குத்பும், கௌதும்

அன்பீர்! முதன்முதலில், குத்புகள் விஷயமாகவும் கௌதுகள் சம்பந்தமாகவும் கேள்வி கேட்கப் பட்டிருக்கிறது. இதற்கு நாம் சொல்லும் விடையைச் சிறிது ஆழ்ந்து கவனிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். அனேக மனிதர்கள் இவ்வாக்கியத்தைச்

சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மையே. ஆனால், இவர்கள் இவ்வாக்கியங்களின் கருத்துகளைச் சொல்லும் சமயம், இஸ்லாத்துக்கே ஒத்துக்கொள்ளாத முறையில் தாத்பரியங்களை வெளியிடுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு சிலர் சொல்லுவதைக் கவனிப்பீர்களாக: “கௌதின் உதவியினாலேயேதான் சிருஷ்டி கோடிகளுக்கு இரணம் கிடைக்கிறது. மேலும், இவர்களின் பயனாகவே தான் பகைவர்களை ஜயிக்கக்கூடிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டாகிறது. வானவர்களான அமரர்களுக்கும் கடலுக்குள்ளிருக்கும் மச்சங்களுக்கும் இவர்களின் வாயிலாகவே உதவிகள் கிடைக்கின்றன.”

இம்மாதிரியான வார்த்தைகளைக் கவனிக்குமிடத்து, காலிய்ய (ராஃபிளிய்யாக்களுள் சிலர்) என்னும் பிரிவினையார் ஹஜரத் அலீ (ரலி) அவர்கள் சம்பந்தமாய்ச் சொல்லக்கூடிய உயர்வேபோலும், கிறிஸ்தவர்கள், ஹஜரத் ஈஸா (அலை) அவர்களின் விஷயமாய்க் கூறும் கூற்றுக்களே போலுந்தான் இது காணப்படுகிறது. இவ்வண்ணம் இயம்புவதோ மஹா பெரிய குஃப்ரிய்யத்தைக் கொணர்ந்து விடும்படியானதாய்த் தென்படுகிறது. எனவே, கௌதென்னும் பதத்துக்கு மேலே சொல்லியதேபோல் எவரேனும் தாத்பரியம் கொள்வாராயின், அவர் உடனே ஆண்டவனிடம் தன்னுடைய தவறுதலைச் சொல்லித் தௌபா செய்ய வேண்டும். இல்லையேல், அவன் மஹா கொடிய கெட்ட மனிதனென்றே கொள்ளப்படுவான். ஏனெனின், சிருஷ்டிப்  பொருள்களினின்றும் மலக்குக்கள் மூலமாகவோ, இல்லை, எந்த மனிதர்கள் வாயிலாகவோதான் அல்லாஹ்வின் இரணம் இகத்துக்குக் கொடுக்கப்படுகிறதென்பதில்லை. ஆனால், கிறிஸ்தவர்களும் காலிய்யாக்களும் மாத்திரம்தாம் ஹஜரத் ஈஸா (அலை) அவர்களின் பொருட்டாகவும், ஹஜரத் அலீ (ரலி) அவர்களின் மூலமாகவும் இரணங்கள் இறக்கி வைக்கப்படுகின்றனவென்று இயம்புகிறார்கள். ஆனால், உண்மையான முஸ்லிம்களெல்லாரும் இவ்வாறெல்லாம் கூறுவது நமது ஷரீஅத்துக்கே நேர் முரணானதாய் இருக்கிறதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இவ்வண்ணமே வேறு சிலர் சொல்வதையும் கவனிப்பீர்களாக: உலகத்தின்கண் அவுலியா அல்லாக்களானவர்களுள் (கடவுளுக்கு வந்தவர்கள்) முந்நூற்றுச் சொச்சம் பேர் நுஐபாக்களென்னும் மனிதத் தலைவர்களாக இருக்கிறார்கள். பின்னும் இவர்களுள் 70 பேர் நுகபாக்களாவார்கள் (பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள்); மேலுமிவர்களுள் 40 பேர் அப்தால்களாவர் (பிரதிநிதிகள்); இன்னமுமவர்களுள் 7 பேர் அக்தாப்களாவர் (அஸ்திபாரத்தூண்கள்); மேலும், இவர்களுள்ளேயே 4 பேர் அவ்தாதெனப்படுபவர்களுளர் (உறுதியானவர்).

பிறகு மேலே சொல்லி வந்த இவர்களுக்கெல்லாம் தலைமையாய் ஒருவர் விளங்குகிறார். இவர்தாம் கௌதெனப்படுபவர் (ரட்சிப்பவர்). இவர் எக்காலமும் மக்கா ஷரீஃபிலேயே ஜீவித்துக்கொண்டிருப்பார். எனவே, இவ்வகில மக்களுக்கு ஏதேனுமொரு கொடிய கஷ்டம் வந்தடுக்குமாயின், உடனே இவர்கள் முந்நூற்றுச் சொச்ச மேதாவிகளைக் கொண்ட நுஐபாக்களின் புறம் செல்லுகிறார்கள். இந்த நுஐபாக்கள் தாங்களொன்றும் சுயமே செய்ய முடியாது, நுகபாக்களின் பக்கம் செல்லுகிறார்கள். இவர்களும் முறையே அப்தால்களின் பக்கமும், அப்தால்கள் அக்தாப்களின் சமுகங்களிலும், அக்தாப்கள் அவ்தாத்களினிடங்களிலும் சென்று, இறுதியாய் இன்னவர்களெல்லாம் மகா மேன்மை பொருந்திய பர்தெவாஹிதான (தனித்த ஒருவரான) கௌதினிடம் செல்லுகிறார்கள். இவரே இன்னவர்களின் கஷ்ட நஷ்டங்களையும் துன்பங்களையும் நிவாரணம் பண்ணி வைக்கிறார்.

மேலும், வேறு சில மனிதர்கள், நாம் மேலே சொல்லி வந்த நாமங்களையும் எண்ணிக்கைகளையும் சிறிது ஏறக்குறைய மாற்றியும் கூறுகிறார்கள். இஃதொருபக்கல் கிடக்க.

ஹஜரத் கில்ர் (அலை) அவர்கள் ஒரு வலீயென்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு கில்ர் இருந்தே தீரவேண்டுமென்றும் சிலர் நம்புகிறார்கள். இன்னவர்கள் நம்பிக்கையுடன் நில்லாது, இந்த கில்ரை கௌதுடைய தரஜாவுக்குச் சரியாய் உயர்த்திக்கொண்டு, கௌதுக்கு அல்லது தற்கால கில்ருக்கு ஒரு பச்சைத் துண்டு வானலோகத்தினின்று மக்காவின்கண் இறங்கிக்கொண் டிருக்கிறது என்றும் வாய்கூசாமல் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது சுயமே நீங்கள் இதை நிராகரித்து விடுவீர்களென்பதில் சிறிதும் ஐயமில்லை. ஏனெனின் இவர்கள் கூறும் இக்கூற்றுக்கு, ஆண்டவனது திருவேதத்திலோ, நாயகம் (ஸல்) அவர்களின் திருவாக்கியங்களிலோ, இல்லை, அவர்களின் நடை உடை பாவனைகளிலோ, ஸலஃப் ஸாலிஹீன்களின் நடக்கையிலோ, மகா மேதாவிகளின் மார்க்கங்களிலோ ஒரு சிறிதும் ஆதாரமிருப்பதாய்த் தென்படவில்லை.

மேலும், எம்பிரான் (ஸல்) அவர்களும் ஹஜரத் அபூபக்ர், உமர், உதுமான், அலீ (ரலி) முதலிய மகான்கள், மற்றும் கௌதுகளைவிட மிகமிக மேலானவர்களென்பதை எந்த முஸ்லிமும் மறுத்துரைப்பது முடியாது. எனவே, இன்னவர்களெல்லாம் மதீனாவிலேயேயிருந்து தங்கள் காலத்தைக் கடத்தினார்களென்பது சரித்திரமுணர்ந்த ஓர் உண்மையான விஷயமாகும். ஆனால், இவர்களெல்லாரும் மதீனாவில் வதிந்துகொண்டு வந்தததால் வானத்தினின்றிறங்கும் பச்சைத் துண்டைப் பெற்றுக்கொண்டிருத்தல் முடியாது. இதன்படி இவர்களெல்லாம் கௌதுடைய மர்த்தபாவுக்குப் போய்ச் சேரவில்லையென்றும் ஏற்படுகிறது. இவ்வாறு வந்திறங்கியதாய் இன்னவர்கள் எங்கும் கூறியிருக்கிறார்களுமில்லை. (இதன்படி கவனிக்கும்போதும், இவர்கள் வார்த்தை வெறும் அர்த்தமற்றதென்றே கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.)

சில மனிதர்கள், முகீரா பின் ஷுஃபாவின் வேலைக்காரரான ஹிலால் அவர்கள் அக்தாப்களான எழுவருள் ஒருவரென்று கூறி, ஒரு ஹதீதையும் ரிவாயத்துச் செய்கிறார்கள். ஆனால், ஹதீதை ஆராயும் மேதாவிகளின் ஒருமனப்பட்ட அபிப்ராயத்தின்படி இந்த ஹதீது ஒத்துக் கொள்ளக்கூடியதன்று என்று மறுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இம் மாதிரியான சில ரிவாயத்துகளை அபூ நயீம் “ஹிலயதுல் அவுலியா”விலும் ஷெய்க் அப்துர் ரஹ்மான் ஸில்மீ தம்முடைய சில கிரந்தங்களிலும் வரைந்து வைத்திருக்கிறார்கள். இவ்விருவரும் கூறியிருக்கும் ஹதீதுகளில் ஸஹீஹானவைகளும் ஹஸன், லயீப், மௌலூஃ, மக்தூஃ முதலிய அனேக ஹதீதுகள் நிரம்பிக் கிடக்கின்றன. இவற்றுள் உண்மையானது எதுவென்றும் ஒப்புக்கொள்ளக் கூடாதது எதுவென்றும் மேன்மை பொருந்திய கல்விமான்கள் தாம் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனின், நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு வாக்கியத்தை ஒருவன் சொல்லி, “இதை எமது வள்ளல் நாயகமவர்களே தான் சொன்னார்க” ளென ஒருவன் சொல்வானாயின், அவன் இறுதி நாளின் போது தன்னுடைய இருப்பிடத்தை நரகலோகமாய்ச் செய்து கொள்ள வேண்டும், என்று நாயக வாக்கியமொன்று நன்கு உரைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும். உண்மையிலேயே ஆண்டவன்மீது பரிபூரண நம்பிக்கை கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏதேனும் நன்மையைத் தேட வேண்டுமென்றாலோ, இல்லை, தீமையை ஒதுக்க நாடினாலோ, உடனே இவர்கள் இணையும் துணையும், ஒப்பும் உயர்வுமற்ற ஏகநாயனான அல்லாஹ்வினிடமே தான் வேண்டிக்கொள்வார்கள். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விஷயத்தில் ஆண்டவனுக்கும் இன்னவர்களுக்குமிடையே ஒரு தூதை வேண்டமாட்டார்களென்பது திண்ணம். இவ்வாறே இவர்கள் இஸ்லாத்தின் இன்றியமையாத தத்துவங்களை உணரந்துகொண்ட பின்னரும் எவரையேனும் இடையில் தங்களுக்குத் தரகராய் ஏற்படுத்தி ஆண்டவனிடம் வேண்டுதல் செய்வார்களாயின், இவ்வித வேண்டுகோள் ஒப்புக் கொள்ளப்படுமென்பது ஒரு சந்தேக சமாசாரமேயாம். உதாரணமாய் இதற்கான வேத வாக்கியங்களைச் சிறிது சிந்தனையில் கொண்டு வருவீர்களாக:-

மனிதனுக்கு ஏதேனும் கஷ்டம் வந்து தொடுமாயின், அப்பொழுது ஒருபக்கம் வளைந்தவனாகவும், நின்றவனாகவும் நம்மை அழைக்கிறான்; அவனுடைய கஷ்டத்தை அவனிடத்திருந்து நாம் நீக்கிவிடுவோமாயின், (பிறகு) ஏதேனும் துன்பம் வந்தடுத்தபோது நம்மை அழைக்காதவனே போல் செல்கிறான்” – (குர்ஆன் 10:12).

நுங்களுக்குக் கடலில் ஏதேனும் கஷ்டம் வந்துவிடுமாயின், ஆண்டவனைத் தவிர்த்து நீங்கள் அழைப்பதற்கு அங்கொருவரும் இருக்க மாட்டார். (அது சமயம் என்னையே அழைக்கிறீர்கள்.” – (குர்ஆன் 17:67).

அல்லாஹ்வின் வேதனை நுங்களுக்கு வந்துவிடுமாயின், அல்லது இறுதி நாள் வந்து விடுமாயின், (அது சமயம்) நீங்கள் உண்மையாளர்களாயின், அல்லாஹ் அல்லாத மற்றவர்களையா அழைக்கப் போகிறீர்கள்? இல்லை; அவனையே தான் நீங்கள் அழைப்பீர்கள். ஆண்டவன் நாடுவானாயின், உங்களுக்கு வந்திருக்கும் கஷ்டத்தை நீக்குவான். நீங்கள் (ஆண்டவனுக்கு) இணையாய் வைத்திருந்ததை மறந்து விடுவீர்கள்” – (குர்ஆன் 6:40,41).

(ஏ நபி!) உமக்கு முன்னுண்டான வகுப்பார்களிடத்தும் நம் ரசூல்மார்களை அனுப்பி வைத்தோம். அவரை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்து நம்மை வணங்கி நடக்கும்படி செய்தோம். நம்முடைய வேதனையைக் கண்டதன்பின் ஏன் அவர்கள் தாழ்மையுடன் சென்றார்களில்லை. இல்லை, அவர்களின் ஹிருதயங்கள் இருளடைந்து விட்டன. மேலும், அன்னவர்கள் செய்யும்படியான வேலைகளை ஷைத்தான் அழகாய்ச் செய்து காட்டுகிறான்” – (குர்ஆன் 6:42,43).

எனவே, எம்பிரான் (ஸல்) அவர்கள் மன்பதைகளின் நன்மையைக் கருதி மழைக்கென துஆ கேட்டிருக்கிறார்கள். சில சமயம் தொழுததன் பின்னும் மற்றும் சில சமயம் சாதாரண சமயத்திலும் ஆண்டவனிடம் பல விஷயங்களுக்காகவும் துஆ கேட்டிருக்கிறார்கள். இப்படியே ஆண்டவனுக்கு இணைவைத்து வணங்கும் முஷ்ரிக்கீன்களை ஜயிப்பதற்காய்த் தொழுகையின்போது குனூத்தென்னும் வேண்டுகோளையும் எமது வள்ளல் நாயகமவர்கள் செய்திருக்கிறார்கள். இவ்வண்ணமே நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் குலஃபாயெ ராஷிதின் (நேர்மையான பிரதிநிதிகள்)களும் இமாம்களும் முஜ்தஹிதீன்களும் மாபெரும் தலைவர்களான மஷாயிரிகளும் செய்துகொண்டும் வந்திருக்கிறார்கள். இம்மாதிரி நடந்து செல்வதையே தங்களின் முதற் கடமையாய் எண்ணியும் வந்தனர். இதுவே முன்னோர்களின் முன் மாதிரியை ஒட்டி நடப்பதென்பதாம்.

இக் காரணம் பற்றியே மூன்று விஷயங்களுக்கு மூலமேயில்லையென்று சொல்லப்படுகிறது. முதலாவது பாபெ நஸீரிய்யா, இரண்டாவது முன் தலிர் ரவாபில், மூன்றாவது உலகத்தின் கௌது.

அஃதாவது, நஸீரிய்யா வென்னும் வகுப்பார், ‘பாப் என்று ஒருவர் இருக்கிறார்; இவரால்தான் இவ் வுலகமே இவ்விதம் அழியாமலிருக்கிறது……….’ என்று கூறுகின்றனர். இவர்கள் சொல்வது ஆண்டவனைக் குறித்தேயிருக்கலாம். இவ்வாறு அல்லாஹ்வையே இன்னவர்கள் நாடுவார்களாயின், குற்றமில்லை. ஆனால், இவர்கள் இந்த பாப் என்பவர் சம்பந்தமாய்ச் சொல்லும் விஷயங்களைக் கவனிக்கும்போது, இவர்கள் ஆண்டவனைத் தவிர்த்து வேறொருவரைத் தேடுபவர்களாகவே காணப்படுகிறார்கள். எனவே, இவர்களின் இஷ்டப்படி ஒருவரைப் பெற்றுக்கொள்வது முடியாது.

இரண்டாவதாக, ராஃபிளிய்யாக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “முஹம்மத் பின் ஹஸன் முத் தலிர்” என்பவரைப் பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

இவ்வாறே மூன்றாவதாக மக்காவில் குடியிருக்கும் கௌதை இன்னவர்கள் கண்டுகொள்ளப் போவதுமில்லை. இன்னமும் சிலர் குதுப், கௌத்ஜாமிஃ என்பவர் சகல அவுலியாக்களையும் அறிவார். அவர்களுக்கு இவர் உதவியும் செய்வார் என்றும் கூறுகின்றனர். இவர்களின் வார்த்தைகளுக்கும் ஆதாரமென்ன என்பதுதான் விளங்கவில்லை. ஹஜரத் ஸித்தீக் அக்பர், பாரூக் அஃலம் (ரலி) அவர்கள் உண்மையில் சகல அவுலியாக்களுக்கும் மேலான பதவியை அடைந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும், சகல அவுலியாக்களையும் உணர்ந்து கொண்டு அன்னவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்ததாய் எங்கும் காணப்படவில்லை.

விஷயம் இவ்வாறிருக்கும்போது, கௌதென்பவர் எல்லா அவுலியாக்களையும் அறிந்துகொண்டும் அன்னவர்க்கு வேண்டிய உதவியையும் செய்துகொண்டும் வருகின்றார் என்று சொல்வது எவ்வளவு அபாண்டமான பொய்யான படரான வாக்கியமாய் இருக்கிறதென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நம் நயினார் (ஸல்) அவர்கள் மானிட வர்க்கத்துக்கே மகா பெரிய மகானாய் இருக்கிறார்கள். இப்படியிருக்கும் இவர்களே, இவ்வுலகில் கண்டுகொள்ளாத தங்களின் உம்மத்துகளை இறுதி நாளின்போது வலூசெய்த அடையாளத்தைக் கொண்டு கண்டுகொள்வார்கள் என்று நாம் காண்கின்றோம். அவுலியாக்களின் எண்ணிக்கைகளையே ஆண்டவன் ஒருவனல்லாத இதர யாரும் தெரிந்துகொள்வது முடியாது. இதுவுமல்லாமல் சகல அன்பியாக்களுக்கும் நம் வள்ளல் (ஸல்) அவர்கள் தலைவரென்பதை நீங்களறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இவர்களும் இவ்வகிலத்தின் கண் தோன்றிய நபிமார்களெத்தனை என்பதை முழுதும் உணர்ந்துகொள்ளாது, ஆண்டவனால் அறிவிக்கப்பட்ட அத்தனையையே அறிந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியெனின், “(ஏ நபீ!) உமக்கு முன் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பி வைத்திருக்கிறோம். அவர்களுள் சிலரை உமக்குச் சொல்லியிருக்கிறோம்; மேலும் சிலரை உமக்கு நாம் சொல்லவில்லை” – (குர்ஆன் 40:78 என்னும் இவ்வேத வாக்கியத்தைக் கண்டாலே நீங்கள் விஷயத்தை நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

இதுவுமல்லாமல் ஹஜரத் மூஸா (அலை) அவர்கள் கில்ரை (அலை) அறியாமலும் மூஸா அவர்களை கில்ர் அறியாமலுமே இருந்தார்கள். மூஸா (அலை) அவர்கள் கில்ர் அவர்களுக்கு ஸலாம்சொன்ன போது, கில்ர் அவர்கள் இந்த ஸலாம் எங்கிருந்து வந்தது? என்று வினவ, ஹஜரத் மூஸா அவர்கள், “நான்தான் மூஸா” வென்று விடைபகர்ந்தார்கள். இதைக் கேட்டவுடன் பனி இஸ்ராயீல்களின் மூஸாவா வென்று வினவ, ஆம் என ஹஜரத் மூஸா அவர்கள் விடை பகர்ந்தார்கள். ஆனால், இவ் விருவர்களும் ஆண்டவனால் தங்களின் இச் சந்திப்பைப்பற்றி அறிவிக்கப்பட்டேயிருந்தர்கள். எனினும், இவர்களிருவரும் ஏற்கெனவே சந்தித்துக் கொண்டில்லாததனாலேயே இடையில் ஒருவருக்கொருவர் அறியாதவர்களேபோல் மேற்கண்டவாறான சம்பாஷணைகளைச் செய்து கொண்டார்கள்.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment