ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம்.
அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் ஆகாத காரியத்தில் கொண்டு
போய்விடுகின்றன. இல்லையேல், ஒரு வஸ்து இழிவானதென் றறிந்தும், இதைச் செய்வதற்கு நமது ஷரீஅத் இடந்தரவில்லை யென்பதை யுணர்ந்தும், மனமார எப்படித்தான் கெட்ட காரியத்தில் பிரவேசித்தல் முடியும்? இவையனைத்தையும் உணர்ந்துகொண்டு இக்காரியத்தைச் செய்வதனால்தான் சிலர் தூர்த்தரெனவும் அறியாத மனிதர்களெனவும் சொல்லப்படுகின்றனர். ஏனெனின், இன்னவர் அறிந்தும் அறியாதவர்களேபோல் நடித்துத் தங்கள் இச்சைக் கிசைந்து நடந்து செல்லுகின்றனர். உதாரணமாக, இவர்களின் இச்சையின் உணரச்சியே இதைச் செய்யும்படியாய்த் தூண்டிவிடுகிறது. சில சமயங்களில் இக் காரியங்களில் தென்படும் நன்மைகளைக்காட்டினும் பதின்மடங்கு தீமையே காண்கின்றன. எனினும், அறியாத் தன்மையினால் இதைக் கவனிக்கிறார் களில்லை. அல்லது, கெட்ட நப்ஸானது இவன்மீது சவாரிசெய்து, ஞானமென்னும் கண்ணைமூடி, இக்கெட்ட காரியத்தில் பிரவேசிக்கும்படி செய்துவிடுகின்றது. காலஞ் செல்லச் செல்ல, இக்கெட்ட நாட்டம், நன்மை யென்பதை அறவே இவன் உணர்ந்து கொள்ளாதவாறு செய்து விடுகிறது. இதனால்தான், “ஒரு வஸ்துவின் அன்பு உன்னைக் குருடாகவும் செவிடாகவும் செய்துவிடுகிறது,” என்றொரு நாயக வாக்கியமும் காணப்படுகிறது.
இதை யொட்டியே நாயகம் (ஸல்) அவர்களின் உண்மை நேயர்களான சஹாபாக்களிடம், “அறியாத் தன்மையால் துர்ச்செயலைச் செய்துவிட்டு, உடனே பாப மன்னிப்பை ஆண்டவனிடம் தேடுபவர்களுக்கே தௌபா இருக்கின்றது” (4:17) என்னும் வாக்கியத்தின் கருத்தென்ன வென்பதை வினவியதாக அபுல் ஆலியா அவர்கள் திருவுளம் பற்றி யிருக்கின்றார்கள். (நபிகள் (ஸல்) அவர்கள் அபுல் ஆலியாவுக்கு கொடுத்த விடை இங்குக் காணப்படவில்லை. ஆனால், மற்றோரிடத்தில் மனிதன் பாபமான எக்காரியத்தைச் செய்துவிடினும், இவைகளெல்லாம் அறியாத்தன்மையையேசாரும் என்று விடை யளித்ததாய்க் கூறியிருக்கின்றார்.) எனவே, இங்கு மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியங்களில் என்னென்னவிதமான கெடுதிகளிருக்கின்றன? இவைகளை ஏன் விலக்கவேண்டும்? என்பதையும், இஸ்லாமிய ஷரீஅத்தில் செய்யவேண்டுமென்று கட்டளையிடப்பட்ட காரியங்களில் என்னென்ன நன்மைகளிருக்கின்றன? இவற்றைச் செய்வதால் மானிட கோடிகளுக் கென்ன பிரயோஜனம் விளையப்போகிறது? என்பதையும் இங்கு விவரித்துக் கூற இடமில்லை.
ஆனால், உண்மையிலேயே ஆண்டவன்மீது நன்னம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ளவேண்டுவ தென்னவெனின், பரம்பொருளால் மனிதர்கள் செய்யவேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருக்கும் காரியங்களைனத்தும் அப்படியே நன்மை பயக்கக் கூடியனவாய் இருக்கின்றன; அல்லது இக் காரியங்களில் நன்மைகளே மிகுதமா யிருக்கின்றன என்பதும், எக்காரியங்களை அல்லாஹ் செய்யவேண்டாமென விலக்கியிருக்கிறானோ, அக்காரியங்களெல்லாம் அப்படியே மானிட கோடிகளுக்குத் தீமை விளைக்கக்கூடியன வாகும்; அல்லது அவைகளில் கெடுதியே நிரம்பக் காணப்படுகின்றன என்பதுமே யாம். இவ்வாறே, ஒவ்வொரு மூமினும் நம்ப வேண்டும், அப்படியல்லாது, சில காரியங்களை மனிதர்களைச் செய்யும்படி சொல்லி அதனால் அல்லாஹ் பிரயோஜனமடையலாமென் றெண்ணுகிறான்; அல்லது சில காரியங்களைச் செய்யாமலிருக்கும்படி செய்து, அதன் மூல்யமாய்த் தான் ஏதேனும் நல்லபிரதிபலனைப் பெற்றுக்கொள்ளலாமென ஆண்டவன் எண்ணுகிறான் என்று மனோபாவம் கொள்வது கூடாது. அல்லாஹ் ஒன்றைச் செய்யவேண்டுமென உத்தவிடுவதில் நமக்குத்தான் பிரயோஜன முண்டு. இவ்வாறே ஒன்றை விலக்கினானேயானால், அதை நாம் செய்யாம லிருக்க வேண்டும். இல்லையேல், அது நமக்குத் தீங்கையே விளைவிக்கும். இக் காரணம் பற்றியேதான் ஆண்டவன் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:
“(என் நபி) அவர்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுகிறார். மேலும், தீமையான காரியங்களைப் புரியவேண்டாமென விலக்குகிறார். இன்னமும், மணமான நல்ல வஸ்துக்களை அவர்கள் உண்ணும்படி அனுமதிகொடுத்து வைக்கிறார். மேலும் அசுசியான வஸ்துக்களை அன்னர் உண்ண வேண்டாமென விலக்குகிறார்”-(7:157)
இனி, சமாதியைத் தொடுவது, அதை முத்தமிடுவது, அதன்மீது வதனத்தைத் தேய்ப்பது முதலிய விஸயங்களைக் கவனிப்போம்: எவருடைய சமாதியாயினும் அதன்மீது கரங்களை வைப்பதும், அதனை முத்தமிடுவதும், அதன்மீது முகத்தை வைப்பதும் கூடாதென முஸ்லிம்க ளனைவரும் ஒற்றுமையாய்க் கூறுகிறார்கள். இவ்விதம் சலப் சாலிஹீன்களான முன்னோர்கள் எவரும் செய்ததா யில்லை. இதுவும், ஒருவிதச் சிறிய ஷிர்க்காகவே இருக்கிறது. இவ்வாறு செய்து செய்துகொண்டு வந்தவர்களெல்லாம் நூஹ் (அலை) அவர்களின் வகுப்பாருள் சேர்ந்தவர்களென்று நாம் முன்னமே விரிவாய் விளக்கியிருக்கிறோம்.
எனவே, பீர்களுக்கும் அவர்களைப் போன்றார்களுக்கும் முன்னே சிரம் வணங்குவதும், நிலத்தைத் தொட்டு முத்தமிடுவதும் கூடாவென இமாம்களனைவரும் விலக்கியிருக்கின்றனர். அன்றியும், அன்னவர்களுக்கு மரியாதை செய்யும் எண்ணத்துடன் தலை சாய்ப்பதும் குனிவதும் கூடக் கூடாதென்று கூறியிருக்கின்றனர். உதாரணமாக, ஒன்றைக் கவனிப்பீர்களாக: ஒரு சமயம் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஸிரியாவினின்றும் திரும்பி வந்தபொழுது, நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டு சிரவணக்கும் செய்தார்கள். இதைக் கண்டதும் நாயகம் (ஸல்) அவர்கள், “ஏ முஆத்! நீரென்ன செய்கிறீர்?” என்று வினவ, முஆத் (ரலி) அவர்கள், “யா ரஸூலல்லா! சிரியாவின் மனிதர்கள் தங்கள் பாதிரிகளான மத குருக்களின் முன்னே இவ்வாறுதான் சாஷ்டாங்கம் செய்து வருகிறார்கள். அன்றியும், அத்தேய மக்கள் நெடுங் காலமாயே இவ்வாறு செய்து கொண்டு வருவதாயும் கூறுகிறார்கள்,” என்று விடை கொடுக்க, நபிகள் (ஸல்) அவர்கள், “ஏ முஆத்! இஃது அன்னவர்கள் கூறும் ஆதாரமற்ற ஒரு பொய்யாகும். மனிதர்களுக்குள் சிரவணக்கம் செய்ய வேண்டுவது இருக்குமாயின், புருஷனுக்குப் பெண்சாதி சிரவணக்கம் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பேன்; பெண்சாதிக்குப் புருஷன்பால் அவ்வளவு கடமைக ளிருக்கின்றன,” என்றுகூறி, “முஆத்! நீர் என்னுடைய சமாதியின் பக்கல் எப்பொழுதாவது செல்வீராயின், அதற்குச் சிரவணக்கம் புரிவீரோ?” என்று வினவ, “மாட்டேன் நாயகமே!” என்று விடையிறுத்தார். “ஆம்! எப்பொழுதும் எவருக்கும் சிரவணக்கம் புரியாதீர்!” என்று நம் வள்ள லிரஸூலவர்கள் இயம்பினார்கள்.
சஹீஹ் புகாரீயில் பின்வருமாறு ஒரு விஷயம் காணக் கிடக்கிறது: “நபிகள் (ஸல்) அவர்கள் வியாதியுற் றிருந்தக்கால், உட்காந்து கொண்டு இமாமத் செய்தார்கள். ஆனால், அஸ்ஹாபிக ளெல்லாம் நின்றவண்ணமே தக்பீர் கட்டிக்கொண் டிருந்தார்கள். இதைக் கண்டதும் எம்பெருமானார் அன்னவர்களை யெல்லாம் உட்காந்தே தொழுகையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்கள். அன்றியும், “ஒன்றுமறியாத அஜமீகள் ஒரவருக்கு மற்றொருவர் மரியாதை செய்வதேபோல் எனக்குச் செய்யவேண்டா” மென்றும், “இவ்வாறு செய்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு சந்தோஷமடைகிற அவர்கள் நரகலோகத்திற்குச் செல்லத் தையாரா யிருத்தல் வேண்டு” மென்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள்.
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License