நபி (ஸல்) வெளியேறிய ஒரு வாரத்தில் ஸுராக்கா இப்னு மாலிக் என்னும் ஒரு முரடர் அரை மயக்கத்தில் ஆலயத்தருகே வீற்றிருந்தார். இவர் ஒரு சிறந்த குதிரை வீரர்; வில் வீரர்; குறி பார்த்துக் கொலை புரியும் மூர்க்கத்தன்மை மிக்கவர்.

ஓடிப்போன முஹம்மதைப் பிடித்து வந்தால் பரிசு கிடைக்குமே என்கிற பேராசை வேறு இவரை வாட்டிக்கொண்டிருந்தது. அன்று மாலைப் பொழுதில், வெளியூர் சென்று பிரயாணத்தை முடித்துக்கொண்டு மக்காவுக்குத் திரும்பி வந்த இருவர் அங்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஸுராக்கா அவர்களுடைய உரையாடல்களை நுட்பமாகக் கவனித்து வந்தார். அவர்கள் கடலோரமாக வந்து கொண்டிருக்கும்போது எதிரே இருவர் வேகமாக வடதிசை நோக்கி நடந்து சென்றதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டார்கள். சட்டென்று அவருடைய மூளை வேலை செய்தது. குபீரென்று தம் குதிரைமீது அவர் பாய்ந்தேறினார். வில்லினின்று அம்பு பறக்கிற வேகத்தில் செங்கடல் ஓரமாகப் பறந்து சென்றார்.

எதிரே தென்படுகிறவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டே அவர் நபி (ஸல்) சென்ற பாதையூடே ஓடினார். விடாமுயற்சியின் பயனாக, முன்னே சென்று கொண்டிருந்த இரு ஒட்டகங்களையும் அவற்றின்மீது அமர்ந்து பயணம் செய்கிறவர்களையும் தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுகொண்டார் ஸுராக்கா. நழுவிச் சென்ற நற்பாக்கியம் தமது கைக்குள் சில நிமிடங்களில் சிக்கப் போகிறதென்னும் பெருங் குஷியுடன் அவர் தமது குதிரையின் லகானை லாவகமாகப் பிடித்துச் சவுக்கினால் ஓங்கிச் சுண்டி விட்டார். அது முன்னினும் வேகமாய்த் துள்ளி ஓடிற்று. இவர் தமது சுயநலத்தில்தான் குறியாயிருந்தாரன்றி, நூறு மைல்கள் அந்த வாயில்லாச் சீவன் பறந்துவந்து களைத்திருக்கிறதென்பதை உணர்ந்தாரில்லை. பாவம்!

முன்னே சென்ற ஒட்டகத்தின் மீதிருந்த அபூபக்ரு (ரலி) திரும்பிப் பார்த்தார். மிக நெருக்கத்தில் ஸுராக்கா ஆக்ரோஷத்துடன் நெருங்கி விட்டதைக் கண்டதும் அவர் பதறி விட்டார்.

“தொலைந்தோம்!” – அபூபக்ர் வாய்விட்டலறினார்.

மிகவும் நிதானமாக, “அபூபக்ர்! பதறாதீர்! அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான் என்பதை நான் மீண்டும் நினைவூட்ட வேண்டுமோ?” என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்.

முன்னே சென்ற ஒட்டகங்களுக்கும் பின்னே துரத்திய ஸுராக்காவின் குதிரைக்குமிடையே சுமார் 100 மீட்டர் இடைவெளியாகக் குறுகியபோது, இந்தப் பரி தடுமாறி, காலிடறி மண்டியிட்டு வீழ்ந்தது. ஸுராக்கா ஒரு தீவிரமான சகுனம் பார்க்கிறவர்; மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர். தடுமாறி மண்டியிட்ட குதிரையிலிருந்து கீழே உருண்டு வீழ்ந்த அவர் வாரிச் சுருட்டி எழுந்தார். தம் இஷ்ட தேவதையை நினைத்துக் கொண்டார். தெய்வ சங்கல்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் துடித்தார்; குறிபார்த்து அறிய வேண்டுமென்று நினைத்து, அம்பை வில்லில் பூட்டி மேலே பறக்க விட்டார்.

“வேண்டாம்; கைவிடு!” என்னும் அம்பு வந்து வீழ்ந்தது.

“ஏ மூதேவியே! எனது நல்லதிருஷ்டத்தை நீ நாசமாக்க விரும்புகிறாய்,” என்று வெறுப்புடன் அவர் காறியுமிழ்ந்தார். மீண்டும் குதிரையைத் தட்டித் தடவி விட்டு அதன் மீதேறி ஓட்டினார்.

இப்பொழுது இரண்டாம் முறையாகவும் அது தடுக்கி வீழ்ந்தது. அவர் மீண்டும் எழுந்து நின்று அம்பைப் பறக்க விட்டார்.

“வேண்டாம்; கைவிடு!” என்றே தடையுத்தரவு பிறந்தது.

ஸுராக்காவுக்கு இனியும் பொறுமைியல்லை. அந்த அம்பை எடுத்து முறித்துப் போட்டுவிட்டு, வாயாரச் சாமியைச் சபித்தார். எழுதவும் கூசும் சொற்களால் ஏசினார், திட்டிக் குவித்தார். அதே வேகத்தில் மீண்டும் அசுவத்தின்மீது பாய்ந்தேறினார்; அதை விரட்டினார்.

நபியவர்களின் மார்புக்கெதிரே அவர் முடுகிவிட்டார். அம்பை உருவினார்; வில்லை வளைத்தார்; விர்ரென்று விடுத்தார். ஆனால்-

அதே வினாடியில் தொந்தி மணலில் குளப்படி வைத்த குதிரையின் கால் புதையுண்டது. முருங்கைக் கிளை முறிவதுபோல் எலும்பு முறிந்து அது அங்கேயே தனது வாழ்நாளை முடித்துக்கொண்டது. வில்லினின்று பறந்த அம்பு எங்கோ திசை கெட்டு மறைந்து போகவும் இசகுபிசகாக வீழ்ந்ததில் பல் குத்தி, உதடுகள் உதிரம் சொட்டவும் கைகால்களில் சிராய்ப்பினால் தோல் புண்ணாகவும் போர்க்களத்தில் அடிபட்டுப் புறமுதுகிட்டோடி வரும் உலுத்தனேபோல் ஸுராக்கா காட்சியளித்தார். அந்நேரத்தில் பளிச்சென்று அவர் ஞானம் பெற்றார்.

பெருமூச்சிறைக்க, நொண்டி நொண்டிக்கொண்டே அவர் முன்னோக்கி ஓடினார். அவர் கிட்டே வந்ததும் நெட்டித்தள்ளிக் கொன்றுபோட அபூபக்ரு (ரலி) தயாராகி விட்டார். ஆனால், அவர் நபியவர்களின் ஒட்டகத்தண்டை சென்றார். அதில் வீற்றிருந்தவாறு கால்களைத் தொங்க விட்டிருந்த அவர்களது பாதத்தைப் பற்றினார். உதிரம் சொட்டும் உதட்டினால் அதை மாறி மாறி முத்தமிட்டார். விம்மினார். ஏங்கினார். வாய்விட்டழுதார். கசிந்து ஒழுகும் கண்ணீரால் அத்திருவடியை நனைத்து விட்டார். பெருங் கூப்பாடிட்டு அரற்றினார்:

“ஏ நபீ! என்னைக் காத்தருள்வீர்களாக! இந்தப் பாவியை மன்னிப்பீர்களாக! நீங்கள் ஒரு மாமன்னராக உயரப் போகிறீர்கள் என்பதை நான் இக்கணமே கண்டு கொண்டேன். அப்போது தயவுசெய்து என்மீது பழிவாங்கி விடாதீர்கள்! சித்திரவதைக்கு ஆளாக்காதீர்கள். என்னை நீங்கள் முற்றிலிரும் மன்னித்துவிட்டதாக ஓர் ஓலைச்சீட்டு எழுதிக் கொடுங்கள்,” என்று கெஞ்சினார்.

ஸுராக்கா தமது தவற்றுக்கு மனம் வருந்தினாரன்றி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தாரில்லை. அப்படியிருந்தும், அபூபக்ரை நபியவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

“உம்மிடமிருக்கும் பேனாவை மசியில் தோய்த்து அப்படியே ஒரு மன்னிப்புக் கடிதக் கட்டளையை எழுதும்,” என்று ஏவினார்கள் அண்ணல் நபி (ஸல்).

அவ்வப்போது இறைவனிடமிருந்து வரும் குர்ஆன் திருவாக்கியங்களை வரைவதற்குப் பயன்பட்டு வரும் பேனாவை இதற்கா பயன்படுத்துவது என்னும் எந்த யோசனையையும் செய்யாமல், நபியவர்களின் கட்டளைப்படியே அபூபக்ரு (ரலி) எழுதினார். திரு நபி (ஸல்) தமது கணையாழியை அதில் முத்திரையிட்டுப் பொறித்து, ஸுராக்காவிடம் நீட்டினார்கள்.

அவர் தேம்பியழுதுகொண்டே நடுங்கும் கரங்களுடன் அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“ஏ ஸுராக்கா! இதுமட்டுமில்லை. இன்றைக்குப் பாரசீக நாட்டை ஆண்டு வருகிற கிஸ்ராவ் பேரரசர் இருக்கிறாரே, அவருடைய கரத்தில் பூண்டிருக்கும் பொற் கடகங்கள் உம்முடைய கரங்களில் ஏறி மின்னுவதையும் நான் காண்கிறேன்.1 அந்த அளவுக்கு நீர் பாக்கியசாலி யாவீர்!” என்று நபி (ஸல்) தீர்க்க தரிசனம் வழங்கினார்கள். கொலை முயற்சியுடன் நபியை நெருங்கி மனம் மாறிய இந்த ஸுராக்கா பின்னொரு சமயம் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி விட்டார்.

பிறந்த ஊரை நிரந்தரமாகத் துறந்து வேறோர் அன்னிய ஊருக்குச் செல்கிறோமே என்னும் ஏக்கம் நபியவர்களை வாட்டித்தான் வந்தது. அதிலும், இடைவெளித் தூரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களது மனவேதனையும் கூடிக்கொண்டே இருந்தது. ஜுஹ்ஃபா என்னுமிடத்தை அண்ணலும் அபூபக்ரும் எட்டியபோது ஓர் இறையறிவிப்பு நபிக்குக் கிட்டிற்று: “எவன் குர்ஆன் திருமறையை உமக்கு வழங்கியருளிச் சில கடமைகளை உமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறானோ அவனே நிச்சயமாக மீண்டும் உம்மை அதே மக்கா நகருக்குள் பத்திரமாய்க் கொண்டுபோய்ச் சேர்ப்பிப்பான்” – (குர்ஆன், 28:85).

இந்த இறையறிவிப்பை நபி (ஸல்) ஒப்பித்துக் காட்டியபோது அதை எழுதிக் கொண்ட அபூபக்ரு (ரலி) சிந்தனைக் கடலில் மூழ்கிவிட்டார்.

“என்ன! அத்தனை பணக்காரப் பயல்களும், லட்சாதிபதிகளும், செல்வாக்கு மிக்கவர்களும் மக்காவின் அதிபர்களாக, எதேச்சாதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் செல்வச் செருக்காலும் உடற் பலத்தாலும் எல்லா முஸ்லிம்களையும் அனாதைகளாக ஆக்கி, அகதிகளாக வெளியேறி ஓடி ஒளியும்படி செய்துவிட்டார்கள். மாநபியும அங்கிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். இனி அவர்களைத் திருத்த எவரும் இலர். இப்படியிருக்க, மீண்டும் நாம் மக்காவுக்குள் நுழையும் பாக்கியத்தைப் பெறுவோமா? நபியே மக்காவின் அதிபர் ஆவார்களா?”

வியப்பு மேலீட்டால் அபூபக்ரு (ரலி) அன்று அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், ஆண்டவனின் சக்தி அளக்க முடியாத மகத்துவமிக்கது என்பதில் அவர் உறுதியான நம்பிக்கைதான் கொண்டிருந்தார். நபியவர்களை முதலில் மனமார ஏற்ற அவருக்கு எங்கிருந்து அவநம்பிக்கை தோன்றும்? எனினும். அன்றிருந்த சூழ்நிலையில் இந்தத் தீர்க்க தரிசனத் திருவாக்கியம் யாவர்க்குமே பெரும் வியப்பையே மூட்டிற்று. ஆனால். அடுத்த திருவாக்கியம் (28:86) அவ்வியப்பை அடக்கிவிட்டது. “(நபியே!) இந்தத் திருமறை உமக்கு அருளப்படும் என்பதை (14 அல்லது 15 அண்டுகளுக்குமுன்) நீர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், இந்த அருள் பாக்கியமிக்க அருமறை உமக்கு வந்து சேரவில்லையா?” என்பதே அத்திருவாக்கியம். ஆம், சூன்யமே பெரும் சூட்சுமமாக உருவெடுத்துவிடும் என்பதுதான் இஸ்லாமிய சித்தாந்தம்!

நெல்லை விதைத்தால் அது முளைத்து நாற்றாகும். அந்த நாற்றைப் பறித்து வயலில் நட்டால், வளர்ந்து கதிர் சாய்ந்து பலன் கொடுக்கும். அதே மாதிரியாக மக்காவின் ஹிரா மலைக்குகையில் 13 ஆண்டுகட்குமுன் நாற்றங்கால் செப்பனிடப்பட்டது. அந்தக் குகையில் தொடங்கி தவ்ர்க் குகைவரை இஸ்லாம் என்னும் இளநாற்றுத் துளிர்விட்டது. இப்போது இந்த ஹிஜ்ரா என்னும் வெளியேற்றத்துடன் அத்தனை நாற்றுகளும மக்காவிலிருந்து மதீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. செழிப்பு மிக்க வண்டல் மண் படிந்த மருத நிலத்தில் நாற்று ஊன்றப் பெறுவதேபோல் இந்த மதீனா நகரில் இஸ்லாமிய இளநாற்று மிகவும் பொருத்தமாக ஊன்றப்பட்டது. எண்ணிப் பத்தாண்டுகள் நிரம்பு முன்னே எப்படிப்பட்ட மகத்தான மகசூல் விளைந்துவிட்டது, தெரியுமா? எவரும் கற்பனைசெய்தும் பார்த்திராத சடுதியிலும் மகத்துவத்திலும் இஸ்லாம் புது சகாப்தத்தைப் பெற்றுக்கொண்டு விட்டது. பெரும் புரட்சிகரமான மாற்றத்துக்கு இந்த வெளியேற்றமே (ஹிஜ்ராவே) காரணமாதலால், உலகம் அதுவரை கண்டிராத ஒரு புது வருடக் கணக்கு அமலுக்கு வந்துவிட்டது. அதுவே ஹிஜ்ரீ என்று அழைக்கப்படுகிறது.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: radarislam.com


1. கி.பி. 635-ல் உமர் கலீஃபாவாக இருந்த காலத்தில் பாரசீகம் முஸ்லிம்களின் கைக்கு வந்தது. அப்பொழுது கிடைத்த கிஸ்ராவ் பேரரசரின் பெருஞ் செல்வங்களுள், கைக்கடகங்கள் ஸுராக்காவுக்கே பரிசாகக் கிடைத்தன. கி.பி. 622-ல் இதைத் தீர்க்க தரிசனமாய்க் கண்டார்கள் அண்ணல் நபி (ஸல்).


 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment