ஜமாதியுல் அவ்வல் மாத 1-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَ سَلَّم اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன்; முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கின்றேன்.

முஸ்லிம் சோதரர்காள்! நமக்கு இஸ்லாத்தையும் ஈமானையும் அளித்து, மக்களுள் சிறந்தவர்களாகச் செய்தருளிய ஏகநாயனாகிய அல்லாஹுத் தஆலாவை அனவரதமும் சிந்தித்து வந்தித்துப் புகழ்வோமாக. அவனது உண்மையடியாரும், திருத்தூதருமாய முஹம்மத் நபிகள் (ஸல்) அவர்களைப் போற்றி ஆசிமொழியுங் கூறக்கடவோம். அதன் பின்பு அறிந்து கொள்வீர்களாக:

ஆண்டவன் குர்ஆனில், “யான் இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடைகளையும் உங்கள்மீது சம்பூர்ணமாக்கி விட்டேன். உங்களுக்கு இஸ்லாத்தையே யான் சன்மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்,” என்று கூறியிருக்கின்றான். மேலும், முஸ்லிம்களாகிய நம்மெல்லோரையும் உம்மத்துகளுள் சிறந்தோர் என்றும் அழைத்துள்ளான். ஆதலின், நாமெல்லாரும் அல்லாஹ்வின் உண்மையடியார்களாய் இருப்பதால், மெய்ம்மையில் மேன்மையான மனிதர்களாகவே இருப்போம் என்பது ஒருதலை.

ஆனால், ஒரு விஷயம்! அஃதாவது, உங்களை ஆண்டவன் இத்துணை மேன்மையாக்கி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா? உண்மையில் இதன் காரணம் யாதெனின், நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) மற்றெல்லா நபிமார்களைக் காட்டினும் மற்றெல்லா மதபோதகர்களைக் காட்டினும் மகா மேலான மான்மியம் பெற்றிருப்பதுடன் நில்லாது, நீங்களும் அந்த மகாபெரிய இறுதி நபியின் மேலான உம்மத்தாகவும் சிஷ்யர்களாகவும் இருப்பதேயாகும். இக்காரணத்தினாலேயே நீங்கள் மேன் மக்களாய்க் கருதப்படுகின்றீர்கள்.

*கப்ருக்குக் காரை பூசுவதையே நபிபிரான் தடுத்திருக்க, 60 அடி, 70 அடி நீளத்திலெல்லாம் சமாதிகளைச் சிருஷ்டித்து முஸ்லிம்களைப் பலர் வழிகெடுக்கின்றனர்.

ஆதலின், நீங்கள் உங்கள் மேன்மைக் கொத்தவாறும் கண்ணியத்துக் கேற்றவாறும் நேரான பாதையிலே சீராக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய எல்லா வியவகாரங்களையம் குணாதிசயங்களையும் அனுஷ்டானங்களையும் அப்படிப்பட்ட நன்னபியைப் பின்பற்றியதாகவே ஆக்கிக்கொள்ளுங்கள். அஃதாவது, அவர்கள் எவ்வண்ணம் இவ்வுலகில் நடந்து வந்தார்களோ, அவ்வண்ணமே நீங்களும் இத்தரணியில் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு ஷிர்க்கைவிட்டுத் தவிர்த்து கொண்டார்களோ, அவ்வாறே நீங்களும் பித்அத் ஷிர்க்கைவிட்டுத் தவிர்ந்து கொள்ளுங்கள்.* அவர்கள் எவ்வாறு பெரியோர், சிறியோர்களைப் பேணி வந்தார்களோ, அவ்வாறே நீங்களும் ஒழுகிக் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு தம் பெண்மணிகளைக் கண்ணியமாய், கௌரவமாய், நியதியாய், ஸமரஸமாய், சம உரிமையாய்க் கரிசனத்துடன் நடாத்தி வந்தார்களோ, அவ்வாறே நீங்களும் பெண்மணிகளை நல்ல முறையில் நடாத்தி மேன்மையுறச் செய்யுங்கள்.

ஏ நேயர்காள்! நுங்கள் வர்க்கத்துக்குள் இதுகாலை எண்ணத் தொலையாத அனாசாரங்களும் மூடப் பழக்க வழக்கங்களும் ஆகாத கருமங்களும் பித்அத் ஷிர்க்குகளும் அதிகம் காணப்பட்டே வருகின்றன; அவற்றுள் ஒரு மா கொடிய கெட்ட வழக்கமும் காணப்பட்டு வருகிறது; நீங்கள் உங்கள் பெண் மக்களை உங்களுக்குச் சமமாய்ப் பாவிப்பதில்லை; அவர்களைக் கல்வி முதலிய நாகரிகத்தில் முன்னுக்குக் கொண்டு வருவதில்லை; அவர்களது வாழ்க்கையை நீங்களும் சற்றும் சீர்திருத்துவதில்லை; அன்னார்க்கு மேலான ஞான விகாசக் கல்வியைப் போதிப்பதில்லை. நீங்கள் நபிகள் நாயகத்தின் (ஸல்) உண்மையான உம்மத்தாயிருப்பின், அவசியமாய் அவர்களின் முன்மாதிரியான நமூனாவையே பின்பற்றிச் சீர்திருத்தத்திற்கு வந்திருப்பீர்கள்.

நம்முடைய நாயகம் அவர்கள் (ஸல்) எவ்வாறு பெண்மணிகளை நடாத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டுவந்தார்களென்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும். நாயகமவர்கள் (ஸல்) இவ்வாறு நடந்து கொண்டதனால்தான் உம்முல் முஃமினீன் ஹஜ்ரத் ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்கள் மார்க்க ஞான விஷயத்தில் நிகரற்ற மாது சிரோமணியாய் விளங்கியதுடன், அனேக இமாம்களுக்கும் பெரிய இமாமாய் நின்றிலங்கிக்கொண்டிருக்கின்றனர். பெண்மணிகளுக்கு மார்க்கக் கல்வி இல்லாமையால்தான் அன்னவர்களே எல்லாவித பித்அத் ஷிர்க்குக்கெல்லாம் மூலகாரணமாய் விளங்கி வருகின்றனர்.

நீங்களோ, பெண்களை அனாவசியமாய் அடிமைப் படுத்துகின்றீர்கள். அவர்களை மிருகங்களினும் மிகக் கேவலமாய் நடத்துகின்றீர்கள். அவர்களின் தேக சுகம் பாதிக்கப்படுமாறு சதா அந்தப்புர இருளிலே போட்டு அடைத்து வைக்கின்றீர்கள். சின்னஞ் சிறு குற்றங்களுக்கெல்லாம் அவர்களது மானம் போகுமாறு வாயில் வந்தவாறு வசைமாலையினால் ஏசுகின்றீர்கள். சாதாரணக் குடும்பச் சச்சரவுக்கெல்லாம் அவர்களுக்குத் தலாக்கைக் கொடுத்து விவாஹரத்து செய்து விடுகின்றீர்கள்.

நீங்கள் இப்படிப் பெண்களை ஆடுமாடுகளேபோல் நடாத்துவதை ஆதாரமாய்க் கொண்டே அன்னிய மதஸ்தர்களும் முஸ்லிம்களைத் தூஷிக்கின்றார்கள். “முஸ்லிம்கள் மகா கெட்டவர்கள்; பெண்களை மிகக் கொடுமையாய் நடத்துகிறார்கள்,” என்று குறை கூறுகிறார்கள். இத்தகைய நுங்கள் குறையினாலும் பிறமதஸ்தரின் தூற்றலினாலுமே நம் இஸ்லாம் மதத்தின் மான்மியம் பலமிழந்து வருகின்றது. உண்மையில் நமதிஸ்லாம் மதமோ, ஏனைச் சமூகங்களைவிட மிகச் சிறப்பாகவே பெண்களின் விஷயத்தில் தாராள நோக்கத்தையும் சம உரிமையையும் அளித்திருக்கின்றது. இதைப் பற்றிக் குர்ஆனிலும், ஆண்களுக்குப் பெண்கள்மீது உரிமையிருப்பதேபோல், பெண்களுக்கும் ஆண்கள்மீது உரிமையிருக்கின்றன; ஆனால் ஆண்களுக்குப் பெண்கள்மீது (சம்பாதிக்கும் விஷயத்தில்) ஒரு மேலான அந்தஸ்து இருக்கிறது, என்று ஆண்டவன் கூறியுள்ளான்.

இதனால் பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு சில பதவியே மேலாயிருக்கிறதல்லாமல், ஏனை எல்லா விஷயங்களிலும் தாரதம்மியம் என்பதில்லை. குர்ஆனின் மற்றோரிடத்தில் காணப்படும், “பெண்களின்மீது ஆண்கள் ஆதிக்யம் வாய்ந்தவர்களாவர்,” என்ற வாக்கியத்திலும் இந்தக் கருத்துத்தான் காணப்படுகின்றது. இதனால் பெண்களை ஆண்கள் செவ்விதாய்ப் பாதுகாத்து, அவர்களைச் சம உரிமையுடன் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதே நன்கு புலனாகின்றது. வழக்கத்திலுள்ள, வெளியுலக ஒருசில விஷயங்களில் மாத்திரம்தான் ஆண்களுக்கு அதிக உரிமையிருக்கிறதேபோல காணப்படுகிறதல்லாமல், உண்மையிலே ஏனை எல்லா விஷயங்களிலும் ஆண்களும் பெண்களும் சம உரிமை வாய்ந்தவர்களே யாவார்கள். ஆனால், பெண்களுக்கு ஆண்களின்மீதுள்ள கடைமைகளை அன்னார் செவ்வனே நிறைவேற்றி வைத்தல் வேண்டும்; அவ்வாறே ஆண்களுக்கும் பெண்களின்மீதுள்ள பொறுப்புகளைப் பூரணமாயுணர்ந்து, அவற்றை அவ்வாறே நிறைவேற்றி வைத்தல் வேண்டும்.

மனைவியோ, சதா தன் புருஷனே கதியென்று நம்பிப் பணிவிடை புரிந்து வாழ்க்கைத் துணைவியாக மனமங்களமாயிருந்து வருதல் வேண்டும். கணவனுடைய சுகதுக்கங்களிலெல்லாம் தானும் சேர்ந்தவளென்றெண்ணி, அவற்றில் பங்கெடுத்துக் கொள்ளல் வேண்டும். இல்லறக் குடும்பக் காரியங்களையும் மனைவியே ஒழுங்காய்ச் சிக்கனத்துடன் செய்து முடித்தல் வேண்டும். கணவனும் மனைவிக்காக ஜீவனோபாய வசதிகளையெல்லாம் சரிவரச் செய்தல் வேண்டும். உண்டி, உடை, வீடு, சுகாதாரம் முதலியவைகளுக்கும் கணவனே சகல சகாயமும் நன்றாய்ப் புரிந்து வைத்தல் வேண்டும். பெண்மணிகளைக் கேவலமாய் நடத்துவது மிகக் கொடிய காரியமாகும். பெண்கள் புருஷர்களின் சரிபாதியாயிருக்கிறார்கள்; இல்லை, பெரும் பாகமாயிருக்கிறார்கள். பிதுரார்ஜித சொத்திலும் பெண்களுக்குரிய பாகத்தைச் சிறிதும் குறைக்காமலே கொடுத்து விடுதல் வேண்டும்.

நண்பர்களே! இவைகளே முஸ்லிம்களாகிய உங்களுக்கு உங்கள் இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் ஒரு சில நன்முறைகளாகும். குர்ஆனும் நாயகத்தின் ஹதீதுகளும் இவ்வாறே போதித்து நிற்கின்றன. ஆதலின், நீங்களெல்லீரும் இச் சன்மார்க்க ஒழுக்கத்தை இறுகப் பிடிப்பீர்களாக. பெண் மக்களை உங்களுக்குச் சமமானவராய்ப் பாவிப்பீர்களாக; அவர்களுக்குரிய உரிமைகளை அளித்து வருவீர்களாக. நம் பெண்மணிகளுக்குப் போதிய லௌகீக வைதிகக் கலாஞானத்தைச் செவ்வனே போதித்து, அவர்களை ஹிதாயத்திற்குக் கொண்டு வருவீர்களாக. தாயுலகம் சீர்பெறாத வரையில் சேய்களுலகமும் செம்மையுற மாட்டாது. அவர்களை எப்பொழுதும் மிருகங்களைப் போல் பட்டிக்குள் அடைத்து வைத்து, அஞ்ஞான அந்தகாரத்துள் ஆழ்த்தி வையாதீர். அல்லாஹ்வுக்கு நீங்கள் பாபியாய்ப் போய்விடுவீர்கள். எனவே, எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா நம்மெல்லோருக்கும் எல்லா இகலோக, பரலோக பாக்கியங்களையும் செவ்விதா யளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا 

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment