பத்று கிணற்றங்கரையில் முஸ்லிம் படை வந்து சேர்ந்த அந்த மாலை நேரத்தில் குறைஷியரின் சேனை தெற்கே சுமார் 10 கி.மீ. தூரத்திலிருந்து பாய்ந்து வந்து கொண்டிருந்தது. தலைக்குமேல் மேகக் கூட்டம் திரளுவதையும் கடு மழைக்கு அறிகுறிகள்
தோன்றுவதையும் கண்ட அவர்கள் சீக்கிரமாக ஒரு பந்தோபஸ்தான இடத்தில் சென்று பாடி இறங்க ஓடி வந்தனர். பத்று கிராமத்தை நோக்கியே இவர்களும் விரைந்தனர். பல சகுனத் தடங்கல்கள் குறுக்கிடுவதையும் மழை கொட்டப் போவதையும் எண்ணி ஏங்கி நெடுமூச்சு விட்ட எதிரிப் படையில், அந்த நேரத்தில் ஒரு பெருங் குழப்பம் தோன்றிற்று. அந்தச் சேனையில் அபூஸுஃபியானின் கோத்திரத்தைச் சேர்ந்த ஜுஹ்ரி (Zuhri) என்னும் வமிசத்தார்களும் இருந்தார்கள் சிரியாவிலிருந்து வந்து கொண்டிருக்கும் ஒட்டகப் பொதிகளை மதீனாவாசிகள் வழிப்பறி செய்யப் போகிறார்கள் என்று கேள்விப்பட்ட காரணத்தால்தான் அவர்கள் இந்தக் குறைஷி சைனியத்துடன் சேர்ந்து போர் செய்ய வந்தார்கள். ஆனால், பத்று அருகில் நெருங்கியதும் அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
“அபூஸுஃபியானும் அவருடைய ஒட்டகப் பொதிகளும் சிரியாவிலிருந்து திரும்பிவிட்டனர்; மதீனாவை நெருங்காமல், மேற்கே திரும்பிச் செங்கடல் ஓரமாகப் பத்திரமாக வழி நடந்து மக்காவை எட்டிவிட்டார்கள்; உயிருக்கோ அல்லது பொருளுக்கோ சிறு சேதமும் விளையவில்லை.”
இந்த தகவல் நம்பகமானதுதான் என்பதை ஜுஹ்ரி குலத் தலைவர்கள் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஆட்களை விளித்து, “திரும்பிவிடுங்கள், மக்காவுக்கு! நம்முடைய வர்த்தகப் பண்டங்களும் எல்லா ஒட்டகங்களும் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்துவிட்டனவாம். சீக்கிரம், சீக்கிரம்!” என்று கூவினார்கள்.
சேனைத் தலைவன் அபூஜஹலுக்கு ஆத்திரம் மூண்டது. “என்ன, பாதி வழியில் காட்டிக் கொடுத்துவிட்டு ஓடப் பார்க்கிறீர்கள்? முன்வைத்த காலைப் பின்வைப்பதா? முன்னேறுங்கள், முன்னேறுங்கள்!” என்றான் அவன். ஜுஹ்ரீகள் அனைவரும் அதை கேட்கவில்லை; தெற்கு நோக்கித் திரும்பினார்கள்.
“ஏ அபூ ஜஹல்! எங்கள் வர்த்தகத் தலைவருக்கும் அவருடன் வருகிற பெரும் வாணிகச் சரக்குகளுக்கும் கடும் ஆபத்து வந்துவிட்டதென்று சொன்னீர். வழிப்பறி நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களைத் தண்டிக்கவே படை திரட்டுவதாகச் சொல்லி எங்களை உசுப்பிவிட்டீர். உமது பொய்ப் பிரசாரத்தை மெய்யென்று நம்பி நாங்களும் வெறியுடன் உம்முடனே ஓடிவந்தோம். ஆனால், எங்கள் தலைவரும் அவருடைய 1000 ஒட்டகக் கூட்டமும் பத்திரமாக இந்நேரம் மக்காவை எட்டிவிட்டனவாக நம்பகமான தகவல்கள் வந்து விட்டன. நிரபராதியான முஸ்லிம்கள்மீது வீணே போர்புரிய நாங்கள் விரும்பவில்லை; எங்கள் லட்சியம் நிறைவேறி விட்டபடியால், மக்காவுக்கே திரும்பிவிடுகிறோம்,” என்றார் ஜுஹ்ரீ குலத் தலைவர்.
“இதென்ன, போர்க்களத்தில் ஒப்பாரி! படையெடுத்து வந்தது வந்துவிட்டோம். இன்னம் மூன்று நாட்களில் மதீனாவை எட்டிவிடுவோம் புது மதத்தை வேர் அறுத்து, முஸ்லிம்களை வாளுக்கிரையாக்கி, மதீனாவை மீட்பித்து, கஸ்ரஜ் குலத் தலைவர் அப்துல்லாஹ்வை அரசனாக்கிவிடுவோம். அப்போதுதான் நிம்மதி கிடைக்கும்; நம் மதமும் காப்பாற்றப்படும்.”
“நாங்களொன்றும் மதப்போர் நிகழ்த்தப் படை திரண்டு வரவில்லை. எங்கள் வர்த்தகப் பொருள்களைக் காப்பாற்றிக் கொள்ளவே புறப்பட்டு வந்தோம். எங்கள் பொருள் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்துவிட்டது. இனி எங்களுக்கு ஒன்றும் அக்கறையில்லை. மதப் போர் புரிந்து நீர் வெற்றி பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் ஒன்றும் குறுக்கே நிற்கமாட்டோம்”
அபூஜஹல் மறுபேச்சுப் பேசுமுன்னே எல்லா ஜுஹ்ரீகளும் சைனியத்திலிருந்து பிரிந்து தெற்கு நோக்கிப் போய் விட்டார்கள். சுட்டெரிக்கிற ஆத்திரத்துடன் அபூஜஹலும் மற்றவர்களும் கழன்றோடுகிற அக்கூட்டத்தைக் கண்மறைகிற வரை பார்த்துப் பெருமூச்செறிந்தார்கள். வெயிலும் மறைந்தது; இருளும் சூழ்ந்தது; மழையும் பிடித்துக் கொண்டது. மக்காவுக்குத் திரும்பிய ஜுஹ்ரீகள் நீங்கலாக இப்போது குறைஷிச் சேனையில் சரியாக 1000 வீரர்கள் இருந்தார்கள்.
“ஜுஹ்ரீகள் போனால் போகட்டும்! இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். கடைசிவரை முன்னேறி ஒரு கை பார்த்து விடுவோம்! வெற்றி நமதே!” என்று அபூஜஹல் முழங்கினான். மழை வலுத்துவிடவே, அந்தச் சேனை வீரர்கள் பத்று கிணற்றுக்குத் தெற்கே சரிவான நிலப்பரப்பில் அங்கங்கே கூடாரம் அடித்துத் தங்கிவிட்டார்கள். மேட்டுப் பகுதியில் முஸ்லிம் படை முன்னமே வந்து பாடியிறங்கித் தங்கியிருப்பது இவர்களுக்கு தெரியாது.
விடிந்த பிறகு அந்த ஆயிரம் குறைஷி வீரர்களும் எழுந்தார்கள். மதீனா நோக்கிப் பயணமாகிற நேரத்தில், சற்றுத் தொலைவில் எதிரே முஸ்லிம்கள் பாசறைகளில் தங்கியிருப்பதையும் குர்ஆன் ஓதும் ரீங்கார நாதமும் தொழுகை ஒலியும் அங்கிருந்து வருவதையும் வியப்புடன் இவர்கள் கவனித்தார்கள். அபூஜஹலுக்கோ பரமானந்தம்!
“என்ன, நமக்கு மூன்றுநாள் பிரயாண தூரத்தை இவர்கள் மிச்சப்படுத்தி விட்டார்கள்! துணிச்சல் அதிகம் போலும்! இங்கேயே குழிவெட்டிப் புதைப்போம் இப் புரட்சிக் காரர்களை!” என்று களிப்புடன் கூறினர் குறைஷிகள்.
ஆனால், மேட்டில் முஸ்லிம்கள் நிற்க, பள்ளத்திலிருக்கும் குறைஷிகள் மேல் ஏறிச் செல்ல முடியாமல் பாதை வழுக்க, ஒரு சங்கடமான நிலையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். சோதிடர்கள், நைமித்திகர்கள், குறிசொல்வோர் ஆகிய எல்லா நிபுணர்களும் யோசனை நிகழ்த்தினார்கள். சண்டையில் குறைஷிகளுக்குச் சாதகமான முடிவு ஏற்படாதுபோல் சகுனங்கள் அமைந்திருப்பதாக அவர்களின் பேச்சிலிருந்து அபூஜஹல் யூகித்துக் கொண்டான்.
“அப்படியானால், இந்தச் சாதகமில்லாத கெட்ட நேரத்தில் போர் நிகழ்த்துவதற்குப் பதிலாக, தனித்தனி வீரர்களைக் களத்தில் விட்டு முடிவு காணுவோம்!” என்று எதிரிகள் முடிவு செய்தனர்.
அக்காலப் போர் முறையில் ஒருவகை என்னவென்றால், களத்தில் இரு படைகளும் எதிரெதிரே சற்று இடைவெளிவிட்டு ஓரமாக அணிவகுத்து நிற்கும். அப்போது இரு தரப்பிலிருந்தும் ஒவ்வொரு வீரர் முன்வருவார். அவ்விருவரும் கைச் சண்டை, வாள்வீச்சு முதலிய போராட்டங்களை நிகழ்த்துவர். எவர் ஜெயிக்கிறாரோ அவருடைய கட்சி போரில் வென்றதாக முடிவாகும். இந்த முறையைக் குறைஷியர் தேர்ந்தெடுத்தனர்.
மூன்று முரட்டு வீரர்கள் முன்வந்து, “எங்கே, உங்கள் கட்சியிலிருந்து மூன்று பேர் முன் வருவீர்களாக!” என்று அறைகூவினர்.
முஸ்லிம் படையிலிருந்து ஹம்ஸா (ரலி), அலீ (ரலி), உபைதுல்லாஹ் இப்னு ஹாரித் (ரலி) என்னும் மூன்று வீரர்கள் முன்வந்தனர். நொடிப் பொழுதில் மூன்று குறைஷி வீரர்களையும் இந்த முஸ்லிம் குருளைகள் வீழ்த்திவிட்டார்கள். தோல்வியை ஏற்றுக்கொண்டு மரியாதையாகக் குறைஷிகள் சமாதானமாகி விட்டிருக்கவேண்டும். அதுதானில்லை! குபீரென்று வெறித்தனமாய் அவர்கள் முஸ்லிம்கள்மீது பாய்ந்தார்கள். இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் தோன்றிய மிகக் கடுமையான சோதனை இது.
மணல் மேடுகளிலிருந்து குறைஷிகள் பெருங் கூக்குரலுடன் களம் நோக்கி விரைந்தோடி வந்தார்கள். இதைக் கண்ட நபிபெருமான் (ஸல்), “இறைவா! இதோ குறைஷியர்கள் தங்கள் அத்தனை குதிரைப் படைகளுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் உன்னை எதிர்த்துப் பாய்ந்து வருகிறார்கள்; உன்னுடைய தூதரை மறுத்து எகிறிக் குதித்து வருகிறார்கள். என் இறைவா! நீ எனக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை நான் இச் சந்தர்ப்பத்தில் உனக்கு நினைவூட்டுகிறேன். இவர்களை இன்றே, இக்கணமே பணியச் செய்திடுவாய்!” என்று முறையிட்டார்கள்.
எதிரிகள் வெறியுடன் புகுவதை எவரே தடுக்க முடியும்? வெயிலின் நிழலுக்காகவென்று முஸ்லிம்கள் நிருமித்திருந்த ஒரு பந்தலடியில் பெருமானார் அமர்ந்திருந்தார்கள். மன ஒருமைப் பாட்டுடன் அவர்கள் இறைவனைத் தொழுதார்கள்; உணர்ச்சிவசப்பட்டு எழுந்தார்கள்; கல்லும் உருகிவிடும் கடும் தீனக் குரலில் வாய்விட்டுப் பிரார்த்தித்தார்கள்: “யா அல்லாஹ்! எங்கள் இச் சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப்பட்டுவிடுமானால், உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமற் போய் விடுவரன்றோ?” இவ்வாறு உருக்கத்துடன் பிரார்த்தித்துவிட்டு அவர்கள் மெய்ம்மறந்து துரியாதீத தியானத்துள் மூழ்கிவிட்டார்கள்.
மறுகணமே அவர்கள் உணர்வுடன் எழுந்து, பக்கத்தில் நின்றிருந்த அபூபக்ரை நோக்கினார்கள். “வாக்களிக்கப்பட்ட ஒத்தாசை இதோ நமக்கு கிட்டிவிட்டது!” என்று சொன்னார்கள். மற்றத் தோழர்களையும் இவ்வாறே உற்சாகப்படுத்தினார்கள். “சீக்கிரத்தில் எதிரிக் கூட்டம் முறியடிக்கப்பட்டுவிடும்; அவர்கள் புறமுதுகிட்டு ஒட்டம் பிடிக்கவும் போகிறார்கள்!” என்று சொல்லிக்கொண்டே, நபி பெருமான் (ஸல்) குனிந்தொரு பிடி மணலை அள்ளினார்கள். குறைஷிகள் நின்ற திக்கு நோக்கித் திரும்பினார்கள். எட்டி இரண்டடி வைத்து, கையை விரித்து மணலை அப்பக்கமாக ஊதினார்கள். “உங்கள் முகங்கள் கருகி விட்டன!” என்று கூறினார்கள். இறைத்த மணல் காற்றில் பறந்து எதிரிகள்மீது சிதறிற்று. அப்போது இறைவன் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினான். போரில் முஸ்லிம்களே வென்றார்கள். (ஹி. 2, ரமலான், 16 ; கி.பி. 624, மார்ச் 12)
313 அனுபவமில்லாத முஸ்லிம்கள் ஆயிரம் போர் வீரர்களை வென்றார்கள்; பலரைக் கொன்றார்கள்; சிறைப் பிடித்தார்கள்; விரட்டியடித்தார்கள். அப்பொழுது வெளியான இறைமறை திருவாக்கியம் (8:17) இவ்வாறு அறிவிப்புக் கொடுத்தது: “(முஸ்லிம்களே!) நீங்கள் அவர்களை வெட்டவில்லை; ஆனால், அல்லாஹ்வே அவர்களை வெட்டி வீழ்த்தினான். மேலும் (நபியே!) நீர் மண்ணை வாரி இறைத்தீரே, அதை நீர் எறியவில்லை; அதை அல்லாஹ்வே எறிந்தான்…”
ஆம்! இறைப் பெருங் கருணையாலும் சக்தியாலுமே அந்தப் போர் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. சேனைக்குத் தலைமை தாங்கி வந்த அபூஜஹல் உட்பட, இஸ்லாத்தின் கொடியை விரோதிகளான அத்தனை தலைவர்களும் களத்தில் சாய்ந்தார்கள். மொத்தம் எழுபது நச்சரவுகள் செத்து மடிந்தன. தலைவர்கள் வீழ்வதைக் கண்ட படையினர் புறமுதுகிட்டோடினர். எழுபது பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களுள் 14 பேரே கொல்லப்பட்டனர்.
வெயில் மறைகிற நேரத்துக்குள் எல்லாம் முடிந்தன. புறமுதுகிட்டு ஓடியவர்கள் களத்தில் பல பொருள்களைப் போட்டுவிட்டுப் பறந்தனர். முஸ்லிம்கள் அப் பொருள்களைச் சேகரித்துக் கொண்டே வந்தபோது, அங்கு வீழ்ந்து கிடந்த பிணங்களினிடையே முனகல் சப்தம் கேட்டது. தீவட்டி கொண்டுவந்து வெளிச்சத்தில் பார்த்தபோது, அபூஜஹல் குத்துண்டு, உதிரம் கொட்டி, மரணத் தறுவாயில் நெளிந்து கிடப்பது தெரிந்தது. அவனைக் காயமுண்டு பண்ணி வீழ்த்திய இரு அன்சாரீ வீரர்கள் குனிந்து அவனது துருத்திக் கொண்டிருக்கும் கண்களை நோட்டமிட்டனர்.
“ஐயோ! என்னுயிர் என்னைவிட்டுப் பிரிய மறுக்கிறதே! என்னை ஒரு மொத்தமாகக் கொன்று விட்டிருக்கக்கூடாதா?… இந்த வேதனையை நான் இன்னம் அனுபவிக்க வேண்டுமா?… ஓர் உதவி செய்யமாட்டீர்களா?” என்று விம்மி ஏங்கிற்று அந்தக் குறைப் பிணம்.
“உதவியா? ஏ நரகத்தின் கொள்ளிக் கட்டையே! உனக்கு உதவியும் தேவையா?”
“ஆம்!… என்னைக் குத்திய அதே கத்தியால் எனது தலையைச் சீவிவிடுங்கள்! அதுவே நான் விரும்பும் பேருதவி!”
அன்சாரீகள் யோசித்தார்கள். இவனை இப்படியே வேதனையுடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மடியவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அபூஜஹல் அவர்களுடைய மனப்போக்கை யூகித்துக் கொண்டான்.
“எனது தலையை வெட்டி எடுத்துச் சென்று உங்கள் நபிக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.. அவர் கண்டு மகிழ்வார்; உங்களுக்கும் பரிசுகள் பல வழங்குவார்!”
அன்சாரீகள் சற்றே சிந்தித்தார்கள். ‘இவன் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. நபி பெருமானாரின் மிகக் கொடிய எதிரியாகிய இவனுடைய தலையைக் கொய்து எடுத்துச் செல்லத்தான் வேண்டும்’ என்று அவர்கள் துணிந்தார்கள்.
தாடி ரோமத்தை விலக்கி அவனது கழுத்தருகே கத்தியை ஓங்கிச் சென்றபோது அபூஜஹல் சற்றே தலையசைத்தான்.
“வெட்டப் போகும்போது ஏனடா பின் வாங்குகிறாய்?” என்று ஒரு அன்சாரீ கேட்டார்.
“வெட்டுகிறதுதான் வெட்டுகிறாய்: கழுத்தை ஒட்டி வெட்டி விடாதே! சற்றே இடைவெளிவிட்டு, கொஞ்சம் நெட்டையாக இறக்கி வெட்டு!”
“ஏன்?”
“அப்போதுதான் எனது மனம் சாந்தியுறும் உங்கள் முஹம்மதின் எதிரில் குவிக்கப்படும் அத்தனை தலைகளிலும் எனது தலைதான் மிகவும் உயரமாக இருக்க வேண்டும்… வாழ்நாளெலாம் நானே தலைவனாய் வாழ்ந்தேன். வெட்டுண்ட தலைகளுள்ளும் எனது தலையே மேலே நீட்டி உயர்ந்து நிற்க வேண்டும். செத்த பின்பும் நானே தலைவன்!”
அன்சாரீ ஒரே வீச்சில் அத் தலையை உருட்டிவிட்டார்; அக் கயவனைக் குறிப்பிட்டுச் சாபம் வழங்கும் இறை வசனங்களை (96 : 7—19) நினைவு கூர்ந்தார்.
உயிருடன் பிடிபட்ட கைதிகளுள் இருவர் மட்டுமே சிரச் சேதம் செய்யப்பட்டனர். ஏனென்றால், அவர்கள் அபூஜஹலைப் போன்ற அத்துணைக் கொடிய விஷமிகளாவர். (இந்தப் போர்க்களத்தில் நிகழ்ந்தன பற்றிய இறை வசனங்களைக் குர்ஆன் திருமறையின் 8—ஆவது அத்தியாயத்தில் பரக்கக் காணலாம்.)
மற்றக் கைதிகளை முஹம்மது நபி (ஸல்) நடத்திய பெருந்தன்மை மிக்க செயல்களை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அக் காலத்தில் இருந்த பழக்க வழக்கப்படி அத்தனை பேரும் நெருப்பில் சுட்டுப் பொசுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், என்ன நிகழ்ந்தது? அராபியர் சமுதாயம் அதுவரை கண்டறியாத கருனைப் பிரவாகம் கடலென எழுந்தது.
“தோழர்களே! எதிரிகளை உங்கள் சகோதரர்போல் நேசியுங்கள். அவர்கள் போரில் தோற்று நொந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் துன்புறுத்தாதீர்கள். கனிவுடன் அவர்களை நடத்துங்கள். இது என் மகத்தான கட்டளை,” என்று நபி (ஸல்) அறிவிப்புக் கொடுத்தார்கள். அத்தனை முஸ்லிம்களும் அக் கட்டளைக்கு அடி பணிந்தார்கள்.
தாம் சாப்பிடும் அதே உணவைத் தம்வசம் விடப்பட்ட கைதிக்கும் முஸ்லிம் தோழர்கள் பகிர்ந்தளித்தார்கள். அது மட்டுமில்லை. சிறந்த ரொட்டித் துண்டுகளைக் கைதிகளுக்கு ஊட்டிவிட்டு, அனேகம் முஸ்லிம்கள் வெறும் பேரீச்சம் பழத்தைத் தின்று திருப்தியுற்றார்கள்.1
தொடரும்…
-N.B. அப்துல் ஜப்பார்
1 இஸ்லாத்தின்மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருந்த சர் வில்லியம் மூய்ர் (Sir William Muir) என்பவர்கூட இவ்வாறு தமது நூலில் எழுதியிருக்கிறார்: “முஹம்மதின் கட்டளையை ஏற்று மதீனாவின் குடிமக்கள் மிகவும் மெச்சத் தக்கவகையில் நடந்துகொண்டார்கள். முஹாஜிரீன்களுள் (மக்காவிலிருந்து வந்த அகதிகளுள்) சொந்தமாய் வீடு வைத்திருந்தவர்கள் இக் கைதிகளைத் தங்கள் இல்லத்துக்கு அழைத்தேகினார்கள். அங்கே அவர்கள்மீது அன்பு மாரி பொழிந்தார்கள். அவ்வாறு கைதியாய்ச் சென்று வாழ்ந்த ஒருவர் பின்னொரு காலத்தில், ‘மதீனாவாசிகள் மீது இறைவன் ஆசீர்வாதங்களை வழங்குவானாக!’ என்று பாராட்டினார். மேலும் அவர், ‘அந்த மதீனாவாசிகளின் கருணையை என்னென்பேன்? அவர்கள் கால்நடையாக நடந்து, எங்களை வாகனங்களின் மீது அமர்த்திச் செல்வார்கள். மிகக் கொஞ்சமான கோதுமை ரொட்டி அவர்களுடைய வீட்டிலிருக்கும். அதை அவர்கள் சாப்பிட மாட்டார்கள்; எங்களுக்கே கொடுத்துவிடுவார்கள். அவர்களோ காய்ந்துபோன பேரீச்சம் பழங்களைத் தின்று போதுமாக்கிக் கொள்வார்கள்,’ என்றும் புகழ் பாடியிருக்கிறார்.” ⇑
<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License