அந்த மிதவெப்ப நன்னகருள் நபிபெருமான் (ஸல்) காலடி வைத்ததும், அவ்வூர்ப் பிரமுகர்கள் யார் என்று கேட்டறிந்தார். மூன்று சகோதரர்கள் வசித்த ஒரு மாளிகையைச் சிலர் சுட்டிக் காண்பித்து, “இவ்வூர்ப் பெருந்தனக்காரர்கள்,

கண்ணிய புருஷர்கள் இங்கேதான் வசிக்கிறார்கள். இவர்களே நாட்டாண்மைக்காரர்கள். இவர்களிடம் எல்லாரும் வந்து உதவி பெற்றுச் செல்கிறார்கள்,” என்று தகவல் அறிவித்தார்கள். நபி (ஸல்) அந்தப் பிரமுகர்களிடம் சென்றார்கள். ஆனால், அவர்களோ அவ்வூரிலிருந்த பயங்கரக் காளிகோவில் போன்ற ஒரு பெரிய ஆலயத்தின் நிர்வாகிகள்; உருவ வழிபாட்டில் ஊறிப்போனவர்கள்; தங்கள் தேவதையே கண்கண்ட தெய்வமென்று வணங்குபவர்கள்.

இப்படிப்பட்டவர்களை நெருங்கி, “ஒரே இறைவன்தான் உண்டு. அவனுக்கு உருவமில்லை; எங்கும் நிறைந்தவன். இச் சுபச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கவே அவன் என்னைத் தூதனாக அனுப்பியிருக்கிறான்,” என்று நபியவர்கள் சொன்ன மாத்திரத்தில் அவர்கள் கடுங்கோபங் கொண்டு விட்டார்கள். தங்கள் வீட்டு வாசலிலும் நபியவர்கள் நிற்கக்கூடாது என்று தள்ளிக் கதவைத் தாழிட்டு விட்டார்கள்.

பெரிய மனிதர்கள் இப்படித்தான் ஆணவத்துடன் நடப்பார்கள்; ஆனால், சாமானியர்கள் சற்றே பொறுமையுடன் செவிமடுப்பார்கள் என்று நபி (ஸல்) தம்மைத் தேற்றிக்கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சில சாதாரண மக்களை விளித்து உபதேசம் புரிந்தார்கள்.

“இவ்வளவு பிரமாதமாக நீர் இங்கு வந்து போதிக்கிறீரே! உங்களூர்வாசிகளை ஏன் உம்மால் திருத்த முடியவில்லை?” என்று ஒருவன் கேட்டான்.

“உள்ளூரில் விலை போகாத சரக்கை தூக்கிக்கொண்டு இந்தக் குருவும் சீடனும் இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள் போலும்!” என்று கிண்டல் செய்தான் ஒருவன்.

இப்படியே ஒவ்வொரு முரடனும் ஒவ்வொரு விதத்தில் நபியைப் பரிகசித்தான். சிலர் ஏசினார்கள்; சிலர் பயமுறுத்தினார்கள். எனினும், நபியவர்கள் மனம் தளரவில்லை. பத்து நாட்கள் வரை தொடர்ந்து அவ்வூரில் தங்கியிருந்து சத்பிரசாரம் புரிந்தார்கள். தாயிஃப் நகரவாசிகள் பொறுமையிழந்தார்கள். தங்கள் தெய்வத்தைக் கைவிடச் சொல்லுகிற இவர் ஒரு கெட்ட புத்தி படைத்தவர் என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். சும்மா சொன்னால் கேட்கமாட்டார் என்று வன்முறைச் செயலலில் அவர்கள இறங்கினார்கள்.

“நீர் உம்முடைய ஊரைவிட்டு வந்து இங்கே எங்களிடம் அடிபட்டுச் சாவ விரும்புகிறீரா? அல்லது தப்பிப் பிழைத்துப் பத்திரமாகப் போய்ச் சேர விரும்புகிறீரா? உம்முடைய உயிர்மீது உமக்கு அக்கறையிருந்தால் இந்த நிமிடமே இங்கிருந்து ஓடிவிடுவீராக!” என்று அந் நகர்வாசிகள் இறுதி எச்சரிக்கையையும் பிறப்பித்து விட்டார்கள்.

“இறைவா! இதுவே நினது திருவுளச் சித்தம்போலும்!” என்று நினைத்தவாறே நபி (ஸல்) எழுந்து நடந்தார்கள். கூட்டத்திலிருந்து ஒரு கூரிய கருங்கல் விர்ரென்று பறந்து வந்து அவர்களுடைய குதிக்காலைப் பதம் பார்த்துவிட்டது.

ஸைதும் நபியும் வேகமாக நடையைக் கட்டினார்கள். அவர்கள் நகரின் எல்லையக் கடக்கும்போது ஊர்ப் பிரமுகர்கள் விஷமிகளையும் சிறுவர்களையும் ஜாடை காண்பித்து ஏவிவிட்டார்கள். அந்தப் பொல்லாத மூடர்கள் நெடுந்தூரத்துக்குச் சாலையின் இரு மருங்கிலும் அணிவகுத்து நின்று கொண்டார்கள். ஏளனமாகக் கைபுடைத்து, ஏசல் மாலைகளைப் பலாக்கணம் பாடி, எல்லோரும் பெருங் கூக்குரலிட்டார்கள்; எள்ளி நகைத்தார்கள். அவர்கள் மடியில் கட்டி வந்திருந்த கற்கள் ஒவ்வொன்றாய்ப் பறந்தன. ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும ஒவ்வொரு கல் குறிதப்பாமல் அவரது பாதங்களில் விழுந்து புண்ணாக்கிற்று. உதிரம் ஆறாய்ப் பெருக்கெடுத்தது. மேற்கொண்டு ஓரடியும் எடுத்து வைத்து நடக்க இயலாத நிலைமை வந்தது. நபியவர்கள் வேதனை தாங்காமல் நடு வீதியில் குந்திவிட்டார்கள்.

ஒரு கயவன் பாய்ந்து அவர்களைப் பற்றித் தூக்கி நிறுத்தி, “நட, நடந்து கொண்டேயிரு! இங்கு உட்காராதே! உன்னைப் போன்றோர் தங்கி இணைப்பாறும் இடமா இது?” என்று சீண்டினான். நின்று நெளிந்த பாதத்தின்மீது மீண்டும் கன்மாரி பொழிந்தது. தொடர்ந்து மூன்று மைல் நீளத்துக்கு இந்தக் கொடுமை நீடித்தது. காலணி கழன்றுவிட்டது. ஏனென்றால், அதுவே உதிரப் பெருக்கால் இற்றுப் போய் விட்டது. ரணக்களறியாகிவிட்ட பாதம் நோவ அவர் பக்கத்திலிருந்த ஒரு பழத்தோட்டத்துக்குள் நொண்டி நொண்டி நடந்து சோர்பு மிகுதியால் படுத்துவிட்டார்.

துரத்தி வந்த காலிப்பயல்களின் கல்லாயுதங்கள் தீர்ந்து போயினமையாலோ, அல்லது களைப்பினாலோ திரும்பிச் சென்றுவிட்டார்கள். இனி இவர் இந் நகரின் பக்கம் காலடியும் எடுத்து வைக்கமாட்டார் என்னும் பரம திருப்தி அவர்களுக்கு! இத்தனை உபத்திரவங்கள் விளைத்த ஒரே ஒருவனைக்கூட அந்த வேதனைமிக்க வேளையிலும் நபிபெருமான் ஏசவுமில்லை, அல்லது சபிக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால், அந்த நபி தமது வாழ்நாளில் எவனையும் எச்சந்தர்ப்பத்திலும் வெறுத்துத் திட்டியதே கிடையாது என்பதுதான் சரித்திரம் கண்ட உண்மை.

அவர் பழத் தோட்டத்தில் சற்று ஓய்வெடுத்து எழுந்தமர்ந்தார். அந்தச் சிறு தோட்டம் உத்பா இப்னு ரபீஆ என்பவனுக்குச் சொந்தமானது. அவன் இஸ்லாத்தை ஏற்காத ஓர் எதிர் மதக்காரனாக விளங்கினானென்றாலும், அச் சமயம் கொஞ்சம் கருணை கொண்டான். எனவே, நபியவர்கள் மீது அவன் சற்றே இரக்கங்கொண்டு, வெகு விரைவாகச் சில திராட்சைப் பழக்கொத்துகளைப் பறித்து, தம்முடைய அடிமை அத்தாஸ் (Addas) என்பவர் மூலமாக அனுப்பி வைத்தான். இந்த அடிமை ஒரு கிறித்தவர். இவர் நபிபெருமானிடம் பழத்தை நீட்டியபோது, “பிஸ்மில்லாஹ்! – (அல்லாஹ்வின் பெயரால்)” என்று சொல்வதைக் கவனித்தார். இதுவரை கேட்டிராத இந்த உச்சரிப்பைச் செவிமடுத்த அவர் நபியவர்களிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.

“நாங்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் இக் காப்பு வாசகத்தைத் தவறாமல் உச்சரிப்போம்,” என்று சுருக்கமாக நபியவர்கள் விடையீந்தார்கள். அவர் பசியாறி முடிகிற வரை காத்திருந்த அத்தாஸ் மேலும் விளக்கங்களைக் கோரவே, திருநபியும் அக் கிறித்தவருக்கு இஸ்லாமிய கோட்பாட்டை விளக்கிச் சொன்னார்கள். இதைக் கேட்டு அவர் உடனே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கல்லடிபட்டு நொந்த உள்ளத்துடன் வேதனைப்பட்ட பொழுது நபியவர்கள் என்ன பிரார்த்தித்தார்கள் என்பதை ஸைது (ரலி) இவ்வாறு நமக்கு அறிவிக்கிறார்:

“என் ரக்ஷகா! எனக்கிருக்கும் பலஹீனத்தைப் பற்றி நான் உன்னிடம்தான் முறையிட முடியும். எனக்கோ செல்வமுமில்லை, செல்வாக்குமில்லை. எனவே, மக்களின் கண்ணெதிரில் ஓர் அற்பனாக நான் காட்சியளிக்கிறேன். ஆனால், நீயோ அருள்மிக்கவர்கள் அனைவரையும் மிகைத்து நிற்கும் பெருங் கருணாகரன்; ஏழை எளியோர்க்குத் தஞ்சம் வழங்கும் தயாநிதி. நீ எவர் கையில் என்னை ஒப்படைக்க நாடியிருக்கிறாய்? சீறிப் பாயும், கொஞ்சமும் நெஞ்சிரக்கமில்லாத ஒரு கொடும் பாதகனிடமா? அல்லது எனது நடபடிக்கைகளை ஒழுங்காய் நிறைவேற்றத் துணைபுரியம் ஓர் அத்தியந்த நண்பனிடமா? நீ எந்த நேரத்திலும் எந்தச் சமயத்திலும் எனக்குப் பாதுகாப்பைத் தந்து ரட்சிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து மேலதிகமாக உன்னிடம் நான் ஏதும் எதிர்பார்க்கவில்லை. நினது பேரொளியானது விண்ணுலகில் மின்னுகிறது; காரிருளை யெல்லாம் ஓட்டி விடுகிறது. அப்படிப்பட்ட ஜோதிச்சுடராகிய நின் வதனத்தில் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன். நீயே இவ்வுலகின் அனைத்து விவகாரங்களிலும், மறுவுலகின் சகல சம்பவங்களிலும் பேராண்மை செலுத்தி வருகின்றாய். நினது கடுங் கோபத்துக்கு அடியேனை இரையாக்கி விடாதே! அல்லது நினது சினத்தை என் மீது காண்பித்து விடாதே. நினையலால் சக்தியோ, சாமர்த்தியமோ, வல்லமையோ மிக்கவர் எவரே உளர்?”

‘பொய் வேடமிட்டுத் திரியும் கபட நாடகதாரி’ என்று எதிரிகள் பெயரிட்டழைத்த அப்பெருமானாரின் வாயினின்று வெளிப்போந்த இப்பிரார்த்தனையின் பெருமையை அவர்கள் எங்கே அறிவார்கள்? ஒரு வேஷக்காரரின் சொற்களா இவை?

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment