தீனுல் இஸ்லாம் உதயமான பின்னர் முதல் நான்கு கலீஃபாக்களின் காலம் வரையில் நல்ல ஜனநாயக முறைமையின் படியே நாடாளும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், நாட்செல்லச் செல்ல, முஆவியா (ரலி) வின் காலந்தொட்டு, கலீஃபா என்னும்
முஸ்லிம் உலகப் பிரதிநிதியின் ஸ்தானம் பொதுத் தேர்தலால் நிரப்பப்படாமல், ஒரு கலீஃபா இறந்தவுடன் அவருடைய மைந்தரே அப்பதவிக்கு உயர்த்தப்பட்டார். எனவே, இஸ்லாமிய ஜனநாயக ஆட்சிமுறை நாளடைவில் தலைமுறைப் பாத்யதையான சொந்த உத்தியோகமாக மாறிப் போய்விட்டது; குடியாட்சி முடியாட்சியாக மாறிற்று.
கலீஃபா என்பவர் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள வெவ்வேறு முஸ்லிம் அரசர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியே போல் காணப்பட்டு வந்தார். ஒரு கலீஃபா ஒரு ஸல்தனத்திலுள்ள சுல்தானை மத விஷயத்திலும் அரசியல் துறையிலும் இப்படிச் செய்யவேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று ஆக்ஞாபிக்கக்கூடிய சக்தியைப் பெற்றிருந்ததுடன் தம்முடைய ஆணையை ஏற்காவிட்டால் அக்கணமே அந்த சுல்தானை பட்டத்தை விட்டு விழ்த்தவும் சக்தி பெற்றுவிட்டார். எனவே, முஸ்லிம் உலகின் எந்தப் பகுதியிலிருந்த எந்த சுல்தானும் கலீஃபாவின் கட்டளைக்கு முற்ற முற்றக் கீழ்ப்படிய வேண்டியவராகவே விளங்கி வந்தார். என்னெனின், அப்படிக் கீழ்ப்படியாவிட்டால், ஸல்தனத்தே தங்கள் கையைவிட்டு பிடுங்கப்பட்டுவிடும் என்பதை எல்லா சுல்தான்களும் நன்குணர்ந்திருந்தார்கள்.
நம் சரித்திரக் காதையின் இச் சந்தர்ப்பத்தில் அப்படிப்பட்ட கலீஃபாவாக பாக்தாதில் விளங்கிவந்தவர் அல் முஸ்தஃஸிம் பில்லாஹ் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவராவர். அல் மலிக்குஸ் ஸாலிஹ் ஐயூபி சுல்தான் மிஸ்ரில் அபூபக்கர் ஆதிலை விழ்த்திவிட்டு, ஹிஜ்ரி 637-இல் பட்டத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாய் முடிந்து, மூன்றாவதாண்டு பிறந்த பின்னர், அதுவரை பாக்தாதில் அப்பாஸீ வம்ச கலீஃபாவாக இருந்து ஆண்டு வந்த முஸ்தன்ஸிர் தேகவியோகமாய் விட்டார். ஆகவே, அவருக்குப் பின்னர் அந்தக் காலியாயிருந்த கிலாஃபத் பதவிக்கு அவருடைய மைந்தர் அபூ அஹ்மத் அப்துல்லாஹ் என்பவர் கலீஃபாவாக வந்தார். பிறகுதான் மேற்சொன்ன சிறப்புப் பெயராகிய அல் முஸ்தஃஸிம் பில்லாஹ் என்னும் பட்டத்துடன் அவர் அழைக்கப்படலாயினார். ஸாலிஹின் மரணத்துக்குப் பின்னும், தூரான்ஷாவின் கொலைக்குப் பிறகும் இதே அபூ அஹ்மத் அப்துல்லாஹ் என்னும் முஸ்தஃஸிம் பில்லாஹ் கலீஃபாவே இன்னமும் கிலாஃபத்தின் ஏகபோக சக்ராதிபதியாய் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தார். எனவேதான், ஷஜருத்துர்ரும் தம்மை “முஸ்தஃஸிமிய்யா” – (அஃதாவது, முஸ்தஃஸிம் என்னும் கலீஃபாவின் ஊழியப் பெண்) என்று அழைத்துக் கொண்டார். இவ்வாறேதான் வெவ்வெறு கலீஃபாக்களின் காலத்தில் சுல்தான்களாக அல்லது சுல்தானாக்களாக அட்சி செலுத்தியவர்கள் தங்களை இன்ன கலீஃபாவின் ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். இதுதான் அக்கால வழக்கம்.
ஓர் அறிவிப்பு சரித்திர முணராதவர்களோ, அல்லது விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முயலாதவர்களோ எம்மீது வீண்கோபங் கொண்டுவிடக் கூடாதே என்பதற்காகவே இவ்வறிக்கையை நாம் விடுக்கின்றோம்: மிஸ்ரின் சுல்தானாவுக்கும் பாக்தாதில் வீற்றிருந்த கலீஃபாவுக்குமிடையே நிகழ்ந்த சரித்திரபூர்வமான மெய்ச்சம்பவமே இச்சரித்திர நவீனத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. அப்பாஸீ வம்ச கலீபாவாகிய அமீருல் மூஃமினீன் அல் முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களை வேண்டுமென்றே அவதூறு செய்யவேண்டுமென்னும் நோக்கத்துடனே எதுவும் எழுதப்படவில்லை. ஆனால், சற்று விவேகமற்ற தன்மையுடன் நடந்துகொண்டவரென்று சரித்திராசிரியர்களால் ஏகமுகமாக ஏற்றுக்கொள்ளப்படும் அந்த கலீஃபா, மிஸ்ரின் சுல்தானா ஷஜருத்துர் மஹாராணியின் மாட்டும் அதேவிதமான அவிவேகத்துடனேயே நடந்துகொண்டு விட்டார் என்பதை நிதரிசனப்படுத்தவே எல்லாம் மிக நுணுக்கமாகவும் கற்பனைச் சம்பாஷணையாகவும் இங்கு எழுதப்பட்டுள்ளன. எனவே, கலீஃபாவை யாம் வேண்டுமென்றே இழிவுபடுத்தவுமில்லை; எமது நோக்கமும் அதுவன்று. |
ஹிஜ்ரி 648-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் பாக்தாதில் தம்முடைய பூலோக சுவர்க்கம் போன்ற பெரிய அரண்மனையில் சகலவித சுகபோக செளபாக்கியங்களையும் அனுபவித்துக்கொண்டு, கவலையென்பதே இன்னதென்றறியாமல் இனிய இகலோக சுகவாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அப்பாஸீ வம்ச கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் திடீரென்று ஒருநாள் ஓர் அவலச் செய்தி கேட்டு நடுநடுங்கிப் போயினார்: அஃதென்னவென்றால், அப்பாஸீ கலீஃபாக்களுக்கு ஐக்கியப்பட்டிருந்த மிஸ்ரின் ஸல்தனத்திலே இப்போது கேவலம் ஒரு பெண்பிள்ளை ஆட்சி செலுத்தி வருகிறாளென்று கலீஃபா கேள்விப்பட்டதுதானாகும். ஆண்பிள்ளையாகிய தமது கிலாஃபத்திலே பெண்பிள்ளையொருத்தி சுல்தானாவாக மிஸ்ரில் ஆட்சி செலுத்துவதாவது! – அக்கணமே கலீஃபாவின் கண்கள் கொவ்வை பழத்தைப் போல் சிவந்து விட்டன. சினங் கக்குகிற சீற்றப் பார்வையுடனே அநதச் செய்தி கொண்டுவந்த தூதனை வெறிக்கப்பார்த்தார் முஸ்தஃஸிம் பில்லாஹ்.
“என்ன! ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக அமர்த்தப்பட்டிருக்கறாளா? என்ன வயிற்றெரிச்சல் இது?” என்று கலீஃபா உறுமினார்.
“யா அமீரல் மூஃமினீன்! ஆண்டவன்மீது ஆணையாகச் சொல்லுகிறேன். மிஸ்ரின் ஸல்தனத்தை ஒரு சுல்தானாதான் ஆட்சி செலுத்துகிறாள். இதை யான் கேள்விப்பட்டதோடு இங்குச் சொல்ல வரவில்லை; ஆனால், நானே நேரே காஹிரா வரையில் போய்க் கண்ணால் கண்டுவந்தே சொல்லுகிறேன்,” என்று அத் தூதன் நடுநடுங்கிப்போய், கலீஃபாவிடம் நவின்றான். அத்தூதன் சத்தியமிட்டுச் சொன்ன தோரணையும் முகத்தில் தோன்றிய நிஷ்களங்கமான பார்வையும் கலீஃபாவுக்கு இன்னம் அதிகமான ஆத்திரத்தையே மூட்டிவிட்டன.
“எம்முடைய அனுமதியில்லாமல் மிஸ்ரின் ஸல்தனத்தைக் கபட மார்க்கமாய்க் கவர்ந்துகொண்ட அக் காதகி யார்?”
“என்னமோ விசித்திரமான பெயர் படைக்கப் பெற்றவளாய் இருக்கிறாள். ‘ஷஜருத்துர்’என்று சொல்லுகிறார்கள்.”
“ஷ…ஜ…ரு…த்….து…ர்ர்! – முத்துமரம்! – அம்முத்துமரத்தைத் தூக்கு மரத்துக்குதான் அனுப்ப வேண்டும்! திருட்டுச் சிறுக்கி! – ஐயூபிகளல்லவோ மிஸ்ரை ஆணடுவந்தார்கள்? இநத முத்துமரம் எந்தச் சேற்றிலிருந்து முளைத்தது? இவளை எப்படி மிஸ்ரின் மக்கள் சுல்தானாவாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்? என்ன, எல்லாம் பட்டப்பகற் கொள்ளையா யிருக்கிறதே!”
“யா கலீஃபத்துல் முஸ்லீமின்! இந்த ஷஜருத்துர் என்பவள் சுல்தான் ஸாலிஹால் அடிமையாக வாங்கி வளர்க்கப்பட்டவளாம்; பிறகு மூனிஸ்ஸா பேகம் காலஞ் சென்றதும், சுல்தான் ஸாலிஹ் தம் அடிமையாகிய இந்த ஷஜருத்துர்ரையே தம் இரண்டாந்தாரமாக மணந்துகொண்டாராம். இவளுக்கும் ஸாலிஹுக்கும் ஒரே ஒரு மைந்தன் பிறந்தானாம். அவனும் சிசுவாய் இருந்தபோதே இறந்துவிட்டானாம். ஸாலிஹ் திடீரென்று அகால மரணம் அடைந்ததும் அவருடைய முதல் மனைவியாகிய மூனிஸ்ஸாவின் மைந்தராகிய, பட்டத்திளவரசர் தூரான்ஷா சுல்தானாக்கப்பட்டாராம். பிறகு இந்த மாற்றாந் தாயாகிய ஷஜருத்துர் தானே ஸல்தனத்தை அடைய வேண்டுமென்று சூழ்ச்சி செய்து, பஹ்ரீ மம்லூக்குகள் என்னும் ஒரு புதிய மம்லுக் கோஷ்டியினரின் உதவியை வைத்துக் கொண்டு, ஒழுங்காய் அரசு செலுத்தி வந்த தூரான்ஷாவைப் படுகொலை புரிந்து விட்டாளாம். அந்த துரான்ஷாவுக்கு அடுத்தபடியாக மிஸ்ரின் ஸல்தனத்துக்கு வரக்கூடிய வேறு நேரடியான வாரிஸ் இல்லாமற் போய்விட்டமையால், இந்த பெண் பிள்ளை எல்லா பஹ்ரீகளையும் ‘தனது’ பண்ணிக்கொண்டு, சுல்தானாவாக ஆகிவிட்டாளாம். இந்தச் செய்தியையெல்லாம் நான் நம்பிக்கைக்குரிய புர்ஜீ அமீர் ஒருவரிடமிருந்து வெகு இரகசியமாக தெரிந்து வந்திருக்கிறேன், அமீருல் மூஃமினீன்!”
“என்ன! அடிமையாய. இருந்தவள் இன்று அரசியாகிவிட்டாளா! அதிலும் ஓர் ஐயூபிசுல்தானை வஞ்சகமாகக் கொன்று விட்டு, ஸல்தனத்தை அபகரித்தாளா! என்ன இது பெரிய மோசடியாயிருக்கிறதே! அவள் என்ன தைரியத்தை வைத்துக்கொண்டு எமக்கும் தெரியாமல் தன்னை சுல்தானாவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறாள்?”
“யா அமீரல் மூஃமினீன்! எல்லாம் அந்த பஹ்ரீ மம்லூக்குகளின் சூழ்ச்சியாலேதான் என்று புர்ஜீகள் கூறுகிறார்கள். அல்லாமலும், அந்த பஹ்ரீ மம்லூக்குகள் எவ்வளவு தூரத்துககு மிஸ்ரிகளை மிரட்டி வைத்திருக்கிறார்களென்றால், பொது ஜனங்களெல்லாரும் பயந்து கொண்டாவது ஷஜருத்துர் தான் சுல்தானாவாக இருக்க வேண்டுமென்று கோருகிறார்களாம். எனக்கு இச் செய்திகளைக் கூறிய புர்ஜீ அமீரின் வாக்கைக்கொண்டு பார்க்கப் போனால், நாம் எவ்வளவு முயன்றாலுங் கூட அந்த ஷஜருத்துர்ரை வீழ்த்த முடியாதென்று தெரிகிறது. யா அமீரல் மூஃமினீன்! அந்த ஷஜருத்துர் என்பவள் வனப்பு மிக்க பெரிய கட்டழகியாய்க் காணப்படுவதால், எப்படிப்பட்ட ஆடவரையும் நொடிப் பொழுதில் வசீகரித்து மயக்கி விடுகிறாளாம். சில பேர்வழிகள் சதா அவளுடைய ஞாபகமாகவே மதியிழந்து மஜ்னூன்களாய்த் திரிகிறார்களாம். பழைய காலத்து மாந்திரீக வசீகரண மாய வித்தைகளையும் அவள் கற்றிருக்கக் கூடுமென்று பலர் அஞ்சுகிறார்கள். என்னெனின், ஸாலிஹ் மன்னர் உயிரிழந்தவுடனே அப்பிரேதத்தை அவள் மூமிய்யாவாக்கிப் பல நாட்கள் வரை புதைக்காமலே வைத்திருந்தாளாம். பழங்காலத்து அகடி தகடான வித்தையாகிய, மூமிய்யாவாக்கும் படிப்பைக்கூட படித்திருக்கக்கூடிய அந்த ஷஜருத்துர் இன்னம் என்னென்ன விபரீதமான கொடிய மாந்திரீக சூன்ய வித்தைகளையும் அறிந்திருக்கக் கூடுமோவென்று யூகிக்க முடியவில்லை. அவள் இவ்வளவுக்கும் மிஸ்ரில் பிறக்கவில்லையாம்; துருக்கி நாட்டில் பிறந்தவளாம்; அனாதையாக மிஸ்ருக்குள் வந்து புகுந்தவளாம்!”
“என்ன! ஒரு கேவலமான பெண்பிள்ளை! அதிலும் அனாதையாக வந்தவள்; அடிமையாக வாங்கப்பட்டவள்; கணவனையிழந்த கைம்பெண்; மிஸ்ருடனே எவ்வகையிலும் சம்பந்தமில்லாதவள்; அவளுடைய பாட்டன் பூட்டன் தலை முறையில் அரியாசனத்தைக் கனவிலுங்கூடக்காணாதவள்; ஒரு விதத்திலும் ஸல்தனத்திற்கு வருவதற்கு லாயிக்கில்லாதவள் – மிஸ்ரின் சுல்தானா! நன்று, நன்று! பேஷ், பேஷ்! இன்று ஸல்தனத்துக்கு உரிமை கொண்டாடுகிற அந்தத் துரோகி நாளை இந்த கிலாஃபத்துக்கே உரிமை கொண்டாடினாலும் கொண்டாடுவாள்! காலம் போகிற போக்கைப் பார்த்தால், கியாமத் – (இறுதி தீர்ப்பு) நாள் நெருங்கி விட்டாதாகவல்லவோ தெரிகிறது! இந்த மாதிரியான தாந்தோன்றித் தனமான துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் புரியக்கூடிய அளவுக்கு ஒரு பெண்பிள்ளை துணிந்து விட்டதைக் கண்டு நான் அஞ்சுகிறேன். இன்னம் என்னென்ன கேடுகாலங்களை நமது கிலாஃபத்துக்கும், நம் கிலாஃபத்துக்கு ஐக்கியப்பட்ட ஸல்தனத்களுக்கும் இந்த ஷஜருத்துர்ரைப் போன்ற கபடசித்த சிகாமணிகள் இழைக்கப் போகின்றனரோ, தெரியவில்லையே! அவளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்? – கூப்பிடு நம்முடைய வஜீரை!”
கலீஃபாவின் இறுதி வார்த்தைகளின் எதிரொலி மறையு முன்னரே அத்தூதன் பயபக்தியுடன் வெளியேறி விட்டான். முஸ்தஃஸிம் கலீஃபாவோ, பொங்கியெழுகிற கோபத்துடன், கைகளைப் புறத்தே கட்டிக்கொண்டு, பசித்திருக்கும் புலி போனுக்குள்ளே அலைவதுபோல், மேலுங் கீழும் மிகவேகமாய் நடமாடிக்கொண்டிருந்தார். அடுத்த நிமிஷத்தில் ஜகரிய்யா என்னும் பிரதம வஜீர் கலீஃபாவின் திருமுன்னே மரியாதையாய் வந்து நின்று, ஸலாம் போட்டார்.
“ஏ, வஜீரே! கேட்டீரா கதையை? மிஸ்ர் தேசத்திலே ஒரு பெண்பிள்ளை ஸல்தனத்தை நடத்துகிறாளாமே! நீர் ஏன் எம்மிடம் இதை முன்னரே அறிவிக்கவில்லை? நம்முடைய கிலாஃபத் சாம்ராஜ்ஜியத்தை நீர் கவனிக்கிற ஒழுங்கு இதுதானோ?…… என்ன விழிக்கிறீர்?” என்று கலீஃபா சீறினார்.
“யா அமீரல் மூஃமினீன்! சென்ற சில மாதங்களுக்கு முன்னரே ஷஜருத்துர் என்னும் பெண்ணொருத்தி மிஸ்ரின் ஆட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகிறாளென்று கேள்விப்பட்டேன். ஒரு வேளை அது தாற்காலிக ஆட்சியாயிருக்கக் கூடுமென்று யான் கருதினேன். நேரில் போய் விவரமறிந்து வரும்படி சில தூதர்களையும் அனுப்பியுள்ளேன். சென்ற சில காலமாகவே மிஸ்ரில் இரு கட்சி மம்லூக்குகளுக் கிடையே கலகமும் புரட்சியும் இருந்து வருகின்றனவென்றும், இதன் காரணமாகவே இறுதி சுல்தான் மலிக்குல் முஅல்லம் கொலை புரியப்பட்டு விட்டாரென்றும் நான் கேள்விப்பட்டேன். தக்க ஆட்களை அனுப்பி, நாம் முழு விருத்தாந்தத்தையும் விளக்கமாகத் தெரிந்து கொண்டாலன்றி, இங்கிருந்தபடியே நாமாகவே எதையாவது நினைத்துக் கொண்டு முடிவு கட்டுவது பேராபத்தாய் முடியலாம்,” என்று அந்த மந்திரியார் பைய விவேகமாகவே பதிலிறுத்தார்.
“நீர் இதுவரை மிகவும் அசிரத்தையாக இவ்வளவு பெரிய வியவகாரத்தை எம் காதுகளில் போடாமல்ள இருந்துவிட்டது மல்லாமல், இப்போது வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிறீரோ? பெண்ணொருத்தி தாற்காலிகமாகக்கூட எப்படி ஸல்தனத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துகொண்டு நிர்வகிக்கலாம்? பெண்பாலார் இங்ஙனம் படுமோசமாக ஆண்களுடன் போட்டியிடுவதை கலீஃபாவாகிய நாம் எங்ஙனம் அனுமதிக்கலாம்? நீர் எப்போது இந்தத் தலைகீழாய விஷயத்தைக் கேள்வியுற்றீரோ, அப்போதே எம்மிடம் வந்து அதைத் தெரிவத்திருக்க வேண்டியதுதானே? இன்று வரை நீர் என்ன தைரியத்தைக் கொண்டு எம்மிடம் இதைச் சொல்லாமலிருந்தீர்?”
“யா அமீரல் மூஃமினீன்! யான் வேண்டுமென்றே இவ் விஷயத்தை மறைத்து வைக்கவில்லை ஆனால், நிச்சயம் தெரிந்த பின்னர்க் கூறலாமென்றிருந்து விட்டேன். என்னை மன்னிக்கும்படி கோருகிறேன். யா கலீஃபத்துல் முஸ்லீமீன்!”
“நிச்சயம் தெரிய வேண்டுவது இன்னம் என்ன எஞ்சியிருக்கிறது? ஷஜருத்துர் என்னும் அந்த அனாதை நீர் நினைப்பதுபோல் தாத்காலிக ஆட்சி செலுத்தவில்லை; ஆனால், நிரந்தரமான சுல்தானாவாகவே வேரூன்றி விட்டாளென்று இதுபோது செய்தி எட்டியிருக்கிறதே!”
“அமீருல் மூஃமினீன்! தாங்கள் அப்படிக் கேள்விப்பட்டிருந்தால்…!”
“கேள்விப் படுவதாவது?… எம்முடைய ஆட்சியின் காலத்தில் கேவலம் ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக இருந்தாள் என்னும் அபகீர்த்திக்கு நாம் ஆளாக விரும்பவில்லை. ‘ஹராமான’ காரியங்களை கலீஃபாவே ஊக்கிவிட்டார் என்னும் அபகீர்த்திக்கோ எம்மை ஆளாகச் சொல்கிறீர்? கூப்பிடும் இலேககனை, இப்போதே!”
கலீஃபாவுக்கு ஆத்திரம் பொங்கினால், அஃது எப்படியிருக்குமென்பதை வஜீர் ஜகரிய்யா நன்கறிவாராதலலால், மறுபேச்சுப் பேசாமல் அக்கணமே இலேககனை அவ்வறைக்குள் அழைத்துவந்து சேர்ந்தார். நேரஞ் செல்லச் செல்ல, கலீஃபாவின் ஆத்திரமென்னும் உஷ்ணமும் ஹத்துமீறி ஏறிக்கொண்டேயிருந்தது. இலேககன் வநது சேர்நதவடனே அவர் கீழ்க்காணுமாறு வரையும்படி கட்டளையிட்டார்:-
“அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்-பாக்தாதில், அப்பாஸீ வம்சத்து கலீஃபாக்களுள், இப்போது முஸ்லிம் ராஜாங்கத்தை நிர்வகத்து வரும் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ்வாகிய நாம், மிஸ்ர் தேச மக்களுக்கும், அந்நாட்டு ஸல்தனத்தைக் கபடமாகக் கைப்பற்றி, சுல்தானாவாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் ஷஜருத்துர் என்னும் அடிமை விதவைக்கும் விடுக்கும் பகிரங்க அறிக்கை என்னவென்றால்:-
இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் கட்டளைகளுக்கும் நேர் மாற்றமான முறையில் மிஸ்ரின் ஸல்தனத்திலே ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக இருந்து ஆட்சி செலுத்துவதை நாம் அங்கீகரிககவும் முடியாது; அல்லது மேலும் தொடர்ந்து நீடிப்பதற்கு உதவியாயிருக்கவும் இயலாது. எனவே, எமது இவ்வறிக்கை கிடைத்த மறுகணமே அந்த ஷஜருத்துர் என்னும் விதவை தன்னுடைய பதவியைத் துறந்து, ஸல்தனத்தை மறந்து, மறுபேச்சின்றி வெளியேறிவிட வேண்டும்! மிஸ்ர் மக்களாகிய உங்களுள் சுல்தானாவதற்கு யோக்கியதையோ லாயிக்கோ ஓர் ஆண் பிள்ளைக்கும் இல்லையென்றால், இங்கிருந்தாவது நாம் வேறொருவரை சுல்தானாக நியமித்து அனுப்பிவைக்கிறோம். ஆண்களையே ஆளக்கூடிய அருகதையுள்ளவர்களாகவும், பெண்களை அடங்கி நடக்க வேண்டிய அடிமைகளாகவும் அல்லாஹுத் தஆலா நம்மையெல்லாம் படைத்திருக்கும்போது, ஆண்டவனின் விருப்பத்துக்கு நேர்முரணான குபிரிய்யத்தான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் உங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். போனதெல்லாம் போகட்டுமென்றாலும், எம்முடைய இந்தப் பிரகடனத்தைப் பார்த்த பின்னரும் நீங்கள் நேர்வழியில் திரும்பவில்லையானால், எம்முடைய கோபத்துக்கும் கொடிய நடவடிக்கைகளுக்கும் ஆளாகித் தீர்வீர்களென்று இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம்!”
இலேகன் இதை எழுதிய பின்னர் ஒருமுறை படித்துக் காட்டினான். கலீஃபா தாடியை இழுத்து விட்டுக் கொண்டே வஜீரை முறைத்துப் பார்த்து, “என்ன சரிதானே? இன்னம் ஏதாவது விட்டுப் போய்விட்டதா?” என்று அகங்கார தொனியில் ஆக்ரோஷத்துடன் கர்ஜித்தார்.
“யா அமீரல் மூஃமினீன்! முற்றிலும் சரிதான். ஆனால்—”
“ஆனால், என்ன?”
“ஒன்றுமில்லை! இப்போது வரவர ஜனங்கள் கண்விழித்து வருகிறார்கள். எங்கும் ஜனநாயக முறைமையே நிலவவேண்டுமென்று துடிக்கிறார்கள். ஏகாதிபத்திய, சர்வாதிகாரக் கட்டளைகளை வெறுக்கிறார்கள். இப்படி எல்லா மக்களும் பொதுவாகவே விழிப்படைந்திருந்தாலும், மிஸ்ர் மக்கள் சிறப்பாக முன்னேற்றமடைந்திருக்கறார்கள். எனவே, தாங்கள் இம்மாதிரியான அதிகாரவர்க்க இனத்தைச் சார்ந்த பழங்கால தொனியில் வரைந்தனுப்பும் திருமுகத்தை மிஸ்ர் வாசிகள் சிறிதேனும் சட்டை செய்வார்களென்று என்னால் நம்ப முடியவல்லை.”
“எது ஏகாதிபத்தியம்? எது சர்வாதிகாரம்? ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக இருக்கக்கூடாது என்று ஷரீஅத் வரம்பை நியாயமாக ஒரு கலீஃபா கூறுவதா அதிகாரவர்க்கக் கட்டளை? மிஸ்ர் மக்கள் என்ன, பிரமாதமான சர்வகலா வல்லுநர்களோ? அல்லது எல்லாம் தெரிந்தவர்களோ? என்ன அநியாயம்! என்ன அக்கிரமம்! முஸ்தஃஸிம் பில்லாஹ்வின் கிலாஃபத்தின்போதா இந்தக் கண்ணராவியான பாப கருமங்கள் நிகழவேண்டும்? ஏ, வஜீர்! உமது மூளை குழம்பிவிட்டது போலும்!”
“யா அமீரல் மூஃமினீன்! யான் மூளை குழம்பிப் பேசவில்லை; அல்லது தாங்கள் இந்தப் பகிரங்கக் கட்டளையை மிஸ்ருக்கு அனுப்பக்கூடாதென்று குறுக்கிடவுமில்லை. ஆனால், தாங்கள் இதை மிஸ்ருக்கு அனுப்புவதால் கோரிய பலனொன்றும் கிட்டாது என்றே அடியேன் அஞ்சுகின்றேன். ஏனென்றால் மிஸ்ரிகள் அந்த ஷஜருத்துர் என்பவளை நேசிக்கிற காரணத்தால்தான் அவளையே தங்களுடைய சுல்தானாவாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அவளுடைய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்; அவள் இடும் கட்டளைகளுக்கு தலைசாய்க்கிறார்கள். மேலும், ‘விவேகமுள்ள ஸ்திரீகள் அரசு செலுத்தக் கூடாதென்று எங்கே வரையப்பட்டிருக்கிறது?’ என்று துணிவுடன் வினவினார்களாம். இப்படிப்பட்ட நோக்கங் கொண்டுள்ள மக்களுடைய மனப்போக்கை நாம் தெரிந்து கொண்டு ஜாடையாகச் சும்மா இருப்பதுதான் நமக்கும் கெளரவம். இப்பொழுது நாம் அவளை வீழ்த்துவதாகப் பயமுறுத்திய பின்பும், மிஸ்ரிகள் கலீஃபாவாகிய தங்களின் ஆக்ஞையை அசட்டை செய்வார்களானால், அதனால் நமக்கும் நம்முடை கிலாஃபத்துக்கும் இன்னம் இழிவான பேரவமானமே வந்து லபிக்கும். எனவே, யா கலீஃபத்துல் முஸ்லீமீன்! தாங்கள் அவசரப்பட்டு இந்த பர்மானை அனுப்பாமல், தகுதிவாய்ந்த சில பேர்வழிகளை மிஸ்ருக்குத் தூதுவிடுத்து, உள்ள நிலைமையை நேரில் கண்டறிந்து வரும்படி கட்டளையிடுங்கள். தாங்கள் இப்போது மிகவும் கோபமாயிருப்பதால், தங்கள் சினந்தணிந்ததும் என் வார்த்தைகளைச் சற்று மனவொருமையுடன் சிந்தித்துப் பாருங்கள். நான் கூறுவதில் தவறேதும் இருந்தால், என்னை மன்னியுங்கள்!”
“ஏ, ஜகரிய்யா! கிலாஃபத் என்னும் நம்முடைய பெரிய மரக்கலத்தில் சிறிய ஓட்டை யொன்று ஏற்பட்டுத் தண்ணீர் உள்ளே ஏறிக்கொண்டேயிருப்பதால் நாம் உடனே அநதத் தொளையை அடைக்க வேண்டுமென்றால், நீர் சாவகாசமாக வேதாந்தம் ஓதுகிறீர்! முளையிலேயே கிள்ளியெறிவதற்கு நாம் மார்க்கம் சொன்னால், நீர் விஷயத்தை வளரவிடலாமென்கிறீர்! இன்று ஒரு ஷஜருத்துர் ஒரு ஸல்தனத்தைக் கைப்பற்றிக் கொண்டு விட்டாள். இதை நாம் இப்போதே அமுக்கிப் பிடிக்காவிட்டால், எம் கீழுள்ள ஒவ்வொரு ஸல்தனத்திலு மல்லவோ ஒவ்வொரு ஷஜர் (மரம்) முளைத்துவிடும்! பிறகு எல்லாம் போய், கலீஃபாவேகூட ஒரு பெண்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டுமென்றல்லவோ பிரசாரம் நடக்கும்! நான் சிந்தித்துப் பார்க்கவேண்டுவது ஒன்றுமில்லை, வஜீரே! நீரே துருப்பிடித்திருக்கும் உம்முடைய மூளையைத் துலக்கிக்கொண்டு சிந்தியும்! இமாம்களின் எழுத்துக்களை எண்ணிப்பாரும்! ஏ, இலேககரே! கொண்டு வாரும் அந்தப் பிரகடனத்தை! இப்போதே நாம் கையெழுத்துப் போடுகிறோம்!” என்று கலீஃபாவானவர் அப் பிரகடனப் பத்திரத்தை வாங்கித் திரும்பவும் படித்துப் பார்த்துவிட்டு, கீழுதட்டைப் பலமாகக் கடித்துக்கொண்டு, நாணற் பேனாவினால் அழுத்திக் கையயாப்பமிட்டுவிட்டார். பிறகு முத்திரையுமிட்டார்.
கலீஃபாவின் கோபத்தின் முன்னே வஜீரின் தத்துவார்த்த தர்க்க சாஸ்திர போதனை எப்படி நிலைத்துநிற்கும்? அவர் அந்த பர்மானில் கையொப்பமும் முத்திரையும் இட்டுவிட்டு, உடனே அதைக் காஹிராவுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். கலீஃபாவின் பிரத்தியேகத் தூதுவன் அதிக அவசரமாகக் கூப்பிட்டனுப்பப்பட்டான்.
அந்தப் பிரத்தியேகத் தூதுவன் கலீஃபாவின் திருமுன்னே வந்து நின்றான். கையெழுத்திடப்பட்ட பர்மான் சுருட்டப்பட்டு, வெள்ளிக் கூட்டினுள்ளே அடைக்கப்பட்டு, அத்தூதுவன் கையிலே கொடுக்கப்பட்டது.
“இதை நீ மூன்றே நாட்களில் காஹிராவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அங்கே ஆட்சி செலுத்துகிறவளிடம் இதைக் கொடுத்து, அவள் என்ன சொல்லுகிறாள் என்ற பதிலை உடனே இங்கு வந்து தெரிவிக்க வேண்டும். நமது லாயத்திலுள்ள மிகச் சிறந்த குதிரையை நீ எடுத்துக்கொண்டு உடனே புறப்படு!” என்று கலீஃபா சுருக்கமாகக் கட்டளையிட்டார்.
இரு கையேந்தி அந்தப் பிரகடனப் பத்திரம் அடங்கிய வெள்ளிக்கூட்டை மிக மரியாதையாய்ப் பெற்றுக்கொண்டு, அத் தூதுவன் வெளியேறிச் சென்றான்.
வஜீர் ஜகரிய்யாவோ, கலீஃபாவின் முகத்தை அண்ணாந்து பார்க்கவும் துணியாது, சென்னி கவிழ்த்து ஏதோ யோசனை செய்து கொன்டு நின்றார். கலீஃபாவுக்கோ, நினைத்து நினைத்து ஆத்திரம் மேலும் மேலும் பொங்கிக்கொண்டிருந்தது. தாடி ரோமங்கள் மூக்கை நோக்கி விறைத்து எழுந்தன.
“ஏ, வஜீர்! மிஸ்ரிகளெல்லாரும் பேடிப் பயல்களோ? ஒரு பெண்பிள்ளையை ஸல்தனத்துக்கு உயர்த்தி வைத்துவிட்டு, இவர்கள் அவளுக்குக் கீழே கைகட்டி வாய்பொத்தி நிற்பதைப் பார்த்தால், எனக்கு வயிறல்லவோ எரிகிறது! கையாலாகாத பேடிப்பயல்கள்!”
முன்கோபமுள்ள மன்னர்களுக்கு மந்திரிகளாயிருப்பவர்கள் பாடு எப்போதும் ஆபத்துத்தான்! ஜகரிய்யாவின் நிலைமையும் அப்படியேயிருந்தது. எனவே, இனிமேல் கலீஃபாவுக்கு முரணாகப் பேசிக் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதென்று அந்த வஜீர் தம் மனத்துக்குள்ளே தீர்மானித்துக் கொண்டு, கலீஃபாவைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார்.
“யா அமீரல் மூஃமினீன்! மிஸ்ரிகள் ஆண்மையற்றவர்கள் என்பதில் அணுத்துணையும் ஐயமில்லை. ஏனென்றால், பனீ ஃபாத்திமா கலீஃபாக்களின் கிலாஃபத் மிஸ்ரிலே அழிந்துவிட்டவுடனே ஐயூபி சுல்தான்கள் பட்டத்துக்கு வந்த நாளிலிருந்தே இவ்வுண்மை நன்கு புலனாகின்றது. மிஸ்ரிகள் மட்டும் பலம் பெற்றவர்களாயிருந்தால், வெளி நாட்டவரான ஐயூபிகளுக்கா தங்கள் நாட்டை விட்டுக் கொடுத்திருப்பார்கள்? சுல்தான்கள் மிஸ்ரிகளாக அல்லாமற்போனதுடனே, இன்று மிஸ்ரின் அரசியல் விவகாரங்களில் அமீர் பதவி முதல் அலியின் உத்தியோகம் வரையில் காக்கேஸிய நாட்டு அடிமைகளும் மங்கோலிய தேசத்து அடிமைகளும் துருக்கி தேசத்து அடிமைகளும் ‘மம்லலூக்’ என்ற பெயரால் ஆட்டிப்படைக்கிறார்கள். எனவே, மிஸ்ரின் மக்கள் சுல்தானாவதற்கும் யோக்கியதையற்றவர்கள், அல்லது சுல்தானுக்குக் கீழேயிருந்து தொண்டூழியம் புரிவதற்கும் உணர்ச்சி யலலாதவர்கள் என்பது புலனாகின்றதன்றோ? ஆண்டவன் மிஸ்ரின் தலைவிதியை எப்போதுமே விசித்திரமிக்கதாகத்தான் செய்துவிடுகிறான்.”
“அப்படியானால், மிஸ்ரிகள் தங்கள் நாட்டைத் தாங்களே ஆளுவதற்கு அருகதையற்றவர்களென்றா நீர் கூறுகிறீர்?”
“இதில் சந்தேகப்பட வேண்டுவது என்ன இருக்கிறது? சரித்திரம் சாட்சி சொல்லவில்லையா? ஐயூபி சுல்தான்களெல்லாருமே ஸலாஹுத்தீனைப் போன்ற அவ்வளவு திறமைசாலிகளல்லர். இருந்தாலும், எந்த ஒரு மிஸ்ர் தேச மனிதன் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்? அதுவும் போகட்டும். சமீபத்தில், சென்ற பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே இரண்டாவது ஆதில் என்னும் அபூபக்ர் ஐயூபி, காமில் ஐயூபிக்குப் பிறகு பட்டத்துக்கு வந்து இல்லாத அநியாயங்களையெல்லாம் புரிந்தானே, அக் கொடுங்கோலனை வீழ்த்தி ஒழிப்பதற்காக அப்போது ஒரு பெரிய புரட்சி நடந்தது. அந்தப் புரட்சியை யார் கிளப்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? மிஸ்ரிகள் ஒன்றும் கண்விழிப்படைந்து, தங்கள் நாட்டைத் தாங்கள் காப்பாற்றிக்கொள்வதற்காக அக் கலகத்தை நிகழ்த்தவில்லை. எவரோ சில அமீர்கள் – அதிலும் காக்கேஸிய நாட்டிலிருந்து முதலில் மம்லூக்குகளாக மிஸ்ருக்கு வந்த நாடோடிகள் – தங்கள் சுயநலத்துக்காக அந்தப் புரட்சிக் கலகத்தைக் கிளப்பிவிட்டார்கள். மிஸ்ரிகளும் அக் கலகத்தில் பங்கெடுத்திருக்கலாம். ஆனால், அபூபக்ரைக் கொன்றொழித்த பின்னர் என்ன நடந்ததென்று நினைக்கின்றீர்கள்? மிஸ்ர் மக்கள் கொஞ்சமேனும் ஆண்மை பெற்றவர்களாய் இருந்தாலல்லவோ, ஸல்தனத்தைத் தாங்கள் கைப்பற்றிக்கொள்வார்கள்? அதை விடுத்து, ஓர் ஐயூபி சுல்தானை ஓழித்துவிட்டு, அந்த சுல்தானின் தம்பியாகிய மற்றோர் ஐயூபியை அரியாசத்தின்மீது அமர்த்தினார்கள். அதுவும் போகட்டுமென்றாலும், அந்தத் தம்பி சுல்தான் ஸாலிஹ் ஷாமுக்கு வேறு அலுவலாகச் சென்றபோது, மிஸ்ரைத் தாற்காலிகமாகவாவது மிஸ்ரிகள் ஆண்டார்களா, அல்லது ஆள நினைத்தார்களா? ஸாலிஹ் வெளியே செல்லும் போது, தம் மனைவியாகிய இந்த அடிமை ஷஜருத்துர்ரைத் தாற்காலிக சுல்தானாவாக அமர்த்திச் சென்றார். அப்போதாவது, ஒருபெண்பிள்ளை நாடாளக் கூடாதென்று அந்தப்பேடி மிஸ்ரிகள் கிளர்ச்சி செய்தார்களா? -எல்லாம் போகட்டுமென்றாலும், இப்போது ஐயூபி வம்சமே அடியுடன் அஸ்தமித்துப் போன இச் சந்தர்ப்பத்திலாவது மிஸ்ரிகள் தங்கள் நாட்டைத் தாங்களே எடுத்துக் கொண்டார்களா? முன்னம் தாற்காலிகமாக ஆண்டவளையே இப்போது நிரந்தரமான சுல்தானாவாக ஆக்கிக்கொண்டார்கள்! என்ன பேடித்தனம்!”
“பேடிப் பயல்கள்!” என்று தாடியை உருவிக்கொண்டே கர்ஜித்தார் கலீஃபா.
“இப்படிப்பட்ட ஆண்மையற்ற, கையாலாகாத அடிமை மக்களுக்கு நாம் பர்மான் விடுப்பதால் பயன் என்ன விளையப்போகிறது!”என்று ஒரு போடு போட்டார் வஜீர் ஜகரிய்யா.
இதைக் கேட்டவுடனே, கலீஃபா பெரூமூச்செறிந்து, இன்னம் அதிகமான கோபமுற்று விட்டார்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்