துல்ஹஜ் மாத 4–ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ الَّا اللهُ وَحْدَهُ لَّا شَرِيْكَ لَهُ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

எம் முஸ்லிம் நேசர்காள்! சென்ற வாரத்தில் சிற்சில நற்போதங்களை அடைந்திருக்கின்றீர்கள். எனவே, அதே தோரணையில், ஹஜ்ஜின்போது செய்யும் குர்பானீ என்பதென்ன? அதன் தாத்பரியங்களென்ன? என்னும் விஷயத்தை இன்னம் சிறிது கவனிப்பீர்களாக:

இம்மாதிரியான குர்பானீயென்னும் பலியைக் கொடுத்தால்தான், இப்ராஹீம் (அலை) அவர்கள் தேடிக் கண்டுபிடித்த உண்மையான (நேரான) மார்க்கத்தில் நாமும் சேர்ந்து ஆண்டவனுடைய கலீலாகவே போய், அவனுடைய கலீல் சென்ற தியாக மார்க்கத்தை ஒருசிறிதும் உணர்ந்துகொள்ளுதல் முடியும்; இன்னம், இவ்வண்ணமாய குர்பானீயைச் செய்ய எண்ணமுடையவர்களாய் நாம் இருந்தால் மட்டுமேதான், “நாங்களும் முஸ்லிம்கள்தாம்; நபிகள் (ஸல்) அவர்களைப்பின் பற்றி நடப்பவர்களாய்த்தாம் இருக்கிறோம்; எம்பிரான் (ஸல்) உண்மை நேயர்களான சஹாபாக்கள் சென்ற வழியிலேயே நாங்களும் ஒழுகி வருகின்றோம்,” என்றுரைத்தல் சாலும்.

மேலே கேட்கப்போகும் உபதேசங்களின்படி நடந்து குர்பானீ செய்வது, இஸ்லாம் மதத்தைச் சார்ந்த நம் நேயர்கள் நாடுவார்களாயின், ஒரு கஷ்ட சாத்யமான காரியம் என்றெண்ணிவிட மாட்டார்கள். “மனிதர்களின் திண்ணிய எண்ணம் மலைகளையும் தகர்த்தெறியும்,” என்பது உலகமறிந்த ஓர் உண்மை. எனவே, எம் நண்பர்கள் கவனிப்பார்களாக.

அன்பீர்! நாம் இரு லோகத்திலும் வெற்றிபெற விரும்புவோமாயின், இல்லை, ஆண்டவனது அருளையும் அன்பையும் அப்படியே கொள்ளை கொள்ள வேண்டும் என்றெண்ணுவோமாயின், அத்தியாவசியமாய் ஆண்டவன் சொன்ன குர்பானீயைச் செய்து காட்ட வேண்டும். அதுபொழுதுதான் அவனுடைய மெய்யான அடிமைகளாய், இல்லை, அடியார்களாய் நின்றிலங்கலாம்; அவனது பேரருளையும் பெறலாம். இந்த குர்பானீயை நாம் எப்படிச் செய்து காட்டவேண்டுமெனின், முதன்முதலாய் இதற்கு மூல புருஷரான நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனோ நிலையை அடையச் சிறிதேனும் பிரயாசைப் படல் வேண்டும்.

ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி முதலிய சகல வஸ்துக்களையும் ஆண்டவன் பாதையில் அர்ப்பணம் பண்ண எக்காலமும் சித்தமாய் இருந்தார்கள். இதனால்தான் ஆண்டவனும் அவரைத் தன்னுடைய கலீலாக (நேயராக) ஏற்றுக்கொண்டதுமன்றி, அவர்கள் முஸ்லிமானவர்களாயும் இருந்தார்கள் என்று தன்னுடைய திருமறையில் திருவுளம் பற்றியிருக்கின்றான். இக்காரணம் பற்றியேதான் முஸ்லிம்களாகிய நாமும் அவர்களுடைய நேரிய பாதையிலே நடந்துசெல்ல வேண்டுமென்று கட்டளையிடப் பெற்றிருக்கிறோம். இக்காரணம் பற்றியேதான் ஹஜ்ரத் இப்ராஹீம் அவர்கள் சொன்ன மேலான வாக்கியத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் தொழுகைக்கு முன் சொல்லிக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.

எனவே, எப்படியேனும் முஸ்லிம்களாகிய நாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் நடந்து சென்ற பாதையில் நடந்து, ஆண்டவனுடைய நேயர்களாய் விளங்கவேண்டும் என்னும் இக் கருத்துக்காகவே நமது திருமறையில் அவர்களின் மேலான தத்துவம் பொருந்திய விஷயங்களெல்லாம் எத்தனையோ இடங்களில் எடுத்தோதப்பட்டிருக்கின்றன. அவ்வாறு மேலான பதவியை அடைந்திருந்ததனால்தான் நம் நபிகள் பிரான் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற பொழுது எல்லா நபிமார்களுக்கும் மேலான தரஜாவில் இவர்களைக் கண்டார்கள். என்னே அன்னவர்களின் தெய்வ பக்தி!

எனவே, இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்து காட்டிய குர்பானீயின் கருத்தை நாம் பலவாறாய்ச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். முதன் முதலாக நாம் உலகப் பொருள்கள்மீது வைத்திருக்கும் அளவு கடந்த அபிலாஷையைக் குர்பானீ செய்துவிட்டு, ஆண்டவனுக்குப் பிரியமுள்ள அடியாராய் நின்றிலங்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இரண்டாவதாக, “ஹமஜாத்திஷ் ஷயாத்தீன்களின்” வலையை அறுத்து உதறிக் குர்பானீ செய்து விட்டு, றப்பானீயும், ஹப்லுல்லாவுமான உண்மையான நேரியமார்க்க போதனைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

இஃதேபோல் மூன்றாவதாக, நம்மிடையே காணக்கிடக்கும் பிளவுகளையெல்லாம் குர்பானீ செய்துவிட்டு, ஏகதெய்வக் கொள்கையை இவ் வகிலத்தின் கண் உறுதியாய் நிறுவிச் சென்ற இச் சகோதரத்துவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

எல்லாம் நானே!” என்னும் அகங்காரத்தையும் மூர்க்கத்தனத்தையும் குர்பானீ செய்துவிட்டு, “எனக்கொன்றும் நன்று தெரியாது; ஆனால், என்னைவிட அறிவாளிகளும் ஞானிகளும் இவ்வுலகில் ஏராளமாய் இருக்கின்றனர்,” என்னும் சீரான குணம் குடிகொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்.

மேலே சொல்லி வந்ததேபோல், இன்னமும் எத்தனையெத்தனையோ விதமான குர்பானீகளைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இல்லையேல், பெயரளவில் மாத்திரம் நாங்களும் முஸ்லிம்கள்தாம் என்று சொல்வதிலொன்றும் பிரயோஜனமில்லை. இவ் வுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இஸ்லாத்தின் இனிய நற்போதனைகளையும் உபதேசங்களையும் உலகத்தவர்க்கெல்லாம் எடுத்துக்காட்ட வேண்டும். ஆதலின், “இதற்குப் பொருள் சிறிது வேண்டும்; முஸ்லிம்களாகிய நீங்களும் இதில் கலந்துகொண்டு, இதற்கான உதவியைப் புரிய வேண்டும்,” என்று சொல்லப்படுமாயின், காதில் விழுந்தும் விழாததே போலில்லாமல், உண்மை சஹாபாக்களின் உயரிய நடத்தையை மேற்கொண்டு, நீங்களும் இதில் கலந்துகொண்டு, தக்க உதவி செய்ய முன்வரல் வேண்டும். இன்னம், நம் சமூகத்தவரான முஸ்லிம்கள் உலகத்தின் கண் கெளரவம் வாய்ந்தவர்களே, உயிருள்ள வர்க்கத்தினர்களே, உணர்ச்சியுள்ள வகுப்பார்களேயென்று கொள்ளப்பட வேண்டுமாயின், நிச்சயமாய் நீங்கள் இவ்வாறான குர்பானீ செய்தே தீரவேண்டும்.

இஃது ஒரு பக்கல் கிடக்க. நம் முஸ்லிம்களுள் சிலர் சேர்ந்து கொண்டு ஒற்றுமையை நிலை நாட்டும் பொருட்டு ஒரு சங்கமோ, அல்லது சபையோ, மகாநாடோ ஏதோ ஒன்று கூட்டுகின்றனர். இவர்களின் கருத்துக்கு நேர் முரணாய்ப் பிறகு சிறிது போழ்தைக்குள் இன்னவர்களுக்குள் அபிப்பிராய பேதங்கள் உண்டாய் விடுகின்றன; ஒருவர் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்வர்; மற்றொருவர் அவ்வாறு செய்வது தகாதென அவருடன் சண்டைக்கு நிற்பர். ஒருவர் தம்முடைய அபிப்பிராய பேதந்தான் சரி; எல்லாரும் அதனையே கொள்ள வேண்டுமெனக் கூறுவர்; மற்றொருவர் அதற்கு நேர் முரணாய் நின்று வாதம் செய்வர். பிறகு அன்னவர்கள் இவ்வபிப்பிராய பேதங்களை அபிப்பிராய பேதமளவில் வைக்காது, சொந்தப் பகைமையாகவே கருதத் தலைப்பட்டு விடுவர். அதன் பிறகு முஸ்லிம்களுக்குள் உண்டாகும் இன்னல்களையும் கேவலங்களையும் ஆபாசங்களையும் நாம் வெளியிலெடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் கவனிக்க வேண்டிய அத்தியாவசியமான விஷயமொன்றுண்டு, அஃதென்னவெனின், ஒவ்வொரு மனிதனும் தான் சொல்வதுதான் சரி: எதிரி சொல்வது தவறு என்றெண்ணும் எண்ணத்தைக் குர்பானீ செய்து விட்டு, “நாம் சொல்வதும் செய்வதும் தவறாயிருக்கலாம்,” என்பதை முதன் முதலாய் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதேயாம்.

சோதரர்காள்! இனி மிருக உணர்ச்சியை நாம் எவ்வாறு பலியிட வேண்டுமென்னும் விஷயத்தைக் கவனிப்போம்: மிருக உணர்ச்சி “அம்மாராவை” ஏராளமாய் நம்முள் உண்டாக்காமலிருக்கும் வண்ணம் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாய் இருப்பதல்லாமல், அதனை அடியோடு குர்பானீ செய்து விடவும் வேண்டும். ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களின் அருந்தவப் புதல்வரான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடச் சென்றபோது, ஒரு கொழுத்த தும்பையாடான உயிர்ப் பிராணியை (மிருகத்தை) யேதான் பலியிறுத்தார்கள். பிள்ளையாயினும், வேறெதுவாயினும், அதையெல்லாம் ஆண்டவன் பாதையிலே பலியிடும் மனோ தைரியமுடையவர்களாய் இருந்தார்களேயல்லது, இறுதியில் பிள்ளையான ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் கொன்று பலி கொடுக்கவில்லை.

இன்னம் இவர்களது மனோ நிலைமையையும் இவர்கள் கொண்டிருந்த தெய்வ பக்தியையும் உலகத்தவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்று அல்லாஹ் நாட்டங் கொண்டிருந்தானேயல்லது, அவர்களின் கரத்தால் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் கொலை புரியும்படி செய்து, அவர்களைப் பரிதாபிக்கத் தக்க நிலைமையில் ஆக்கிட வேண்டுமென்று இரத்த வெறி கொண்டவனாய் இருந்தானில்லை. ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலி மேடையின் மீது கிடத்தி அங்குச் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் சரியாகச் செய்து விட்டு, இறுதியில் பிள்ளைக்கு ஈடாய் ஓர் ஆட்டுக் கிடாயையே பலிகொடுத்தார்கள் என்பதன் கருத்துகளுள், மனிதர்கள் தங்களுக்குள் வளர்ந்து கொண்டு வரும் ஹைவானியத்தான மிருகப் பிராணிகளின் குணங்களை அப்படியே பலி கொடுத்து விடுதல் வேண்டும் என்று சொல்வதும் ஒன்றாகும். இக் கெட்ட குணங்களை அம்மாராவுடன் லவ்வாமாவையும் சேர்த்துப் பலி கொடுக்கும் பழக்கத்தை மனிதர்கள், அவருள்ளும் சொந்தமாய் முஸ்லிம்கள் கைக்கொள்ளுதல் அத்தியாவசியமாம்.

எனவே, எம் முஸ்லிம் நேசர்கள், ஹஜ்ஜுப் பெருநாளின் போது செய்யும் குர்பானீயின் காலத்தில் “இந்த உயிர்ப் பிராணியை ஆண்டவன் பாதையில் யான் பலியிட்டதே போல், என்னுடைய கெட்ட (மிருக) குணங்களையும் பலி கொடுத்து விட்டேன்,” என்ற எண்ணங் கொண்டு அதை அமலிலும் செய்து காட்ட வேண்டும். இம்மாதிரியான மனோ நிலைமையைக் கொண்டுதான் நபிகள் (ஸல்) அவர்களும் அவர்களின் உண்மை நேயர்களான சஹாபாக்களும் தாபியீன்களும் இன்னம் அவர்களைப் போன்ற முன்னோர்களும் குர்பானீ செய்துகொண்டு வருகின்றனர். இந்த காலத்திலோ அநேகமாய் அந்தக் கருத்தைத் தள்ளிவிட்டு, குர்பானீயென்றால் ஓர் உயிர்ப் பிராணியைப் பலியிட்டு, அதன் மாம்சங்களைத் தாங்களும் மற்றவர்களும் தின்னுவது மட்டுந்தான் என்று எண்ணும் படியான நிலைமைக்கு முஸ்லிம்கள் இழிந்து வந்து கொண்டிருக்கின்றனர். என்னே காலத்தின் திரிபு! இதைக் கண்டதனால்தான் ஏனைச் சமயத்தவர்கள் இஸ்லாத்தில் கடவுள் அனாவசியமாய் ஜீவவதை புரியும்படி செய்து, இரத்த வெறி கொண்டவனாய் இருக்கிறான் என்று ஏளனம் செய்கின்றனர்.

ஆதலால், எம் முஸ்லிம் நேசர்கள் முன்னோர்கள் கொண்டிருந்த மனோ நிலைமையைக் கவனித்து, உயிர்ப் பிராணியைக் குர்பானீ செய்வதுடன், தங்கள் பாலுள்ள மனோ இச்சையையும் (அம்மாராவையும் லவ்வாமாவையும்) அத்தியாவசியமாய்ப் பலியிடல் வேண்டும். அன்றியும், அவ்வாறே தங்களுக்கிடையில் கிடந்துழலும் பகைகளையும் விரோதங்களையும் குர்பானீ செய்ய வேண்டும்.

ஏ ஆண்டவனே! எங்களது இக் கோரிக்கையை நிறைவேற்றித் தந்தருள்வாயாக! எங்களெல்லாரையும் உன் குர்பானீயின் உண்மைக் கருத்தை உணரச் செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: tmcng.net

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment