மொழிமின் – 6

by

தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம்.

சுய தெளிவு – நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.

பலதரப்பட்ட உணர்ச்சிக் குவியல்களின் உருவம் நாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சி சற்றுத் தூக்கலாக அல்லது மந்தமாக இருக்கும். ஒருவருக்கு முன் கோபம், ஒருவருக்கு எரிச்சல், மற்றொருவர் சாந்த சொரூபி என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அதனால், நாம் எத்தகைய உணர்ச்சியாளர் என்ற அடிப்படைத் தெளிவு வேண்டும். அதனுடன், நாம் சொல்ல விழையும் கருத்து, ஆலோசனை, ஆட்சேபனை ஆகியனவற்றைப் பற்றிய தெளிவான அபிப்ராயம் இருக்க வேண்டும்.

‘அவன் சொன்னான், இவன் வாட்ஸ்அப்பில் அனுப்பினான், ஃபேஸ்புக்கில் இதுதான் டிரெண்ட் – அதனால் நானும் கூட்டத்துடன் கோரஸானேன்’ என்பது போலன்றி, சுய தெளிவு இருந்தால்தான் உரையாடலோ தகவல் பரிமாற்றமோ துல்லிய முறையில் அமையும். நமது சுய தெளிவான பேச்சுதான் நாம் உரையாடுபவரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள நம் மன வாசலைத் திறந்து வைக்கும். அவர்களை வரவேற்கும்.

வேளை – ஆங்கிலத்தில் timing என்பார்கள். ‘எதை எப்போ சொல்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லை’ என்று சொல்லியிருப்போம், வாங்கிக் கட்டியிருப்போம். உங்களுடைய உறவினர் மிகவும் உடல்நலம் குன்றி, ஆயுள் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் படுக்கையில் இருக்கிறார். அவரை நலம் விசாரிக்கச் செல்கிறீர்கள். அவரைத் தாக்கியுள்ள நோயைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே நோயில் உங்களுடைய நண்பரொருவர் மரணமடைந்திருக்கிறார். அதற்கான மருத்துவம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

‘வாய்மையே அறம்’ என்று நினைத்துக்கொண்டு, “இப்படித்தான் என் நண்பன், ரொம்பக் கஷ்டப்பட்டுச் செத்துப்போனான். என்னென்னத்துக்கோ மருந்து கண்டுபிடிச்சுட்டானுங்க, இந்தப் பாடாவதி நோய்க்குத்தான் இன்னும் சிகிச்சையைக் கண்டுபிடிச்ச பாடில்லே…” என்ற ரீதியில் உங்கள் பேச்சு அமைந்தால் என்னவாகும்? நோயாளிக்கு அச்சமயம் தேவைப்படுவது அன்பு, அனுசரணை, ஆறுதலான பேச்சு. மாறாக இப்படிப் பேசுவது, அவரது இறுதி யாத்திரையை நாம் விரைவுபடுத்தத்தான் உதவும்.

“டேய் இங்கிருந்து போய்த் தொலைடா. இனி நலம் விசாரிக்கிறேன்னு இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துடாதே” என்று கதறும் நிலைக்கு உங்கள் உறவினர் ஆளாவார்.

எனவே, ஏதொன்றும் சிறந்த தகவல் தொடர்பாக அமைய ‘டைமிங்’ முக்கியம். எதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற இங்கிதம் மிக முக்கியம். மட்டுமின்றி, அபிப்பிராய பேதமுள்ள விஷயங்களாக இருப்பின், நாம் சாந்த நிலையில் இருக்கும்போது உரையாடுவது சிறப்பு. காரசார விவாதம், தடித்த வார்த்தைகள், சண்டை சச்சரவு ஆகியனவற்றைத் தவிர்க்க அதுதான் நல்லது. அடுக்களையில் கத்தியும் கரண்டியுமாய் இருப்பவரிடம் சென்று விவாதத்தை ஆரம்பித்தால், அது ஒரு நேரத்தைப்போல் இருக்காது.

கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அபூபக்ரு (ரலி) தாம் கோபமாக இருக்கும் தருணமென்றால் தம்மைத் தனித்துவிடும்படி பொதுமக்களுக்கு உபதேசம் புரிந்துள்ளார். அச்சமயம் எடுக்கும் முடிவுகள், வழங்கும் தீர்ப்புகள் அநீதிக்கு வழிவகுத்துவிடும் என்ற உச்சபட்ச அச்சம் அவரிடம் இருந்தது.

உடல் மொழி – தகவல் பரிமாற்றம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. அது உடல் மொழி சார்ந்ததும் கூட. நேரடியாக உரையாடும்போது அது முக்கியப் பங்கு வகுக்கிறது. “ஐ லவ் யூ” என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்லும்போது, அது மெய்யா, பாசாங்கா என்பதை உங்கள் கண்கள் எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். ‘முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்றொரு சொலவடை உண்டு.

முக பாவம், கண்கள், செய்கை, சமிக்ஞை போன்றவையெல்லாம் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். எனவே, உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டுமெனில் உடல் பாவமும் அதற்கேற்ப நேர்மையானதாக அமைய வேண்டும். நளினமான, கண்ணியமான உடல்மொழி அவசியமானது மட்டுமல்ல. நீங்கள் உரையாடுபவர் உங்களை நம்ப, தம் கருத்தை மனம் திறந்து பகிர்ந்துகொள்ள அது வெகு முக்கியம்.

கருவில் நிலைத்தல் – என்ன விஷயத்தைப் பேசுகிறோமோ, எந்தப் பிரச்சினையை விவாதிக்கிறோமோ அதை விட்டுப் பேச்சுத் திசை மாறாமல் பார்த்துக்கொள்வது வெகு வெகு முக்கியம். ஒருவரிடம் நமக்கு ஆயிரத்தெட்டுக் குறைகள், பிரச்சினைகள் இருக்கலாம். அவையெல்லாம் நமது மனத்துக்குள் புகைந்துகொண்டே இருக்கும். கடைசியில் ஒருநாள் ஏதேனும் ஒரு பிரச்சினையை அவரிடம் பேசப்போக, அத்தனைநாள் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் தூக்கிக் கொட்டி பேசிவிடக்கூடாது.

அச்சமயத்திற்கு எது முக்கியப் பிரச்சினையோ, எதைப் பேச வந்தோமோ, அதைத்தான் பேச வேண்டும், அதைத்தான் தீர்க்க முயல வேண்டும். இல்லையெனில் பிரச்சினைகள் இடியாப்பச் சிக்கலாகி, அதை அவிழ்ப்பதற்குப் பதிலாய், வார்த்தை தடித்து, வாதம் விவாதமாகி, விஷயம் அடிதடியில்கூட முடியலாம். ஆம்புலன்ஸ் எண் அவசியப்படும்.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-இல் 22 செப்டெம்பர் 2017 வெளியான கட்டுரை

<<மொழிமின் – 5>>  <<மொழிமின் – 7>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment