اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹுத் தஆலாவை நாமெல்லோரும் போற்றிப் புகழ்வோமாக. அவன் நமக்களித்துள்ள எண்ணற்ற நிஃமத்துக்களுக்காக அவனை நாம் சிந்தித்து வந்திப்போமாக. நமக்கெல்லார்க்கும் திருத்தூதராய் அவதரித்துச் சன்மார்க்கத்தையும் நன்னடக்கைகளையும் போதித்துச் சென்ற நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களையும் போற்றி ஆசீர்வதிப்போமாக. அன்பர்காள்! அதன்பின்பு அறிந்து கொள்வீர்களாக:
“தங்கள் ஆத்ம வாழ்வை வீண் விரயம் செய்துவிட்ட என் அடியார்காள்! ஆண்டவனின் கிருபையினின்றும் நீங்கள் அதைரியமுற்றுப் போகவேண்டாம். நிச்சயமாக ஆண்டவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். நிச்சயமாகவே அவன் க்ஷமித்து அருளக் கூடியவனாயும் இருக்கின்றான்,” என்று ஆண்டவன் கூறுகின்றான். அல்லாஹ் ரஸூலின்மீது நன்னம்பிக்கை கொண்டு நற்கருமம் புரியும் புனிதர்களெல்லார்க்கும் ஆண்டவனருள் எக்காலமும் சொரிந்துகொண்டே இருக்கிறது. எவரேனும் தெரியாமல் பாதகச் செயல்களைப் புரிந்து, அதன் பின்பு அதற்காகப் பெரிதும் வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டு மன்னிப்புத் தேடுவார்களாயின், உடனே ஆண்டவன் அவரை மன்னித்தருள்வான். எப்படிப்பட்ட காஃபிரும் தெளபாசெய்து ஈமான் கொண்டு விட்டால், அவன் முன்னர்ச் செய்திருந்த பாபங்களெல்லாம் மன்னிக்கப்படுகின்றன. அப்படியே பகுத்துணர்வற்று வியபிசாரம் செய்துவிட்டோ, திருடிவிட்டோ, கொலைபாதகம் புரிந்தோ, சூது வாது மோசங்கள் இழைத்துவிட்டோ, பிறர் குறைகளைக் கூறிப் புறம்பேசி விட்டோ, அதற்காகப் பின்னர் ஒரு முஸ்லிம் வருந்திப் பரிசுத்த மனத்தோடு இறைவனின் சன்னிதானத்தில் சரண்புக்குப் பிரலாபிப்பானாயின், அக்கணமே அவனும் அண்டவனால் மன்னிக்கப்படுகிறான்.
எவனேனும் குறும்புக்காகவோ, அல்லது பாபம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் ஆண்டவன் மன்னித்துவிடுகிறானே யென்றோ, வேண்டுமென்றே பாபச்செயலை அதிகம் புரிவானாயின், அவன் ஒருகாலும் ஆண்டவனால் மன்னிக்கப்பட மாட்டான். என்னெனின், நம் மானிட கோடிகளுக்கு ஆண்டவன் போதுமான பகுத்தறிவையும் நல்லவை இன்னவை தீயவை இன்னவை என்றறியும் சிறந்த ஞானத்தையும் கொடுத்து, நபிமார்கள் மூலம் வேதங்களாலும் நீதி போதங்களாலும் அனந்தம் எச்சரிக்கைகள் நமக்குச் செய்திருக்க, அவற்றையெல்லாம் நாம் உணர்ந்திருந்தும் வேண்டுமென்றே பாதகச் செயல்களைப் புரிவோமானால் நிச்சயமாய் ஆண்டவனால் அவை மன்னிக்கப்படவே மாட்டா. அதற்காகக் கியாமத்தில் கொடிய தண்டனைதான் கிடைக்கும்.
“உண்மையாக நாம் உம்மீது சத்தியமிகுந்த வேதத்தை ஜனங்களின் நன்மைக்கென்று இறக்கி வைத்துவிட்டோம். எவரேனும் அதனால் சன்மார்க்க மடைவாரானால், அவர் ஆத்மாவுக்கு அது நன்மையேயாகும். எவரேனும் வழிகெட்டுப் போவாரானால், அவர் கேடிழைத்தவற்றின் தீமையெல்லாம் அவர்மீதே சுமத்தப்படும். இதற்காக அவரிடம் நீர் பொறுப்புடையவ ராகமாட்டீர்,” என்று ஆண்டவன் தன் திருக்குர்ஆனில் எச்சரிக்கை செய்திருக்கிறான். எனவே, உண்மையை உணர்ந்தும் பிறகு பாபம் செய்தால், அதற்கு ஜவாப்தாரி அவர்களே யாவார்கள்.
முஸ்லிம் சகோதரர்காள்! தெய்வம் ஒன்றென்றே நம்பவேண்டும்! ஆண்டவனோடு எப்படிப் பட்டதையும் இணையாகச் சேர்த்தல் கூடாது. அந்த ஏக நாயனையே வணங்க வேண்டும்; வேறெந்தப் பெரியாருக்கும் அவ்லியாவுக்கும் சமாதிக்கும் விக்ரகத்துக்கும் சிரஞ்சாய்க்கக் கூடாது. நபிமார்களெல்லாம் உண்மையாளர்களென்று நம்பவேண்டும்; முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறுதிக் காலத்துக்காக வந்த கடைசி நபியென்று ஈமான் கொண்டு, அவரையே பின்பற்றி நடத்தல் வேண்டும்.
குர்ஆன் ஷரீப் ஆண்டவனது திருவசனக் கிரந்தமென்றே நம்பவேண்டும்; அதன் போதனைப்படியே முற்றிலும் கட்டுப்பட்டு நடந்துவரல் வேண்டும். ஒரு சிறிதும் மீறி நடத்தல் கூடாது, “உன்னையே வணங்குகிறோம்; உன்னிடத்தே உதவி தேடுகிறோம்,” என்னும் ஆயத்தை ஓதிக்கொண்டே அவ்லியாவின் பாதத்தடியில் குப்புற்று ஸுஜூத் செய்து வணங்குவது கூடாது. மிகமிக முக்கிய நித்திய வணக்கமான ஐந்து நேரத் தொழுகைகளையும் ஒருசிறிதும் தவறாமல் எந்நாளும் தொழுது வருதல் வேண்டும். நினைத்த போது தொழுதல், இல்லாவிட்டால் தொழுவதில்லை என்ற போடுபோக்குத் தன்மை சற்றும் கூடாது. எப்போதும் தேகம், மனம், வாக்கு யாவும் பரிசுத்தமா யிருக்க வேண்டும்.
வருடந்தோறும் ரமலான் மாதத்தில் எல்லா நோன்புகளையும் விடாது நோற்றல் வேண்டும்; ஏழை எளியோர்களுக்குச் சகாயம் செய்தல் வேண்டும். தமக்குச் சொந்தமான பொருளின் 40-இல் ஒரு பாகத்தை ஆண்டவன் பெயரால் ஜகாத்தென்று தானதர்மம் செய்துவிடுதல் வேண்டும். அன்னியர் பொருளை அக்கிரமமாய் அபகரித்தல் கூடாது. “கள்ளமார்க்கெட்” ஹலாலென்று கருதுவது கூடாது. எவரது மனத்தையும் நோவச் செய்வது கூடாது, வட்டி வாங்கக் கூடாது. பொய்பேசக் கூடாது. சூது வாது மோசம் முதலியவையும் செய்யத்தகா. கட்குடி, வியபிசாரம், கொலை, இம்சை முதலியவைகளை ஒரு சிறிதும் செய்யக்கூடாது. ஹலாலான, நேரிதான மார்க்கத்திலேயே பணம் சம்பாதித்து, உத்தமமான வழியால்தான் ஜீவனோபாயத்தை நடத்திவருதல் வேண்டும். விலக்கப்பட்ட ஹராமான வழிகளில் பணம் திரட்டக் கூடாது. நாய் விற்ற காசு குலைக்காதென்று கூறுவது கூடாது. வட்டி இலஞ்சம் இவைகளை வாங்கவும் கூடாது. பணமும் தேக திடமும் வசதியும் உள்ளவர்கள் மக்காவுக்குத் தம தாயுளில் ஒரு முறையேனும் சென்று ஹஜ்ஜு செய்யவேண்டும்.
மேலும், தம்முடைய சகோதரர் சகோதரிகள், தாய் தந்தையர், மற்றும் இனபந்து ஜனங்கள் இவர்கள் எல்லார்களுடனும் சமரஸமாயும் நேசமிக்கவர்களாயும் அன்னியோன்னியமாயும் இருந்து, சுற்றந் தழுவவேண்டும். அநாதச் சிறுவர் சிறுமியர், பதியை இழந்த விதவைகள், யாருமற்ற அகதிகள் இவர்களை இயன்றவரை காப்பாற்றுதல் வேண்டும். எக்காலமும் நன்மையையே செய்து தீமையை விலக்கி, நற்குணங்கள் பூண்டு, பிறரை நன்மையைச் செய்யும்படி ஏவி, தீமையினின்று தடுத்து நன்னீதிகளையே போதித்தல் வேண்டும். நம் அருமைச் சிறுவர்கள், சிறுமிகள் இவர்களுக்கெல்லாம் கல்வி யபிவிருத்தியை அதிகம் அளித்தல் வேண்டும்.
இவை போன்ற சன்மார்க்க நெறிமுறைகளெல்லாம் நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக்கப்பட்ட கட்டளைகளாகும். இதன்படியே நாம் நடந்தால்தான் இந்த உலகத்தில் சத்திய பக்தராயிருந்து, உலக முடிவு நாளிலும் மோக்ஷ சாம்ராஜ்யத்தையடைந்து, ஆண்டவனருளையும் சுவனபதியையும் அவனது சான்னித்யத்தையும் பெறுதல் முடியும். இதை விட்டுத் துன்மார்க்கத்தில் வீழ்ந்து சதா சர்வகாலமும் பாபச் செயல்களையே ஒருவன் புரிந்து கெட்டவனாயிருந்து மாண்டு போவானாயின், அவன் இறுதி வாழ்க்கையில் தான் இங்கிழைத்த தீமைகளுக்காக அதிகமான தண்டனையையே அடைவானென்பது திண்ணம். நெடு நெடுங் காலம்வரை நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதே அவனது கதியாகும்.
நன்மை செய்த உத்தமர்கள்தாம் கியாமத்தின் போழ்து பேரானந்த சுகத்தைப் பெறுவார்கள். தீமைகள் செய்தோர் ஒருகாலும் சுகத்தை யடையார். இதுதானே இயற்கை விதியும்? அவர்களுக்கு நெடிய வேதனையே கதியாகும். மேலும், எவர் சத்தியத்தைக் கொண்டு வருகிறாரோ, மேலும் அச் சத்தியத்தின் படி நடந்து கொள்கிறாரோ அவர்களே ஆண்டவனுக்கு அஞ்சி நடந்தவர்களாவர்,” என்றும் ஆண்டவன் கூறுகின்றான்.
ஆதலின், முஸ்லிம் நேசர்காள்! எப்போதும் நன்மையே செய்யுங்கள். தின்மையை அடியோடு என்றும் விலக்குங்கள். சத்தியத்தை என்றென்றும் கடைப் பிடிப்பீர்களாக. பின்னர் நீங்கள் ஆண்டவனிடத்தில் பெருத்த ஜயம் பெறுவீர்கள். எனவே, ஆண்டவன் நம்மெல்லோர்க்கும் இத்தகைய சன்மார்க்கத்தில் சத்திய மித்திரராய் ஒழுகப் பேரருளும் பெருஞ் சாதனமும் சதா புரிந்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
إِنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ بِالْحَقِّ فَمَنِ اهْتَدَى فَلِنَفْسِهِ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: names.org
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License