பது உமக்கே நியாயமாய்ப் படுகிறதா? கலீஃபாவென்று சொல்லிக் கொண்டு நாம் சும்மா கையைக் கட்டிக் கொண்டு வாளா குந்தியிருக்க வேண்டுமென்று நீர் தத்துவம் கண்டுபிடிக்கிறீர் போலும்! உம்மைக் கணடால், எனக்கு என்னவோ பண்ணுவதுபோல் இருக்கிறது. என் முன்னே நில்லாதீர்!” என்று சீறிவிழுந்தார்.

வேளை சரியாயில்லை என்பதைத் தெரிநதுக்கொண்ட வஜீர் ஜகரிய்யா இதுவே தருணமென்று மரியாதையாய் சலாம் போட்டுவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். வஜீர் அகன்றதும், கலீஃபா தூதனிடம் சில கேள்விகளைக் கேட்டுத் தமக்கேற்பட்ட சில ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பிறகு அவனையும் அனுப்பிவிட்டு, தம் பள்ளியறையுள் நுழைந்து, பஞ்சணையில் படுத்துககொண்டு நிதானமாக யோசித்தார். வஜீரின் போதனைகளையும் தூதன் சொல்லிய விவரங்களையும் மாறிமாறிச் சிந்தித்தவண்ணம் மிஸ்ரின் வழக்கைத் தம் மனக்கண் முன்னே வைத்து ஆராய்ந்துக்கொண்டிருநதார்.

தாம் தூதன் மூலமாக அனுப்பிய தாக்கீதை ஷஜருத்தூர் உதாசினஞ் செய்ததையும் மரியாதைக்குக்கூட ஒரு பதில் எழுதியனுப்பாததையும் தம்மை அறைகூகூவுகிறதையம் மாறிமாறி யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டும், பாம்புபோல் சீறிக்கொண்டும் வெய்துயிர்த்தார். அவசரம் அவசரமாக ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்து விஷயத்தைச் சீக்கிரமாக பைசல் செய்யலாமென்றால், இந்த வஜீர் ஜகரிய்யாவோ முன்னுக்கும் போகவிடாமல் பின்னுக்கும் நகரவிடாமல் பெரிய முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதை எண்ணியெண்ணிச் சபித்துக்கொண்டிருந்தார். என்ன வருவதாயிருப்பினும், கலீஃபாவாகிய தமக்கிருக்கிற அதிகாரத்தையம் கெளரவத்தையும் அப்படியே காப்பாற்ற வேண்டுமானால், இனிச் சற்றும் முன்பின் யோசியாது தம்முடைய அஸ்திரத்தைப் பிரயோகித்துதான் ஆகவேண்டுமென்று முடிவுகட்டிக் கொண்டார்.

ஒரு பெண்பிள்ளை, அதிலும் ஒரு கைம்பெண் சுல்தானாவாயிருப்பதாவது? என்று நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தவர் இவ்வளவு தூரம் ஷஜருத்துர்ரால் அவமானப்பட்ட பின்னரும் கைகட்டிக்கொண்டு வெறுமனே இருப்பதா? பின்னே வருகிற சந்ததியார்கள், முஸ்தஃஸிம் பில்லாஹ் கேவலம் ஒரு ஷஜருத்துர்ருக்கு பயந்து பேசாமலிருந்து விட்டாரென்று கைகொட்டி நகைப்பதா? கலீஃபாவின் கண்ணியமென்ன, கெளரவமென்ன? அந்தஸ்தென்ன, அதிகாரமென்ன? சீரென்ன, சிறப்பென்ன? பேரென்ன, பெருமையென்ன? செம்மையென்ன, செல்வாக்கென்ன? – இவ்வளவையும் வைத்துக்கொண்டு, ஒரு துருக்கிநாட்டு அடிமை ஸ்திரீக்குப் பயந்து சும்மா இருந்துவிடுவதா?

ஆழ்ந்து யோசிக்க யோசிக்க ஆரம்பித்தான் அதிகம் பொத்துக்கொண்டு வந்ததேயொழிய, வஜீர் ஜகரிய்யாவின் நற்போதனை எதுவுமே கலீஃபாவின் மூளைக்குள் நுழையவில்லை; அல்லது அந்த போதனைகளை இப்போது சிந்திக்க வேண்டியதற்கு யாதொருவித அவசியம் நேர்ந்து விட்டதாகவும் அவர் கருதவில்லை. இந்த மூஸா என்னும் ஐயூபியை எப்படியாவது மிஸ்ரின் சிங்காதனத்தில் ஏற்றாமலிருப்பதில்லை என்று உறுதி பூண்டுவிட்டார். ஓர் ஐயூபியை உயரக்கொண்டுவர வேண்டியதைவிட ஷஜருத்துர்ரை எப்படியாவது கீழே வீழ்த்திவிட வேண்டுமென்பதே கலீஃபாவின் வைராக்கியமாகப் போய்விட்டது.

மறுநாள் கலீஃபாவின் முன்னே வஜீர் வந்து நின்றார். கலீஃபாவின் வதனத் தோற்றத்திலிருந்தே அவர் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாரென்பதை வஜீர் ஒருவாறாக யூகித்துணர்ந்து கொண்டு விட்டபடியால், இனிமேலும் கலீஃபாவுக்கு விரோதமாகப் பேசுவது பேராபத்தை உண்டுபண்ணி விடலாமென்று பயந்துபோய் ஒன்றும் பேசாமல் மெளனமாய் நின்றார்.

“ஏ, ஜகரிய்யா! நாம் மிஸ்ரின் தலைவிதியை நிர்ணயித்து விட்டோம். இந்த நிமிஷம் முதல் மூஸாதான் சுல்தானாக இருக்க வேண்டும்! ஷஜருத்துர் இக்கணமே வீழ்த்தப்பட வேண்டும்! நம்முடைய இந்தக் கட்டளைக்கு அந்தத் துருக்கிப் பெண் செவிசாய்க்காமற் போனால், நாம் இக்கணமே அந்தத் துஷ்டையைக் கண்டதுண்டமாக…” என்று கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் தமது வாளாயுதத்தின் கைப்பிடியைப் பற்றிக்கொண்டே பற்களை நறநறவெனக் கடித்தவண்ணம் கர்ஜித்துக்கொண்டிருக்கையில், மூச்சு இரைக்க இரைக்க ஓரடிமை ஓடிவந்து, கலீஃபாவின் முன்னே தலையை குனிந்து நின்றான்.

“என்ன நேர்ந்து விட்டது!” என்று திடுக்கத்துடனே வினவினார் கலீஃபா.

“யா அமீரல் மூஃமனீன்! ஷஜருத்துர் எல்லாரையும் ஏமாற்றி விட்டாள்! அவள் மறுமணம் புரிந்துகொண்டு, தன்னுடைய கணவனையே மிஸ்ருக்கு சுல்தானாக்கி விட்டாள்!” என்று அந்த அடிமை தலையைத் தூக்காமலே நடுக்கத்துடனும் மூச்சுத் திணறலுடனும் விடையீந்தான். என்னெனின், இந்த மாதிரியான ‘இழவுச் செய்திகளை’க் கொண்டு போகிறவர்கள் கலீஃபாவின் கடுங்கோபத்தைக் கண்ணாற் காணவும் அஞ்சுவார்கள்; சில சமயங்களில் அத்தகைய ராஜகோபத்துக்குத் தங்கள் தலைகளையேகூட இழந்து விடுவார்கள். எனவே, இந்த அடிமையும் தன்தலை தப்புகிற வரையில் நிமிரக் கூடாதென்று அப்படியே நின்றான்.

கடல் மீதிலும் கரை மீதிலும் ஆணை செலுத்துகிறவரும் அகில உலக முஸ்லிம் ஸல்தனத்களின்மீது ஆக்ஞை செலுத்துபவரும் மூஃமின்களுடைய அமீரும் முஸ்லிம்களின் கலீஃபாவுமாகிய முஸ்தஃஸிம் பில்லாஹ் என்னும் இந்த கலீஃபாவானவர் அச் செய்திகேட்டு, இடியேறுண்ட நெடுமரம்போல் வாய் பிளந்து, விழி மிரண்டு, செயலிழந்து மதிமயங்கி வேரூன்றி நின்றுவிட்டார்.

வஜீர் ஜகரிய்யாவோ, தர்ம சங்கடத்தில் சிக்கியவராகக் கைகளைப் பிசைந்து தயங்கிக்கொண்டிருந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment