ஷஃபான் மாத 4-ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ الَّا اللهُ وَحْدَهُ لَّا شَرِيْكَ لَهُ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

இப் பிரபஞ்சத்திலுள்ள சகல ஜந்துக்களையும் சிருஷ்டித்துப் போஷித்து ரக்ஷிக்கும் ஏக இறைவனும், தன் அடியார்களின் பாரமார்த்திகப் பரிபக்குவதுக்காக நமது ஈமானையும் இஸ்லாத்தையும் அளித்தருளியுள்ளவனுமான அல்லாஹுத் தஆலாவை நீங்கள் போற்றிப் புகழ்வீர்களாக. மானிட வர்க்கத்தாரை அஞ்ஞானத்தினின்று சுஞ்ஞானத்தின் பக்கல் அழைத்து வைத்துச் சென்ற முஹம்மது நபி நாயகத்தை (ஸல்) அதிகம் போற்றி ஆசீர்வதிப்பீர்களாக. அதன் பின் ஏ முஸ்லிம்காள்! உணர்ந்து கொள்வீர்களாக.

அல்லஹுத் தஆலா தன் திரு வேதத்தில் போதிப்பதாவது :— ”உண்மையில் நன்னம்பிக்கைக் கொண்டவர்(மூமின்)க ளெல்லாரும் சகோதரர்களே யாவார்கள். ஆதலின், உங்கள் சகோதரர்களுக்கிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அருள்பெற வேண்டி ஆர்வங் கொள்வீர்களாயின், அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” – (குர்ஆன் 49:10).

அன்பர்காள்! முஸ்லிம்களாகிய நாமெல்லாரும் ஒரே ஆண்டவனைக் கொண்டும், ஒரே நபியைக் கொண்டும், ஒரே வேதத்தைக் கொண்டும், ஒரே கிப்லாவைக் கொண்டும், ஒரே மார்க்கத்தைக் கொண்டும் ஈமான் கொண்டிருப்பதால், நாமனைவரும் ஒரே இனத்தைச் சார்ந்த சகோதரர்களாயிருக்கின்றோம். எனவே, நமக்கிடையே எத்தகைய வித்தியாசமும் கூடாது. இலெளகிக வைதிக எல்லா விஷயத்திலும் ஏகோபித்த, ஸமரசம், சகோதரத்துவம். சமத்துவம்,அன்பு, நட்பு, வாஞ்சை, விசுவாசம், காருண்யம் ஆதிய யாவும் பூண்டிருத்தல் வேண்டும்.

நம்முள் ஏழைகளும் பணக்காரர்களும் ஒன்றே; ஆண்டியும் அரசனும் ஒருமாதிரியே. இதில் ஜாதி வித்தியாசம், குலத்தின் பெருமை, படிப்பின் கர்வம், செல்வச் செருக்கு ஆதிய எதுவும் கூடாது. ஏழை எளியாரை இகழ்வதும், பெண்களை அடக்கியொடுக்கி வைப்பதும் முற்றிலும் கூடா. பெண் சிசுக்களை வெறுப்பதும், ஆண்மக்களையே அதிகம் உவப்பதும் மாகொடிய பாதகமாகும்.

எத்தகையினோரிடத்தும் எக்காரியத்துக்காகவும் பிணங்கிக் கொண்டு சண்டை சச்சர விடுதலும் கூடாது. எவரேனும் தமக்குள் குதர்க்கம், பிணக்கு, சண்டை முதலியவை கொண்டுழல் வார்களாயின், அன்னாரை அவற்றினின்றும் ஸமரஸமாய் அப்புறப்படுத்தி, அவர்களுக்குள் மீண்டும் பழைய ஒற்றுமையை உண்டுபண்ணுவது முக்கிய “வாஜிபான” கடமையாகும்.

உங்களுள் சிலர் சிலரைப்பற்றிப் புறம்பேச வேண்டாம்; தன் சகோதரனின் நரமாம்சத்தைப் புசிக்க உங்களுள் எவனேனும் பிரியப்படுவானா ? இல்லை! நீங்களெல்லீரும் அதை மிகவும் வெறுப்பீர்கள்; ஆதலின், நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்” – (குர்ஆன் 49: 12) என்று ஆண்டவன் நாம் புறம் பேசுவதைப் பற்றிக் கண்டிக்கின்றான். புறங் கூறுவதென்பது ஒருவனுடை மாம்சத்தை அக்கிரமமாய்ப் பிய்த்துத் தின்பதை விட மகா கொடிய பாபமாகும்.

இவ்வாறே, நம் முஸ்லிம் நேசருக்கிடையே கெட்ட எண்ணமும் பொறாமையும் கபடமும் துவேஷமும் பகைமையும் கொள்வதும் கொடும்பாதகங்களாகும். ஒருவர் பிறிதொருவர்க்கிடையே கோள்மூட்டிக் கலகத்தைக் கிளப்புவதும் அல்லாஹ்வினால் பொறுத்தற்கரிய மாகொடிய தீமையாகும். நம் நபிகள் பெருமானாரும் (ஸல்) “உண்மையில் பொறாமையும் கோளும் அக்கினியைப் போன்றவையாகும். நெருப்பு விறகைத் தின்று நாசப்படுத்துவதே போல் ஈமானையும் அவை நாசப்படுத்திவிடும்,” என்று திருவுளம் பற்றியுள்ளார்கள். மேலும், இப்படிப்பட்ட துர்க்குணங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் அவிவேகச் செயல்களும் நம்மவர்க்கிடையே அதிகம் தலைவிரித்தாடாமலில்லை. ஒருவர் மற்றவரைப் பற்றிக் குத்தலாகச் சொல்லி, மனம் புண்ணடையச் செய்வதும் கூடாத காரியமாகும். இதனை நபிகள் நாயகம் (ஸல்) அதிகம் விலக்கியிருக்கிறார்கள். பனீ தமீமைச் சார்ந்தோர் அடிமை முஸ்லிமான பிலாலைப் (ரலி) பரிகாசம் பண்ணியதையும் ஆயிஷாவும் (ரலி) ஹப்ஸாவும் (ரலி) உம்மு ஸல்மாவைப் பற்றிக் குத்தற்சொற் கூறியதையும் இக்ரிமா பின் அபூ ஜஹ்லை (ரலி) ஒருவர், “இவர் ஃபிர் அவ்னுடைய மகன்” என்று தூஷித்ததையும் தாபித் பின் கைஸ் (ரலி) ஒருவரைத் தூர்த்த ஸ்த்ரீயின் மகன் என்று ஏசியதையும் சிலர் ஆபாசமான நிந்தனைப் பெயர்களைக் கொண்டு அழைத்ததையும், நம் ரஸுல் நாயகமவர்கள் (ஸல்) தங்கள் காலத்தில் அதிகம் கண்டித்திருக்கிறதாக ரிவாயத்கள் அறிவிக்கின்றன.

குர்ஆனிலும் இவ் விஷயத்தைப்பற்றி உறுத்தப்பட்டிருப்பதாவது:- “ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள் ! உங்களுள் ஒருசாரார் மற்றொரு சாராரை ஏளனம் பண்ண வேண்டாம். ஒருகால் இவர்களைவிட ஏளனம் பண்ணப்படுகின்ற அவர்களே மேன்மையானவர்களாக இருத்தல் கூடும் ; அவ்வாறே எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்யவேண்டாம்; இவர்களைவிட அவ் வணங்குகளே மேலானவர்களா யிருத்தல் சாலும்; மேலும், உங்கள் ஆன்மாக்களையும் நீங்கள் குறைவுபடுத்திக் கொள்ளாதீர்கள். பிறரின் பட்டப் பெயர்களையும் புரட்டிக் கூறாதீர்கள். என்னெனின், ஈமான் கொண்டதன் பின்னால் இந்தத் தீச்செயல்களும் மாகொடியனவாகவே கெட்டுப்போய் விட்டன. இவைகளுக்காக யார் யார் பாப மன்னிப்புக் கேட்வில்லையோ, அவர்கள் அநியாயஞ் செய்தவர்களே யாவர்” – (குர்ஆன், 49:11).

எனவே, நண்பர்காள்! இவ் வேதவாக்கியத்தின் பொருளை யுணர்ந்தீர்களா? நம் மௌட்டிய ஜனங்களிடையே காணப்படும் இத்தகைய தூர்த்தச் செயல்களைப் பற்றியெல்லாம் அதிகம் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆதலின், இத்தகைய தீய நடத்தைகளினின்று தவ்பா செய்து உண்மை மூஃமின்களாக ஆய்விடுங்கள். இன்று தொடுத்தேனும் எத்தகைய பாபங்களையும் செய்வதில்லையென்று உறுதியாய்ப் பிரதிக்ஞை செய்துகொண்டு, பரிசுத்தராய் விடுவீர்களாக.

ரமலான் நோன்போ, நெருங்கி விட்டது. ஆதலின், நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிப் பயந்து, தொழுது, நோன்பு வைத்துப் பாப விமோசன த்துக்காகத் தவ்பாவும் பிரார்த்தனையும் செய்வீர்களாயின், உடனே ஆண்டவன் உங்களுக்குப் பாபமன்னிப்பை யருள்வான். யாரையும் மனம் நோவச் செய்யாமலும் தூஷியாமலும் அடித்துத் துன்புறுத்தாமலும் நோன்பை வைத்துக் கொண்டு பொறுமையுடன் சாந்த புருஷர்களாக இருந்து கொள்ளுங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவர்களாக இருக்கக் கடவீர்கள்.

ஜீவகாருண்யம், பச்சாத்தாபம், பெருந்தன்மை, சாத்விகம், கிருபை முதலிய நற்குணங்களைக் கைக்கொள்ளுங்கள். ” நீங்களெல்லீரும் சமத்துவமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.” இஃது ஆண்டவனிட்ட கட்டளையாகும். உங்களை எவரேனும் அறியாமையால் ஏசியேனும் அடித்தேனும் துன்புறுத்தியேனும் விடுவார்களானால், அதனை நீங்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டு இருப்பீர்களாயின், உங்களுக்கு ஆண்டவனருள் அதிகம் உண்டாகும். “உண்மையாக ஆண்டவன் பொறுமையுடைவர்களுடனே இருக்கிறான்,” என்பது குர்ஆன் திருவாக்கியம். “பிறரால் மனப்புண்ணடைந்த ஒருவன் தீமையிழைத்த அவ் வெதிரியை மன்னித்துவிடுவானாயின், ஆண்டவனும் இவனுடைய குற்றங்களை மன்னித் தருள்வான்,” என்பது நபிகள் நாயகத்தின் (ஸல்) திருவாக்கியம்.

எனவே, முஸ்லிம் நேசர்காள் ! நீங்கள் அல்லாஹ்வின் நீதி போதனைப்படியும் நபீயுல்லாஹ்வின் அழகிய முன்மா திரியின் படியும் அழகிய முறையிலே அடியொற்றி நடந்து சீர் பெறுங்கள். இதுவே நம்மை நல்ல ஹிதாயத்திற்குக் கொண்டு செல்லும் மார்க்கமாகும். அல்லாஹ்வும் ரஸுலும் கூறிச் சென்ற தீனுலிஸ்லா த்தைக் கடைப்பிடிப்பவரே இத்தரணியில் மோக்ஷ சாதனத்தைக் கைக் கொள்வார்களல்லாமல், இடைக்காலத்தில் வேறு சாமான்ய மக்களால் கட்டிவிடப்பட்ட ஏனை இஸ்லாமல்லாத கிரியைகளையெல்லாம் இஸ்லாமென மேற்கொண்டு நடப்பவர் இறுதியிலே அதோகதியை யடைவார்களென்பது திண்ணம். எனவே, நம்மெல்லோர்க்கும் ஆண்டவன் உய்வான சாத்விகத்தையும் நற்குணத்தையும் அளித்து அவனுடைய நேரான மார்க்கத்தில் சீராக நடாத்தியருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: www.siasat.pk

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment