வேதங்களின் துர்ப்போதனை – 3

ஏ, ஸ்திரீ புருஷர்காள்! எந்த விதமாய்க் காற்று அசைகின்றதோ, எந்த விதமாய்க் கடலில் அலைகள் துள்ளித் துள்ளிப் பாய்கின்றனவோ, அந்த விதமாகவே உங்கள் கர்ப்பங்களும் பத்து மாதங்கள்வரை

பரிபக்குவமடைந்து அப்பத்து மாதங்களும் ஆனதன் பின்னேயே பிள்ளைகளைப் பெறவேண்டும்”—(யஜுர், 8:28). 

ஷாபாஷ்! வேத பகவானே! தயானந்த்ஜீயின் பரமேசுவரனான பரமாத்வாவே! நீர் உமது சர்வ ஞானத்தின் முதிர்ச்சியின் பயனாய் ஆண் பெண் இருவருக்கும் ஒன்று சேர்த்தே சட்டத்தை இயற்றிவிட்டீர். ஆரியப் பெண்களுடன் ஆரிய ஆண்களைச் சேரும்படி சொல்லிக் குழந்தைகளைப்பெற அனுமதி கொடுக்கிறீர். இஃது ஒருபுறம் இருக்க. சகல கலையிலும் வல்லுநராகிய தயானந்தரை நாம் ஒரு கேள்விகேட்க விரும்புகின்றோம்:

இவ்வுலகத்தில் எங்கேனும் இயற்கையான கர்ப்பவதிகள் தங்களுடைய கர்ப்பங்களைப் பத்துமாத காலம் பூர்த்தியாய்ப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்த கதையைக் கேட்டிருக்கின்றீர்களா? அல்லது வேறெந்த மனிதனேனும் உங்கள் வேதங்களின்படி பத்துமாத காலத்துக்குப் பின்னேதான் பிறந்திருக்கிறானென்றாவது கூறுவது முடியுமா? எனவே, அப்படிப் பத்துமாத காலம் கழிந்த பிறகே குழந்தைகள் பிறப்பது இயற்கையில் வழக்கமில்லாமலும் அப்படிப்பட்ட கர்ப்பவதிகளைக் கண்டுகொள்வது முடியாமலும் போய்விடுவது வாஸ்தவமாயின், மேற்கூறிய வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு சுவாமிஜீ தமது வேதங்களை மெய்யானவையென்று அளவுக்குமேல் புகழ்ந்து கூறுவது நியாயமாகுமா? இது மெய்யா அல்லது பொய்யா? சிரமமா அல்லது அக்கிரமமா? என்பதை நீங்களே நிதானித்துக் கொள்ளுங்கள். தயான்ந்த்ஜீ என் செய்வார் பாபம்! இவர் விவாகத்தினாலேனும் நியோகத்தினாலேனும் பிள்ளைகளைப் பெற்றிருந்தாலல்லவோ பிண்டத்தின் கர்ப்பகாலம் பத்து மாதத்தினும் குறைந்ததென்பதை அறிந்திருக்கப் போகின்றார்!1 சன்னியாசியான தயானந்தர் இருக்கட்டும். பக்கத்தில் பார்வதி தேவியைச் சதா அர்த்த நாரீசுவரராக அணைத்துக்கொண்டிருக்கும் பரமேசுவரனுக்கும் இவ்வுண்மை விளங்காமற் போனது எங்ஙனம்?

இன்னமும், யஜுர், 8:29-ம் பார்க்க:

என்னுடைய சௌபாக்கியத்தின் காரணமாய் விவாகம் பண்ணப்பட்ட பெண்ணே! உன்னுடைய கர்ப்பாசயம் சகல வியாதிகளை விட்டும் தூரமாயிருக்கிறது; உன்னுடைய கர்ப்பாசயம் கர்ப்பங் கொள்ளுதற்கு அருகதையுள்ளதாய் அமைந்திருக்கிறது. உன்னுடைய கர்ப்பாசயத்தின் எல்லாப் பகுதிகளும் அழகாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன. ஏ, கர்ப்பத்தை ஆசிக்கின்றவளே! நான் உன்னுடனே தர்மத்தின் பிரகாரம் உடன் வதிந்து இப்படிப்பட்ட உன்னுடைய கர்ப்பாசயத்துள் கர்ப்பத்தை நிலைக்கச் செய்கிறேன்.

ஏன் ஸ்ரீமான்ஜீ! எந்த ஸ்திரீயுடன் தாங்கள் மேற்கூறிய மந்திரத்தைச் சொல்லிச் சேர்க்கை செய்கின்றீர்களோ, அந்த ஸ்திரீயானவள் மலடாகவேனும், அல்லது அவளது கர்ப்பாசயம் (கர்ப்பப்பை) கோணலாகவேனும் இருந்திருப்பின், அப்பொழுது என்செய்வீர்? தாங்கள் உள்ளே சென்று நேரே பார்த்திருக்க மாட்டீர்களென்பது திண்ணம். எனவே, தாங்கள் இம்மந்திரத்தைப் படித்துக்கொண்டு கர்ப்பத்தை உண்டுபண்ணி விடுவதாகக் கூறுவதும், இம்மந்திரத்தின் உறுதி கூறலும் இதன் அர்த்த புஷ்டியும் உண்மையாகுமா அல்லது தவறாகுமா? இவ்விதமான அசட்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டு எல்லை கடந்து புகழ்ந்து திரிவதுமல்லாமல், எமது பரிசுத்தக் குர்ஆனெ கரீமைத் தூஷித்துத் திரிவதும் நியாயமாகுமா?

இனியும் யஜுர், 17:44 நோக்க:

ஏ, பகைவர்களின் பிராணன்களை வாங்கும் பராக்கிரமும் தைரியமுமுள்ள பெண்பிள்ளையே! படை வீரர்களின் இருதயங்களை ஏமாற்றுபவளே! பகைவர்களை எரித்துவிடுவாயாக. (எவ்வாறெனின்) நீ எரிக்கும் எரிப்பினால் பகைவர்களின் இருதயங்கள் தட்டுக் கெட்டுப்போய் இரவு போலுள்ள அந்காரத்துள் ஆழ்ந்துபோய்விட வேண்டும்.

அஃதாவது, சைன்யங்களின் இருதயங்களைக் கலக்கிக் குழப்பிவிடவேண்டும். அவள் தன்னுடைய அழகென்னும் அனற் பொறிகளைக் கொண்டு பகைவர்களைத் தீய்த்துவிடவேண்டும். இன்னமும் மாரன் கணைபோன்ற அவளுடைய பார்வையினால் எதிரிகளின் உள்ளங்களைத் தொளைத்துவிட வேண்டும்.

“தேரிளந் தென்றலாகச் செழுங்குடை மதியமாகத், தூரியங் கடல்களாகச் சொற்குயில் காளமாக, நாரியர் சேனையாக நறவண்டு விடுதூதாகப், பாரினில் விஜயம்செய்யும் படைமதன் சாணம் போற்று”வதே அன்னாரின் நித்திய நைவேத்தியங்களாய் அதன்பின்னே முடிந்துவிடும்.

ஆனால், குர்ஆன் ஷரீபில் இப்படிப்பட்ட இரகசிய போதனைகள் எங்கிருந்து கிடைக்கப் போகின்றன? ஸ்திரீகள் அன்னிய ஆடவரை மோகப் பார்வையால் ஏமாற்றுவதும், காமக் கண்ணோட்டத்தால் எரித்துவிடுவதும், கடைக்கண் பார்வையால் எதிரிகளைத் தோற்கடிப்பதும் காணப்படாமல், இவற்றிற்கு மாறாய்த் தற்காப்புள்ளவளாயும் பதிவிரதையாயும் நன்னடக்கை யுள்ளவளாயுமே இருக்க வேண்டுமென்று எமது வேதம் கூறாநிற்கின்றது. இக் காரணத்தினால்தான் சுவாமி தயானந்தருக்கு இவ்வேதம் பிடிக்கவில்லை. இன்னமும், இவ்வேதத்தில் காம சாஸ்திரப் படிப்பினையொன்றும் காணப்படாமல் ஒழுக்க சாஸ்திரத்துக்குரிய உயர்நடையே மலிந்து கிடக்கின்றது.

மூஃமினான ஆண்பிள்ளைகளுக்குச் சொல்வீராக: (அவர்கள்) தங்கள் பார்வைகளைக் கீழாக்கிக் கொள்வார்களாக; கண்களையும் மூடிக்கொள்வார்களாக. மேலும் மூமினான பெண் பிள்ளைகளுக்குச் சொல்வீராக: (அவர்கள்) தங்கள் பார்வைகளை மறைவினுள் வைப்பார்களாக,” என்பதே எம் பரிசுத்த வேதத்தின் உறுதியான கட்டளையாகும்.

மேலும் யஜுர், 19:88-ம் பார்வையிடுக:

ஏ, மனிதர்காள்! ஒப்புக்கொள்ளத் தக்கவாறே ஸ்திரீயானவள் தன்னுடைய அழகான அங்கங்களுடனே சேர்க்கை செய்வாளாக. தலைக்கு நேராகத் தலையையும், நாவுக்கு நேராக நாவையும் வைத்துக்கொண்டு கிருகஸ்தர்களாகிய ஆண் பெண் இருவரும் சேர்க்கை செய்வார்களாக. இன்னமும் வியாதியை விலக்கநாடிக் குழந்தைக்கு வியாதி யணுகாமல் இருப்பதற்குரிய வேதமந்திரத்தை ஓதுவார்களாக. புருஷன் தன்வீரியத்துடன் சேர்க்கை செய்வானாயின், அப்பொழுதுதான் சிசு உற்பத்திக்குக் காரணமாகும். இதனாலேயே இவ்வேலையை மிகநன்றாய்ச் செய்தல்ணே்டும்.

இதன் தாத்பரியமாவது, ஸ்திரீ புருஷர்கள் கர்ப்பத்தை உண்டுபண்ணும் வேளையில் எதிரெதிராக இருந்துகொண்டு மிக்க அன்புடனே முகத்துக்கெதிரே முகத்தையும், மூக்குக்கெதிரே மூக்கையும், இருதயத்துக்கெதிரே இருதயத்தையும் ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதாம். “வீர்யம் கர்ப்பத்தில் பிரவேசிக்குந் தறுவாயில் ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று இருந்துகொண்டு, மூக்கில் மூக்கையும் கண்ணில் கண்ணையும் அமர்த்தி எல்லா அவயவங்களையும் கோணலில்லாமல் வைத்துக்கொண்டு சந்தோஷத்துடன் இருத்தல் வேண்டும். அவயவங்களை அசைத்தல் கூடாது. வீர்யத்தைக் கிரகிக்கும்போது அபானவாயுவை மேல் இழுத்தல் வேண்டும். பிறகு அதைக் கர்ப்பாசயத்தில் இறுத்த யோனி சங்கோசம் செய்யவேண்டும்” (தமிழ் சத்தியார்த்த பிரகாசம் அத். 4, பக்கம் 105).

இவ்வாறு செய்வதனால் அவகோலமுடைய கோணலான உறுப்புக்களையுடைய குழந்தைகள் ஜனிக்க மாட்டாவாம்; இந்த முறை மிகநன்றா யிருக்கிறது. கொக்கோக முனிவரும் விளக்கிக்காட்ட முடியாத இப்படிப்பட்ட சுகாஸன வழிகளையெல்லாம் மிக்க நல்லவிதமாய் விளக்கிக்காட்டும் வேதபகவான் எப்படிக் கெட்டவராய் இருத்தல் முடியும்? இந்தக் காமசாஸ்திரக் கரணங்களின் காரணத்தினால்தான் ஆரியர்களெல்லோரும் விரஜானந்தர் போன்ற மன்மதாகாரமான வடிவுள்ளவர்களாய்ச் சகலவித சாமுத்திரிகா லக்ஷணமும் பொருந்தியவராய்க் காணப்படுகின்றனர்!

மேலும் அந்த யஜுர் வேதக் கரணங்களை அறியாததனால்தான் ஆரியரல்லாத ஏனையோரெல்லாம் சகல அவலக்ஷணங்களுடன் அங்கங்களும் கோணியவர்களாய்ப் பிறக்கின்றனர். இப்படிப்பட்ட கரண விசேஷங்கள் எம் வேதத்திலிருந்து சுவாமிஜீக்கு எவ்வாறு கிட்டுதல்கூடும்?

யஜுர், 20:9 பார்க்க:

ஏ, மானிடர்காள்! ….. யோனி (பெண்ணின் மர்மஸ்தானம்) அன்று; ஆனால், உலகத்தையே உண்டு பண்ணக்கூடிய ஸ்தலமாயும், சம்போக சுகத்துக்கும் ஆனந்தத்துக்கும் உரிய இடமாயும்….. லிங்கம், குமாரர்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரை யுடையதா யிருக்கட்டும். இதேவிதமாகத் தொடைகளாலும் பாதங்களாலும் நடந்துசென்று படைப்புக்களிடம் ஆனந்தத்தையும் மரியாதையையும் அடைந்து…..அதனால் நீங்களெல்லீரும் என்னைப்போல் ஆவீர்களாக.

இதைக் கூறுபவர் யார்? இதைக் காட்டினும் பரிசுத்தமானதும் ஒழுக்கமானதுமான உபதேசம் என்னதான் இருத்தல் கூடும்? மேலும் எந்த மார்க்கத்தின் எப்படிப்பட்ட வேதந்தான் இந்தப் பரிசுத்த வேதத்துக்கு நேரெதிராய் நிற்க லாயக்குள்ளதாய் இருக்கப்போகின்றது? இப்படிப்பட்ட உபதேசங்கள் ஆரியரின் பரிசுத்த வேதங்களின் போதனைகளாய் இருக்கினறன. இதைப் புகழ்ந்துபேசும் மஹரிஷி தயானந்தரின் வேலை மிருகங்களின் காமக்குரோதங்களைச் சிலாகித்துப் பேசுவதே போலத்தான் இருக்கிறது.

இன்னமும் யஜுர், 20:40-ஐ உற்று நோக்குக:

ஏ, மானிடர்காள்! எப்படிக் கிணற்றுத் தண்ணீரை இழுக்க உதவும் சக்கரம் பலமும் சக்தியுமுள்ள மனிதனால் பிடிக்கப்படும்போது சுற்றிச்சுற்றி ஓடுகின்றதோ, அதேபோல் பிள்ளைகளைப் பெறவேண்டிய பெண்கள் வாயிலின் கதவடிவரை வரவேண்டும். அல்லது மிக்க பிரபல்யமடைந்த நல்ல தர்மாத்மாக்களான மனிதர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நற்காரியங்களின் பரிபூரணமான வாயில்கள்வரை வருவதேபோல் தற்போதுள்ள அறிவாளிகளினிடம் வரவேண்டும். எனவே, (ஆண்பிள்ளைகள்) பிரகாசமுள்ள ஸ்திரீகளுக்குச் சகலவிதமான உரிமையுடனேயும் உதவிபுரிதல் வேண்டும். நீங்களும் இப்படியே உதவி செய்வீர்களாக.

அஃதாவது, நல்ல ஸ்திரீகள் பராக்கிரமமும் திடகாத்திரமுமுள்ள புருஷர்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டுக் கதவடிவரை வருவார்களாயின், அவர்களுக்கு உதவிபுரிதல் அத்தியாவசியமாம். ஆனால், அகோர ரூபமுடையவள், கதவடிவரையில் வராதவள், மானமுடையவள் ஆகிய பதிவிரதா சிரோமணிகளுக்குக் கழுவிலேற்றும் தண்டனையே விதித்தல் வேண்டும் போலும்! சகோதரர்களே! அறிந்துகொள்ளுவீர்களாக; எப்படிப்பட்ட சௌந்தரியமுள்ள நல்ல பெண் பிள்ளைகள் பராக்கிரமசாலியும் திடசக்தியுமுள்ள ஆண் பிள்ளைகளை வாயிற்படியில் வந்து வாரிக்கொண்டு போகிறார்களென்று நன்கு தெரிந்துகொள்வீர்களாக. இது மட்டுமா?

இன்னமும், யஜுர், 38:2-ம் படித்துப் பார்க்க:

ஏ, கல்வியைப் பயின்று ஒழுக்கம் ஞானம் பெற்றிருக்கும் பெண்பிள்ளையே! நீ எனக்குக் கிட்டுவாயாக. அஃதாவது, எவன் உன்னை விரும்புகிறானோ அவனுடன் நீ சேர்வாயாக. (வாஸ்தவந்தான். இப்படிப்பட்ட உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கபீர்.) பரிபூர்ண இன்பத்தைக் கொடுப்பவள் பரிபூர்ண சுகத்தை யடைவாள். எவன் பரிபூர்ண சுகத்தைக் கொடுப்பானோ அவனிடம் சேர்வாய். (இப்படிப்பட்ட பகிரங்க அனுமதி கிடைத்த பிறகுதானே அவள் அங்கேபோய்ச் சேர்வாள்!) ஏ, ஞானமுள்ளவளே! நீ கல்விமான்களுடன் சேர்ந்திரு. அஃதாவது, எவன் உயர்ந்த கல்விகளைப் பயின்றிருக்கிறானோ, அவனுடன் சேர்ந்திருப்பாயாக.

வார்த்தைகள் கருத்துக்கு உகந்தவைகளே. கல்வி பயின்றவன் எப்படிப்பட்டவர் எனின், அவர் உலகமடங்கலிலு முள்ள கல்விமான்களையும் அவர்களுடைய கல்விப் பயிற்சியையும் மதங்களையும் ஆக்ஷேபம் செய்து, அவர்களைத் திட்டியும் ஏசியும் தூஷணைகள் செய்தும் இருத்தல் வேண்டும். இப்படிப்பட்ட உயர்தரக் கல்விமான்களை மஹரிஷி சாஹிபின் சிஷ்யவர்க்கத்துள் அல்லாமல் வேறு எங்கே சென்று தேடிப்பிடிப்பது முடியும்? இஃது ஒரு பக்கல் கிடக்க.

(தொடரும்)

-பா. தாவூத்ஷா


1. சிசுக்கள் கர்ப்பகால வாழ்க்கையெல்லாம் 280 தினங்களேதாம் என்று இக்காலத்திய வைத்திய நிபுணர்களெல்லாரும் நன்றாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment