ரபீஉல் ஆகிர் மாத 4-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الَّذِي الْعَزِيْزِالْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَالنِّعْمَةِ والْغُفْرَانِ وَنَشْهَدُ انْ لاًًًَّاِلٰهَ اِلَّا الّٰلهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَنَشْههَدُ اَنَّ مُحَمَّدَاً عَبْدُهُ وَرَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டும் என்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

அன்பிற்குரிய அரிய முஸ்லிம்காள்! ஆண்டவனுக்கு மிகவும் அஞ்சித் திரிகரண சுத்தியோடு பக்திபூண்டு வணக்கம்புரியும் நல்லடியார்களுக்குப் பிழைபொறுத்தருளும் அல்லாஹுத் தஅலாவை அனவரதமும் போற்றி, அவனுடைய திருத்தூதரும் சற்குண சீலரும் மானிட கோடிகளுக்குச் சன்மார்க்கம் புகட்டியவருமான நபிகள் நாயகத்தின்மீது (ஸல்) ஆசிமொழியும் நாம் கூறக்கடவோம். அதன் பின்பு அறிந்து கொள்வீர்களாக:

ஆண்டவன் குர்ஆனில் கூறுவதாவது:- “நன்னம்பிக்கை கொண்டு நற்கருமங்களையும் அனுஷ்டிப்போர்களெல்லாரும், அவற்றின் கீழே நீரருவிகள் ஒலித்தோடக்கூடிய சுவனலோக உத்யான வனத்துக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள், தங்கள் ரக்ஷகனது அனுமதிப்படி அதில் சதா சர்வகாலமும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்குச் சாந்தியே சம்மானமாகும்.” இதனால் அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் பரலோகத்தில் அவனுடைய அருளையும் சம்மானச் சுகவாழ்வையும் பெறவேண்டுமானால், அவனுடைய ஆக்ஞைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து முடி சாய்த்து, சதாகாலமும் நற்கருமங்களைப் புரிதல் வேண்டும் என்பது மிகமிக ஆவசியகமாய்க் காணப்படுகின்றது.

அப்படிப்பட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வை வணங்குவதும் அவனுடைய திருத்தூதர்மீது பற்றும் விசுவாசமும் கொண்டு அவரைப் பின்பற்றி நடப்பதும் குர்ஆன், நபிநாயகவாக்கியம், பெரியாரின் நீதிபோதங்கள் முதலியவற்றின்படி ஒழுகிவருவதும் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகிய நன்னம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு ஆகியவற்றை மேற்கொண்டு நடப்பதும் மற்றுமுள்ள பெரியார்களுக்கும் நம்மைப் பெற்றோர்களுக்கும் சிரந்தாழ்த்தித் தொண்டூழியம் புரிவதும் அவர்களுக்கு நங்கடமைகளைப் பூர்த்தியாக்கி வைப்பதும் பெரியோர்களுக்குச் சிறியோர்களின் மீதுள்ள உரிமைகளை நிறைவேற்றுவதும் மற்றும் பரோபகாரம், ஜீவகாருண்யம் முதலியவைகளை மேற்கொள்வதும் நம் மக்களுக்கும் நம் பெண்மணிகளுக்கும் மார்க்கக் கல்வியைப் புகட்டி, அவர்களுக்குரிய பாத்தியதைகளையளித்து, அன்னாரை முன்னேற்றத்துக்குக் கொண்டு வருவதும் ஏனைய எல்லா நற்கருமங்களைப் புரிவதும் மற்றுமுள்ள நல்லொழுக்கங்களுமே அப்படிப்பட்ட சற்கருமங்களாகும்.

எனவே, நாம் மேற்கொள்ள வேண்டிய நற்குண நல்லொழுக்கங்களுள் சிலவற்றை மீட்டுங் கேட்பீர்களாக: பெரியோர்களுக்கு மரியாதை செய்து, அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்பதைப்பற்றி நம் இஸ்லாமிய கிரந்தங்களில் கூறப்பட்டிருப்பதாவது:- “எவனொருவன் பெரியோர்களைக் கண்ணியப் படுத்தவில்லையோ, அவன் நன்னம்பிக்கையின் பரிபக்குவத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டான். அவன் இஸ்லாமிய சன்மார்க்கத்தை விட்டுத் தூர விலகிப்போவான். எவனொருவன் தன் பெற்றோர்களுக்குப் பணிந்து, அவர்களை மேன்மைப் படுத்தவில்லையோ, அவன் பெரும் பாதகனும் வரம்பை மீறியவனுமாவான்.” தாய் தந்தையர்களுடன் சம்பாஷிக்க வேண்டுமாயின், மிகவும் தாழ்மையாகவும் பணிவாகவும் நடந்துகொள்ள வேண்டும். என்னெனின், “உங்கள் மாதாக்களின் பாதத்தடியிலேதான் உங்களுடைய சுவர்க்கலோகம் இருக்கிற”தென்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றருளியிருக்கிறார்கள். அவர்களின் பணிவிடையிலேயே நம் வாழ்நாட்களைப் போக்கினாலும், அது தகும். மாதா பிதாக்களின் மனம் நோவடையச் செய்பவனது பக்தியும் சற்கருமங்களும் மற்றுமுள்ள தான தர்மங்களும் ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. பெற்றோர்களின் நன்மைக்காக ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை புரிதல் வேண்டும். நாம் அவர்களுடைய அடிமைகளென்றே பாவித்துக் கொண்டு பேரூழியம் புரிதல் வேண்டும்.

மேலும், இஸ்லா மார்க்கம், மானிடர்களாகிய நாம் நமக்குள்ளே எப்படிச் சமரசத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றியும் இவ்வாறு போதித்திருக்கின்றது:-

எவனொருவன் தான் மாத்திரம் சுகபோகத்துடன் இன்ப வாழ்வில் இருந்துகொண்டு, தன்னைப் போன்ற ஏழைச் சகோதரர்களின் நிலைமையைப்பற்றிச் சிறிதும் கவனியாமல் சுயநலமாயிருந்து வருகிறானோ, அவன் மகா கெட்ட தூர்த்தனும் உலோபியுமாவான். ஆண்டவன் அவனுக்குப் பரலோகத்தில் ஒருவித சுகானந்தத்தையும் தந்தருள மாட்டான். தனவந்தர்களாயிருப்போர் அனைவரும் (யாசகத்தையே தமது ஜன்மத் தொழிலாய்க் கொண்டிராத) ஏழை எளியோர்களுக்குத் தான தருமங்கள் வழங்கி, அவர்களது வறுமைப் பிணியைப் போக்கி, வாழ்வுறச் செய்தல் வேண்டும். அநாதைச் சிறுவர் சிறுமிகளையும் ஏழைச் சிறுவர் சிறுமிகளையும் அன்புடன் ஆதரித்து அவர்களுக்குக் கல்வி ஞானத்தையும் போதித்து வைத்தல் வேண்டும். பசித்தோர்க்கு அன்னதான மளித்தல் வேண்டும்; ஆடையற்றார்க்கு வஸ்திரதானம் புரிதல் வேண்டும்.

அண்டை அயலார்களுடனெல்லாம் சமரசத்துடன் வாழ்ந்து வருதல் வேண்டும். அவர்களின் வறுமை நீங்கத் திரவிய சகாயம் புரிதல் வேண்டும். அன்னாரின் துன்பங்களை நீக்க நம்மாலானவரை முயற்சியெடுத்தல் வேண்டும். அடுத்த வீட்டுக்காரன் எச் சமூகத்தைச் சார்ந்தவனாயிருந்தபோதினும், அன்னவனுடன் வாஞ்சையாகவே வாழ்ந்துவர வேண்டுமென்று இஸ்லா மார்க்கம் இயம்புகின்றது. இவ்வாறு நடந்து கொள்ளாமல், அயலவர்களுக்கு எவன் தீமையிழைக்கின்றானோ, அல்லது அவர்களைத் துன்பத்தில் அனாவசியமாகச் சிக்க வைக்கின்றானோ, அவன் மிகப் பெரிய பாபியாவான். ஆண்டவன் இறுதித் தீர்ப்பு நாளன்று அவனுக்குக் கொடிய வேதனையைத்தான் கொடுப்பான்.

இன்னம், நம் இஸ்லாமார்க்கம் ஆடம்பர வீண்செலவுகள் செய்யக்கூடாதென்றும் கூறியிருக்கின்றது. ஆதலின், கல்யாண காலங்களிலும் கத்னாக்களின்போதும் வேறு பல காது குத்தல் போன்ற விசேஷ காரியங்களிலும் வீண் ஆடம்பர வைபவத்தின்போதும் அனாவசியமான செலவுகளில் செல்வத்தை வீண்விரயம் செய்வது கூடாது. மார்க்கத்துக்கு முரணான அனாசார சடங்குகளையும் சாங்கியங்களையும் அறவே புரிதல் கூடாது. நம்முள்ளே பலர் அப்படிப்பட்ட காலங்களில் தங்கள் வசம் பணமில்லா விட்டாலும், கடன் வாங்கியேனும் பிரயோஜனமற்ற வீணான அக்காரியங்களை டாம்பிகமாகப் புரிகின்றனர். இது கூடாத காரியமேயாகும்; இப்படிப்பட்ட வீண் காரியங்களுக்காகக் கடன் வாங்குவதும் தகாத காரியமாகும். இவ்வாறு வீண்விரயம் செய்பவர்களைப் பற்றிக் குர்ஆன் ஷரீபில், “நிச்சயமாய் வீண்விரயம் (இஸ்ராப்) செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாவர்,” என்று ஆண்டவனே கூறியுள்ளான். இத்தகைய வீண் செலவு செய்யும் மனிதர்கள் நரகத்துக்குரிய பைசாசத்துக்கு ஒப்பிடப்பட்டிருப்பதை நன்கு கவனித்தல் வேண்டும். ஆதலின், எந்த விஷயத்திலும், அஃது ஆகார விஷயத்திலாயினும், உடை உறையுள்-(வீடு) அபரண விஷயத்திலாயினும், சடங்கு சாங்கியம் முதலிய செய்கைகளின் விஷயத்திலாயினும், விருந்துபசாரங்களிலாயினும் கட்டாயமாய் வீண்பணச் செலவு செய்வதைத் தடுத்து நம் முஸ்லிம் மக்கள் உயரிய வாழ்வு பெறுதல் வேண்டும். இதுவே இஸ்லாத்தின் முக்கியபோதனைகளுள் ஒன்றாகும்.

ஆதலின், முஸ்லிம்காள்! குர்ஆனில் ஏவப்பட்டிருப்பனவற்றையும், நாயகவாக்கியங்களில் கற்பிக்கப்பட்டிருப்பனவற்றையும், மற்றும் இஸ்லாமிய கிரந்தங்களில் கூறப்பட்டிருப்பனவற்றையுமே எடுத்து அனுஷ்டிப்பீர்களாக. சகல நன்மைகளையும் கடைப்பிடித்துத் தீமையை விட்டு, நெடுந்தூரம் விலகியிருப்பீர்களாக. ஞானம் மிக்க உண்மைப் பெரியார்களைக் கண்ணியப் படுத்துவீர்களாக. பெற்றோர்களைப் பேணுவீர்களாக. ஏழைகளை இன்புறச் செய்வீர்களாக. அநாதைக் குழந்தைகளை ஆதரிப்பீர்களாக. மாதர்களைக் கல்வியாலும் ஒழுக்கத்தாலும் மேன்மையுறச் செய்வீர்களாக; அன்னாரைச் சீர்திருத்துவீர்களாக. சிறுவர்களுக்கு அதிகம் கல்வியைப் புகட்டுவீர்களாக. எனவே, இஸ்லாத்தின் முன்னேற்றத்துக்குரிய எல்லா நலன்களையும் இனிதுற நிறைவேற்றி வைப்பீர்களாக. ஆதலின், இதற்குரிய எல்லா வசதிகளையும் நமக்கு அல்லாஹுத் தஆலாவானவன் அளித்து நல்லருள் பாவிப்பானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ ۖ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ ۖ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۖ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment