அடுத்து நபியவர்கள் அபூபக்ருவின் (ரலி) இல்லம் சென்றார்கள். “தோழரே! இறுதியாக இறைக் கட்டளை பிறந்துவிட்டது; நான் சீக்கிரமே இங்கிருந்து புறப்படப் போகிறேன்,” என்றார்கள்.

“இறைத் தூதரே! அனைத்துப் புகழும் அவனுக்கே! பத்திரமாக வெளியேறிச் செல்லுங்கள். ஆனால்-”

“என்ன, ஆனால்?”

“ஒன்றுமில்லை. தாங்கள் உயிருடன் இருப்பதே எங்கள் பாக்கியம். எந்த நபியும் பிறந்த மண்ணில் பெயர்பெற்று வாழ்ந்ததில்லை. மக்காவில் அடையாத பெருங்கீர்த்தியை நீங்கள் வெளியுலகில் சென்றுதான் பெறப்போகிறீர்கள். ஆனால், அடியேனும் தங்களுடன் சேர்ந்து ஒன்றாகக்கூடி வரலாமா என்பதே எனது வேண்டுகோள்.”

“என்ன! உம்மைவிட்டு நான் தனியே செல்வதா? இல்லை இல்லை, நீரும் என்னுடன் சேர்ந்தே வரவேண்டும். நாமிருவரும் இணைபிரியா நண்பர்களன்றோ?”

இதுகேட்டு அபூபக்ர் (ரலி) ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

“இதோ வந்துவிட்டேன், வந்துவிட்டேன்! தங்களைவிட்டுப் பிரியா ஒரு தனிப்பெரும் பாக்கியம் பெற்ற அதிருஷ்டசாலி நான். இப்படி ஒரு கட்டம் வரலாம் என்பதை எதிர்பார்த்தே நான் இரண்டு ஒட்டகங்களைப் பல நாட்களாகத் தயாரில் வைத்திருக்கிறேன்.”

பிறகு இருவரும் குசுகுசுவென்று பேசி, ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். 400 கி.மீ. வழிநடைப் பிரயாண தூரத்துக்குத் தாக்குப்பிடிக்க வேண்டிய சவதரிப்புகளை உடனடியாக அபூபக்ர் கவனிக்க முற்பட்டார்.

வெயில் மறைந்தது. இரவு வந்தது. இருள் கவிந்தது. குறைஷிகுலக் கொலைகாரத் தொண்டர்கள் உருவிய வாள்களுடனும் குத்துவாள்களுடனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து கூடினார்கள். நெற்றியை மறைத்த முக்காடு, மோவாயை மூடித் திரையிட்ட போர்வை அங்கி. நெருப்புக் கக்கும் சிவந்த கண்கள். உதிரம் குடிக்கத் துடிக்கும் உதடுகள். புகை கக்கும் நாசித் துளைகள். கொடிய வெறுப்பு மிக்க கடிய பார்வை. இந்த லக்ஷணங்களுடன் அச் சதிக்கூட்டம் நபியின் இல்லம் நோக்கிப் பதுங்கிப் படையெடுத்தது; அவ்வீட்டு வாசலிலும் சுற்றுப் புறத்திலும் அக் கயவர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.

ஆனால், அந்த அயோக்கியர்களுக்கு அந்நேரத்தில் தங்கள் சமூக ஒழுக்கத்திட்டம் திடீரென்று நினைவுக்கு வந்தது. காட்டு அரபிகள் எக்காரணம் பற்றியும் ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒரு எதிரியைக் கொல்லக்கூடாது, ஆனால் அந்தப் பகைவன் வெளியே வரும்போதுதான் கொல்ல வேண்டும் என்பது அவர்கள் வகுத்துக் கொணடிருந்த ஒரு நியதியாகும்.

“தோழர்களே! இங்கேயே பதுங்கியிருப்போம். பொழுது விடிவதற்குள் எப்படியும் முஹம்மது இந்தப் பக்கமாக வெளி வந்துதான் ஆக வேண்டும். அப்போது தீர்த்துக் கட்டிவிடுவோம்! சட்ட விரோதமாக வீட்டுக்குள் நாம் நுழைய வேண்டாம்,” என்று அவர்களுக்குள்ளேயே முடிவு கட்டிக் கொண்டார்கள்; கதவிடுக்கின் வழியே கண்பொருத்திப் பார்த்தார்கள். படுக்கைமீது ஓர் உருவம் படுத்திருப்பது மட்டும் அந்த இருளில் புலனாயிற்று. அனால், அங்குப் படுத்திருந்தவர் அலீ என்பதையோ, அல்லது அங்கே ஒரு மூலையில் அமர்ந்து நபி (ஸல்) அமானிதப் பொருள்களை வரிசைப்படி ஒழுங்குபடுத்தி அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதையோ அக் கழுகுக் கண்கள் அறியவில்லை.

நள்ளிரவு கடந்தது. நபியவர்கள் எல்லா அமானதிப் பொருள்களையும் தனித்தனியே கட்டி, அலீயின் (ரலி) கட்டிலருகில் அடுக்கி வைத்தார்கள்; ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார்கள்; அல்லாஹ்வுக்கு நன்றியறிவித்தார்கள். பிறந்த ஊரைத் துறக்க நேர்ந்ததே என்னுமம் துயரம் நபியவர்களது நெஞ்சத்தை அழுத்திற்று. கண்ணீர் கன்னங்களினூடே வழிந்தோடிற்று. மறு நிமிடமே தம்மைத் தேற்றிக் கொண்ட அவர்கள் மெல்லென நடந்துவந்து, கதவிடுக்கின் வழியே பார்வையை ஓட்டினார்கள்.

வாசற்படிக்கு இருபுறமும் இரு காவலர்கள் கால் நீட்டிச் சுவர்மீது சாய்ந்து கிடப்பதுதெரிந்தது. முன் நிலவுப் பிறை வெளிச்சம் முன்பே மறைந்து விட்டிருந்தது. சுற்றிலும் காரிருள் கம்மிக் கிடந்தது. எங்கும் நிசப்தம். ஆனால், அந்த இரண்டு கொலைகாரப் பயல்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களுடைய ‘கர்ர், புர்ர்’ என்னும் குறட்டைச் சப்தம் காட்டிக் கொடுத்துவிட்டது. நபி (ஸல்) கதவைத் திறந்தார்கள். பொசுக்கென்று வெளியேறி வீதியோரமாதக வந்து நின்றார்கள்.

அங்கு இந்நேரம் வரையில் அயராது பாராபிடித்து நின்ற மற்றக் கொலைகாரர்களும் சற்றுமுன்பு வயிறுமுட்ட உண்டு வந்திருந்த களைப்பாலும், குரல்வளை முட்டக் குடித்துவிட்டு வந்திருந்த சாராயம் சூடேற்றிவிட்ட போதையாலும் கண் சுழன்றபடி தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் எட்டி நாலடி வைத்து, எவரும் ஏதும் அறியாத நிலையில் அபூபக்ரின் இல்லத்துக்குள் போய் நுழைந்து விட்டார்கள். சென்ற 13 ஆண்டுகளாகக் குறைஷி வெறியர்கள் மத்தியில் கிடந்து அவதிப்பட்ட தன்னுடைய தூதரை இறைவன் இப்போது இவ்வாறாக இந்தக் கொலை பாதகர்களின் உருவிய வாள்களுக்குகிடையே நெளிந்து வெளியேறச் செய்து விட்டான்!

அபூபக்ரு (ரலி) சற்று முன்பே தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் ஊழியனிடம் அந்த இரண்டு ஒட்டகங்களையும், மற்றும் பண்டங்களையும் ஒப்படைத்து, மக்காவின் வடக்கெல்லைக்கப்பால் சற்றுத் தூரத்தில் சென்று காத்திருக்குமாறு அனுப்பிவிட்டிருந்தார். எனவே, நபி (ஸல்) வந்ததும் அபூபக்ரு சட்டென்று எழுந்து நின்றார். இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். நபியவர்கள் தெற்கு நோக்கி நடையைக் கட்டினார்கள். இருட்டில் திசை தெரியாமல் நபியவர்கள் நடப்பதாக நினைத்தார் அபூபக்ர்.

“யதுரிப் வடக்கே யல்லவா இருக்கிறது? நான் மக்காவின் வடக்கெல்லையில் அல்லவோ நம் வழிப் பிரயாணத்துக்கான ஆயத்தங்களை நிறுத்தி வைத்திருக்கிறேன்? இப்போது தெற்கு நோக்கி நடக்கிறோமே!” என்றார் அபூபக்ர்.

“எனக்கு அது தெரியும், விளக்கம் பிறகு சொல்கிறேன்.”

மௌனமாக இருவரும் விரைந்து நடந்தார்கள். ஐந்து கிலோ மீட்டர் தூரம் தெற்கே நடந்து முடிவதற்கும், கீழ் வானம் வெளுப்பதற்கும் நேரம் சரியாயிருந்தது; அங்கிருந்த ஒரு மலைக் குகையின் பக்கம் நபியவர்கள் திரும்பினார்கள். குறிப்பறிந்த அபூபக்ர் அதனுள்ளே எட்டிப் பார்த்தார்; வாயிற் சுவரைத் தாவி உள்ளே குதித்தார். அங்கிருந்த தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தார்; கற்பாறைகளில் காணப்பட்ட இடுக்குகளையும் துளைகளையும் கந்தல் துணியால் அடைத்தார். எல்லாம் இருட்டிலேயே நடந்தது. பிறகு நபியும் (ஸல்) உள்ளே குதித்துப் பதுங்கிக் கொண்டார்கள். இந்தக் குகை தவ்ர் (Thaur) என்று அழைக்கப்படும். இது அப்படியொன்றும் பிரமாதமான பந்தோபஸ்து நல்கும் பதிவிடமாக இல்லை. வாசல் அருகிலுள்ள சுவரண்டை எவனும் நின்று சற்றே எட்டிக் குனிந்து பார்த்தால், உள்ளேயிருப்பவர்களை நன்கு பார்த்துவிட முடியும். அப்படிப்பட்ட பந்தோபஸ்து குறைவான பாதி திறந்த ஒரு குழிமாடம் அது. அங்கேதான் ஓர் ஓரமாக இருவரும் ஒட்டி அமர்ந்து கொண்டார்கள்.

அங்கே நபியின் இல்லத்தண்டை நின்ற சதிகாரர்கள் சற்றே உசும்பி, தாங்கள் கொஞ்ச நேரம் மெய்ம்மறந்திருந்த திகிலால், எங்கே ஏமாந்து விட்டோமோ என்று வீட்டுக் கதவிடுக்கு வழியே உற்றுப் பார்த்தார்கள்.

“நல்ல வேளை. முஹம்மது தப்பிவிடவில்லை! கட்டிலின் மீதுதான் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்,” என்று அவர்கள் தங்களையே தேற்றிக் கொண்டார்கள். ஏனென்றால், நபி (ஸல்) எப்போதும் போர்த்துக் கொண்டிருக்கும் அதே பச்சை நிறப் போர்வையைத்தான் அலீ (ரலி) இப்போது போர்த்துப் படுத்துக்கிடந்தார். உருவத்தில் இவர் உயரம் குறைவானவர் என்றாலும், உடம்பை மூடியபடி கட்டிலில் நீட்டிக் கிடந்த இவரை இருளில் எவனும் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை.

பொழுது புலர்ந்தது, நிலமும் தெளிந்தது. அதிகாலைத் தொழுகையை நிறைவேற்ற அலீ (ரலி) மெல்ல எழுந்து, கை கால்களைச் சுத்தம் செய்துவிட்டு, தொழுகை விரிப்பில் நின்று தொழ ஆரம்பித்தார். கதவிடுக்கால் இந்தக் காட்சியைக் கண்ட கொலைகாரர்கள் உயரம் குறைவான உருவத்தையும், வாலிபமான தோற்றத்தையும் கண்டு வியப்புற்று, கிட்ட நெருங்கி உற்றுப் பார்த்தார்கள். அவர் முஹம்மது அல்லர்; அலீயே என்பது பளிச்சென்று தெரிந்துவிட்டது.

நிதானமாகத் தொழுகையை நிறைவேற்றி முடித்துக் கொண்ட அலீ (ரலி) தம்மைச் சுற்றிலும் வந்து நின்ற ரோஷக்காரர்களாகிய அக்கொடியவர்களை அண்ணாந்து பார்த்தார். ஒரு மூர்க்கன் அலீயின் தாடியைத் தாவிப் பற்றி, ஒரு குலுக்குக் குலுக்கி, “எங்கே அந்தத் துரோகி?” என்று கதறினான். அலீ (ரலி) கையை விரித்தார்.

“என்ன! கூண்டுக் கிளி பறந்துவிட்டதா?” என்று கேட்டான் ஒருவன். “இராஜாளியை ஏமாற்றிப் புறா பறந்து தப்பி விடுமோ!” என்றான் மற்றொருவன். எல்லாப் பயல்களுக்கும் புத்தி கிறுகிறுத்து விட்டது. பேசாமல் நின்ற அலீயை வெறுப்புடன் கண்ணோட்டமிட்டுவிட்டு, அந்த ஒன்பது கயவர்களும் அங்கிருந்து காற்றாய்ப் பறந்தனர் திக்குக்கொருவராய்.

“எப்படியும் பிடித்துப் பிய்த்தெறிந்து விடுகிறோமா, இல்லையா, பார்!” என்று சபதமிடுவது போலிருந்தது அவர்களுடைய பாய்ச்சல்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment