அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்,

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; எத்தனையோ சீர்திருத்தவாதிகள் பிறந்திருக்கிறார்கள்; பலப்பல மதப்பெரியார்கள் உத்தம நெறிகளைப் போதித்துச்

சென்றிருக்கிறார்கள். அவர்களுள் சிலருடைய வரலாறுகள் வரைந்து பாதுகாக்கப் படாமையால், அவர்களைப் பெருமைப் படுத்தும் ஆர்வத்துடன் பின்னே வந்த பக்தி மிக்க சீடர்கள் கற்பனைகள் பலவற்றைப் பொருத்திவிட்டிருக்கிறார்கள். உண்மை எது? கற்பனை எதுவென்று பகுத்தறிய முடியாத பல புராணங்கள் எங்கெங்கும் மல்கிக் கிடப்பதை நாம் காணலாம்.

ஆனால், 1400 ஆண்டுகட்குமுன், கட்டுப்பாடில்லாத ஒரு சமுதாயத்தில், ஆட்சிமுறை எதுவும் அமைந்திராத வனாந்தர வெளியில், படித்தறிந்தோர் மிகச் சிலரே காணப்பட்ட பாமர மக்கள் வாழ்ந்திருந்த கூட்டத்தார்களிடையில் இறைவன் ஓர் உத்தம சிகாமணியைத் தோற்றுவித்தான். மனிதருள் மாணிக்கமாய்த் திகழத்தக்க வகையில் அப் பெரியார் அவர்களை 63 ஆண்டு காலம் மண்ணிடை வாழச் செய்தான்; இதுவரை உலகம் கண்டிராத அத்துணைச் சிறந்த மாண்புமிக மாபெரு வெற்றி வீரராக உயரச் செய்தான்; அனைத்து நற்குண நல்லொழுக்கங்களின் சிகரமாகத் திகழச் செய்தான். அந்த மாபெரும் உத்தமசிகாமணியே உலகம் இன்றளவும் போற்றிப் புகழும் முஹம்மத் முஸ்தஃபா (சல்) அவர்கள் ஆவார்கள்.

இந்தப் புகழ்மிக்க நபி பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகைபடுத்தாமலும், மாசு படுத்தாமலும் பல சீடர்கள் குறித்து வைத்தார்கள்; மனப்பாடமாக உள்ளத்துள் பொறித்து வைத்தார்கள். எனவே, 1400 ஆண்டுக்ள கடந்தும்கூட, அந்தப் பெருநபியவர்களின் வாழ்க்கைச் சரிதமும், அன்னாரின் அன்றாட நடைமுறை நல்லொழுக்கங்களும் அப்பட்டமாக நமக்குக் கிடைத்து வருகின்றன. தமக்குமுன்னே தோன்றிய நபிமார்கள் பற்றிக் கற்பனையான, மிகையான வக்கணையான ஸ்துதிகளும் பாராட்டுதல்களும் இடம் பெற்று மாசு உண்டுபண்ணப்பட்டு விட்டதையுணர்ந்த நபிபெருமானார் அவர்கள், எங்கே தம்மையும் ஒரு ‘புராண புருஷனாகப்’ பிற்சந்ததியார்கள் உயர்த்திவிடுவார்களோ என்று ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டு,

“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே அன்றி, தேவனோ, தேவகுமாரனோ, கடவுள் அவதாரமோ அல்லன்; என்னையும் உங்களையும் படைத்த அந்த ஏக இறைவனின் ஒரு தூதன் —நபியே ஆவேன். எனக்கு முன் தோன்றிய நபிமார்களை, அவர்களுடைய பக்தர்கள் தெய்வாம்சம் மிக்கவர்களாக உயர்த்தியதைப்போல் என்னையும் உயர்த்தி மாசு கற்பித்து விடாதீர்கள்!”

என்று எச்சரிக்கைகள் பலவற்றை அவ்வப்போது இட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உத்தம நற்சிகாமணியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்நூலாகும். மனிதராய்ப் பிறந்து மனிதராய் வாழ்ந்து, எல்லா மக்களும் அடைகிற சகலவிதமான இன்ப துன்பங்களுக்கும் ஆளாகி, இறைவனிட்ட கட்டளைகள் அத்தனையையும் இனிது நிறைவேற்றி முடித்து, அவன் மக்களினக் கடைத்தேற்றத்துக்காக வழங்கிய திருக்குர்ஆன் அருமறையை ஒப்பித்து, நேர்வழி காட்டிச் சென்ற பரம உத்தமரிகன் 63 ஆண்டுகால மண்ணுலக வாழ்க்கையின் மாண்பைச் சுருக்கமாக எடுத்துக்காட்டும் நூலே இது.

நபிகள் பெருமானார் பற்றி இதுவரை எத்துனையோ எண்ணிலடங்காத நூல்கள் உலகின் மொழிகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன. என்றாலும், என்ன காரணத்தாலோ, அம் மாபெரும் உத்தம சிகாமணியின் உன்னத வாழ்க்கை வரலாற்றைப் பல லட்சக்கணக்கான மாந்தர் தெரிந்து கொள்ளாமல், அல்லது தவறாகக் கருதிக் கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட காலவரையறை எல்லைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக மட்டும் தோன்றியவர்தாம் முஹம்மத் (சல்) என்று எண்ணிக் கொள்வோர் நம்மிடைப் பலருண்டு.

ஆனால், இறைவன் வழங்கிய அழகிய திருமறையாம் குர்ஆன் வேதத்திலே ஓரிடத்தில் திரு நபியவர்கள் அகில பிரபஞ்ச அனைத்துப் படைப்புக்கும் ஒரு கருணையங் கடலாகவே (ரஹ்மத்துன்லில் ஆலமீன்) அனுப்பப் பட்டிருப்பதாகப் பகிரங்க அறிவிப்பைக் கொடுத்திருக்கிறான். அந்த அருமறையின் 21-ஆவது அத்தியாயத்தின் 107-ஆவது திருவாக்கியமே அது. எனவே, எல்லாப் பிறவியினரக்கும், உலகில் வாழும் சகல மக்களக்கும் கருணையுருவாக அமைந்த அப் பெருநபியை யாவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டியது சகல முஸ்லிம்களின் தலையாய கடனாக அமைந்திருக்கிறது. முஸ்லிமல்லாதார் அந்தப் பெருமானாரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமற் போனதற்கு முதற்காரணம், போதுமான நூல்கள் போதுமான அளவில் அச்சிட்டுப் பரப்பப்படாமையே என்பதில் ஐயமில்லை.

பூம்புகார் பிரசுரத்தார், உலகின் மாண்பு மிகு வீரராகிய நபிபெருமானாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வெளியிட வேண்டும் என்னும் உற்சாகத்தை ஊட்டினார்கள். சற்றும் குறுகிய நோக்கமோ, சமய வேறுபாட்டு உணர்ச்சியோ இல்லாமல், பரந்த நோக்குடன் அந்த நிறுவனத்தார் இப்பெருந்திட்டத்தை மேற்கொண்டமைக்கு இறைவன் அவர்களுக்கு என்றென்றும் நற்பாக்கியத்தைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.

நபிபெருமானார் அவர்களுடைய வரலாற்றைச் சகல மதத்தினரும், அனைத்துத் துறையினரும் உள்ளன உள்ளபடி உணர்வதற்கு ஏற்றமுறையில் தமிழில் எழுதித்தரும் வல்லமை படைத்தவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், அந்நிறுவனத்தார்கள் ஏழையேனாகிய என்னைத் தேர்ந்தெடுத்து, இம் மகத்தான பெரும்பணியை என்னிடம் ஒப்படைத்தார்கள். யானும் என்னால் இயன்ற அளவு முயன்று, அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக இந்நூலை எழுதித்தந்தேன். ஒரு சிறந்த இலக்கியத்தை உருவாக்கிவட வேண்டுமென்று அந் நிறுவனத்தினர் பெருந்தனத்தைச் செலவிட்டு இதை இந்த முறையில் அச்சிட்டு உங்கள் கரத்திடைத் தந்திருக்கிறார்கள். இம் மகத்தான சேவைக்காகத் தமிழுலகம ்அவர்களுக்கு நிரம்பவும் கடமைப்பட்டிருக்கிற தென்பதை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். தற்கால விலைவாசிப்படி இந் நூலுக்கு ரூ. 12/-வரை விலை நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், தியாக உள்ளம் படைத்த பூம்புகார் பிரசுர நிறுவனத்தினர் வெறும் லாப நோக்கத்தைக் குறியாகக் கொள்ளாமல், அதிகம் பேர் வாங்கிப் படிக்க வசதியாக, ரூ. 7-90 என்று இதற்கு விலை நிர்ணயித்திருப்பதை நாம் ஊன்றிக் கவனிக்கக் கட்டுப் பட்டிருக்கிறோம்.

திரு நபியவர்களின் வரலாற்றை இத்துணைப் பெரும் செலவில் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் இதை உங்கள் யாவரின் கரத்திலும் மிளிரச் செய்த பெரமைக்கு இறைவன் இவர்களுக்கு என்றென்றும் அருள் புரிந்து பெருமை வழங்கியருள்வானாக!

இந் நூலைப் படிக்கும் முஸ்லிமல்லாதார், முஸ்லிம்களின் பழக்க வழக்கப் பண்பாட்டை நன்குணராதவர்கள் முதலியோர் ஒருமை-பன்மை மயக்கம் கொள்ளாமல், ஆற்றொழுக்காகப் படித்தறிய வசதியாகத் திரு நபியவர்கள், அன்னாரின் பத்தினிமார்கள், அன்னாரின் சீடர்களாகிய அபூபக்ர், உமர் போன்றவர்கள் எல்லாம் மரியாதைப் பன்மையாகிய ‘அர், ஆர்’ விகுதியமைந்த வினைமுற்றுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளனர். முஸ்லிம் சம்பிரதாயப் பழக்க வழக்கத்தை யொட்டி, அவ் வினைமுற்றுச் சொற்களுடன் ‘கள்’ என்னும் விகுதி மேல் விகுதியேற்றிப் படிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

திரு நபியவர்களின் வரலாற்றைத் தமிழக மக்களுக்குப் புதுத்தோற்றப் பொலிவுடன் அறிமுகப்படுத்த எனக்கொரு வாய்ப்பைத் தந்த பூம்புகார் பிரசுரத்தார்க்கு எனது உளங்கனிந்த நன்றியை நவில்வதுடன், இதை இப்படி வடித்துத் தர எனக்குத் திராணியளித்த இறைவனுக்குச் சிரந்தாழ்த்தி வணங்கி அடி பணிகின்றேன். தமிழக மக்கள் இப் பெருநூலைப் படித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு பெற்றுய்ய வல்லோன் வழிவகுப்பானாக என்றும் வாழ்த்துகின்றேன்.

-N.B. அப்துல் ஜப்பார்

சென்னை-2,

15-2-1978

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>  <<அடுத்தது>>

Related Articles

Leave a Comment