ஷஃபான் மாத 1-ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

சகல புகழும் பக்தியும் ஸ்தோத்திரமும் வணக்கமும் நம்மைச் சிருஷ்டித்துக் காத்து ரக்ஷி‌க்கும் அல்லாஹுத் தஆலாவுக்கே உரியனவாகுக. இறுதி வாழ்க்கையின் சுவர்க்கானந்த சுகமனைத்தும் அவனுடைய உண்மையடியார்களாகிய முத்தகீன்களுக்கே உரித்தாகுக. சாந்தி மொழியும் சகல ஆசீர்வாதமும் நம் ஜகத் ஞான குருவாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே உண்டாகுக. அதன் பின்பு உண்மை முஸ்லிம்காள் ! அறிந்து கொள்வீர்களாக:

நாமெல்லோரும் ஒரே ஆண்டவனை வணங்கி, ஒரே நபியின் மீது ஈமான் கொண்டு ஒரே இஸ்லாத்தில் இருந்து, ஒரே ஜாதியினராய் ஏக சகோதரர்களாயிருந்தும், ஒவ்வொரு நாளும் உலக முன்னேற்றத்திலும் லெளகிக வைதிக வியவகாரங்களிலும் தலைசிறந்தில்லாது, பெரிதும் பிற்போக்கடைந்து கொண்டே செல்வதன் காரணம்தான் என்ன? நம் முஸ்லிம் உலகம் இதுபோழ்து தாழ்வடைந்து போய், நசுக்குண்டு கிடப்பதன் காரணந்தான் என்ன? அயல் மதவாதிகளும், இஸ்லாத்தின் விரோதிகளும் நம் சமூகத்தின் மீதும் நம் மதத்தின் மீதும் வைரம் கொண்டு, நம்மையெல்லாம் தலை தூக்கா வண்ணம் பல பகுதிகளிலும் ஒடுக்கி வருவதன் தாத்பரியந்தான் என்ன?

நமது இஸ்லாமிய சமூகம் அரசியலில் அதிகம் அபிவிருத்தியடையாமலும் கல்வி ஞானம் அதிகம் பெறாமலும் ஒற்றுமையில்லாமலும் சீர் குலைந்து போயிருப்பதன் மூலாதாரம் தான் என்ன? நாளுக்கு நாள் ஆரிய சமாஜ் ஹிந்து மதமும் கிறுஸ்து மதமும் அபிவிருத்தியடைந்து பெருகுவதன் காரணம் என்ன? என்பவைகளை நாம் முதன் முதலாகச் சற்றேனும் தெரிந்து கொண்டு, பிறகு சகல துறையிலும் மேன்மையுறுவதற்கான வழியைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

நம் மத சமூக அரசியல் பலவீண நிலைக்கெல்லாம் காரணம் நம் முஸ்லிம் பெரியோர்களின் அலக்ஷியத் தன்மையும் முஸ்லிம் தலைவர்களென்னப் படுபவர்களின் போலி நடக்கைகளும் அரசராயிருந்தும் அதிக்கிரமங்கள் பல புரிந்த மிஸ்ரின் ஃபாரூக் போன்ற கோடரிக் காம்புகளின் விபரீதப் போக்குக்களும் பொதுமக்களின் அஞ்ஞான அவிவேகங்களும் மதபக்தி தெய்வபக்தியின்மையும் மற்றும் பலவுமேயாகும். நம் பெரியோர்களெல்லாம் முஸ்லிம் பாமரர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமே, அவர்களுக்கு உலக நிலைமையைப் போதித்து ஊக்கம் புகட்ட வேண்டுமே, மார்க்கத்தையும் படித்துக் கொடுக்க வேண்டுமே என்ற பரோபகார நல்லெண்ணங்கள் கிஞ்சித்தும் இல்லாமல் வீண் இடம்பங்குகளுக்கும் வெறும் பெருமைக்கும் பொறாமைக்கும் வைராக்கியத்துக்குமே தமக்குள் பலவிதமாய்ப் பிணக்குப்பட்டுப் போய், லெளகிக வைதிக சம்பந்தமான சின்னஞ் சிறு காரியங்களுக்கெல்லாம் சச்சரவிட்டுக்கொண்டு, குதர்க்கங்களும் வம்புகளும் புரிந்து கொண்டிருக்கிறார்களேயல்லாமல், நன்னோக்கங் கொண்டு அல்லாஹ் ரஸூலுக்காகத் தம் மதக் கடமைகளை நிறைவேற்றுவதைக் காணோம்.

பொதுப்படையாய், பெரும்பான்மை முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் புறக்கணித்து விட்டார்கள். இதுவே நம் முஸ்லிம் சமூகச் சீர் குலைவுக்கு முதற்காரணமாகும். இரண்டாவதாக, நம் முஸ்லிம் பொதுமக்களும் கூடத் தம்மீதுள்ள மதக் கடமைகளை உய்த்துணர்ந்து ஒழுகி மேன்மைக்கு வர முயற்சி செய்யாமலே இருக்கின்றனர். “நீங்கள் அறியாதவர்களாயிருப்பீர்களேல் ஞானமுடையவர்களிடம் சென்று கேட்டுப் படித்துக் கொள்ளுங்கள்,” என்று ஆண்டவன் கூறியிருப்பதால், சாதாரண ஜனங்களாகிய நீங்களெல்லீரும் நுங்களுக்குத் தெரியாத மார்க்க மஸ்அலாக்கள், கொள்கை சம்பந்தமான சந்தேகங்கள், அனுஷ்டான முறைகள், தொழுகைக்குரிய விவரங்கள், மற்றும் உலக விவகார சம்பந்தமான ஞானங்கள் யாவற்றையும் மார்க்கப் படிப்புத் தெரிந்துள்ள உங்கள் உண்மை ஆலிம் உலமாக்கள், பெரியோர்கள் முதலியவர்களிடம் கேட்டுத் தெரிந்து, உங்கள் அகப்புற வாழ்க்கை யாவற்றையும் சீர்படுத்திக் கொண்டு ஆண்டவனுக்குத் திருப்தியான பக்தர்களாக ஆய்விடுவீர்களாக.

இதுகாலை இஸ்லாத்தையும் இதன் இறைவனையும் திருத்தூதர் நபிகள் நாயகத்தையும் (ஸல்), நஞ் சமூகத்தையும் நமது அனுஷ்டானம், கொள்கை, குர்ஆன் யாவற்றையும் மகா நீசத்தனமாய்த் தூற்றி அனர்த்தம் பண்ணி வரும் ஆரியசமாஜிகள், கிறிஸ்தவர்கள், ஹிந்து மஹா சபாக்காரர்கள், ராஷ்ட்ரீய சுயம் ஸேவச் சங்கம் போன்ற மற்றும் பல குழாத்தினர்கள் தங்கள் பொய்யான மதங்களையும் தவறான சமூகத்தையும் முன்னேற்றுவதற்காகத் தினே தினே எம்மட்டோ பாடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் மதவிஷயத்துக்காக வைராக்கியத்தோடு வெளிக்கிளம்பிப் பிரசாரம் புரிகின்றார். ஒவ்வொரு குடும்பஸ்தரும் தங்கள் பந்து மித்திர ஜனங்களை முன்னுக்குக் கொண்டுவர அதிகம் பாடுபடுகின்றார். அவர்களுடைய தலைவர்களாகிய பாதிரிகளும் சுவாமிகளும் குருஜீகளும் பொதுமக்களிட மிருந்தெல்லாம் ஏராளமான பொருள்களைத் திரட்டி, மத விஷயத்துக்காகவும் தம் ஏழை மக்களின் மதக் கல்வி அபிவிருத்திக்காகவும் தம் சமூகத்தை அதிகரிப்பதற்காகவும் நம் பாமர முஸ்லிம் ஜனங்களையும் ஏனையவர்களையும் தங்கள் சமாஜங்களிலும் சேனைகளிலும் சேர்த்துக் கொள்வதற்காகவும் அதிகம் செலவிட்டு மதத்தொண்டு புரிகிறார்கள்.

ஆதலின், முஸ்லிம்காள்! இதனை யுணர்ந்தேனும் நீங்கள் உங்கள் நிலையை இனி நல்லவிதத்திலே புனருத்தாரணம் செய்து கொண்டு, உங்களுக்காகவே ஐக்கியத்தை உண்டு பண்ணிக் கொண்டு, மறுமலர்ச்சியென்னும் முன்னேற்றத்துக்குவர முயலுங்கள். ”ஏ அகப்பார்வை யுடையவர்காள்! நீங்கள் உணர்ச்சி பெறுவீர்களாக!” என்று ஆண்டவனும் உங்களைத் தட்டியெழுப்புகிறான். நபிகள் நாயகம் (ஸல்) “உங்களுள் ஒவ்வொருவரும் உங்கள் சந்ததியார்களின் குற்றங்களைப் பற்றி இறுதியிலே கேள்வி கேட்கப்படுவார். ஒவ்வொரு மேய்ப்பவனும் தன் கீழுள்ள பிரஜைகளைப்பற்றி விசாரிக்கப்படுவான்,” என்று கூறியிருக்கின்றார்கள்.

எனவே, குடும்பஸ்தார்காள்! உங்கள் மதப்பிரசாரகர்களும் மார்க்க மேதாவிகளும் தம் கடமையை மறந்து மௌனமுற்றிருந்துவிட்டால், இருந்து போகட்டும்; அதனால் நீங்களும் சும்மா இருந்துவிட வேண்டுமென்பதில்லை. இஸ்லாத்துக்கு மேன்மேலும் ஆபத்து நேர்ந்துவரும் இதுகாலை நீங்கள் உங்கள் பிள்ளை குட்டி, மனைவி மக்கள் மற்றும் பந்துமித்திரர் யாவர்களையும் காப்பாற்றி முன்னுக்குக் கொண்டு வரத்தான் வேண்டும். உங்கள் குடும்பத்தாருக்குக் கல்வி ஞானத்தை மிக அழகான முறையிலே புகட்டிச் சன்மார்க்கத்தில் திருப்பிக் கொண்டு வரவேண்டுவது உங்கள் கடமையேயாகும்.

“ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள்! நீங்கள் உங்கள் ஆன்மாக்களையும் உங்கள் குடும்பத்தாரின் ஆன்மாக்களையும் நரகத் தீயினின்று பாதுகாத்துக் கொள்ளுங்கள்!” என்று ஆண்டவனே தன் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அவர்கள் ஏழ்மை நிலையிலிருப்பார்களாயின், பொருளுதவி புரிந்து ஆதரவளியுங்கள். பிற மதஸ்தர்களின் சூழ்ச்சிகளினின்று அவர்களெல்லார்களையும் காப்பாற்றுங்கள். ஈமான், தொழுகை, நோன்பு முதலிய மதக் கடமைகளையெல்லாம் அவர்களுக்கு நன்கு போதியுங்கள். நற்குண நன்னடக்கைகளையும் அவர்களுக்கு நன்கெடுத்துப் போதியுங்கள். இதுவே உங்களையும் அவர்களையும் ஹிதாயத்தில் கொண்டு சேர்க்கும் சன்மார்க்கமாகும்.

எனவே, எம் முஸ்லிம்காள்! எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மெல்லோருக்கும் பொதுஜன ஊழியத்துக்குரிய சகாயத்தையும் மதப் பிரசாரத்துக்கு வேண்டிய தவ்பீக்கையும் தந்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

Image courtesy: Ilyas Attari, kgndesignstudio.blogspot.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment