மனம் வெதும்பி நபி பெருமானார் (ஸல்) தாயிஃபை விட்டுத் திரும்பிய பொழுது, மக்காவிலிருந்த ஒரு பிரமுகரான அல்-முத்இம் இப்னு அதீ என்பவர் நபியவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு நல்கி உதவி செய்வதாக வாக்களித்தார். இப் பிரமுகர் அவருக்குப் பக்கபலமாக நிற்கவே,

குறைஷிகள் சற்றே திகைத்தார்கள். இதே சமயத்தில் அந்த ஆண்டின் யாத்திரை உற்சவகாலம் வந்து, அமைதிக் கால அவகாசத்தைத் தந்தது. அப்பொழுது அரேபியாவின் பல வட்டாரங்களிலிருந்தும் கஅபா ஆலய தரிசனத்துக்கு வந்த யாத்திரிகர் குழுவையும் கூட்டத் தலைவர்களையும் நபி (ஸல்) சந்தித்தார்கள். ஆனால், பெரியப்பன் அபூலஹபோ எப்படியும் முந்திக்கொள்வான்.

“என் தம்பி மகன் ஒரு பைத்தியம். லாத், உஸ்ஸா போன்ற பெருந் தேவதைகளெல்லாம் வெறும் கற்பனைப் பொருள்கள் என்று பொய் பேசி உளறுகிற முஹம்மதின் பிதற்றலை நம்பாதீர்கள்,” என்று முட்டுக்கட்டை போடுவான்.

ஒரு முறை ஓர் அன்பருக்கு அபூலஹபின் வயிற்றெரிச்சற் பிரசாரத்தின் மீது சொல்லொணா அருவருப்பு மூண்டது. அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்:

“இந்த அல்அமீன் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய் பேசியதில்லையே?”

“ஆமாம்.”

“அப்படியானால், இப்போது ஏன் இந்தத் திடீர்க் குற்றச்சாட்டு?”

“நான் முஹம்மது பொய் பேசுவதாகச் சொல்லவில்லை. ஆனால், இறைவன் தன்னுடன் பேசுவதாகவும் தனக்கு அறிவிப்புக் கொடுப்பதாகவும் வேத வாக்கியங்களை அருளுவதாகவும் கூறுகிற கூற்றுத்தான் பொய் என்கிறேன்.”

அபூலஹபுக்குத் தான் மிக மதியூகமாகப் பதிலுரைத்து விட்டதாக ஒரு பரம திருப்தி!

யாத்திரை வந்திருந்த பல குழுவினரும் அபூலஹப் சொன்னதையே செவி மடுத்தார்களன்றி, நபியின் சத்போதனைகளைக் கேட்கவும் விரும்பவில்லை. எனினும், நபியவர்கள் சற்றும் சளைக்கவில்லை; தொடர்ந்து பிரசாரம் செய்தார்கள்.

“நாங்கள் உமது விளக்கத்தை மனமார ஏற்கிறோம். ஆனால், தொன்றுதொட்டுப் பல தலைமுறை காலமாக முன்னோர்கள் நிறுவிச் சென்ற பழைய கோட்பாட்டை எப்படித் திடீரென்று கைவிடுவது?” என்றனர் சில குழுவினர்.

பனூ ஆமிர் என்னும் வம்சத்தின் தலைவனாகிய பைஹராஹ இப்னு ஃபிராஸ் என்பவன், “அது சரி. நீர் வெற்றி பெறுகிறீர் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாங்கள் யாவரும் சேர்ந்து உமது கரத்தை வலுப்படுத்துவதாகவும் வைத்துக் கொள்வோம். அதனால் நீர் ஒரு பெரிய சாம்ரஜ்யத்தின் மாமன்னராக உயர்ந்துவிடுவீர். அப்பொழுது உம்முடைய பரந்த ராச்சியத்திலிருந்து எங்களுக்கெல்லாம் என்ன வீதத்தில் பங்கு வழங்குவீர்?” என்று கேட்டான்.

“இறைவன் எவரை நாடுகிறானோ அவரை அரசனாக்குவான்; இறைவன் எந்த அரசன் மீது அதிருப்தி கொள்கிறானோ அவனிடமிருந்து நாட்டைப் பறித்துவிடுவான். இப்படியிருக்க, இதில் நான் யார், நடுவில் நின்று பேரம் பேச?” என்றார்கள் நபியவர்கள். அரசியல் உலகில் நரித் தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் பிறரின் சகாயத்தைத் தக்க சமயத்தில் பெற்றுக் கொள்ளவே விரும்புவர்; வண்டிக் கணக்கில் பொய்யுரைப்பர்; நிறைவேற்ற முடியாத (அல்லது மனமில்லாத) வாக்குறுதிகளை வாரி வீசுவர். ‘நாளைக்கு அதிகாரம் நமது கைக்கு வந்த பிறகு இந்தப் பேராசைக்காரர்களுக்குச் சரியான புத்தி புகட்டுவோம்’ என்று தங்களுக்குள் நினைத்துக் கொள்வர். இந்த இயல்பான நியதிக்கு நேர் முரணாக நபியவர்கள் சுடச் சுடத் தந்த பதில் பனூ ஆமிர் கூட்டத்தினரையே திகைப்புக்கு உள்ளாகிற்று.

நாடாளும் மன்னராக உயர வேண்டுமென்று எண்ணாமல், மக்களைச் சீர்திருத்துவதே தமது நோக்கமென்று கூறிய நபி அச் சமுதாயத்தினருக்கு ஒரு பெரும் புதிராகவே இலங்கினார்.

மக்கா நகருக்கு 400 கி.மீ.க்கு வடக்கே மதீனா என்னும் நகரம் இருக்கிறது. அந் நகர் அக்காலத்தில் யதுரிப் என்று அழைக்கப்பட்டது. அவ்வூரில் கஸ்ரஜ் (Khazraj) என்றொரு வமிசத்தினர் வாழ்ந்து வந்தார்கள். அந்த வமிசப் பிரமுகர்கள் சிலர் யாத்திரையாக மக்காவுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் தங்களூரிலிருந்த யூதர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்கள். அடிக்கடி யூத குருமார்கள் தங்கள் வேதாகமங்கள் அரேபியாவில் தீர்க்கதரிசி ஒருவர் அவதரிக்கப் போகிறார் என்று உபதேசித்திருப்பதாக அறிவித்ததை இவர்கள் கேட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரை குறைப் பக்குவமான நம்பிக்கையுடன் வந்திருந்த யாத்திரிகர்களிடம் நபியவர்கள் நெருங்கி, இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் தந்தார்கள்.

அவர்களுள் ஆறு நபர்கள் வாக்களிக்கப்பட்ட அந்த நபி இவரே என்று கண்டு கொண்டார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். நபிப் பட்டம் வந்து 11-ஆம் ஆண்டில் இது நிகழ்ந்தது.

இஸ்லாத்தை ஏற்ற இந்த ஆறு பேரும் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகள் யதுரிப் (மதீனா) நகர் எங்கும் பரவிற்று. ஆர்வமிக்க 12 பேர் மறு ஆண்டில் மக்காவுக்கு யாத்திரையாகச் சென்றார்கள். அவர்கள் அகபா (Aqabah) என்னுமிடத்தில் திரு நபியைச் சந்தித்தார்கள்.  சந்தித்ததும், நபியவர்களது கரத்தைக் கனிவுடன் பற்றி, “நாங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு எந்தச் சாமியையோ தேவதையையோ வணங்க மாட்டோம். நாங்கள் திருடமாட்டோம், களவாடமாட்டோம்; எந்தப் பெண்ணின் கற்பையும் கவர மாட்டோம்; எங்களுக்குப் பிறக்கும் எந்தச் சிசுவையம் கொல்லமாட்டோம்; பிறர் மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தமாட்டோம்; நபி போதிக்கும் எந்த ஒரு நேர்மையான கட்டளைக்கும் நாங்கள் மாறு செய்யமாட்டோம்!” என்று அவர்கள் உறுதி செய்து வாக்களித்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் இது ‘அகபாவின் முதல் உறுதி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகின்றது. (நபிப் பட்டம் வந்த 12-ஆம் ஆண்டு நிகழ்ச்சி இது.)

மதீனா நகரில் இஸ்லாமிய பிரசாரம் செய்யும் பொறுப்பை முஸ்அப் இப்னு உமைர் (ரலி) எனும் தோழரிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அந்தத் தோழரின் முயற்சியின் பயனாக, அங்கே மிக வேகமாக இப் புதிய மதக் கோட்பாடு வளர்ச்சியுற்றது. கஸ்ரஜ் வமிசத்தினர் மட்டுமின்றி, மதீனாவிலிருந்த மற்றொரு வமிசமாகிய அவ்ஸ் (Aus) என்னும் கூட்டத்தினருள் பலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அடுத்த (13-ஆம்) ஆண்டின் யாத்திரைக் காலத்தில் ஆண்களும் பெண்களுமான 73 பேர் மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்தார்கள். முன்ப சந்திப்பு நிகழ்ந்த அதே அகபா என்னுமிடத்திலேயே நபி (ஸல்) இவர்களையும் சந்தித்தார்கள். அப்பொழுது அவர்கள், “இங்கிருந்து உபத்திரவங்களை அனுபவித்தது போதும்; தாங்கள் தயவு செய்து எங்களுடன் சேர்ந்து யதுரிபுக்கு வந்துவிடுங்கள். நாங்கள் தங்களை எங்கள் கண்ணினும் கருத்தாகக் கவனித்துக் கொள்கிறோம்,” என்று கோரிக்கை விடுத்தார்கள்.

அப்பொழுது அப்பாஸ் (Abbas) என்னும் நபியின் சிறிய தந்தை அங்கே உடன் இருந்தார். இவர் இன்னம் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தார்; எனினும், நபியின் பாதுகாவலரென்ற முறையில் நட்புறவை நீடித்து வந்தார். இவர் அந்த யாத்திரிகர்களிடம் இவ்வாறு கூறினார்:

“எங்களிடையே முஹம்மது பெற்றிருக்கிற அந்தஸ்தை நீங்கள் அறிவீர்கள். இவருடைய கொடும் பகைவர்களிடமிருந்து இதுவரை நாங்கள் இவரைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்; காப்பாற்றியும் வருகிறோம். இப்போதும் இவர் இங்கே பத்திரமாகவே இருந்து வருகிறார்; இவருக்கு யாவரும் மரியாதை வழங்கித்தான் வருகின்றனர். இப்படியிருக்க, உங்களுடன் சேர்ந்து உங்கள் நகருக்கு இவர் வந்துவிட வேண்டும் என்று நீங்கள் கோருகிறீர்கள். இவரை இறுதிவரை உங்களால் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்கென்று நீங்கள் அளிக்கும் உறுதிமொழியை உங்களால் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? எத்தகைய ஆபத்து வருவதாயிருந்தாலும் இவரை ரட்சிக்க உங்களால் முடியுமா? – இப்படியெல்லாம் உறுதியளிக்க முடியாதென்று கருதுவதாயிருந்தால், இப்போதே அவ்வெண்ணத்தை நீங்கள் கைவிடுங்கள். ஆனால், அராபியரும் அராபியரல்லாதாரும் ஒன்றுகூடி எதிராகத் திரண்டு வரினும், அந்த மகத்தான எதிர்ப்பையும் உங்களால் சமாளிக்க முடியும் என்னும் உறுதியான நம்பிக்கை இருந்தால் மட்டுமே இவரை நீங்கள் தாராளமாக அழைத்துச் செல்லலாம்.”

இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டும். அதாவது, அந்தக் கால அராபியரின் சமுதாயத்தில் ஒரு நியதி இருந்தது. கூட்டம் கூட்டமாக, கோத்திரம் கோத்திரமாகப் பிரிந்து வாழ்ந்த அவர்கள் தத்தம் இனத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவர்: அல்லது சரண் புகுந்தவர்களுக்கே ஆதரவு நல்குவர். இந்நியதிக்குப் புறம்பாக, எங்கோ தொலை தூரத்தில் வாழும் கஸ்ரஜ் வமிசத்தினரும் அவ்ஸ் வமிசத்தினரும் எப்படி இந்த மக்காவின் பனூஹாஷிம் குலத்து அங்கத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று இயல்பாகவே அப்பாஸ் ஐயங் கொண்டார். ஆனால், அந்த அன்னியக் குழுவினரோ மிகவும் திறந்த மனத்துடன் பேசினார்கள்:

“சத்தியமாகச் சொல்கிறோம். எங்கள் உயிரைக் கொடுத்தும் இவரைக் காப்பாற்றுவோம். நபியவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படியே நாங்கள் உறுதியளிக்கவும் காத்து நிற்கிறோம்.”

அப்பொழுது நபி (ஸல்) குர்ஆன் திருவாக்கியம் ஒன்றை ஓதி ஒப்பித்தார்கள்; ஒரு சிறு சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள். “என்னுடைய எதிரிகள் எனக்கு ஓயாத உபத்திரவங்களை உண்டு பண்ணி வருகிறார்கள்; இன்னம் போகப் போக அதிக வேதனையை விளைப்பார்கள். நீங்கள் உங்கள் மனைவி மக்கள் மீது அன்பும் அக்கறையும் காண்பித்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவீர்களோ அதே மாதிரி எனக்கும் பந்தோபஸ்து நல்குவீர்களா?” என்றும் நபியவர்கள் கேட்டார்கள்.

வந்திருந்த கூட்டத்தினரின் தலைவராகிய பராஆ இப்னு மஅரூர் (ரலி) என்பவர் தமது உள்ளங் கையை நபியவர்களின் கைமீது பொருத்தி அழுத்தினார். “இறைவன் மீது பிரமாணமாக! நாங்கள் இறுதிவரை உங்களைக் காப்பாற்ற எங்கள் உயிர்களையும் தியாகம் செய்யக் காத்திருக்கிறோம். இது சத்தியம்!” என்று உறுதியளித்தார். இதுவே ‘அகபாவின் இரண்டாவது உறுதி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அப்பொழுது வந்திருந்த 73 பேர்களுள் குறிப்பிட்ட 12 நபர்களைத் தலைவர்களாக நபியவர்கள் நியமனம் செய்தார்கள். அன்றே அவர்களுக்கு அன்சார் (உதவியாளர்கள்) என்னும் காரணப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது.

இந்தச் சந்திப்பும் உறுதி மொழி ஒப்பந்தமும் பரம ரகசியமாக நடந்தன. எனவே, மதீனாவிலிருந்து யாத்திரையாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களோ, அல்லது மக்காவாசிகளோ இந்த இரகசியத்தை அறியவில்லை. ஆனால், யாத்திரை முடிந்து அவரவரும் தத்தம் ஊருக்குத் திரும்பிய வேளையில் எப்படியோ மக்கத்துக் குறைஷிகள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். நபிக்கு உதவி நல்குவதாக வாக்களித்துச் சென்ற அந்த மதீனா முஸ்லிம்களை எப்படியாவது வழியில் மடக்கிப் பிடித்துவிட வேண்டுமென்று இவர்கள் துடித்தார்கள்; பறந்து பாயும் குதிரைகள் மீது ஏறி, அந்த மதீனாவாசிகளின் ஒட்டக வரிசைக் கூட்டத்தைத் தாவிப் பிடிக்க விரைந்தோடினார்கள். ஆனால், எட்டாத தொலைவுக்கு அக்கூட்டம் முன்னேறிவிட்டது. எனினும், அந்த 73 பேரில் இருவரை மக்காவாசிகள் எப்படியோ வளைத்துவிட்டார்கள். இருவருள் ஒருவர் தப்பியோடி விட்டார். ஆனால், ஸஅத் இப்னு உபாதா (ரலி) என்பவர் இசகு பிசகாக மாட்டிக் கொண்டார். இவரைக் கயிறு கொண்டு இறுகக் கட்டிப் பிணைத்து மக்காவுக்கு இழுத்து வந்து சேர்த்தார்கள் குறைஷிகள்.

அப் பரிதவிக்கத்தக்கவரின் இரு கரங்களையும் தூக்கி இரு புறத் தூண்களில் பிணைத்து, கடும் விசாரணையை எதிரிகள் நிகழ்த்தினார்கள். நல்ல வேளையாக அப்போது அந்தக் குறைஷியர் கூட்டத்தில் ஜுபைர் இப்னு அல்-முத்இம் இப்னு அதீ என்றொரு புண்ணியவான் இருந்தார். இவர் முன்பு ஒரு முறை சில நண்பர்களுடன் சிரியாவுக்குச் சென்று திரும்புகிற வழியில் பல இன்னல்களுக்கு இலக்காகினார். இவரும் அந் நண்பர்களும் மதீனா நகரில் புகலிடம் தேடினார்கள். அப்போது இந்த ஸஅத் அம் மக்காவாசிகளுக்கு உண்ண உணவளித்து, படுக்கப் பாய் கொடுத்து, பண உதவியும் செய்து வழியனுப்பி வைத்தார். இந்த நன்றிக் கடனை நினைத்து இக் குறைஷியும் இவருடைய சகாக்களும் இதில் தலையிட்டார்கள்.

“இவரொரு கண்ணிய புருஷர்; தன்னலத் தியாகி. மக்கா வாசிகளுக்கு இவர் சகாயம் நல்கியிருக்கிறார்; உயிர்ப் பிச்சை வழங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட உத்தமரான உதவியாளரை இம்சிப்பதோ, தண்டிப்பதோ அறவே கூடாது. செஞ்சோற்றுக் கடனுக்காக நான் இப்போது குறுக்கிடவில்லை. ஆனால், மக்காவாசிகளுக்கு இந்த மதீனாவாசி புரிந்த அத்தனை சகாயத்துக்கும் இதுவோ நாம் அளிக்கும் சிறந்த பரிசு?” என்று இவர் வழக்காடினார்.

ஸஅத் இப்னு உபாதா (ரலி) அக்கணமே விடுதலை செய்யப்பட்டார். அவர் மதீனாவுக்கு நல்லபடியாக திரும்பிப் போய்ச் சேர்ந்தார். இதுதான் தருணமென்று, மக்காவில் இருந்த முஸ்லிம்களும், நபியவர்களின் பல அந்தரங்கத் தோழர்களும், உற்றார் உறவினர்களும் சிறுகச் சிறுக, இருள் நேரங்களில் மக்காவைத் துறந்து வடக்கே மதீனாவக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். (நபிப் பட்டம் வந்த 13ஆம் ஆண்டு.)

எல்லா முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிச் சென்றபின், அங்கே மிச்சமிருந்தவர்கள் மூவரே. நபியும், அவர் தம் உத்தமத் தோழர் அபூபக்ரும், அபூத்தாலிபின் மைந்தர் அலீயும் ஆகிய இந்த மூவரைத் தவிர்த்து, மக்காவில் இப்போது அத்தனை ஆயிரக்கணக்கானவர்களும் கொடிய நிராகரிப்பாளர்களாகவே1 இருந்தார்கள். முப்பதாயிரம் முதலைகள் வாழும் நீர் நிலையில் மூன்று கோழிக் குஞ்சுகள் இருந்த கதையாக, கொடிய மூர்க்கர்களான பரம விரோதிகளினிடையில் முஹம்மது (ஸல்) மக்காவிலேயே அசையாமல் இருந்தார்கள் என்றால், அவர்களுடைய உறுதியான இறைபக்தி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று எல்லாருமே சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உறுதியான உளநம்பிக்கை இருந்தாலன்றி எவனும் பெரிய பக்தனாக உயர்ந்துவிட முடியாது. துணிச்சல் வேறு; நம்பிக்கை வேறு. அதிலும், தெய்வ நம்பிக்கை இருந்து தங்கிவிட்ட இரு தோழர்களின் மன உறுதியும் தெய்வ நம்பிக்கையும் இணையற்றன. இறை நம்பிக்கை ஒரு புறமிருக்க, இறுதிவரை நபியை விட்டுத் தனியே பிரிந்து செல்வதில்லை என்னும் மன உறுதியும் அவர்களுக்கு இருந்தது. குருநாதருக்கு ஆபத்து வருகிறதென்றால் ஓடி ஒளிந்துகொள்ளும் சீடர்கள்தாம் அதிகமின்றி, இறுதிவரை துணை நிற்போர் உலகில் மிகச் சிலரே.

மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் சென்றவர்களும் நபியவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே பிரிந்து சென்றனர். அவர்களும் ஒன்றும் தந்நலம் பேணி ஓடிவிடவில்லை. நபியவர்க்ள என்ன கட்டளையிடுகிறார்களோ அதை முற்றிலும் ஏற்று நடப்பவர்களாகவே அத்தனை மக்கா முஸ்லிம்களும் இலங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதீனாவாசிகளின் அழைப்பை ஏற்று, நபி (ஸல்) சுயநலத்துடன் முற்கூட்டி ஓடவில்லை என்பதை நாம் நினைவிலிருத்துவதும் அவசியமாம். தம் தோழர்களை அவர்கள் முதற்கண் காப்பாற்றிவிட்டார்கள்.

1. நபியை ஏற்க மறுக்கிற, அல்லது பல தெய்வ வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிற, அல்லது ஏக இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்கிற ஒருவன் அரபு மொழியில் ‘காஃபிர்’ (Kafir) என்று அழைக்கப்படுகிறான். தமிழில் இதை ‘நிராகரிப்பாளன்’ என்கிறோம். இணை கற்பித்துப் பூசித்தல் ‘ஷிர்க்’ எனப்படும். ஷிர்க் புரிகிறவன் ‘முஷ்ரிக்’ ஆவான்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment