மண்ணிடைப் பிறந்து நாற்பதாண்டுகள் வரை இவ்வாறு ஒரு பரிபூரண உத்தம சிகாமணியாய் உயர்ந்த முஹம்மது (ஸல்) இப்போது நாட்டில் வாழும் நெறி தவறியவர்களை நல்வழிப் படுத்துவது எப்படி என்று தீவிரமாய்ச் சிந்திக்க முற்பட்டார்கள். தாம் பெற்றிருக்கும் செல்வமும்

தமக்கு வாய்த்திருக்கும் உத்தம மனைவியும் தாம் சம்பாதித்துக் கொண்ட ‘நம்பிக்கையாளர்’ (அல் அமீன்) என்னும் பட்டமும் அவர்களைத் திருப்திப்படுத்திவிடவில்லை. மாறாக, ‘விலங்கின நியதிகளுடன் வாழும் தம் சமுதாயத்தினரை எப்படித் திருத்துவது? அநாகரிகம் பிடித்தவர்களை எப்படி நாகரிகமிக்கவர்களாக உயர்த்துவது? மூட நம்பிக்கையிலும் முரட்டுப் போக்கிரித்தனத்திலும் பல தலைமுறை காலமாக ஊறிப்போய்க் கிடப்பவர்களை எப்படி உய்விப்பது? கொள்ளையடித்தும் கொலை புரிந்தும் பொருளீட்டுகிற, கன்னியரின் கற்பைக் களவாடுகிற, கண்ட கண்ட அற்பப் பொருளையும் தேவதையென்று பூஜிக்கிற, பூசாரிகளின் புரோகிதர்களின் கைப்பாவைகளாக ஆகிவிட்டிருந்த, ஆன்ம பரிசுத்தம் என்றாலே இன்னதென்று அறிந்திராத, நல்லொழுக்கம் என்பது என்னவென்றே யூகித்தறியாத லட்சக் கணக்கான மாக்களை எப்படி மக்களாக்குவது?’ என்னும் கேள்விகள் அவர்களது மனத்துள் எழுந்தன.

இதே கவலையில் மூழ்கிய அவர்களுக்கு இல்லறச் சுகபோகம் இனிக்கவில்லை; பஞ்சணைமீது படுத்துறங்கி ஆனந்தமடையவேண்டும் என்னும் ஆசை எழவில்லை; அல்லது தாம் சம்பாதித்துள்ள பொருளைக்கொண்டு மாடமாளிகைகளை நிர்மாணித்துக் கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் பிறக்கவில்லை. பற்றற்ற துறவிக்குரிய மனப்பரிபக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. பல இரவுகளும் பகல்களும் அவர்கள் தமதில்லத்தைவிட்டு வெளியேறி, மக்கா நகரைச் சூழ்ந்துள்ள குன்றுகளில் ஏறி, தனித்த இடங்களில் உட்கார்ந்து தவமியற்றத் தொடங்கினார்கள். மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணாகி, மக்களின் மனோ வியாதிக்கான ஒரு சிறந்த மருந்து கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, இதிலுள்ள அத்தனை பொருள்களையும் ரக்ஷித்துப் பாதுகாக்கும் பரம்பொருள் ஒன்று இருக்கத்தான் வேண்டுமென்றும் அப் பரம்பொருளே நல்வழி காட்ட வேண்டும் என்றும் அவர்கள் முடிவு கட்டினார்கள். எனவே, தொடர்ந்து தியானம் செய்து, நெஞ்சு விம்மி வீங்கி வெடிக்கிற அளவுக்கு வேதனையுற்று அப் பரம்பொருளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள்:

“இந்த மானிட சமுதாயம் இப்படியே அழிந்து ஒழியட்டும் என்றோ நீ விரும்புகிறாய்? இவர்களுக்கோர் உஜ்ஜீவிப்பு இல்லை? சகலவற்றையும் படைத்த நீ மனிதனைச் சிறப்பான ஒரு படைப்பாக உற்பத்தி செய்திருக்கிறாய். ஆனால், இவனோ அச் சிறப்பைக் கைவிட்டு விலங்கினும் கீழ்ப்பட்ட இழிவைத் தேடித் திரிகிறான். உனது அரிய சிருஷ்டி இப்படித்தான் பாழாகவேண்டுமா? பகுத்தறிவென்னும் கூரான ஆயுதத்தில் துரு ஏறச் செய்து, அதன் நுட்பமான முனையை இவன் மழுங்கச் செய்துகொள்வதை நீ ஆமோதிக்கிறாயா? ஆக்கப் பணியிலே ஈடுபட்டு அமரர்களாக உயரவேண்டும் என்று நீ நாடிப் படைத்திருக்கும் மனிதர்கள் அழிவு வேலையில் இறங்கிச் சாத்தானாக மாறிவிட்டதைக் காணவில்லையா? புத்தியைத் தீட்டவேண்டியவன் கத்தியைத் தீட்டுகிறான்; ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ளவேண்டியவன் காமியத்தில் கரை புரள்கிறான்; சித்து வேலைகளைச் செய்து சீர்பெற வேண்டியவன் விஷத்துக்கு வித்திடுகிறான்—இப்படியே நிலைமை நீடித்தால் எதிர்காலம் என்னாவது?” என்றெல்லாம் அவர்கள் முறையிட்டுக் கொண்டார்கள்.

நாம் முன்னமே கூறியபடி, அவர்கள் எழுதப் படிக்கக் கற்றறியாதவர்கள். எனவே, பண்டை வேதங்களில், உபநிஷதுகளில், ஆகமங்களில் என்ன வரையப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறியார்கள். பள்ளிப் படிப்போ, மேற்படிப்போ, எந்தக் கல்வி ஆராய்ச்சியோ பெற்றிராத அவர்கள் தமது சொந்த சிந்தனைப்படியே ஒரு சர்வேசுவரன் இருக்கத்தான வேண்டுமென்றும், அவனிடம் முறையிட்டுக் கொண்டால்தான் பரிகாரம் தேடிக்கொள்ள முடியுமென்றும் தீர்மானித்துக் கொண்டார்கள். எப்போதாவது தமது இல்லம் திரும்பிச் சற்று ஓய்வுகொண்ட நேரம் நீங்கலாக, பகலோ இரவோ அவர்கள் தனித்திருந்தும், விழித்திருந்தும், பசித்திருந்தும், தியானத்திலும் மோனத்திலும் பிரார்த்தனையிலுமே நேரங் கழித்து வந்தார்கள். ஆனால், ஒரு வழியும் அவர்களுக்குப் புலனாகவில்லை. எனவே, முன்னிலும் அதி தீவிரமாகப் பிரார்த்திக்கவும், முறையிடவும் அவர்கள் முற்பட்டார்கள். அப்போதும் அவர்களுக்குப் பளிச்சென்று திடீர் ஞானோதயம் ஒன்றும் தோன்றிவிடவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டே வந்தன.

பன்னிரண்டு சாந்திரமானங்களுள் ஒன்பதாவதாகிய ரமலான் என்னும் மாதம் கடுங் கோடைப் பருவத்தில் கி.பி. 609-இல் நடந்துகொண்டிருந்தது. அம் மாத வளர்பிறை கடந்து, தேய்பிறையின் கடைசிக் கட்டமான நிலவிலா அமாவாசை நெருங்கிற்று. நீண்ட நாள் பட்டினி விரதத்தாலும், யோக நிஷ்டையாலும் உடற்சோர்வுற்றிருந்த அவர்கள் ஹிரா என்னும் (மக்கா நகரெல்லையிலுள்ள) ஒரு மலைக் குகையில் அரை விழிப்புணர்ச்சியுடன் வீற்றிருந்தார்கள். நள்ளிரவு நேரம நெருங்கிற்று. சுற்றிலும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்தது. விண்ணிலிருந்த உடுக்களின் ஒளிரேகையும் உட்புகாத அக் குகையினுள்ளே, உடற் சோர்வுற்றிருப்பினும் உளம் சற்றும் சோர்ந்திராத அம் மஹானெதிரே ஆயிரம் சூரியப் பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளி கக்கினாற்போல் பளிச்சென்று ஒரு வெளிச்சம் மின்னிற்று. அவர்கள் பெரிதும் மிரட்சியுற்றுவிட்டார்கள். பாதி மூடியிருந்த கண்ணை மெல்லத் திறந்து பார்த்தார்கள். அரையிருட்டில் ஓர் உருவம் அங்கு நிற்பதையும், அது கம்பீரமாக மெல்ல மெல்லத் தமதருகே நெருங்கி வருவதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.

இப்போது நிஜமாக அவர்களுக்கு அச்சம் பிறந்துவிட்டது. திகைப்புடன் அவ்வுருவத்தை அவர்கள் உற்று நோக்கினார்கள். “ஓதுவீராக!” என்று கம்பீரக் குரலில் கட்டளையொன்று அவ்வுருவத்தின் வாயினின்று ஒலித்தது. எதிரில் வந்து நிற்கும் இந்த உருவம் பிறப்பித்த இக் கடுமையான கட்டளையைச் செவியேற்ற முஹம்மது (ஸல்) உளம் பதறி, ஆனாலும் தைரியத்தை இழக்காமல், என்றும் பொய் புகன்றிராத தமது நாவினால் இப்போதும் மெய்பேசுகிறார்கள் : “அந்தோ! நான் எழுதப் படிக்கத் தெரியாதவனன்றோ! எங்ஙனம் ஓதுவேன்?” என்று.

இங்கொரு விஷயத்தை நாம் நினைவிலிருத்த வேண்டும். அதாவது, அங்கு அந் நேரத்தில் அவர்கள்முன் வந்து தோன்றிய உருவம் ஒரு வானவரென்பதையோ, அவ் வானவர் இறைவனின் கட்டளையை ஏற்றுவந்து, அவனிட்ட கட்டபை்படியே முஹம்மதை ஓதும்படி ஏவுகிறாரென்பதையோ, உபதேசம் புரியும் குருநாதர் எவரையும் பெற்றிராத இவர்களை இறைவனே தனது சீடனாக ஏற்றுக்கொண்டு, முதற் கட்டளையை இவ்வாறு பிரகடனப்படுத்தினான் என்பதையோ இவர்கள் அறியார்கள். எனவே, யதார்த்தமாகவும், மெய்பேசும் திடசித்தத்துடனும் இவர்கள் அந்த வானவரைப் பார்த்து, தமக்கு எழுத்தறிவோ படிக்கும் திறனோ இல்லையே என்று சோகத்துடன் பதிலீந்தார்கள். [இங்கே அவர்கள் கூறிய சொற்களை அப்படியே அரபு மொழியில் எடுத்தியம்புகிறோம். “மா அன பிகாரி!” — (‘நான் ஓதக்கூடிய ஒருவனாயில்லையே!’) என்று இதை மொழி பெயர்க்கலாம்.]

“எனக்கு ஓதத் தெரியாதே!” என்று கூறித் திகைத்து நின்ற முஹம்மது (ஸல்) அவர்களை அந்த வானவர் நெருங்கிக் கட்டியணைத்து மார்புறத் தழுவி, மீண்டும் கண்டிப்பான குரலில் “ஓதுவீராக!” என்று ஏவினார். திரும்பவும் இவர்கள் அதே பதிலைச் சொல்ல, மூன்று தரம் அடுத்தடுத்து வானவர் இவர்களை இறுகத் தழுவி, கட்டளையிட்டுக் கொண்டேயிருந்தார்கள். கடைசியாக, அவர் ஒரே மூச்சில், “உம்மைப் படைத்த ரக்ஷகனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக! அவன் மனிதனை ஓர் உதிரக் கட்டியினின்று தோற்றுவித்தவன். ஓதுவீராக! மிக உன்னத சிரேஷ்டனாகிய உம்முடைய அந்த ரக்ஷகன் எழுதுகோலைக் கொண்டு எழுத்தறிவித்தவன். மனிதன் அறியாதிருந்ததை அறியுமாறு கற்பித்துக் கொடுத்தவன்!” என்று ஐந்து திருவசனங்களை ஒப்பித்துவிட்டு மறைந்துவிட்டார்கள்.

வானவர் முதன்முதலாக இறைவனின் இந்த 5 அரபு வசனங்களை முஹம்மது (ஸல்) அவர்களிடம் கொணர்ந்து சேர்ப்பித்தார். இந்த ஐந்து திருவாக்கியங்களில் அடங்கிக் கிடக்கும் ஆழமான கருத்துகள், தத்துவார்த்தங்கள், இறைமை இரகசியங்கள் முதலியனபற்றி, சென்ற 14 நூற்றாண்டுகளாக எத்தனையோ ஞானிகளும் மதியூகிகளும் அலசி அலசி நிரம்பவும் எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள். இன்னம் எவ்வளவோ எழுதினாலும் அற்றுப் போகாத கருத்துகள் இவற்றினின்று ஊற்றுப் பெருகிகக்கெணாடுதாம் இருக்கின்றன. எனினும், நாம் சுருக்கமாக இங்குத் தெரிந்துகொள்ளவேண்டிய சாராம்சம் என்னவென்றால்:

அனைத்தையும் படைத்தவன் இறைவன். அத்தனை படைப்புகளுள்ளும் சிறந்தவன் மனிதன். இந்த மனிதனும் கட்புலனாகாக் கிருமியிலிருந்து முளைத்த ஓர் உதிரக்கட்டியிலிருந்து உருவாக்கப்பட்டவன். அதாவது, சூனியத்திலிருந்து சூட்சுமமாக உருவெடுத்தவன். எப்படியென்றால், உயிரற்ற எழுதுகோலில் மையைத் தோய்த்துக் காகிதத்தில் எழுதினால் தனது கருத்தை உருவாக்கிக் காண்பிக்க முடியும் என்று மனிதன் நினைத்துச் செயலாற்றத்தக்க வகையில், ‘எழுத்தறிவித்த இறைவன்’ அவன். அவன் மனம் வைத்தால் ஆகாதது ஒன்றில்லை. வெறும் உதிரக்கட்டி உயிர் பெறுவதுபோல், உயிரற்ற எழுதுகோல் மனிதனின் கரத்திடைப் பொருந்தி உயிருள்ள சொற்களை உதிர்ப்பதுபோல், குருநாதரோ கல்வியாசிரியரோ பெற்றிராத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனே குருவாக இலங்குகிறான். இனியும் இவர்கள் ‘நான் கல்லாதவன், கல்வி கற்காதவன்’ என்று சொல்லக்கூடாது; மாறாக, மாபெரும் ஞானபீட குருநாதனின் மாண்புமிகு சீடனென்று இவர்கள் இனி மாறிவிட்டார்கள்.

இந்த ஐந்து திருவசனங்களும் பசுமரத்து ஆணிபோல் உள்ளத்தில் பதியப்பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் சட்டென்று முழு நினைவும் திரும்பப் பெற்று, தியானத்திலிருந்து நன்றாக விழித்துக் கொண்டார்கள். ஆனால், அவர்களது மேனி முழுதும் திகிலால் நடுக்கமுற்று அங்கங்கள் உதறுவதையும், கடும் ஜுரம் தம்மைப் பீடித்துக்கொண்டாற் போன்ற திடுக்கம் குடிகொண்டதையும் உணரந்து விலவிலத்துப் போனார்கள். அந்த இருட்டினூடே தட்டுத் தடுமாறி, எழுந்து நடமாடி மிகவும் தள்ளாடிக் கொண்டே இல்லம் ஏகினார்கள். தடுமாற்றத்துடன் வீட்டுள் வந்து நுழையும் அவர்களை அன்புடன் கதீஜா பிராட்டியார் (ரலி) அரவணைத்துக் கொண்டதும், “ஏ கதீஜா! எனக்கென்ன நேர்ந்து விட்டது? — எனக்கொன்றும் புலனாகவில்லையே!” என்று புலம்பி மெய்துவண்டார்கள். சட்டென்று பாயை விரித்து அதன்மீது நீட்டிப் படுத்துக் கொண்ட அவர்களைப் பிராட்டியார் பரிவுடனும் பதஷ்டத்துடனும் நோட்டமிட்டார். சற்று நேரம் சென்று, பொழுது புலர்ந்ததும் அவர்கள் கொஞ்சம் நடுக்கம் தெளிந்து, ”ஏ கதீஜா! இத்தனை நாட்களாக நான் எந்த நைமித்திகனையும், சாமி ஏறிய பூசாரியையும் கொஞ்சங்கூட நம்பியதில்லை; முற்றும் வெறுத்தே வந்தேன் என்பதை நீ யறிவாய். ஆனால், அப்படிப்பட்ட நானே இப்போது பித்துப் பிடித்தவனாகி விட்டேன் போல் இருக்கிறதே! — ஆம், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறதே!” என்று குழறினார்கள்.

பிராட்டியார் கனிவுடன் அவர்களது வதனத்தைத் தழுவி, மிகவும் பரிவுடன், “ஏ அபுல்காஸிம்!” — (இத் தம்பதியரின் மூத்த மைந்தர் பெயர் காஸிம். எனவே, கதீஜா பிராட்டியார் தம் கணவரைக் ‘காஸிமின் தந்தையே!’ என்றே அழைப்பது வழக்கம். அபுல்காஸிம் என்பதற்கு இதுவே பொருள்) — “இறைவனே என்னைக் காப்பாற்றட்டும்! தங்களுக்கு அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழுமாறு அவன் விடமாட்டான். ஏனென்றால், நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மெய்யே பேசுகிறீர்கள்; தீமை இழைத்த எவருக்கும் திரும்பத் தீமை இழைத்தறியீர்கள்; சொன்ன சொல் தவறியதில்லை; எவர் வைத்த விசுவாசத்துக்கும் மாறு செய்ததில்லை; சிறப்பான நல்வாழ்க்கை நடத்தி வருகிறீர்கள்; உங்கள் உற்றார் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அன்பாய் ஒழுகிக்கொள்கிறீர்கள். நீங்கள் பொதுவிடங்களில் நின்று வெற்றுப் பேச்சுப் பேசி அரட்டையடித்து ஏதும் வீண்வம்பு வளர்ப்பதில்லை; இப்படிப்பட்ட தங்களுக்கு அப்படி என்ன ஒரு கெடுதல் நிகழ முடியும்? ஏன், விபரீதமான காட்சியெதையும் நீங்கள் கண்டீர்களோ!” என்று வினவினார். இதுகேட்டு அவர்கள் ஆமென்று தலையசைத்து, இரவு பின்னேரத்தில் நிகழ்ந்த அத்தனையையும் விவரித்தார்கள்.

”ஆ, என்னே மகிழ்ச்சி, என்னே பரமானந்தம்! என் பிரியநாதா! மகிழுங்கள்; களிப்பிடை மூழ்குங்கள்! எவனுடைய கரத்தில் என்னுடைய உயிர் பத்திரமாய் இருக்கிறதோ அந்த இறைவன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: நீங்கள் இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு நபியாக விளங்கப் போகிறீர்கள்!”

[நபி என்னும் அராபிய சொல் ஆங்கிலத்தில் Prophet என்று மொழி பெயர்க்கப் படுகிறது. இறைவனுடன் நேரடித் தொடர்பு கொண்டு, அவன் அறிவிக்கும் கட்டளைகளையும் வாக்குகளையும் மக்களிடம் அப்படியே ஒப்பிப்பவர் நபியாவார். உலகில் 1,24,000 நபிமார்கள் தோன்றியுள்ளார்கள், அவர்களுள் இறுதியானவர் முஹம்மத் ஆவார்கள்.]

கதீஜா (ரலி) பிராட்டியாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர் இருந்தார். நவ்ஃபல் என்பவரின் மைந்தராகிய அந்த அண்ணன் வரக்கா என்று அழைக்கப்பட்டார். அந்த வரக்கா பலமொழி கற்ற, எல்லா வேத ஆகமங்களும் பயின்ற ஒரு வித்தகர்; வயது 85க்கு மேல் ஆகியிருந்தது; முதுமை காரணமாகக் கண்பார்வையை இழந்து விட்டிருந்தார். அவர் தம் ஒன்றுவிட்ட தங்கையுடன் பலமுறையும் இறைமை இரகசியம் பற்றியும் பழைய வேதாகமங்கள் பற்றியும் ஒவ்வொரு நபி வந்து தோன்றும்போதும் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிலவின என்பது பற்றியும் முரடர்களிடையே தோன்றிய எல்லா நபிமாருமே எப்படிப்பட்ட இடுக்கண்களுக்கும் இடையூறுகளுக்கும் இரையாயினார்கள் என்பது பற்றியும் கலந்து உரையாடியதுண்டு. அன்றியும், அதற்கு முன்தோன்றிய ஈஸா நபி (ஏசுநாதர்) கூடிய சீக்கிரம் வேறொரு கடைசி நபி தோன்றப் போகிறார். அவர் ‘அஹ்மது’ என்று அழைக்கப்படுவார் என்றெல்லாம் தீர்க்கதரிசனம் வழங்கிச் சென்றிருக்கிறார் என்றும் வரக்கா கதீஜாவுக்கு விளக்கியிருந்தார். எனவே, இப்போது கதீஜாவின் கணவராகிய அஹ்மது தமக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவத்தை விவரித்தவுடன், பளிச்சென்று எல்லாம் அப் பெண்மணிக்கு விளக்கமாகிவிட்டது. எனவேதான், கணவரை ‘நபி’ என்று அந்த வினாடியே அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

முஹம்மதை (ஸல்) நபி என்று ஏற்றுக்கொண்ட முதல் ஜீவன் இந்த கதீஜா பிராட்டி (ரலி) என்னும் பெண்மணியே ஆவார். எனவே, இந்தப் பெருமைக்குரிய தனிக் கௌரவம் அந்த மாதரசிக்கு என்றைக்குமே அளிக்கப்பட்டு வருகிறது. அப்பொழுது அம்மையாருக்கு 55 வயதாகிவிட்டிருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாம்.

தம் கணவரைத் தேற்றிய அந்த அம்மையார் உடனே எழுந்து வரக்காவின் இல்லம் நோக்கி விரைந்தேகினார். பார்வையிழந்த அப் பெரியார் தமது நினைவில் நின்ற யூத, கிறித்தவ ஆகமங்களின் வேதவாக்கியங்களை அப்போது முணுமுணுத்துத் தியானித்துக் கொண்டிருந்தார். கதீஜா பிராட்டியார் (ரலி) அவசரம் அவசரமாகத் தமது பணிவான முகமனை அப் பெரியார்க்குச் சமர்ப்பித்து, தாம் தம் கணவரிடம் கேள்விப்பட்ட விருத்தாந்தத்தை விவரித்தார். இதைக் கேட்ட அக் கிழவர் ஒரு சிறு பிள்ளையேபோல் துள்ளிக் குதித்தார்.

”குத்தூஸுன், குத்தூஸுன்! (—பரிசுத்தம், மகா பரிசுத்தம்) இப்போது வந்து தோன்றியவர் முன்பு மூஸாவுக்கும் (Moses), பின்பு ஈஸாவுக்கும் (Jesus) வந்து வேதம் வழங்கிய நாமூஸுல் அக்பர் (பெருந் தேவ தூதர்—Gabriel) அன்றி வேறல்லர்! நிச்சயமாக உன் கணவர் தம் மக்கட் சமுதாயத்துக்கொரு நபியாக ஆகியிருக்கிறார். இச் சுபச் செய்தியை நீ அவரிடம் இக்கணமே தெரிவிப்பாயாக. எதிர்ப்புகள் பல தோன்றும்; இன்னல்கள் பல விளையும். எதற்கும் அவரைத் துணிந்து நிற்கச் சொல். கடைசிவரை அவர் தைரியத்தைக் கைவிடக்கூடாது,” என்று வரக்கா ஆர்ப்பரித்தார்.

கதீஜா பிராட்டியார் (ரலி) இந்த ஆறுதல் மொழியைத் தம் கணவரிடம் வந்து தெரிவித்த சில நாட்களில், வரக்காவும் முஹம்மது (ஸல்) அவர்களும் தற்செயலாகத் தெரு வீதியில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது அம் முதியவர், “எனது உயிர் எந்த இறைவனின் கரத்திடையிருக்கிறதோ அவன்மீது சத்தியமாகச் சொல்கிறேன். அதே இறைவன்தான் உம்மைத் தன் நபியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். இந்த மக்களினத்தை நல்வழிப்படுத்தவே உம்மை அவன் நபியாக்கியிருக்கிறான். ஏனென்றால், உம்மிடம் வந்து சென்றவர் நாமூஸுல் அக்பர் ஆவார். இனிமேல் உம்மை இந்த அறிவிலியான மாக்கள் பொய்யன் என்று ஏசுவார்கள்; உம்மை வெறுத்து ஒதுக்குவார்கள்; ஜாதிக்கட்டு என்கிற பெயரால் ஊரைவிட்டு ஓட்டிவிடுவார்கள்; உமக்கெதிராகப் படைதிரட்டிப் போர்களும் நிகழ்த்துவார்கள்—ஆனால், அந்தோ! அந்த நாட்கள் வருமுன்னே நான் இந்த உலகை விட்டுச் சென்றுவிடுவேனே! நான் மட்டும் அதுவரை உயிருடன் இருப்பேனாகில், உம் சார்பில் நின்று நானும் எதிர்த்துப் போராடிச் சமாளிப்பேனே! அந்த அளவுக்கு நான் கொடுத்து வைக்கப்படுவேனா?” என்று கூறி, அவர்களது நெற்றிமீது கனிவாக ஒரு முத்தமீந்தார். குழம்பிய சித்தத்துடன் இருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இந்த நம்பிக்கையும் தெம்பும் ஊட்டும் சொற்கள் பெரிதும் அமைதியைத் தந்தனவென்றாலும் சில நாட்களிலேயே வரக்கா காலமாகிவிட்டார்.

சுமார் ஆறு மாதகாலம் ஒரு விசேஷமுமில்லாமல் அமைதியாகக் கழிந்தது. ஆனாலும், குளிர் காரணமாகவும் முன்பு ஹிராக் குகையில் பெற்ற அதிர்ச்சி காரணமாகவும் நபியவர்கள் தம்மைக் கம்பளிகொண்டு போர்த்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த ஒரு நாளன்று, முன்பு காட்சியளித்த அதே வானவர் இவர்களெதிரே தோன்றி, ”ஏ (மேலங்கி கொண்டு) போர்த்துக் கொண்டிருப்பவரே! எழுந்திருப்பீராக! மக்களை எச்சரிப்பீராக; உமது இறைவனின் தூய்மையை மகிமைப்படுத்துவீராக!” என்று இறைவனின் வசனத்தை அறிவித்துவிட்டு மறைந்தார்.

இறைவனின் கட்டளை பிறந்து விட்டது, இனியும் சும்மா இருத்தலாகாது; தொடர்ந்தும் பேசாமல் முடங்கிக் கிடந்தால் அது இறைவனை அவமதிப்பதாகவும், அவனுடைய கட்டளைகளுக்கு மாறு செய்தததாகவும் ஆகிவிடுமென்னும் கடமையுணர்ச்சி நபியவர்களின் உள்ளத்தில் உறைத்துவிட்டது. எனவே, சட்டென்று எழுந்தார்கள்; போர்வையை உதறியெறிந்தார்கள்; புது உற்சாகம் பெற்றார்கள்; மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆக்கப் பணியில் இறங்கினார்கள்.

முதன் முதலாக அவர்களை அப்போது சந்தித்தவர் மக்காவின் ஒரு மிகப் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வர்த்தகரும் சிந்தித்துச் செயலாற்றக் கூடியவரும் பொறுமையுடன் முடிவெடுக்கக் கூடியவரும் ஆனால் அதே சமயத்தில் உற்சாகம், முன் ஜாக்கிரதை, யோக்கியப் பொறுப்பு, எளிய சுபாவம் குடி கொண்டவரும் நெருக்கமான தோழர்களிடம் நன்மதிப்புப் பெற்று விளங்கியவருமான, அபூகுஹாஃபா என்பவரின் மைந்தரான அப்துல்லாஹ் (அல்லது அப்துல் கஅபா) என்று அழைக்கப்பட்ட நண்பராவார். இவரே பிற்காலத்தில் அபூபக்ரு என்னும் சிறப்புப் பெயர் பெற்று உயர்ந்த பெரியார். இந்த அபூபக்ருவிடம் (ரலி) முஹம்மது (ஸல்) தமக்கேற்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்டதும், ”ஆம், ஒரே இறைவன்தான் இருக்கின்றான் என்பதில் நானும் நம்பிக்கை வைக்கிறேன்; அந்த இறைவனே தங்களை அவனுடைய தூதனாக அனுப்பி வைத்திருக்கிறான் என்றும் பூரணமாக நம்புகிறேன். இறைக் கட்டளைப்படியே இம் மனித சமுதாயத்தைச் சீர்த்ருத்திச் செம்மைப்படுத்த நீங்கள் முற்படும் அனைத்துப் பணியிலும் நானும் துணை புரிகிறேன்,” என்று உறுதியளித்தார். அந் நேரத்தில் அங்கிருந்த முன்னாள் அடிமையாயிருந்து விடுதலை பெற்ற, கதீஜா பிராட்டியார் கொணர்ந்த ஸைதும் (ரலி) இதே நம்பிக்கை விசுவாசத்தை வெளியிட்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த அபூத்தாலிபின் மைந்தர் அலீ (ரலி) சட்டென்று விசுவாசத்தை மனமார மொழிந்தார்.

இங்ஙனமாக, கதீஜா பிராட்டியாரையும் வரக்காவையும் அடுத்து இந்த நபி (ஸல்) மீது பூரண நம்பிக்கையும் விசுவாசமும் பூண்ட ஆடவர்கள் மூவராவர். ஒருவர், பெரு வர்த்தகர், நண்பர். மற்றொருவர், முன்னாள் அடிமை; இன்னொருவரோ பெரியதந்தையின் மைந்தர். இம் மூவருள் அபூபக்ரு மட்டுமே நபியவர்களைவிட இரண்டு வயது இளையவர்; மற்றிருவரும் சிறு வாலிப வயதினர். இவர்களையடுத்து மற்றும் ஐந்து முக்கியமான நபர்கள் நபியவர்களின் மீது நம்பிக்கை கொண்டு இஸ்லாம் என்னும் சாந்தி சமயத்தை மனமார ஏற்றார்கள்.

ஒரே இறைவனிருக்கிறான் என்றும் முஹம்மது (ஸல்) அவனுடைய நபி என்றும் மனப்பூர்வமாக நம்பிக்கை வைப்பது ஈமான் என்று அழைக்கப்படும். அவ்வாறு நம்பிக்கை கொண்டு, பிறகு அன்றாடச் செயலளவில் இறைவனிட்ட கட்டளையை முற்றும் ஏற்று நடப்பது இஸ்லாம் என்று அழைக்கப்படும். இவ்விரண்டும் அமையப்பெற்ற பண்பினர் முஸ்லிம் என்று அழைக்கப்படுவர். ஸலாம் (சாந்தி) என்னும் மூலத்தினின்று பிறந்த ‘இஸ்லாம்”, ‘முஸ்லிம்’ என்னும் பண்புகளை உணராத வேற்று மதத்தினர் அறியாமையாலும் ஆழ்ந்து சிந்தியாமையாலும் ‘முஹம்மதிய மதம்’ என்றும் ‘முகம்மதியர்’ என்றும் தவறாகக் கூறுவர். இது பெரும் பிழையாகும். ஏனென்றால், நபியவர்கள் தமக்குத் தோன்றியபடி சுயமே எதையும் கற்பனையாகப் போதிக்கவில்லை; இறைவன் என்ன ஏவினானோ அதையே கடைப்பிடித்தார்கள். அவன் இந்தச் சமயக் கோட்பாட்டுக்கு ‘இஸ்லாம்’ என்றே பெயரிட்டிருக்கிறான்; அப்படியே நாமும் அழைக்க வேண்டும். முஹம்மது (ஸல்) புதிதாகச் சுயமே ஒரு மதத்தைத் தோற்றுவித்தார்கள் என்னும் கருத்துப்பட அதை ‘முஹம்மதிய மதம்’ என்று நாம் விபரீதமாக அழைப்பது கூடாது; அது பாவம்.

நபி (ஸல்) போதித்த ஏகத்துவக் கோட்பாடும் அவர்கள் பிறகு தொடர்ந்து பெற்ற இறையறிவிப்புப் பிரகடனங்களும் சிலருடைய கருத்தைக் கவரவே, அவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்; நபிக்கு வந்த இறையறிவிப்பு வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள்; எழுதத் தெரிந்தவர்கள் வரைந்து பத்திரப்படுத்திக் கொண்டார்கள். அப்பொழுது நபியவர்கள், “இறைவன் எனக்கு அறிவிக்கும் திருவசனங்களை மட்டும் நீங்கள் எழுதிப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நான் சுயமே போதிக்கும் போதனைகளையோ, உரையாடல்களையோ, உபதேசங்களையோ வரைந்து விடாதீர்கள். ஏனென்றால், எது இறைவன் வாக்கு, எது என் சொந்த போதனை என்னும் வித்தியாசம் தெரியாமற் போய்விடும். இறைவன் அறிவித்த பழைய வேதங்களில் இப்படிப்பட்ட குழறுபடை நடந்து விட்டது. ஆனால், இனி அப்படி நடக்கக் கூடாது,” என்று கட்டளையிட்டு விட்டார்கள். எனவே, மோன நிலையிலிருக்கையில் அவர்கள் அவ்வப்போது வானவர் மூலம் அறிவிக்கப்பெற்ற திருவாக்கியங்களை மட்டுமே எழுதிப் பத்திரப்படுத்தச் சொன்னார்கள். அவர்களுடைய சீடர்களும் அப்படியே செய்தார்கள். அந்த இறைவசனங்கள் அமைந்த மறை மட்டுமே “குர்ஆன்” என்று வழங்கப்படுகிறது. இதிலுள்ள அத்தனை சொற்களும் நபியவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தன அன்றி, ஒரே ஒரு வரியேனும் சொல்லேனும் அவர்களுடைய சொந்த யுக்தியில் பிறந்ததில்லை. இந்த நுட்பத்தை அறியாத சில ஆசிரியர்கள், “முஹம்மதே குர்ஆனை இயற்றித் தந்தார்; அவரே எழுதி வைத்தார்,” என்று தவறாய்க் கூறுவர். நபியவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதையும், அவர்கள் தொடக்கத்திலேயே சகலவற்றையும் எச்சரித்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுத்தல் ஆகாது.

அடுத்தடுத்து, நாள்தோறும் அல்லது ஒரு நாளில் இருமுறை வானவர் ஜிப்ரீல் இறைவனின் அறிவிப்புகளை நபியவர்களுக்கு அறிவிக்கவும் உடனே இவர்கள் அவற்றைப் பிரகடனப்படுத்தவும் முற்பட்டார்கள். தொடக்க காலத்தில் வந்த அந்த இறையறிவிப்புகள் (அதாவது, குர்ஆன் திருவாக்கியங்கள்) மக்கா வாசிகளின், அந்தகார அராபியரின் தவற்றொழுக்கங்களைக் கண்டித்தன. ஒரே இறைவன் உண்டு, அவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் என்று ஏக தெய்வக் கோட்பாட்டை உபதேசித்தன. அவன் சகலவற்றையும் காண்கிறானாகையால் மனிதன் செய்கிற ஒவ்வொரு நல்ல காரியத்தையும் தீய நடக்கையையும் கவனிக்கிறான். எனவே, மாண்ட மனிதன் பின்னொரு காலத்தில் மீண்டும் உயிரூட்டப் பெறுவான். அவன் இழைத்த நன்மைக்கேற்ற வெகுமதியை இறைவனிடம் பெற்றுக் கொள்வான்; புரிந்த தீமைக்கேற்ற தண்டனையை அடைவான். உலக வாழ்வில் அன்றாடம் புரிகிற அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஏற்றவாறான எதிர் நிகழ்ச்சி மறுவுலக வாழ்வில் நிச்சயம் நிகழ்வுறும். உருவ வழிபாடு பெரும் பாவம்; பல தெய்வங்களை எவனும் கற்பிக்கக் கூடாது. தீயொழுக்கங்களைக் கைவிட வேண்டும், சத்தொழுக்கங்களைக் கடைப் பிடிக்க வேண்டும். — இவ்வாறெல்லாம் இறைக்கட்டளைகள் பிறக்கப் பிறக்க அவ்வப்போதும் முஹம்மத் நபி (ஸல்) அவற்றைப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக, தமது நாற்பதாம் வயதில் அவர்கள் ஒரு நபியாக—தீர்க்கதரிசியாக—மத போதகராக—சீர்திருத்தச் செம்மலாக—இறைவனின் தூதராக—சீடராக உயர்ந்துவிட்டார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment