மதீனா நகரம் மக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்லும் வர்த்தகப் பாதையாகிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. எனவே, குறைஷி வர்த்தகர்கள் தங்கள் சரக்குப் பொதிகள்
ஏற்றிய ஒட்டகங்களை மதீனாவைக் கடந்துதான் வடக்கேயோ, சிரியாவிலிருந்து தெற்கேயோ கொண்டு செல்ல வேண்டும். வேறு வசதியான மாற்று வழி ஏதும் கிடையாது. மதீனா பலம் பெறுகிறதென்றால், மக்காவாசிகளுக்கும் அவர்களுடைய வர்த்தகத்துக்கும் அது ஒரு கழுத்துச் சுருக்காக ஆகி வருகிறது என்று அர்த்தம். அல்லாமலும், அக்கால பாரசீக, மற்றும் பைஸாந்திய சாம்ராஜ்யத் தலைநகர்களும் வர்த்தகத்தலங்களும் மக்காவைவிட மதீனாவுக்கே அண்மையிலிருந்தன. இஸ்லாத்தை ஏற்று மதீனாவில் குடிபுகுந்திருக்கும் சில பிரபல மக்கா வர்த்தகர்கள் அவர்களுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதையும் வெளியூர் அங்காடிகளில் போட்டியிட்டு மக்கா வாணிகர்கள் குறிப்பிடும் விலையை விடக் கம்மியாகக் கூறி வாடிக்கைக்காரர்களை வசீகரிப்பதையும் எந்த மக்காவாசிதான் பொறுத்துக் கொள்வான்?
மேலும் சிரியா நாட்டில், மதீனாவின் சரக்குகள் கம்மியான விலையில் விற்கப்பட்டன. 400 கி.மீ. அதிக தொலைவிலிருந்து அதே சரக்குகளைக் கொணர்ந்து மக்கா வர்த்தகர்களுக்குக் கொள்முதல் கிரயத்தைக் கூடத் தேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வெளி அங்காடிகளில் வாங்கும் சரக்குகளுக்கு மக்கா வர்த்தகன் என்ன விலை கொடுக்கத் தயாராக இருந்தானோ அதனினும் கூடுதலான விலை கொடுத்து மதீனா வர்த்தகர்கள் வாரிச் சென்றார்கள். இப்படியாக, வாணிகமென்னும் ஜீவநாடியைக் குறைஷிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிகொடுக்க நேர்ந்தது.
அல்லாமலும், பெரும் புளுகு புளுகியும் பொய்ச் சத்தியம் செய்தும் திருட்டுப் புரட்டுகள் செய்தும் கள்ள வர்த்தகம் புரிவதில் வல்லவர்களான இவர்களை மெய்யே பேசும், சத்தியத்துக்குக் கட்டுப்படும், மிக நேர்மையுடன் நடந்துகொள்ளும் மதீனாவாசிகள் வர்த்தகச் சந்தையில் வென்றுவிட்டார்கள். சத்தியம் ஜயம் பெறுவதையும் அசத்தியம் அழிவதையும் மக்காவின் முண்டர்கள் கண்ணாரக் கண்டார்கள். ஓரிரு ஒட்டகப் பொதிச் சரக்கை வைத்துக்கொண்டு உபத்திரவம் அனுபவித்த அவர்கள் சுட்டெரிக்கும் பொறாமைக் கண்களுடன் மதீனா வர்த்தகர்களின் 700 ஒட்டகக் கார்வான் கூட்டங்களைக் கண்டு வயிறெரிந்தார்கள்.
‘புது மதத்தை நிறுவுவதாகச் சொல்லி, சிரியாவுக்குச் செல்லும் நெடுவழிப் பாதையில் போய்க் குந்திக்கொண்டு, மதீனாவாசிகளை மயக்கி, மக்கா வர்த்தகர்களின் பிழைப்பில் மண்விழச் செய்கிற இந்த ஹாஷிம் வமிசக் குலக் கோடரியை என்ன செய்வது?’ என்னும் கோபம் குறைஷிகளுக்கு ஆத்திரமூட்டிற்று. மதீனாவின் உள்ளூர்க் கட்சிக்காரர்களை ஒன்றுபடுத்தி வருவதுடன், யூதப் பெருந்தனக்காரர்களையும் அவர் எப்படியோ வசீகரித்து மயக்கி விட்டாரோ என்னும் பொறாமைத் தீயும் சுடர்விட்டெழுந்தது. இனி மக்காவாசிகள் உருப்பட வேண்டுமென்றால், இழந்த வாணிகத்தை மீட்க வேண்டுமென்றால், பொருளாதாரத்தையும் சுபிட்சத்தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டு மென்றால், உடனடியாகத் தீவிரமாகச் செயல்பட்டே தீரவேண்டும் என்னும் பயங்கர முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
மக்காவில் எல்லாக் குறைஷித் தலைவர்களும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.
“ஊரை விட்டு ஓடிய உபத்திரவம் இப்போது எல்லை வெளியில் உச்சிக் கிளையில் ஏறி மகத்தான தொந்தரவு கொடுக்கிறது. மதீனாவில் ஒழுங்கான ஒரு சமுதாயம் உருவாகி வருகிறது. எல்லா முஸ்லிம்களும் ஒன்றாய் ஐக்கியமாகி, ஒரு சட்டதிட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். முஹம்மதையே அவர்கள் முடிசூடா மன்னராக உயர்த்திக் கொண்டார்கள். நம்முடைய வர்த்தக உரிமை என்னும் ஏகபோகத்தை அவர்கள் பறித்து வருகிறார்கள். கஅபாவின் பாதுகாவலர்கள் என்று பெருமை பெற்று அகில உலக மக்களும் நமக்கு மரியாதை நல்கிவரும் சிறப்பை நாம் சீக்கிரமே பறிகொடுக்க நேரிடலாம். சுவர்க்கத்துக்கு வழி காட்டுவதாகச் சொல்லி ஒரு புது மதச் சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்து வந்தவர், இப்போது மதீனாவில் இருந்து கொண்டு நமது சகல உரிமைகளையும் பொசுக்க முற்பட்டிருக்கிறார். அவர் கூடிய சீக்கிரத்தில் மதீனாவிலும் அதன் சுற்றுப் புறத்திலும் உள்ள எல்லா ஜாதியார்களையும் தமது கட்சியில் சேர்த்துக் கொண்டு மக்கா மீதே படை எடுத்து வந்தாலும் அதிசயமில்லை. ஏற்கனவே அவர் யூதர்களை தமது கட்சியில் சேர்த்துக் கொண்டுவிட்டாராம். எனவே, நாம் உடனே விழிப்படைந்து நம்முடைய கரங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் புதுச் சமுதாயத்தை இருக்குமிடம் தெரியாமல் விரட்டியோட்டுவோம்; என்றென்றும் நமது சமுதாயமும் நாகரிகமும் மட்டுமே தொடர்ந்து நீடிக்கப் பாடுபடுவோம்.”
இப்படி யெல்லாம் அந்த வாலறுந்த நரிக் கூட்டம் பேசித் தீர்ந்தது. பேசியதுடன் நில்லாமல், அக் குறைஷியர் செயல்படவும் தொடங்கினார்கள். மதீனாவில் கஸ்ரஜ் கூட்டத் தலைவனாகிய அப்துல்லாஹ் இப்னு உபை செல்வாக்கு மிக்கவனாக விளங்கியது இவர்களுக்குத் தெரியும். அவனே யதுரிப் வாசிகளின் மன்னனாக முடி சூட்டிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்திருந்தான் என்பதையும் அறிவார்கள். நபி (ஸல்) மதீனாவில் புகுந்து, அவர்களே சகல துறைகளிலும் மேலோங்கி வருவதால் அவன் பொறாமையால் புழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர்கள் இரகசியமாகத் தூதுவிடுத்தார்கள். தலைவனாய் உயரும் நல்வாய்ப்பை இழந்த அவன் இப்போது மீண்டும் உயர்வு பெறுவதற்கு ஒரே மார்க்கம் இருக்கிறது என்று அத் தூதர்கள் தூபம் போட்டார்கள்.
“வெளியூரிலிருந்து இங்கு வந்து குடியேறி, இல்லாத புரட்சிகளையும் விளைத்து, அமைதிக்கு முஹம்மத் பங்கம் உண்டுபண்ணுகிறார் என்று நீர் ஓர் எதிர்ப்பைக் கிளப்பி விடுவீராக. உம்முடைய கோத்திரத்தார்களை உசுப்பி விடுவீராக. உமக்கு நாங்கள் மக்காவிலிருந்தே பொருள் சகாயத்தையும் மற்றும் உதவிகளையும் அனுப்பி உமது கரத்தை வலுப்படுத்துகிறோம். எல்லா முஸ்லிம்களையும் அவர்களுடைய குருநாதரையும் எவ்வழியிலாவது நீர் இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும்,” என்று குறைஷித் தூதர்கள் அவனிடம் விண்ணப்பித்தார்கள்.
அவனோ, “எல்லாம் வரம்பு மீறிப் போய்விட்டதே! என்னுடைய கோத்திரத்தார் பலரும், எங்கள் எதிரிக் கோத்திர அவுஸ்காரர்கள் பலரும் ஏற்கெனவே முஸ்லிம்களாகிவிட்டார்களே! தினம் தினம் அவர்களுடைய பக்தி வளர்ந்து வருகிறதே யொழிய, அவர்களுடைய கட்சியும் வலுப்பெற்று வருகிறதே யொழிய, என்னுடைய கை ஓங்கும் என்கிற நம்பிக்கை நலிந்து வருகிறதே!” என்றான்.
“எதிர்த்துக் கெடுக்க முடியாமற் போனால், அடுத்துக் கெடுக்க வேண்டியதுதானே? இதிலென்ன யோசனை?” என்று குறைஷிகள் முடுக்கிவிட்டார்கள். இந்த மந்திரம் வேலை செய்தது.
“நானும் என் தோழர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகப் பசப்பி, பொய்யாய் நடித்து அவர்களிடையே புகுந்துவிடுகிறோம். பிறகு உள்ளே இருந்தபடியே உலை வைக்கிறோம்!” என்று அவன் வாக்களித்தான். இச் செய்தியறிந்த அபூஜஹல் போன்றவர்கள் இதை ஆமோதித்தார்கள்.
“அப்துல்லாஹ் ரொம்பவும் புத்திசாலி, வெளிப்படையாக அவன் தன் இனமக்களைத் தூண்டிவிட்டால் உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்; நமது எண்ணமும் நிறைவேறாது. மாறாக, அவன் முஸ்லிம்களின் மத்தியிலேயே புகுந்து கபட நாடகம் ஆடினால்தான் எதுவும் கைகூடிவிடும். பேஷ்!”
இவ்வளவுடன் அவர்கள் சும்மா விடவில்லை. மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள பரந்த வெளியில் பல காட்டரபி வமிசங்கள் அங்கங்கே வாழ்ந்து வந்தன. இந்த வமிசங்களைச் சேர்ந்தவர்கள் கஅபா ஆலயப் பாதுகாவலர்களாகிய மக்கத்துக் குறைஷிகளை ஆசாரியர்களாக, வழி காட்டிகளாகப் போற்றி வந்தார்கள். அப்படிப்பட்ட ஏமாளிகளிடம் நபியவர்களின் எதிரிகள் நெருங்கினார்கள்.
“பேராபத்து வந்துவிட்டது. எல்லாம் பறிபோய்விடும் போல் தோன்றுகிறது. நமது புனித கஅபா ஆலயத்தையும் அத்தனை சாமிகளையும் நமது உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எனவே, கூட்டம் கூட்டமாக நீங்கள் யாவரும் எங்களுடன் நேசம் பூண்டு எங்கள் கரத்தை வலுப்படுத்துங்கள். புதிய மதத்தையும் அதைப் போதித்துப் பரத்துகிறவர்களையும் நாம் ஊதித் தொலைக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?” என்னும் பிரசாரம் வலுத்தது.
இரகசியமாக எதிரிகள் செய்யும் இத்தனை சூழ்ச்சியும் இறையறிவிப்பு மூலம் அவ்வப்போதும் முஸ்லிம்களுக்குத் தெரிந்துவிட்டன. எனவே, வளரும் சமுதாயத்தைக் காப்பாற்றும் விஷயத்தில் முழு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் அறிந்தார்கள். அப்துல்லாஹ் போன்ற நயவஞ்சகர்களின் சதிச் சூழ்ச்சி உருவாகப்போவது நிச்சயம். என்னதான் உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் யூதர்களை நம்ப முடியாது. எனவே, தக்க பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் ஆரம்ப முதலே செய்து கொள்ள வேண்டிய அவசியம் நபி (ஸல்) மீது சார்ந்தது. நிலைமையை வெற்றிகரமாய்ச் சமாளிக்க அவர்கள் அன்று முதல் சிறந்த ராஜதந்திரியாகச் செயல்படலானார்கள்.
மதீனாவாசிகளின் சுபிட்சத்தைக் கண்டு மக்காவாசிகள் பொறாமையுற்று விட்டார்களல்லவா? அந்த வயிற்றெரிச்சலைத் தணித்துக் கொள்ள விஷம வேலைகளில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட மதீனாவின் எல்லைவரை அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொள்ளையடிக்கவும் கொலைகள் புரியவும் முற்பட்டார்கள். இந்த எழுச்சி கண்டு முஸ்லிம்கள் பீதியடையட்டும் என்பது அவர்களது எண்ணம். ஆனால், மதீனா முஸ்லிம்கள் கொஞ்சமும் அசையவில்லை. எனவே, ஒரு நாள் சில குறைஷிக் கொள்ளைக்காரர்கள் மதீனா நகருக்குள்ளேயே திருட்டுத்தனமாய் நுழைந்து, அங்கே மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த சில ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றார்கள். இதனாலாவது முஸ்லிம்கள் ஆத்திரமடைந்து போரெழுந்து வரட்டுமே என்பது அவர்களது திட்டம். பறிபோன ஒட்டகங்களை மரியாதையாகத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றுதான் அண்ணல் நபி (ஸல்) ஆள் விட்டனுப்பினார்களன்றி, திருப்பி ஒப்படைக்கத் தவறிவிட்டால் போர் மூளும் என்று இறுதி எச்சரிக்கையை விடுத்தார்களில்லை. இதனாலும் குறைஷியர் ஏமாற்றமடைந்தனர்.
|
எந்த ஒரு ஒழுங்கு நியதிக்கும் கட்டுப்படாத அம்முரடர்கள் இனிமேல் எந்தச் சாக்கை வைத்துக் கொண்டாவது மதீனா மீது படையெடுத்துச் செல்வதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்கள். நாசகாலம் வரும்போது வலுச் சண்டைக்கு ஏகுமாறுதான் விதி விளையாடும். உலக வரலாறு இந்த நியதியை எத்தனையோ முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களை எதிரிகள் எடுத்து வருகிறார்கள் என்பதை இறைவன் நபிக்கு அறிவித்துவிட்டான். அறிவித்ததுடன், வலிய நிகழும் பலாத்காரத்தை எதிர்த்துச் சமாளிக்கத் தற்காப்புப் போர் முறையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்கத்தான் வேண்டும் என்னும் நியதியையும் குர்ஆன் திருவாக்கியங்களின் மூலமாகப் போதித்துவிட்டான்.1 போர் மூண்டபின் தற்காப்புக்காக வாளுருவுவது ஒரு பக்கம் கிடக்கட்டும். அப்படி ஏதும் சண்டை மூளாமலே தடுத்துக் கொள்ள வழியில்லையா என்று நபியவர்கள் ஆலோசித்தார்கள். மிகச் சிறந்த மதியூகமிக்க பெரிய தந்திரியல்லவா அவர்கள்? எனவே, அவர்கள் இவ்வாறு செயல் பட்டார்கள்:
குறைஷிகள் என்ன திட்டமிட்டிருக்கிறார்கள்? எங்கே எங்கே எப்படி எப்படி நடமாடி வருகிறார்கள்? என்பனவற்றை முதலில் கண்டறிய வேண்டும். மதீனாவைச் சுற்றிலும் வாழ்கிற பதவீகளாகிய நாடோடி அராபியர்களுடன் முதலில் நட்புறவை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்துகளுடன் நபியவர்கள் சில சிறுசிறு குழுவினரை நாலா பக்கமும் அனுப்பி வைத்தார்கள். இந்தக் குழுவினர் எதிரிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமென்றும், கூடிய மட்டில் அதிகமான பதவீகளுடன் நட்புப் பூண வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டனர். ஆனால், எக்காரணம் பற்றியும் இவர்கள் எவருடனும் சண்டை சச்சரவு விளைத்துக் கொள்வதோ, பிணக்கை விளைவிப்பதோ அறவே கூடாதென்றும் தடை விதிக்கப் பெற்றார்கள்.
இம் மாதிரி சுற்றுப் பார்வையிடுகிறவர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்ததன் உள்நோக்கம் என்னவென்றால்: (1) முஸ்லிம்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்று எதிரிகள் நினைத்துவிடக் கூடாது. (2) விழிப்புணர்ச்சியுடன் இருக்கும் முஸ்லிம்கள் மீது பாய்ந்து படை யெடுப்பது ஆபத்தை விளைவிக்குமோ என்னும் அச்சத்தை எதிரிகள் உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும். (3) சண்டை மூண்டுவிட்டால், மக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்லும் வர்த்தகர்கள் வழி மறிக்கப்பட்டு விடுவரோ என்னும் பீதி அவர்களுக்கு இருக்க வேண்டும்; வர்த்தகப் பாதை நிரந்தரமாக அடைபட்டு விடுமோ என்னும் கிலிபிடித்து ஆட்டவேண்டும் என்பனவே.
மதீனா முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகிறார்கள்; வீண் உதிரம் சிந்தப்படுவதை வெறுக்கிறார்கள்; மக்காமீது படையெடுக்க வேண்டுமென்கிற எண்ணம் சிறிதும் அவர்களுக்கில்லை என்பதை எல்லாக் காட்டரபி வமிசத்தார்களும் புரிந்துகொண்டு விட்டார்கள். மக்காவாசிகள் மார் தட்டிக் கொண்டு வலுச் சண்டையைக் கிளப்ப நேசர்களைத் தேடித் திரிகிற அதே நேரத்தில், இத்துணைச் சாத்விகமாக மதீனாவாசிகள் தற்காப்பினிமித்தம் கட்சி சேர்ப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். என்னதான் போர் வெறிமிக்கவனாக ஒரு மனிதன் இருந்தாலும், அவனது இயற்கை யுணர்ச்சி இயல்பாகவே அவனைச் சமாதான வழிமுறைகளைப் பின்பற்றவே தூண்டிவிடுகிறதல்லவா? இந் நியதிக்கு ஏற்க, பெரும்பாலான பதவீகள் மதீனாவாசிகளுக்கு உதவி நல்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்கள். மேலும், இவர்கள் செய்து கொடுத்த உடன்படிக்கைகளும் முழுக்க முழுக்கத் தற்காப்பு நியதியுடன் கூடியனவாகவே இலங்கின. உதாரணமாக, காட்டரபிகளான பனூ ஹம்ஸா (Banu Hamza) என்னும் ஓர் இனத்துடன் நபி (ஸல்) செய்து கொண்ட உடன்படிக்கையின் வாசகத்தைப் பாருங்கள் : “முஹம்மது பனூ ஹம்ஸாக்களுக்கு எழுதிக் கொடுத்த சீட்டு இது. அவர்களுடைய உயிரும் பொருளும் பத்திரமாகக் காப்பாற்றப்படும். எவனாவது எதிரி இந்த வம்சத்தினரைத் தாக்கினால், உடனே முஸ்லிம்கள் ஓடோடி முன் வந்து எதிரியைத் தீர்த்துக்கட்ட எல்லாச் சகாயமும் புரிவார்கள். இஸ்லாத்தை எதிர்த்துப் போர் நிகழ்த்தினாலன்றி, வேறு எந்தப் போரில் இவர்கள் சிக்கிக் கொண்டாலும் முஸ்லிம்கள் உதவி புரிவர். இதற்குப் பகரமாக, நபியவர்களுக்கு எந்த ஓர் ஆபத்து வருவதாயிருந்தாலும் இவர்கள் முன்வந்து உதவ வேண்டும்.”
வலுச் சண்டைக்குச் செல்ல ஆள்பிடித்தார்கள் குரைஷிகள். ஆனால், அநியாயமாய் வரும் சண்டையை முறியடிக்கத் துணை தேடினார்கள் முஸ்லிம்கள். இப்படியிருந்தும், பழி சுமத்துவதற்கு எதிரிகள் தக்க நேரத்தைத் தேடிக் கொண்டுதான் இருந்தார்கள். (சிறுவர்க்கான சிறுகதையொன்றில் ஆட்டுக்குட்டியை ஓநாய் சாப்பிட்ட கதை தெரியுமல்லவா?)
தொடரும்…
-N.B. அப்துல் ஜப்பார்
Image courtesy: askislampedia.com
1. முஸ்லிம்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் இழிவு கற்பிக்க முற்பட்ட அந்தக் கால கிறித்தவ நூலாசிரியர்களும் பிரசாரகர்களும் இந்தத் திருவாக்கியங்களை மட்டும் தனியே எடுத்து, மேற்கோள் வழங்கி, மாசு கற்பித்து வந்தார்கள். ‘ஒரு கன்னத்தில் அறை விழுந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டச் சொன்ன’ தங்கள் ஏசுநாதர் சித்தாந்தத்துக்கு நேர் முரணாம் இவை. ⇑
<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License