ரமலான் மாத 4–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذىِ الْملْكِ وَالْمَلَكُوْتِ وَالْعِزَّةِ وَالْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை  எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

லைலத்துல் கத்ரில் குர்ஆனை யருளி, முஹம்மதை (ஸல்) இறுதி நபியாகவும் ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவ்வாறு இறுதி நபியாயுயர்ந்த அவனுடைய ரஸூலையும் போற்றிய பின்னால் நாம் நன்கறியக் கடவோம்.

அன்புள்ள சோதரீர்! நீங்கள் இதுகாறும் கேட்டுக் கொண்டு வந்த உபதேசங்களினால் நோன்பென்பது என்னவென்பதை ஆண்டவனுடைய ஆணைகளினாலும், நாயகம் (ஸல்) அவர்களுடைய திருவாய் மொழிகளாலும் ஒருசிறிது இதன் தத்துவ முட்படத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். மேலும், இவ்வாறு நோன்பு வைப்பதால் என்ன பிரயோஜனம்? ஏன் இதை வைத்தல் வேண்டும்? என்பதை ஓர்ந்து பார்த்து இதன்படி அமல் செய்துவரக் கடவீர்களாக.

நோன்பென்றால் சாதாரணமாய்ப் பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலும், சேர்க்கை செய்யாமலும் நீங்கியிருப்பது என்று பொருள் கொள்ளப்படும். ஆனால், இதை உற்றுக் கவனிக்கும்போது, இதனால் அளவற்ற பிரயோஜனங்கள் உண்டாகின்றன வென்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். இதனால் ஏற்படும் பெரிய பிரயோஜனம் என்னவெனின், நோன்பு வைப்பவனுடைய கெட்ட எண்ணங்களெல்லாம் அவனுடைய சிருஷ்டி கர்த்தனின் உத்தரவுக்கு அப்படியே அடிபணிந்து, மனம் போனபடி யெல்லாம் செல்லாது, பரிசுத்தமாக்கப் பட்டவனாய் ஆய்விடுகின்றன. பிறகு அவற்றின்மீது உண்மையான ஞானமென்னும் அரசன் அரசாட்சி புரியத் தொடங்குகிறான்.

எனவே, அக்லென்னும் அரசனுக்கு அடிபணிந்து நப்ஸ் என்னும் இச்சை ஒன்றும் செய்ய முடியாதென்பதை யுணர்ந்து அதிக கஷ்டத்துடன் தன்னுடைய கெட்ட எண்ணங்களையும் கெட்ட நடத்தைகளையும் ஒழிக்கத் தலைப்படுகின்றது. ஆதலின், ஆண்டவனால் நமது ஷரீஅத்தில் எக்காரியங்கள் செய்யப்பட வேண்டாமென விலக்கப்பட்டிருக்கின்றனவோ, அவையனைத்தையும் அப்படியே செய்யேனென இந்த “நப்ஸ்” சாதாரணமாய் ஏற்றுக்கொண்டு விடுகிறது.

ஆனால், இந்த நப்ஸின் சங்கடங்களைச் சிறிது கவனிப்பீர்களாக; உண்ணவோ கையில் உணவுப் பொருள்கள் ஏராளமாயிருக்கின்றன; பருகும் பானங்களோ கைவசம் அனந்தமிருக்கின்றன; தனக்குச் சொந்தமான சுந்தர மனைவியோ தையாராயிருக்கிறாள். இத்தனை விதச் செளகரியமிருந்தும், “நமது கைவசப்பட்ட நோன்பு ஒரு பக்கல் இருக்கட்டும்; புத்தி ஒரு பக்கல் இருக்கட்டும்; ஆண்டவனது கட்டளை மற்றொரு பக்கல் இருக்கட்டும்,” என்று சொல்லி, மனமார உண்டு குடித்துச் சங்கமம் செய்துகொண்டு இராத இவனை, நாம் எப்படி ஆகாத உணவுப்பொருள்களை உட்கொள்ளும்படியும், தகாத வியபிசாரங்களைச் செய்யும்படியும் தூண்ட முடியப் போகின்றது? இஃது ஒருகாலும் முடியவே முடியாது.

தனக்குச் சொந்தமாகவும் அதிகாரத்துள்ளும் ஐக்கியப்பட்டுக் கிடக்கும் நல்ல வஸ்துக்களையே உபயோகிக்காத இவன் நமது கொடிய நாட்டத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் போகிறான்? இதுவும் முடியாது. எனவே, புத்திக்கும் ஆண்டவனின் ஆணைக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாய் எற்பட்டு விட்டதேயென்று மனமுடைந்து மெய்ம் மறந்து நப்ஸானது அடங்கி ஒடுங்கி  அடிமையாய் விடுகின்றது. எனவேதான், மனிதருக்கு நேர்வழி காட்டியாகவும், நேர்வழியின் விசேஷப் பாகுபாடாகவும் உள்ள குர்ஆன் இந்த ரமலானில் இறங்கத் தொடங்கிற்றென்று இறைவனும் இயம்புகின்றான்.

இவ்விடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவனேனும் தன்னுடைய மனோ பீஷ்டத்துக்கு அடிமைப்பட்டு மனம் போனபடியெல்லாம் திரிவதற்காக நோன்பு வையாமலிருப்பானாயின், அவனைப் புத்திசாலியென்றும் ஞானவான் என்றும் நல்லவனென்றும், பகவானுக்கேற்ற பக்தனென்றும் சொல்வது முடியாது. ஆனால், அவன் தைரியமிழந்தவன்; சாப்பாட்டு ராமன்; புத்தியற்றவன்; விளக்கமற்றவன்; தன் இச்சைக்கு அடிமைப்பட்டவன், என்பன போன்ற நவ நாமங்களினாலேயே அழைக்கப்படுவான். எனவே, நோன்பு நோற்கும் உத்தம பத்தினிகளான பெண்மணிகளைக் காட்டினும் புருஷ குலத்தைச் சேர்ந்த இவன் எத்துறையிலும் மேம்பட்டவனாய் காணப்படவில்லை; ஆனால், அவர்களுக்குக் கீழான ஸ்திதியையே அடைந்தவனாயிருக்கின்றான்.

முஸ்லிம் நேசர்காள்! நீங்கள் ‘நோன்பு நோற்பதனால் ஒரு பிரயோஜனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லையே! தராவீஹ் தொழுகையினால் எந்தப் பலனையும் அடையவில்லையே! ஆனால் ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு மாதம் இவ்வாறு செய்து கொண்டு தானே வருகின்றோம்!’ என எண்ணலாம். அஃது அப்படி யன்று. நீங்களெல்லீரும் நோன்பு நோற்பதுடனும் தராவீஹ் தொழுவதுடனும் நின்றுவிடாது, இதற்கு சம்பந்தமாயுள்ள வேறு சில நற்காரியங்களையும் புரிதல் வேண்டும். தானதர்மம் செய்ய முற்படல் வேண்டும். இராக் காலங்களில் அநேகமாய் அண்டவனுடைய திருவாக்கியங்களான குர்ஆனை அர்த்தத்துடன் ஓத வேண்டும். ஆண்டவனை அதிகம் ஜபித்து வணக்கம் புரிதல் வேண்டும். அன்றியும் கூட்டம், குடும்பத்தினர், உற்றார், உறவின் முறையாளர் முதலிய நேயர்களுக்கு ஒருவித வருத்தமும் மனக் கைப்பும் உண்டாகாதவாறும் நல்ல முறையில் சந்தோஷமாய் நடந்து கொண்டு வரவேண்டும். இவை யனைத்தும், நோன்பென்னும் இம்மேலான தத்துவ வணக்கத்தால் ‘தக்வா’ வென்னும் உயர்ந்த சக்தி நம்மிடையே உண்டாவதற்கு அத்தியாவசியமாம்.

இந்த தக்வாவென்னும் ஆண்டவனது உள்ளச்சம் உண்மையிலேயே உண்டாக வேண்டுமாயின், நோன்பு வைப்பதால் மட்டும் அது வந்தடைவதில்லை. உண்ணாமலும், குடிக்காமலும், சேர்க்கை செய்யாமலுமிருப்பதால் மட்டும் அஃது உண்டாய்விடப் போவதில்லை. ஆனால், இவன் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அதி ஜாக்கிரதையாய்க் கவனித்து வருதல் வேண்டும். நோன்பு வைக்கும் இம்மனிதன் வீண் விஷயத்திலும் பழிக்கப்பட்ட வியவகாரங்களிலும் மேன்மையான ஷரீஅத்துக்கும் ‘அக்லாக்’ என்னும் சற்குணங்களுக்கும் விரோதமாய் நடவாமல் ஒழுங்காயிருந்துவரல் வேண்டும். இம்மாதிரியான துர்க்குணங்களையும், துர்ச்செயல்களையும் விட்டொழிக்கும்வரை வெறுமனே நோன்பு வைப்பதில் மட்டும் என்ன பிரயோஜனம்? இதனால்தான் சூஃபியாக்களென்னும் பெரியார்கள் நோன்பு வைத்திருக்கும் மனிதன் உண்ணுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது முதலிய மூன்றைத் தவிர, பொய் பேசினாலும் நோன்பு முறிந்துவிடும்; புறம்பேசினாலும் கேட்டாலும் அப்படியே; கேட்பினும் சொல்லினும் அப்படியே; யாருக்கேனும் நோவினை விளைப்பானாயின், அப்பொழுது நோன்பு முறிந்துவிடும், என்பன போன்ற விஷயங்களையெல்லாம் நோன்பை முறிக்கும் துர்க்காரியங்களில் கொணர்ந்து நுழைத்திருக்கின்றனர்.

எனவே, நோன்பென்பது மனிதனை இரு வகையாலும் பரிசுத்தப் படுத்துவான் வேண்டியே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று ஆண்டவனால் நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை விடுத்து, ஒரு சிலர் வெளியில் மாத்திரம் நோன்பு நோற்பவர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் காட்டிக் கொண்டு, அகப் பரிசுத்தத்தை அடியோடு இழந்து, ஒரு புறம் நோன்பை வைத்துக்கொண்டு மற்றொருபுறம் வாயில் வந்தவாறெல்லாம் ஏசியும் பேசியும் தம்முடைய இன பந்துமித்திரர் முதலியோர்களுக்கு மன வருத்தம் உண்டு பண்ணி, தங்கள் நோன்பினால் ஏற்படப் போகும் நல்ல சக்தியான தக்வாவைக் கெடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு சில நோன்பாளிகள் கோபத்தை யடக்காமல் கண்ட கண்டவர் மீதெல்லாம் வெடுவெடுத்துச் சீறிச்சீறி வீழ்வார்கள். வேறு சிலர் நோன்பென்பதை வெளிக் கோலத்திலுங்கூடக் கொள்ளாது இஸ்லாத்துக்கும் தங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லாததேபோல் காலங் கடத்தி வருகின்றார். ஆனால், இவர்களும் தாங்களும் முஸ்லிம்களே என்று கூறிக்கொள்ள ஒருசிறிதும் பின்வாங்கார். ஆகவே, முஸ்லிம்களென்பவருள் இம்மாதிரி எத்தனையோ வித மனிதர்கள் திகழ்கின்றனர். இவர்களெல்லாம் ஜனக் கனித மதிப்பெடுக்க உதவும் புள்ளிகளேயாம்.

ஆதலால், ஆண்டவன் நம்மையும் நம் சகோதர முஸ்லிம்க ளனைவரையும் இந்த ரமலான் மாத நோன்பின் உண்மைத் தத்துவத்தை முற்றும் உணர்ந்த மேலான கூட்டத்திலாக்கி வைப்பது மன்றித் தனக்குச் சொந்தமான நேரான பாதையில் சீராகவும் நடத்தாட்டிச் செல்வானாக.

ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُواْ لِي وَلْيُؤْمِنُواْ بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: freedesignfile.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment