மிகவும் பயங்கரமான முறையிலே தம் கண்ணெதிரில் படுகொலை புரியப்பட்ட முஈஜுத்தீனின் உடலிலிருந்து உயிர்பிரிந்து சென்ற கோரக் காட்சியைக் கண்ணாற் காண நேர்ந்த சுல்தானா ஷஜருத்துர் மூர்ச்சை தெளிந்து கண்விழித்ததும்,

மீண்டும் அக் கண்களை இறுக மூடிக்கொண்டார். எதிரில் நின்ற ஒவ்வோர் உருவமமும் ஒவ்வொரு முஈஜுத்தீனாகவே ஷஜரின் கண்களுக்குக் காட்சியளித்தது. சற்று முன்னர் நிகழ்ந்த வைபவம் நிழல் போன்ற வெறுங் கனவா அல்லது நிஜமாய் நடந்த அகோர நனாக் காட்சியா என்பதே அவருடைய மூளைக்கு எட்டவில்லை. தூரான்ஷா முன்பொரு முறை பரிதாபகரமாய்ப் படுகொலை புரியப்பட்ட காட்சியையாவது அந்த சுல்தானா நேரில் பார்க்க வேண்டிய தோஷமில்லாமற் போய்விட்டது; ஆனால் இந்த உள்ளங் கொதிக்கிற, உடலங் குலுக்குகிற, அக்கிரமமான, அநியாயமான, வேண்டுமென்றே புரியப்பட்ட பொல்லாத படுகொலையை அவர் தம் கண்ணாலே காண நேர்ந்துவிட்டது! நெஞ்செலாம் ‘திக் திக்’கென்றும், ‘பட் பட்’டென்றும், ‘லபக் லபக்’கென்றும் வரம்பு கடந்து அடித்துக் கொண்டிருந்தது. மேலெல்லாம் வேர்த்தது; மேனியெல்லாம் நடுங்கிற்று.“கொலை சுற்றும்!”என்பார்களே, அப்படியே இருந்தது, அவர் நிலைமை.

அந்தப்புரத்துத் தோழியரும், வேறு பெரிய பெண் உத்தியோகஸ்தர்களும், சுல்தானா படுத்துக் கிடக்கிற மாதிரியைக் கேள்வியுற்றுப் பீதியடைந்து, ஓடிப்போய்ப் பார்த்தார்கள். பித்துக்கொள்ளியே போல் மிரளமிரள விழுத்துக்கொண்டிருந்த ராணியைக் கண்டவர்கள், “ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டது போலிருக்கிறதே! கூப்பிடுங்கள் நம் அரண்மனை ஹக்கீமை!” என்று ஆர்ப்பரித்தார்கள்.

ஆங்குச் சூழ்ந்து நின்ற அத்தனைபேரும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்ப்பதும், எல்லாரும் சேர்ந்து சுல்தானாவைப் பார்ப்பதுமாக நின்றனர். ஷஜருத்துர்ரோ, நிமிஷத்துக்கொரு முறை கண்திறப்பதும், உடனே திறந்த வேகத்தில் அக்கண்களை மூடிக்கொள்ளவதுமாக நீட்டிப் படுத்துக் கிடந்தார்.

இரண்டொரு நிமிடங்களில் அரண்மனை ஹக்கீமும் அவருடன் கூடவே எல்லா மந்திரி பிரதானிகளும் சேனைத் தலைவர் ருக்னுத்தீனும் விழுந்தடித்துக்கொண்டு ஓடோடிவந்து அங்கே நின்றார்கள். அந்தப்புரமெங்குமே மிகவும் அமைதியான பயங்கர நிச்சப்தம் நிலவியிருந்தது. எனினும், ஒவ்வொருவரின் நெஞ்சமும் அலைமோதிக் கொண்டுதானிருந்தது.

பேச்சுமூச்சின்றி, விழித்த விழி விழித்தபடியே இருக்க, பயங்கரமான தோற்றத்துடன் நெட்டணைமீது நீட்டிக் கிடந்த ஷஜருத்துர்ரைக் கண்ட ஹக்கீம் உடனே நாடியைப் பற்றிப் பிடித்துப் பார்த்தார். அங்குக் குழுமி நின்ற அத்தனைபேரும் ஹக்கீமின் வதனத்தையே சொல்ல முடியா ஆவலுடனே கூர்ந்து நோட்டமிட்டார்கள். ஹக்கீம் மெதுவாகத் தலையசைத்துக்கொண்டார்.

“வேறொன்றுமில்லை! ஏதோ ஒருவித அதிர்ச்சியின் காரணமாக சுல்தானாவின் பித்தப்பையில் நீர்சுரந்து, அது தலைக்கேறி நிற்கிறது; கொஞ்சம் இரத்தக் கொதிப்பும் இருக்கிறது. எல்லாம் ஒரேவேளை இஞ்சிப் பஸ்பத்தால் இறங்கிவிடும்!” என்று சொல்லிக் கொண்டே, தம் இடுப்பில் கட்டியிருந்த மருந்துப் பெட்டியை அவசரமாய்த் திறந்து, அந்த இஞ்சிப் பஸ்பத்தைக் கொஞ்சம் தேனில் கலக்கி, சுல்தானாவின் நாவில் தடவினார் இலேசாக.

“மலிக்கா ஸாஹிபாவுடன் எவரும் பேசக்கூடாது! இரண்டு நாட்களுக்குப் பூரண ஓய்வு கொடுத்துவிட வேண்டும்! இங்கே யாரும் வீணே கூட்டம் கூடிக்கொண்டு சுல்தானா ஸாஹிபாவுக்குச் சங்கடம் விளைக்ககக்கூடாது! நன்னாரி ஷர்பத்தையும் எலுமிச்சம்பழ ரசத்தையும் மட்டுமே குடிப்பாட்ட வேண்டும். நான் கொடுக்கிறதைத் தவிர வேறெவ்வித ஆகாரத்தையும் ஊட்டக்கூடாது. ஒருவர் மாற்றி ஒருவர் பக்கத்தில் ஆலவட்டம் வீசிக்கொண்டே இருக்கவேண்டும். அரசாங்க சம்பந்தமாயிருந்தாலும், வேறெந்தத் தலைபோகிற அவசரமாயிருந்தாலும், எவருமே என் உத்தரவில்லாமல் மலிக்காவை அண்மிவிடக் கூடாது. மூளையில் ஓடுகிற இரத்த நாளங்கள் உதிரப்பெருக்கால் திமிர்த்துப்போயிருக்கின்றன. கொதிப்புத் தணிவுதற்குள் ஏதாவது மிகச் சிறு கலக்கத்தை இவருக்குக் கொடுத்து விட்டாலும், உதிர நாளம் வெடித்து உயிர் நீங்கிவிடக் கூடும்! இவருக்கு இந்த வயதில் வரக்கூடிய வியாதியல்ல இது!” என்று சரமாரியான கட்டளைகளை இட்டார் சுல்தானாவின் ஹக்கீம் ஸாஹிப்.

ஜாஹிர் ருக்னுத்தீனையும் நாலைந்து பெண்ணடிமைகளையும் ஹக்கிமையும் தவிர்த்து, ஏனைப் பேர்வழிகளெல்லாரும் ஒருவர்பின் ஒருவராய் வெளியேறிச் சென்றுவிட்டார்கள். சுல்தானா ஸாஹிபாவோ, விழித்த நிலையிலுமில்லாமல், உறக்க நிலைமையையும் அடையாமல், பிரக்ஞை தவறிய மாதிரியிலும் இல்லாமல், எல்லா உணர்ச்சிகளுடனும் இருக்கிற வகையிலும் சேராமல், மந்திரத்தால் கட்டுண்ட பதுமையேபோல் படுத்திருந்தார். பக்கத்தில் நடப்பவற்றைப் பார்க்கிறார்; ஆனால், பேச முடியவில்லை. அவர்களெல்லாரும் பேசுவதைக் கேட்கிறார். ஆனால், சிந்திக்க முடியவில்லை. சுவாசித்துக் கொண்டிருக்கிறார்; ஆனால், உயிருடனிருப்பதாக உணர முடியவில்லை.

ஹம்மாமிலே அக் கொலைஞர்கள் கரத்திலே சிக்கிக்கொண்டு பரிதாபகரமாய்க் காட்சியளித்த ‘மொட்டை மூஞ்சி’ முஈஜுத்தீனின் உருவம் மட்டுமே திரும்பத் திரும்பத் தோன்றி, அவரை மிரட்டிக்கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டால்தான் அப்பயங்கரக் காட்சிவந்து நிற்கிறதென்று எண்ணிக்கொண்டு கண்களைத் திறந்து பார்த்தாலோ, பக்கத்தில் நிற்பவர்கள் அத்தனைபேரும் அத்தனை கொலைகாரர்களாகவும் முஈஜுத்தீன்களாகவுமே தோற்றமளிக்கிறார்கள். எனவே, திறந்த வேகத்தைவிட அதிகமான வேகத்திலே கண்ணிமைகளை மூடிக்கொண்டார் மகாராணி ஷஜருத்துர்.

ருக்னுத்தீன் மட்டும் விஷயத்தை ஒருவாறு யூகித்துக் கொண்டார். மலை கலங்கினாலும் மனங் கலங்காத சுல்தானா தங் கணவர் கொலையுண்டதை யுன்னியே இப்படிப்பட்ட பேரதிர்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று அவர் உணர்ந்தார். என்னெனின், அந்த ஐந்து கொலைஞர்களும் தங்கள் வேலையை முடித்துவிட்டு, ஹம்மாமில் நிகழ்ந்த அத்தனை அசம்பவங்களையும் ருக்னுத்தீனிடம் தெரிவித்துவிட்டிருந்தார்கள்.

உயிரிழந்த ஓருடலைப் பல நாட்கள் வரை அதிசாமர்த்தியமாய் முன்னமொரு முறை காப்பாற்றிய ஆத்ம சக்திமிக்க அதே ஷஜருத்துர், உயிருள்ள மற்றோருடலைக் காப்பாற்ற மடியாமற் போய்விட்ட அசக்தியை நினைந்து நினைந்து சிந்தை குலைந்து, விழிப்புக்கும் மூர்ச்சைக்கும் இடை நடுவே ஊசலாடிக் கொண்டிருந்தமையால், களைப்புற்று மயக்குற்று, ஆழிய தூக்கத்துள் மூழ்கிவிட்டார்.

அதே சமயத்தில் புர்ஜீ மம்லூக்குகள் தங்கியிருந்த காஹிரா நகர்க் கோட்டைக்குள்ளே ஒவ்வொருவரும் குசுகுசு வென்று சுல்தானா ஷஜருத்துர் திடீரென்று வியாதியுற்று விட்டதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தங்கள் தலைவர் ஃபக்ருத்தீனைத் திடீரென்று பறிகொடுத்தது எவ்வளவு பெரிய அதிசயமாயிருந்ததோ, அவ்வளவு பெரிய அதிசயமாயிருந்தது, முஈஜுத்தீன் திடீரென்று காணாமற் போய் விட்டாரென்று அவர்கள் கேள்விப்பட்டது. இப்பொழுது அவர்கள் சுல்தானாவின் உடல் நலமின்மையைப்பற்றித் திடீரென்று கேள்விப்பட்டது எல்லாவற்றையும் விடப் பெரிய அதிசயமாய்க் காணப்பட்டது. இப்படித் திடிர் திடீரென்று அதிசயமான விஷயங்களைக் கண்டும் கேட்டும் வந்த புர்ஜீகளுக்கு உள் மர்மம் ஒன்றுமே புரியவில்லை. ஃபக்ருத்தீன் சுல்தானாவுக்கு விஷமிடுவதற்காக முஈஜுத்தீனுடன் இரகசியமாய்ச் சதிசெய்த வரலாறோ, அச் சதி சுல்தானாவுக்குத் தெரிந்து அவ் விஷத்தைக் கொண்டே ஃபக்ருத்தினைக் கொன்றொழித்த விவரமோ, அதனையடுத்து முஈஜுத்தீன் பயந்து வெளியேறிய கதையோ, அவர் மீண்டும் அரண்மனைக்குள் இரகசியமாகத் திரும்பிவந்த மர்மமோ ஒரு புர்ஜீக்கும் தெரியமாட்டாது. எனினும், அந்த மம்லூக்குகளுக்கும் அவர்களுடைய தலைவர்களுக்கும் ஏதோ ஒரு விதமான சந்தேகம் ஜனிக்க அரம்பித்தது.

ஃபக்ருத்தீனின் அகால மரணமும் அதனையடுத்து முஈஜுத்தின் மாயமாய் மறைந்ததும் சுல்தானா அவரைத் தேடிப் பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அந்த புர்ஜீகளின் ஐயத்தை உறுதிப்படுத்தின. ஆதிமுதலே முஈஜுத்தீன் புர்ஜீகளின் நண்பர் என்பதற்காக சுல்தானாவின் பெருங் கோபத்திற்கு ஆளாகியிருந்தார் என்பதையும் அவர்கள் நன்கறிவார்களாதலால், ஒரு சம்வத்துக்கும் மற்றொரு சம்பவத்துக்கும் தொடர்பேற்படுத்தி, ஏதேதோ சிந்தித்துக்கொண் டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு புர்ஜீ மம்லூக் வேகமாய் அக்கோட்டைக்குள் வந்து நுழைந்தான். அவன் வந்த விரைவையும் அவன் வதனம் காணப்பட்ட தோற்றத்தையும் அங்குக் குழுமி நின்றோர் பேரதிசயத்துடனே கூர்ந்து நோக்கினர். அவன் அக் கோட்டையின் நடுக்கூடத்திலே கம்பீரமாய் நின்றுகொண்டு, எல்லா புர்ஜீ மம்லூக்குகளையும் ஒருங்கழைத்து நிறுத்தி, “ஏ, என் தோழர்காள்! சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் மாறுவேஷம் பூண்டு கெஜேயில் தங்கியிருந்தாராம். இன்று காலைதான் அவரை, அரண்மனைச் சேவகன் அப்துல்லா என்பவன் கையோடு அழைத்துக்கொண்டு வந்தானாம். அவர்கள் நீலநதியைக் கடந்ததாகக் கூடத் துப்புத் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன் நான். எனவே, இப்பொழுது நம்முடைய சுல்தான் இந்த அரண்மனைக்குள்ளேதான் தங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், சுல்தானா ஷஜருத்துர் அவரை என்ன மாதிரி நடத்தப் போகிறாரோ என்பதுதான் தெரியவில்லை. எனக்கென்னவோ எல்லாம் மர்மமாகவும் பயங்கரமாகவுமே தோன்றுகின்றன!” என்று கைகளைப் பிசைந்துகொண்டு கூறினான்.

“என்ன, சுல்தான் அரன்மனைக்கு வந்துவிட்டாரா? நிஜமாகவா!”என்று எல்லா புர்ஜீகளும் ஏககாலத்தில் வியப்புடனே வினவினார்கள்.

“ஆம்! நிஜமாகத்தான்! சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் இப்பொழுது இந்தக் காஹிராவின் அரண்மனைக்குத்தான் வந்திருக்கிறார். ஆனால், என்ன தீர்மானத்தின் மீது வந்தார்? ஏன் வந்தார்? என்பன போன்ற விவரங்கள் மட்டுமே தெரியவில்லை. ஒருகால் நாளைப்பொழுது விடிந்தால்தான் எல்லாம் வெளிவரும் போல் தோன்றுகிறது!”

“சுல்தானா கடுமையான வியாதியாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடப்பதாகவல்லவோ நாங்கள் கேள்விப்பட்டோம்! சுல்தானை மீண்டும் கண்டதும் ஷஜருத்துர்ருக்கு ஜுரம் வந்து விட்டதோ?” என்று சில யோசனைக்கார புர்ஜீகள் கூறினார்கள்.

இவ்விதமாகவெல்லாம் புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே ஓவ்வொரு மம்லூக்கும் தத்தம் மனம்போன விதமாகவெல்லாம் அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். மாயமாய் மறைந்த முஈஜுத்தீன் திடுமென மீண்டும் திரும்பிவந்துவிட்ட செய்தியும், சுல்தானா ஏன் வியாதியுற்றாரென்ற செய்தியும் முரண்பட்டவையாகக் காணப்பட்டமையால், அவர்கள் ஒன்றும் புரியாது திகைத்தார்கள்.

அன்று பொழுது இவ்விதமாகக் கழிந்தது.

ஆனால், அந்தப்புரத்திலே மயக்கந் தெளியாமல் குற்றுயிராய்க் கிடந்த சுல்தானா ஷஜருத்துர்ருக்கும் அவருடைய பக்கத்திலேயே அசையாமல் குந்தியிருந்த ஜாஹிர் ருக்னுத்தீனுக்கும் இப்பூவுலகம் முழுதுமே அகன்ற அக்கினி நரகலோகமாகத் தோன்றிற்று. இந்தக் காஹிரா அரண்மனைக்குள்ளே தொன்றுதொட்டு இன்றுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான படுகொலைகள் – முஈஜுத்தீன் கொல்லப்பட்டதை விட அதிக பரிதாபகரமான அக்கிரமமிக்க கொடுங்கொலைகள் – புரியப்பட்டிருக்கின்றன. எத்தனையோ சிற்றரசர்களின் உடல்களும் பேரரசர்களின் மேனிகளும் இரகசியமாய்ப் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த முஈஜுத்தீனின் படுகொலை மட்டும் வழக்கத்துக்கு விரோதமாக விசேஷப் பரபரப்பை ருக்னுத்தீனின் நெஞ்சத்துள்ளும் சுல்தானாவின் உள்ளத்துள்ளும் உண்டுபண்ணி விட்டது. தம்முழந்தாளில் முழங்கைகளை ஊன்றிய இருகையாலும் தந்தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு ருக்னுத்தீன் ஏதேதோ சிந்திக்கலாயினார்.

சுல்தானா செயலற்றுக் கிடந்தமையால், சிந்திக்க வேண்டியதும், அச் சிந்தனையின்படி நடக்க வேண்டியதும் ருக்னுத்தீனையே சார்ந்துவிட்டன. ஷஜருத்துர் அளவுமீறிப் பயந்து போய்விட்டாராதலால், கிலிபிடித்துப் பேரவதியுறுகிறார் என்பதை ஜாஹிர் கண்டுகொண்டார். மிகவும் முன்னெச்சரிக்கையுடனும் பெரிய தற்காப்புடனும் விசித்திரமான திட்டங்களை வகுத்துக் கொண்டு பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதித்து முடிக்கவேண்டிய இச் சந்தர்ப்பத்திலே சுல்தானா நீட்டிப் படுத்துக்கொண்டு எல்லாவற்றையும் கெடுத்துக் கொண்டு விடுவார் போலிருக்கிறதே! என்று பெருங் கவலையுடன் சிந்தித்தார். நள்ளிரவு கடந்துவிட்டதெனினும், ருக்னுத்தீன் ஷஜருத்துர்ரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே இன்னம் குந்தியிருந்தார். அதுவரை அசையாமல் படுத்திருந்த சுல்தானா சற்றே ஒருபுறம் திரும்பிப் படுத்து, விழித்து, ருக்னுத்தீனை உற்று நோக்கினார்.

யா மலிக்கா! தங்கள் உடம்பு எப்படியிருக்கிறது?” என்று மிருதுவாய் வினவினார் ருக்னுத்தீன்.

“ருக்னுத்தீன்! நான் என்ன செய்வேன்? என் உடலெல்லாம் நடுங்குகிறதே! உள்ளமெல்லாம் பதறுகிறதே! என் செய்வேன், என் செய்வேன்?” என்று அலறித் துடித்தார் ஷஜருத்துர். பட்டப்பகலில் படுகொலை என்றால் லேசா, என்ன? அதுவும் முஈஜுத்தீன் கொல்லப்பட்ட மாதிரியில் படுகொலை புரியப்படுவதென்றால், அதனை நேரிலே பார்ப்பதென்றால், எவருடைய உள்ளந்தான் துள்ளாது? துடிக்காது?

“யா ஸாஹிபா! தாங்களே தைரியத்தை இழந்து விட்டீர்களே! இந்த மாதிரியாகச் செயலற்றுப் படுத்திருக்க வேண்டிய நேரமா இது? தக்க தருணத்தில் இப்படி மனமுடைந்து மெய் சோர்ந்து விட்டீர்களே!”

“ஜாஹிர்! நீர் என்ன உளறுகிறீர்? – என் பர்த்தா முஈஜுத்தீன் எங்கே? – ஆ, அதோ நிற்கிறார்! அவரை விட்டு விடுங்ஙகள்! – அவரைக் கொல்லாதீர்கள், கொல்லாதீர்கள்!”

ருக்னுத்தீன் உற்று நோக்கினார்; ஷஜருத்துர்ருக்கு அறிவு தடுமாறி விட்டதா? என்று சந்தேகிக்கத் தொடங்கினார்.

“யா ஸாஹிபா! சற்றே மனநிம்மதியாய் இருங்கள். ஏன் இப்படிப் பதஷ்ட மடைகிறிர்கள்? என்னைப் பாருங்கள்!”

ஷஜருத்துர் அகலமாய்க் கண்ணைத் திறந்து ருக்னுத்தினை வெறிக்கப் பார்த்தார். அந்த சுல்தானாவின் வதனம் மிகவும் அகோரமாய்க் காட்சியளித்தது.

“ஜாஹிர்! நான் ஏன் இந்த அவஸ்தையெல்லாம் படுகிறேன்?” என்று ஏக்கத்துடன் வினவினார்.

“யா மலிக்கா கடுகளவும் கலங்காத திடசித்தம் படைக்கப்பெற்ற தாங்கள் வீணே தங்கள் மூளையைக் குழப்பிக் கொள்கிறீர்களே! இதுபோது என்ன ஆபத்து வந்து விட்டது? தாங்கள் ஏன் வீணே சிந்தை குலைய வேண்டும்? தங்களுயிரைக் கவரச் சதி செய்த கயவனின்மீது சரியான விதத்தில் பழி தீர்த்துக் கொண்ட தாங்கள் எதற்காக அவதிப்பட வேண்டும்? – யா சுல்தானா! என்னைப் பாருங்கள்! நாங்கள் – பஹ்ரீகளாகிய நாங்கள், உயிருடன் இருக்கிறமட்டும் தாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும்? வெறும் நிழலைக் கண்டு தாங்கள் எப்போதாவது சிறிதாவது மனந் துளங்கியதுண்டா? இப்பொழுது ஏன் இப்படி வீணே எல்லாவற்றையும் கழப்பிக் குழப்பி விடுகிறீர்கள்? தாங்களே இப்படித் தக்க தருணத்தில் மெய்சோர்ந்து மனந்தடுமாறினால், இந்த ஸல்தனத்தின் கதி என்னாவது?”

ஏ, ஸாஹிபா! எழுந்து அமருங்கள், தைரியத்தைக் கைவிடாதீர்கள்! லூயீயையே திரணமாய் மதித்த தாங்களா இப்பொழுது இப்படியெல்லாம் அநியாயமாகவும் அனாவசியமாகவும் வீண் குழப்பமுறுகிறீர்கள்? – புர்ஜீகள் எங்கே இடுக்குக் கிடைக்குமென்று ஏங்கிக் கிடக்கிறார்கள். நாம் முஈஜுத்தீன் மீது பழிவாங்கிக் கொண்டது வேறு எவருக்குமே தெரியாதென்றாலும், தாங்கள் இப்படித் திடீரென்று படுத்த படுக்கையாய் நீட்டிக் கிடப்பதும், அவ்வப்போது ஏதேதோ உளறுவதும் தங்களையே காட்டிக் கொடுத்துவிடும்போல் இருக்கின்றனவே.- ஏ, ஸாஹிபா! இதோ பாருங்கள்! மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்! தங்கள் மீது பழிவாங்குவதற்குப் பல எதிரிகள் காத்துக் கிடக்கிறார்கள். சற்றே அஜாக்கிரதையாயிருப்பின், தங்கள் திட்டமெல்லாம் கெட்டுக் குட்டுச்சுவராய் விடலாம்!”

ஷஜருத்துர் திருதிருவென்று விழித்தார். அவர் கண்ணெதிரிலே அக் கோரக்காட்சி இன்னமும் மங்காமலே நின்று கொண்டிருந்தது. கண்களைச் சிம்புளித்துக் கொண்டார். பார்க்கப் பயமாயிருந்தது.

“என்ன, எதிரிகளா?”என்று கேட்டார்.

“யா மலிக்கா! தாங்கள் இப்படிச் சிந்தை குலையாதீர்கள்; தைரியமாயிருங்கள். புர்ஜீகளும், தலாக்குப் பெற்ற மைமூனாவும் அவளுடைய தந்தையும் தாங்கள் எப்போது சிக்குவீர்களென்று தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற முறை தாங்கள் புர்ஜீகளிடமிருந்து இந்த ஸல்தனத்தைக் காப்பாற்றுவதற்காகப் பட்ட பாடுகளைவிட, இம்முறை தாங்கள் சற்றே அதிகமான தியாகமும் உழைப்பும் மேற்கொள்ளாவிட்டால், தாங்கள் இந்த ஸல்தனத்தையும் இழந்துவிடுவீர்கள்! தங்கள் ஆருயிருங்கூட அபாயத்தில் சிக்க நேரும். யா மலிக்கா; எழுங்கள்! இக்கணமே திட்டமிடுங்கள். அடியேன் உதவிபுரிய எந்நேரமும் காத்திருக்கிறேன். புர்ஜீகளை நாம் இப்பொழுதே ஏமாற்றியாகவேண்டும். முஈஜுத்தீன் மாண்ட செய்தியை அவர்கள் கொஞ்சமும் யூகிக்க முடியாமல் செய்ய வேண்டும். கொலை வெளிப்பட்டுவிடும் என்பதைப் பொய்ப்படுத்த வேண்டும்.”

ஷஜருத்துர் பேசாமலே மெளனமாயிருந்தார். அவருடைய மூளை மிகவும் மெதுவாக வேலை செய்தது.

“ஏ, ருக்னுத்தீன்! என்ன செய்ய வேண்டும் என்று நீர் கூறுகிறீர்? எல்லாவற்றையும் நீரே விளக்கமாகச் சொல்லும்; என் மூளை இப்பொழுது வேலைசெய்ய மறுக்கிறது!”

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! தாங்களும் அடியேனும் சென்ற பல ஆண்டுகளாக இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற சேவைகளும் தியாகங்களும் அபாரமானவையே என்றாலும், இப்பொழுது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மீன் பிடிக்கிற தடாகத்துக்கு மேலே வட்டமிடுகிற பருந்துகளே போல், ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றத்தைப் பெற்று வந்திருக்கிற புர்ஜீகள் இப்பொழுது தங்கள்மீதும் என்மீதும் வட்டஞ் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ் அரண்மளை எல்லாங்கூட அந்தப் பொல்லாத மம்லூக்குகளால் உளவறியப்பட்டே வருகிறது. முஈஜுத்தீன் இங்கு இரகசியமாய்க் கொணரப்பட்ட மர்மம் அந்த புர்ஜீகளுக்கு இதுவரை தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டிருந்தால், நம்முடைய பாடு ஆபத்துத்தான். எனவே, நாம் எதற்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தங்களுடைய உள்ளத்தைத் தேற்றித் கொண்டு, ஒன்றும் நடவாததேபோல் கலக்கமற்ற தோற்றத்துடனே வீற்றிருக்க வேண்டும், ஸாஹிபா! மூமிய்யாவைவிடத் தங்கள் திடசித்தமும் கலக்கமற்ற வதனமுமே சென்றமுறை இந்த ஸல்தனத்தை புர்ஜீகளிடமிருந்து காப்பாற்றியதென்பதைத் தாங்கள் மறந்தா விட்டீர்கள்? மனோ தைர்யம் என்பது ஒன்று மட்டும் உலகத்தில் சாதிக்க முடியாததையெல்லாம் சாதித்துக்காட்ட முடியுமென்பதைத் தாங்களே நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். சுல்தான் ஸாலிஹ் மாண்ட செய்தியைத் தாங்கள் மறைப்பதற்குக் கடைப்பிடித்த மாபெரும் தைரியம் இப்பொழுது முஈஜுத்தீனின் கொலையை மறைக்க ஏன் முற்படவில்லை? முன்னம் ஸாலிஹின் மரணம் வெளிப்பட்டிருந்தால், தங்களுயிர் போயிருக்காது. ஆனால், இப்பொழுது விஷயம் வெளிப்பட்டு விட்டால், புர்ஜீகள் தங்களை லேசில் விடமாட்டார்களே!”

ஷஜருத்துர்ருக்கு இப்பொழுது சிறிது சிந்தைத் தெளிவு ஏற்பட்டது. எனவே, ஒருவாறு சிந்திக்கத் துவக்கினார் சிந்திக்கச் சிந்திக்கத் தைரியம் பிறப்பதற்கு மாறாகப் பயம் வந்து கவ்விக் கொண்டது.

“ஜாஹிர்! எனக்குப் பயமாயிருக்கிறதே! என் மனம் சஞ்சலப் படுகிறதே! நான் என் செய்யட்டும்?” என்று நாக்குழறப் பேசினார்.

“யா ஸாஹிபா! என்ன, பயமாயிருக்கிறதா? ரிதா பிரான்ஸையும் அவனுடைய லக்ஷக்கணக்கான படைப் பலத்தையும் கண்டு கொஞ்சமும் நெஞ்சமஞ்சாத தாங்களா இப்படிக் கூறுகிறீர்கள்? – அப்படி அஞ்சுவதற்கு என்ன பயங்கர காரியம் நடந்துவிட்டது? – தாங்கள் என்ன தவறு இழைத்துவிட்டீர்கள்? முஈஜுத்தீன் செய்த தீமைகளுக்கு அவன் தக்க தண்டனையைப் பெற்றுக் கொண்டான். அவ்வளவுதானே? இதற்காக மிஸ்ரின் சுல்தானா ஏன் பயப்பட வேண்டும்? – எனக்கொன்றுமே புரியவில்லையே, மலிக்கா!”

“ருக்னுத்தீன்! அப்படியானால், நாம் முஈஜுத்தீன் மீது எடுத்த நடவடிக்கை நியாயமானதென்றா…?”

“முற்றிலும் நியாயமானதேதான், மலிக்கா! அதுதான் செங்கோல் முறையும். நாம் என்ன, ஒரு நிரபராதியின் உயிரையா அநியாயமாய்ப் போக்கிவிட்டோம்? ஒரு குற்றமும் இழைக்காதவனையா அகாரணமாய்க் கொன்றுவிட்டோம்? மிஸ்ரின் சுல்தானா நேர்மை தவறி அநீதியிழைத்து விட்டார் என்னும் அவச்சொல்லுக்கு இலக்காகக் கூடிய பாவத்தையா புரிந்து விட்டோம்? – இல்லையே! பிறகேன் தாங்கள் துயரப்பட வேண்டும்? அல்லது அதைரியமடைய வேண்டும்?”

ஷஜருத்துர் சற்றே சிந்தித்தார்.

“முஈஜுத்தீன் இங்கு வந்து சேர்ந்த செய்தி புர்ஜீகளுக்கு எட்டியிருந்தால், என் செய்வது?” என்று திடுக்கென்று வினவினார் சுல்தானா.

“யா சுல்தானா! நாம் இரகசியமான பேழைக்குள்ளே போட்டு மூடியா முஈஜுத்தீனை இங்குக் கொணர்ந்தோம்? ஒரு மனிதன் நடந்து செல்வதை எத்தனையோ மனிதர்கள் பார்க்கிறார்கள். அஃதேபோல், முஈஜுத்தீனை வேறொருவர் கவனித்துமிருக்கலாம் அல்லவா?”

“அப்படியானால், நாளையொருகால் எல்லா புர்ஜீகளும் சேர்ந்துகொண்டு, குழப்பம் விளைத்து, முஈஜுத்தீன் எங்கே? என்று கேட்டால்?”

“யா ஸாஹிபா! எல்லாம் தெரிந்த தங்களுக்கா யான் இத அற்பப் பிரச்சினைக்கு வழிசொல்லித் தரவேண்டும்? மூமிய்யாவாக்கப்பட்ட ஸாலிஹ் அரசக் கட்டளையை வெளியிடுமாறு செய்த தாங்கள் முஈஜுத்தீனைப் பற்றியா மற்றொரு விசே­ அறிக்கையை வெளியிட முடியாது?”

“நீர் என்ன சொல்லுகிறீர்!”

“வேறொன்றுமில்லை, ஸாஹிபா! முஈஜுத்தீன் நெடுநாட்களாக வியாதியுற்றிருந்ததாகவும் எங்கோ கண்காணாத ஊரில் தேக வியோகமாகி விட்டதாகத் தங்களுக்குச் செய்தி எட்டியிருப்பதாகவும் மாஜீ சுல்தான் மரணமடைந்த காரணத்தினால் அரசாங்கத்துக்கு ஒரு வாரம் ஓய்வு என்பதாகவும் ஓர் அறிக்கையை வெளியிடுங்கள். மீதியை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம். முஈஜுத்தீன் – அதிலும் மிஸ்ரிகளால் வெகு காலத்துக்கு முன்னரே மறக்கப்பட்ட முஈஜுத்தின் எங்கோ கண்காணாத பிரதேசத்தில் உயிர் நீத்துவிட்டார் என்பதற்காக யார் கவலைப்படப் போகிறார்? எவனேனும் புர்ஜீயொருவன் அந்த ஐபக் இந்த அரண்மனைக்குள் வந்து நுழைந்ததைப் பார்த்திருந்தாலும், முதலாவதாக அந்தத் தாடியிழந்த மாஜீ மன்னரை அடையாளங் கண்டு பிடித்திருக்க மாட்டான். இரண்டாவதாக, வெளியே தைரியமாய்ச் சொல்ல மனந்துணிய மாட்டான். இறுதியாக, முஈஜுத்தீன் நெடுநாட்களுக்கு முன்னரே காஹிராவைவிட்டு வெளியேறிவிட்டார் என்பதைச் சற்றேறக் குறைய எல்லா மக்களுமே அறிவாராதலால், தங்கள் அறிக்கையைச் சந்தேகிக்க மார்க்கமில்லை.”

“ஆகவே, அவர் தாடி களைந்திருந்தது நமக்கு உதவி புரியத்தான் போலும்!”

“ஆம், அரசி! தாங்கள் வீணே காலந் தாழ்த்தாதீர்கள்.”

ஷஜருத்துர் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. சற்று நேரம் சென்றதும், கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாய் யோசித்தார். ருக்னுத்தீன் மெல்ல எழுந்து சென்று, ஒரு நாணற் பேனாவையும், கடுதாசியையும், மைக்கூட்டையும் எடுத்துவந்தார்.

சற்று நேரத்தில் ஓர் அறிக்கை – அரசாங்கத்து விசே­ஷ அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுல்தானாவின் கையொப்பமும் இடப்பட்டுவிட்டது. அவ் வறிக்கையை எங்கும் பிரகடனப் படுத்துவதற்காக ருக்னுத்தீன் அங்கிருந்து எழுந்து சென்றதும், ஷஜருத்துர் இழுத்துப் போர்த்துக்கொண்டு சற்று நிம்மதியாய்க் கண்ணயர்ந்தார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. காஹிரா நகரெங்குமே சுல்தானாவின் அறிக்கை – முஈஜீத்தீனின் அகாலமரணம் சம்பந்தமான பொய்யறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டபடியால், தூங்கி விழித்த காஹிரா வாசிகள் இந்த இழவுச் செய்தியைக் கேட்ட வண்ணமே படுக்கையை விட்டெழுந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இச் செய்தி ஒருவித உணர்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. ஆனால், தங்கள் பிரியத்துக்குரிய ராணி திலகத்தின் இரண்டாவது கணவரும் காலஞ் சென்று விட்டாரே என்னும் வருத்தம் மட்டும் உதித்து.

ஆனால், அந்த அரசியாரின் விசேஷப் பிரகடனம் கிழவர் அபுல் ஹஸனின் செவிகளிலும் மைமூனாவின் காதுகளிலும் கோட்டைக்குள்ளிருந்த பல்லாயிரக் கணக்கான புர்ஜீகளின் செலவிகளிலும் விழுந்தவுடனே அனைவரும் துள்ளித்துடித்துப் பதறிப்போய் விட்டார்கள்.

கோட்டைக்குள்ளே இருந்த புர்ஜீகளோ ஒன்றுந் தோன்றாமல், நேற்றைத் தினம் முஈஜுத்தீன் கெஜேயை விட்டுப் புறப்பட்டதைக் கேள்விப்பட்டதாகச் செய்தி கொணர்ந்த மம்லூக்கை எல்லாரும் கூடிக்கொண்டு குறுக்கு விசாரணை புரிந்தார்கள்.

“என் அருமைத் தோழர்களே! சத்தியமாகச் சொல்லுகிறேன். இதில் ஏதோ சூதிருக்கிறது. என்னெனின், சுல்தான் முஈஜுத்தீன் நேற்றுவரை உயிருடனேதான் இருந்திருக்கிறார்; அதிலும், இந்தக் காஹிரா அரண்மனைக்குள்ளேதான் இருந்திருக்கிறார். இப்பொழுது ஷஜருத்துர் இப்படி அறிக்கை பிறப்பித்திருக்கிறாள் என்றால், இதில் ஏதோ மர்மம் இருந்தாக வேண்டும். நான் ஒன்றும் பொறுப்பற்றதனமாக ஏதும் உளறவில்லை. சகலவற்றையும் சீராய் விசாரித்தறிந்தே கூறுகிறேன். சுல்தான் பயந்துகொண்டு, தமது தாடியையக் கூடக் களைந்து, மாறுவேஷம் பூண்டு, கெஜேயில் தஞ்சம் புகுந்திருந்தார். எப்படியோ அவர் அப்துல்லாவின் மாய விலையில் வீழ்ந்து திரும்பவும் அரண்மனைக்கு வந்துவிட்டார். வந்தவரை அவள் கொலை செய்து மூடிவிட்டு, இப்படிப்பட்ட பொய்யான அறிக்கையை விட்டிருக்கிறாள். பொய் தஸ்தாவீஜ்களையே தயாரித்துத் தயாரித்துப் பழகிப்போயிருக்கும் அவள் இப்பொழுதும் ஏதோ சூதுதான் செய்திருக்கிறாள். நாம் அப்துல்லாவையும் ஷஜருத்துர்ரின் அந்தரங்கத் தோழிகயையும் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து, இவ்விடத்தில் வைத்துச் சித்திரவதை புரிவோமானால், உண்மை வெளிப்பட்டு விடும்! என்ன சொல்கிறீர்கள்?” என்று அந்த புர்ஜீ தலைவன் ஆத்திரம் பொங்கக் கத்தினான்.

உடனே மற்றெல்லா புர்ஜீகளும்,“இதுதான் தக்க யோசனை! இதுதான் தக்க யோசனை!” என்று ஏகமனதாக ஆர்ப்பரித்தார்கள்.

அதே சந்தர்ப்பத்தில் கிழவர் அபுல் ஹஸன், புற்றிலிருந்து கோபாவேசத்துடன் சீறிப்பாய்ந்து செல்லும் நாகப்பாம்பே போல் விர்ரென்று வழிநடந்து, நேரே புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே வந்து புகுந்தார். அந் நேரத்தில் அவரை முற்றும் எதிர்பாராத அந்த மம்லூக்குகள் ஏறஇறங்கப் பார்த்தார்கள்.

“நீதி இல்லையா? இவ்வுலகத்தில் நேர்மையில்லையா? என் மருமகனைக் கொலை செய்து விட்டார்களே! இந்த அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா?” என்று தாடியைப் பிய்த்துக் கொண்டுஓலமிட்டார்.

சற்று நேரத்தில் எல்லா புர்ஜீகளும், அபுல் ஹஸனும் ஒன்றாய்க்கூடி ஆலோசித்தார்கள். முஈஜுத்தீன் இயற்கை மரணம் எய்தவில்லை என்பதையும், அப்படி அவர் மாண்டிருந்தால் ஷஜருத்துர்ரால் கொல்லப்பட்டுத்தானிருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் சுலபமாக ஆராய்ந்து முடிவுகட்டிக் கொண்டார்கள். ஆனால், முஈஜுத்தீன் எப்படிக் கொலையுண்டார்? அவருடைய உடல் எங்கே எறியப்பட்டது? என்ற உண்மைகளைத் தெரிந்து கொண்டுதான் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று புர்ஜீ தலைவன் கூறினான்.

எப்படியாவது மயக்க மருந்தைப் பிரயோகித்து, அப்துல்லாவையும், சுல்தானாவின் அந்தரங்கத் தோழிகளையும் தூக்கிக்கொண்டு வந்துவிடவேண்டும் என்னும் பழைய யோசனை இப்பொழுது மீட்டும் உறுதிப்படுத்தப் பட்டது.

சுல்தானா ஷஜருத்துர்ருக்கு வந்தது பேராபத்து!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment