தங்கள் மூதாதையர்கள் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் பலதேவதைக் கோட்பாட்டையும் சுவர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசாரி புரோகிதர்களையும் உருவ வழிபாட்டு முறையையும் முஹம்மது ஆதரிக்கவில்லை. அவற்றைத்

தீவிரமாக எதிர்த்து, ஒரு வலுவான எதிர்க் கட்சியையும் உற்பத்தி செய்து வருகிறார் என்பதைக் கண்ட குறைஷிகளுக்கும் மற்ற மக்காவாசிகளுக்கும் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அல்லாமலும், செத்து மண்ணுள் புதையுண்டு மக்கித் தூசுடன் தூசாகக் கலந்துவிட்டவன் இனிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் உயிர்ப்பிக்கப்பட்டு, இறைவனெதிரே நிறுத்தப்பட்டு, கேள்விக் கணக்குக்கு ஆளாவான் என்று இஸ்லாம் போதிப்பதைக் கேட்டுப் பெருநகை நகைத்தார்கள். ‘உலகின் பல்வேறு நடவடிக்கைகளையும் பலப்பல தேவதைகள் கவனித்துவர, அத்தனை பிரச்சினைகளையும் ஒரே கடவுள் எப்படி ஏற்றுச் சமாளிக்க முடியும்?’ என்று அவர்கள அறைகூவினார்கள்.

பெண்மக்களையும் ஆண்மக்களைப் போலவே நடத்த வேண்டும், இரு பாலாருக்கும் இருப்பது ஒரே மாதிரியான ஆத்மாவே என்று கூறுகிற நபிக்குச் சித்தம் கலங்கிவிட்டதென்று அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அவனவன் வல்லமைக்கும் திறமைக்கும் வீரமிக்க தீரத்துக்கும் ஏற்றபடி பிறர் மீது ஆதிக்கம் செலுத்திப் பொருளீட்டுவதிலும் ஆட்சி செலுத்துவதிலும் நியாயமிருக்க, எல்லா மாந்தரும் ஒரே சமமானவர்கள் என்றும் எந்த ஏழை அல்லது பலஹீனன் மீதும் வல்லமை மிக்கவன் தனது கொடுமையான அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடாதென்றும் சரிசமத்துவம் போதிக்கிற இவர் சமூக அமைப்பேயே தலைகீழாக்கிக் குழப்பம் விளைக்க முற்பட்டுவிட்டார் என்று குற்றங் கற்பித்தார்கள்.

‘ஏழையும் பணக்காரனும் எப்படிச் சமமாக முடியும்? வீரனும் கோழையும் எப்படி ஒரே அந்தஸ்தைப் பெற முடியும்? பெண் மக்களைப் பெற்றவன் எப்படித்தான் ஆண் மக்களைப் பெற்ற வீரபுருஷனுக்கு இணையானவனாக விளங்க முடியும்? தேவதைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள வைதிகப் புரோகிதரைக் கைவிட்டால் அந்தத் தேவதைகளும் நம்மைக் கைவிட்டு விடாவா?’ என்றெல்லாம் அவர்கள் எதிர்த்துக் கேட்க முற்பட்டார்கள்.

அமைதியாக வாழ்க்கை நடந்து வரும் சமதாயத்தில் பிளவையும் குழப்பத்தையும் உற்பத்தி செய்துவிடவே இந்தப் புரட்சியை இவர் உருவாக்கி, வீண் கலகத்தையும் ஒற்றுமைக் குலைவையும் உருவாக்கிவிட முற்பட்டிருக்கிறார் என்றார்கள். சிலர் இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்றார்கள்; சிலர் இவருக்குப் பேய் பிடித்து விட்டதென்றார்கள்; மற்றும் சிலரோ இவரொரு தான்தோன்றித் தனமுள்ள சர்வாதிகாரியாகவும் எதேச்சாதிகாரியாகவும் ஆகிவருகிறார் என்றார்கள். இவர் சூனிய வித்தை கற்று, பிறரது அறிவை மயக்கிவிடும் வசனங்களைப் பாடல்களாக ஒப்பிக்கிறாராயைால், அந்தப் போதையூட்டும் சொற்கள் மக்களை வசீகரித்துவிடுகின்றன என்று முடிவு கட்டினார்கள். எனவே, முஸ்லிம்கள் ஓதம் வேத வசனங்கள் என்பன தங்கள் செவிக்குள் விழுந்து தங்கள் அறிவையும் பறித்து விடாதபடிக்குத் தற்காப்பாகக் காதுகளில் தக்கைகளையும் பஞ்சுச் சுருள்களையும் திணித்து அடைத்துக் கொண்டார்கள். இவரைச் சந்தித்து நேராகக் கண்ணோட்டமிட்டால் இவர் தம்முடைய நேத்திரங்களின் கூர்மையைக் கொண்டே மனோவசிய வித்தை புரிந்து கவர்ந்து இழுத்துவிடுகிறார் என்று, இவரையும் இவர் தோழர்களையும் காணும்போது கண்களை இறுக மூடிக் கொண்டார்கள்.

சூரியனைச் சுளகு கொண்டு மறைக்க முடியுமா? பகுத்தறிவுக்குச் சற்றே தருணம் வழங்கிக் கொஞ்சம் சிந்தித்தவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். எனவே, அன்றாடம் ஓரிருவர் தாம் தாமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகப் பகிரங்கமாக அறிவிக்க முற்பட்டார்கள். தந்தைக்கு மாறாகத் தனயனும் கணவனுக்கு மாறாக மனைவியும் மாமனார்க்கெதிராக மருமகனும் அண்ணனுக்கு மாறகத் தம்பியும் இந்தப் புதிய மத சித்தாந்தத்தில் மயக்கமுற்று விலகிச் செல்வதைக் கண்ட குறைஷிகள் பெரிதும் திகிலுற்றுவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எஜமானனுக்குச் சொந்தமாயிருக்கிற அடிமையே கூடப் புரட்சிகரமான இப் புதிய மதத்தை ஏற்று ‘எஜமான் துரோகம்’ செய்கிறதைக் கண்டு ஆத்திரமுற்றுவிட்டார்கள். இனியும் சாத்விகமான தற்காப்புப் பாதைகளில் சென்று புது மதத்தின் புரட்சியைச் சமாளிக்க முடியாதென்று கண்ட பல முரடர்கள் மிகத் தீவிரமான கொடுமைகளையும் சித்திரவதைத் தண்டனைகளையும் வேறு பலாத்காரமான முறைகளையும் அவிழ்த்துவிட்டுத்தான் வெற்றி காண முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

“இப்பொழுது குறைஷிகள் பெரிதும் நிலை குலைந்து விட்டார்கள். முஹம்மது புரிந்து வரும் தீவிர பிரசாரம் ஒரு பொல்லாத புரட்சியை உண்டு பண்ணிவிடத்தான் போகிறதென்பதை அவர்கள் கண்டார்கள்; அவர்களுடைய அதிகாரமும் ஆணவமிக்க கௌரவமும் காற்றில் பறந்துவிடுமென்பதை உணர்ந்தார்கள்; எந்தச் சாமிகளை அவர்கள் கஅபா ஆலயத்தில் நட்டு வைத்துப் பூஜை புனஸ்காரங்கள் நடத்திப் பொருளீட்டி வந்தார்களோ அந்தச் சாமிகளே நொறுக்கி எறியப்பட்டுவிடக் கூடிய பேரபாயம் தோன்றிவிட்டதைப் பார்த்தார்கள். பழைய வழிபாட்டு முறை இப்படியே தொடர்ந்து நீடித்தாலன்றி, தங்கள் கதியே அதோ கதியாகிவிடும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர் வழங்கி வரும் தீர்க்கதரிசனங்கள் மட்டும் நிறைவேறி விடுமானால், அரேபிய நாட்டின் பல இனத்தினரிடையே மிகப் பிரபலமிக்க சிறந்த இனத்தினராக உயர்ந்தோங்கி நிற்கும் அவர்கள் சீக்கிரமே சீர்குலைந்து, இருக்குமிடம் தெரியாமல் மறைந்தொழிய நேரிட்டுவிடும் என்றும் தெரிந்துகொண்டார்கள்… எனவே, மிக அவசரமாக, உடனடியாகத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இப் புதிய புரட்சி இயக்கம் இனியும் வலுவடையா வண்ணம் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள்,” என்று சையத் அமீர் அலீ குறிப்பிடுகிறார்.

குறைஷிகள் தங்கள் பூர்விக மதக் கோட்பாட்டையும், தங்களுக்குள்ள அந்தஸ்தையும் தற்காத்துக் கொள்ளவென்று கடைப்பிடித்த கண்ணராவியான கொடூர இம்சைகள் வரலாற்று ஏடுகளில் பன்னூற்றுக் கணக்கில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் இங்கெடுத்துக் காண்பிக்க நாம் விழைகிறோம்.

மக்கா நகரிலுள்ள ரமலா என்னும் மலைச் சிகரமும் பத்தா என்னும் மணல் மைதானமும் சித்திரவதைக்குரிய சிறந்த தலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பல தெய்வ வழிபாட்டையும் படிமத் தொழும்பையும் கைவிட்டு, உருவிலா ஏக இறைவனை எவரெவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அவர்கள் ஆணேயாயினும் பெண்ணேயாயினும், கொதிக்கிற மணற் பருக்கை மீதும் பாறைகளின் மீதும் கடு வெயிலில் மல்லாத்திக் கிடத்தாட்டப்பட்டார்கள். நா வறண்டு, கடுமையான தாகத்தில் தவிக்கும் கடைசிக் கட்டத்தில் ஒரு கோப்பை பருகும் நீர் வேண்டுமானால், பல தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்ள வேண்டும்; அல்லது செத்து மடிய வேண்டும். சிலர் கடைசி வரை மசியாமல் உயிர்விடுவர்; அல்லது சமயோசிதமாக அப்பொழுது தப்பிப் பிழைத்து வெளியேறி மீண்டும் தொடர்ந்து இஸ்லாத்தைக் கடைப்பிடித்தார்கள்.

பிலால் என்றோர் அடிமை இருந்தார். அவர் புதிய மதத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்காக, அவருடைய எஜமானனாகிய உமைய்யா என்பவன் அவரை நாள்தோறும் உச்சி வெயில் நேரத்தில் பத்தாவுக்கு இழுத்துச் சென்று, சட்டையைக் கழற்றி வெற்றுடம்புடன் கீழே தள்ளி, முதுகுத்தோல் நெருப்பு மணலில் பொறியப் பொறிய, முகம் நடுவானத்திலிருக்கும் சூரிய ஒளி ரேகைகளுக்கு நேரடியாக இலக்காகும்படி செய்து, அவர் புரண்டு நெளிந்து விடாமலிருக்க நெஞ்சின் மீது ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்துவிடுவான். ‘ஒன்று, நீ இப்படியே சாவ வேண்டும்; அல்லது நீ இஸ்லாத்தைக் கைவிட வேண்டும்,’ என்று சொல்லி எட்டி உதைப்பான். கறுப்பு நீகிரோவராகிய அந்தப் பொறுமைசாலி மூச்சுத் திணறச் செய்யும் பாறாங்கல் நெஞ்சை அழுத்த, தாக வறட்சியால் தொண்டை வரள “அஹதுன்! அஹதுன்! — (ஒரு கடவுளே உண்டு; ஒருவனே தேவன்)” என்றே திரும்பத் திரும்பக் கதறுவார்.

இவ்வாறே பல நாள் தொடர்ந்து நிகழ்ந்தது; இறுதியாக அவர் மெலிந்து உயிர் துறக்கும் இறுதிக் கட்டம் வந்தபோது அப் பக்கமாக வந்த அபூபக்ரு (ரலி) இச் சித்திரவதைக் கொடுமையைக் கண்டு மனம் வெதும்பி, உமையாவைப் பார்த்து, “உனக்கு வருத்தம் உண்டு பண்ணும் இந்த அடிமையை நான் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன். இதனால் உன் சஞ்சலமும் தீரும்; உன் அடிமையும் உன்னைவிட்டு நீங்கி விடுவான்,” என்று பேரம் பேசி, விலை நிர்ணயித்து, அந்த அடிமையை வாங்கி, அக்கணமே அவருக்கு விடுதலை வழங்கிவிட்டார்கள்.

யாஸிர் என்பவரும் அவருடைய மனைவி ஸுமைய்யா என்பவரும் தாங்கள் இறுதிவரை இஸ்லாத்தைக் கைவிட முடியாதென்று தீவிரமாகச் சாதித்தார்கள். அவர்களுடைய எஜமானனாகிய அபூஜஹ்லு என்பவன் கடுஞ்சினங் கொண்டான். யாஸிரை நெஞ்சில் உதைத்து மிதித்தே கொன்றான். அவருடைய மனைவி ஸுமைய்யாவோ இன்னம் அவமானகரமான முறையில் கொல்லப்பட்டார்.

உமர் (ரலி) இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் மிகக் கொடிய மூர்க்கராகவும் பழைமையின் தீவிரவாதியாகவும் இருந்தார்கள். அவர்களுடைய வேலைக்காரியாகிய லுபைனா என்பவள் புதிய மதத்தைத் தழுவி விட்டாள் என்று அவர்கள் கேள்வியுற்றார்கள். தம்முடைய பலம் கொண்ட மட்டும் ஓயாமல் அவளை அவர்கள் நொறுக்குவார்கள். கடைசியாகச் சோர்வுற்று, இதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறேன். உன் மீது எனக்கு ஒன்றும் கனிவு பிறந்துவிட்டதென்று நினையாதே. உன்னை அடித்த களைப்பு அதிகமாகி விட்டதால், சற்று ஓய்வெடுத்துக் கொள்ளத்தான் இவ்வளவோடு விடுகிறேன்,” என்று சொல்வார்கள்.

ஏழைகளும், அடிமைகளும், ஆதரவற்றவர்களுமே இந்தக் கொடூரமான சித்திரவதைகளுக்கு அளாகினர் என்றும், பணக்காரர்களும் பிரபுக்களும் புது மதம் தழுவியதால் அவற்றுக்கு இலக்கானதில்லை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். அபூபக்ரு (ரலி) போன்ற செல்வந்தர்கள் விஷயத்தில் இது மெய்யாயிருக்கலாம். ஆனால், முஹம்மதின் (ஸல்) மருமகராக விளங்கிய உதுமான் (ரலி) ஓர் உயர் குலத்தினராயிருந்தும், சமுதாய அந்தஸ்தில் ஓர் உயர்ந்த நிலையை எட்டியிருந்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களுடைய சிற்றப்பர் தாம்புக் கயிறு கொண்டு அவர்களைக் கட்டிச் செம்மையாக அடித்துப் போட்டதும் உண்டு.

ஜுபைர் (ரலி) பேரீச்ச நார்கள் அடங்கிய கட்டில் வைத்துப் பிணைக்கப்பட்டார்கள். அவர்கள் எங்கும் சூழ்ந்திருந்த நெருப்புப் புகை நடுவே கிடத்தப்பட்டார்கள். மூச்சுத் திணறி உயிர் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக எப்படியோ தப்பிப் பிழைத்தார்கள். இம் மாதிரி எத்தனையோ சம்பவங்கள். இவற்றுள் பலவற்றை முஹம்மது (ஸல்) கேட்டறிந்தார்கள்; சிலவற்றை நேரிலேயே கண்டார்கள். சத்தியத்துக்கு முதற்படி தியாகந்தான் போலும் என்று யூகித்தார்கள்; மனங்கசிந்து கண்ணீருகுத்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் கதியே இப்படியென்றால் அச் சத்தியத்தைப் போதித்தவரின் கதி என்ன? அல் அமீன் என்று போற்றிய பலரே இப்போது நபியவர்களை வெறுக்கத் தொடங்கினார்கள். தங்கள் சுயநலம் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செலுத்திவரும் அதிகாரம் பறிபோய் விட்டதே என்று வேதனைப்பட்டவர்கள், ஒரு புதிய சமுதாயத்தை உற்பத்தி செய்து அதன் தலைவராக இவர் உயர்ந்து வருகிறாரே என்று பொறாமை கொண்டவர்கள், இஷ்டம்போல் எப்படியும் தெய்வ வழிபாடு நிகழ்த்திக் கொள்ளலாம் என்னும் சுதந்தரம் பறி போய் விட்டதே என்று ஏக்கங் கொண்ட ஏமாளிகள், சோதிடர்கள், குறி பார்க்கிறவர்கள், சூதாட்ட விடுதிகள் நடத்துபவர்கள், பரத்தையர் இல்லங்களைப் பராமரிக்கிறவர்கள், கொள்ளைக்காரத் தலைவர்கள், பொய் புளுகிக் குறைவாக அளந்தும் நிறுத்தும் விற்கிற வர்த்தகர்கள் முதலிய யாவரும் நபியவர்கள்மீது ஆத்திரமடைந்தார்கள்.

அபூஜஹ்லு என்பவன் முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுகைத் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது, அழுகி நாற்றமெடுத்துக் குப்பை மேட்டில் கிடந்த ஒட்டகத்தின் குடல்மாலையைக் கொண்டுவந்து அவர்களது கழுத்தில் போட்டான். நபியவர்களுடைய பெரிய அப்பாவாகிய அபூலஹபு அவர்களுக்குப் பரம விரோதியாகிவிட்டான். அவன் மனைவியோ நபியவர்கள் நடந்து செல்லும் பாதை நெடுக முள் கட்டுகளைப் பரத்தி வைத்து அவர்களை நடமாட முடியாமல் செய்து வந்தாள். என்ன என்ன வகையில் அவர்களை அவமதிக்கலாம், எப்படி எப்படியெல்லாம் துன்புறுத்தலாம் என்று ஒவ்வொரு விஷமியும் தினமொரு திட்டம் தீட்டி வந்தான். எத்துணைத்தான் துன்பத்துக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டார்கள் என்றாலும், பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அப்பொழுதும் எந்த எதிரியையும் அவர்கள் ஏசியதுமில்லை, சபித்ததுமில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இப்னு ஹிஷாம் என்னும் வரலாற்றாசிரியர் ஒரு நிகழ்ச்சியைப் பின்வருமாறு வருணிக்கிறார்:

ஒருநாள் கஅபா ஆலயத்தில் எல்லா எதிர்த்தரப்பு மூர்க்கத் தலைவர்களும் குழுமியிருந்தார்கள்; அவர்களை விட்டுச் சற்றுத் தொலைவில் நபியவர்கள் தனியே அமர்ந்திருந்தார்கள். ரபீஆ என்பவனின் மகனான உத்பா என்னும் ஒரு குறைஷித் தலைவன் இவரிடம் வந்தான். இவன் கொஞ்சம் எதேச்சையாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்த ஒரு மிதவாதி. “என் சகோதரர் மைந்தரே! உமக்கிருக்கும் சிறந்த பண்பினாலும், நீர் தோன்றியிருக்கும் உத்தமமான குலத்தின் மேன்மையாலும் உயர்வு பெற்றிருக்கிறீர். இப்போது நீர் மக்கட் சமதாயத்தினிடையே ஒற்றுமையின்மை என்னும் வித்துக்களைத் தெளிக்க முன் வந்திருக்கிறீர்; எங்கள் குடும்பத்தினரிடையே இருந்த கட்டுப்பாட்டு ஒழுக்கத்தை நிலைகுலையச் செய்துவிட்டீர். நீர் எங்களுடைய தேவ தேவதைகளை இழிவுபடுத்தி ஏசிவருகிறீர்; எங்கள் முன்னோர்களுக்கெல்லாம் முட்டாள் பட்டத்தைச் சூடுகிறீர். இப்போது உம்முடன் நாங்கள் சுமுகமாக உறவுகொண்டாட விரும்புகிறோம். அதற்காக ஒரு யோசனையையும் வழங்கச் சித்தமாயிருக்கிறோம். அதை நீர் ஏற்றுக்கொள்வது உமக்கே நலமாய் இருக்குமென்பதைச் சற்றே கருதிப்பார்ப்பீரா?” என்று உத்பா வினவினான்.

“வலீதின் தந்தையே! என்ன யோசனை? சொல்லுமே பார்ப்போம்!” என்று நபியவர்கள் கூறினார்கள். அப்பொழுது, வலீதின் தந்தையாகிய, ரபீஆவின் மைந்தனாகிய உத்பா, “நீர் இப்படியெல்லாம் ஒரு புரட்சித் திட்டத்தை உருவாக்கி விடுவதன் மூலம் ஏராளமான செல்வத்தைத் திரட்டலாம் என்று எண்ணியிருந்தால், நாங்கள் அத்தனை பேரும் சேர்ந்து எத்துணைச் செல்வத்தைச் சேகரித்து வைத்திருக்கிறோமோ அதனினும் பெரிய நிதியைத் திரட்டி உமது காலடியில் சமர்ப்பிக்கிறோம். நீர் அதிக கௌரவம் பெறவேண்டும், பெரிய அந்தஸ்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் நாட்டங் கொண்டிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் உம்மையே பெருந் தலைவராக, அதிபதியாக உயர்த்தி விடுகிறோம். உமக்கு நாடாளும் ஆர்வமிருக்குமாயின், உம்மையே எங்கள் மன்னராக ஏற்றுக்கொள்கிறோம். உம்மைப் பிடித்து ஆட்டுகிற பேய் (அல்லது பிசாசு) எந்த மந்திரத்துக்கும் கட்டுப்பட்டு உம்மை விட்டு நீங்க மறுக்கிறதென்றால் அதை ஓட்டி விரட்டுவதில் வல்லவர்களான மந்திரவாதிகளை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து இழுத்துவந்து, அவர்கள் உம்மைக் குணப்படுத்துவதற்கு எவ்வளவு தொகை செலவழிந்தாலும், அது முழுதையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்,” என்றுரைத்தான்.

“நீர் பேச வேண்டியதை யெல்லாம் பேசி முடித்து விட்டீரல்லவா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். ஆமென்று அவன் தலையசைத்தான். “அப்படியானால் இப்போது நான் கூறுவதைச் செவியேற்பீராக. இணையற்ற மாபெரும் கருணாகரனான அந்தப் பேரிறைவனின் பெயரால் நான் கூறுகிறேன். எனக்கு ஞானத்தைப் போதித்து வருகிறவன் அந்தத் தயாநிதியாகிய இறைவனே ஆவான். அவன்  எனக்கு அறிவித்துவரும் அத்தனை திருவாக்கியங்களும் குர்ஆன் என்னும் அராபிய மொழி வேதமாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன. அவன் கூறும் போதனைகளை எவரெவர் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களின் பொருட்டாக அவை வெளி வந்துள்ளன. அதில் நற்செயல்கள் நிரம்பியுள்ளன; வெற்று அச்சங்களை விரட்டியடிக்கும் தன்மையுடன் அவை விளங்ககின்றன. ஆனால், அவர்களுள் பெரும்பாலானோர் கண்களை மூடி முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் அந் நற்போதனைகளைக் கிஞ்சித்தும் லட்சியம் செய்யாததுடன் ‘நீர் எந்தப் பாதையினூடே வழிநடக்க எங்களை அழைக்கின்றீரோ அவ் வழியினூடே செல்ல முடியாதபடி எங்களுக்கு நாங்களே திரையிட்டு மூடித் தடுத்துவிட்டிருக்கிறோம். எங்கள் செவிகளோ செவிடுபட்டுக் கிடக்கின்றன. எங்களுக்கும் உமக்குமிடையே தடுப்புச் சுவரொன்றை எழுப்பிவிட்டிருக்கிறோம். எனவே, உமக்கு எது உசிதமாகப்படுகிறதோ அதன்படியே நீர் நடந்து கொள்வீராக; ஏனென்றால், எங்கள் இஷ்டப்படியும் மனப்போக்கின்படியுமே நாங்கள் ஒழுகிக்கொள்வோம்’ என்றும் சவால் விடுக்கிறார்கள். ‘நானும் உங்களைப் போன்ற ஒரு (சாதாரண) மானிடனே. உங்கள் எல்லார்க்குமே ஒரே இறைவன்தான் உண்டென்று போதிக்குமாறு நான் அவனால் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். எனவே, உங்களுக்கு உண்டான நேர்வழியை அவனை எல்லையாகக் கொண்டு ஒழுங்கு நியதியுடன் வகுத்துக் கொள்ளுங்கள். அறியாத்தனத்தால் நீங்கள் முன்பு இழைத்துவிட்ட பாவங்களுக்குப் பச்சாத்தாபப்பட்டு, அவனிடமே மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். விக்கிரஹத்தை நட்டு வைத்துப் பூசிக்கிறவர்கள் நாசமாய்ப் போகக் கடவர்! ஏனென்றால், அவர்கள் தர்ம நியதிப்படியான தானங்களை ஈவதில்லை. பின்னொரு காலத்தில் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்பதில் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால், எவரொருவர் நன்னம்பிக்கை கொண்டு, முற்றும் நேர்மையுடன் ஒழுகிக் கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக இறைவனிடம் நற்கூலியையும் வெகுமதியையும் பெற்றுக் கொள்வார். —இதுதான் நான் உமக்குக் கூறும் பதில். உம்மிஷ்டம்போல் செய்து கொள்வீராக,” என்று நபியவர்கள் கூறிவிட்டார்கள்.

அக்காலத்து அராபியர் வந்த விருந்தினரை மனமார உபசரிப்பார்களென்றாலும் தர்மமாக எந்த ஏழைக்கும் அரைக் காசும் ஈயமாட்டார்; எண்ணற்ற சாமிகளுக்குச் சிலையெழுப்பிச் சிரம் சாய்ப்பரன்றி, உருவமிலா எங்கும் நிறைந்த ஒரே இறைவன் இருக்கிறானென்றோ, அவனை வழிபட வேண்டுமென்றோ கனவிலும் கருதமாட்டார். செத்து மடிந்து மண்ணாகிப் போனவன் பின்னொரு காலத்தில் உயிரூட்டப்பெற்று நீதி வழங்கப் பெறுவான் என்பது வெறும் பாட்டிக் கதை என்று எள்ளி நகையாடுவர். இப்படிப்பட்ட மனப்போக்குடைய ‘தலைவர்கள்’ கூடியிருந்த இடத்தில் நபியவர்கள் அப்படிப்பட்ட உபதேசத்தை உதிர்த்தவுடன் அவர்களுக்குக் கடுங் கோபம் பொத்துக் கொண்டு விட்டது. அவரைத் திட்டினார்கள்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

 

Related Articles

Leave a Comment