வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 7

(அச்வினா) ஓ, ஸ்திரீ புருஷர்களே! (தேவரம் விதவேவ) விதவையானவள் தன்னுடைய இரண்டாவது புருஷனுடனும் (யோஷா) கல்யாணமான ஸ்திரீ ஒருத்தி (மார்யன்) தன் புருஷனுடனும் (சதஸ்தே) முறையே படுக்கையில் படுத்துக்கொண்டு (ஆ கிருனுடே) குழந்தைகளைப் பெறுவதுபோல், நீங்களும் செய்யவேண்டியது,” என்னும் ருக்வேத மந்திரங்களை (ருக். 10. 4. 2., ருக். 18.8.) மேற்கோள் காட்டிப் பிறகு தயானந்தர், “நியோகத்தினால் விதவை ஒருத்தி ஒருவனிடம் சேர்ந்து சந்ததிகளையடையலாம்,” என்று எழுதியிருக்கிறார் (சத்தியார்த்த பிரகாசம் அத்தியாயம் 11).

விதவையாய் விட்டவள் தன்னுடைய துரதிருஷ்ட வைதவ்யத்தைக் கண்டு கவலை கொள்ளாமலிருக்கும் பொருட்டு இப்படிப்பட்ட தைரியம் ஊட்டப்படுகிறாள். விதவையான பின்னால் 11 புருஷர்கள்வரை மனமாரக் கட்டித் தழுவக்கூடிய கட்டளையானது ஆரியரின் வேதத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அவள் இறந்துபோன தன்னுடைய ஒரே புருஷனுக்காக ஏன் வருந்தவேண்டுமோ தெரியவில்லை. ஆதலின், தாலி கட்டிய புருஷனுடன் பலவகை ஜவாப்தாரித் தனத்துடன் வாழ்ந்து துக்கப்படுவதைக் காட்டினும் விதவையான பின்பு பல புருஷர்களிடத்தும் எவ்வகை ஜவாப்தாரித்தனமுமில்லாமல் கூடிவாழ்வதற்குரிய வேதப்பிரமாணம் அவளுக்கிருக்கும்போது, ஏன் அவள் தன் இறந்த புருஷனை நினைத்து நினைத்துத் துக்கித்தல் வேண்டும்? ஆனால், அதற்கு மாறாகப் பல புருஷர்களிடத்தும் கூடிவாழலாமென்னும் குதூகலத்தினால் அவள் தன்னுடைய விவாக புருஷனின் மரணத்தை அதிக ஆவலுடனே எதிர்பார்க்கக் கட்டுப்பட்டிருக்கிறாள். கபீர்.

வினா:- ஒரு மனிதனுக்கு இளைய சகோதரன் இல்லாவிடில் விதவையானவள் யாருடன் நியோகம் செய்யலாம்?

விடை:- தேவர் என்றழைக்கப்படும் தன்னுடைய இரண்டவாது புருஷனுடன். தேவர் என்னும் வார்த்தைக்கு நிருக்த பிரகாரம் அர்த்தம் யாதெனில்: (ஈண்டு நிருக். 3.15 ஆதாரம் காட்டப்பட்டிருக்கிறது) தன் புருஷன், புருஷனுடைய மூத்த சகோதரர், இளைய சகோதரர், அதே குலத்தைச் சேர்ந்தவர் யாராயிருந்தபோதினும் சரி, ஒரு விதவையின் இரண்டாம் புருஷனுக்குத் தேவர் என்று பெயர்.”

இவ்வாறிருக்க, சுவாமி தயானந்தர் பிராம்மணர்களுக்கு மட்டும் ஏன் ஒரே விவாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்? பிராம்மண மாதர்கள் தங் குலத்தாருடனும், க்ஷத்திரிய ஸ்திரீகள் பிராணம்மணர்களுடனும் நியோகம் செய்துகொள்ளலாமென்று அனுமதியளித்திருக்கும் சுவாமிஜீ ஏன் அந்தப் பிராம்மணர்களுக்கு “விவாகம்” என்பதை ஒன்றாகவே மட்டுப்படுத்தி யிருக்கிறார்? இரண்டாமுறை விவாகம் செய்துகொள்ள அனுமதி கிடைக்கப்பெறாத பிராம்மணன் தன் குல ஸ்திரீயுடனும் தன்னினும் கீழ்ப்பட்ட ஸ்திரீகளுடனும் நியோகத்தால் சங்கலீகாணம் செய்வது தவறன்று போலும்! ஒவ்வோர் ஆண் பெண்ணும் 11 நபர்வரை மாறிமாறி நியோகம் புரியுங்கால் ஸ்திரீபுருஷ சம்சர்க்கத்தில் ஒன்றும் குறைவில்லை. ஆனால், மறு“விவாகம்” என்னும் பதம்மட்டுமே தயானந்த் மஹாராஜுக்குப் பிடிக்கவில்லை போலும்! ஆனால், “விவாகம்” என்னும் பெயரைச் சொல்லாமல் ஆடவரும் பெண்டிரும் அனேகம் ஸ்திரீ புருஷர்களிடம் கூட்டுறவு செய்து கொள்வது நியாயந்தான் போலும்!

ஆரியர் வேதத்தில் முன் கூறப்பட்டதேபோல் எட்டுவிதமான விவாகங்களும் விவாகங்களென்று கூறப்படும்போது, 11 வகை நியோகத்தையும் ஏன் விவாகமென்றே கூறிவிடுதல் கூடாது? ஆளை அபகரித்துக்கொண்டு போய்விடுவதும் தனி இடத்தில் கண்டு சேர்த்துக்கொள்வதும் ஏதேனும் கிரயத்தைக் கொடுத்து வாங்கிக்கொள்வதும் தூங்கும்போது பலாத்காரச் சேர்க்கையைச் செய்தலும் சித்த ஸ்வாதீன மில்லாதவளுடனும் காமாந்தகாரத்தைத் தணித்துக்கொள்வதும் விவாகங்களென்று கூறப்படும்போது, மிக்க அன்புடனும் அதிக பகிரங்கமாகவும் பரஸ்பர விசுவாசத்துடனும் பந்து மித்திரர்களின் சம்மதத்துடனும் சந்ததிகளைப் பெற்றெடுத்துக்கொள்ளும் நல்ல நோக்கத்துடன் புரியப்படுவதாகக் கூறப்படும் “நியோக”த்தை மட்டும் ஏன் “விவாக” ஜாப்தாவினின்றும் விலக்கியிருத்தல் வேண்டும்? உண்மை இவ்வாறிருக்க, பிராம்மணர்கள் மட்டும் ஒரே முறைதான் மண முடித்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதானது பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு, உலகமே இருண்டு விட்டதென்று எண்ணுவதற்கே ஒப்பாகுமல்லாது, வேறு என்னவாயிருத்தல் முடியும்? கபீர்.

(நாரி) ஓ விதவையே! (ஏதம் கதாஸரம்) இறந்த இப் புருஷனுடைய ஆசையை விட்டொழித்து (சேஷே) பாக்கியிருக்கிற புருஷர்களுள் (அபிஜீவலோகம்) பிழைத்திருக்கிற இரண்டாவது புருஷனை (உபைஹி) அடைந்து” (விதவை தன் இஷ்டப்படி பொறுக்கி எடுத்துக்கொள்வாளாக. கபீர்.)

(உதீர்ஷ்வ) கீழ்க்கண்டதை யோசனை செய்து கவனத்தில் வைத்துக்கொண்டு நடப்பாயாக. நியோகம் செய்கிறவனுடைய நன்மைக்காக உண்டாகும் குழந்தை அப்புருஷனைச் சேரும். ஆனால், உன்னுடைய நன்மைக்காக நியோகம் ஏற்பட்டால் பிறக்கும் குழந்தை உன்னுடையது. இப்படியே உனக்கு ஏற்பட்ட புருஷனும் நடக்க வேண்டும்.

சட்டமோ ஜமீன்தார்களுக்கும், சக்கிலிகளுக்கும், வேறு வியவசாயிகளுக்கும் நடுநிலையுள்ளதாகவே காணப்படாநின்றது; வழக்கமும் இப்படித்தான் இருந்துவருகிறது. இவ்வாறிருக்க, அடிக்கடி தயானந்த்ஜீ நியோகவிஷயத்தை வற்புறுத்தி ஞாபக மூட்டவேண்டிய அவசியந்தானென்ன? வியபிசாரத்துக்குச் சற்றே சயிக்கிணை காட்டுவது இவ்வுலகில் இற்றைநாளில் போதுமானதாயிருக்க, மீண்டும் மீண்டும் பதினொரு பெயர்வழிவரை மாறிமாறிக் கொண்டே செல்லுங்களென்று பிட்டுப்பிட்டுக் காண்பிப்பானேன்? பரநாரி சேர்க்கை அறவே கூடாதென்று இஸ்லாம் முதலிய மற்றை மதங்களெல்லாம் வற்புறுத்தி வருங்காலையிலேயே, இவ்வுலகத்தில் எத்தனையே விதமான எண்ணத் தொலையாத இழிதகைமையுள்ள வேசித்தனத்தையும் வியபிசாரத்தனத்தையும் கள்ளப்புணர்ச்சியின் கதைகளையும் அதிகம் நாம் படித்துவரும்போது, சுவாமி தயானந்தர் ஏன் தம்முடைய சமாஜிகளுக்கு இவ்வகை நியோகத்தைப்பற்றி இவ்வாறெல்லாம் பன்னிப்பன்னிக் கூறுகிறார்? ஒருகால் தம்மைப்போல் தம்முடைய சிஷ்யர்களும் விவாகமில்லாதவர்களாகவே இருந்துவிடுவார்களாயின், நியோகத்தின் சிற்றின்பக்காணம் அவர்களுக்குக் கிடைக்காதென்று அஞ்சினார் போலும்! அல்லது பரம யோக்கியர்களான சனாதன ஹிந்துக்கள் தம்முடைய சமாஜத்தில் சேர்ந்துகொள்ள மறுத்துவிடுவார்களென்பதை எதிர்பார்த்தே தயானந்தர் தம்முடன் சேரும் ஒருசிலரைக் கொண்டேனும் தமது கக்ஷிக்குரிய ஜனத்தொகையை விருத்திசெய்ய நாடினார் போலும்!

புருஷனுக்கும் தேவருக்கும் துக்கங் கொடுக்காமலிருக்கும் ஸ்திரீயாகிய நீயே……புத்திர பௌத்திரர்களோடு வீரதீர சூர புத்திரர்களை ஜனிக்கச் செய்யும் இரண்டாவது புருஷனை இச்சிக்கும் நீ எல்லாரிலும் சுகத்தைக் கொடுக்கும் நாயகனையாவது தேவரையாவது அடைந்து…..செய்யவேண்டும்,” என்று அதர்வவேதம் 14. 128-ஐ மஹரிஷி தயானந்தர் மேற்கோள் காட்டுகின்றார்.

வாஸ்தவந்தான்! பெண் மாப்பிள்ளைகளின் மனோராஜியைத் தெரிந்து கொள்ளாது சம்பந்திகளும் சம்பந்திகளும் சேர்ந்தே பணவிஷயத்தை மாத்திரம் பைஸல் செய்துகொண்டு இளம்பிராயத்திலேயே இக்காலத்தில் விவாகத்தை முடிபோட்டுவிடுவதால், நியோகத்திலேனும் அப்படிப்பட்ட பெண்கள் நல்லவிதமான வீரதீர சூர பராக்கிரமசாலிகளைப் பொறுக்கியெடுத்துக் கொள்ளட்டுமென்று ஆரியசமாஜ ஆசாரியர் அனுமதியளித்திருக்கின்றார் போலும்! இதுவும் லேக் ராம், சிரத்தானந்தர் போன்ற திடகாத்திரமுள்ள குண்டர்களை அம்மார்க்கத்தில் உற்பத்தி செய்வதற்கு ஒரு நல்ல உபாயமாகத்தான் காணப்படுகிறது. கபீர்.

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment