ஷவ்வால் மாத 2–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

நன்னம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்களெல்லாரையும் ஒரே இனமேபோ லாக்கிவைத்த எல்லாம்வல்ல அல்லாஹுத் தஆலாவை நாம் அனவாதமும் புகழ்ந்து வணங்குவோமாக. அவ் வாண்டவனுடைய திருநபியும் நம்மெல்லார்க்கும் ஏக சகோதரத்வத்தைப் போதித்தவருமாகிய நம் ஞானகுருவாம் முஹம்மது (ஸல்) அவர்களையும் போற்றி ஆசிர்வதிப்போமாக.

அன்புள்ள முஸ்லிம் மித்திரர்காள்! “நீங்கள் கக்ஷி பிரதிகக்ஷிகளாகப் பிளவுபட்டுப் போய்விட வேண்டாம்; பிரிவினை பட்டுச் சிதறிப் போக வேண்டாம். அப்படி நீங்கள் ஆய்விடுவீர்களாயின், உங்களுடைய பெருந்தன்மைகளெல்லாம் நிர்மூலமாகிப் போய்விடும்,” என்று ஆண்டவன் கூறுகின்றான். மேலும், “முஸ்லிம்களெல்லாரும் ஏக சகோதரர்களாவர்,” என்றும் கூறியுள்ளான். எனவே, நீங்களெல்லீரும் ஒரே ஆண்டவனைக் கொண்டும், ஒரே முஹம்மது (ஸல்) நபியைக் கொண்டும், ஒரே குர்ஆனைக் கொண்டும், ஒரே கிப்லாவைக் கொண்டும் உண்மையான ஈமான் கொண்டிருப்பதைப் போலவே, நீங்கள் எல்லீரும் ஒருமனப்பட்டு ஏக சகோதரர்களாய் விடுங்கள். நாமெல்லாரும் ஏகமாய் மஸ்ஜிதில் வந்து கூட்டமாய்ச் சேரவேண்டுமென்றும் அணியணியாய் நின்று ஏகமாய்த் தொழவேண்டுமென்றும் தினமும் ஜமாஅத்தைப் பேணியே ஆண்டவனை வணங்க வேண்டுமென்றும் இப்படி நாம் தவறாமல் செய்துவருவோமானால், தீனிலும் துனியாவிலும் நமக்கு இகபர நற்சாதனங்கள் கிடைக்குமென்றும் ஆண்டவன் திருத்தூதர் போதித்திருக்கின்றார்கள்.

நாம் நமக்குள்ளே எப்படிப்பட்ட வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் பாவித்தல் கூடாதென்றும், நாம் எக்காலமும் சண்டை சச்சரவுகளிட்டுப் பிரிந்து போகக் கூடாதென்றும், நம் முஸ்லிம்களுள் எவரும் எவரையும் விரோதித்துத் துவேஷங்கொள்ளக் கூடாதென்றும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது. நம்முன் இத்தகைய வேற்றுமைகள் உண்டாதல் கூடா. நாமெல்லாரும் மஸ்ஜித்களுக்கு வந்து ஜமாஅத்தோடு தொழுவோமானால், நம்முன் காணப்படக்கூடிய மனஸ்தாபங்களெல்லாம் நீங்கிச் சமரஸ முண்டாகுமென்றும், ஒழுங்கும் சமாதானமும் உயர்ந்தோங்குமென்றும் போதிக்கப் பெறுகிறோம். ஆதலின், நீங்களெல்லீரும் உங்களுக்குள் உற்ற நேயர்களாகவும், ஆபத்துக்குதவும் அன்பர்களாகவும் ஆய்விடுவீர்களாக. நம் நபிகள் நாயகமும் அவர் சஹாபாக்களும், மற்றும் மகான்களும் இத்தகைய சமத்துவ நீதிகளையே அதிகம் போதித்து வந்தார்கள்.

தம்முடைய ஜீவிய காலத்திலும் தமக்குப் பிற்காலத்திலும் எல்லோரும் ஏக மனப்பட்டு ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டு வந்தார்கள். ஒற்றுமையின் காரணத்தினால்தான் முரட்டு மனிதர்களாகிய பண்டைய அராபியர்களுக்குள் அதுகாலை நற்குணமும் நன்னடக்கையும் பெருந்தன்மைகளும் ஏற்பட்டன. ஒற்றுமையால்தான் அரபிகளெல்லாரும் மற்றும் முஸ்லிம்களெல்லாரும் தம்முள் சகோதர பாவத்தைக் கொண்டுள்ளார்கள். ஒற்றுமையினால்தான் காட்டுமிராண்டிகளாய் மிருகங்களேபோல் வாழ்ந்துகொண்டிருந்த பண்டை அராபியர்களுக்கிடையில் இப்போது சமத்துவமும் சகோதர வாழ்வும் ஏற்பட்டு ஒரே கும்பலாய்ச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒற்றுமையினால்தான் இதுபோழ்து நாம் 60 கோடி முஸ்லிம்களும் நமக்குள் ஏக சகோதர பாவனையைக் கொண்டுள்ளோம்; தினமும் நம் முஸ்லிம்களெல்லாரும் ஐந்து வேளையும் மஸ்ஜிதில் வந்து கூடித் தோளோடு தோள்சேர்ந்து வித்தியாசமில்லாமல் தொழுது கொள்கிறோம். ஏகமாய்ச் சமபந்தியாக உட்காந்து ஆகாரம் புசிக்கவும் உடன்படுகின்றோம். நம்முள் எப்படிப்பட்ட வித்தியாசமும் இல்லை.

நமது இஸ்லாம் மதத்தில் பெரும் பணம் படைத்த சீமானும் பரம தரித்திரனான ஏழையும் தேசத்தை ஆளும் இராஜனும் பிச்சையெடுத்துத் தின்னும் பக்கீரும் அழகாயிருக்கும் அரபியும், குரூபியாயுள்ள ஹபஷீயும் ஒன்றேதாம்; சமமான சகோதரர்களே. ஏனைய ஜாதியினர்களைப் போன்ற ஜாதி உயர்வும் சமூகப் பெருமையும் பணச்செருக்கும் அதிகாரக் கர்வமும் நம்முள் அறவே கூடா. எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஒரு தாயின் பிள்ளைகளே போலத்தாம் இருக்க வேண்டும். இதுவே இஸ்லாத்தின் போதனையும், அல்லாஹ்வும் அவன் ரஸுலும் இட்ட கட்டளையுமாகும். இவையே நாமெல்லாரும் எடுத்து நடக்கவேண்டிய கடமைகளுமாகும். இவற்றைத் தவிர்ந்து நடப்பவர் உண்மை முஸ்லிம்களாக இருப்பது முடியாது.

உண்மை இவ்வாறிருக்க, இக்காலத்தில் நம்முள் பலர் இந்தத் தத்துவங்களையெல்லாம் துறந்து, ஆண்டவனது உத்தரவை மீறி நடக்கின்றார்கள். வீணான சண்டைகளையும் அனாவசியமான மனஸ்தாபங்களையும் தம்முள் உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் நம் முஸ்லிம்களுள் பலர் பிணங்கிக்கொண்டு நேசத்தைத் துறந்து, பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்களாகியுங் கூடத் தம்முள் பேச்சுவார்த்தைகள் இல்லாமலே முரண்பட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள். இது பெரும் பாவமென்பதை அவர்கள் ஏன் உணர்தல் கூடாது?

ஒரு முஸ்லிமானவன் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்கள் மட்டும் பேசாமல் இருந்துவிடுவானாயின், அவன்மீது ஆண்டவனுடைய முனிவு உண்டாகிறது,” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கின்றார்கள். இதைக் கவனித்து இதன்படி உத்தமர்களாய் நடப்பவர்கள் மிகச் சிலராகவே காணப்படுகின்றார்கள். நம்முள் பல குடும்பங்கள் ஒருவருக்கொருவர் கேஷமலாபங்களை விசாரிக்காமலும் அன்னார் வீட்டு நல்ல கெட்ட வைபவங்களுக்குப் போகாமலும் வீணே விரோதத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அன்னிய ஜாதியார்களுடனும் பிறமத விரோதிகளுடனும் நாம் அன்னியோன்னியமாய் இருந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வும் ரஸுலும் போதித்திருக்க, நாம் இவ்வாறு நமக்குள்ளேயே இத்தகைய குரோதங்களைக் கொண்டிருப்பது சரிதானா? இதையுணரும் பிறமதஸ்தர் நம்மை இழித்துக் கூறமாட்டார்களா?

எனவே, அன்பர்காள்! “நீங்களெல்லீரும் ஒன்று கூடி ஆண்டவன் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.” உங்களுக்குள் ளிருக்கும் பகைமை, குரோதம், வஞ்சக எண்ணம், வீண் வைராக்கியம் யாவற்றையும் இன்றோடு விட்டுச் சமரசமாய், சகோதரத்வமாய், சமத்வமாய், ஒற்றுமையாய் விடுங்கள். அறியாமையால் உங்களுள் எவரேனும் எவருடனேனும் பேசாமலிருந்திருப்பராயின், இன்றே அன்னாருடன் முலாகத்தாகி மன்னிப்புக் கேட்டுப் பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் தகாதவர்களென்று விலக்கி வைத்திருந்த இனபந்து பங்காளிகள் வீடுகளுக்குச் சென்று சமாதானமாய் க்ஷேமலாபங்களை விசாரித்து வாருங்கள். எக்காரணங்கள் நேரிட்டாலும் இனிமேல் பந்து ஜனங்களுக்குள் விரோதத்தை வைத்து கொள்ளாதீர்கள். எல்லாருடனும் சேர்ந்துவாழுங்கள். உங்கள் குடும்பம் பிளவுபட்டுப் போனால், வாழ்க்கை சின்னாபின்னப்பட்டு போம். சேர்ந்துவாழ்வதே சிறந்த வலிமை. உற்றார் பெற்றோரோடு ஒத்து வாழுங்கள். உங்களுக்கு ஆண்டவன் அருள் உண்டாகும். இகபரத்தில் உங்களுக்கு ஆண்டவன் ஜயமும் மோக்ஷமும் சுவன சுகமும் அளிப்பானாக. ஆமீன்! ஆமின்! யாரப்பல் ஆலமீன்!

وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: samaa.tv

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment