புறமுதுகிட்டு மக்காவுக்கு ஓடினவர்களுள் பலர், மதீனாவில் கைதிகளாகப் பிடிபட்டிருந்த தங்கள் உறவினர்களை விடுவித்துக் கொள்ள நாடினர்; நஷ்டஈட்டுப் பரிகாரமாகப் பணமும் அனுப்பினார்கள். போர் முடிந்தபின் சமாதான ஒப்பந்தம் எதுவும்

கையொப்பமிடப்படாமலிருந்தும், மதீனா முஸ்லிம்கள் ஆளுக்கு 4000 திர்ஹம் வீதம் நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்று அவ்வக் கைதியையும் கண்ணியமாய் விடுவித்து விட்டார்கள். எந்தத் தொகையும் கொடுக்க முடியாத சில ஏழைக் கைதிகள் வெறுமென விடுதலை பெற்றார்கள். கைதிகளுள் எவரெவர் எழுதப் படிக்கக் கற்றிருந்தாரோ அவர்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பை நபி (ஸல்) வழங்கினார்கள்:

“ஏ கற்றறிந்த புத்திசாலிகளே! உங்களுக்கு விடுதலை வேண்டுமா? அப்படியானால் அதற்கொரு திட்டத்தை நான் தீட்டியிருக்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் ஆசிரியராக ஆகிவிடுங்கள். ஒவ்வோர் ஆசிரியரும் பத்துப் பத்துச் சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். எண்ணிலக்கணம் எழுத்திலக்கணம் கற்பித்து அப் பிள்ளைகளுக்கு இளநிலைக் கல்வியறிவை ஊட்டுவது உங்கள் கடன். இதை எவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக நீங்கள் மக்காவுக்கு திரும்பி விடலாம். நீங்கள் அனாவசியமாகப் படையெடுத்து வந்த பாதகச் செயலுக்கு இதுவே தண்டனை!”

நபியவர்களின் இத் தீர்ப்பைக் கேட்டு அக் கற்றவர்கள் நாணித் தலை குனிந்தனர். தாங்களே கற்றறிந்த புத்திசிகாமணிகள், நபியோ பளளிக்கூடக் கல்வி கற்றிராத பாமரர் என்று இறுமாப்புடன் தருக்கு மனப்பான்மை கொண்டிருந்த அவர்கள் கண் திறந்தார்கள். நபி கைதிகளைப் பிடிக்கிறார்; ஆனால், அவர்களைச் சிறையில் அடைக்கவில்லை — அப்படியொரு சிறைச்சாலையும் இருக்கக் காணோம்! வெற்றி வீரர்களிடம் கைதிகளை ஒப்படைக்கிறார்; ஆனால், அவ் வீரர்களோ தாம் பட்டினி கிடந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தோல்வியாளர்களை வயிறார உண்பிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பத்துப் பேருக்கு எழுத்தறிவித்துவிட்டு உடனே விடுதலையடையலாம் என்னும் மன்னிப்பு வழங்கப் படுகிறது! நஷ்டஈடாகத் தொகை கொடுத்து விடுதலை பெற வேண்டுமென்றால், தலைக்கு 4000 திர்ஹம் (1000 வெள்ளி ரூபாய்) அபராதம் செலுத்தவேண்டும். அவ்வளவு பெரிய தொகைக்கு ஈடாக 10 பேருக்கு கல்வி போதிப்பதே சரி சமமாகிவிடும் என்று இந்த நபி கூறுவதைக் கேட்டு அவ் ‘அறிஞர்’கள் வாயடைத்து நின்றார்கள். “பத்துப் பேருக்குக் கல்வி புகட்டுவது 4000 திர்ஹம்களுக்குச் சமமென்று கருதும் இந்த நபி எப்படிப்பட்ட புண்ணியவானாக இருப்பார்!” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“என்ன! இல்லாத அக்கிரமங்களையும் அழிச்சாட்டியங்களையும் நாம் நெடுவே புரிந்து வந்திருக்கிறோம்! பற்றாக் குறைக்குப் படையெடுத்து வந்தும் ரணக்களரியாக்கியிருக்கிறோம்! பஞ்சமா பாவிகளாகிய நமக்கும் இப்படியொரு சலுகையா? இவர்களுடைய ஸ்தானத்தில் நாம் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்து பழி தீர்த்துக் கொண்டிருப்போம்? இதுவரை கருணை என்றால் இன்னதென்பதையே நாம் கண்டறிந்ததில்லை. இப்போது இந்த முஸ்லிம்களிடமல்லவோ இதைக் கற்றுக் கொண்டோம்!”

பெருவியப்பால் புத்தி கிறுகிறுத்த கைதிகள் அனேகம் பேர்!

நடந்த போரை எண்ணி நபி பெருமான் (ஸல்) கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் சில தோழர்கள் அபூஉஸ்ஸா என்னும் ஒரு கைதியைக் கட்டியிழுத்து வந்து அவர்முன் நிறுத்தினார்கள். அவன் ஒரு முரட்டுக் குறைஷி; சொற்பொழிவாற்றும் நாவன்மை மிக்கவன்; சொல்லின் செல்வன்; உறங்கிக் கிடக்கும் உள்ளத்தையும் சொல் ஜாலங்களால் உசுப்பிவிடும் அசுர சாதனை மிக்கவன்; இஸ்லாத்தின் கொடும் பகைவன்; உரை நடையிலே செய்யுள்களை அவ்வப்போது ஆசுகவியாக யாத்து, முஸ்லிம்கள் மீது காழ்ப்பையும் திருநபி மீது ஏசல்களையும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும் பரத்திவிட்டவன். அவன் மக்காவிலிருந்து புரிந்த சேஷ்டைகள் கட்டிலடங்கா. அபூஜஹல் வைத்திருந்த வாளினும் கூர்மையானது அவனது வசைபாடும் நாக்கு. அவனைக் கண்டதும் நபி (ஸல்) அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.

“இவன் எங்கே இங்கு வந்து சேர்ந்தான்?” — நபி (ஸல்) கேட்டார்கள்.

“படையெடுத்து வந்தவர்களிடையே அவ்வப்போது உற்சாக மூட்டும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி ஊக்கிவிட இவனும் சேர்ந்து வந்தான். களத்தில் பிடிபட்டான்.”

நபி (ஸல்) சற்று யோசித்தார்கள். இவர் எங்கே இவனையும் ஓர் ஆசானாக ஆக்கி, சொற்பொழிவாற்றும் கலையைக் கற்பித்துத் தருமாறு இவனுக்கு வேலை வாய்ப்பைத் தந்து விடுவாரோ என்று தோழர்கள் கவலைப்பட்டார்கள். குறிப்பறிந்து நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, “இவனுக்கென்ன தண்டனை வழங்கலாம்?” என்று ஒரு கேள்விக் குறியைத் தமது வதனத்தில் தோற்றுவித்தார்கள்.

“இறைத் தூதரே! இவன் கொடிய விஷமி, அல்லாஹ் கொடுத்த வாயையும் நாவையும் அசுத்தமிக்க சாக்கடையாக்கிக் கொண்டவன் இந்தப் பாவி. இவன் இஸ்லாத்தையும் தங்களையும், முஸ்லிம்களையும் பேசி ஏசித் திட்டிக் குவித்த சொற்பெருக்குகள் எண்ணில் அடங்கா. எனவே இவனுடைய முன்வரிசைப் பற்கள் இரண்டைப் பாறாங்கல்லால் நொறுக்கி எறிவதே சரியான தண்டனையாகும்,” என்று ஒரு தோழர் யோசனை வழங்கினார்.

“ஆம்! அப்படியே செய்யலாம். பல்லிழந்து பொக்கை வாயானாகி விட்டால், இவனால் அத்துணைச் சரளமாகப் பேசவும் முடியாது; அந்த வாயைப் பார்த்து எவரும் சொக்கிப் போகவும் மாட்டார்,” என்று மற்றவர்களும் ஒத்தூதினார்கள். ஆனால், நபி (ஸல்) என்ன சொன்னார்கள், தெரியுமா?

“இவனுடைய எந்த உறுப்பையாவது நான் அலங்கோலமாக்கிவிட்டால், அல்லாஹ் என்னுடைய அங்கங்களைப் பங்கப்படுத்திவிடுவான். எனவே, இவனுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது!”

இது கேட்டுக் கைதி நிலைதடுமாறி விட்டான். “அல்லாஹ்வின் திருத்தூதரே! அன்பின் களஞ்சியமே! அறிந்தேன் உண்மையை! அடியேனையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்! இந்தப் பாவிக்கும் அந்தப் பாக்கியம் கிட்டுமா? அல்லாஹ் என்னை மன்னிப்பானா?” கதறியழுதான் அவன்.

“மனமார வருந்தி, நல்வழிப்பட்டுத் திருந்தும் எந்த மனிதனையும் இறைவன் மன்னிக்கத் தவறியதில்லை. உம்மையும் அவன் மன்னிப்பான்.” என்று அபயம் அளித்தார்கள் அண்ணல் ரசூல் (ஸல்). (ஆனால், அபூஉஸ்ஸா மீண்டும் பகைவனாகி, பிறகு கொல்லப்பட்டான்.)

இங்கே மதீனாவில் இப்படியிருக்க, மக்காவில் அப்போது என்ன நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அபூஸுஃபியான் தனது வாணிகப் பொதிகளுடனும் 1000 ஒட்டகச் சுமைகளுடனும் மாற்றுப் பாதை வழியாக மக்காவுக்கு வந்து சேர்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எல்லாக் குறைஷிகளும் படை திரட்டினார்களல்லவா? அப்பொழுது அத்தனை தலைவர்களும் வீறாப்புடனும் வெறி பிடித்த ஆத்திரத்துடனும் கூடி, மதீனா முஸ்லிம்கள் மீது இல்லாத அவதூறுகளையும் கற்பித்து ஆத்திரத்தைமூட்டி விட்டார்கள். நபியவர்களின் பெரியப்பனாகிய அபூலஹப் எல்லா முக்கியஸ்தர்களையும் ஒன்றுதிரட்டி, கஅபா ஆலயத்துக்கு அழைத்து சென்றான். சகலவிதமான பூஜை நைவேத்தியங்களும், பலியிடுதலும் நிகழ்த்தியபின் எல்லாரும் சேர்ந்து அந்த ஆலயத்தின் மீது தொங்கும் திரைச் சீலையை ஆளுக்கொரு முனையில் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அபூலஹபும் அபூஜஹலும் வீராவேசத்துடன், “ஏ தெய்வங்களே, தேவதைகளே! எவர் கட்சியில் நியாயமிருக்கிறதோ அவரது கட்சிக்கே நீங்கள் வெற்றி தேடித் தருவீர்களாக! நாங்கள் உங்களையெல்லாம் மகிமைப்படுத்தி நாள்தோறும் உற்சவம் கொண்டாடி வருகிறோம். மதீனாவிலுள்ள புரட்சிக்காரர்களோ கண்கண்ட தெய்வங்களாகிய உங்களை நிந்தனை செய்து வருகிறார்கள். அவர்களுடைய கொட்டத்தை அடக்கவே நாங்கள் இப்போது போரெழுந்து செல்கிறோம். நீங்கள் எங்களுக்குத் துணை நிற்க வெண்டும். தேவிகாள்! நீங்களே எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள்.

எண்பது வயதை எட்டியிருந்த பெரியப்பன் அபூலஹபோ பக்தி பரவசனாகி, தேம்பித் தேம்பியழுதான். சகல எதிரிகளுள்ளும் அதிக வயது முதிர்ந்தவனாகிய அவனே தனது கரத்தால் போர்த் தலைவர்களின் நெற்றியில் திலகமிட்டான்; வாழ்த்துக் கூறினான்; ஆசிர்வதித்தான்.

“நல்ல முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. புறப்படுங்கள் இப்பொழுதே! நேர் வடக்கே செல்லாமல் சற்று வடமேற்கு முகமாக நோக்கிப் படையெடுங்கள்
ஏனென்றால், அந்தத் திக்கில்தான் வெற்றித் திரு நமக்குக் காத்து நிற்கிறது. புறப்படுங்கள்! புரட்சியாளரை வீழ்த்துங்கள்! புதுப்பலம் பெற்றுப் பழைய மதத்தை வேரூன்றச் செய்யுங்கள். என் தம்பி மகனுட்பட அத்தனை துரோகிகளையும் அழித்து விட்டு வாருங்கள். பதினைந்து ஆண்டுகளாக நம்மைப் பிடித்து ஆட்டி வந்த பொல்லாத காலம் இன்றோடு நீங்கட்டும். வெற்றி நமதே! சீக்கிரமே ஜெயசீலர்களாகத் திரும்பி வாருங்கள். இந்த ஆலயம் உங்களுக்கெல்லாம் மகத்தான வரவேற்பளிக்கக் காத்திருக்கிறது.”

இந்த அபூலஹபை மட்டும் மக்காவில் விட்டுவிட்டு, மற்றெல்லாக் குறைஷி வீரத் தலைவர்களும் படையுடன் புறப்பட்டுச் சென்றார்கள். இந்த ஒன்றரைக் கண்ணன் தன்னிரு நேத்திரங்களையும் மூடிக்கொண்டு நீளமான பிரார்த்தனையில் மூழ்கிக் கிடந்தான். சில நாட்களில் அபூஸுஃபியான் அங்கு வந்து சேர்ந்ததும் இவனுடன் சேர்ந்து, மதீனா நோக்கிச் சென்ற சேனை வெற்றியுடன் திரும்ப, பல பலிகளையிட்டு, பூஜை முதலியவை முறைப்படி நிகழ்த்தப்பட்டன.

இரண்டொரு தினங்களில் மக்காவின் வடக்கெல்லையில் புழுதிப் புயல் தோன்றவே, இந்த இரு தலைவர்களும் பூரித்து விட்டார்கள்.

“மதீனாவைத் தரைமட்டமாக்கிவிட்டு, இதோ திரும்பி வருகிறார்கள் நம் பெருமைக்குரிய வீரர்கள்! நாம் எதிர் கொண்டு சென்று அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்க வேண்டும்” என்று கூறி, அவ்விருவரும் குதிரை மீதேறி அத்திசை நோக்கிச் சென்றனர்.

அந்த கூட்டம் அருகே நெருங்கியதும் அபூஸுஃபியான் உற்றுப் பார்க்க, அவர்கள் அத்தனை பேரும் ஜுஹ்ரீகள்!

“தாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டீர்களே, என்னே எமது பாக்கியம்! விஷயம் புரியாமல் முட்டாள்தனமாக மதீனாமீது மோதுவதற்கு இருந்தோம் நல்ல வேளை. தக்க சமயத்தில் நற்செய்தி கிடைத்தது. நாங்கள் திரும்பி விட்டோம்!” என்றார்கள் அந்த ஜுஹ்ரீகள்.

“என்ன! படையிலிருந்து பிரிந்து திரும்பி வந்துவிட்டீர்களா? இது என்ன கூத்து? நம்முடைய சேனை என்ன ஆயிற்று?” — ஆத்திரம் பொங்க அரற்றினான் அபூலஹப்.

“எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் அக்கறையில்லை! எங்கள் தலைவர் மக்காவுக்குள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டார். அதுவே எங்களுக்குப் போதும். சேனையிலுள்ள மற்றவர்கள் மதீனா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பத்றுக்கு இந்தப் பக்கமாக இருக்கும்போதே திரும்பி விட்டோம். எங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது!” என்றார்கள் ஜுஹ்ரீகள்.

தன்னுடைய வமிசத்தை சேர்ந்த அத்தனைபேரும் ஒரு சேதமுமில்லாமல் பத்திரமாக இங்கே திரும்பி வந்துவிட்டதைக் கண்டு அபூஸுஃபியான் அக மகிழ, நபியின் பெரியப்பனோ வயிறெரிந்தான்.

“இந்தத் துரோகிப் பயல்கள் திரும்பிவிட்டதால் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை. அபூஜஹலும் மற்றுமுள்ள மாவீரர்களும் முன்னேறிச் செல்வதேபோதும். அவர்கள் வெற்றியுடன் திரும்பட்டும். பிறகு இந்த ஜுஹ்ரீகள் மீது நாம் பழி தீர்த்துக் கொள்வோம்,” என்று தன்னைத் தானே அவன் தேற்றிக்கொண்டான்.

இது நிகழ்ந்து இரண்டொரு நாட்களில் மக்காவுக்குள் அலறிப் புடைத்துக் கொண்டு கையிழந்த, காலிழந்த, போர்க்களத்தில் பொருளிழந்த குறைஷிப் படைவீரர்கள் வந்து குவிந்தார்கள்.

“என்ன நேர்ந்தது?” என்று அபூலஹப் வினவினான்.

“தொலைந்தோம், தொலைந்தோம்! எல்லாம் தொலைந்து விட்டது, போரில் படுதோல்வி அடைந்துவிட்டோம்!”

“என்ன, தோல்வியுற்றீர்களா? யாரிடம்? சில சுண்டைக்காய்களிடமா? விளக்கச் சொல்லுங்கள்.”

“விளக்கமொன்றும் தேவையில்லை. நம்முடைய தலைவர்கள் அத்தனை பேரும் களத்தில் பலியாகிவிட்டார்கள். பலர் கைதிகளாகப் பிடிபட்டார்கள். கைகாலிழந்து நாங்கள் தப்பியோடி வந்திருக்கிறோம். மதீனா முஸ்லிம்கள் சுண்டைக்காய்கள் அல்லர்; முந்நூற்றுச் சொச்சம்பேர் ஆயிரக் கணக்கான எங்களை அடித்து நொறுக்கிவிட்டார்கள்.”

“சேனைத் தலைவர் அபூஜஹல் என்ன ஆனார்? அவர் பத்திரமாகத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார் அல்லவா?” — அபூலஹப் ஆத்திரம் தொனிக்கும் ஆவலுடன் கேட்டான்.

“ஐயோ! அவரே உருண்டுவிட்டார்! அவருடைய தலையை மதீனாவாசிகள் வெட்டி எடுத்த சென்றுவிட்டார்களே! தலைவர் போனதால்தானே நாங்கள் இப்படிச் சிதறி ஓடி வந்துவிட்டோம்!”

ஆயிரம் பிறைகளைக் கண்ட அபூலஹப் தனது இத்துணை நீண்ட ஆயுட்காலத்தில் அனுபவித்தறியாக வேதனையைப் பெற்றுவிட்டான் காலின் கீழுள்ள தரை கிடுகிடுவென்று ஆடிற்று. கண்கள் சுழன்றன. நாவுலர்ந்தது. மண்டை கிறுகிறுப்படைந்தது. வயிறு புரண்டது.

அங்கேயே அவனுக்குப் பேதி கண்டது. அடக்க முடியாத வேகத்துடன் பின்துவாரத்தின் வழியே வெளியான வயிற்றோட்டக் கழு மலத்துடன் அவனது ஆவியும் சேர்ந்து புறப்பட்டுவிட்டது! வேரறுந்த மரமாகக் குப்புற்று வீழ்ந்தது அந்தப் பிணம்.

திடீரென்று காலரா (வாந்திபேதி) வியாதி கண்டு இவன் செத்துவிட்டானென்று திகிலுற்றுவிட்ட எல்லாக் குறைஷிகளும், அந்த வியாதி தங்களையும் எங்கே தொற்றிக் கொள்ளப் போகிறதோ என்று அஞ்சி மூலைக்கொருவராக ஓடி ஒளிந்து விட்டார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் அறிவிக்கிறார்கள்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: awamiweb.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment