அரண்மனைக்குள்ளே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தாற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, முஈஜுத்தீன் ஐபக்கின் இல்லத்தினுள்ளே சென்று சிறிது எட்டிப் பார்ப்போம்:- 

அந்தப் பெரிய வாய்ப்புக்கேடான நாளன்று

மைமூனாவைக் கடைக் கண்ணால் நோக்கியும் சிறுவன் நூருத்தீன் அலீயைத் தூக்கி முத்தமிட்டு அரண்மனைச் சேவகத்துக்காக வெளியே சென்ற அத்தா பேக்குல் அஃஸக்கிர் முஈஜுத்தீன் மீண்டும் வீடு திரும்பவேயில்லை. அரண்மனைக்குச் சென்றவர் ஷஜருத்துர்ரை மணந்து கொண்டார் என்பதையும் மறுகணமே போலி சுல்தானாகப் பிரகடனஞ் செய்யப்பட்டார் என்பதையும் இரண்டொரு தினங்களில் மைமூனா தெரிந்து கொண்டு விட்டாள். இதைக் கேள்வியுற்றதும் அவள் வயிற்றில் சொரேர் என்ற ஒரு பயங்கர உணர்ச்சி பிறந்தது. தன் கணவரை உயிருடனே பறிகொடுத்து விட்டதாகவே அவள் உணர்ந்தாள்.

ஷஜருத்துர்ரின் காம மோக வலைக்குள்ளே வீழ்ந்த முஈஜுத்தீன் எங்கே மீளப்போகிறார்? என்று அவள் மனச்சாட்சி உறுத்திற்று. கடும்புயல் வீசும் கடலிடைச் சிக்கிய பாய்மரக் கப்பலென நிலைகுலைந்தாள். ஊணை மறந்தாள்; உறக்கத்தையிழந்தாள்; உன்மத்தம் பிடித்துப் போயினாள். உள்ளமெல்லாம் உருகிற்று; உடல மெல்லாம் இளைத்தது. வாயெல்லாம் வறந்தது; உதடெல்லாம் உலர்ந்தது. எப்பொழுதும் புன்முறுவல் பூத்துநிற்கும் அவளுடைய அழகிய வதனம் நீலமேகத்துள் புதைந்த நிலவெனக் காட்சியளித்தது. மின்னிக்கொண்டிருக்கும் நீண்ட கூந்தல் சடைபிடித்துப் பின்னிக்கொண்டது. சூரியோதயத்துக்குப் பின்னர்த் தேஜஸும் ஒளியும் குன்றிக் காணப்படும் பஞ்சமி சந்திரனையே அவளதுடல் நிகர்த்துக் காணப்பட்டது. மாமை நிறம் மங்கியது.

உலகத்தில் ஒரு கற்புள்ள மாது எவ்வளவுதான் நித்திய தரித்திரத்திலே கிடந்துழன்று, வேளா வேளைக்குக் குடிப்பதற்குக் கூழ்கூடக் கிடைக்காமல் திண்டாடித் தெருவில் நின்று வாடி வதங்கியபோதினும், அவளுக்கு ஒரே ஒரு சுவர்க்கானத்தம் மட்டும் எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும். அந்தச் சுவர்க்கானந்தப் பேரின்பப் பெருந்துணைதான் அவளுடைய கணவனவான். ஆனால், அக் கணவனை அவள் இழக்க நேர்ந்தால், அதிலும் உயிருடன் பறிகொடுக்க நேர்ந்தால், அவள் கண்ணெதிரே இம் முழு உலகுமே இருளடைந்துவிடும்; இல்லாத தரித்திரமெல்லாம் ஒன்றாய்ப் படையெடுக்க நேரும்; பொல்லாத வேளைகளை அவளை வந்தடுக்கும். ஒரே பிள்ளையைப் பெற்றிருக்கும் ஒற்றை மலடியுங்கூடத் தன் குழந்தையைப் பறிகொடுக்க இசைந்தாலும் இசைவாள்; அல்லது தன்னுயிரைப் பரிகாரமாகக் கொடுக்கச் சம்மதித்தாலும் சம்மதிப்பாள்; ஆனால், தன் கணவனை பலி கொடுக்க எப்படித் துணிவாள்?

“பதவி மோகம் பிடித்த ஒரு கைம்பெண்ணான துருக்கி நாட்டு அடிமைச் சிறுக்கிக்கு என் கொழுநனைப் பலியிட்டு விட்டேனே! அக் கள்ளிக்கு என் கணவனைக் கைந்நழுவி விட்டேனே! சாஹஸம் மிக்க அவள் காலடியில் அவரைப் படுக்க விட்டேனே!” என்றெல்லாம் சிற்சில சமயங்களில் மைமுனா கதறியழ நேர்ந்ததைக் கண்டு எவரே அவளைக் கடிந்து கொள்ள முடியும்?

இவ்வுலகத்திலுள்ள எத்தனையோ விதமான கொடுமையான பொறாமைகளுள் ளெல்லாம் மிகமிக உச்சத்தில் ஒரே ஈடிணையற்ற கொடிய பொறாமை காதலைப் பற்றியது என்பதை நாம் முன்னமே கூறியிருக்கிறோம். ஒரு மனைவி தன் கணவன்மாட்டு என்னதான் பக்ஷமில்லாமலும் அன்பு காட்டாமலும் ஒழுகிவந்தபோதினும், அவன் வேறு ஒருத்தியை மணந்து கொண்டான், அல்லது ஒரு வேசியின் ஆசைக்கு இலக்காகி விட்டான் என்று அவள் கேள்வியுற்ற மாத்திரத்தில் சுருண்டு விடுகிறாள்; அல்லது பொறமையால் மணம் புழுங்கி, நாளடைவில் மாண்டுபோகிறாள். ஆனால், தன் கணவனிடம் உள்ளன்புடனும் மெய்க்காதலுடனும் ஈருடலும் ஓருயிருமாய்ப் பல ஆண்டுகளைக் கடத்தி, ஒரு செல்வச் சிறுவனைப் பெற்றெடுத்தும் விட்ட மைமுனாவுக்கு எப்படிப்பட்ட பொறாமை ஜுவாலைவிட்டு எரிந்திருக்குமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

செத்த சவத்தைக் கண்ணெதிரில் வைத்துக் கொண்டாவது முன்னம் ஷஜருத்துர் கனன்றழுதார். ஆனால், இப்போது மைமுனாவோ தன் கணவனை உயிருடன் பறிகொடுத்துவிட்டுப் புலம்பிக் கொண்டிருந்தாள். ஷஜருத்துர்ரின் கணவராய் விளங்கிய சுல்தான் ஸாலிஹையாவது இயற்கை மரணமென்பது கொள்ளையடித்துச் சென்றது; ஆனால், மைமுனாவின் கணவராய் விளங்கும் முஈஜுத்தீனை ஷஜரத்துர்ரின் பேராசை இறாஞ்சிக் கொண்டுவிட்டது. ஷஜருத்துர்ராவது கணவனை இழந்த விதவையாகி வேறுமணம் செய்துகொள்ள முடிந்தது. மைமூனாவின் கதியோ? பலநாள் பட்டினியால் வாடியவனைக் கையையும் கட்டி வாயையும் பொத்தி, நறுமணங் கமழும் அறுசுவையுண்டி முன்னே அமர்த்தி வைப்பதற்கும் மைமூனாவின் கணவர் உயிருடனிருப்பதற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? அல்லது சாகசக்கள்ளி ஷஜருத்துர்ரின் மோக விஷத்திலிருந்து முஈஜுத்தீன் உயிருடன் மீண்டு தம் ஆசை மனைவியிடம் வந்து சேருவார் என்பதற்கு எவரே உறுதி கூறுவர்? – இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க, மைமூனாவின் ஹிருதயம் வெடித்து விடும்போலிருந்தது. அந்தோ, பரிதாபம்! பரிதாபம்!!

அரண்மனையில் முஈஜுத்தீனுக்குப் பதவி உயர உயர, மைமூனாவின் வீட்டுக்குக் காவலும் உயர்ந்தது; கிடைத்தற்கரிய பண்டங்களும் விசித்திர விசித்திரமான ஆபரணங்களும் விதம்விதமான உணவு வகைகளும் நாடோறும் அவளுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன. இவற்றையெல்;லாம் பார்க்கப் பார்க்க, மைமூனாவுக்குப் பற்றியெரிந்தது – இல்லை, பற்றியெரிகின்ற பெரு நெருப்பில் ‘பெட்ரோல்’ எண்ணெயை ஊற்றுவது போலிருந்தது! முஈஜுத்தீன் இனிமேல் இந்தப் பக்கம் திரும்பப் போவதில்லையென்பதை மைமூனா நன்குணர்வாளாதலால், தான் அணிந்திருந்த அணிகலன்களையும் உயர்ந்த ஆடையாபரணங்களையும் களைந்தெறிந்துவிட்டு, விதவையின் கோலத்திலே இருந்துவந்தாள். இப்படிப்பட்ட வேளையில் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்கும் சுல்தானா ஷஜருத்துர்ரும் அவளுடைய வீட்டக்குப் புதிய பண்டங்களை அனுப்பிப் பயன் என்னவோ?

சிந்தை நொந்து சோர்வடைந்து, உள்ளமுருகி நைந்து போய் உயிர் போகப்போகும் பிணம் போலக் காட்சியளித்து வந்த மைமூனா இன்னம் உயிர்வாழ்ந்து வந்ததற்கு ஒரே காரணம், அவள் வயிறுளைந்து பெற்ற ஒரே மைந்தன் நூருத்தீன்தான் என்பதை நாம் கூறத் தேவையில்லை. மைமூனாவின் வாழ்க்கையென்னும் கொடும் பாலைவனத்தில் இந்த நூருத்தீனென்னும் ஒரே ஒரு புற்கதிர்தான் சாந்தியளித்து வந்தது. எனவேதான், அவளும், போகிற தன் உயிரைப் போகாமல் பிடித்துக்கொண்டிருந்தாள். முன்பெல்லாம் அவள் சிறிது நம்பிக்கை வைத்திருந்தமையால், தன் கணவர் அரண்மனையில் எப்படி க்ஷேமமாய் இருக்கிறாரென்றாவது வருவார் போவாரைக் கேட்டு நம்பி வாழ்ந்திருந்தாள். இப்போதோ அவள் எல்லா நம்பிக்கையின் எல்லையையும் முற்றக் கடந்துபோய், நம்பிக்கையில்லாக் குறை வாழ்வில் சஞ்சரித்துக்கொண்டிருந்தமையால், எவரிடத்தும் தன் கணவரைப்பற்றி எதையும் விசாரிப்பதை அறவே நிறுத்திக்கொண்டு விட்டாள். வயிற்றெரிச்சலை மேலும் ஊக்கிவிடும் தகவலை ஏன் வரவேற்க வேண்டும்?

ஆனால், அவ்வுள்ள முடைந்த மைமூனா தன் போட்டிக்காரியான மாற்றாள் ஷஜருத்துர்ரின் வாழ்க்கை விருத்தாந்தங்களை மட்டும் எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்துக் கொள்ளலாமோ, அவ்வளவு நுணுக்கமாக விளங்கிக் கொள்ள முற்பட்டாள். ஷஜருத்துர்ரின் வின்னியாசமான சரித்திரம் மைமூனாவுக்கு விபரீதமான கற்பனைகளை யெல்லாம் உண்டுபண்ணிவிட்டது. ஒரு விஷயத்தை யார் யார் எந்த எந்தக் கண்ணைக் கொண்டு பார்க்கிறார்களோ, அவரவர்களுக்கு அந்த அந்தப்படியே தோற்றமளிப்பது வழக்கம். எனவே, ஷஜருத்துர்ரைப்பற்றி மைமூனா எவ்வளவு பொறாமைமிக்க வயிற்றெரிச்சலுடன் ஆராய முற்பட்டாளோ, அவ்வளவு விபரீதமாகவே எல்லாம் அவள் கண்முன் காட்சியளித்தன.

“ஒண்டவந்த பிடாரியான வேற்றுநாட்டு அடிமைச் சிறுக்கி தன் சாகசத்தால் ஸாலிஹின் மதியை மயக்கி, ஒரு பிள்ளையையும் பெற்று, தாற்காலிக சுல்தானாவாக ஆட்சி செலுத்தி, பிறகு கணவனையிழந்த கைம்பெண்ணாகி, இத்தாவி லிருக்கையிலேயே கபடமாகச் சட்ட பூர்வமான சுல்தான் மலிக்குல் முஅல்லமைக் கொலைபுரியத் தூண்டுதல் புரிந்து, அரசாங்கத்துக்குத் தன்னைத் தானே சுல்தானாவாக உயர்த்திக் கொண்டு, நாடாளும் பேராசையால் கலீஃபாவின் கட்டளையை உதாசினம் செய்து, கலீஃபாவை ஏமாற்றுவதற்காக என் கணவரையும் கவர்ந்து கொண்ட காதகியை யான் எப்படிப் பழிவாங்குவேன்?” என்று ஏங்கித் தவிக்க முற்பட்டாள், அம் மனமுடைந்த காரிகை. என்ன மனமுடைந்துதான் என்ன செய்வது? ஸல்தனத் ஷஜருத்துர்ரின் கையிலல்லவா இருக்கிறது!

பகலெல்லாம் அவள் ஏதேதோ சிந்திப்பாள்; இரவெல்லாம் அவள் வேறுவிதமாக முடிவுகட்டுவாள்; விடிகிற நேரத்தில் முற்றிலும் புதிய சபதங்களைச் செய்து கொள்வாள். சுருங்கக் கூறுமிடத்து, பொறாமை யென்னும் தனதுள்ளத்திலே பழி வாங்குதலென்னும் கத்தியைத் தீட்டித் தீட்டிக் கூர்மையாக்கிக் கொள்ளத் தலைப்பட்டாள். அப்படிக் கூர்மை ஏறவேற, அவளுடைய உடைந்த உள்ளம் நாளடைவில் இறுக ஆரம்பித்தது. சமயம் வாய்த்தால் ஷஜருத்துர் ரென்னும் அம் மாயமிக்க மோசக்காரியின் குலையீரலையாவது பீறியெறிய வேண்டுமென்று கைபிசைந்தாள், மைமூனா. ஆனால், நாடாளும் ஷஜருத்துர் முன்னே இவள் எந்தச் சுண்டுவிரலை அசைக்க முடியும்?

எனவே, சமயம் வருகிறவரையில் மிக்க பொறுமையுடன் இருப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லையென்று கண்டு கொண்ட மைமூனா அந்தப் ‘பொறுமை’ யென்னும் பொறுமையின்மையை மேற்கொண்டாள்.

ஒருநாள் மைமூனா தூங்கிக்கொண்டிருந்த தன் மைந்தனின் கன்னத்தைத் தடவிய வண்ணம் அமர்ந்திருந்தால் அப்போது வீதிவழியே போகிறவர்கள் உரத்த சப்தமிட்டுப் பேசிக்கொண்டு போவதையும் நடுநடுவே “இரு சுல்தான்கள்!” என்று ஏதேதோ கூறிக் கொள்வதையும் செவி மடுத்தாள். உடனே அவள் வாரிச்சுருட்டி யெழுந்து, நூருத்தீனை மெல்லப் படுக்கவைத்துவிட்டு, தலையணையை அணைத்துவைத்து வாயிற்பக்கம் சென்று, அங்கு நின்ற சேவகர்களை விஷயம் என்ன வென்று விசாரித்தாள்.

“யா உம்மு நூருத்தீன்! அமீருல் மூஃமினீன் கலீஃபா அவர்கள் இந்த மிஸ்ரின் ஸல்தனத்துக்குப் புதிய சுல்தானொருவரை நியமித்தனுப்பி யிருக்கிறார்களாம். அந்தப் புதிய சுல்தானின் பெயர் அல்மலிக்குல் அஷ்ரப் என்று சொல்லுகிறார்கள்,” என்று ஒரு காவலன் அறிவித்தான்.

“புதிய சுல்தானா! அப்படியானால் நூருத்தீனின் தந்தையார் பதவியைத் துறந்து விட்டாரோ?” என்று மைமூனா அம்மையார் திரைமறைவுக்கு இப்புறமிருந்தே வினவினார்.

“அதுதான் இல்லை, அம்மணி! சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்கும் சுல்தான் மலிக்குல் அஷ்ரபும் சேர்ந்தே இரு சுல்தான்களாக வீற்றிருக்கிறார்களாம்.”

“அவள் என்னவானாள்? — அவள்தான், ஷஜருத்துர்?”

“அவள் அந்தப்புரதுள்ளே ஒளிந்துகொண்டு விட்டாளாம். கலீஃபா நியமித்தனுப்பிய சுல்தானை அவள் அவமானப்படுத்தியபடியால், புர்ஜீகள் கலகம்விளைத்து அவளை அடிக்க ஓடினார்களாம். அதற்குள் அவள் தப்பிக்கொண்டு உள்ளே ஓடிப் போய்விட்டாளாம். பின்னர் விவரமொன்றும் தெரியவில்லை.”

“நீ ஓடு, ஓடு! சீக்கிரமாய் அரண்மனைக்கு ஓடிப்போய் என்ன நடந்ததென்பதைத் தெரிந்து வா. அவளுக்குக் கேடுகாலம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன். அவளைப் பிடிக்கிற முஸீபத்து அவரையும் சேர்த்துப் பிடித்துக்கொள்ளப் போகிறது! ஓடு, ஓடு! அவரை எப்படியாவது இங்கே கொண்டுவந்து சேர்த்துவிடு. அவர் இங்கே வந்துவிட்டால், எப்படியாவது தப்பிப்பிழைத்து ஓடிவிடலாமென்று நான் கூறுவதாக அவருக்குத் தெரிவி! நிற்காதே! சீக்கிரம், சீக்கிரம்!” என்று படபடத்தாள் மைமூனா.

அக் காவலன் அக்கணமே அவ்விடம்விட் டகன்றான்.

மைமூனாவுக்கோ, திக்திக் கென்று நெஞ்சம் துடித்தது. ஆனால், அரண்மனையில் பெரிய குழப்பம் ஏதும் விளைந்து, முஈஜுத்தீன் தப்பியோடி இங்கே வந்துவிடமாட்டாரா வென்று தவியாய்த் தவித்தாள். ஆனால், அவ் வெண்ணம் நீடிக்கவில்லை. முன்பொரு சமயம் விளைந்த கலக்கத்தின்போது உயிர் தப்ப ஓடிய முஅல்லமின் கதி யாதாயிற்றென்பதை மைமூனா மறந்துவிடவில்லை யாதலால், எங்கே புர்ஜீகள் இப்போது முஈஜுத்தீனை அம்மாதிரி கொலை புரிந்து விடுவார்களோ என்று துடிதுடித்தாள். “ஏ இறைவா! என் கணவரை உயிருடன் காப்பாற்றி என்னிடம் கொணர்ந்து சேர்ப்பிப்பாயா?” என்று அலறிக்கொண்டே குப்புற்று வீழ்ந்து குறையிரக்க லாயினாள்.

அலை மோதுகிற அவள துள்ளத்திலே எண்ணிறந்த கற்பனைச் சித்திரங்கள், வெகுவர்ண தர்சனியில் மாறிமாறி வருவதைப்போல ஓடியோடி மறைந்தன. உடலெல்லாம் வேர்த்து விட்டது; கைகால்கள் ஜில்லிட்டுவிட்டன. இதுவரை, முஈஜுத்தீனை உயிருடனே பறிகொடுத்து விட்டதாகக் கருதியிருந்த மைமூனாவுக்கு, இப்போது கணவன் உயிர் தப்பினால் போதுமே என்ற ஆசை எழுந்துவிட்டது. நூருத்தீன் நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்தான். கண்ணீர் வழிகிற தன் வதனத்தை அக் குழந்தையின் முகத்தண்டை வைத்துக்கொண்டு மைமூனா மெய் சோர்ந்தாள். சென்ற காவலனும் சீக்கிரம் திரும்புகிறதாய்க் காணோம். நேரம் செல்லச்செல்ல அவளுக்கு மெய்பதற வாரம்பித்தது. துர்நிமித்தமான செய்தியை எங்கே அவன் கொண்டுவந்து விடுகிறானோ என்ற கவலையால் கலங்கித் தவித்தாள் கதியற்ற மைமூனா.

தூங்கி விழித்த சிறுவன் நூருத்தீன் தன் தாயாரை நோக்கி மழலைச் சொற்களால் “ஏன் அழுகிறாய், அம்மா?” என்று மதுரமாய்க் கேட்டான்.

இக் கேள்வி வெந்தபுண்ணில் வேலைச் சொருகுவது போலிருந்தது அவளுக்கு. “என் கண்ணே உன் அபூ இன்று இங்கே வரப்போகிறாராம்!” என்று சொல்லிக் கொண்டே மேலும் அழுதாள்.

“என்ன! அபூ வரப்போகிறாரா? இதற்காக நீ யேன் அழுகிறாய்?” என்று எதார்த்தமாய் வினவினான் சிறுவன்.

“நான் அழவில்லையே! என் கண்களில் தூசி விழுந்து விட்டது, என்று நாஜூக்காய்ப் பேசிவிட்டு, எழுந்துசென்று அச்சிறுவனுக்குத் தின்பண்டம் வழங்கினாள்.

பொத்துக்கொண்டு பீரிடுகிற துக்கத்துக்குப் பெரிய ஆப்பாக விளங்குகிற தன் கான்முளையின் இனிய வதனத்தை உற்று நோக்கிக்கொண்டே அவள் நின்றாள்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment