நகருள் பிரவேசித்த நபியவர்களை நிரந்தர விருந்தினராக ஏற்றுக்கொள்ளும் மகத்தான பாக்கியம் தத்தமக்கும் கிட்ட வேண்டும் என்றே அத்தனை மதீனாவாசிகளும் ஆசைப்பட்டார்கள். பெருந்தனம்

படைத்த வர்த்தகர்கள், செல்வமும் செல்வாக்கும் மிக்க அதிபர்கள், பரம ஏழைகள், நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் ஆகிய ஒவ்வொருவருமே நபியை ஏற்றுக்கொள்ளப் போட்டியிட்டார்கள். எந்த ஒருவரின் அழைப்பை ஏற்றாலும், மற்ற அனைவருக்குமே அதிருப்திதான் ஏற்படும் என்கிற சூழ்நிலை உருவாகியிருந்தது. முன்பு சுமார் 18 ஆண்டுகட்கு முன்னால் எல்லா மக்கா குலத்தினரையும் திருப்திப்படுத்த ஹஜருல் அஸ்வத் கல்லைக் கஅபா ஆலயச் சுவர்மீது பொருத்திவிட்ட அண்ணல் நபிக்கு இப்போது இப்படி ஒரு சோதனை.

“நண்பர்களே, தோழர்களே! உங்கள் நல்விசுவாசத்துக்கு எப்படி நன்றி நவில்வதென்றே எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இந்நகருக்குள் நான் கால் நடையாக நடந்து வந்துதான் பிரவேசிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் என் நண்பர்கள் நான் வாகனத்தின் மீது அமர்ந்துதான் பட்டணப் பிரவேசம் நிகழ்த்த வேண்டும் என்று பணித்து விட்டார்கள். எனவே நான் என்ன முடிவுக்கு வந்திருக்கிறேனென்றால், இந்த ஒட்டகத்தை எவரும் தடுக்க வேண்டாம். இது நடந்து எந்த இடத்தில் போய்த் தானாகவே நிற்கிறதோ அந்த இடத்தின் எதிரிலுள்ள இல்லத்தில் நான் இறங்கி விடுகிறேன், இதுதான் நல்லது. அல்லாஹ்வுக்கு தெரியும் தன்னுடைய நபியை எந்த இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று.”

“ஒட்டகத்டுக்கு வழிவிடுங்கள்!” என்னும் கட்டளை பிறந்ததும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரிய மின் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால்—

நெடுங் காலத்துக்கு முன் தமூத் என்னும் சமுதாயத்தினர் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் மக்கத்துக் குறைஷிகளை விட மிகப் பொல்லாத மூர்க்கர்கள். அவர்களை நல்வழிப்படுத்த என்று சாலிஹ் (அலை) என்னும் ஒரு நபி அவதரித்தார். அவரிடம் ஒரு பெண்ணொட்டகம் இருந்தது. அதை எவரும் துன்புறுத்தக்கூடாது. அது போகிற வழியே விட்டுவிட வேண்டும். அது மேய்வதையோ நீரருந்துவதையோ எவரும் தடுக்கக் கூடாது என்று இறைவன் அந்நபி மூலம் எச்சரித்து வந்தான். தமூதுகள் இக்கட்டளையைச் சட்டை செய்யவில்லை, விஷமம் செய்தார்கள்; அந்த ஒட்டகத்தைக் கொன்றும் விட்டார்கள். இதனால் ஆண்டவனின் கோபம் அக்கினியாய்ப் பொழிந்து அத்தனை தமூதுகளையும் பொசுக்கிச் சாம்பலாக்கி விட்டது. இந்தக் கதையைப் பலமுறையும் நபிகள் நாயகத்துக்கு இறைவன் அறிவித்து, குறைஷிகளுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறான்.1 அத்தனை திருவாக்கியங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்த இந்த மதீனாவாசிகளுக்கு அவை நினைவுக்கு வரவே, இந்த நபியின் ஒட்டகம் செல்லும் வழியில் குறுக்கே நிற்காமல் சட்டென்று விலகி ஒதுங்கிவிட்டார்கள்.

ஒட்டகம் நடந்து சென்ற வீதியின் இரு மருங்கிலிருந்தும் எண்ணற்ற பேர்கள் எழில்மிகு ஆடைகள் உடுத்தி வெளியே வந்து எட்டிப் பார்த்து நபியவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பெண்களோ வீட்டுக் கூரைகள் மீதும் மொட்டை மாடிகள் மீதும் ஏறி நின்று ஒத்த குரலில் சோபனம் பாடி நல்வாழ்த்துக் கூறினார்கள். நபியவர்களின் ஒட்டகம் தங்கள் வாசலின் எதிரே நிற்காதா? அவர் தங்கள் வீட்டில் வந்து புகுந்துவிட மாட்டாரா? என்றே ஏக்கப்பார்வையை வீசினர். ஆனால் அதுவோ நிற்காமல் நேரே நடந்துக் கொண்டேயிருந்தது.

இறுதியாக அபூ ஐயூப் (ரலி) என்பவரின் இல்லத்துக்கு எதிரிலிருந்த ஒரு காலி மனையில் அப் பெண்ணொட்டகம் வந்து நின்றது. நபியவர்கள் சட்டென இறங்கினார்கள்.

“இந்த மனைக்கு உரியவர் யார்? என்று ஆவலுடன் வினவினார்கள்.

இரு அனாதைச் சிறுவர்கள் மிகவும் பெருமையுடன் “இது எங்களுக்குச் சொந்தம். இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

“இந்தக் காலி மனையின் கிரயம் என்னவோ?”

எவருமேபதில் பேசவில்லை. ஒரே மெளனம்.

“தம்பிகளே! சும்மா சொல்லுங்கள். நான் உரிய கிரயத்தைக் கொடுத்து இதை வாங்கிக் கொள்கிறேன். உங்களூரின் மனைகளுக்கு உண்டான விலைவாசி எனக்குத் தெரியாதல்லவா? நான் என்ன கிரயம் கொடுக்கட்டும்?”

“இறைத் தூதரே! இதற்கு விலை இல்லை. எங்கள் பரிசாக இதை உங்களுக்கு இனாமாகத் தந்து விடுகிறோம். தாங்கள் இதை ஏற்றுக் கொள்வதையே எங்கள் பெரும் பாக்கியமாகக் கருதுவோம்.”

“சிறுவர்களே, உங்கள் அபிமானத்தை நான் மெச்சுகிறேன். உங்கள் தந்தையைக் கூப்பிடுங்கள், அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்.”

“நபியவர்களே! எங்களுக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை நாங்கள் அனாதைகள். எங்கள் சொத்தையே உங்கள் ஒட்டகம் தேர்தெடுத்திருக்கிறது. அல்லாஹ்வின் தூதரிடம் நாங்கள் காசு வாங்கிக் கொண்டு உதவி செய்ய மாட்டோம். இது எங்கள் காணிக்கை. தயவு கூர்ந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

நபியவர்களின் நேத்திரங்களில் நீர் மல்கிற்று.

“அனாதைகளின் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பது ஆண்டவனிடும் கட்டளை. அதை அறிவித்துக் கொடுக்கும் நபி நான். அப்படிப்பட்ட நான் உங்கள் சொத்தைக் கவருவேனா? — விலையைச் சொல்லுங்கள்.”

“நீங்கள் கவர்ந்து கொள்ளவில்லை! நாங்களாகவே மன உவப்புடனல்லவோ தானமாக வழங்குகிறோம்; காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்! ஏற்றுக் கொள்ளுங்கள்.”

கல்லிலே நார் உரிக்கும் கயவர்களான குறைஷிக் கூற்றுவர்கள் எங்கே? நெகிழ்ந்த நெஞ்சுடன் கனிந்த சொற்கள் உதிர்க்கும் இக்கொடை வள்ளல்கள் எங்கே? — சிந்தித்த அண்ணலுக்கு உள்ளம் பாகாய் உருகி விட்டது. பக்கத்தில் நின்ற கூட்டத்தினருடன் நபியவர்கள் ஆலோசித்தார்கள். அந்த மனையின் நியாயமான கிரயம் என்னவென்பதைக் கண்டறிந்தார்கள். பையை திறந்து பணத்தை எடுத்தார்கள்.

“என்னரும் செல்வச் சிறுவர்களே! உங்கள் அன்பளிப்பை நான் மனமார ஏற்றுக் கொண்டேன். நானும் என்னாலியன்ற பரிசை உங்களுக்கு வழங்க வேண்டுமல்லவா? இதோ இந்த எளிய வெகுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நபி மீது உண்மையான பற்றுதல் கொண்டிருப்பவர்கள் நபி அளிப்பதை ஏற்க மறுக்கக் கூடாது; மறுக்க மாட்டர்கள்!”

வேறு வழியின்றி அச்சிறுவர்கள் அப்பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள், “நானும் அனாதைகளை ஆதரிப்பவர்களும் சுவர்க்கத்தில் இப்படித்தான் இருப்போம்!” என்று சொல்லி, தம் ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் உயர்த்திக் காட்டினார்கள் என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) என்பவர் அறிவிக்கிறார். அதாவது அனாதைகளை உதாசினப்படுத்துகிறவர்களுக்கு சுவனபதி கிட்டாது என்பது பொருளாம். மதீனாவுக்குள் நபி வந்ததும் செய்து காட்டிய முதல் சேவை அனாதைகளை ஆதரித்தமையே யாகும். எனவே, எந்த முஸ்லிமும் எந்த ஓர் அனாதையையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றியே தீரவேண்டும்.

காலி மனை கைம்மாறியவுடனேயே நபியவர்களும் மற்றுமுள்ள எல்லாத் தோழர்களும் அவ்விடத்தில் ஒரு தொழுகைக் கூடத்தை — பள்ளிவாசலை நிருமிக்க முற்பட்டார்கள். பச்சை மண் கற்களால் சுற்றிலும் சுவரெழுப்பி, பேரீச்ச மரக்கட்டைகளைக் கால்களாகவும் தூண்களாகவும் ஊன்றி, கூரைமீது அதன் ஓலைகளையும் கீற்றையும் போட்டு மூடி, மிக எளிய பள்ளிவாசலை அவர்கள் சடுதியில் எழுப்பிவிட்டார்கள். மழை பெய்தால் தலைக்குமேல் நீர் ஒழுகும். தரையோ சேறாகிவிடும். இந்த உபத்திரவத்தை மட்டுப்படுத்த, தரைமீது கூழாங்கற்களை இறைத்து விட்டார்கள். முற்றவெளிக்கு அப்பால் ஒரு மூலையில் ஒரு சிறு மேடை கட்டப்பட்டு அதன் மீது கூரை வேயப்பட்டது. குடும்பமோ வீடோ இல்லாத ஏழையாளர்களுக்கென்று அவ்விடம் ஒதுக்கிவிடப்பட்டது. “மேடைமீது அமர்ந்த தோழர்கள்” (Ashaabus-Suffa) என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். மதபோதனைக் கல்வி பயில்வதற்கென்று அப் பள்ளிவாசலுக்கருகிலேயே ஒரு மூலையில் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அங்கே பக்கத்திலேயே திரு நபியின் குடும்பம் தங்கியிருப்பதற்கான இரு சிறு இல்லங்களும் நிருமிக்கப்பட்டன.

சாந்திரமானாக் கணக்கின்படி, இன்றைக்கு 1400 ஆண்டுகட்கு முன்னே மதீனா முனவ்வரா (பேரொளி பெற்ற பெருநகரம்) என்னும் நபி புகுந்த நன்னகர் எப்படிக் காட்சியளித்து வந்தது என்பதை சர் சையத் அலீ என்னும் அறிஞர் இப்படி விவரித்திருக்கிறார்.

“இற்றை நாளிலே அது சுற்றிலும் வலுவான மதில் சூழ்ந்த நகராயிருக்கிறது. அக்காலத்தில் அது மக்காவிலிருந்து 11 நாள் பயண தூரத்திலிருந்தது. சுற்றிலும் பாதுகாப்பில்லாத திறந்த வெளி மைதானத்தில்தான் அது இருந்தது. எந்த நேரத்திலும் எவர் வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்தும் படையெடுத்து வந்து தாக்க முடியும். பின்னொரு காலத்தில் நபி ஓர் அகழைத் தோண்டிக் குரைஷிப் படையெடுப்புக்கு எதிராக அரண் அமைக்கிற வரையில் அது அப்படித்தான் இருந்தது. அமலக் வமிசத்தை சேர்ந்த ஒரு தலைவன் ஆரம்பத்தில் அந் நகரத்தை நிறுவினானென்றும் அவனுடைய பெயராலே அது யதுரிப் என்று அழைக்கப்பட்டு வந்ததென்றும் வரலாறு அறிவிக்கிறது. அந்நகரைச் சுற்றிலும் அந்த அமலக் வமிசத்தினரே குடியிருப்புகளை நிருமித்து வாழ்ந்து வந்தார்கள். ஜெரூஸலத்தின் மீது பாபிலோனியர்களும் கிரேக்கர்களும், ரோமர்களும் ஒருவர் மாறியொருவர் படையெடுத்து அங்கிருந்த யூதர்களை விரட்டியடித்தார்கள்; அல்லது தீர்த்துக் கட்டினார்கள். அதனால் விழுந்தடித்து ஓடி வந்தவர்கள் அரேபியாவுக்குள் புகுந்து, ஹிஜாஸின் வட பகுதியில் குடியேறினார்கள். யூதர்களின் அக்குடியேற்றங்களுள் முக்கியமானவை; கைபர் என்னும் இடத்திலே பனீ நளீர் குடியேற்றம்; ஃபிதக் என்னுமிடத்திலே பனூ குறைளா குடியேற்றம்; மதீனாவில் பனீகைனுகாக்கள் குடியேற்றம் என்பனவாம். இந்த யூத வமிசத்தினர் வலுவான கோட்டைகள் கட்டி வாழ்ந்தார்கள். அக்கம் பக்கத்தில் இருந்த அராபிய கோத்திரத்தார்களை எல்லாம் அடக்கிக் கொண்டே வந்தார்கள். கடைசியாக மிஞ்சியவர்கள் கஹ்தானிய இனத்தை சேர்ந்த அவுஸ்களும் கஸ்ரஜ்களும் மட்டுமே ஆவர். இந்த இரு வமிசத்தாரும் ஆரம்பத்தில் யூதர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி இருந்தார்கள் என்றாலும் காலப்போக்கில் அவர்களையே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடக்கி விட்டார்கள். எனினும் இந்த இரு வமிசத்தினருமே தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட நேரத்திலேதான் மக்காவில் நபி அவதரித்திருக்கிறாரென்று கேள்வியுற்று, அவுஸ்களும் கஸ்ரஜ்களும் தங்கள் தலைமுறை தலைமுறை காலப் போர் வெறியைச் சற்றே தணித்து, கொஞ்சம் அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையிலேதான் அண்ணல் நபி (ஸல்) அங்கு வந்து நுழைந்தார்கள். அப்படி அவர்கள் புகுந்ததுடன், யதுரிப் நகரமே ஒரு புதிய சகாப்தத்தைப் பெற்றுக் கொண்டது.”

இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் இருத்த வேண்டும். மதீனாவிலிருந்த இரு கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்குமுன் தான் வேற்றுமைப்பட்டுக் கிடந்தன. இஸ்லாத்தை ஏற்ற பின்னரோ அவுஸ் வமிசமோ கஸ்ரஜ் வமிசமோ — இரண்டும் மறைந்தன. இவர்கள் யாவரும் அன்ஸார்களாகவே மாறிவிட்டனர்!

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: questionsonislam.com


1. திரு நபி மக்காவில் வாழ்ந்த காலத்தில் வெளியான 11:61-68; 14:9; 15:80-84; 25:38; 26:141-159; 27:45-53; 29:38; 41:13; 51:43-45 53:51 54:23-31; 85:18; 89:9; 91:11-15 முதலிய திருவாக்கியங்களையும் மதினாவில் வெளியான 7:73-79 69:4 முதலிய திருவாக்கியங்களையும் காண்க.


 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment