மொழிமின் – 3

நான் அனைத்திலும் ‘Straight Forward’. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் ‘Face to Face’ தான். விளைவு நான் அனைவருக்கும் எதிரி. அதனால்

எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதே ஓரளவிற்குப் பயன் தருகிறது” என்று இராஜகிரியார் எழுதியிருந்தார்.

‘Straight forward’ ஆக இருப்பது தப்பே இல்லை. அது ஒரு வகையில்  நேர்மையும்கூட. அதற்காக எதையும் முகத்தில் அடித்தாற்போல் பேச/தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமில்லையே! ‘தன்மை’ என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதைக் கற்றுக்கொண்டு செயற்படுத்துவதில் இருக்கிறது நம் வெற்றி. ஆனால் அது எளிதில் வசப்படாது. மெதுமெதுவே கற்றுக்கொள்ள முயல்வோம்.

தகவல் தொடர்பில் கூடாதவை என்று சிலவற்றை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா? இங்கு மேலும் சில.

4. பட்டப் பெயர் கூடாது – மண்டை, அங்கம், குணம் போன்றவற்றைப் பரிகாசம் செய்து பட்டப் பெயரிட்டு அழைக்கும் காட்சிகளெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் நம்மிடம் இயல்பான ஒன்றாகிவிட்டது. திரைப்படங்களின் கைங்கர்யம். சட்டென்று நாமும் சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்குப் பின்னே மறைந்திருக்கும் அநாகரிகத்தை நாம் கவனிப்பதில்லை. சக மனிதர்களைப் பரிகசித்தும் பழித்தும் பட்டப் பெயரிட்டும் தாழ்வாகக் குறிப்பிடுவது நாகரிகமற்ற செயல். நகைச்சுவையானாலும் சரி, நம் கருத்துக்கு மாறுபடுகிறார் என்றாலும் சரி, நியாயப்படுத்த முடியாத அநியாயம் அது. எளிதில் புண்படுத்தக் கூடியது.

ஒருவரைக் காயப்படுத்தி, நோவை உண்டாக்கிவிட்டு அவருடன் நாம் எப்படி இணக்கமான உறவை அமைக்க முடியும்; நமது கருத்தையும் ஆலோசனையையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இஸ்லாமிய அடிப்படையில் அது தடுக்கப்பட்டதும் கூட. ஏனெனில் அல்லாஹ் தன் அருள்மறையில், இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.  (49:11) என்று நம்மைத் தடுக்கின்றான்.

அது சரி, ஆனால் நடிகன், அரசியல்வாதி என்று அடாசுப் பேர்வழிக்கெல்லாம் ‘டாக்டர்’ பட்டம் வழங்குகிறார்களே அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தோன்றினால், அதற்கு இரண்டு சாத்தியத்தை யூகிக்கிறேன். ஒன்று அளிப்பவருக்குக் காரியம் சாதிக்கும் உள்நோக்கம். அல்லது அவருக்கு மேற்சொன்ன நகைச்சுவை உணர்ச்சி.

5. குறுக்கிடுதல் கூடாது – நம்மிடம் உரையாடுபவர் பேசி முடிக்கும்வரை குறுக்கிடுவது கூடாது. பேச்சின் இடையே குறுக்கிடும்போது என்னாகிறது என்றால், அவர் தம்முடைய எண்ணத்தை, குறையை, கருத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது. அவர் சொல்ல வருவதை முழுவதுமாகச் சொல்லி முடிக்காவிட்டால் அவரது மன உணர்ச்சியையோ கருத்தையோ குறையையோ நாம் எப்படி முழுவதுமாக அறிய முடியும்? தவிர குறுக்கிடுவது அவரை எரிச்சலுற வைக்கும். தாம் சிறுமைப் படுத்தப்படுவதாக அவருக்குத் தோன்றும். அதனால் பல வேளைகளில் சாதாரண உரையாடல்கூட பெரும் விவாதமாக உருமாறிவிடும்.

குறுக்கிடுவது அவமரியாதையான செயல். அவமதிப்பது நமது எண்ணமாக இல்லாவிட்டாலும் அது உரையாடுபவரின் எண்ணத்தைக் கலைத்து தாம் சொல்ல வருவதை அவர் மறந்துவிடவோ, அல்லது அதை விட்டு அவர் திசை மாறவோ வழிவகுத்துவிடுகிறது. பேச்சின் இடையே நம்மையறியாமல் நாம் குறுக்கிட்டுவிட்டால், தயக்கமின்றி மன்னிப்புக் கேட்டுவிடுவது சிறப்பு.

குடும்ப வாழ்க்கையில் தம்பதியர்கள் பேச்சின் இடையே குறுக்கிடாமல் இருந்தாலே பெருமளவிலான சண்டைகளுக்கு இடமிருக்காது! ‘ம்ம்ம்… எங்கே முடிகிறது’ என்கிறீர்களா? என் யுக்தி, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று அயராமல் முயல்வது. நீங்களும் அயராமல் முயலுங்கள்.

6. புறக்கணித்தல், உதாசீனப்படுத்துதல் கூடாது – நம்மிடம் ஒருவர் தகவல் தெரிவிக்கின்றார், உதவி கேட்கின்றார், அல்லது தம் மனக் குறையை இறக்கி வைக்கின்றார். நம்மை ஒரு பொருட்டாக மதித்துதானே அவர் நம்மைத் தொடர்பு கொள்கிறார்? நாமென்ன செய்ய வேண்டும்? அத் தகவல் நமக்குத் தேவையோ இல்லையோ, உதவ முடிகிறதோ இல்லையோ, குறையைக் கேட்குமளவு நேரமிருக்கிறதோ இல்லையோ ஆறுதலாகச் செவியுறவேண்டும். இல்லையா, அதை நாகரிகமாக அவர் புரிந்துகொள்ளும் முறையில் தெரிவிக்க வேண்டும். அதுவே சரியான முறை. உகந்த நேரம் இல்லையெனில் பிறகு ஒரு நேரம் ஒதுக்கலாம். அல்லது ஒரு நேரத்தை அவருக்குச் சொல்லிவிட்டு, அந்த நேரத்தில் நீங்களே அவரைத் தொடர்பு கொண்டு பேசிவிடலாம். அது அவருக்கு உங்கள்மீது மதிப்பை அதிகப்படுத்தும்.

மாறாக, டீக்கோப்பையைச் சுற்றும் ஈயை விரட்டுவதைப் போல் அவரை உதாசீனப்படுத்தி விலக்குவது, விலகுவது அவருக்குப் பேரவமானத்தை ஏற்படுத்திவிடும். ‘நீயெல்லாம் ஒரு பொருட்டே இல்லை’ என்று நாம் அவரைக் கேவலப்படுத்துவதற்கு ஈடானது அது. மின் தொடர்பு உலகில், எந்தவொரு பதிலும் அளிக்காமல் மௌனமாக இருப்பதும் இவ்வகையான ஒருவகை புறக்கணிப்புதான்.

‘அதற்காக, அனாவசிய பேச்சு, குழப்பம், வாதம், விதண்டாவாதம் போன்றவற்றில் ஈடுபட முடியுமா’ என்று கேள்வி எழலாம். ம்ஹும். அவையெல்லாம் நாம் ஒதுக்க வேண்டிய சமாச்சாரங்கள். ‘மிக்க நன்றி. வீட்டில் அம்மா கூப்புடுறாங்க. பெண்டாட்டி என்னைத் தேடுவா’ என்று ஓடிவந்து விடவேண்டும்.

7. சுற்றி வளைக்கும் வார்த்தை விளையாட்டு கூடாது – வாத, விவாதங்களில் இதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு பிரச்சினையை, விஷயத்தைப் பேச  ஆரம்பித்து, வார்த்தைகள் தடித்துக்கொண்டே போய், ஒரு கட்டத்தில் ஒரு சில வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தர்க்கம் புரிய ஆரம்பித்திருப்பார்கள். நீதிமன்றங்களில் வக்கீல்களின் முக்கியமான பணி இது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வக்கீல் ஒளிந்துள்ளான். அவன் விழித்துக்கொள்ளும்போது நமக்குள்ளும் இப்படி ஆகிவிடும். இது கூடாது!

மாறாக. நேர்மையான முறையில், எளிதான வகையில், வார்த்தை ஜாலங்களின்றி பிரச்சினையையும் விஷயத்தையும் பேசி முடிப்பதே சிறந்தது. இல்லையெனில் விளைவு குதர்க்கம். இந்த வார்த்தை ஜால விளையாட்டை எளிதாகப் புரிந்துகொள்ள மற்றோர் உதாரணம் உண்டு.

நம் அரசியல்வாதிகளின் பேச்சு!

(தொடரும்)

-நூருத்தீன்

Image courtesy of jscreationzs at FreeDigitalPhotos.net

சத்தியமார்க்கம்.காம்-இல் 25 ஏப்ரல் 2017 வெளியான கட்டுரை

<<மொழிமின் – 2>>  <<மொழிமின் – 4>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment