ஜமாதியுல் அவ்வல் மாத 2-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ وَ بَعَثَ النَّبَيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبَيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

அன்பான முஸ்லிம் நேசர்காள்! நம் மானிட கோடிகளுக்குப் பேரருட் சம்மானத்தையும், சன்மார்க்க நல்லொழுக்கத்தையும், சாந்தியையும் சமாதானத்தையும் அளித்துள்ள அல்லாஹுத் தஆலாவுக்கே எல்லாப் புகழும் உரியனவாகுக. சலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகமாகிய சகல உலக தயாளர் முஹம்மத் முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்களுக்கே உரியனவாகுக. அதன் பின்பு அறிந்து கொள்வீர்களாக:

ஏ ஈமான் கொண்டவர்காள்! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வீர்களாக. இன்னம், அன்னவனிடமே ‘வஸீலா’வை – (சிபாரிஷுக்காக நபிபெருமானை நாடுதலை)த் தேடுவீர்களாக. அவனது சத்திய சன்மார்க்கத்திலேயே முற்றிலும் நடந்து நற்காரியங்களைச் செய்ய நன்கு முயற்சிப்பீர்களாக. இதனால் மாபெரும் வெற்றி பெறுவீர்கள்,” என்று ஆண்டவன் தன் குர்ஆன்ஷரீபில் கூறியிருக்கின்றான்.

ஆகவே, ஆண்டவனுடைய பக்தர்களாகிய நீங்களெல்லீரும் பரலோக விசிராந்தியையும் பொன்னுலகப் பேரானந்தத்தையும் அடைய ஆர்வங் கொள்வீர்களேல், அத்தியாவசியமாக அந்த ஆண்டவனொருவனுக்கே பெரிதும் அஞ்சிக் கொள்ளுங்கள். அவனையே சிருஷ்டி கர்த்தனாகவும் நுங்கள் போஷக ரக்ஷகனாகவும் போற்றிக் கொள்ளுங்கள். அவனையே நுங்கள் இன்பதுன்பங்களுக்கெல்லாம் சரியான புகலிடமெனக் கொள்ளக் கடவீர்கள். அவனிடமே உங்கள் உள்ளப் பிரார்த்தனைகளையெல்லாம் உள்ளபடியே முறையிட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனிடமே ‘வஸீலா’வை எதற்குமே தேடுங்கள். அவனே உங்களைச் சிருஷ்டித்துப் போஷித்துப் பரிபாலிப்பவன். அவனே நுமக்கு இவ்வுலகில் வாழ்வையும் தாழ்வையும் அளிப்பவன். அவனிடமே இக் குவலயத்தின் சகல காரியங்களும் அடங்கிக் கிடக்கின்றன. ஆகவே, அந்த அல்லாஹ்வின் ஆதரவின்றி இப் பிரபஞ்சத்தல் ஒன்றும் நடைபெறுவதே கிடையாது.

ஆதலால், அந்த ஆண்டவனல்லாத வேறு எப்படிப்பட்ட தேவதையும் மூர்த்தியும் விக்கிரஹமும் சுவாமியும் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட சகாயமும் புரிவது முடியாது. எத்தகைய அவ்லியாவின்மீது வைக்கும் நம்பிக்கையும் பீர்களின்பால் கேட்கும் பிரார்த்தனையும் குதுப்களின்மீது கொள்ளும் உறுதியும் சமாதிகளின்பால் செய்யும் சுஜூத்களும் சுயமே எவருக்கும் ஒருசிறிதும் உபகாரம் புரியமாட்டா; புரியவும் முடியாது. அத்தகைய சமாதிகளின் மீதும், அவ்லியாக்களின் ஆவிகளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை முற்றிலும் முரணாய்க் கெடுத்துக் கொள்வது மாகொடிய ஷிர்க்காகும்.

ஆண்டவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லாமலிருக்க, நம் முஸ்லிம் அறிவிலிகள் ஆண்டவனல்லாத, அவனுடைய சிருஷ்டிப் பொருள்களிடம் சென்று, அன்னவர்களை அல்லாஹ்வே போல், இல்லை, அவனைப் பார்க்கினும் அதிகமாக மதித்துக் கொண்டு, தங்கள் கோரிக்கைகளையெல்லாம் அன்னவைகளிடம் வேண்டுவதும், தங்கள் குறைகளை அவைகளிடம் முறையிட்டுக் கொள்வதும் நம் மார்க்கப்படி ஒரு சிறிதேனும் ஆகாதவைகளாம். இத்தகைய வீணான ஷிர்க் வழக்கங்களைப்பற்றியும் சிருஷ்டிப் பொருள்கள்பால் கொண்டுள்ள நம்முடைய மூடநம்பிக்கைகளைப் பற்றியும், அல்லாஹுத் தஆலா குர்ஆனில் சுட்டிக் காட்டுவதாவது:- “யாதொரு நன்மையையும் சுயமே விளைவிக்கவேனும் தவிர்க்கவேனும் இயலாத இத்தகைய ஆண்டவனல்லாத ஏனையவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். இன்னம், ‘இவையேதாம் எங்களுக்கு ஆண்டவனிடத்திருந்து ஈடேற்றத்தை வாங்கித் தரக் கூடியன’ வென்றும் கூறுகின்றார்கள்… ஆண்டவனோ, மஹா பரிசுத்தமானவன். இவர்கள் இணையாக்கி வைப்பவைகளைவிட மிகவும் மேன்மையானவன்” என்பதேயாம்.

நண்பர்காள்! நம் முஸ்லிம் அறிவாளிகளாகிய பற்பல மேதாவிகள் இத்தகைய ஷிர்க்கான அனாசாரங்களைப் புரிவது கொடிய பாபகாரியமேயென்று ஃபத்வாக்கள் பல வெளியிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது கொள்ள வேண்டிய தவக்கல் பக்தி, நம்பிக்கை, வஸீலா, விசுவாசம், உறுதி முதலியவைகளை ஆண்டவனல்லாத வேறு சிருஷ்டிப் பொருள்களின் மீதோ, நம்மைப்போன்ற வேறு மனிதர்களின் மீதோ, அல்லது அவர்களின் மரித்த மேனியின் மீதோ அதிகம் வைத்து வணங்கிக் கொண்டாடுவது ஆண்டவனுக்கு இணைவைப்பதேயாகும்.

தங்கள் ஆண்டவனுக்குச் செய்யும் வணக்கத்துடனே வேறு யாரையும் இணையாக்கிக்கொள்ள வேண்டாமென்று அல்லாஹுத் தஆலா குர்ஆன் ஷரீபில் மிகமிகக் கடுமையாய்க் கட்டளையிட்டிருக்க, நம் பாமர முஸ்லிம்கள், அவ்லியாக்களின் கப்ர்களுக்கும் அன்னவர்களின் தர்காக்களுக்கும் ஆலயங்களுக்கும் மற்றும் பொய்யான தெய்வங்களிடத்தும் சென்று, விசுவாசங் கொண்டு வேண்டுதல் புரிந்து நேர்ச்சை செய்து கொள்வது தீனுக்காகாத மகாகொடிய ஷிர்க் கருமமேயாகும். “ஏ அல்லாஹ்! உன்னையே வணங்குகிறோம்; உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம்,” என்று கூறிக்கொண்டே, எல்லா கப்ர் வணக்கமும் புரிந்து வருகிறோம்.

அந்தோ! முஸ்லிம் நேசர்காள்! இப்படிப்பட்ட ஷிர்க்கான கருமங்களையெல்லாம் நம் முஸ்லிம் சமூகத்தை விட்டு அடியோடு விலக்குங்களே! அல்லாஹ்வையே ஐங்காலங்களிலும் தொழவேண்டுவதிருக்க, அவற்றிலே ஒரு நேரமும் தொழாமல், சமாதிக்குச் சென்று வேண்டுதல் புரிவதை மாத்திரம் மகா அவசியமான கடமையென எண்ணிக்கொண்டு திரியும் பாமர மௌட்டிய ஸ்திரீ புருஷர்களையெல்லாம் தடுத்து நேர்வழிக்குக் கொண்டு வாருங்களே! காபிர்களின் மூடப்பழக்க வழக்கங்களையெல்லாம், தங்கள் அறியாமையால் பற்றிக் கொண்டு, தர்காவென்னும் கோயில்களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று சென்று, தங்கள் மனக்குறைகளைத் தெரிவித்து இறைஞ்சும் அந்த அதர்ம ஆத்மாக்களையும் அவ்வனாசாரங்களில் ஆழ்ந்து முஷ்ரிக்காய்ப் போகா வண்ணம் தடுத்து வையுங்களே!

வேறு சிறுசிறு அனாசார மூடப்பழக்க வழக்கங்களையெல்லாம் செய்யும் அவிவேகிகளையும் சீர்திருத்துங்களே! படிப்பு வாசனையேயற்ற இவ்வறிவிலிக் குழாங்களுக்கெல்லாம் சன்மார்க்க நீதிகளையும் இஸ்லாமிய கட்டளைகளையும் குர்ஆனின் சற்போதனைகளையும் நன்கெடுத்துப் போதியுங்களே! அல்லாஹ்வின்மீது வைக்க வேண்டிய ஏகதெய்வ உறுதியாகிய தவ்ஹீதின் தத்துவத்தைப் பற்றியும், அதன் தத்துவார்த்தத்தைப் பற்றியும் நன்கெடுத்துக் கூறுங்களே!

ஈமானுக்குரிய திருமந்திரமான “வணக்கத்துக்குரிய தெய்வம் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறெதுவுமே இல்லை,” என்பதை ஆழச் சிந்தித்துப் பார்க்கச் செய்யுங்களே! எக்காலத்தும் அந்த ஒரே ஆண்டவனையே – வேறு “ஆசாமிச் சாமிகளை”யல்ல – நம் முஸ்லிம்கள் வணக்கம் புரிதல் வேண்டும்.

லாஇலாஹ இல் லல்லாஹ்” என்னும் இந்நாலு சொல் மந்திரத்தை உதட்டால் ஓதுவதளவில் ஒத்துக்கொண்டு, காரியத்தில் நேர்விரோதமாய்க் காணப்படின், அத்தகைய ஈமானிலொன்றும் பிரயோஜனமில்லை. இதனால்தான், ஆண்டவனுக்கு இணைவைத்து வணக்கம் புரியும் மஹா பெரிய கொடிய பாபத்தை மட்டும் ஏகநாயன் சிறிதும் மன்னிக்கமாட்டான்; ஆனால், ஏனை எல்லாக் குற்றங்களையும் ஆண்டவன் மன்னிக்கக் கூடுமென்று குர்ஆனே மஜீதில் நாம் காண்கின்றோம். ஆயின், நம் சோதர முஸ்லிம்களெனப்படுவார் மன்னிப்புக்கு அருகதையற்ற இக்கொடிய காரியத்தையேதான் (ஷிர்க்கை) முதன் முதலாய்ச் செய்ய முனைந்து நிற்கின்றனர். என்னே இவர்களின் மடமை!

ஆதலால், அல்லாஹ் ஒருவனைத்தான் அதிகம் விசுவாசித்து பக்திகொண்டாடல் வேண்டும். எந்தக் காரியத்தையும் அவனுக்காகவே நாம் புரிதல் வேண்டும். ஷிர்க்கைச் செய்யாமல் நன்கு நம்மைப் பேணிக்கொள்ளல் வேண்டும். அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்:- “நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருப்பதாவது: எவர்களிடத்தில் இம் மூன்று குணங்கள் காணப்படுகின்றனவோ, அவர்களே ஈமானின் இன்பத்தைப் பூரணமாய்ப் பெற்றுக்கொண்டவர்கள்: அவையாவன:- (1) அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூரான நபியையும் இவ்விருவரல்லாத ஏனைய எல்லாவற்றைக் காட்டினும், அதிகமாய் விசுவசித்தல் வேண்டும். (2) வேறெவரையேனும் நேசிப்பதாயின், ஆண்டவனுக்காகவே அவரை நேசித்தல் வேண்டும். (3) குபுரில், சத்தியசன்மார்க்க நிராகரிப்பில் புகுந்துவிடுவதை நெருப்பில் பிரவேசிப்பதைப் போல வெறுத்தொதுக்கல் வேண்டும்” -(புகாரீ). இதுவே பரிபூரண ஈமான்.

ஆதலின், எம்முஸ்லிம்காள்! இந்த ஹதீதின்படி நீங்கள் ஒழுகிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வையும், அவனது ரஸூலையுமே (ஸல்) நம்பி விசுவாசங் கொள்ளுங்கள். “நீங்கள் அல்லாஹ்வை விசவசிப்பீர்களேல், அதுபொழுது என்னைப் பின்பற்றக்கடவீர்கள்; அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான்; மேலும், உங்களுக்கு உங்கள் குற்றங்குறைகளையும் பாபங்களையும் மன்னித்தருள்வான் என்று, “ஏ முஹம்மத்! நீர் கூறுவீராக.” என்பது குர்ஆன் ஆயத்.

எனவே, எந்தக் காரியத்தையும் அல்லாஹ்வை நம்பியே செய்யுங்கள். குபுரையும் ஷிர்க்கையும் பாபமான கருமங்களையும் உங்களைவிட்டுத் தூர விலக்குங்கள். அனாசரத்திலும் மௌட்டியத்திலும் லயித்துப் போயுள்ள நம் பாமர முஸ்லிம் மக்களைச் சீர்திருத்துங்கள்! மார்க்க ஞானத்தைப் போதியுங்கள்; தெய்வபக்தியைப் புகட்டுங்கள். இஸ்லாத்தையும் ஈமானையும் கற்பித்து, நீங்களும் மேன்மைபெற்று, ஆண்டவனுடைய உண்மையடியார்களாக ஆய்விடுங்கள். ஆதலின், நம்மெல்லோருக்கும் ஆண்டவன் நல்லருள் புரிவானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment