اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
ஏ நன்னம்பிக்கை கொண்டுள்ள அல்லாஹ்வின் நல்லடியார்காள்! உங்களெல்லீரையும், இல்லை, இந்த ஸர்வ ஜகத்தையே ஆக்கவும், அழிக்கவும், மீட்டும் புத்துயிர் கொடுத்தெழுப்பவும், நியாய பரிபாலனம் புரியவும் வல்ல நாயனாகிய அல்லாஹுத் தஆலாவை அனவரதமும் ஆழப் புகழ்வீர்களாக. அவனுடைய தீர்க்கதரிசியும் நம்முடைய சற்குருவும் கருணைக்கடலும் உலகரக்ஷகருமான நபிகள் நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களைப் போற்றி ஆசீர்வதிப்பீர்களாக. மேலும், ஆண்டவன் நம்மெல்லாருக்கும் போதிப்பதாவது:-
எவன் ஆண்டவனுக்கு முற்றும் அடிபணிந்து நடக்கின்றானோ, அவன்தான் நன்மை செய்தவனாவான். அவனுக்குத் தன் ரக்ஷகனிடத்தில் அதற்குரிய சம்மானமுண்டு. இத்தகைய மனிதர்கட்கு யாதோர் அச்சமுமில்லை; இவர்கள் வருந்தவும் வேண்டுவதின்று, என்பதேயாகும். இதனால் எவன் அல்லாஹ்வின் ஆணைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுத் தலைசாய்த்து ஒழுகி, நன்மையான கருமங்களையே நன்கு புரிகின்றானோ, அவன் இகத்திலும் பரத்திலும் மேன்மையுற்றுப் பேரானந்தமடைவான் என்பது செவ்வனே புலனாகின்றது. இப்படிப்பட்ட பேற்றையும் பதவியையும் அல்லாஹ்வின் அடியார்களாகிய நாமெல்லாரும் கட்டாயம் அடைந்தே தீரவேண்டும். இதற்காகவே, அஃதாவது, ஆண்டவனை வணங்குவதற்காகவே நம்மை அவன் இத்தரணியில் சிருஷ்டித்துள்ளான் என்பது குர்ஆன் திருவாக்கியத்தால் நன்கு விளங்கக் கிடக்கின்றது.
ஆகவே, நாம் அந்த ஆண்டவனுக்கு எப்படிப்பட்ட வணக்கங்களைப் புரியவேண்டும்? எத்தகைய நன்மைகளைச் செய்யவேண்டும்? எவ்வாறு அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்? என்பன போன்ற விஷயங்களை முஸ்லிம்களாகிய நீங்களெல்லீரும் செவ்வனே தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் ஹிருதயபூர்வமாய் உறுதிகொண்டுள்ள ஏக இறைவன் கொள்கையாகிய தவ்ஹீதின் கடைப்பிடியை ஸ்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, ஷிர்க்கான (ஏகதெய்வத்துக்கு இணைவைப்பதான) மகா கொடிய பாப காரியங்களை அறவே புரியாதிருப்பீர்களாக. நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தேவ தூதர்களின் மீதும் அவனுடைய வேதங்களின் மீதும் தீர்க்கதரிசிகளின் மீதும் இறுதி நபிகள் நாயகத்தின் (ஸல்) மீதும் இறுதித் தீர்ப்புநாளின் மீதும் நன்மை தீமைகளெல்லாம் ஆண்டவனாலேதான் தீர்மானிக்கப்படுகின்றன என்பதன் மீதும் இறுதித் தீர்ப்புக்காக உயிர்ப்பித் தெழுப்பப்படுவதன்மீதும் மற்றுமுள்ள சன்மார்க்கக் கொள்கைகளின் மீதும், நீங்கள் கொண்டுள்ள ஈமானைத் தளரவிடாமலிருந்து கொள்ளுங்கள்.
குர்ஆன் போதனையின்படி அல்லாஹ்வின் (இஸ்லாமிய கொள்கை சம்பந்தமான) கயிற்றை நீங்களெல்லீரும் ஒன்று சேர்ந்து உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்வீர்களாக. தினம் ஐந்து வேளைத் தொழுகைகளையும் நீங்கள் புறப் பரிசுத்தராயும் அகப் பரிசுத்தராயும் பக்தி மிகுந்த உள்ளத்தினராயும் இருந்து, தவறாமல் தொழுது வருவீர்களாக. நீங்கள் ஏதேனும் அறியாமையால் பாபகாரியங்களைச் செய்துவிட்டிருப்பீர்களாயின், அவைகளை ஆண்டவனிடம் எடுத்துக்கூறி, முறையிட்டழுது, பாப நிவாரணத்துக்காகப் பிரார்த்தனையும் தவ்பாவும் புரிந்து கொள்வீர்களாக. அதுகாலை நபிகள் நாயகத்தின் (ஸல்) மீது வாழ்த்துதல் என்னும் ஸலவாத்தையும் ஸலாமையும் அதிகமாய்க் கூறிக் கொள்வீர்களாக.
உங்களுக்கு எத்தகைய துன்பம் நேரிட்ட போதினும், அதுகாலை ஏகபராபரனாகிய அல்லாஹ்வினிடமே (வேறெவரிடத்து மன்று) பாதுகாப்பைத் தேடுவீர்களாக. சாவகாசமான நேரங்களிலெல்லாம் மனத்தில் அந்த அல்லாஹுத் தஆலாவையே தியானித்து ஸ்தோத்திரம் புரிவீர்களாக. எவ்வுயிர்க்கும் அன்புடைய உத்தமர்காளகவே இருந்து வருவீர்களாக. நம் சோதர முஸ்லிம்களுக்கு எத்தகைய துன்பத்தையும் இழைக்காம லிருப்பீர்களாக. மனோவாக்குக் காயங்களால் எந்த மனிதரையும் துவேஷமாயும் குரோதமாயும் கருதாமலிருப்பீர்களாக.
ஏனையவர் உங்களுக்கு ஏதேனுமொரு நன்மையேனும் உபகாரமேனும் புரிவார்களாயின், அதைவிடச் சிறந்த விதமாகவே அன்னார்க்கு நீங்கள் பிரதியுபகாரம் புரியக்கடவீர்கள். எத்தகைய சுகதுக்க காலங்களிலும் லாபநஷ்ட வேளைகளிலும் பிணிவாயுற்ற நேரங்களிலும் சமாதி (கப்ர்), காளி அல்லது மாரியம்மன் கோயில், வீண் விக்கிரக ஸ்தலமாகிய மொட்டைக் கோபுரம் முதலிய இடங்களுக்குப் போய்க் கெட்டுப் போகாமலும் அல்லாஹ்வின்மீது வைத்துள்ள உறுதிப்பாட்டைக் கைவிடாமலும் இருப்பீர்காளக. எந்தவிதக் கஷ்டகாலத் துன்பத்தின்போதும் “தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் ஆண்டவனிடமே உதவி தேடுவீர்களாக.”
இப்பூவுலகில் எல்லாவித இன்பத்தைக் காட்டினும் மனைவி மக்கள் பந்து மித்திரர்களைக் காட்டினும் சொத்து சுதந்தரங்களைக் காட்டினும் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையுமே (ஸல்) அதிக முஹப்பத்துடன் நேசிப்பீர்களாக. இப்படிச் செய்தால்தான் ஈமானைப் பரிபூரணப்படுத்திக் கொள்வது முடியும். இன்னம், இஸ்லா மார்க்கத்தில் மிகக் கடுமையாக விலக்கப்பட்டுள்ள ஷிர்க் போன்ற பாப காரியங்களைப் புரியாதிருபீர்களாக. கொலை புரிதல், களவாடல், கட் குடித்தல், பரஸ்திரீகளை விழைதல், பொய் புகலல், வஞ்சனை செய்தல், சூது விரும்புதல், தீய சிந்தனை செய்தல், கொடிய பார்வையுடன் நோக்கல், பிறரைக் கெடுக்கச் சதியாலோசனை புரிதல், குபுர் ஷிர்க்கான பாதகங்களைப் புரிதல், கூடு, கொடியேற்றம், பஞ்சா முதலியவைகளைக் கொண்டாடுதல், அல்லாஹ் ரஸூலின் ஏவல் விலக்கல்களை மீறி நடத்தல், பிறர்க்குத் தீங்கிழைத்தல், தக்க காரணமின்றி ஜீவ பிராணிகளைக் கொல்லுதல், தாய் தந்தையர்களை மனநோவச் செய்தல், அண்டை அயலாரைக் கெடுத்தல், பிறரைப் பற்றிப் பொறாமை கொள்ளல், புறம் பேசுதல், வீண் கலகம் விளைத்தல், நல்ல துறையில் தர்மம் ஈவோரைத் தடுத்தல், தீமை புரியும்படி பிறரைத் தூண்டுதல், இருதயத்தின் இழிய இச்சைகளுக்கு இடங்கொடுத்தல், நன்மை செய்யப் போவோரையும் தொழச் செல்வோரையும் தடுத்து வைத்தல் முதலிய இப்படிப்பட்ட கொடும் பாதகச் செயல்களையெல்லாம் சற்றும் புரியாமல் பரிசுத்த மனிதர்களாக இருந்து கொள்ளுங்கள்.
பஞ்சேந்திரியங்களின் இச்சையில் கட்டுண்டு மனம்போன போக்கெல்லாம் போய்க் கெட்டுப் போகாதீர்கள். உங்கள் நஃப்ஸை (உள்ளத்தை) உங்கள் வசப்படுத்தி வையுங்கள். “நஃப்ஸெ அம்மாரா” வென்னும் தீமையின் பக்கமே இழுத்துச் செல்லும் ஆத்மாவுக்குக் கட்டுப்படாதீர்கள். “நஃப்ஸெ முத்மஇன்னா” என்னும் விசிராந்தியளிக்கும் ஆத்மாவின் அழைப்பின்படியே அனவரதமும் நடந்து கொள்ளுங்கள். உங்கள் ஆத்ம விசாரணையையே சதா தியானித்து ஆராய்ச்சி செய்யுங்கள். இதுவே, “எவன் தனதுள்ளத்தை உணர்கின்றானோ, அவனே தன் உடையவனையும் நன்குணர்ந்து கொள்வான்,” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதன் தாத்பரியமாகும்.
“ஏ விசிாரந்தி யடையும்படியான ஆத்மாவே! உன்னுடைய ரக்ஷகனிடத்திற்கு நீ அவனோடு திருப்தியடைந்து கொண்டும் அவன் உன்னோடு திருப்தியடைந்து கொண்டும் இருக்கு நிலையிலே மீளுவாயாக; ஆதலின், என்னுடைய அடியார்களுள் சேர்ந்துகொள்; மேலும் என்னுடைய சுவர்க்கத்துக்குள் புகுந்துகொள்,” என்று அல்லாஹுத் தஆலாவே தன் அழகிய திருமறையில் அருளியுள்ளான்.
ஆதலின், முஸ்லிம் நேசர்காள்! நன்மையைக் கடைப்பிடித்துத் தின்மையை அறவே அகற்றுங்கள். உங்கள் மனைவி மக்கள், சகோதரர் சகோதரிகள், சுற்றத்தார், மற்றையோர், சமூகத்தினர், தேசத்தினர் ஆகிய எல்லோரையுமே சன்மார்க்கத்தின் பக்கல் அழையுங்கள். அதனால் ஆண்டவன் உங்களுக்கு அதிகமான நன்மையைக் கொடுப்பான். ஆண்டவன் பாதையில் அறியாத மாக்களை அழைப்பதினும் தலை சிறந்த கைங்கரியம் இத் தரணியில் வேறென்ன இருத்தல் சாலும்? எனவே, நீங்கள் இகத்தில் நல்ல விசிராந்தியையும் பரத்தில் மேலான “லிக்கா”வென்னும் மோக்ஷப் பேரானந்தத்தையும் அடைவீர்களாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُِ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةًِ فَادْخُلِي فِي عِبَادِيِ وَادْخُلِي جَنَّتِيِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،