இறுதியாகக் கி.பி. 1250-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி பிறந்தது-(ஹி.648,துல்கஃதா ௴). அமீருல் மூஃமினின், கலீஃபா, அபூ அஹ்மத் அப்துல்லாஹ், முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்கள் நியமனம் செய்து, தம்முடைய சில பரிவாரங்களுடனும்

கட்கந்தாங்கியுடனும் அனுப்பிவைத்த அல்மலிக்குல் அஷ்ரப் மூஸா என்னும் பெயர் படைத்த ஐயூபிச் சிறுவன் காஹிராவுக்குக்குள்ளே அன்று வந்து நுழைந்தான். அவன் ஓர் அசுவத்தின்மீது ஆரோகணித்தவனாக, கலீஃபாவின் படைகள் புடைசூழ, காஹிராவின் வாயிலை எட்டியவுடனே, மிஸ்ரின் சுல்தான் மலிக்குல் முஈஜுத்தீனின் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததற் கொப்ப, காஹிராநகர்க் கோட்டைக் காவலர்கள் மூஸாவையும் அவனுடன் வந்தவர்களையும் தடுத்து நிறுத்தினார்கள். என்னெனின், என்றைக்கு அந்த மூஸா காஹிராவுக்குள் வந்தாலும் சங்கடம் பிறக்கக் கூடுமென்பதை முற்கூட்டியுணர்ந்த ஷஜருத்துர் தம் கணவர்வாயிலாக ஓர் அவசரச் சட்டததைப் பிரயோகித்திருந்தார்; அந்த அவசரச் சட்டத்தின் சாராம்சம் என்னவென்றால்,மூஸா என்பவன் காஹிராவுக்குள் காலடியெடுத்து வைக்கக்கூடாது என்பதேயாகும். எனவே, படாடோபத்துடன் காஹிராவுக்குள் நுழைய வந்த மூஸாவைக் கோட்டைக் காவலாளிகள் தடை செய்து வெளியே நிறுத்தினார்கள்.

“ஏ, மூஸா! நீ காஹிராவுக்குள்ளே வரக்கூடாது!”என்று காவலர் தலைவன் கூவினான்.

“அடே! மிஸ்ரின் சுல்தானை உள்ளே நுழையக் கூடாதென்று தடுப்பவன் யாரடா?” என்று மூஸாவின் பிரத்தியேகக் காவலனாக வந்த கலீஃபாவின் கட்கந்தாங்கி வீராவேசத்துடன் வீரிட்டுக் கத்தினான்.

“ஏய், மூடுவாயை! நான் இந்த சுல்தானைத் தடுக்கவில்லை. எங்கள் சுல்தானின் கட்டளையை நிறைவேற்றுகிறேன். இந்த மூஸா என்னும் துரோகி காஹிராவுக்குள் நுழையக்கூடாதென்பது எங்கள் சாஹிபுல் ஜலாலுல் மலிக் முஈஜுத்தீன் ஐபக் அவர்களின் கட்டளையாகும்!”

“யாரடா உங்கள் சுல்தான்? அமீருல் மூஃமினீன் முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்கள் நியமனம் செய்தனுப்பியுள்ள இந்த மிஸ்ரின் சுல்தான், மூஸா அல்மலிக்குல் அஷ்ரப் அவர்களை நீ தடுத்து நிறுத்தினால், உனதுடல் துண்டுதுண்டாகச் சிதறிவிடும், ஜாக்கிரதை!”

“மலிக்காவது, அஷ்ரபாவது! எங்கள் மிஸ்ருக்கு ஒரு சுல்தானேதாம் இருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றவே நாங்கள் இங்கே காவல் புரிகிறோம். கலீஃபா அவர்கள் இந்த மூஸாவை சுல்தானாக நியமித்திருந்தால், ஸல்தனத்தில் சிம்மாசனம் காலியாயிருக்கும் தேசத்துக்குக் கொண்டுபோ! இங்கேயொன்றும் அரியாசனம் காலியில்லை!”

“ஏ, காவலனை! நீ விஷயம் தெரியாமல் பினாத்துகிறாய். இந்த ‘பர்மானைப்’ படித்துப் பார்!” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கட்கந்தாங்கி கலீஃபாவின் விசேஷ உத்தரவு பொறிக்கப்பட்டிருந்த ‘பர்மானை’ நீட்டினான்.

அந்தக் காவலாளி அதை அலட்சியமாய் வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்தான். முதலில் அவனுடைய கைகள் நடுங்கின; பிறகு கால்கள் விலவிலத்தன; மூளையும் கிறுகிறுத்தது. அப்படியே மண்டியிட்டு விட்டான். கலீஃபாவின் தாக்கீதென்றால் லேசா? அரசாங்கத்தின் கோழிமுட்டை குடியானவன் அம்மியையும் தகர்த்துவிடுமன்றோ? அடுத்த கணமே மூஸாவும் பரிவாரங்களும் காஹிராவுக்குள்ளே நுழைந்து விட்டார்கள். நேரே அரண்மனைக்குள் சென்று, அத்தாணி மண்டபத்தில் வந்துநின்றார்கள்.

மூஸா அரண்மனைக்குள்ளே வந்து நுழைந்துவிட்டானென்பதைக் கேள்வியுற்றவுடனே ஷஜருத்துர் சற்றே யோசித்தார்; நேரே அத்தாணி மண்டபத்துக்கு விரைந்தேகினார். முன்னம் ஸாலிஹ் ஆட்சி நடத்திய காலத்தில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்ததைப்போல் இப்போதும் சுல்தான் முஈஜுத்தீனுக்குப் பக்கத்திலே சென்று அமர்ந்துகொண்டார். எனவே, அரசவையை ஒரு மாஜீ சுல்தானாவும் ஓர் ஐபக் சுல்தானும் ஓர் ஐயூபி சுல்தானுமாக மூன்று பிராதானமான பேர்வழிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு வித்தியாசம்: ஷஜருத்துர்ரும் முஈஜுத்தீனும் சிம்மாசனத்தில் ஒருவருக்குப் பக்கத்தில் மற்றொருவராக வீற்றிருந்தனர். கலீஃபாவின் நியமனம் பெற்று வந்துள்ள இளையசுல்தான் மலிக்குல் அஷ்ரப் மூஸா கீழே தரையிலே நின்றுகொண்டிருந்தார்.

கலீஃபாவின் நியமனம்பெற்ற புதிய சுல்தான் காஹிராவுக்கு வந்து விட்டதைக் கேள்வியுற்ற அத்தனை புர்ஜீகளும் பிரதானிகளும் கடல்போல் திரண்டு அரசவையுள்ளே வந்து குழுமிவிட்டார்கள். ஓர் ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள் என்பதைப்போல், ஒரு மிஸ்ருக்கு இரண்டு சுல்தான்களா? என்று எல்லாரும் ஒன்றுகூடி, என்ன நடக்கிறது பார்க்கலாமென்று அங்கு வந்து சேர்ந்தனர்.

ஓர் ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள் என்பதைப்போல், ஒரு மிஸ்ருக்கு இரண்டு சுல்தான்களா?

மூஸாவும் கட்கந்தாங்கியும் அரசவையுள்ளே நுழைந்ததும் முஈஜுத்தீனிடம் கலீஃபாவின் தாக்கீதை நீட்டினார்கள். அவரும் ஷஜருத்துர்ரும் அதை வாங்கிப் படித்தார்கள். முன்னமே அறைகுறையாய் வயிறு கலங்கிக்கொண்டிருந்த முஈஜுத்தீனுக்கு இப்போது நிஜமாகவே குடல் குழம்பிப் போய்விட்டது. பக்கத்தில் மட்டும் ஷஜருத்துர் இல்லாமற் போயிருந்தால், அவர் அக்கணமே பறந்தோடிப் போயிருப்பார். ஆனால், ஷஜருத்துர்ரோ மிகவும் அமைதியாகவும் ஒன்றும் பிரமாதமான காரியம் நடந்துவிடாதது போலவும் கலீஃபாவின் கட்டளையை நிதானமாகப் படித்து முடித்தார்.

“ஏ, கட்கந்தாங்கியே! அமீருல் மூஃமினீன் சார்பில் நீர் தாமே வந்திருக்கிறீர்? அல்லது வேறு பெரியவர் எவரும் வந்திருக்கிறாரோ?” என்று ஷஜருத்துர் தைரியமாக வினவினார். முஈஜுத்தீனுக்கோ, உயிர் தொண்டைக் குழிக்கும் அடிவயிற்றுக்குமாக ஏறியேறி இறங்கிக்கொண்டிருந்தது.

“ஏ, சூனியக்காரியே! நீ கேட்கிற கேள்வி எதற்கும் பதில் சொல்ல நான் ஒரு சிறிதும் கட்டுப்பட்டில்லை. அமீருல் மூஃமினீன் அவர்களின் தாக்கீதைப் படித்தபின்னரும் நீயோ அல்லது நின் புருஷனோ ஒரு நிமிஷத்தில் சிம்மாசனத்தை இந்தப் புதிய சுல்தானுக்காக் காலிசெய்து மரியாதையாய்க் கீழே இறங்காவிட்டால், உங்களிருவரையும் வெட்டியெறியும்படி எனக்கு மேலிடத்து உத்தரவு இருக்கிறது. எனினும், நீ பெண்ணாயிருப்பதால், உனக்குக் கொஞ்சம் மரியாதை கொடுக்கிறேன். நான் ஏறிவந்து உன்கையைப் பிடித்துக் கீழே இழுத்தெறியு முன்னர், நீயே மரியாதையாய் இறங்கி ஓடிவிடு!”

ஷஜருத்துர் ஆழிய முன்யோசனை உள்ளவரென்பது உங்களுக்குத் தெரியுமே! கலீஃபாவின் கட்கந்தாங்கியும் பரிவாரங்கள் சிலவும் காஹிராவுக்குள் வந்ததைக் கேள்வியுற்றவுடனே, தமக்கும் தம்முடைய கணவருக்கும் பாதுகாவல் புரிகின்ற ஹல்காக்களின் தலைவரை ஜாடையாய்க் கூப்பிட்டு ஷஜருத்துர் இரகசியமாகக் கட்டளையிட்டனுப்பியிருந்தார். அந்த ஹல்காத் தலைவர் அக்கணமே வெளியிற் சென்று, கலீஃபாவின் பரிவாரங்களைக் கைது செய்துவிட்டார். இந்தச் செய்தி கட்கந்தாங்கிக்குத் தெரியாது. எனவே, அவன் அரண்மனைக்கு வெளியிலே தன்னுடன் வந்த பரிவாரங்கள் இன்னம் துணையாய் நின்றுகொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டே அதிகாரத்துடனும் ஆணவத்துடனும் ஷஜருத்துர்ரைத் தாக்கிப் பேசினான். ஷஜருத்துர்ருக்கு கலீஃபாவின் பரிவாரங்கள் வெளியிலில்லை யென்பதும், இந்நேரம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுக் காராக்கிருக்கத்துக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதும் நிச்சயமாய்த் தெரியுமாதலால், கொஞ்சமும் அஞ்சமால் பதிலீந்தார்:

“ஓஹோ! அப்படியானால், நீரேதாம் தலைமை தாங்கி வந்திருக்கிறீரோ! மிகவும் சந்தோஷம்! நீர் மேலிடத்து உத்தரவு எதையோ பெற்றுவந்திருப்பதாகச் சொன்னீரே, அந்த மேலிடத்தை நாம் ஒரு சிறிதும் சட்டைசெய்யவில்லை யென்பதை நீர் அறியீர் போலும்! நீர் தயவுசெய்து புறப்பட்ட இடத்துக்கே திரும்பிப்போய், மிஸ்ரிகள் கலீஃபா சொல்லுகிறபடியெல்லாம் தலையசைத்துக் கூத்தாடக்கூடிய சர்வ முட்டாள்களாயில்லை யென்பதையும் அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு சுல்தான் இருப்பதால் இனியொரு சுல்தானுக்கு அவசியமில்லை யென்பதையும் தெரிவித்துவிடும். கலீஃபா சர்வாதிகாரத்துடன் வலியச் சுமத்துகிற ‘பொம்மை சுல்தானை’ இங்கே ஒருவரும் வரவேற்கத் தயாராயில்லை யென்பதை உம்முடைய கலீஃபாவிடம் கூறிவிடும். இனியும் நீர் இங்கே நின்று காலந்தாழ்த்துவதால் உம்முடைய நேரமும் வீணாகும்; எம்முடைய நேரமும் பாழாகும். நீர் மரியாதையாக இப்போதே வெளிறோவிட்டால், உம்முடன்வந்த பரிவாரங்கள் பெற்றுக்கொண்ட மரியாதையையே நீரும் உம்முடன் வந்திருக்கிற மலிக்குல் அஷ்ரபுரம் பெற்றுக் கொள்வீர்கள்! உஷார்!”

கட்கந்தாங்கிக்குக் கண்முன்னே உலகமெல்லாம் இருண்டு விட்டது. கலீஃபாவையும் தன்னையும் கலீஃபாவால் நியமனம் பெற்ற சுல்தான் மலிக்குல் அஷ்ரப் என்னும் மூஸாவையும் ஒரு பெண் இம்மாதிரி யெல்லாம் அவமரியாதையுடன் பேசுவதைக் கேட்கச் சகிக்காமல், தன்னுடைய வாளை யுருவிக்கொண்டு ஷஜருத்துர் மீது பாயப்போனான். சுல்தான் ஸாலிஹின் காலந்தொட்டு ஷஜருத்துர்ருக்குப் பாதுகாவலை அளித்து வருகிற ஹல்காக்கள் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாவா நிற்பார்கள்? உடனே சட்டென்று தாவிவீழ்ந்து, கட்கந்தாங்கியை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.

இந்தக் கண்ணராவியான காட்சிகளைக் காணச் சகியாமல் சுல்தான் முஈஜுத்தீன் தம்முடைய நேத்திரங்களை இறுக மூடிக்கொண்டார். தம்முடைய தலையோ, ஷஜருத்துர்ரின் சிரசோ வெட்டி யெறியப்படும்போது கண்களால் பார்க்கக்கூடாதென்பதற்காகவே அப்படிக் கண்களை மூடிக்கொண்டார்! ஆனால், கட்கந்தாங்கியை ஹல்காக்கள் பிடித்துக்கொண்டார்களென்று தெரிந்ததும், மீண்டும் மெல்லக் கண்திறந்து பார்த்தார்.

இம்மாதிரியான நிலைமை ஏற்படுவதாயிருந்தால், உடனே தனக்கு உதவிசெய்யப் பரிவாரங்கள் உள்ளே வரவேண்டுமென்று கட்டளையிட்டு வந்திருந்தபடியால், கட்கந்தாங்கி வெளிவாயிலை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.

“அங்கே ஒருவருமில்லை! உம்முடன் வந்த பரிவாரங்கள் எம்முடைய விருந்துணவைச் சாப்பிடப் போயிருக்கிறார்கள்! ஷஜருத்துர்ரை அவ்வளவு ஏமாந்த சோணகிரி யென்றா நீர் எண்ணிவிட்டீர்? – போகட்டும். இப்போதும் ஒன்றும் சீர்கெட்டு விடவில்லை. நீர் மறியாதையாய்த் திரும்பிப் போய்விடுவதாயிருந்தால், உங்களை யெல்லாரையும் நாம் விட்டுவிடுகிறோம். இன்றேல்….!” என்று ஷஜருத்துர் கோபாவேசமாகப் பரிகசித்தார்.

அரண்மனைக்குள் காலடியெடுத்து வைத்ததுமுதல் அன்று வரை அதிக உச்சத்துக்கு ஷஜருத்துர்ரை உயர்த்திக்கொண்டே வந்த நல்வாய்ப்பென்பது இப்போது தலைகீழாகத் திரும்பவேண்டுமென்று இறைவன் நாடியிருந்தான் என்பதை எவரே எதிர்பார்த்தார்?

அத்தாணி மண்டபத்துள் அதுபோழ்து குழுமி நின்ற அத்தனை அமீர்களும் வஜீர்களும் பிரதானிகளும் பிரமுகர்களும் இந்த நாடகத்தை மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்றாலும், வயிற்றெரிச்சற்காரர்களான புர்ஜீகள் இதுதான் தருணமென்று மூலைக்கொருவராக நின்று கொண்டு, கலக்கத்தையும் குழப்பத்தையும் கிளப்பிவிட்டு விட்டார்கள். எல்லாம் அமைதியாக இருக்கிறவரை சர்வமும் ஒழுங்காய்த்தான் நடக்கும். ஆனால், ஓடிக்கொண்டேயிருக்கிற சக்கரத்துக்குச் சிறு கடையாணி முறிந்துவிட்டாலோ?

“கலீஃபா அவர்கள் நியமித்தனுப்பியிருக்கும் ஐயூபி சுல்தானே எங்களுக்கு வேண்டும்!” என்று சில குரலொலிகள் எழுந்தன.

“ஐபக்கும் அவர் மனைவியும் எங்களுக்கு வேண்டாம்!” என்று பல குரல்கள் ஒளித்தன.

“இவளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்?”

“இவளை வீழ்த்துங்கள்! வெட்டி யெறியுங்கள்!”

“கலீஃபாவைப் பகைக்கிற காதகியைக் கழுவிலேற்றுங்கள்!”

“மாய சூனியக்காரி மந்திர மோசக்காரி; பொல்லாத கொள்ளைக்காரி; வீழ்த்துங்கள் இவளை! அமீருல் மூஃமினீனின் கட்டளையே எங்களுக்கு பிரதானம்! இவளைத் துருக்கி தேசத்துக்குத் துரத்துங்கள்! இவளால் நாம் பட்டபாடெல்லாம் போதும்!”

குழப்பமென்றால், அது சாதாரணக் குழப்பமன்று. முஸ்லிம் ஆட்சி மிஸ்ரிலே நிலைநாட்டப்பட்ட நாளாக அந்த அரண்மனையே அரசவையிற் கண்டிராத காட்சி நிலவியது. மூலைக்கொரு செருப்புப் பறந்தது. நாற்காலிகள் உடைந்தன; மேஜைகள் கவிழ்ந்தன. பஹ்ரீகளும் புர்ஜீகளும் சர்வ தாராளமாகக் கைகலந்து கொண்டார்கள். அடிதடிகள் சர்வ சாதாரணக் காட்சியாய்ப் போய்விட்டன. பல பேர் அலறிக்கொண்டே வெளியேறி ஓட்டம் பிடித்தார்கள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஐபக்கும் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஷஜருத்துர்ரும் கதி கலங்கிப் போனார்கள். அச்சத்தினால் ஐபக் மேனி குன்றினார்; ஏமாற்றத்தினால் ஷஜருத்துர் கலகலத்துப் போயினார். அரசவை மண்டபத்துள்ளே அல்லோல கல்லோலப்பட்டு நடக்கிற இக்கலகத்தை எப்படி நிறுத்துவதென்று ஒன்றுந் தோன்றாமல் விழித்தார் அந்த மாஜீ சுல்தானா. இன்னது செய்வதென்று ஒன்றும் புலனாகவில்லை. எதிர்பாராது திடீரென்று பூகம்பம் வந்துவிட்டால், மக்கள் எப்படி ஒருவர்மீ தொருவர் விழுந்தடித்துப் பாய்வரோ, அப்படியிருந்தது அத்தாணி மண்டபத்தில் நடந்த அல்லோல கல்லோலம்.

இம் மாதிரியான அசந்தர்ப்பத்தில தாம் அங்கே நிற்பது பேராபத்தென்று கண்டுகொண்ட ஷஜருத்துர் சில ஹல்காக்களின் உதவியை வைத்துக்கொண்டு அவசரம் அவசரமாகப் பின்புறமாய் அந்தபுறத்துல் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார். ஐபக்கோ, எழுந்திருக்கவும் சக்தியற்று, இன்னது செய்வதென்றும் புலனாகாமல், கற்சிலையேபோல் அங்கேயே நிலைத்துநின்று விட்டார்.

பஹ்ரீகளே பலமிக்கவர்களாதலால், புர்ஜீகளால் ஒன்றும் பிரமாதமாக செய்துவிட முடியவில்லை. எனினும், குழப்பம் நின்றபாடாயில்லை. கலீஃபாவின் கட்கந்தாங்கி இந்தக் கலக்கத்தில் என்ன செய்வதென்று தோன்றாமல் நின்று திகைத்துக் கொண்டிருந்தபொழுது, புர்ஜீ அமீரொருவர் அவனை யண்மிக்காதுகளில் ஏதோ குசுகுசுவென்று ஊதினார்.

மறுநிமிஷமே அக் கட்கந்தாங்கி சிம்மாசனத்தை அண்ணாந்துப் பார்த்தான். ஐபக் அமர்ந்திருந்த ஆசனத்துக்குப் பக்கத்தில் மற்றோர் ஆசனம் காலியாயிருந்ததை நோக்கினான். உடனே மூஸாவைப் பரபரவென இழுத்துக்கொண்டே சென்று, ஷஜருத்துர் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் அச்சிறுவனை ஏற்றி வைத்துவிட்டான்.

மின்சார விளக்குக்கு விசையைத் திருப்பி முறுக்கியதும் சட்டென்று வெளிச்சம் நிற்கிற வேகத்தில் அக்கலகம் டக் கென்று நின்றுவிட்டது. கட்கந்தாங்கி மேடைமீது நின்றபடியே, “சுல்தானுல் மலிக்குல் அஷ்ரப் மூஸா நீடூழி வாழ்க!” என்று உரக்கக் கத்தினான். எல்லா புர்ஜீகளும் உடனே “ஆமின்!” என்றார்கள். பஹ்ரீகள் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல், எல்லாரும் ஏககாலத்தில், “சுல்தானுல்; மலிக்குல் முஈஜ் ஐபக் நீடூழி வாழ்க!” என்று மாபெருங் கூக்குர லிட்டார்கள்.

எனவே, அரசவையில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் பரமதிருப்தியாக இரு சுல்தான்கள் தத்தம் அரியாசனத்திலே கம்பீரமாக வீற்றிருந்தார்கள். பஹ்ரீகளுக்குத் தங்கள் சுல்தான் வீழ்த்தப்படாததில் பரம திருப்தி ஏற்பட்டுவிட்டது. புர்ஜிகளுக்கோ, தாங்கள் விரும்பியபடி மலிக்குல் அஷ்ரபுரம் அமர்த்தப்பட்டதில் பூரணத் திருப்தி விளைந்துவிட்டது. கலீஃபாவின் கட்கந்தாங்கிக்கோ, தான் அமீருல் மூஃமினீன் கட்டளையை முற்றும் ஒழுங்காக நிறைவேற்றிவிட்டதாக மனச்சாந்தி ஏற்பட்டுவிட்டது.

முடிவாக, மிஸ்ரின் ஸல்தனத்திலே இரண்டு சுல்தான்கள் – ஒருவர் கலீஃபாவின் அனுமதி பெறாதவர்; மற்றொருவர் நியமனம் பெற்றவர் – வீற்றிருக்க வேண்டியதாக விதிவந்து முடிந்தது.

கலகத்தின் விளைவாகத் தம்முடைய தலைதப்பியதில் முஈஜுத்தீனுக்குப் பரம திருப்தியே ஏற்பட்டுவிட்டது. பக்கத்தில் ஷஜருத்துர் இல்லாததால், தைரியமும் பிறந்துவிட்டது. பஹ்ரீகள் தமக்கு வாழ்த்து கூறியதில் உற்சாகமும் வந்துவிட்டது. உடனே தம் ஆசனத்திலிருந்து எழுந்து பிரசங்கம் புரிய ஆரம்பித்தார்:-

“பொதுமக்களே! பிரதானிகளே! இன்று ஒரு நன்னாள் ஆகும். அமீருல் மூஃமினீன் அவர்கள் நியமித்தனுப்பி யிருக்கிற இந்த சுல்தான் மலிக்குல் அஷ்ரப் ஐயூபி வயதில் சிறுவராக இருந்தாலும், அறிவில் பெரியவரே. நீங்களெல்லீரும் இவரையும் சுல்தானாக ஏற்க விரும்புவதால், நாமொன்றும் தடுக்க விரும்பவில்லை. இந்த ஸல்தனத் ஐயூபிகளுக்குச் சொந்தமானதென்பதை நீங்கள் அறீவீர்கள். எனவே, ஓர் ஐயூபியை வரவேற்கிற விஷயத்தில், உங்களைப்போல எனக்கும் யாதொரு கிலேசமும் கிடையாது. எனினும், இவர் வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவராயிருப்பதால், நாமும் இவருடன் சேர்ந்தே நாட்டைக் காப்பாற்றுவதாக உறுதி பூண்டுவிட்டோம்! ஆண்டவன் எங்களிருவரையும் நேரான வழியில் சீராக நடாத்தி, இம் மிஸ்ருக்கு எங்களாலியன்ற உதவிகளைச் செய்வதற்குத் துணைபுரிவானாக!”

இந்தப் பேச்சைக் கேட்டதும், ஒருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கலீஃபாவின் கட்கந்தாங்கி இதுதான் சமயமென்று எல்லாரையும் அமைதியாயிருக்கச் சொல்லிப் பின்வருமாறு உபதேசம் விடுத்தான்:-

“ஏ, மிஸ்ரிகளே! அமீருல் மூஃமினீன் அவர்களுக்கு இந்த சுல்தான் முஈஜுத்தீன்மீது வெறுப்போ துவேஷமோ கிடையாது. ஷஜருத்துர் என்னும் மோசக்காரியை வீழ்த்த வேண்டும் என்பதொன்றேதான் கலீஃபாவின் குறிக்கோளாகும். மேலும், இந்த மலிக்குல் அஷ்ரபும் சுல்தானாக இருக்கவேண்டுமென்றே கலீஃபா விழைகின்றார். சற்றுமுன்னே சுல்தான் முஈஜ் கூறியதேபோல் அவரும் இவரும் சேர்ந்தே ஆட்சிபுரியலாம். ஆனால், அந்த ஷஜருத்துர்ரை மீண்டும் பதவிக்குக் கொண்டுவந்து விடாதீர்கள். நான் இப்போது பாக்தாதுக்குச் சென்று, நடந்த விவரங்களைத் தெரிவித்து, இந்த இரண்டு சுல்தான்களும் சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு கலீஃபா அவர்களை அனுமதிக்கச்செய்து விடுகிறேன். நீங்களெல்லீரும் இதுமுதல் ஒற்றுமையாயிருந்து, இவ்விரு சுல்தான்களையும் வைத்துக்கொண்டு க்ஷேமமா யிருந்துவரக் கடவீர்கள்! அரசாட்சியை ஒழுங்காக நடத்துவதற்கு நீங்களெல்லீரும் உதவி புரிவீர்களாக! இத்தனை நாட்களாக ஒரு பெண்பிள்ளையின் ஆட்சியினால் மாசடைந்து போய்க் கிடந்த மிஸ்ர் இந்த இரண்டு சுல்தான்களின் ஆட்சியைக்கொண்டு சுபிக்ஷமடையக் கடவதாக!”

உலக சரித்திரத்தில் நாம் அடிக்கடி காண நேரும் விசித்திரமான விந்தைகளுள், அன்று காஹிரா அரசவையில் நடந்த மாறுதலும் ஒன்றாகும். கலீஃபா நியமித்தனுப்பிய சுல்தானையும் கட்கந்தாங்கி பட்டத்தில் ஏற்றி வைத்து விட்டான். ஏற்கனவே ஷஜருத்துர்ரால் சுல்தானாக்கப்பட்ட முஈஜுத்தீனும் சுல்தானாகவே இருந்து வந்தார். கட்கந்தாங்கியின் சமயோசித புத்தியால், விபரீதமாகப்போய் முடிந்திருக்ககூடிய கலகமும் நின்று போனதுடன், எந்தக் காட்சிக்காரருக்கும் மனத்தாங்கலில்லாத முறையிலே இரு சுல்தான்களை அமர்த்திவைத்து, மத்தியஸ்தம் செய்துவிட்டார். சூழ்நிலை இருந்த அந்நெருக்கடியான நிலையில் ஒருவரும் ஒன்றும் பேசாது, இந்த வேடிக்கையான ஈரரசு ஏற்பாட்டை மௌனமாய் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

எனவே, கலீஃபா போட்டத் திட்டம் நிறைவேறி, ஷஜருத்துர்ரின் ஸ்தானம் காலி செய்யப்பட்டதுடன், அங்கே ஐயூபிச் சிறுவாகிய மூஸாவும் சுல்தானுல் மலிக்குல் அஷ்ரப் என்னும் நாமத்துடனே அமர்த்தப்பட்டுவிட்டார். அன்று முதல் மிஸ்ரை இரு சுல்தான்கள் சேர்ந்து ஆட்சி செலுத்த நேர்ந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment