குறைஷிகளின் தீவிர நடவடிக்கை – 1

முஹம்மது (ஸல்) எக்காரணத்தை முன்னிட்டும் கஅபா ஆலயத்துக்கு அருகிலும் வரக்கூடாது என்று குறைஷிகள் தடை விதித்தார்கள். ஆனாலும், அவர்கள் மக்கா நகரின் மற்ற இடங்களில் நின்று பிரசாரம் செய்வதையும், அவர்களுடைய புது மதக் கோட்பாட்டை

வெளியூரிலிருந்து வருகிற வழிப்போக்கர்கள், பிரயாணிகள், வர்த்தகர்கள் முதலியோர் மெச்சிப் பாராட்டுவதையும் அவர்கள் கண்டு வயிறெரிந்தார்கள்; அல்லாமலும், அவ்வாறு பாராட்டுகிறவர்கள் இஸ்லாத்தை ஏற்பதையும் பிறகு தத்தம் ஊருக்குச் சென்று இச் சித்தாந்தத்தைப் பரத்துவதையும் வேதனையுடன் கவனித்தார்கள். குர்ஆன் திருவாக்கியங்களும் நபியவர்களின் வாக்குச் சாதுரியமான சொற்பொழிவுகளும் பலரை வசீகரிப்பதை எப்படி அவர்கள் சகிப்பார்கள்? கஅபா ஆலய விக்கிரகங்களுக்குக் காணிக்கை செலுத்த வருகிற வெளியூர்ப் பக்தர்கள் நபியவர்களின் பேச்சில் மயங்கி, வந்த வழியே திரும்பி விடுவதையும் கொணர்ந்த காணிக்கைப் பொருள்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து ஈந்துவிட்டுப் பேசாமல் போய்விடுவதையும் குறைஷிப் புரோகிதர்கள் கண்டு குமுறினார்கள்.

“கஅபா ஆலயத்தில் 360 சாமிச் சிலைகள் இருக்கின்றன. உங்களுக்கு நேரிடும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அவை நிரந்தரமான பரிகாரத்தை நல்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். உங்களுக்கு அவை நிரம்பவும் செல்வத்தைத் தந்தருளும் என்று எதிர்பார்த்து அவற்றினெதிரே வைக்கப்பட்டுள்ள உண்டிகளில் சில காசுகளைக் கொட்டுகிறீர்கள். இப்படி லஞ்சம் வழங்கினால் மட்டுமே அவை உங்களுக்கு ஒத்தாசை புரியும் என்று கூறுகிறீர்கள். ஆனால், சற்றே சிந்தியுங்கள். இந்தச் சாமிகளின் மீது படிந்துள்ள நாற்றமிக்க அசுசிகளின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. ஒரே ஒரு சாமியுங்கூட அவ்வாறு தன் மீது மொய்க்கிற ஈயை விரட்டக் காண்கிறோமில்லை. தன் மீது மொய்க்கும் ஓர் அற்ப சீவனை விரட்ட முடியாத செயலற்ற கற்சிலை உங்களுக்கு வந்திருக்கும் வியாதியைப் போக்குமா? நீங்கள் அடைந்த நஷ்டத்தை நீக்குமா? உங்கள் பாவங்களை மன்னிக்குமா? உங்களைச் சுவர்க்கத்தளவில் கொண்டு போய்ச் சேர்க்குமா? உங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறவாமல் தடுக்குமா? குருடன் வழிகாட்ட உதவமாட்டான்.

படைத்தவன் அவன். நீங்களாக ஓர் உருவத்தைப் படைத்துக் கொண்டு அதுவே அவனென்று குப்புற்று வீழ்ந்து கும்பிடாதீர்கள்.

“உங்களை ஒரே இறைவன் படைத்தான். அந்த ஒருவனே உங்களைக் காத்து ரக்ஷிக்கிறான். அவன் உங்களிடம் எந்தக் காணிக்கையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் நன்றிப் பெருக்குடன் அவனை நினைவு கூர்வது மட்டுமே போதும் என்றுதான் நினைவூட்டுகிறான். படைத்தவன் அவன். நீங்களாக ஓர் உருவத்தைப் படைத்துக் கொண்டு அதுவே அவனென்று குப்புற்று வீழ்ந்து கும்பிடாதீர்கள். இரணம் அளிப்பவன் அவன். அவனளிக்கும் இப் பரிசுகளை உங்கள் கற்சிலைகள் வழங்கிய பாக்கியம் என்று நினைக்க வேண்டாம். கஅபா ஆலயப் பேசா மடந்தை விக்கிரஹங்களுக்கு உங்கள் பொன்னான பொருளை வாரிக் கொட்டி உங்களை நீங்களே ஏமாளிகளாகச் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் கொட்டிக் கொடுக்கும் பணம், செலுத்தி மகிழும் காணிக்கை, இட்டு நிரப்பும் பலிப் பொருள்கள் ஆகிய இத்தனையும் இந்த உயிரற்ற செயலிழந்த கற்சிலைகளுக்கும் போய்ச் சேர்வதில்லை; அல்லது எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கும் எட்டுவதில்லை. மாறாக, பூசாரிகளும் புரோகிதர்களும் ஆலய நிர்வாகிகளுமே இவற்றை அடைந்து அனுபவித்துக் கொழுக்கிறார்கள்.

“காற்காசு செலவில்லாமல், வேறோர் இடைநிலைப் பேர்வழியின் சிபாரிசை, மந்திர உச்சாரணத்தை முணுமுணுக்காமல் நீங்கள் ஒவ்வாருவருமே ஏக இறைவனாம் அல்லாஹ்வினிடம் கையேந்தலாம். அவனே அருளாளன். அவனே அன்புடையோன். அவனே கருணாகரன். அவன் உங்களை நேசிக்கிறான். நீங்கள் அறியாமலிழைத்த பிழைகளைப் பொறுத்தருளுகிறான். உங்களை மன்னிக்கிறான். நீங்கள் அவனிடம் காண்பிக்கும் நன்றியறிவிப்பைப் பூரிப்புடன் ஏற்கிறான். உலக இன்பங்களை அடையத்தான் உங்களுக்குச் சிபாரிசு செய்யவும் இடைநிலைத் தரகராக ஓடியாடவும் மூன்றாவது மனிதனின் தயவு தேவைப்படுகிறதே யொழிய, இவ்வுலக, மறுவுலகப் பேறுகளனைத்தையும் நீங்கள் பெற்று மகிழ எந்தத் தரகனுமின்றி, எவருடைய சிபாரிசுமின்றி நேரடியாக உங்கள் ரட்சகனிடம் தொடர்பு கொள்ளலாம். இதுவே இயற்கையின் நியதி. மற்ற யாவும் சாத்தான் கற்றுத் தந்த செயற்கைச் சேஷ்டைகள். காசு செலவின்றிக் கடவுளை வணங்குங்கள். பிதுங்கி வழியும் உங்கள் மேலதிகமான செல்வங்களை ஏழைகளுக்கு, அபலைகளுக்கு, அனாதைகளுக்கு வழங்குங்கள். போகிற இடத்துக்குப் புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்.” —நபியவர்களின் பிரசாரங்களின் சுருக்கம் இதுவே.

தரையில் வெறுங்காலுடன் நின்று அதிக மின்செறிவுள்ள மின்விசைக் கம்பியைத் தொடுகிறவன் அடைகிற அதிர்ச்சியைவிட மக்காவின் குறைஷித் தலைவர்கள் இப்போது அதிர்ந்து போனார்கள். கோவில் வருமானம் குறைந்துவிட்டது. சாமி பக்தர்கள் அல்லாஹ்வின் அடியார்களாக மாறிப் போனார்கள். சுகபோக வாழ்க்கை நடத்தி வந்த உல்லாசப் புரோகிதர்கள் தாங்கள் என்றுமே கண்டறியாத சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கதியை எட்டினார்கள். குறி சொல்வோர், சோதிடம் கணிப்போர், ஆரூடம் சொல்வோர் எல்லாம் தம் வாடிக்கைக்காரர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. புதிய மதத்தில் எல்லாரும் உடனடியாகப் போய்ச் சேர்ந்துவிடவில்லை யென்றாலும், பழைய மதக் கோட்பாட்டின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்து வந்தார்கள்.

நடுக் கடலில் கப்பல் மூழ்குவதைக் காணும் பிரயாணிகள் அடையும் திகிலினும் பெருங்கிலியடைந்த குறைஷிகள் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்கள். எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக ‘ஜாதிக்கட்டு’ என்பதன் பெயரால் ஒரு தீர்மானத்தை அக்கணமே நிறைவேற்றினார்கள்; அதை ஓர் ஏட்டில் எழுதினார்கள்; கஅபா ஆலயத்தில் அதைக் கட்டித் தொங்கவிட்டார்கள்.

“இதனால் சகல மக்கா வாழ் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஹாஷிம் குலத்திலும் அவருடைய மைந்தர் முத்தலிபின் குலத்திலும் தோன்றியிருக்கும் சகல சந்ததியார்களும்—அவர்கள் ஆண்களே யாயினும் பெண்களேயாயினும் குழந்தைகளேயாயினும் நமது சமூகத்தின் கடுமையான துரோகிகள் ஆவர். அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் வைத்துக்கொள்வதோ, கொள்வினை கொடுப்பினை நிகழ்த்துவதோ அறவே தகாது. அவர்கள் இன்றுமுதல் நம் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்; தள்ளி வைக்கப்பட்டுள்ளார்கள். இத் தடையுத்தரவை மீறி அவர்களுடன் சகவாசம் கொள்ளும் எவனாயிருந்தாலும், எவளாயிருந்தாலும் ஈவிரக்கமின்றித் துண்டு இரண்டாகக் கிழித்தெறியப்படுவார்கள். உஷார்!”

பகிரங்கப் போர்ப் பிரகடனத்தின் முன்னோடியே இந்தப் பகிஷ்காரத் தீர்மானம் என்பதை நபி வம்சத்தினர் யாவரும் புரிந்து கொண்டு விட்டார்கள். இனியும் தொடர்ந்து ஒரு நிமிட நேரமேனும் மக்காவில் குடியிருந்தால் நிச்சயம் கேடுகாலந்தான் வந்து விடியுமென்று தேர்ந்து, எல்லா பனூ ஹாஷிம்களும் பனிமுத்தலிபுகளும் பல இடங்களிலும் பரவிக்கிடந்த தத்தம் கூடாரங்களைச் சுருட்டிக்கொண்டு, வீடுகளைக் காலி செய்து விட்டு ஒரு மொத்தமாக ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். அந் நகரின் கிழக்கு வெளியில் அபூத்தாலிபுக்குச் சொந்தமான நீண்ட, ஒடுக்கமான காலி மனையொன்று இருந்தது. அது ஒரு குன்றின் சரிவில் ஒடுக்கமாகப் பல பாறைகளுக்கிடையே, நகரின் கோட்டைச் சுவரை ஒட்டி ஒதுங்கியிருந்த கணவாய் ஆகும். அங்கே உள்ளே சென்று நுழைவதற்கு ஒரு சிறு குறுகலான வழிப்பாதை மட்டுமே அமைந்திருந்தது. இந்தக் கணவாய் ஷுஅபு அபீதாலிப் (அபூத்தாலிபின் கணவாய்) என்று அழைக்கப்பட்டது. நபியின் எல்லா உறவின் முறையாளர்களும் அந்தத் திறந்தவெளிச் சிறையில் புகுந்து மறைந்து கொண்டார்கள். நபியின் பெரிய தந்தை அபூலஹப் மட்டும் சுதந்திரப் பறவையாக மக்கா நகரில் கஅபா ஆலயத்தின் எதிரிலேயே பெருமையுடன் வாழ்ந்து வந்தான்.

நபியவர்களும் அவர்களுடைய குலத்தினர்களும் கணவாய்க்குள் அடைபட்டுவிட்டாலும், பனூஹாஷிம் இனத்தைச் சேராத, இஸ்லாம் மதத்தை ஏற்றிருந்த வேறு குலத்தினர் மக்கா நகரில்தான் இருந்தார்கள். இந்த ‘ஜாதிக்கட்டு பகிஷ்காரம்’ மூன்றாண்டுகள் வரை நீடித்தது. பெருமானாருக்கு நபிப் பட்டம் வந்த பத்தாவது ஆண்டிலேதான் (கி.பி. 169) இத் தடை நீங்கிற்று.

ஒதுக்கப்பட்ட இனத்தினராகவும் பயங்கரக் கைதிகள் அடையும் தண்டனையை அனுபவித்தவர்களாகவும் ஒடுக்கப்பட்டுவிட்ட இந்த வமிசத்தார்கள் தங்களுடன் கொண்டு சென்ற உணவுப்பண்டங்களைத் தின்று தீர்த்தபின் வறுமையில் உழன்றார்கள். பசியால் சிசுக்கள் கதறியழுத ஓலம் கணவாய்க்கு வெளியிலும் கேட்டது. நிரபராதிகளான இம் மக்கள்மீது கொஞ்சம் கனிவுடன் நடந்து கொண்ட உத்தமர்கள் சிலரும் மக்காவில் இருக்கத்தான் செய்தார்கள். கள்ளத்தனமாக அவர்கள் இருள் இரவில் கணவாய்க்கு வந்து உதவிகளைச் செய்தார்கள்; உணவுப் பண்டங்களை வழங்கிச் சென்றார்கள். ஆனாலும், நாம் முன்பே கூறியுள்ளபடி, மக்காவாசிகள் வருடத்தில் 4 மாத காலங்களில் எந்தப் போரும் நிகழ்த்துவதில்லை; கொடுமைகளை இழைத்து வலுச் சண்டையில் ஈடுபடுவதில்லை என்னும் நியதியைக் கடைப்பிடித்து வந்த காரணத்தால், அந்தப் பாதுகாப்பான நாட்களில் ஹாஷிம் குலத்தினர் கணவாயிலிருந்து வெளியேறி, நகருள் பிரவேசித்து, தங்கள் தேவைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொண்டார்கள். அதே நேரத்தில் நபி பெருமானார் அவர்களும் மக்களிடைத் தோன்றி, தமது வழக்கமான சத்தொழுக்கப் பிரசாரத்தை நிகழ்த்தி வந்தார்கள். அந்த அமைதிக் காலத்தில்தான் வெளியூர்களிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களையெல்லாம் சந்தித்து நபியவர்கள் போதனைகளை வழங்கும் போதெல்லாம் அவர்களுடைய பெரியப்பன் அபூலஹபும் தொடர்ந்தே செல்வான்.

“இந்தப் பித்துக்கொள்ளி வேறு யாருமல்ல. என் தம்பி அப்துல்லாஹ் பெற்ற செல்லப்பிள்ளை இது. பெரும் புளுகு புளுகுவதில் இந்த முஹம்மது மன்னன்! நீங்கள் இந்தப் பிரசாரங்களுக்குச் செவி சாய்த்தால் உங்களுக்கும் பைத்தியம் பிடித்துவிடும். எனவே, ஒதுங்கிச் செல்லுங்கள். நாங்கள் இதற்காகத்தான் ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருக்கிறோம். இந்தப் புனிதமான உற்சவ நாட்களில் இது கட்டு அவிழ்த்துக் கொண்டு வந்து திரிகிறது!” என்றெல்லாம் அபூலஹப் நிழல்போல் தொடர்ந்து சென்று எதிர்ப் பிரசாரம் செய்துவந்தான்.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் ஹிஷாம் இப்னு அம்ரு என்னும் ஒரு சாத்விக புருஷர் மக்காவின் குறைஷிகளுக்கும், ஹாஷிம்-முத்தலிபின் சந்ததியார்களுக்குமிடையே சமாதானத்தை உண்டு பண்ணிவிட வேண்டும் என்று கருதினார். குறைஷிகுலத் தலைவர்களுள் ஒருவனாகிய அபூஉமையா என்பவனின் வாலிப வயதினரான மைந்தர் ஜுபைர் என்பவரை ஹிஷாம் மெல்ல அணுகினார்.

“மக்கா நகர் இதுவரை கண்டிராத பரம உத்தமர் முஹம்மது. நம் யாவரின் நல்லபிமானத்துக்கும் பாத்திரமானவர். அல் அமீன் என்னும் நற்சான்றிதழ் வழங்கப்பெற்றவர். ஓருயிர்க்கும் தீங்கு நினையாதவர். இப்படிப்பட்ட நற்குண சிகாமணியையும் அவருடைய கிளையார்களையும் நாம் நம்மிடையேயிருந்து விரட்டியடித்ததைவிட வேறு அவமானம் இருக்க முடியுமா? இது என்ன அக்கிரமம்!” என்று பேச்சைத் தொடங்கினார் ஹிஷாம்.

ஜுபைர் சற்றே சிந்தித்தார். ஒன்றும் பேசாமல் ஹிஷாமை அழைத்துக் கொண்டு, மற்றும் சில வாலிபர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கஅபாவுக்குச் சென்றார். ஜாதிக் கட்டுப்பாடு வரையப்பட்ட தஸ்தாவீஜ் எங்கே இருக்கிறதென்று இவ் வாலிபக் குழு எல்லா மூலைகளையும் துருவிற்று. கறையான் அரித்து, பூச்சிகள் அரித்து, பல இடங்களில் துளை விழுந்து, பாதிக்குமேல் உதிர்ந்துபோய், உயரத்தில் தொற்றிக் கொண்டிருந்த அந்த ஏட்டை அவர்கள் எக்கிப் பறித்தார்கள். மூன்றாண்டுகளாக மக்கிப் போயிருந்த அந்த மிச்ச துண்டுக் காதிகதமும் பொடி பொடியாய்த் தூளாகிக் காற்றிற் பறந்து விட்டது.

“கட்டுப்பாடாவது, மண்ணாங் கட்டியாவது? தஸ்தாவீஜுதானே பஸ்பமாகிவிட்டது. விடுதலை, விடுதலை! பனூ ஹாஷிம்கள் யாவர்க்குமே விடுதலை!” என்று அந்த வாலிபர்கள் முழங்கினர். மறு நிமிடமே ஷிபெ அபூத்தாலிபிலிருந்து அத்தனை அடைபட்டுக் கிடந்தவர்களும் தலைதெறிக்கும் வேகத்தில் ஓடிவந்து, மக்கா நகரின் தங்கள் பழைய இருப்பிடங்களில் குடியேறிவிட்டார்கள்.

ஏமாளிகளாகிவிட்ட குறைஷிக் கிழவர்கள் திருதிருவென்று விழித்தார்கள். வாலிபர்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சாத வயோதிகரும் உலகிலுண்டோ?

ஜாதிக் கட்டுப்பாடு நீங்கப்பெற்று ஹாஷிம் குலத்தினர் யாவரும் கணவாய்ச் சிறையிலிருந்து வெளியேறி விட்டார்களென்றாலும் நபியவர்களுடன் குறைஷிகள் இணங்கிப் போகவுமில்லை; அல்லது அவர்களைவிட்டு ஒதுங்கி நிற்கவுமில்லை. மறைவாயிருந்த புண் கண்ணுக்கெதிரே காட்சியளித்த கதையாக, மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த புதுமதப் பிரசார ஆர்ப்பாட்டம் இப்போது அதிகரித்துவிட்டதைக் கண்டு அவர்கள் ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment