ரபீஉல் ஆகிர் மாத 3-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

آلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِه وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகிறேன். முதன் முதலாய் அண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

முஸலிம் சோதரர்காள்! நம்மெல்லோரையும் ஈமானின் பக்கல் நடாத்தியவனும் கருணைக்குரியவனும் குர்ஆனையருளியவனும் பிழைகளைப் பொறுத்தருள்பவனுமான அல்லாஹுத் தஆலாவை நாம் அனவரதமும் புகழ்வோமாக. அவனுடைய திருத்தூதரும் சன்மார்க்க நாதரும் தயாள மிக்கவருமான நபிகள் நாயகத்தையும் (ஸல்) போற்றி ஆசிமொழி கூறுவோமாக. அதன்பின்பு அறிந்து கொள்வீர்களாக:-

எவன் நற்கருமங்களைப் புரிகின்றானோ, அவன்தான் நன்னம்பிக்கை கொண்ட மூஃமினாவான். அவனது பிரயாசைக்கு யாதொரு குறைவும் மோசமும் செய்யப்பட மாட்டா. உண்மையாக அவைகளை நாம் காப்பாற்றி வைத்திருக்கிறோம்,” என்று ஆண்டவன் தன் திருமறையில் கூறியுள்ளான். ஆதலின், நம்மைச் சிருஷ்டித்த அல்லாஹ்வைக் குறித்து நாமெல்லோரும் அஞ்சிக் கொள்வோமாக. சதா சர்வகாலமும் அவனுக்கஞ்சி நாம் சற்கருமங்களையே புரிந்து வருவோமாக. நம்முடைய மதநம்பிக்கையை (ஈமானை) ஸ்திரப்படுத்திக் கொள்வோமாக. அவன்மீது பூரண பக்தியும் விசுவாசமும் கொண்டு, ஐங்காலமும் தவறாமல் தொழுகையெனும் வணக்கம் புரியக் கடவோமாக. என்னெனின், அந்த ஆண்டவன்பால் அச்சங்கொள்ளாதவன் அவனுடைய விரோதியாகிறான்; அவனுக்கு ஒரு காலமும் பலாஹென்றும் பாரமார்த்திக மோக்ஷஜயம் கிடைக்க மாட்டாது.

அந்த அல்லாஹ்வுக்காக ஏனையோருக்கு நற்கருமங்களைப் புரியாதவன் தூர்த்தனும் தீயவனுமாவான். அவனே உண்மையில் ஆண்டவன்மீது நன்னம்பிக்கையற்றவன். இப்படிப்பட்டவனுக்கு நரகமே கதியாகும். இன்னம், இறுதி வாழ்க்கையில் அவனுக்கு யாதொரு சுகமும் இன்பமும் கிட்டமாட்டா. அவன் செய்த தீய காரியங்களுக்குப் பிரதிபலனாக மாகொடிய தண்டனைகளையும் பெரிய வேதனைகளையுமேதாம் பெற்று அனுபவிப்பான். எனவே, இருதய பூஷணமும் அந்தகாரத்துக்கோர் அழகிய தீபமுமாய ஏக இறைவன் கொள்கையை உங்கள் மனத்துள் மிக்க உறுதியாய்க் கொள்ளல் வேண்டும். இதுவே இஸ்லாத்தில் போதிக்கப்பட்டுள்ள “ஈமா”னாகும். ஈமானில்லாதவன் – முஸ்லிமாக இல்லாதவன் ஆண்டவனருளிய சன்மார்க்கத்திலே செல்வது முடியாது. இப்படிப்பட்டவனுக்குக் கடவுளின் கருணையும், கடாக்ஷமும் கிட்டமாட்டா.

அல்லாஹ்வின் அதிமுக்கிய கட்டளையாகிய ஐங்காலத் தொழுகைகளையும் தொடர்ந்து எப்பொழுதும் தவறாமல் நியமமாய்த் தொழுதுவரல் வேண்டும். இத் தொழுகையே இஸ்லாத்தின் ஒரு முக்கிய அனுஷ்டானமும்  அண்டவனது திருவருட் செல்வத்தைப் பெறுதற்குரிய நல்ல முறையும் நம் அகத்தைப் பரிசுத்தப்படுத்தற்குரிய ஓர் அரிய சாதனமுமாகும். தொழுகை மானிடனைத் துராசாரத்தை விட்டு விலக்கி வைக்கிறது. இத்தகைய அரிய தொழுகையை அனுஷ்டிக்காதவனை ஆண்டவன் திரஸ்கரித்து விடுவான். அவன்மீது தனது சாபத்தைச் செலுத்துவான். இத் தொழாத பாவியின் கதி இறுதியில் அதோகதியாகத்தான் போய் முடியும். மேலும் இந்தத் தொழுகையைப் பற்றி ஆண்டவன் குர்ஆனில், “நிச்சயமாகத் தொழுகையானது (மனிதரின் அந்தரங்கத்தைத்) தீய பாபங்களை விட்டும், துர்க்கிருத்தியங்களை விட்டும் விலக்கிவைக்கும்,” என்று கூறுகிறான். எனவே, நிச்சயமாயத் தொழுகையாளி இவ்வுலகில் ஆத்மார்த்த பரிபக்குவம் பெறுவதடன், ஆண்டவனுடைய உண்மைப் பக்தன் என்பதற்குரிய பட்டத்தையும் பெறுகின்றான்; இப்படிப் பட்டவன் ஆண்டவனுடைய தியானத்திலுள்ள அரிய இன்பத்தைப் பெரிதும் பெற்றுக்கொள்ளுகிறான்.

ஆதலின், அன்பர்காள்! எவனொருவன் அல்லாஹ்வை விசுவித்து, அவனுக்கஞ்சியே தியானிக்கின்றானோ, அவனை ஆண்டவனும் இகபரமிரண்டிலும் மேன்மையுறச் செய்வான். எவன் ஆண்டவனை நினைவுகூருகின்றானோ, அவனை ஆண்டவனும் நினைவுகூர்ந்து அருள் சொரிகின்றான். எவன் நன்மையான கிரியைகளைப் புரிகின்றானோ, அவனே இறுதி வாழ்க்கையில் ஆண்டவனது கருணைக்கு ஆளாவான்; அவன்தான் சுவனலோக இன்பத்துக்கு உரியவனுமாவான்; நபிகள் நாயகத்தின் (ஸல்) ஸிபாரிஷென்னும் ஷபாஅத்துக்கு உடையவனுமாவான். இறுதியில் அல்லாஹ்வின் திருவுருவைத் தரிசிக்கும் “லிக்கா” வென்னும் பாக்கியமும் பெறுவான்.

ஆதலின், முஸ்லிம் நேசர்காள்! நீங்கள் ஒவ்வொருவரும் இன்று தொட்டு எல்லாவிதமான துன்மார்க்கங்களையும் விடுத்துச் சற்குணம் குடிகொண்டு நற்கருமம் புரிவீர்களாக. இன்று காறும் தெரியாமல் ஆண்டவன் கட்டளைக்கு மீறிச்செய்து விட்ட தீக் கருமங்களுக்காக அல்லாஹ்வினிடம் தவ்பா (பிரார்த்தனை) புரிந்து, மன்னிப்புக் கேட்டுக்கொள்வீர்களாக. இஸ்லாத்தின் போதனைகளையும் குர்ஆனின் கட்டளைகளையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) நீதிகளையும் சிரமேற் கொண்டு, அவற்றின்படி சிறிதளவும் பிறழாமல் நடந்து வருவீர்களாக. உங்கள் புறஉறுப்புக்களைத் தினமும் நீங்கள் பலமுறை சுத்தப்படுத்திக் கொள்வதேபோல், அல்லாஹ்வின் தியானத்தாலும் அவனது வணக்கத்தாலும் பக்தியாலும் உங்கள் அக உறுப்பினையும் அதிகம் பரிசுத்தப்படுத்தி, உத்தமசித்தராக ஆய்விடுவீர்கள்.

மேலும், ஆண்டவன் குர்ஆனில் கூறியிருப்பதாவது:- “நன்னம்பிக்கை கொண்டு நற்கருமங்களைப் புரிகிறவர்கள் (பற்றியென்றாலோ) – எந்தவோர் ஆத்மாவும் தன்னால் சுமக்க முடியாத அளவுக்கு நாம் அதன்மீது (சுமையைச்) சுமத்துவதில்லை (யாகையால்) – அவர்களே உத்தியானவனத்தில் வீற்றிருப்பவர்கள்; அதிலே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்” – (குர்ஆன், 7:42).

ஆதலின், அவனது சன்மார்க்கத்தில் ஒழுகிச் சம்மானம் பெறுவோமாக. அவனது கட்டளைக்குட்பட்டுக் கருணைப் பிரவாகத்தைப் பருகுவோமாக. நமது சகாயத்தைக் கோராத ஆண்டவனுக்கு நாம் நற்றவம் என்னும் பக்தியூழியம் புரிந்து, நமக்குரிய நற்பயனையடைவோமாக. நாம் ஒரு நன்மையான காரியத்தைப் புரிந்து அவனிடத்தில் பல உண்மைகளைப் பெறுவோமாக. இவ்வுலகில் நாம் பக்தியில் ஈடுபட்டிருந்து, அவ்வுலகில் ஆண்டவனுடைய அடியார்களாய்ப் பரிணமிப்போமாக. நபிகள் நாயகத்தின் (ஸல்) மீது முழுவிசுவாசமும் கொண்டு, அவர்களுடைய போதனைப்படி ஒழுகி, இறுதி வாழ்க்கையில் தகவுரையென்னும் ஷபாஅத்தைப் பெற்று உய்வோமாக. நமது ஆத்மாவை இறைவணக்கத்துக்குரிய பாதையிலே செலுத்திப் பக்குவப்படுத்திக் கொள்ளக் கடவோமாக. இகத்தில் நல்ல மனிதர்களாகவும் பரத்தில் சுவனவாசிகளாகவும் ஆய்விட முயற்சியெடுப்போமாக. ஆதலின், எல்லாம் வல்ல இறைவன் நம்மெல்லோரையும் இகபரமிரண்டிலும் தன் இனிய பக்தர்களாகச் செய்து, தனது திருவடி நிழலின் கீழே வைத்து உய்யச் செய்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment