اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذىِ الْملْكِ وَالْمَلَكُوْتِ وَالْعِزَّةِ وَالْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
நோன்பின் மகிமையால் நுபுவ்வத்தைப் போன்ற நிஃமத்தை அளிக்கவல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவ்வாறு நபிப் பட்டம் பெற்ற ரஸூல் (ஸல்) அவர்களை வாழ்த்தி, அப்பால் நாம் அறியக்கடவோம்.
அன்புள்ள நேயர்காள்! சென்ற ஜுமுஆக்காளில் நீங்கள் கேட்டுவந்த உபதேசங்களிலிருந்து நோன்பின் மகிமையை ஒரு சிறிதே உணர்ந்துகொண்டிருப்பீர்கள். எனவே, இன்னமும் நோன்பினால் ஏற்படக்கூடிய சில நன்மைகளைக் கேட்டுச் சந்தோஷமுறுவதுடன், அவ்வாறே நடக்கவும் முயற்சி எடுப்பீர்களாக.
சோதரீர்! இந்த நோன்பின் பயனாகவே முஸ்லிம் வர்க்கத்தார்கள் பசியின் கொடுமையை அதிகம் சகிக்கக் கூடிய தன்மையை அடைந்தவர்களாய்க் காணப்படுகின்றனர். இவ்விஷயத்தில் முஸ்லிம்களுடன் வேறு மதத்தினர் போட்டிப்போட்டு எதிர்த்து நிற்பது ஒருபோதும் முடியாது. போர்க் களங்களுக்குச் சென்று பசியின் கொடுமையைச் சகித்துக்கொண்டு எவ்வளவோ வேலைகளை முஸ்லிம்கள் செய்துகொண்டு வருவதே இதற்கு போதிய சான்றாய் நின்றிலங்குகின்றது. இவ்வண்ணமாய அருங் குணங்களெல்லாம் இவர்கள் நோன்பு நோற்பதனால் உண்டானவை என்பதை நீங்கள் மறந்து விடுவது கூடாது. ஆனால், இதுகாலைக் காணப்படும் சில மனிதர்கள் மேல்நாட்டு நவநாகரிகத்தின் மீது மிக்க மோகங் கொண்டவர்களாய் இருந்து வருகின்றனர். இவர்கள் சொல்வதென்னவெனின், நோன்பு நோற்க வேண்டியதுதான்; ஆனால், இடையில் எதேனும் சிறிது சிற்றுண்டி செய்துகொள்ள வேண்டுமென்பதே யாம்; அல்லது ஏதேனும் கொஞ்சம் பழ வகைகள் உட்கொள்ள வேண்டுமாம்; சமயோசிதம்போல் ஒரு சிறிது தேனீர், அல்லது காபீ அருந்திக்கொள்ளவேண்டு மென்று கூறுகின்றனர். இன்னம் சிலர் அன்னத்தைப் பின்னமாக்கி, ரொட்டியும் வெண்ணெயும் சாப்பிடலாமென்று அறைகின்றனர். என்னே இவர்கள் புத்தியின் போக்கு!
இம் மாதிரியான சிற்றுண்டிகளினால் பசியைச் சகித்துக் கொண்டிருக்கும் தன்மை தங்களுக்கு உண்டாய் விடுமென எண்ணிக் கொண்டனர் போலும்! இன்னம், இவர்கள், இவ்வாறான துறையில் இறங்கித் தங்கள் மனோ பீஷ்டத்தை அடக்கி விடலாமெனக் கருதுகின்றனர் போலும்! இவ்வண்ணமாய மார்க்கங்களினாலெல்லாம் மனிதர்கள் சகிப்புத் தன்மையை அடைந்து விடுவார்கள் என்றெண்ணுவது வீணான விஷயமேயாகும். எனவே, மனிதனைச் சிறிது கஷ்டப்படும்படி பழக்கம் பண்ணுவதும் பசியைப் பொறுக்கும்படியான சகிப்புத் தன்மையை மனிதர்களுக்குள் உண்டாக்கி வருவதும் மானிட வகுப்பார்களின் ஒரு பிரதம நன்மையைக் கருதியே யல்லது, சில நவநாகரிகப் பிரியரைப் பின்பற்றி மனிதர்கள் சொல்லுவதேபோல், இந் நோன்பு அனாவசியத் தொந்தரையான காரியமென எண்ணிவிடுவது கூடாது.
இந்த நோன்போ, அநேக வித உயர்ந்த தத்துவங்களையே தன்னகத்துள் அடக்கிக்கொண்டிருக்கின்றது. உதாரனமாக, “மனிதன் கஷ்டமெடுத்து நன்மையைச் செய்வானாயின், இறுதியில் இஃது இவனுக்கு நன்மையாகவே வந்து முடியும்,” என ஆண்டவன் தன் திருமறையில் கூறியுள்ளான். “நீங்கள் உண்மையில் உணர்ந்து கொள்ளுபவர்களாயின், நோன்பு நோற்பது நன்மையானதென்றும் மிக்க சிறந்ததென்றும் கண்டு கொள்வீர்கள்,” எனவும் அல்லாஹ் அறைந்துள்ளான்.
எனவே, மேற்கண்டபடியுள்ள அல்லாஹ்வின் வாக்கியங்களின் தாத்பரியந்தான் என்னவென்று எண்ணுகின்றீர்கள்? மனிதன் உலகத்தில் ஜீவித்திருக்கும் காலங்களில் உலக சம்பந்தமான இவ்வித எந்தக் கஷ்டங்கள் வந்தடுப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாது சர்வ சாதாரணமாய்க் காலத்தைக் கடத்திக்கொண்டு செல்ல வேண்டியதன் சக்தியை இவன் அடையவேண்டு மென்பதேயாம். மனிதன் இந்த மேலான சக்தியை அடைய வேண்டியதற்காகவே இந்த ரமலானென்னும் ஒரு மாதத்தை ஆண்டவன் இவ்வாறு நிர்னயித்துள்ளான். இன்னம் ஏனைப் பதினோரு மாதங்களிலும் மனிதன் தன் மனம் போனவாறு சுற்றிச் சுழன்றலைகின்றான். எனினும், இந்த ரமலான் மாதத்தில் தன்னுடைய இச்சை விரும்பும் வஸ்துக்களின்மீது சரியான ஆதிக்யமடைய வேண்டுமென்பதை மாத்திரம் மறந்துவிடுதல் கூடாது. இவ்வாறாய ஆதிக்யத்தை இவன் எப்படி அடைகின்றான்?
இவனிடமோ தின்னவும் உண்ணவும் சுகிக்கவும் சகலவித சாமான்களும் தையாராயிருக்கின்றன; இவனது மனோ இச்சையோ, இவைகளையெல்லாம் உண்டு புசித்துச் சகித்துச் சுகமே இருக்கலாமெனத் தூண்டிக்கொண்டிருக்கின்றது. இவ்வண்ணமாய நிலைமையில் ஒரு மனிதன் ஒன்றையும் பருகாமலும், அருந்தாமலும், சுகியாமலும் இருக்கின்றானென்றால், எந்த வஸ்துக்காக அஞ்சி, எந்தப் பொருள் வேண்டுமென்றெண்ணி, எந்தச் சக்தியை அடக்கிக்கொண்டு வருகின்றான்? என்பதை நீங்களே நேரில் தெரிந்து கொள்ளுங்கள்.
குணங்களின் மீது இதன் சாயல்
ஆத்மார்த்த சம்பந்தமாயும் இதன் பிரயோஜனம் நமக்கு விளங்காமற் போகவில்லை. உதாஹரணமாக, காலமோ கோடைக்காலமா யிருக்கின்றது; இவனுக்கோ தண்ணீர்த் தாகம் சகிக்கக் கூடாததைப்போலே காணப்படுகிறது. இன்னம், இவனோ தன்னந்தனியாய் இருந்து வருகிறான். அருகினில் ஆருயிர்த் துணைவி அருமைக்கட்டழகி அங்காத்து நிற்கிறாள். எனினும், எல்லா இச்சைகளையும் அடக்குகிறான். இதனால் என்ன பிரயோஜனம் உண்டாகிறது என்றெண்ணுகின்றீர்கள்?
மனிதனுடைய ஒவ்வோர் உறுப்பும் இவன் செய்யும்படியான தேகப்பயிற்சிக்கு ஒத்தவாறே காணப்படும்; கரங்களையும் புஜங்களையும் ஆட்டி அசைத்துத் தேகாப்பியாசம் செய்வானாயின், இவைகள் மிக்க வலுவுள்ளனவாய் அமைந்து விடுகின்றன. பாதங்களை அப்பியாசம் பணணுவானாயின், அவை உறுதிபெறுகின்றன. இஃதே போல் மனிதனுடைய குணங்களும் இவன் பழக்கப்படுத்துவதே போல் பக்குவப்பட்டு வருகின்றன. எனவே, நீங்கள் நுங்களின் குணங்களைச் சன்மார்க்கத்தில் நடத்திக்கொண்டு வருவீர்களாயின், நிச்சயமாகவே இது முடிவுவரை சற்குணமாகவே இருந்துவருமென்பது திண்ணம். இதனால் தான் ஆண்டவன் இந்த இடத்தில், “சர்வ துர்க்குணங்களையும் சம்ஹரிக்க வேண்டுமெனத்” திருவுளமாயுள்ளான். ரஸூலுல்லாஹ் அவர்களும் அகப் பரிசுத்தத்தைப் பற்றி அதிகம் போதித்துள்ளார்கள்.
இதுவுமல்லாமல் இதன் பின்னரே, “நுங்களின் ஐசுவரியங்களை அக்கிரமமான விதமாய் உண்ணாதீர்கள்,” என அல்லாஹ் கூறுகின்றான். அஃதாவது, தங்களின் சொந்தச் செல்வங்களையே கையாண்டு மனம் போனவாறெல்லாம் செல்லாது தம்முடைய ஐம்புல ஆசையை அடக்கிக் கொண்டுவந்த இவன் எப்படித்தான் அன்னியர்களின் முதல்களைக் கொள்ளைகொண்டு அக்கிரமமாக உண்ணுவான்? இதையேதான் எமதாண்டவன் இங்குச் சுட்டிக் காட்டியுள்ளான். இது மனிதர்களை ஏமாற்றுவதற்கான வார்த்தையன்று. ஆனால், இம்மாதிரியான மனோ நிலையைக் கொண்டவர்கள் அன்னியர்களின் எந்தச் சிறிய பொருளையும் கையாண்டு சுகித்தார்களில்லை என்பதற்குப் போதிய சரித்திரச் சான்றான ஆதாரங்கள் அநேகங் காணப்படுகின்றன.
அரப் நாட்டில் மனிதர்கள் எவ்வளவு கெட்ட இச்சைக்கு உட்பட்டவர்களாய் இருந்துவந்தனர்? இன்னம் அன்னியர்களைக் கொலை புரிந்தாவது அன்னவர்களின் முதல்களைக் கொள்ளை கொண்டு அவற்றைப் புசிப்பவர்களா யிருந்து வந்தனர். ஒருவருக்கொருவர் மனஸ்தாபங்களை உண்டுபண்ணிக் கொள்ளுவதும், அதன் பயனாய் வருஷக் கணக்காக யுத்தங்களில் சிக்குண்டு கிடப்பதும் அன்னவர்களின் சர்வ சாதாரனச் சிறிய விஷயங்களா யிருந்து வந்தன. இத்தகைய அரபியர் சிறிது காலத்துக்குள் தீனுல் இஸ்லாத்தின் ஜோதியால் எத்துணைப் பெரிய ஜாதியாராக மாறிவிட்டனரென்பது சரித்திர முணர்ந்த உண்மையே யாகும். எனவே, இஸ்லாத்தின் அனுஷ்டமான முறைகளால் நமக்கும் ஆண்டவன் அத்தகைய கீமியாயெ ஸஆதத்தை அளிக்குமாறு குறையிரந்து நிற்போமாக! அவன் விதித்த கடமைகளுள் ஒன்றாய இம்மாத இறுதியில் “லைலத்துல் கத்ரு” வருகிறது; அந்த இரவிலேதான் குர்ஆன் முதன்முதலாக வெளியாயிற்று; ஆகையால், அதனையும் அழகுபெறக் கொண்டாடக் கடவீர்கள். என்னெனின், இத்திருமறையால் நாம் நேர்வழி – நல்வழி – பெற்றோம். எனவே, இந்த பர்லான நோன்பை இறுதி வரை நோற்று மேன்மையுறுமாறு எல்லாம்வல்ல இறைவன் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: freedesignfile.com
<<முந்தையது>> <<அடுத்தது>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License