ஜமாதியுல் அவ்வல் மாத 4-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

‎اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கின்றேன்.

சுத்த சூன்யத்தினின்றே மானிடகோடிகளைச் சிருஷ்டித்து, ஆறாமறிவென்னும் பகுத்தறிவையும் உடனளித்துக் கண்ணியப்படுத்திய ஏக இறைவனாகிய அல்லாஹுத் தஅலாவையே நாம் அல்லும் பகலும் அனவரதமும் புகழக் கடவோமாக. அவனுடைய திருத்தூதரும், உலகத்தைச் சீர்திருத்த வந்த உத்தமோத்தமருமான ரக்ஷகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போற்றி ஆசிமொழியுங் கூறக் கடவோமாக.

அன்புள்ள சோதரர்காள்! ஆண்டவனுக்கு அஞ்சிக் கொள்வீர்களாக; அவனிடமே சகலகாரியங்களுக்கும் உதவி தேடுவீர்களாக. என்னெனின், அவனே நம்மெல்லாரின் வணக்கத்துக்கும் உரியவனாயிருக்கின்றான். அவனே எல்லா வல்லமையும் பெற்ற ரக்ஷகனாவான்; அவனே மானிடர்களாகிய நமக்குப் பகுத்தறிவென்னும் அந்தத் தூண்டாமணி விளக்கொன்றை யளித்து, அதன் உதவியைக் கொண்டு சத்தியம் அசத்தியம், நன்மை தின்மை, நல்லது கெட்டது முதலியவைகளைப் பகுத்துணர்ந்து கொள்வதற்கு வேண்டிய சௌகரியத்தையும் தந்தருளியுள்ளான். ஆதலின், அந்தப் பரம்பொருளாகிய அல்லாஹ்வைத்தான் சகல சிருஷ்டிகளும் சிந்தித்து வந்தித்தல் வேண்டும். அந்த ஆண்டவன் தன் அழகிய திருமறையில் திருவுளம் பற்றியிருப்பதாவது:- “ஆண்பாலரேனும், பெண்பாலரேனும், ஒருவர் நற்கருமங்களைப் புரிவராயின், அவர்தாம் (நன்னம்பிக்கை கொண்ட ) மூமினாவார். அவரைத்தாம் நாம் பரிசுத்த வாழ்க்கையிலே வாழவைப்போம். மேலும், அவர் புரிந்த கருமங்களைவிட அதிக அழகானதாகவே அவற்றின் பிரதிபலனை அன்னார்க்கு நாம் சம்மான மளிப்போம்.”

இதனால் மூமினீன் என்பார்கள் அவசியம் அல்லாஹ்வுக்காக அடியவருக்கு நற் கருமங்களைப் புரிதல் வேண்டும்; அப்படிப்பட்டவர்களே ஆண்டவனது பேரருளைப் பெறுவது முடியும் என்பது தெற்றென விளங்குகின்றது. இன்னம், உண்மை மூமின் என்பவரைப்பற்றி நபிகள் நாயகமும் (ஸல்) கூறியிருப்பதாவது:- “நன்னம்பிக்கை கொண்டதனால் பரிபூரணமான மூமின்கள் யாரெனின், தங்கள் பெண்மணிகளிடம் நல்லவர்களாக நடந்து கொள்பவர்களே யாவார்கள்,” என்பதேயாகும். இதனால் மூமின்களெல்லோரும் நற்குண நன்னடக்கையுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டுமென்பதும் பெண்மணிகளைக் கண்ணியப்படுத்தி வைக்க வேண்டுமென்பதும் நன்கு புலப்படவில்லையா?

ஆண்டவனுக்குரிய வணக்கத்தில் சிறந்தது, நன்னம்பிக்கை கொண்டு நற்கருமம் புரிவதேயாகும். நம் இஸ்லாம் மதமும், மானிடர்களை அன்னவர்கள் நன்மையைக் கடைப்பிடித்துத் தீவினையனைத்தையும் விட்டு நீங்கி நற்கருமங்களைக் கொண்டு பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென்றே உபதேசிக்கின்றது. எனவே, அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) போதனைகளையும் சிரமேற்கொண்டு அவற்றின்படியே ஒழுகி வருதல் வேண்டும்; ஆண்டவன்மீது பூரண பக்தியைக் கொள்ளல் வேண்டும். இதில் ஒரு சிறிதும் சந்தேகம் கூடாது. அவனுக்கே முற்றிலும் அடிபணிந்து முடிசாய்த்து, அவனையே அனவரதமும் வணங்க வேண்டும். அவனுக்கே இக் குவலயத்தில் அஞ்சி நடத்தல் வேண்டும். அவனல்லாத ஏனைய சிருஷ்டிப் பொருள்களுக்கும் எத்தகைய ஏனைய சிருஷ்டிப் பொருள்களுக்கும் எத்தகைய தேவதைகளுக்கும் எத்தகைய சமாதி(கப்ர்)களுக்கும் வேறு எத்தகைய மானிடகோடிகளுக்கும் பயப்பட வேண்டியதில்லை. எப்படிப்பட்ட துன்பத்தின் போதும், அந்த அல்லாஹுத் தஆலா ஒருவனையே புகலிடமாகக் கொண்டு, அவனிடமே நங் குறைமுறைகளை முறையிட்டுக் கொள்ளல் வேண்டும். அந்த ஆண்டவன் நம் முஸ்லிம்கள்மீது விதித்துள்ள ஐந்து நேரத்துத் தொழுகைகளையும் நியதியோடும் திரிகரண சுத்தியோடும் மிக்க உள்ளச்சத்தோடும் வேளை தவறாமல் திருத்தமாய்த் தொழுது வரல் வேண்டும். இத் தொழுகை முதலியவைகளுக்குரிய மார்க்க மஸ்அலாக்களையும் நன்கு கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இப்படிப்பட்ட செம்மையான தொழுகையே நம்மைச் சகல பாபகாரியங்களை விட்டும் துராசாரங்களை விட்டும் நீக்கிவைத்துக் காப்பாற்றுமென்றும் ஆண்டவன் குர்ஆன் ஷரீபிலே கூறியிருக்கிறான்.

அப்படிப்பட்ட கருமங்களே நல்ல அனுஷ்டானங்களாகும்; அவைகளே நம்மை இகத்தில் சன்மார்க்கத்திலாக்கிவைத்து, பரத்திலும் பேரின்பமடையச் செய்யும். எனவே, அவைகளே நம்மை ஆகிரத்தில் இறைவனது தரிசனத்தையும் (லிக்காவை) எய்தச் செய்யும்; அவையே அதுபோது நரகத் தீயான கொடிய வேதனையை விட்டும் ஈடேற்றமளிக்கும்; அவையே நம்மை ஆண்டவனது திருமுன்பினில் கொண்டுசென்று, அங்கும் மேன்மேலும் கௌவரத்தையடையச் செய்யும். ஆதலின், முஸ்லிம் நேசர்காள்! மிகவும் ஏற்றமான கிரியையாகிய இந்த ஐங்காலத் தொழுகைகளையும் நீங்களெல்லீரும் நியமமாய்த் தொழுது கொண்டு, ஏனையோரையும் தொழும்படித் தூண்டி, மேன்மையுறுவீர்களாக.

இந்தத் தராதலத்தில் பிறந்தோரெல்லாரும் வெறும் உலக மாய இன்பங்களை மட்டும் அனுபவித்து, பெரும்பெரும் மாளிகையில் வசித்து, தனபாக்கியங்களை யெல்லாம் அதிகம் பெற்றுப் பல்வேறு வாகன வசதிகளுடனே கூத்தியிலும் குடியிலும் வேறுபல துராசாரத்திலும் மற்றும் பல பாதகங்களிலும் ஆண்டவன் கட்டளைக்கு மாற்றமான இன்னம் பல தீய கருமங்களிலும் காலத்தை வீணே கழித்து, காலன் வந்ததும் ஒரு நற்பயனும் பரலோக நலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளாமல் இறந்து போவார்களானால், அவர்கள் இத்தரணியில் பிறந்து இறந்ததனால் மற்றைப் பிரஜைகளுக்கேனும் தங்கள் சொந்த ஆத்மாவுக்கேனும் யாதொரு நன்மையையும் கிடைக்கப்பெறப் போவதில்லை. “இப்படியும் இப்படியும்“ – இருகரங்களையும் விரித்து வீசி – “ஐசுவரியத்தை (அல்லாஹ்வின் சத்காரிய நிமித்தம்) அள்ளியிறைப்பவனை யன்றி, ஏனைப் பணக்காரரெல்லாம் ஏழையே” என்று நபிபிரான் (ஸல்) நவின்றருளியுள்ளார்கள். இப்படித் தங்கள் செல்வத்தை ஆண்டவன் பாதையில் அள்ளி வீசாதவர்கள் ஒருகாலும் நற்கதியைப் பெறமாட்டார். இவர் இறுதி வாழ்க்கையில் ஆண்டவனது தண்டனைக்குள்ளாய்க் கொடிய நரகலோகத்திலே ஒழியாத் துன்பத்தையடைந்துதான் உழன்று தீர்வார்.

இப் பிரபஞ்சம் நிலையற்றதாகும்; இதற்குதாரணம் நீர்மேல் கிளம்பி மறுகணமே அழிவுறும் குமிழியேயாகும். என்னெனின், இவ்வுலக முழுதும் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள இறுதிக்காலத்தில் முற்றும் அழிந்து நிர்மூலமாய்ப் போய்விடும். அதுகாலை மனிதர்களைனைவரும் ஒழிக்கப்பட்டே போய் விடுவார்கள். இந்த மானிடர்கள் இவ் விகலோகத்தில் எத்தகைய நன்மை தீமைகளைப் புரிந்தார்களோ, அவற்றிற்குரிய பிரதிபலனைத்தான் அந்தப் பரலோகத்திலும் அடைந்து தீர்வார்கள். இவ்வுலகில் சன்மார்க்கத்தில் ஒழுகியோர்களின் ஆத்மாக்களெல்லாம் அவ்வுலகினில் ஆண்டவனது பேரருளைப் பெற்றுப் பெரும் பேறெய்திப் பரலோக விசிராந்தியை அடைந்து, நியமமான பேரானந்தத்தை நித்தியமாயெய்தும். இவ்வுலகில் தீயவழியிலேயே உழன்று திரிந்த துராத்மாக்களெல்லாம் அவ்விறுதிக் கியாமத்தில் ஆண்டவனுடைய முனிவுக்குள்ளாய் ஒழியா நரக வேதனையைத்தான் அடையும். இதுவே இஸ்லாத்தின் மூலக்கொள்கையாகும். இப் பிரபஞ்சம் அப்பரலோக நலத்துக்காக ஒரு தையாரிப்பு ஸ்தலமாகவே விளங்குகின்றது. ஆண்டவனால் மானிடர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளென்ற மூலதனத்தைக் கொண்டு நற்கருமங்கள், சன்மார்க்க ஒழுக்கங்கள், தெய்வ வணக்கங்கள், பக்தி ததும்பும் தியானங்கள் எனப்படும் அரிய சரக்குக்களை எவன் வாங்கிச் சேகரித்து வைத்துக் கொள்கிறானோ, அவன் அவற்றின் பயனாய்ப் பரலோகத்தில் அபார ஜயமடைவான். தனதரிய ஆயுளை எவனொருவன் வீணிலே அஃதாவது, துன்மார்க்கத்திலும் ஆண்டவன் கட்டளைக்கு முரணான வழிகளிலும் செலவழித்து மாண்டுபோகின்றானோ, அவன் அதுகாலை அதோ கதியைத்தான் அடைவான். அப்ஸோஸ்! அப்ஸோஸ்!

ஆதலின், முஸ்லிம் நேசர்காள்! ஆண்டவனுக்குப் பயந்து, அவனது சன்மார்க்கத்திலேயே நடந்து, நற்கதியடைவீர்களாக. உங்கள் வாணாட்களை ஷிர்க் பித்அத் முதலியவற்றினால் வீணாட்களாகச் செய்துகொள்ள வேண்டாம். சன்மார்க்கமே ஜயமளிக்கும். எனவே, எல்லாம் வல்ல இறைவன் நம்மெல்லாரையும் இகத்தில் சன்மார்க்கத்திலாக்கி வைத்து, பரத்திலும் நமக்குப் பேரானந்த மோக்ஷத்தை யளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍِ وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment