இஸ்லாத்தின்மீது படுதூறு
மௌலானா முஹம்மதலீ M.A., LL.B., எழுதுகிறார்.
“இஸ்லா மார்க்கம் எல்லா முஸ்லிமல்லாதாரையும் கொலை செய்துவிடும்படி போதிக்கின்றது,” என்னும் ஒரே பல்லவியைத்தான்
ஆரியசமாஜப் பத்திரிகைகள் சதா பாடிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தின்மீது இஃதொரு படுதூறாகவே சுமத்தப்படுகிறது; இத்தகைய அவதூற்றால் விளையும் பலாபலன்கள், ஆரியசமாஜப் பத்திரிகைகள் நினைப்பதேபோல் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், தேச முழுமைக்குமே துன்பத்தை விளைக்கக்கூடியனவாய் இருக்கின்றன. இவ்வாறிருந்தும் இப்படிப்பட்ட அவதூற்றையே அல்லும் பகலும் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்தப் பத்திரிகைகளே அதே மூச்சில் ஹிந்துக்களுக்கு விரோதமாய் முஸ்லிம்களால் இழைக்கப்படும் ஒவ்வொரு தனிப்பட்ட செய்கையையும் கண்டிக்கும்படியாய் நம் முஸ்லிம்களை வேண்டிக்கொள்கின்றன; ஆனால், தாங்கள் மட்டும் தனிப்பட்ட ஹிந்துக்களாலும், ஹிந்துக் கூட்டத்தினராலும், முஸ்லிம்களுக்கு விரோதமாய் இழைக்கப்பட்டுவரும் குற்றச் செயல்களையெல்லாம் முழு மௌனத்துடன் மறைத்துவைக்கப் பிரயத்தனப் படுகின்றன.
இத்தன்மையான வேண்டுதல்களெல்லாம் மெய்யானவையல்ல என்பதை நாம் மிக எளிதில் கண்டுகொள்ளலாம்; ஏனெனின், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உண்மையான சமாதான ஒற்றுமையை உண்டு பண்ண வேண்டுமென்று உள்ளத்தின்கண் மெய்யான எண்ணத்தை அப்பத்திரிகைகள் வைத்துக்கொண்டிருக்குமாயின், முதன் முதலில் தீங்கற்ற முஸ்லிம்களுக்கு விரோதமாய் இழைக்கப்படும் ஹிந்துக்களின் குற்றச் செயல்களைக் கண்டித்துவிட்ட பிறகே அவை பரிசுத்தமான ஹிருதயத்துடன் ஹிந்துக்களுக்கு விரோதமாய் முஸ்லிம்களால் இழைக்கப்படும் குற்றங்களைப்பற்றிக் கண்டிக்கும்படியாய் நம் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதனால், ஹிந்துக்கள் தங்களுடைய குற்றங்களைக் கண்டிக்காத வரையில் முஸ்லிம்கள் தங்கள் இனத்தவரின் குற்றச் செயல்களைக் கண்டிக்க முன்வர மாட்டார்களென்று எண்ணிவிட வேண்டாம். சுவாமி சிரத்தானந்தின் கொலையைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன், அக் கொலைக்குக் காரணம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளா முன்னமே முஸ்லிம்கள் அதைக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், ஆரிய சமாஜப் பத்திரிகைகள் அதைக் கொண்டு திருப்தியடையவில்லை. ஏன் எனின், அவர்களுடைய பத்திரிகையே அதற்குச் சமாதானம் கூறட்டும். சமாஜப் பத்திரிகையாகிய “பிரகாஷ்” என்பது தன் டிஸம்பர் 29௳ சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியிருக்கிறது:-
“எத்துணை அதிகமாயிருந்த போதிலும் இந்தச் சதியாலோசனைக்காரர்களையெல்லாம் நாம் ஜவாப்தாரியாகக் கொள்ளவில்லை…….. முழு ஜவாப்தாரித்தனமும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கற்பிக்கும் போதனையிலேயே காணப்படுகிறது. அஃதென்ன போதனை? முஸ்லிமல்லாதாரைக் கொலை புரிவதால் சுவர்க்கத்தின் வாயில்கள் அக்கொலை செய்பவர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றனவென்று சொல்வதேயாகும். இப்படிப்பட்ட காரியங்களைத் தடுப்பதற்கு ஆரிய சமாஜிகள் செய்ய வேண்டிய கடமை யாது? அதுதான் இந்தப் போதனையை அடியோடு அழிப்பதாகும். இந்தத் திடுக்கத்தை உண்டுபண்ணக்கூடிய செய்கையைக் கண்டு அனுதாபம் காட்டுவதேபோல் நடித்துவரும் அப்படிப்பட்ட முஸ்லிம்கள், அவர்களுடைய அனுதாபக் கிளர்ச்சி பாசாங்காயில்லாது இத்தகைய காரியங்கள் மறுபடியும் இழைக்கப்படக் கூடாதென்று விரும்புவார்களாயின், அவர்கள் இத்தகைய பரிசுத்த நோக்கத்தை அடைவதற்காகச் செய்யக்கூடிய ஒரே காரியம், தாங்கள் இஸ்லாத்தின் இத்தகைய போதனையை அடியோடு அழிக்கும் பொருட்டு ஆரிய சமாஜத்துள் சேர்ந்துகொள்ள வேண்டுவதுதான்.”
இவ்விடத்தில்தான் விஷயம் வெளியிடப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் துராக்கிரகத்துக்காக அவர்களைக் கண்டிக்கவேண்டுமென்று சமாஜப் பத்திரிகைகள் கூறுவது வீண் நடிப்பேயென்று இப்பொழுது தெரிந்து கொண்டோம். அவர்கள் விரும்புவதெல்லாம் இஸ்லாமார்க்கமே கண்டிக்கப்பட வேண்டுமென்பதுதான். ஒரு முஸ்லிமால் இழைக்கப்படும் ஒரு குற்றத்தை மற்ற முஸ்லிம்கள் சாதாரணமாய்க் கண்டித்தால், சமாஜ மூர்த்திகளின் அபிப்பிராயத்தின்படி அஃது உள்ளன்பில்லாத காரியமேயாகும். வெள்ளையாய்ச் சொல்லுமிடத்து, அவர்கள் எதிர்பார்ப்பது யாதெனின், முஸ்லிம்களனைவரும் இந்தப் புதிய ஹிந்து மனப்பான்மையை உண்டுபண்ணுபவர்முன் சிரங்குனிந்து, குர்ஆன் வேதத்தின்படி குற்றமற்ற முஸ்லிமல்லாதாரைக் கொலைபுரிகின்ற முஸ்லிம்களுக்குச் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவென்று ஒப்புக்கொண்டு, அதன்பின் சுத்திகரிக்கப்பட்டு, இந்த இஸ்லாமிய சித்தாந்தத்தை அடியோடு ஒழிக்கும் பொருட்டு ஆரிய சமாஜப் பிரசாரகர்களுடன் கைகுலுக்க வேண்டுமென்பதுதான்.
முஸ்லிமல்லாதாரைக் கொலை செய்வதால் சுவர்க்கத்தின் வாயில்கள் முஸ்லிம்களுக்குத் திறக்கப்படுகின்றனவென்னும் அந்த இழிய படுதூற்றை இஸ்லாத்தின்மீது சுமத்துவதற்கு சமாஜப் பத்திரிகைகள் ஏன் இத்துணைக் கவலை காட்டுகின்றனவென்று நான் வினவுகிறேன். இத்தகைய பழிமொழிக்கு ஆதாரம் எங்கேயிருக்கிறது? இதை எந்த முஸ்லிம் தலைவரேனும், இன்றேல் எந்த முஸ்லிம் பத்திரிகையேனும் இத்தகைய விஷயத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறதா? இதற்குச் சான்றாய் ஏதேனும் குர்ஆன் ஆயத்தை எடுத்துக் காட்டுவது முடியுமா? அவர்கள் சத்தியமான தர்மயுத்தத்தைச் செய்யலாகாதா?
இவ்வாறு கூறுவதுடன் முஸ்லிம்கள் தங்கள் இனத்தவரால் இழைக்கப்படும் ஒவ்வொரு குற்றத்தையும் கண்டிக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். இதனால் முஸ்லிம்கள் இஸ்லாத்தையே கண்டிக்கிறார்களென்னும் அபிப்பிராயத்தை உண்டுபண்ண வேண்டுமென்னும் கீழ்மையான ஆர்வமொன்று அவர்கள்பால் காணப்படாநின்றது. சமாஜப் பத்திரிகைகள் இவ்வாறு இஸ்லாத்தின் கண்ணியத்தைக் கறைபடுத்தி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமாய் ஹிந்துச் சிறுவர்களின் ஹிருதயத்துக்குள் விஷத்தை நிரப்பிவிடுகின்றன. மேலும், ஹிந்து மகாசபைத் தலைவர்களும் வெளிப்படையாய் ஆரிய சமாஜிகளாய் இல்லாமற் போயினும், அந்தரங்கத்தில் அந்த சமாஜிகளாகவே இருந்துகொண்டு, ஹிந்துக்களைத் தவறான வழியில் நடாத்திச்செல்லுகிறார்கள்.
ஸர் துல்பிகார் அலீகானுக்குக் கொடுத்த மறுமொழியில் லாலா லஜபதிராய் அதிக சாமர்த்தியத்துடன் குற்றச் செய்கைகளையெல்லாம் தனிநபரின் குற்றங்களென்றும் சமூக சச்சரவுகளின் குற்றங்களென்றும் இரு பிரிவாகப் பிரித்துக்கொண்டு, முஸ்லிம்களின்மீது ஹிந்துக்களால் இழைக்கப்பட்டிருக்கும் குற்றங்களையெல்லாம் வெளியில் காட்டாது, ஹிந்துக்களின் டிபென்ஸைமட்டும் மிக நன்றாக எடுத்தெழுதியிருக்கிறார். ஹிந்துக்கள் எப்பொழுதேனும் முஸ்லிம்களைக் கொன்றிருப்பார்களாயின், அவைகளெல்லாம் கலகங்களிலும் சமூக சச்சரவுகளிலுமேதாம் உண்டாயிருக்கின்றனவென்றும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தக் கக்ஷியார்தாம் வலுவில் குற்றத்தைச் செய்திருக்கிறார்களென்று குறிப்பிட்டுக் கூறுவது முடியாதென்றும் அவர் ஒரு தப்பான அபிப்பிராயத்தையே வேண்டுமென்று உண்டுபண்ணப் பிரயத்தனப்படுகிறார். இவ்விடத்தில் லாலாஜீ தம்முடைய சாதாரண சமாஜ சாதுர்யங்களை உபயோகிக்கிறார்; சமூக சச்சரவுகளை ஒருபுறத்தில் ஒதுக்கிவிட்டுத் தனி நபரின்மீது இழைக்கப்படும் குற்றங்களையே இரு பிரிவாகப் பிரிக்கலாம். அவை, தனி நபர்களால் இழைக்கப்படும் குற்றங்களும் ஒரு கூட்டத்தால் இழைக்கப்படும் குற்றங்களுமாம். முதலில் கூறியது சமூகத்தில் காணப்படும் புத்தி தடுமாற்றங் கொண்ட ஏதேனுமொரு தனிநபரால் இழைக்கப்படும் குற்றமாகும். ஆனால், பின்னதோ, ஒரு சமூகத்தாரின் மனப்பான்மையைக் காண்பிக்கின்றது; ஆதலின், பொதுவாக அந்தச் சமூகமே தவறான வழியில் செல்கிறதென்பதை அது காண்பிக்கின்றது.
இவ்வாறிருந்தும் அந்த நுண்ணறிவுள்ள ஹிந்துத் தலைவர் தனிநபரின் குற்றங்களையே கண்டிக்க வேண்டுமென்றும், கூட்டங்களால் இழைக்கப்படும் குற்றங்களைக் கண்டிக்க முடியாதென்றும் விவாதிக்கிறார். ஏனெனின், பெரும்பான்மையான தனிநபரின் செய்கைகள் முஸ்லிம்களாலும் கூட்டங் கூட்டமான குற்றச் செய்கைகள் ஹிந்துக்களாலும் இழைக்கப்பட்டு வருவதனாலேயே அவர் அவ்வாறு கூறுகிறார். சுவாமி சிரத்தானந்தின் கொலைக்குப் பின்பு 12 குற்றமற்ற ஹிந்துக்கள் தனிமுஸ்லிம்களால் தாக்கப்பட்டோ, கொல்லப்பட்டோ போயிருக்கிறார்களென்று லாலா ஸாஹிப் கூறி, அவற்றை இரண்டு மூன்றென்று ஸர் துல்பிகார் அலீகான் எழுதியதற்காக வருத்தப்பட்டு எழுதுகிறார். ஆனால், லாலாஜீ ஹிருதய சுத்தத்துடனேதான் இவ்வாறு குறை கூறுகின்றாரா?
ஹிந்துக்களின் இரு சம்பவங்களை மட்டும் ஈண்டு எடுத்துக்கொள்வோம்; அவ்விரண்டிலுமே கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் போன முஸ்லிம்களின் தொகை பன்னிரண்டாகும். டிஸெம்பர் 23-இல் தெஹ்லியில் ஹிந்துக் கூட்டத்தால் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டும். நான்குபேர் பலமான காயமடைந்தும் போனார்கள். அப்படிப்பட்ட மற்றொரு கூட்டத்தால் மே௴ 4௳ இரவில் நால்வர் கொல்லப்பட்டும், மூவர் பலமான காயமடைந்தும் போயினர். இவ்விரண்டு சம்பவங்களும் காரணமில்லாமல் முற்றிலும் குற்றமற்றிருந்த முஸ்லிம்களின்மீது இழைக்கப்பட்ட குற்றங்களாகும். ஏனெனின், எப்படிப்பட்ட ஹிந்து-முஸ்லிம் கலகத்தினாலும் அக்குற்றங்கள் இழைக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் ஹிந்துக்களே வேண்டுமென்று குற்றம் செய்கிறார்களென்பதை ருஜுப்பிக்க நான் இரண்டு உதாஹரணங்களையே எடுத்துக் காட்டினேன். முஸ்லிம்களின்மீது ஹிந்துக்களால் இழைக்கப்பட்டிருக்கும் கொலைக்குச் சமமான தாக்குதல்களின் முழுப்பட்டியையும் பார்க்க விரும்புவோர் 22-10-27 தேதியுள்ள “ஸியாஸத்”தைப் பார்த்துக் கொள்வாராக.
“அஹிம்ஸை” யென்பதை உதட்டால் மட்டும் கூறிக் கொள்ளும் பெரும்பான்மையோரின் கரங்களில் சிறுபான்மையோரான முஸ்லிம்கள் அடைந்திருக்கும் துன்பத்தைப் பற்றிய கேஸ்கள் அனந்தமாகும். லாலா லஜிபதிராயால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் பெரும்பான்மையான கேஸ்களெல்லாம் முஸ்லிம்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில வேளைகளில் அவசியமிருக்குமாயின், சுவாமி சிரத்தானந்தின் கொலையைக் கண்டித்ததேபோல், முழு இந்திய முஸ்லிம்களும் பொதுவாகக் கண்டித்திருக்கிறார்கள். வேறு சில வேளைகளில் மிகப்பெரிய முஸ்லிம் தலைவர்களும் கண்டனம் புரிந்திருக்கிறார்கள். ஆனால், தெஹ்லியிலும், லாஹூரிலும் இரண்டு ஹிந்துக் கூட்டங்களால் கொல்லப்பட்டும் காயமாக்கப்பட்டும் போன 12 முஸ்லிம்களைப்பற்றி எந்த ஹிந்துத் தலைவராலும், அவர்களுடைய மகாத்மாவினாலும்கூட ஒரு கண்டன மொழியேனும் கூறப்படவில்லை. இவ்விரண்டு சம்பவங்களும் சமூகசச்சரவினால் உண்டாகவில்லையென்பதையும் நீங்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் வேண்டுமென்றே அக்கிரமமாக இழைக்கப்பட்ட அநியாயக் கொலைகளாகும்.
இவற்றாலெல்லாம், முஸ்லிம்களின் குற்றங்களை முஸ்லிம்களே கண்டித்துக்கொண்டு தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சமாதானத்துடன் வாழவேண்டுமென்று விரும்புகிறார்களென்பதும், ஆனால், முஸ்லிம்களுக்கு விரோதமாய் ஹிந்துக்களால் இழைக்கப்படும் கொலைக் குற்றங்களையெல்லாம் அந்த ஹிந்துத் தலைவர்கள் இரகசியத்தில் ஆதரித்து வருவார்களென்பதும் நன்கு விளங்கவில்லையா? இச் சம்பவங்களிலெல்லாம் ஹிந்துத் தனிநபர்கள் சம்பந்தப்படாமல் ஹிந்துக் கூட்டமே கலந்துகொண்டிருக்கிறது; அந்தக் கூட்டமானது தங்கள் முழுச் சமூகத்தின் மனப்பான்மையையும் நன்கு வெளிக்காட்டுகின்றது. ஆனால், ஹிந்துப் பத்திரிகைகளும் ஹிந்துத் தலைவர்களும் இத்தகைய கூட்டங்களின் குற்றங்களைப்பற்றிச் சிறிதும் பிரஸ்தாபிக்காமல் மௌனமாகத் தமக்குள் ஒத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுகிறார்கள். இதனால் இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிமட்டும் முஸ்லிம்களால் கிளப்பப்படும் கூச்சலும் அந்த ஹிந்துத் தலைவர்களின் இறுகிய மனத்தைச் சற்றும் இளக்கி விடுவதில்லை.
எத்துணைக் காலமட்டும் ஹிந்துத் தலைவர்கள் இவற்றையெல்லாம் பாராமல் தாங்களே குற்றமிழைக்கப்படட ஜாதியாரேபோல் காட்டிக்கொள்வார்களென்று நான் கேட்கிறேன்; எத்துணைக் காலமட்டும் விஷயத்தைச் சுயமே உணர்ந்துகொள்ளாத இந்த அரசாங்கம் முஸ்லிம்களே ஹிந்துக்களைக் கொலை செய்கிறார்களென்றும் முஸ்லிம் தலைவர்கள் அவர்களைக் கொலை செய்யத் தூண்டுகிறார்களென்றும் அநீதியாகவும் அக்கிரமமாகவும் கிளப்பப்படும் பூசலின் முன்னும், பெருங் கூச்சலின் முன்னும் தலைவணங்கி நிற்கப்போகிறதென்றும் நான் கேட்கிறேன்; ஆதலின், முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தின் சரியான நன்மைக்காகத் தங்கள் சப்தத்தைக் கிளப்பவேண்டிய காலம் இதுவாகத்தான் இருக்கிறது. அரசாங்கத்தை எழுப்புவதற்குப் பெருங்கிளர்ச்சி வேண்டுமாம்; ஏனெனின், ஜனங்களே கிளர்ச்சியென்னும் தண்டோராவை அடித்து அரசாங்கத்தை எழுப்புமட்டும் அது செவிடாகவே இருந்துவருமென்று நமக்குப் பிரத்தியக்ஷமாகக் கூறிவருகிறது.
இஸ்லாத்தை இழிவுசெய்து கூறுவதென்பது ஆரய சமாஜிகளிடத்தில் ஒரு நிரந்தரக் கொள்கையாய்விட்டது. இதற்கு வேண்டிய ஆவேச முழுதும் சுவாமி தயானந்தின் “சத்தியார்த்த பிரகாச”த்திலிருந்தே அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அந்த ஸ்வாமியால் ஹிந்து மதத்துக்குப் புரியப்பட்டிருக்கும் பேரூழியத்தை ஒருவரும் மறுத்துரைக்கார்; ஆனால், அவர் தமக்குப்பின், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள பிளவுகளை எப்பொழுதும் விரிவாக்கிக்கொண்டே போகக்கூடிய கிரந்தத்தையே விட்டுச் சென்றிருக்கிறாரென்பதிலும் யாதொருவிதமான சந்தேகமும் காணப்படவில்லை. ஹிந்து ‘மஹாத்மா’வின் வார்த்தைகளின் பிரகாரம் “இதைக்காட்டினும் அதிகம் ஏமாற்றத்தைத் தரக்கூடிய நூல்” வேறொன்றும் காணப்படவில்லை. இந்த விதையினால் உண்டுபண்ணப்பட்ட கனியானது, அதே ‘மஹாத்மா’வின் வார்த்தைகளின் பிரகாரம் ”ஆரிய சமாஜப் பிரசாரகம் ஏனை மதங்களை நிந்திக்கும்போது அடைவதேபோன்ற ஆனந்தத்தை மற்றெப்பொழுதும் அடைந்துகொள்வதில்லை.”
குர்ஆன் ஷரீபின் போதனையின் பிரகாரம் முஸ்லிமல்லாதாரைக் கொலை புரிபவனுக்கு சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றனவென்று இஸ்லாத்தின்மீது மகா வெட்ககரமான பழியைச் சுமத்துவதற்குக் காரணபூதமாய் விளங்கிவரும் அந்தப் புத்தகத்தின் இந்தப் பகுதியைப்பற்றி மட்டுமேதான் நாம் இந்த வியாசத்தில் விசாரணைசெய்து பார்க்கவேண்டும். இந்த விதமான விஷம் நிரம்பிய வித்தானது “சத்தியார்த்த பிரகாச”த்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் ஷரீபின் 2:190-இல் முஸ்லிம்கள் தற்காப்பினிமித்தம் சண்டை செய்யலாமென்று கீழ்க்காணுமாறு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது: ”ஆண்டவன் பாதையில் உங்களுடன் சண்டை செய்பவர்களுடன் நீங்களும் சண்டை செய்வீர்களாக; ஆனால், இந்த எல்லையை நீங்கள் கடக்க வேண்டாம். ஏனெனின், எல்லையைக் கடந்து செல்பவர்களை ஆண்டவன் நேசிப்பதில்லை.”
இத் திருவாக்கியத்தை மேற்போக்காய்ப் படிக்கும் எவரும் இதில் தற்காப்பின் நிமித்தமாகவே சண்டை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதை நன்கு தெரிந்துகொள்வார்; அல்லது இஸ்லாத்தை அடியோடு அழிக்கும் பொருட்டு இறுதியாக வாளை உருவிக்கொள்ளும் ஓர் எதிரியின் கையிலிருந்து முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றும் பொருட்டாகவே இவரும் வாளை உருவிக்கொள்ளலாமென்னும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை அறிந்து கொள்வார். தற்காப்பின் எல்லையைத் தாண்டக்கூடாதென்னும் தடையுத்தரவானது முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதையும் எவரும் அந்த ஆயத்திலிருந்து நன்கு தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆரிய சமாஜ மூலபிதாவின் தாக்குதலானது இவ்வாறு காணப்படுகிறது:-
“சத்தியார்த்த பிரகாச”த் தாக்கு
“குர்ஆனில் இப்படிப்பட்ட போதனைகள் இல்லாமலிருப்பின், முஹம்மதியர்கள் முஹம்மதியரல்லாதவரிடத்து இத்துணைக் கொடுமையுடன் நடந்துவந்திருக்க மாட்டார்கள். அவர்கள் நிரபராதியானவர்களைக் கொலை புரிவதனால் அதிகமான பாபத்தை இழைத்திருக்கிறார்கள். முஹம்மதிய மதத்தில் நம்பிக்கை கொள்ளாதவன் காபிரென்றும் அப்படிப்பட்ட காபிர்களைக் கொலை புரிவதே மேலென்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவ்விஷயத்தில் அவர்கள் தங்களுடைய மதக் கொள்கைகளுக்குத் தக்கவாறாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தெய்வத்தின் விஷயமாய்ச் சண்டை செய்துகொண்டிருக்கும்போதே தங்கள் அரசாங்க மேன்மையையும் இழந்துவிட்டார்கள்.
இந்த மார்க்கம் முஹம்மதியரல்லாதாரிடத்தில் கொடுமையுடனே நடந்துகொள்ளும்படி உண்மையிலேயே போதிக்கின்றது. திருடியவன் வீட்டில் திருப்பித் திருடுவதனால்தானா அத்திருட்டைத் தண்டிக்கவேண்டும்? ஒருவன் நமது பொருளைத் திருடிவிட்டானென்னும் காரணத்தினால் நாமும் அவனுடைய வீட்டுக்குள் கன்னம் வைக்க வேண்டுமோ? நிச்சயமாக இது சரியானதன்று. அறியாத ஒருவன் நம்மை ஏசிவிட்டால், நாமும் அவனைத் திருப்பி ஏசவேண்டுமோ? இப்படிப்பட்ட விஷயங்கள் கடவுளால் ஒருபோதும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டா; அவருடைய ஞானம் மிக்க எந்தப் பக்தனும் இவ்வாறு உபதேசிக்கத் துணியான்; மேலும், அவருடைய திருவசனத்திலும் இவை காணப்படமாட்டா. இவை அறியாத சுயநலம் பிடித்த ஒரு மனிதனுடைய வார்த்தைகளாகவே இருக்க வேண்டும்” – (டாக்டர் பரத்வாஜின் மொழிபெயர்ப்பு, பக்கம் 754)
இதுதான் ஆரிய சமாஜிகளின் அபிப்பிராயத்தில் பிறமத ஆராய்ச்சியென்று கருதப்படும் குப்பையின் ஒரு மாதிரியாகும். மேற்கூறிய விஷயத்தை எழுதிய மனிதன் குர்ஆன் ஷரீபினால் தற்காப்புச் சண்டை மட்டுமேதான் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை நன்குணர்ந்து கொண்டிருக்கிறானென்பது, அம் மனிதனுடைய அபிப்பிராயத்தின் இறுதியிலே மிக்க விளக்கமாய்க் காணப்படுகின்றது. ஏனெனின், அவ்விடத்தில் தற்காப்புச் சண்டையை, நம் வீட்டில் திருடியவன் வீட்டில் திரும்பத் திருடுவதை ஒக்குமென்று அவன் கூறுகிறான். இவ்வாறிருந்தும் இக்காரியத்தை “நிரபராதியானவர்களைக் கொலை புரிதல்” என்றும், முஸ்லிமல்லாதாரை வாளுக்கு இரையாக்குவதென்றும் வருணித்திருக்கிறான். தன் மண்டைக்குள் சற்றேனும் மூளையையுடைய எவனும் தற்காப்பென்பதை நிரபராதிகளைக் கொலை புரிவதென்று தப்பருத்தம் செய்துகொள்ளத் துணிவானா? ஆயினும், ஆரிய சமாஜத்தின் பிரதம குரு அதைத் தற்காப்பென்று ஒத்துக்கொண்டும், அதே மூச்சில் நிரபராதிகளான முஸ்லிமல்லாதாரைக் கொலை புரிவதென்றும் கண்டித்துக் கூறுகின்றார். அவர் குர்ஆன் ஆயத்தை அறிந்து கொள்ளாமலிருக்கவில்லை; அதன் தாத்பரியத்தைத் தெரிந்துகொள்வதிலும் சிரமம் ஒன்றுமில்லை. ஆதலின், இஃதொரு வேண்டுமென்றே பரத்தப்படும் பொய்ப் பிரசாரமாகவே பிரத்தியக்ஷமாய்க் காணப்படா நின்றது. இதற்குக் காரணம் இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம்கள்மீதும் ஹிந்துக்கள் மனத்தைத் துவேஷம் கொள்ளும்படியாகச் செய்யவேண்டுமென்பதாகவே ஸ்பஷ்டமாய்க் காணப்படுகிறது.
சத்தியார்த்த பிரகாசத்தில் யுத்தம்
ஆயினும், தற்காப்பைத் தூஷிக்கும் அதே “சத்தியார்த்த பிரகாசம்” இந்த விதமான சட்டமொன்றையும் எழுதியிருக்கிறது: தீய மனிதர்களையும், கொலை பாதகர்களையும் பஹிரங்கத்திலேனும் அந்தரங்கத்திலேனும் கொலை புரிவதனால் ஒருவனும் பாபம் செய்தவனாகான். கோபத்தைக்கொண்டு கோபத்தைக் கொல்வதென்பது, ஆவேசமானது மற்றொராவேசத்தின்மீது பாய்வதேபோலிருக்கிறது – (துர்க்காதாஸ் மொழிபெயர்ப்பு. பக்கம் 203).
தற்காப்பினிமித்தம் யுத்தம் புரிவதென்பது திருடன் வீட்டுக்குள் திரும்பக் கன்னம் வைப்பதுபோலாகுமென்றும், ஆனால், தீயவனென்று ஒருவனால் கருதப்படும் மற்றொருவனைப் பஹிரங்கத்திலேனும், அந்தரங்கத்திலேனும் கொலை புரிவதென்பது ஓர் ஆவேசத்தின்மீது மற்றோராவேசம் பாய்வதேபோல் இருக்கிறதென்னும் காரணத்தினால் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லக்கூடிய இவ்விருவிதமான, ஆனால், நேர்மாறான அபிப்பிராயங்களை ஒரே மனமுடையவன் எவ்வாறு எழுதத் துணிந்திருப்பான்? மேலும் அதே புத்தகமானது, காரணம் இருந்தபோதிலும், அஃதில்லாமலிருந்தபோதிலும், யுத்தம் புரிவதைப் பின்வருமாறு ஆமோதித்திருக்கிறது:
“தம்முடைய சுயநலத்துக்காகவே, சந்தர்ப்பம் இருந்த போதிலும், இல்லாமலிருந்தபோதிலும் நிகழ்த்தப்படும் யுத்தமென்றும், நண்பனின் அல்லது நேசக்கக்ஷியின் பகைவனாயிருக்கும் துன்பஞ்செய்யும் எதிரியின்மீது இழைக்கப்படும் யுத்தமென்றும் அந்த யுத்தங்கள் இருவகைப்படும்” – (துர்க்காதாஸ் பக்கம் 193). இன்னமும், “சத்தியார்த்த பிரகாச”த்தில் காணப்படும் யுத்தமுறைகள் பின்வருமாறாகும். அவற்றை உற்று நோக்குங்கால் யுத்தமென்பது ஆரிய சமாஜிகளின் அபிப்பிராயத்தின் பிரகாரம் யோக்கியமான அத்தியாவசியம் நேரிடும்போது மட்டும் ஆரம்பிக்கப்படாமல், எதிரியானவன் எளிதில் நசுக்கப்படும்படியான விதத்தில் அத்துணைப் பலஹீனத்துடனும், யுத்தத்தை எதிர்பாராமலும் இருக்கும்போதும் தொடங்கப்படலாம்:-
“ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படும் யுத்தமானது தனக்குச் சிறிது துன்பத்தைத் தருமென்றும், பிறகொரு காலத்தில் நிகழ்த்தப்படும் யுத்தமானது தனக்கு நன்மையைக் கொடுத்து நிச்சயமான ஜயத்தைத் தருமன்றும், அவன் அறிந்துகொள்ளக் கடவானாயின், உடனே எதிரியுடன் சமாதானம் செய்துகொண்டு, பிறகொரு நல்ல சமயத்தைப் பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்” – (பக்கம் 194).
“தன்னுடைய சேனைகள் ஆவேசத்துடனும் பலத்துடனும் யுத்தத்துக்குத் தையாராயிருக்கின்றன வென்றும், எதிரியின் சேனைகள் பலஹீனமாகவும் தையாரில்லாமலும் இருக்கின்றனவென்றும் கண்டுகொள்ளுங்கால் அவன் அவ்வெதிரியுடன் யுத்தத்துக்குப் புறப்பட வேண்டும்” – (பக்கம் 194).
“தன் சைன்யம் பலத்திலும் யுத்த தளவாடத்திலும் மெலிந்திருக்கும்போது அவன் ஜாக்கிரதையுடனும், மெல்ல மெல்லவும் எதிரியைச் சமாதானம செய்து கொண்டு வீட்டிலிருந்துவிட வேண்டும்” – (பக்கம் 194).
“உண்மையான ராஜ்ஜிய தந்திர நிபுணனாய் விளங்கும் அரசனொருவன் தன்னுடைய நேசக்கக்ஷியாரேனும் பொதுவான நொதுமலரேனும் தன்னுடைய பகைவர்களேனும் அதிகாரத்தில் வன்மைபெற்று விடாமலும் தனக்குமேல் அதிகமான செல்வாக்கைப் பெற்றுவிடாமலும் இருத்தற்குரிய அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக் கடவான். – (டாக்ட்டர் பரத்வாஜ், பக்கம் 207).
இப்பொழுது அவர்களுடைய யுத்தம் தர்மயுத்தம் அன்றென்பதையும், அவர்களுடைய நட்பு உண்மையான நட்பு அன்றென்பதையும் மிகச் செம்மையாய்த் தெரிந்துகொண்டு விட்டோம். அந்தப் பெரிய ஆரிய சீர்திருத்தக்காரர் கூறுவதேபோல், எதிரியுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்னும் அத்தியாவசியம் ஏற்படாத காலத்தில் அவ்வெதிரியை நசுக்கி ஜயிப்பதற்கு எல்லாவிதமான ஏமாற்றங்களையும் உபயோகிக்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய ஒரே நோக்கமாயிருக்கவேண்டும். நன்றியறிதலுள்ள நேசவரசனும் தன்னைக் காட்டினும் வன்மையில் உயரக்கூடாதென்றும் இவன் ஜாக்ரதையாக நோட்டமிட்டுக்கொண்டிருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஜாதியரை நேசரென்றேனும் பகைவரென்றேனும் யார் நம்புவதற்குத் துணிவார்?
“பிரதாப்” பத்திரிகை கூறும் வண்ணம் தெஹ்லியில் கூடிய முதல் ஆரியன் காங்கிரஸின் உதவியைக்கொண்டு கிளம்பப்போகும் ஆரிய சமாஜிகள் ஹிந்து சமூகத்தின் பாதுகாவலரென்னும் முறைமையில் இப்படிப்பட்ட யுத்தகால சட்டங்களையெல்லாம் சீக்கிரம் தங்கள் செய்கைகளில் உபயோகித்துக் காட்டப்போகிறார்களென்றே நாம் நினைக்கிறோம். இப்பொழுதும் மஹாசபையும் ஆரியசமாஜத் தலைவர்களும் தேசீய விஷயத்தில் காட்டிவரும் தந்திரங்களிலும் அப்படிப்பட்ட உபாயங்கள் காணப்படாமலில்லை. அஃதாவது, முதன்முதலில் நண்பனைப் பலஹீனப்படுத்தவேண்டும்; பிறகு பலசாலியின் அநீதத்தைக்கண்டு அந்நண்பன் குறைகூறுவானாயின், அவனை உடனே பகைவனெனக் கொண்டு அடியோடு அழித்துவிட வேண்டும். மஹாசபையுடனும் சமாஜத்துடனும் சேர்ந்துவரும் புதிய நண்பர்களும் இவ்விஷயத்தைக் கவனிப்பார்களாக.
இஸ்லாத்தின் யுத்தகால சட்டம்
இஸ்லாமார்க்கத்தில் யுத்தகால சட்டங்களும் சமாதானகால சட்டங்களும் ஒருங்கே காணப்படுகின்றன. ஆனால், யுத்தகால சட்டமில்லாது இவ்வுலகில் ஒரு ஜாதியார் உயிர்வாழ்ந்திருப்பது சாலுமோ? ஆயினும், இஸ்லாத்தின் யுத்தகால சட்டத்தில் காணப்படும் ஒரு முக்கியமான தாத்பரியம் யாதெனின், மிகப்பொல்லாத எதிரிகளுடனும் செய்துவரும் காரியங்களிலும் தர்மயுத்தமென்னும் சாங்கியத்துக்குரிய அடையாளமே மிக்க அழுத்தமாய்க் காணப்படுகிறதென்பதுதான். அச்சட்டத்தின் மூலக் கருத்தானது, “சத்தியார்த்த பிரகாச”த்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் குர்ஆன் ஆயத்தில் காணப்படுவதேபோல், யுத்தமென்பது தற்காப்பினிமித்தமாக மட்டுமேதான் புரியப்படலாமென்று இஸ்லாமார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஆனால், மிகக்கொடிய எதிரியுடன் புரியப்படும் யுத்தமும் அந்த எதிரி சமாதானத்தை விரும்புவானாயின், அதற்குமேல் நிகழ்த்தப்படுவது கூடாது:
“அவர்கள் சமாதானத்தை நாடுவார்களாயின், நீரும் அதையே நாடி, ஆண்டவன்மீது நம்பிக்கை வைப்பீராக…. அவர்கள் உம்மை ஏமாற்ற எத்தனிப்பார்களாயின், பிறகு ஆண்டவனே உமக்குப் போதுமானவனா யிருக்கிறான்” – (குர்ஆன் 8: 61, 62). இதுதான் தற்காப்புக்குரிய தர்மயுத்தமாகும். இதுதான் ஏமாற்றவேண்டுமென்னும் எண்ணத்தையுடைய எதிரிகளுடனும் செய்துகொள்ளப்படும் சரியான சமாதானமாகும். இதுதான் குர்ஆன் ஷரீபால் கூறப்பட்டிருக்கும் தர்மயுத்த சட்டமாகும். இதுதான் நபிகள் பெருமானாலும் (ஸல்) அன்னவரின் தோழர்களும் பின்னவர்களுமான சஹாபாக்களாலும் (ரலி) அனுஷ்டிக்கப்பட்டு வந்த சட்டமாகும்.
இஸ்லாத்தில் தற்காப்பு யுத்தங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன வென்னும் காரணத்தைக் கொண்டு, இம்மார்க்கத்தையே கொலையும் இரத்தவெள்ளமும் நிரம்பிய மதமென்று ஆரிய சமாஜிகள் நிந்தித்து வருவதனால், ஹிந்து மதத்துக்கு ஒருவகை நன்மையை விளைப்பதாய் நினைக்கிறார்கள்; ஆனால், இக்காரணத்தின் பயனாய் மூண்டுவரும் தீயானது அவ்வொரு சமூகத்தையேனும், இவ்விரு சமூகத்தையேனும் நீறாக்கிவிடுதல் கூடும்.
ஆரிய சமாஜிகளுக்கு எவ்வாறு நல்லறிவுறுத்தக் கூடுமென்பது எமக்கொன்றும் செம்மையாய்ப் புலப்படவில்லை. எந்த மனிதனையும் அவனுடைய மதநம்பிக்கையின் காரணத்தினா மட்டுமே கொன்றுவிடலாமென்று அனுமதியளிக்கக்கூடிய எப்படிப்பட்ட ஆயத்தும் குர்ஆன் ஷரீபில் காணப்படவேயில்லையென்று எண்ணிலடங்காமுறை எடுத்தோதியிருக்கிறோம். இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமின் உயிரே போலத்தான் முஸ்லிமல்லாதாரின் உயிரும் பத்திரமென்று கருதப்படுகிறது; “கொலைக்குக் கொலையாகவேனும், தரணியின்மீது விஷமத்தைப் பரத்துவதற்காகவேனமல்லாது (வேறு அக்கிரமக் காரணத்தினால்) ஓர் உயிரைக் கொல்கிறவனது செய்கையானது, அவன் எல்லா மனிதர்களையும் கொன்றுவிடுவதையே யொக்கும்” – (குர்ஆன் 5:32).
இவ்வாயத்தில் ஏதேனும் ஓர் உயிரைக் கொல்வதன் விஷயம் மகாபாதகமென்று கூறப்பட்டிருக்கிறதேயல்லாமல், ஒரு முஸ்லிமின் உயிரைப் போக்குவதுதான் குற்றமென்று குறிப்பிடப்பட்டில்லை. ஒரு மனிதன் முஸ்லிமாகவில்லையென்னும் காரணத்தினால் அவன் கொல்லப்படுவதற்கு அனுமதி கொடுத்தோ, அல்லது கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டோ நபிகள் பெருமான் (ஸல்) தங்கள் ஜீவதசை முழுதும் எப்பொழுதேனும் ஒருமுறையேனும் இருந்துவந்தார்களென்பதை ஓர் உதாஹரணத்தைக்கொண்டேனும் ருஜுபிக்கும்படியாய் இஸ்லாத்தை இழித்துக் கூறும் எதிரிகள்பால் நாம் அடிக்கடி சுவால் செய்கிறோம். முஸ்லிம்கள் ஜயங்கொண்டு அனேக நூற்றாண்டுகள் வரை ஆண்டுவந்த தேசங்களிலெல்லாம் எங்கேனும், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் அம்மார்க்கத்தின் உச்சகாலத்தில் செய்து வந்ததேபோல் முஸ்லிமல்லாதாரை அடியோடு ஒழித்துவிட்டார்களாவென்றும், அல்லது ஆரியர்கள் இந்நாட்டின்மீது பரவிவந்து ஜயங்கொண்ட காலையில் இங்கிருந்த ஆதிக்குடிகளை யெல்லாம் அடிமைகளாக ஒடுக்கிவிட்டதேபோல் முஸ்லிம்கள் எத்தேசத்திலேனும் செய்திருக்கிறார்களாவென்றும் எடுத்துக் காட்டும்படியாய் எதிர்மதவாதிகளை நாம் அடிக்கடி அறைகூவியழைக்கின்றோம். இஸ்லாம், தனது பெயரைக் கொண்டே அறிவிப்பதேபோல் மற்ற மதவாதிகளெல்லாரும் சாந்தியுடன் பரஸ்பரம் வாழ்ந்து வருதற்குரிய சமாதானத்தையே அளிக்கின்றது. எனவே, ஹிந்துக்கள் ஆரிய சமாஜிகளின் தவறான பொய்ப் பிரசாரத்தைக் கைவிட்டு, இஸ்லாத்தின் சமாதானத்தை நல்லெண்ணத்துடன் தாவிப் பிடித்துக் கொள்வார்களாக. அஃதாவது, எல்லா மதங்களிடத்தும் சரியான மரியாதையும் எல்லா ஜாதியரிடத்தும் சரியான சுதந்திரமும் பாராட்டிவரக் கடவார்களாக. சாந்தி! சாந்தி! சாந்தி!
(முற்றும்)
-பா. தாவூத்ஷா
<<முந்தையது>>
<<நூல் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License