கேடுகாலத்தின் உதயம்

அல்லாஹுத்தஆலா மனித இனத்துக்கென்று சிருஷ்டி செய்துவிட்டிருக்கிற விசித்திரமான பலஹீனத்துக்கு – கொடிய இப்லீஸுக்கு – எவர் அறிவிழந்து அநியாயமாய்ப் பலியாகிவிடாமல்

அதி சாமார்த்தியமாகத் தப்பிக் கொள்கிறாரோ அவரே மனிதருள் மஹாசிரேஷ்டராகவும் வெற்றி வீரராகவும் கணிக்கப்படுகிறார். ஆனால், அப்படிப்பட்ட நல்ல பண்பு வாய்க்கப் பெற்றவர் மிகச் சிலராகவே இத் தரணியில் விளங்கி வருகின்றனர். என்னெனின், ஒரு மனிதன் சற்றுமே எதிர்ப்பார்த்திராத உன்னதமான உச்சத்தை எட்டிப் பிடித்ததும், தன்னையறியாமலே தன் புதைகுழியைத் தானே தோண்டிக் கொண்டு விடுகிறான். முஈஜுத்தீன் ஐபக் இவ் விதிக்கு விலக்கல்லர்.

அவர் ஏகபோக சுல்தானாக உயர்ந்த சில மாதங்களுக்குள்ளே புர்ஜீகளை மிகவும் பலம்பெறச் செய்துவிட்டார். புர்ஜீகளும் ஸாலிஹ் ஐயூபியின் காலந்தொட்டு இம் மாதிரியான ஒரு சுல்தானுக்காகவே தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தமையால், அவர்களுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்ததைப் போலிருந்ததது. வெறும் வாயை மெல்லுகிற அம்மையார் ஒரு பிடி அவல் அகப்பட்டால் சும்மா விடமாட்டாரென்பதுபோல், இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கிடந்த அவர்கள் தேன் குடித்த நரி மாதிரியே அகமகிழ்ந்தார்கள். தூரான்ஷாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பலமொடுங்கிக் கிடந்த அந்த மம்லூக்குகள் இதுபோது அதிகமான சக்தியைப் பெற்றுக்கொண்டு விட்டார்கள்.

புர்ஜீகளின் கை ஓங்க வோங்க – அதிலும், பஹ்ரீயாயிருந்த முஈஜுத்தீனால் அவர்கள் கை உயரவுயர, ருக்னுத்தீனை உள்ளிட்ட எல்லா பஹ்ரீகளுக்குமே ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிவழியத் துவங்கிவிட்டன. ஷஜருத்துர் முஈஜுத்தீனைக் கணவராக வரித்துக்கொண்ட செய்கையே ஜாஹிர் ருக்னுத்தீனுக்குச் சொல்லொணா மனக் கசப்பையும் ஆற்ற முடியா ஆத்திரத்தையும் ஊட்டிவிட்டனவென்பதை நாம் முன்னமே சுட்டிக் காட்டினோம். அப்படிப்பட்ட பேரதிருப்தி கொண்ட ருக்னுத்தீன் இத்தனை நாட்களாக நடந்துவந்த அத்தனை நாடகங்களையும் திரை மறைவிலிருந்தே மிக நுணுக்கமாகக் கவனித்து வந்திருந்தார். ஆனால், இப்போது நடக்கத் துவங்கியுள்ள பேராபத்தை இனியும் வளரவிட எங்ஙனம் மனந்துணிவார்? மிகக் கடுமையாக ஆலோசித்தார். வருவது வரட்டு மென்று, மீண்டும் ஷஜருத்துர்ரையே தக்க ஆயுதமாகப் பிரயோகிக்க வேண்டுமென்று முடிவுசெய்து கொண்டு விட்டார்.

ஒரு மங்கலான நிலவொளி நிறைந்த அரைகுறையான இருளிலே ஷஜருத்துர் தம்முடைய பளிக்கறையில் ஏகாந்தமாகக் குந்திக்கொண்டு ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்திலுள்ள அடர்த்தியான புதரிலிருந்து சலசலத்த ஒலிகேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்த்தார். அங்கே தூண்மறைவில் ஒரு மனிதவுருவம் வந்து நின்றதைக் கண்டதும், அவ்வம்மையாருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“யாரது?” என்று துணிச்சலுடன், ஓர் அதட்டு அதட்டிக் கேட்டார்.

அவ்வுருவம் மெல்ல மெல்ல நடந்து, ஷஜருத்துர்ரின் எதிரில் வந்து சாந்தமாக நின்று, முகமூடியிட்டிருந்த தன் வதனத்தைச் சற்றே திறந்தது.

“ஆ! ருக்னுத்தீன்!….” என்று ஆச்சரியத்துடன் விளித்தார் ஷஜருருத்துர்.

“உஸ்ஸ்….! சப்தம் போடாதீர்கள். யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! யான் தங்களை இதுகாறும் மறந்ததுமில்லை, இனி மறக்கப் போவதுமில்லை. ஆனால், அடியேனைத் தாங்கள் தாம் மறந்துவிட்டீர்கள்.”

ஷஜருத்துர்ருக்கு வியப்பும் ஆச்சரியமும் தோன்றி மறையும்போதே, பழங்காலச் சம்பவங்களெல்லாம் ஒன்றாய்ப் படையெடுத்து வந்து, அவருடைய ஹிருதய கமலத்தில் ஓராயிரம் ஊசிகளால் ஏககாலத்தில் குத்துவதைப் போன்ற சகிக்கொணா வேதனையை உண்டாக்கிவிட்டன.

“நான் உம்மை எப்படி மறக்கமுடியும், ஜாஹிர்? எவ்வளவு ஒளி வீசும் சூரியனாயிருந்தாலும், கிரஹணத்தால் பீடிக்கப்பட்டால் இருள்தானே ஏற்படுகிறது? அஃதேபோல், நான் எவ்வளவுதான் சக்திமிக்கவளாய் இருந்தபோதினும், சென்ற சில ஆண்டுகளாக ஓயாத கிரஹனத்தால் நான் ஒளியிழந்து போகவில்லையா? இத்தனை நாட்களாக என்னை யார் ‘ஸாஹிபா’ என்றோ ‘ஜலாலத்தில் மலிக்கா’ என்றோ அழைத்தார்கள்? நீரேகூட இன்றுதானே துணிச்சலுடன் அப் பட்டத்தைச் சூட்டுகிறீர், பல மாதங்களுக்குப் பிறகு?”

“ஸாஹிபா! சென்று போன விஷயங்களைப்பற்றிப் பேசி நேரங் கடத்துவதற்கோ, உதவாத வீண் வார்த்தைகளைப் பேசிப் பொழுதைப் போக்குவதற்கோ யான் இதுசமயம் இங்கு வரவில்லை. ஆனால், தங்களிடம் நேரில் ஒரு விஷயத்துக்கு மட்டும் தங்கள் பதிலைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டு போவதற்கே இப்போது இங்கு வந்து சேர்ந்தேன்,” என்று கண்டிப்பான தோரணையில் தெளிவான தொனியுடனே ஜாஹிர் ருக்னுத்தீன் பேசிய வார்த்தைகளைக் கேட்டதும், ஷஜருத்துர்ரே கூடக் கலங்கிப் போயினார். என்னெனின், தூரான்ஷாவைப் பழிவாங்குவதற்கு முன் ருக்னுத்தீன் பேசிய தொனியையே இதுவும் முற்றமுற்ற நிகர்ந்திருந்தது: அல்லது இன்னம் சற்றுக் கடுமையாய் இருந்ததென்னலாம்.

“ருக்னுத்தீன்! இப்போது என்ன பேராபத்து வந்துவிட்டது?” என்று ஒன்றுமறியாத பரம சாதுவேபோல் பசப்பி வினவினார் ஷஜருத்துர்.

“என்ன பேராபத்து வந்துவிட்டதா! இன்னம் என்ன வரவேண்டியிருக்கிறது? – அதெல்லாம் சரி. நாங்கள் தங்களுக்காகவே பாடுபட்டோம்; தங்களுக்காகவே உதிரம் சிந்தினோம்; தங்களுக்காகவே தியாகம் புரிந்தோம்; தங்களுக்கே முற்றிலும் அர்ப்பணமாகினோம். எல்லாம் எதற்காகத் தெரியுமா? தங்களையே வலுப்பமுள்ள ஒரு பக்கா சுல்தானாவாக உயர்த்தி விடுவதற்காகத்தான்! தாங்கள் சுல்தானாவாயிருக்க விரும்பா விட்டால், என்னிடம் இப்போதே சொல்லி விடுங்கள்! தாங்கள் சன்னியாசினியாகவும் முற்றுந்துறந்த முனித் துறவியாகவும் மாறிவிட்டீர்களென்றால், அதையும் என்னிடம் இந்த க்ஷ­ணத்திலேயே வெளிப்படையாய்ச் சொல்லிவிடுங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இல்லையேல், தாங்கள் எந்த நீசசண்டாளத் துரோகியிடம் தவறுதலாகத் தங்கள் ‘லகானைக்’ கொடுத்திருக்கிறீர்களோ, அவனிடமிருந்து உடனே அதைப் பிடுங்கிப் பற்றிக்கொண்டு விடுங்கள். அல்லது தாங்கள் அப்படிச் செய்ய முடியாது என்பதையாவது இப்போதே என்னிடம் கூறிவிடுங்கள்.”

மதியூகியான ஷஜருத்துர்ருக்கு ருக்னுத்தீன் பேசிய கண்டிப்பான வார்த்தைகளின் அர்த்தம் இன்னதென்பது மிகத் தெளிவாய்த் தெரிந்துவிட்டது. எனவே, விஷயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதென்று துணிந்தார்.

“ஏ, என்னருஞ் ஜாஹிர்! வழிப்போக்கர் காலில் தைத்த முள்ளை முள்ளாலேயன்றோ வாங்கவேண்டும்? நான் என்ன சிறு பிள்ளையா? எல்லாவற்றையும் நான் கண்டும் கேட்டும்தானே வருகிறேன்? எல்லாக் கேடுகாலங்களும் இப்போதுதான் உதயமாகிப் பிஞ்சாக இருக்கின்றன. கொஞ்சம் முற்றட்டுமென்றுதான் பொறுமையாய்க் காத்திருக்கிறேன். நீரும் என்னைப்போல் இன்னம் சிறிது பொறுமையைக் கடைப்பிடியுமே. முடிவு என்னாகிறதென்பதைப் போகப்போகத் தெரிந்து கொண்டு விடுகிறீர்!”

“இன்னமும் முற்ற வேண்டுமா? அப்படியானால், எல்லா பஹ்ரீகளும் அடியுடன் தொலைக்கப்படுகிறவரை காத்திருக்க வேண்டுமென்று தாங்கள் உபதேசிக்கிறீர்கள் போலும்? பேஷ், பேஷ்!- எங்கள் பொறுமையென்பது முகடு முட்டிவிட்டது. இனி ஓர் அரைக்கணங்கூட நாங்கள் பொறுக்கப்போதில்லை. எனினும், இறுதியாகத் தங்களிடம் ஒருவார்த்தை சொல்லிவிட வேண்டுமென்பதற்காக மட்டுமே இத்தனை நாட்களுக்குப் பிறகு தங்களை நெருங்கியிருக்கிறேன். தங்களை மலிக்காத்துல் முஸ்லிமீனாக்கியவன் நான். எனவே, தங்கள் உத்தரவில்லாமல் எதையும் செய்யக்கூடாதென்னும் வீண் சம்பிரதாயத்துக்காக மட்டுமே தற்போது தங்களை யண்மினேன். சரியென்றால், தங்கள் உத்தரவின்மீது எங்கள் பழியைத் தீர்த்துக் கொள்வோம்; இல்லையென்றால், தங்கள் உத்தரவின்றியே எங்கள் காரியத்தை செய்து முடிப்பதாகச் சபதம் செய்துகொண்டிருக்கிறோம். ஆண் சிங்கமாகிய அஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபிக்குச் அடிபணிந்த நாங்கள், இந்த ஆட்டுக் குட்டியாகிய ஐபக்குக்கு அடிபணிய முடியுமோ?”

“ருக்னுத்தீன்! ஏன் பதஷ்டமடைகிறீர்? அரசாங்கச் சிக்கல்களில் முடிச்சு விழுந்துவிட்டால், அதை மெல்ல மெல்லவும் நிதானமாகவுமே நாம் அவிழத்துவிட வேண்டுமென்பதையும் இன்றேல், அவசரப்பட்டுத் தாறுமாறாய் இழுப்போமானால், சிறிய சிக்கல் கரடுமுரடான பெருஞ் சிக்கலாய்ப் போய்முடியுமென்பதையும் நம் அனுபவங்கள் நமக்கு அறிவுறுத்தவில்லையா?”

“ஸாஹிபா! வேதாந்தமும் சித்தாந்தமும் பேசிக்கொண்டு வீண் பொழுதை ஏன் கழிக்கின்றீர்கள்? செப்பனிட முடியாத செருப்பை அக்கணமே கழற்றி எட்ட விட்டெறிவதை விடுத்துத் தத்துவார்த்தம் பேசிக்கொண்டேயிருந்தால், என்ன லாபம் கிட்டப்போகிறது? – நாங்கள் ஐபக்கை இக் கணமே ஒழித்துத் தீர்க்க வேண்டும். இதற்குத் தங்களின் ஒத்துழைப்பில்லாவிடினும், உத்தரவு மட்டுமாவது உடனே வேண்டும். பின்னொரு காலத்தில் தாங்கள் என்மீது பழிசுமத்தக் கூடாதே என்பதற்காக என் கைகளைக் கழுவிவிட்டு விடவே தற்சமயம் தங்களை யண்மியிருக்கிறேன். சீக்கிரமே ‘சரி’சொல்லுங்கள். தங்களை மீட்டும் விதவையாக்கிவிட நேருமே என்பதற்காக மட்டுமே நான் இத்தனை நாட்களாக என் பற்களைக் கடித்துக் கொண்டே காலங் கடத்தினேன். இப்போது….”

“ருக்னுத்தீன்!” என்று ஷஜருத்துர் அதட்டிய அதட்டலில் அவ் வீரருடைய வார்த்தைகள் அப்படியே டக்கென்று நின்றுவிட்டன.

“இந்த நாட்டையும் பஹ்ரீகளையும் காப்பாற்றுவதற்காக நான் ஒருநூறு முறை விதவையானாலும், அல்லது என் உயிரையே இழக்க நேர்ந்தாலும் கவலைப்படபோவதில்லை. உங்களையெல்லாம் நான் மறந்துவிட்டேன் என்று நீர் கூறுவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. ஷஜருத்துர் எப்படிப்பட்டவளென்பதை நீர் இன்னம் அறிந்துணரவில்லையே!”

“ஸாஹிபா! என்னை மன்னியுங்கள். தாங்கள் பேசுகிற குரலிலிருந்து தாங்கள் ஐபக் மீது எங்களெல்லாரையும்விடப் பன்மடங்கு அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டிருப்பதாக நான் விளங்கிக் கொண்டேன். எனினும், எல்லாமறிந்த தாங்கள் இன்னமும் நிதானமாகக் காலங்கடத்துவது எங்களுக்குப் பெரிய சுமையாயிருப்பதாலேயே ஏதேதோ பேசிவிட்டேன். இப்படியெல்லாம் தாங்கள் அந்த ஐபக்கை அடியோடு வெறுக்கிறவராயிருந்தும், ஏன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கிறீர்கள்?”

“நான் சும்மா இருக்கிறேன் என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டால், அதற்கு நானா ஜவாப்தாரி? ருக்னுத்தீன்! இதை மட்டும் நிச்சயமாக நீர் நம்பலாம்: என் உடலில் இறுதித்துளி இரத்தம் ஓடுகிறவரை இந்த ஸல்தனத்திலே பஹ்ரீகளையன்றி, வேறு எந்தவகை மம்லூக் கூட்டத்தினரும் உச்சத்துக்கு வரமுடியாது. தாற்காலிகமாக, இடையிடையே புர்ஜீகளின் கை ஓங்குவதை நீர் கண்டால், அஃது அவர்களுடைய நாச காலத்துக்கு அறிகுறியென்பதைத் திட்டவட்டமாய் உணர்ந்துகொள்ளலாம்! ஆனால், நீர் சற்றுப் பொறுக்கத்தான் வேண்டும்.”

ருக்னுத்தீனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருகணம் யோசித்தார். “அப்படியானால், அரசாட்சியை தாங்களே பற்றிக்கொண்டு விடுவீர்களல்லவா? என்னெனின், இந்தச் சண்டாளன் ஐபக் அரியாசனத்தில் வீற்றிருக்கிறவரை எங்களுக்கு விமோசனம் ஏது?” என்று நிதானமாக விளம்பினார் அந்த பஹ்ரீ தலைவர்.

“இதில் ஐயமென்ன வந்துவிட்டது? சுல்தானா ஷஜருத்துர் பரிசோதனைக்காகவே ஐபக்கிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, என்ன நடக்கிறதென்று பொறுமையுடன் வேடிக்கை பார்த்துவருகிறாள். பிறகு சில தினங்களில் அவள் என்ன செய்கிறாளென்பதை நீரே கண்டு திகைத்துவிடுவீர்.”

ருக்னுத்தீன் இச் சூசகமான வார்த்தைகளின் மெய்க்கருத்தை மிகநன்றாய்ப் புரிந்துக்கொள்ளும்படியான விதத்தில் அமைந்திருந்தது ஷஜரின் பதில். ருக்னுத்தீன் மெல்லத் தம் தலையை அசைத்துக்கொண்டார். குளிர்ந்து விரைத்துப்போய் மூலையில் செயலற்று முடங்கிடக்கிறார் ஷஜருத்துர் என்று தவறுதலாக எண்ணிக்கொண்டிருந்த ருக்னுத்தீனுக்கு, ராணி திலகத்தின் சூசனமான வார்த்தைகள் முற்றிலும் மாற்றமான அபிப்ராயத்தை உண்டுபண்ணிவிட்டன. எந்த நேரத்திலும் மாபெரு நெருப்புக்குழம்பைக் கக்கக்கூடிய ‘மெளன எரிமலை’யாகத்தான் ஷஜருத்துர் காணப்படுகிறார் என்பதை நன்கு கண்டுகொண்டார்.

“யா மலிக்கா! என்னை மன்னிக்கும்படி மீட்டும் யான் கேட்டுக் கொள்கிறேன். எங்களை என்ன செய்யவேண்டுமென்று இக்கணமே கட்டளையிடுங்கள்; அப்படியே செய்து முடிக்கிறோம்.”

“ருக்னுத்தீன்! தற்சமயம் பேசாமலிருந்து விடும். எனக்குத் தெரியும், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதும் எப்பொழுது உங்களுக்கெல்லாம் கட்டளையிட வேண்டுமென்பதும். நீர் முஈஜுத்தீனை இக்கணமே கண்ட துண்டமாய் வெட்டியெறிந்துவிடத் துடியாய்த் துடித்துநிற்கிறீர் என்பதை நான் மிகநன்றாய் அறிவேன். தூரான்ஷாவைத் தக்கவிதத்தில் பழிவாங்கிய நுமக்கு ஐபக்கைப் பழிதீர்த்துக்கொள்வது இயலாத காரியமென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், தூரான்ஷாவுக்கும் ஐபக்குக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.”

“ஸாஹிபா! என்ன வித்தியாசம் இருந்தால்தானென்ன? எங்களை உற்பத்தி செய்தவரும் ஊக்கி வளர்த்தவரும் உணவளித்தவருமாகிய அல்மலிக்குல் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி மர்ஹூம் அவர்களுடைய ஒரே புத்திரனாகிய அவனையே கிழித்தெறிந்த நான், இந்தப் பரம துரோகியாகிய ஐபக்கை எங்ஙனம் விட்டுவைப்பது? அல்லது இவன் அவனைவிட எந்தவகையில் சிரேஷ்டமானவன்? தாங்கள் இவனை இன்னம் எதற்காக உயிருடனே விட்டுவைக்க வேண்டும்? எனக்கு அதுதான் புரியவில்லை.”

ஷஜருத்துர் வெறுப்புடன் பெருமூச்செறிந்தார். “ருக்னுத்தீன்! உமக்கு எல்லாத் திறமையும் இருந்தாலும், உமக்கிருக்கிற உத்வேகத்தில் முக்கியமான விஷயங்களையும் மறந்து விடுகின்றீர். தூரான்ஷாவை விட ஐபக் பொல்லாதவரே என்பது உண்மைதான். அவனைத் தொலைத்ததைவிட இவரைச் சீக்கிரம் ஒழிப்பதும் முக்கியந்தான். ஆனால், அவனுக்கும் இவருக்கும் முக்கியமான வித்தியாசமொன்று இருப்பதை நீர் பார்க்கவில்லையா? தூரான்ஷா செத்தொழிந்த பிறகு அவனுடைய அந்தஸ்துக்கு உயர்வதற்கு அவன் எந்தப் பிள்ளையையும் விட்டுச்செல்லவில்லை. எனவே, அவன் ஒழிந்ததுடனே அவன் சந்ததியும் இல்லாதொழிந்தது. ஆனால், இந்த முஈஜுத்தீன் ஐபக் ஏற்கெனவே நூருத்தீன் அலிக்குத் தந்தையாயிருக்கிறார் என்பதையும், இவரை ஒழித்துக்கட்டினால், அந்தச் சிறுவனையே புர்ஜீகள் பட்டத்துக்கு உயர்த்தச் சதிசெய்வார்கள் என்பதையும் நீர் யோசிக்கவில்லை போலும்!”

ஜாஹிர் ருக்னுத்தீன் ஷஜருத்துர்ரின் தீர்க்கமான இவ்வார்த்தைகளைக் கேட்டு அப்படியே திகைத்துப்போயினார். சகலகலாவல்லியாகிய ஷஜருத்துர்ரின் இக் கூற்றைத் தவறானதென்று அவர் எங்ஙனம் மறுத்துப் பேச முடியும்? எனவே, ஷஜருத்துர்ரின் புத்திக் கூர்மையைக் கண்டு, பெரிதும் வியப்புற்ற வண்ணம் பேசாமலே நின்றார்.

ஏ, பஹ்ரீ தலைவரே! ‘அந்த நூருத்தீன் அலீயையும் சேர்த்து ஒழித்துவிட்டால் என்ன?’

“ஏ, பஹ்ரீ தலைவரே! ‘அந்த நூருத்தீன் அலீயையும் சேர்த்து ஒழித்துவிட்டால் என்ன?’ என்று நீர் சிந்திக்கிறீர். அதுதான் சுலபமாக முடிவுகாண முடியாத பெரும் பிரச்சினையாய் இருந்துவருகிறது. என் மூளை அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதிலேதான் இப்போது முனைந்து நிற்கிறது. எனவேதான், உம்மைப் பொறுமையுடன் இருக்கச் சொன்னேன். நீர் என்னை இப்படியே தனித்து விட்டுவிட்டுப் பேசாமற் போய் விசிராந்தியாய் இருக்கக்கடவீர்! உங்களெல்லீரின் அரிய நண்பி ஷஜருத்துர் ஒருகாலும் உங்களைக் காட்டிக் கொடுக்கவு மாட்டாள்; கைவிடவு மாட்டாள் என்பதை நிச்சயமாய் நம்பும்!”

துடியாய்த் துடித்து, பதையாய்ப் பதைத்து, துள்ளிய உள்ளத்துடனே வந்து தோன்றிய சிலுவை யுத்த வீரரின் கோபத்தை ஷஜருத்துர் இப்போது ஜில்லென்றிருக்கும் பனிக்கட்டியைப் போலே உறையச் செய்துவிட்டார். ருக்னுத்தீனுக்கோ, இன்னது பேசுவதென்று ஒன்றும் புரியவில்லை.

“யா ஸாஹிபா! எல்லா பஹ்ரீகளின் சார்பாகவும் யான் தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் உபதேசித்தபடியே நாங்கள் பொறுமையுடனிருக்கிறோம். தங்களுக்குத் தெரியாததொன்று எங்குமில்லை; என்றுமில்லை. ஏழைகளாகிய எங்களுக்குச் சீக்கிரத்தில் விமோசனம் அளிக்க வல்லவர் எவரே இம்மிஸ்ரில் இருக்கிறார்?” என்று கூறிக்கொண்டே சிரங்கவிழ்ந்தார்.

“சரி; நீர் போகலாம்,” என்று முற்றுப்புள்ளி வைத்தார் ஷஜருத்துர்.

ருக்னுத்தீன் மரியாதையாய்க் குனிந்து ஸலாம் போட்டுவிட்டு, மங்கிய நிலவொளியில் மாயமாய் மறைந்துவிட்டார். ஷஜருத்துர்ரோ, அங்கேயே உத்தேசம் அரைமணி நேரம் மெளனமாய்க் குந்தி ஏதேதோ யோசித்துவிட்டு, நீரில் மிதக்கும் அன்னம்போலே நிதானமாக வழிநடந்து தம் அந்தப்புரத்தின் சயனக்கிருகத்துள்ளே சென்று பேசாமற் படுத்துக்கொண்டார்.

சற்றுநேரஞ் சென்று சுல்தான் முஈஜுத்தீன் வேகமாக அவ்வறைக்குள்ளே வந்து நுழைந்தார். அவருடைய முகத்தில் என்றுமில்லாத தைரியமிக்க தோற்றமும், எல்லாவற்றுக்கும் துணிந்து நிற்பவர் போன்ற தீரமும் காட்சியளித்தன. இதுவரை தம்மைப் போலி அரசராக, அல்லது யாசித்துப் பெற்ற நாட்டை ஆண்டவராகக் காட்சியளித்து வந்த அவர் இப்போது தம்மை எவரும் அசைக்கமுடியாத பக்கா சுல்தானாக ஆக்கிக்கொண்டு விட்டதாக எண்ணிவிட்டார் போலும்! எண்ணத்துக்கேற்ற நடை! நடைக்கேற்ற மிடுக்கு! மிடுக்குக்கேற்ற தோற்றம்! ஷஜருத்துர்ருக்கோ, இவற்றையெல்லாம் பார்த்ததும் வயிறு பற்றியெரிந்தது. பசித்திருக்கிற புலி முறைத்துப் பார்ப்பதைப்போல் தம் கணவரை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். முஈஜுத்தீனோ, ஷஜருத்துர்ரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் தம் மஞ்சத்திலேறிப் படுத்துக்கொண்டார். எல்லாம் கேடுகாலங்களின் அறிகுறியென்பதை அவர் எப்படி அறிவார்?

சற்றுநேரம் கடந்தது. ஷஜருத்துர் படுக்கையிலிருந்தபடியே எழுந்தமர்ந்தார்.

“ஏ, இம் மிஸ்ர் தேசத்துக்கு சுல்தானாயிருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பவரே! உம்முடைய தண்ணிழல் ஆட்சியின் குளிர்மை தாங்காமல் எல்லாரும் விறைத்துப் போகிறார்கள். எனவே, நாம் தாற்காலிகமாக உம்மிடம் ஒப்படைத்திருந்த எம் செங்கோலை இப்போது முதல் திரும்பப் பெற்று விடுவதாக முடிவு செய்துவிட்டோம். ஆகவே, நீர் இக்கணமே முடிதுறந்து விடுகிறீரா? அல்லது நாம் உம்மிடம் கொடுத்தபடி திரும்ப எடுத்துக் கொள்ளவா?” என்று கடுமையாகக் கேட்டார் ஷஜருத்துர்.

முஈஜுத்தீனுக்கு தூக்கிவாக்கிப் போட்டது! தேள் கொட்டியவரைப் போலத் துள்ளித் துடித்தெழுந்தார்.

“ஏ, ஷஜருத்துர்! மாட்சிமை தங்கிய இம் மன்னர் பிரானிடமா நீ இவ்வளவும் பேசினாய்?” என்று ராஜ அகங்காரத்துடன் கடாவினார் முஈஜ்.

ஷஜருத்துர் இதுகேட்டுப் பேய்ப்போலச் சிரித்தார்.

“என்ன! மாட்சிமை தங்கிய மன்னர்பிரானா? நீர் இன்று முதல் உமது பழைய உத்தியோகமாகிய அத்தாபேக்குல் அஃஸகிராக இந்த ஸாஹிபத்துல் ஜலாலத்தில் மலிக்கா ஷஜருத்துர் பேகம் ஸாஹிபாவால் ஆக்கப்பட்டு விட்டீர் என்பதைத் தெரிந்துக் கொள்ளவில்லைபோலும்! சொத்துக்கு உரியவளாகிய என்னிடமே இந்த மிஸ்ர் ஸல்தனத் என்னும் பொக்கிஷம் திரும்பவந்து சேர்ந்து விட்டதென்பதை நான் உமக்கு ஞாபகமூட்டுகிறேன். கலீஃபாவை ஏமாற்றுவதற்காகவே நாம் உம்மை மணந்தோமென்பதையம் அதற்காகவே நாம் தாற்காலிகமாக எம் ஸ்தானத்தில் வைத்துக் கொஞ்ச நாட்களுக்கு உம்மை உதவிபுரியச் செய்தோமென்பதையம் நினைப்பு மூட்டுகிறோம். இப்போது முதல் அப்படிப்பட்ட உம்முடைய உதவி எமக்குத் தேவையில்லையென்பதனால் உம்மை மரியாதையாகப் பதவியைவிட்டு விலகச் சொல்லுகிறோம். இஃது அரச ஆக்ஞை! உடனே பணியாவிட்டால் நீர் ராஜத் துரோகியாகக் கணிக்கப் படுவீரென்பதை மறந்துவிடாதீர்!”

பலிபீடத்தில் கொண்டுபோய் நிறுத்தப்பட்ட ஆட்டுக் கிடா விழிப்பதைப் போல் முஈஜுத்தீன் திருதிருவென்று திகைத்துக்கொண் டிருந்தபோதே, ஷஜருத்துர் வேகமாய் எழுந்துச்சென்று அவ்வறையின் கதவைத் தாளிட்டுக்கொண்டு அரசர் கழற்றித் தலைமாட்டில் வைத்திருந்த வாளாயுதத்தை வெடுக்கென்றெடுத்துப் பலமாய்ப் பற்றிக்கொண்டு, முஈஜின் முகத்தெதிரில் வந்து நின்றார். உருவிய வாளுடன் நிற்கிற குரூரச் சிலையைக் குழந்தைகள் பார்த்துத் துடிப்பதைப்போல் துடிதுடித்தார் மிஸ்ரின் போலி சுல்தான்!

“ஆம்! நீர் முடிதுறக்கிறீரா? அல்லது நாம் உம்மை முடிதுறக்கச் செயயவா?” என்று வாளை யோச்சியவண்ணம் எமதூதன் போலே கடாவினார் ஷஜருத்துர். ஆனால், முஈஜுத்தீனுக்குப் பேச நாவெழவில்லை. கையும் காலும் நடுநடுங்கின.

“ஏ, பேராசை பிடித்தவரே! இப்லீஸுக்கு இரையானவரே! உம்மை நான் இப்போது மிக நன்றாய்த் தெரிந்துகொண்டு விட்டேன். நீரல்லவோ மனப்பால் குடித்தீர்? உம்முடைய திருட்டுத்தனமான தந்திர யுக்திகளைப் பிரயோகித்து, புர்ஜீகளைப் பலம்பெறச் செய்துவிட்டு, என்னையும் ஒழித்துவிடுவதென்றல்லவோ நீர் கனவு கண்டு வந்தீர்? உண்மை அதுவல்ல! சகலமும் கற்ற ஷஜருத்துர்ருக்கு முன்னால் உம்முடைய இரகசியத் திட்டங்கள் எவையுமே உருப்பட முடியா! நீர் ஒரு சூழ்ச்சி செய்தால், நான் உமக்கெதிராக ஒன்பது சூழ்ச்சிகளைச் செய்யவல்லவள். நீர் ஒன்று நினைத்தால், நான் ஒன்பதாயிரம் நினைக்கச் சக்தி படைத்தவள். நீர் உம்முடைய உயிரைக் காப்பாற்றிக்கொண்டு இன்னம் சிறிது காலம் உலகத்தில் உயிருடனிருக்க நாடினால், மரியாதையாக நான் சொல்கிறவற்றைக் கேட்டு நடக்கவேண்டும். எமக்கும் நீர் புரிந்திருக்கிற துரோகச் செயல்களுக்கும் நான் போனாற் போகிறதென்று உம்முடைய உயிரைக் காப்பாற்றிவிட ஏன் நினைக்கிறேனென்றால், நான் உம்மை என் கணவராகக் கொண்டுவிட்ட ஒரே ஒரு பாபத்துக்காகத்தான்! எனவே, நீர் மறியாதையாய் உம்முடைய பட்டத்தைத் துறந்துவிட்டு, பேசாமல் இந்த அரண்மனையின் ஒரு மூலையிலே முடங்கிக் கிடக்க வேண்டும். இன்றேல், தூரான்ஷா தனியே புதையுண்டு கிடக்கிற கல்லறைக்குப் பக்கத்தில் உமக்காக ஒரு கப்ர் கட்டப்பட்டு விடும்! நானும் கடைசிவரை பொறுத்துப் பார்த்துவிட்டேன். என்ன சொல்கிறீர்? நாடாள வேண்டுமென்னும் உமது ஆசையையொழித்து, உம்முடைய வாழ்நாளைக் கொஞ்சம் நீடித்துக் கொள்ளுகிறீரா? அல்லது, சுல்தானாகவே இனியும் இருக்கவேண்டுமென்று பிடிவாதம் பிடித்து உம் மரணத்தைச் சீக்கிரமே வரவழைத்துக் கொள்ளப் போகிறிரா?” என்று ராக்ஷ­ஸி அலறுவதேபோல் கதறினார் நம் ஷஜருத்துர்.

முஈஜுத்தீனோ, செத்த பிரேதம் வாயைப் பிளந்ததுபோல், கண் நிலைக்குத்தி நின்றார். ஷஜருத்துர்ரைக் காமரச மோஹினியாகவே இதுவரை கருதிவந்த இந்தப் பிசாசு போன்ற பெண்ணரக்கியை எதிர்த்து நிற்கவும் மனந் துணியவில்லை. இப்போது தாம் உயர்தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால், அந்த அம்மையாருக்குச் சிரந்தாழ்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. அல்லது மிகத் தந்திரமாகப் பசப்பு வார்த்தைகளைப் பேசி, அவரை ஏய்க்க வேண்டும். ஏனைப் பெண்களாயிருந்தால், ஏமாற்றிவடலாம். ஆனால், ஷஜருத்துர்ரை எப்படி ஏமாற்ற முடியும்? முஈஜுத்தீன் நிலைதடுமாறினார். எனினும், சாவத் துணிந்தவன் எதற்கும் அஞ்சாமல் வருவது வரட்டுமென்று எதையும் செய்ய முற்படுவதேபோல், தம்முடைய வாயின் மேலண்ணத்துடன் உலர்ந்துப்போய்க் கெட்டியாய் ஒட்டிக்கொண்டிருந்த நாவைப் பலவந்தமாய் விடுவித்துக்கொண்டு பின்வருமாறு பேசினார்:-

“நான்.. எனக்கு… என்னை நீ அரசனாக்கிவிட்டிருக்கலாம்… ஆனால். நான் என் முடியைத் துறக்க வேண்டுமென்று சொல்வதற்கு மிஸ்ர் மக்களுக்கு மட்டுமே… இல்லை! உன்னை சுல்தானாவாக ஏற்றுக்கொள்வதற்கு…. அவர்களுக்கு மட்டுமே…”

“என்ன உளறுகிறீர்? நானிட்ட பிச்சையை உண்டு வளர்ந்த உமக்கு இவ்வளவு தைரியமா பிறந்து விட்டது? உம்மை வீழ்த்துவதற்கு மிஸ்ரிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீர் உமது நயவஞ்சகச் சூதுவேலைகளால் ஒரு சில புர்ஜீகளை உம்முடைய கையாட்களாக ஆக்கிக்கொண்டிருக்கறீர். அவர்களையே நீர் மிஸ்ரின் மக்கள் என்று தைரியமாகக் கூறுகின்றீர். அவர்கள் உம்மைத் தாங்கிப் பிடிப்பார்களென்று நீர் நினைக்கின்றீர். உம்மை எவள் அரசனாக ஆக்கி வைத்தாளோ, அவளுக்கேதான் உம்மை வீழ்த்தக்கூடிய உரிமையும் இருக்கிறது. உம்மை இதுவரை எவராவது மதித்தார்களென்றால், அது நீர் ஷஜருத்துர்ரின் கணவராயிருக்கிறீர் என்பதற்காகவேதான். உம்மை எவராவது ‘சுல்தான்’ என்றேனும், ‘மலிக்’ என்றேனும் அழைத்திருப்பாராயின், அது நீர் மலிக்கா ஷஜருத்துர்ரின் கொழுநர் என்பதற்காகவேதான். உமக்கு இந்நாட்டின் சிம்மாசனத்தின் மீது உரிமையிருக்கிறதாக நீர் கருதுவீரானால், அது நீர் சுல்தானா ஷஜருத்துர்ரின் கரத்தைப் பற்றிய பாத்தியத்தினால்தான்.

ஷஜருத்துர் இல்லாவிட்டால் நீர் இந்த அரண்மனையின் அந்தப்புரத்தை இறுதித் தீர்ப்பு நாள்வரை எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்

“எனவே, எந்த ஷஜருத்துர் இல்லாவிட்டால் நீர் இந்த அரண்மனையின் அந்தப்புரத்தை இறுதித் தீர்ப்பு நாள்வரை எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டீரோ, எந்த ஷஜருத்துர் உமக்குத் தண்டப் பிச்சையாக இந்நாட்டின் செங்கோலைத் தூக்கித் தயாவிஷயமாய்க் கொடுத்திராமற் போயின் நீர் இந்த அரியாசனத்தில் அமர வேண்டுமென்று கனவுகூடத் கண்டிருக்க மாட்டீரோ, அந்த ஷஜருத்துர் – மலிக்காத்துல் முஸ்லிமீன், மிஸ்ரின் சுல்தானா, ஸாஹிபா, ஜலாலா, மலிக்கா ஷஜருத்துர் இப்போது உம்மீது நடவடிக்கை எடுக்கிறாள். எந்த இன மம்லூக்குகளை வளரவிட்டால் இந்த ஸல்தனத் தகர்ந்துவிடுமென்று அவள் நினைக்கிறாளோ, அதற்குப் புறம்பாக நீர் செய்கிற துரோகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது இவ் வாளேந்தி உம்முன்னே நிற்கிறாள். இப்போதுங்கூட ஒன்றும் மிஞ்சிவிடவில்லை. பேசாமல் இக்கணமே நீர் முடிதுறந்து விட்டால், நல்லதாயிற்று. இன்றேல்…”

“ஷஜருத்துர்! பெண்ணாய்ப் பிறந்த உமக்கு இவ்வளவு துணிச்சலும் தைரியமும் பிறக்கமாயின், ஆணாய்ப் பிறந்துள்ள எனக்கும் கொஞ்சம் வீரமிருக்கும். நீ ஓட வோட வெருட்டியடிக்கறாய். நானும் உனக்கு எவ்வளவு மரியாதை காட்டமுடியுமோ, அவ்வளவையும் காட்டிவந்தேன். உனக்க நான் எவ்வளவு பயப்பட வேண்டுமோ, அதைவிட அதிகமா…”

“நிறுத்தும்! இரண்டு சுல்தான்கள் வீற்றிருந்த சிம்மாசனத்திலிருந்து ஒரு சுல்தானை வீழ்த்திய எனக்கு மற்றொரு சுல்தானாகிய உம்மை வீழத்துவது முடியாதென்கிற தைரியமிருந்தால், இக்கணமே கண்விழித்துக்கொள்ளும்! நீர் வீரராயிருந்தாலும் சரியே! வீராதி வீரராயிருந்தாலும் சரியே! இவ்வளவுடன் கண்விழிப்படைநது நீர் உம் முடியைத் துறந்து ஓடிவிடும்… ஆம்! நீர் ஓடிவிட்டாலும் சரியே!”

“நான் எதற்காக ஓடவேண்டும்? நானாவது இங்கே பிறந்தவன்; இங்கே வளர்ந்தவன். உனக்கு இங்கிருக்கிற அதிகாரத்தைவிட எனக்கு அதிகந்தான் இருக்கிறது. ஆனால், நீ என்னைவிடப் பேராசையதிகரித்து, இந் நாட்டினாட்சியைக் கவர நினைப்பாயாகில்…” என்று முஈஜுத்தீன் எண்ணிக்கொண்டார்; ஆனால், பேச முடியவில்லை. எனவே, நிலைமையைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட வேண்டுமென்று அவர் எண்ணிக்கொண்டு லலிதமாகப் பேசினார்:-

“என் கண்மணி! நானும் எத்தனையோ வகையான பாடங்களைப் படித்திருக்கிறேன்; கேட்டுமிருந்தேன். ஆனால், இன்று நீ விளையாடுகிறதைப் பார்த்தால், எனக்கே வேடிக்கையாயிருக்கிறது. முதலில் நான் ஏமாந்துபோய், இவ்வளவும் நீ நிஜமாக நடிக்கிறாய் போலும் என்று நினைத்துப் பயந்துகூடப் போய்விட்டேன். ஆனால், இதுவும் உன்னுடைய சாஹஸங்களுள் ஒன்றென்பதை நான் இப்போதுதான் கண்டு பிடித்தேன். ஏனென்றால், அதோ அந்தக் கதவை நீ நிஜமாகவே தாளிட்டு வந்தாயென்று நினைத்திருந்தேன். இப்போதுதான், நீ அதைத் தாழ்ப்பாளிடவில்லையென்றும், சும்மா பாசாங்கு செய்து தாளிடுவதுபோல் பாவனை காட்டினாயென்றும் தெரிந்துகொண்டேன்.”

இதுகேட்டு ஷஜருத்துர் அதிசயமுற்றுவிட்டார். தாம் முழு வலிமையுடனும் சுய உணர்ச்சியடனும் கதவுகளிடையே தாழ்ப்பாளை அழுத்தமாகப் போட்டு வந்திருக்க முஈஜுத்தீன் கூறிய வார்த்தைகள் அவரைக் கலக்கிவிட்டன. எனவே, இயற்கையாகவே அவர் சட்டென்று அவ்வறையின் கதவைத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவுதான்! எல்லாம் மின்வெட்டுகிற வேகத்தில் நடந்து முடிந்தன! முதுகுப்பக்கம் ஷஜருத்துர் திரும்பிப் பார்த்து மீண்டும் இப்பக்கம் திரும்புகிற அரை நொடிக்குள்ளே, யானை முதுகின் மீது பாய்கிற சிங்கத்தைவிட வேகமாக முஈஜுத்தீன் பாய்ந்து, ஷஜருத்துர்ரின் கரத்திடைப் பற்றியருந்த வாளை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டார்!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

Image courtesy: artsofphotos-mr.blogspot.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment