துல்கஃதா மாத 1–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي هَدٰيَنا السَّبِيْلَ الرَّشَادَ وَجَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَالْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

“உலகத்தின்கண் புரட்சியையும் குழப்பங்களையும் உண்டுபண்ணுவது கொலை செய்யும் பாதகத்தைவிட மிகக் கொடியதாயிருக்கின்றது,” என்று எமதாண்டவன் திருவுளம்பற்றி யுள்ளான்.

இதற்கொப்பவே நம் நாயகம் (ஸல்) அவர்கள், “சகல மனிதர்களும், சொந்தமாய் மூஃமினானவர்கள் ஒரு சுவரில் அமைந்திருக்கும் ஒற்றுமையான கற்களேபோல் ஒற்றுமைக்குள்ளானவர்களாவர். இவர்களுள் ஒவ்வொருவரும் மற்றவரால் அன்பென்னும் கயிற்றைக் கொண்டு பிணைக்கப்பட்டவர்களாய்க் காணப்படுகின்றனர்,” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். இதற்கொப்பவே சஹாபாக்களும் இமாம்களும் முஜ்தஹிதீன் முதலிய பெரியோர்களும் நடந்துவந்திருக்கின்றார்கள்.

அன்பின் மிக்க நேயர்காள்! சிறிது ஆழ்ந்து கவனிப்பீர்களாக. இற்றை வேளையில் இவ் விந்தியாவில் காணக் கிடக்கும் சகல முஸ்லிம்களையும் ஆரியசமாஜிகள், ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தார்கள், இந்துமகா சபாக்காரர்கள் முர்த்தத்களாய் (மதம் மாறியவர்களாய்)ச் செய்துவிட வேண்டுமென்று பெரிதும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் இலக்ஷக்கணக்கான ரூபாய்களைச் சேர்த்து வைத்திருக்கின்றனர். இதற்கென்றே ஆயிரக் கணக்கான மனிதர்களும் கங்கணங்கட்டித் தையாராயிருக்கின்றனர்; இவர்களுள் இந்துக்களின் மாபெரும் தலைவர்களும் வியாபாரிகளும் சமஸ்தானாதிபதிகளும், சர்வ சாதாரண மனிதர்களும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கு எதிரே நம் முஸ்லிம்களின் நிலைமையைக் கவனிக்கும்போது, அளவற்ற விதமாய் இவர்களுக்காக வருந்தவேண்டிய கதியே தோன்றுகின்றது. என்னெனின், முஸ்லிம் தலைவர்களும் உலமாக்களும் மஷாயிகுகளுமான இன்னவர்கள் பெரியதொரு தூக்க மயக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால், இவர்களுள் மிகச் சிலரே விழிப்புடையவர்களாய்க் காணப்படுகின்றனர். ஆயினும், அவர்கள் அனேகமாய்த் தங்கள் வகுப்புச் சண்டையிலேயே பெரிதும் மூழ்கி யிருக்கின்றனர்.

இஸ்லாத்திலுள்ள பிரசார சங்கங்களும் அவற்றிற்குத் தலைவர்களாய் விளங்கும் பெரியார்களும் ஒருவருக்கொருவர் விகற்பமான முறையிலே நடந்துகொண்டு, அதையே அதிகம் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பிரசுரங்களை முதுகிற்குப் பின்னே வீசியெறிந்து விடுகின்றனர். இதையெல்லாம் பார்த்து நம்முடைய எதிரிகளாகிய ஆரியசமாஜிகளும், ரா.சு.சே. (RSS) பேர்வழிகளும் இதுதான் சரியான சமயம் என்றெண்ணி முஸ்லிம்களை மதம் மாற்றக்கூடிய தங்கள் பிரசாரத்தை அதிக துரிதமாய் நடாத்திச் செல்லுகின்றனர். மேலும், அவர்கள் தங்கள் பிரசாரத்துக்குத் தக்க பிரதிபலனையும் அடையாமற் போகவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் நம் சமூகம் கல்வியில்லாக் குறையால் விரோதமென்னும் சங்கிலியாலும் பொறாமையென்னும் விலங்கினாலும் பிணிக்கப்பட்டிருப்பதேயாம்.

முஸ்லிம்களுள் ஒருசிலர் தாங்கள் சுன்னீகளென்று சொல்லிக் கொள்ளுகின்றனர்; மற்றும் சிலரோ, ஷீஆவென்னும் நாமத்தை வகித்துக் கொள்கின்றனர். இதனுடன் நில்லாது இன்னவர்கள் ஒருவர் மற்றொருவர் தாக்கி மதப் போர் செய்யத் தொடங்கி விடுகின்றனர். இவர்களனைவரும் மார்க்கத்திற்கு நன்மையா செய்கின்றனர்? நன்றாய் எண்ணிப் பாருங்கள். இல்லை! ஆனால், இவர்கள் இம்மாதிரியான வீண் சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட சாதாரண சகோதரர்களை அன்னிய மதஸ்தர்களின் வலைக்குள் சிக்க வைத்து, மான்மியம் வாய்ந்த முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் கொடிய துரோகத்தையே விளைத்து வருகின்றனர். இவர்கள் பெரியோராயினும் சிறியோராயினும், கற்றோராயினும் கல்லாத மூடர்களாயினும், ஞானிகளாயினும் அஞ்ஞானிகளாயினும், எவராயிருப்பினும் நமது சுத்த சத்திய சன்மார்க்கமாகிய இஸ்லாத்தின் நன்மையை ஒரு சிறிதும் கவனிக்கின்றனரில்லை. ஆனால், தங்கள் சுயநலத்தையும் கெளரவத்தையும் மரியாதையையும் மேன்மையையுமே பொது மக்களிடம் இஸ்லாத்தின் பேரால் எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் செய்துகொள்ளும் விகற்பங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் அபிப்பிராய பேதங்களும் இப்பொழுது நூதனமாய் உண்டானவையல்ல. எனவே, இப்பொழுதே இன்னவர்களால் இவை அழிக்கப்படப் போவதுமில்லை. மாபெரும் மகான்களெல்லாம் விகற்பத்தினால் மனச்சோர்வடைந்து மரணமடைந்திருக்கும் போது, நம்மால் என்னதான் செய்துவிட முடியும்? மார்க்கத்திலமைக்கப்பட்டுள்ள மாபெரும் நுண்ணிய இரகசியங்களெல்லாம் எங்கு இருக்கின்றன? எப்படி இருக்கின்றன? என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நாம் இவ்விகற்பங்களில் தலையிட்டுச் சாந்தத்துடனும் சமாதானத்துடனும் மீட்சிபெறுவது எங்ஙனம்? இஃது ஒருசிறிதும் முடியாத காரணமேயாகும். இதை இன்னவர்கள் நன்கு ஆலோசித்துப் பார்பார்களாயின், இதன் உண்மையை நிச்சயமாய் உணர்ந்து கொள்வார்கள்.

முஸ்லிம் நேசர்காள்! நாம் நமக்குள்ளே விகற்பம் செய்துகொண்டு விரோதிகளாய்ப் போய்க்கொண்டிருப்பதால், நமக்கோ நமது மார்க்கத்திற்கோ, நம் சமூகத்திற்கோ, ஒரு சிறிதும் நன்மை விளையப் போவதில்லை; இக்கொடிய காரியத்தால் நமக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் நம் சமூகத்திற்கும் நம் சுயமரியாதைக்கும் பங்கமும் நஷ்டமும் கஷ்டமுமே உண்டாகுமென்பது திண்ணம். உதாரணமாக பனீ அப்பாஸிய்யீன்களுடைய அரசாங்கமும் கிலாஃபத்தும் மேதை மரியாதையும் இராக்கைச் சார்ந்த பாக்தாத் என்னும் பட்டணத்தில் அடியோடு ஒழிந்துபட்டன. இவ்வாறே விரோத உணர்ச்சியின் காரணமாய் உந்தலுஸ் என்னும் ஸ்பெயின் தேசத்தில் அரசாட்சி செய்து வந்த பனீ உமையாக்களின் செல்வமும் ஞானாமும் கிலாஃபத்து என்னும் மகா பெரிய ராஜ்யமும் அன்னவர்களுக்கேற்பட்ட மாட்சிமைகளும் ஒழிந்தே போயின. இக்காரணம் பற்றியே ஆச்சரிய உலகத்தில் ஒன்றாய் விளங்கும் எகிப்தின் கண் அரசாங்கம் செலுத்தி வந்த பனீ ஃபாத்திமாக்களின் அன்பும் இஜ்ஜத்தும் மரியாதையும், அரசாட்சியும் அல்லோல கல்லோலப்பட்டு அழிந்துவிட்டன.

எனவே, அல்லாஹ்வும் அவனது ரஸூலும் சொல்லியபடி ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதற்கொப்ப முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்ய முற்படுவோமாயின், நிச்சயம் அதைச் செய்து முடிக்கலாமென்பது திண்ணம். இல்லையேல், நாம் இன்னமும் பாதலப் படுகுழியில் போய்க் கொண்டுதான் இருப்போமென்பது பின்னால் நடக்கப்போகும் ஓர் உண்மையேயாகும். அன்றியும், நாம் விகற்பங்களும் விவாதங்களும் வீண் வினையான வார்த்தைகளும் செய்துகொண்டிருப்பதால் முஸ்லிம் உலகத்துக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாய்விடப் போவதில்லை.

உதாரணமாக, மக்காவின் காலஞ் சென்ற ஷரீஃப்ஹுஸைனும் அவருடைய பிள்ளைகளான பைஸலும் அப்துல்லாஹ்வும் அலீயும் ஆங்கிலேயர்களின் ஆட்களாகவே இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம் அரசாங்கமான துருக்கிக்கு விரோதமானவர்கள்தாம் என்றும் வைத்துக் கொள்வோம். இப்படியுள்ள இவர்களைத் திருத்தி நேர்வழியில் நம் மனப்பான்மைக்கேற்பக் கொண்டு வருவதற்கு நம்மிடம் என்ன பரிகாரம் இருக்கின்றது? ஒன்றுமேயில்லை! மேலும், நம் சண்டைகளால் ஆகப்போவதும் ஒன்றுமேயில்லை.

ஆதலின், ஏ முஸ்லிம் சோதரர்காள்! செய்துகொண்ட சண்டைகளும் சச்சரவுகளும் வீண் பிணக்குக்களும் வேண்டா விவாதங்களும் போதும்! போதும்! போதும்! இனியேனும் ஆண்டவன் நம்மனைவருக்கும் ஏக புத்திர கோஷ்டியேபோல் மனக் ‘கசப்புக்களை’ நீக்கிவிட்டு நன்மையான இஷாஅத்துக்குரிய பாதையில் உழைத்து வருவதற்கான நற்காரியங்களைச் செய்யும் படியான ஹிதாயத்தைத் தந்து, மென்மேலும் விருத்தியாய்க் கொண்டு செல்லும் வகுப்பாளர்காகவே நம்மைச் செய்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! 

وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: hilalcommittee.org

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment