வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 8

ருக். 10. 85. 40-ஆவது மந்திரத்தை ஆதாரங் காட்டி அவர் இவ்வாறு எழுதுகிறார்: “ஓ ஸ்திரீயே! உனக்கு முதலாவதாக விவாகத்தின்மூலம் புருஷன் கிடைக்கிறான்; ஆதலின், அவன் பெயர் குமரன்

என்பதாகும். இன்னமும், வேறுவகையான குணவிசேஷங்களால் அவன் சோம வென்றும் அழைக்கப்படுகிறான். பிறகு நியோகத்தினால் இணைக்கப்படும் இரண்டாவது புருஷன் அதற்குமுன் வேறே ஒரு ஸ்திரீயுடன் வசித்துவந்தபடியால் காந்தர்வன் என்றும், நியோகத்தினால் இணைக்கப்படும் உன்னுடைய மூன்றாவது புருஷன் அதிக இச்சையுள்ளவனாய் இருப்பதனால் அக்னி என்றும் அழைக்கப்படுவார்கள். பிறகு நாலிலிருந்து பதினொன்றுவரையுள்ள மிகுதி நியோக புருஷர்கள் ‘மனுஷர்கள்’ என்று அறியப்படுகிறார்கள்.

(ஏன் 4 முதல் 11 வரையுள்ள நியோக நாதர்கள் மட்டும் “மனுஷ்யர்க”ளாக இருக்கிறார்கள்? மற்றவர்களும் மனுஷ்யர்களல்லவா? 3-ஆவது புருஷனிடத்தில்மட்டும் இச்சை என்னும் அக்னி இருக்கிறதென்றால், முதலிரண்டு மனிதர்களிடத்தும் அப்படிப்பட்ட ‘அக்னி’ அணைந்துபோய்விட்டதா? ஸம்ஸர்க்கத்தால் சூடு குறைகின்றது என்னப்படுமாயின், முதல் புருஷனிடம் சிறிது குறையும்; 2-ஆவது புருஷனிடம் இன்னும் சிறிது குறையும்; 3-ஆவது புருஷனிடம் இன்னும் அதிகமான சூடு குறையும். இவ்வாறே படிப்படியாகக் குறைந்து கொண்டேபோய், 11-ஆவது புருஷனுடன் அந்த அக்னி அடியோடு அணைந்துபோதல் வேண்டும். இவ்வாறில்லாமல் முதலிலிருந்து சூடு அதிகரித்துக்கொண்டே போகிறதென்பார்களாயின், 11-ஆவது புருஷனிடம்தான் அந்த அக்னி அதிகமாயிருத்தல் வேண்டும். இவ்வாறுமில்லாமல் 3-ஆவது புருஷனை ‘அக்னி’ என்று அழைப்பதற்குத்தான் காரணம் விளங்கவில்லை. அடியிலிருந்து பார்த்தபோதிலும் முடியிலிருந்து பார்த்தபோதிலும் 3-ஆவது நியோக புருஷனுக்கு இச்சை என்னும் அக்னி அதிகமாயிருக்குமென்பது எமது புத்திக்குப் பொருத்தமாய்க் காணப்படவில்லை. கபீர்.)

இவ்வாறே ருக். 10. 85. 45-ஆவது மந்திரத்தைக் கொண்டு ஒவ்வொரு பெண்பிள்ளையும் பதினொரு பதினொரு புருஷர்களை நியோகத்தால் பெறலாமென்று கண்டுகொள்ளுகிறோம். இப்படித்தான் ஆண்பிள்ளைகளும் பதினொரு பதினொரு பெண்பிள்ளைகள்மட்டும் நியோகம் செய்துகொள்ளலாம். இம்மந்திரத்தின் மொழிபெயர்ப்பானது சுவாமி தயானந்தராலேயே இவ்வாறு தமது சத்தியார்த்தப் பிரகாசத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. வேதத்தை ஈசுவரன் வாக்கேயென்றும் அதன்படி நடப்பதே தமது கொள்கையென்றும் தயானந்த் மஹாராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், கேவலம் அபலைகளான ஸ்திரீகளுக்குத்தாம் பகிரங்கத் “தாசர்கள்” இல்லையென்னும் காரணத்தால் அந்தப் பரமாத்மா நியோகமென்னும் திரைக்குள்ளேனும் பதினொரு புருஷர்களைக்கொண்டு திருப்தியடையலாமென்று பரிகாரம் காட்டியிருக்கிறார். ஆனால், பகிரங்கத் “தாசிகள்” என்போர் ஹிந்து ஆடவரின் திருப்திக்காக இந்தியா முழுவதும் தேவர்களின் பெயரால் பொட்டுக் கட்டிக்கொண்டு ஆயிரக்கணக்காக அலைந்து திரியுங்கால், ஏன் புருஷர்களுக்கும் பதினொரு ஸ்திரீகள் மட்டும் நியோகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது?

இன்னமும், நியோகத்தால் பதினொரு நபரைத்தாம் கட்டித் தழுவலாமென்றும் பத்துப் பிள்ளைகளைத்தாம் பெற்றுக்கொள்ளலாமென்றும் ஏன் அந்தப் பரமாத்மா சட்டம் செய்தார்? பதினாறு பிள்ளைகளைப் பெறவேண்டுமென்று இன்றைக்கும் நாம் தம்பதிகளை வாழ்த்துகின்றோமில்லையா? பத்துக்குமேல் ஏன் நியோகத்தால் பெறுவது கூடாது? இரு கலப்பான இத்தனை சங்கர ஜாதிப் பிள்ளைகளைத் தலைப்பு மாற்றிப் பெறுங்கால், ஏன் இன்னும் பல குழந்தைகளை அவ்வாறு உற்பத்தி செய்தல் கூடாது? சந்திரவம்சத்தைச் சார்ந்த திருதராஷ்டிர மஹாராஜா துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவில்லையா? இன்னமும் ஒரு தக்ஷப் பிரஜாபதிக்கு ஆண்மக்களைத் தவிர்த்து அறுபது பெண்மக்கள் இருந்து வரவில்லையா?

இன்னமும் வேண்டுமாயின், பத்துப் பிள்ளைகளைக் காட்டினும் அதிகமாய்ப் பெற்றெடுத்த சகரபுத்திரர் முதலிய பல்லோரின் கணிதத்தையும நன்கெடுத்து எண்பித்தல் இயலுமே. ஆனால், திருதராஷ்டிரன் முதலிய புத்திமான்களாகிய மன்னர்கள் ஆரியவேதத்தின் பிரகாரம் பத்துப் பிள்ளைகளைக் காட்டினும் அதிகம்பெறுதல் கூடாதென்பதை உணராதவர்களாகவா இருந்துவந்தனர்? இல்லை! இல்லை! அவர்களெல்லாம் வேதக்குறும்பரான தயானந்தரைக் காட்டினும் மிக்க நல்லவிதமாகவே சனாதன ஐதிக வேததர்மத்தை அறிந்தவர்களாகவும் ஒத்துக் கொண்டவர்களாகவுமே இருந்துவந்தனர்.

பதினொரு நியோக ஸ்திரீகளுக்குமேலும் ஆடவனுக்கு ஆர்வம் தணியமலிருக்குமாயின், அவன் தன் மதத்திலுள்ள உலகாசாரப் பிரகாரம் தேவதாசிகளிடம் போய்த் தன் ஆவலைத் தணித்துக்கொள்ளுகிறான். ஆனால், பதினொரு புருஷர்களிடம் பத்துப் பிள்ளைகளைப் பெற்றவுடன் ஸ்திரீயானவள் தன்னுடைய ஆத்திரத்தை அடக்கக்கூடாத அத்துணை இளம் பிராயத்தினளாய் இருந்து வருவாளாயின், பிறகு அவள் போகும் கதிதான் என்ன? 11-ஆவது வயதில் விவாகமாய், 12-ஆவது வயதில் அறுத்துவிட்டு, உடனே நியோகத்துள் நுழைவாளாயின், அதன்பின்பு வருஷத்துக்கு ஒரு குழந்தை விகிதம் பத்துக் குழந்தைகளையும் 11 புருஷர்களிடம் பெற்று முடிப்பதற்குள் 22 வயதைத்தான் அவள் அடைந்திருப்பாள். அல்லது ஒரு குழந்தைக்கு இரண்டு வருஷமென்று வைத்துக்கொண்ட போதிலும், அப்பொழுதும் அவளுடைய வயது 32 தான் ஆயிருக்கும். அதனுடன் அவளது உலக இச்சை அஸ்தமித்து விட்டதென்று யாரே கூறத் துணிவர்? இல்லை! மூன்று வருஷத்துக்கு ஒரு குழந்தை விகிதம் பெற்றெடுத்த போதிலும், 10-ஆவது குழந்தையுடன் அந்தப் பேரிளம்பெண்ணக்கு வயது 42 தான் முடிவடைந்திருக்கும். அதன்பின்பு அவளுக்குப் புருஷமோகம் விளையுமாயின், அதற்கு ஆரியரின் வேதத்தில் என்ன பரிகாரம் கூறப்பட்டிருக்கிறது? இல்லை! 42-ஆவது வயதக்குமேல் ஸ்திரீகளுக்குப் புருஷ இச்சை எழ மாட்டாதென்று விவாகத்தையேனும் நியோகத்தையேனும் அனுஷ்டித்துப் பார்த்திராத சுவாமி தயானந்தரால் எவ்வாறு முடிவுகட்டி விடுவது சாலும்?

பல புருஷர்களுடன் படுத்து இன்பந்துய்த்த ஒருத்தியை இறுதியில் சும்மா இருவென்று கட்டளை இடுவதானது, அவளை வயோதிகத்தில் திருட்டுத்தனமாக வியபிசாரம் புரியும்படி தூண்டுவதாகத்தானே போய் முடியும். எனவே, வியபிசாரத்தையும் வேசித்தனத்தையும் மட்டுப்படுத்த வேண்டுமென்னும் நன்னோக்கத்துடனேயே இப்படிப்பட்ட நியோகத்தை இவ்வளவுதூரம் வற்புறுத்திக்கூறும் தயானந்தரின் முக்கிய நோக்கமானது இறுதியிலே வீணாய்ப் போய்விடுவதாகவே காணப்படாநின்றது. கபீர்.

சந்ததியை உண்டுபண்ண வேண்டுமென்னும் எண்ணமின்றி மோகத்தினால் மூத்த சகோதரன் தன் இளைவனுடைய மனைவியையும் இளைய சகோதரன் தன் மூத்தவனுடைய மனைவியையும் நியோகபாவனை காட்டி (நியோக பாவனை என்பானேன்? கேவலம் காமாதுரமான வியபிசார சமிக்ஞையென்று ஏன் கூறுவது கூடாது? கபீர்) அடைவார்களாயின், அவர்களை இழிவாகக் கருதவேண்டும். இரண்டாவது கர்ப்பத்துடன் நியோககாலம் முடிந்துவிடுகிறது; அதற்கப்புறம் அவர்கள் காமக்குறியான சந்திப்புக்களைச் செய்வது கூடாது. இருவருடைய நன்மையை முன்னிட்டும் நியோகம் ஏற்படுமாயின், அது நான்காவது கர்ப்பத்துடன் முடிவடைய வேண்டும். மேற்சொன்னமாதிரி பத்துக் குழந்தைகளைப் பெறலாம். அதற்கப்புறம் சேருகிறவர்களைக் காமாதுரர்களாகவே கருதவேண்டும்; அவர்களை மானங் கெட்டவர்களாக எண்ண வேண்டும்…ஏனெனின், கலியாணமும் நியோகமும் சந்தானோற்பத்திக்காகவே ஏற்பட்டன. விலங்குகளைப்போல் காமக்கிரீடைக்காக வன்று.

(தயானந்தரின் விவாதம் மிக நன்றாயிருக்கிறது! சந்தைக்குப் போகிறவள் ஒருத்தி சாவடியில் ஆண்பிள்ளை இருக்கின்றானோ வென்று பார்க்கச் சொன்ன கதையாகத்தான் இவரது சமாதானம் காணப்படுகின்றது. பிள்ளை வேண்டுமென்பதற்காக 11 நபர்கள் மட்டும் கலந்துகொண்டு 10 குழந்தைகளைத்தாம் பெறுதல் வேண்டுமோ? அம்மட்டும் செய்வது காமாதுரமாய்க் கருதப்படுவதில்லை; அதற்குமேல் தாண்டுவதுதான் ஆரியவேதத்தின் பிரகாரம் காமக்கிரீடை போலும்! இது மிக்க அத்தியாச்சரியமாகவே காணப்படுகிறது.

பிள்ளையில்லாத ஸ்திரீ புருஷர்களுக்கு ஒரு பிள்ளையே போதாதோ? அதையும் ஆரியவேத தர்மப்பிரகாரம் ஸ்வீகார முறையால் எடுத்துக்கொள்ளலாமே. அதைச் செய்யாது 10 பிள்ளைகள் வேண்டுமென்று, 11 பெயர்வழிகளிடம் மானத்தைக் காட்டுவதுதான் தயானந்தர் பார்வையில் வைதிகதர்மம் போலும்! அதற்குமேல் செல்வதால்தான் விலங்குகளைப் போன்ற காமக் கிரீடைக்கான காமாதுரர்களாகவும் மானங் கெட்டவர்களாகவும் காமிகளாகவும் நிந்திக்கத் தக்கவர்களாகவும் ஆய்விடுகிறார்கள். வைதிக தர்மத்துக்கும் காமாதுரத்துக்கும் இடையிலுள்ள எல்லையானது பதினொன்றென்று ஏற்படுத்தியதுதான் தயானந்தரின் முளைப்பலத்தைக் காட்டுகின்றது.

ஆரியர்கள் ஒன்றிரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தபோதிலும், பத்தென்னும் எண்ணிக்கை நிறைவேறவில்லை என்னும் வியாஜத்தை வைத்துக்கொண்டு நியோகம் போன்ற பகிரங்க வியபிசாரத்தினால் பதினொரு நபர்கள்மட்டும் சிற்றின்பந் துய்த்துக்கொண்டு அலைந்து திரியலாமென்பதற்கு அனுமதி கொடுத்த பாவனையாகவே அவர்களுடைய வேத மந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவல்லாது, தர்மத்தை, அதிலும் மானத்தை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவையென்று “மகாத்மா” காந்தி“யடிகள்” போன்ற எந்தப் புத்திமான்தான் ஏற்றுக்கொள்ளத் துணிவான்? எனவே, இப்படிப் பட்டவர்களைச் சந்தானோற்பத்திக்காக மட்டுமே ஆசைகொண்டவர்களென்றும் வம்சத்தை நிலைநிறுத்துவதற்காக மட்டுமே நினைவு கொண்டவர்களென்றும் ஒருகாலும் கூறுவது கூடாது. அதற்கு மாறாக இவர்கள் காமாந்தகார இச்சையின் அடிமைகளாகவே இருந்துவருகிறார்கள்.

பிள்ளை வேண்டாத காலத்தில் முன்னவன் மனைவியைப் பின்னவனும், பின்னவன் மனைவியை முன்னவனும் நியோகம் செய்வதும் காமாந்தகாரத்தினால் அல்லவா? இன்னமும் தன் நாதனைக் காட்டினும் மற்றொரு புருஷனிடம் தன்மானத்தைக் காட்டி ‘வெட்கமின்மை’ என்னும் லஜ்ஜையற்ற போர்வையை மேலே ஒருமுறை போர்த்துக் கொண்டவுடன் விஷயம் பூர்த்தியாய்விட்டது. எனவே, அவனுக்குப்பின் பத்துத்தான் என்ன! இன்னும் இருபது புருஷர்களிடம் பள்ளியிற்சேர்ந்து சயனித்து எண்ணிறந்த பிள்ளைகளை ஏன் பெற்றுக் கொள்வது கூடாது?

விஷயம் இவ்வாறிருக்க, பதினொரு நபர்மட்டும் நாணத்தைவிட்டு மானத்தைக்காட்ட உடன்படுங்கால், அதன்பின் 11-க்கு மேற்பட்ட நபர்களை அனுபவிப்பதுதான் காமாதுரமென்று ஏன் கருதுகின்றார்கள்? ஒரு பெண்பிள்ளை பல ஆண்பிள்ளைகளுடனும் ஓர் ஆண்பிள்ளை பல பெண்பிள்ளைகளுடனும் ஸம்ஸர்க்கம் செய்வதுதான் பகிரங்கமாக வியபிசாரமென்று எல்லோராலும் கருதப்பட்டு வருகின்றது. இதிலென்ன ஆக்ஷேபம் காணப்படுதல் கூடும்? இப்படிப்பட்ட வியபிசாரத்தில் பதினொன்று என்பதுதான் என்ன எல்லை? தலைக்குமேல் போனவெள்ளம் சாண் போனாலென்ன? முழம் போனாலென்ன? கேவலம் பிள்ளை வேண்டுமாயின், ஒன்றிரண்டே போதும்; அதற்காக ஒரே நியோக நாதனிடம் மானத்தை விற்பது போதாதா? அவ்வொருவனாலேயே நடத்தப்படும் கூட்டுறவே அவளுடைய கற்பை அழித்துவிடும்போது, பிறகு 11 நபர்மட்டும் தாண்டித் தாண்டிச் செல்வது வைதிக தர்மமென்றும் அதற்குமேல் செல்வதுதான் காமாதுரமென்றும் எந்த அறிவுடையோன்தான் லஜ்ஜையில்லாது வெட்கத்தை மறந்து கூறத்துணிவான்?

ஒரே நியோகத்துடன் அந் நியோகத்தின் அவசியமும் சந்தானத்தின் அவசியமும் முடிவடைந்து விடும்போது, 3-ஆவது, 4-ஆவது…11-ஆவதுவரை ஸ்திரீகள் புருஷர்களையும், புருஷர்கள் ஸ்திரீகளையும் தேடித் திரியலாமென்பது 10 பிள்ளையென்னும் சாக்குப் போக்குக்களை வைத்துக்கொண்டு காமலாகிரியான துர்ச்செய்கையையே குறித்து நிற்கின்றது. கபீர்.)

சுவாமி தயானந்தரின் மேற்கூறிய விவாதத்திலிருந்து விவாகம் முடித்துக்கொண்ட ஆண்பெண்களுங்கூட 10-ஆவது கர்ப்பத்துக்குப்பின் படுக்கையில் சேர்வதால் விலங்குகளை யொத்த காமாதுரம் குடிகொண்ட கயவர்களாகவே கருதப்படுவார்கள். இப்பொழுது திருதராஷ்டிர மஹாராஜாவையும் தக்ஷப் பிரஜாபதியையும் காமாதுரத்துள் மூழ்கிய கயவர்களென்று அந்த ஆரியர் கூறுவார்களா? மாட்டார்களா? மஹாவிஷ்ணுவின் அவதாரமென்று சனாதான ஹிந்து சகோதரர்களால் கருதப்பட்டுவரும் ராம, கிருஷ்ண அவதாரங்களையும் பகவானின் அவதாரமல்லவென்று கூறத்துணியும் தயானந்தரும் அவருடைய பக்தகோடிகளும் இந்த இதிகாச மன்னர்களைக் கயவர்களென்று கூறத் தயங்கமாட்டார்களென்றே நாம் கருதுகிறோம். இல்லையென்று ஆரியர் மறுப்பாராயின், அவர் கூறும் வாதம் அவரையே பிடிவாதத்துள் ஆழ்த்திவிடும்.

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment