ஒரு மனிதன் யாரேனும் நபீ அல்லது வலீயின் கப்ரினருகே சென்று, அல்லது உண்மையில் நபியாகவோ வலீயாகவோ இல்லாத ஒருவரின் சமாதியினருகே சென்று அவரை உண்மையில் நபியென்றும் வலீயென்றும்
எண்ணிக்கொண்டு அவன் வேண்டுதல் செய்வானாயின், அதில் பலவிதங்கள் காணப்படுகின்றன:
முதலாவதாக ஒரு மனிதன் மேலே சொல்லப்பட்ட அவர்களிடத்தில் தன்னுடைய உயிர், பொருள், கூட்டம், குடும்பத்தினர்கள் சுகமே இருக்க வேண்டுமென்றும் கடனைத் தீர்க்க வேண்டுமென்றும் பகைவர்களை வதைக்க வேண்டுமென்றும் இன்னமும், இஃதே போன்ற விஷயங்களில் ஆண்டவனைத் தவிர்த்து வேறு யாரும் செய்ய முடியாத காரியங்களையும் நிறைவேற்றி வைக்கவேண்டுமென்றும் வேண்டிக் கொள்வானாயின், இவன் ஆண்டவனுக்கு இணை வைப்பவன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எனவே, இவ்வாறான மனிதனுக்குச் சரியான தண்டனை கொடுத்தல் அத்தியாவசியமாகும்.
இவ் வண்ணமாய காரியங்களைப் புரியம் இவர்கள், ‘இந்தச் சமாதியினுள் இருப்பவர்கள் என்னைவிட ஆண்டவனிடம் மிக்க சமீபமானவர்களாய் இருக்கின்றார்கள்; இவர்கள் எங்களுக்காக ஆண்டவனிடம் ஸிபாரிஷ் செய்வார்கள்; இதற்காகத்தான் நான் இவர்களை ஓர் இடைத் தூதான வஸீலாவாகப் பற்றிக் கொண்டிருக்கின்றேன். இம் மாதிரியாகவேதான் நாம் யாரேனும் ஓர் அரசனைக் கண்டுகொள்ள வேண்டுமாயின், இடையில் சில மனிதர்களின் தேவை நமக்கு ஏற்படுகின்றது,’ என்று கூறுவாராயின், இது முஷ்ரிகீன்கள், நஸாராக்களின் கோட்பாடே போலவேதான் இருக்கின்றது. ஏனெனின், அன்னவர்களும் தங்களின் மனத்துக்குள், ‘அன்பியாக்களும் மஷாயிகுகளும் எங்களின் தேவையான காரியங்களை ஆண்டவனிடம் கேட்டு நிறைவேற்றி வைப்பார்கள். எனவே, நாங்கள் அவர்களுக்கு வணக்கம் செய்கின்றோம்,’ என்று எண்ணிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு சொல்லிக்கொண்டும் இருந்தார்கள். உதாரணமாக, பின்னே காணும் குர்ஆன் வாக்கியங்களைச் சிறிது கவனிப்பீர்களாக:
“எங்களை அவர்கள் ஆண்டவனுக்குச் சமீபமானவர்களாய்ச் செய்வதற்காகவே அவர்களுக்கு நாங்கள் வணக்கம் புரிகின்றோம்—” (39:3).
“ஆண்டவனைத் தவிர்த்து ஏனையவர்களை ஸிபாரிஷ் செய்வர்களென்றா பற்றிக் கொண்டிருக்கின்றனர்? (நபியே!) அவர்கள் எந்த வஸ்துவின் மீதும் ஆதிக்ய மற்றவர்களாகவும் சுயமே ஒன்றையும் அறியாதவர்களாகவும் இருக்கின்றனர் என்று சொல்வீராக—” (39:43).
“(நபியே!) சொல்வீராக: ஸிபாரிஷின் சகல உரிமைகளும் அல்லாஹ்வுக்கு உரியனவாய் இருக்கின்றன. வானுலகங்களின் பூலோகத்தின் அரசாடடசி அவனுக்குரியனவாய் இருக்கின்றன. பிறகு அவன் பக்கமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்—” (39:44).
“அவனைத் தவிர்த்து உதவி செய்பவரும் உங்களுக்கு மற்றெவருமில்லை. (இதனால்) உபதேசம் பெறமாட்டீர்களா?” (32:4).
“(அல்லாஹ்வான) அவனுடய சமுகத்தில் அவன் அனுமதியின்றி யாரே ஸிபாரிஷ் செய்பவர்?” (2:255)
மேலே காட்டப்பட்ட இவ் வாக்கியங்களினால் நம் இறைவன் சிருஷ்டிப் பொருள்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவுக்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசத்தை விளக்கமாய்க் காட்டியிருக்கின்றான். மனிதர்களுள் சிலர் அரசனைக் காணவேண்டுமாயின், யாரையேனும் இடையில் சில மனிதர்களை ஸிபாரிஷாக ஏற்பாடு செய்து கொள்ளுகின்றார்கள் என்பது வாஸ்தவமே. ஏனெனின், அரசனைக் காணப்போகும் இவன், தான் தாழ்ந்த இனத்தில் பிறந்தவன் என்று எண்ணுகிறான்; இல்லையேல், இவனது தாழ்ந்த அந்தஸ்தை கவனித்து இவனே வெட்கமடைகின்றான். இல்லையேல், இஃதேபோன்ற இன்னமும் அனேக காரணங்களை மனத்தில் எண்ணிக்கொண்டு ஸிபாரிஷ் ஒன்று இருந்துதான் தீரவேண்டுமெனத் தீர்மானம் பண்ணிக்கொள்ளுகின்றான். ஆனால், ஆண்டவனிடமோ அரசன் முதல் ஆண்டிவரை சகல மன்பதைகளும் சமமானவர்களாகவே இருந்து வருகின்றனர். அன்றியும் ஆண்டவன் அனுமதியைப் பெற்றுக்கொண்டாலொழிய யாரும் அவன்பால் ஸிபாரிஷ் செய்வதென்பது இயலாது; அனுமதியைப் பெற்றுவிடினும், ஆண்டவன் நாட்டமும் பொருத்தமும் எம்மாத்திரமோ, அம்மாத்திரமேதான் இவர்கள் ஸிபாரிஷ் செய்தல் வேண்டும். ஸிபாரிஷ் செய்யவேண்டுமாயின், அதற்கும் அல்லாஹ்வின் அனுமதி இருந்துதான் தீரவேண்டும்.
எனவே, இவையனைத்தையும் கவனிக்கும்போது, ஸிபாரிஷ் சம்பந்தமான எல்லாக் காரியங்களும் காரியங்களைச் சாதிக்கக் கூடிய எல்லா உதவிகளும் அண்டவன் வயமேதாம் இருந்து வருகின்றனவென நாம் ஸ்பஷ்டமாய்த் தெரிந்துகொள்ளுகிறொம். இதனால்தான், நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்டனிடம் اللهم اغفرلى انشت اللهم ارحمنى انشت (ஆண்டவனே! நீ நாடுவாயாயின் என்னுடைய பாபத்தை மன்னிப்பாயாக! நீ நாடுவையாயின் என்மீது கிருபை செய்வாயாக!) என்ற சந்தேகப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு துஆ கேட்க வேண்டாமென்று விலக்கி இருக்கின்றார்கள். ஆனால், அல்லாஹ்வினிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கோரிக்கை செய்யவேண்டுமாயின், மனோ திருப்தியுடனும் முழு நம்பிக்கையுடனும்தாம் செய்யவேண்டுமென மற்றோரிடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.
அன்றியும், ஆண்டவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டுமாயின், மனப்பூர்வமாய் உறுதியுடன் கேட்கவேண்டும் என்பதையே பின் காணும் குர்ஆன் திருவாக்கியங்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றன:
“வேலைகளை விட்டுச் சாவகாசமாய் இருப்பீராயின் (ஆண்டவனான) அவன் பக்கமே சார்ந்து விடுவீராக. மேலும் அவனுக்கே அஞ்சிக் கொண்டிருப்பீராக—” (94:7,8).
ஏனெனின், “என்னையே அஞ்சி நடப்பீர்களாக—” (2:41).
“மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்—” (5:44).
நம் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள்மீது சலவாத் சொல்ல வேண்டுமென்று சொல்லி, அம்மாதிரி சொல்வது நாம் செய்யும் துஆ ஒப்புக்கொள்ளப்படுவதற்குச் சாதகமாய் இருக்கின்றதென்றும் கூறியுள்ளார்கள். ஆனால், குறுக்கு வழியே செல்லுகின்ற சிலர், “இந்தப் பெரியார் அல்லாஹ்வுக்குச் சமீபமானவராய் இருக்கின்றார்; ஆனால், நாமோ அவனை விட்டு நெடுந்தூரத்துக்கு அப்பால் நிற்கின்றோம். எனவே, இப்பெரியார்களின் ஸிபாரிஷின்றி நம்முடைய துஆவை ஆண்டவன் கேட்பது முடியாது,” என்று எண்ணுகின்றனர்.
இவ் வார்த்தைகளையும் இவைபோன்ற வெறுமையான வேறுபல தத்துவங்களையும் கவனிக்குமிடத்து, இது முஷ்ரிகீன்களின் வார்த்தைகளே போல்தான் காணப்படுகின்றது. இதற்காகவேதான் ஆண்டவன், “உம்மிடம் என்னுடைய அடியார் என்னைப்பற்றி வினவுவாராயின், யான் சமீபத்திலிருக்கிறேன்; அழைப்போனின் அழைப்புக்கு யான் விடையிறுப்பவனாய் இருக்கிறேன்” (2:186) (எனச் சொல்வீராக) என்று அதிக விஸ்தாரமாய் விளக்கியுள்ளான்.
இஃது ஒரு பக்கல் கிடக்க. ஆண்டவன், “ஒவ்வொரு மனிதனும் என்னையே வணங்க வேண்டும்; என்னிடமே ஒவ்வொரு வஸ்துவையும் கேட்கவேண்டும்,” என்று கூறியிருப்பது மல்லாமல், பிரதி தினமும் தொழுதுகொண்டு வருகின்ற ஐந்து வேளைகளிலும், “உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்; உன்னிடமே எங்களுக்கு வேண்டிய உதவிகளையும் தேடுகின்றோம்,” எனச் சொல்லவேண்டுமென்று ஆக்ஞாபித்துள்ளான். இவ்வளவுடன் நில்லாது, முஷ்ரிகீன்களின் நிலைமையைக் காட்டுமிடத்து, “அவர்களை (பொய்த் தெய்வங்களை) எங்களை ஆண்டவனருகே கொண்டு சேர்ப்பதற்கல்லாமல் (வேறு வேலைக்காக) நாங்கள் வணங்குவதில்லை,” என்று கூறுகின்றனரென ஆண்டவனே கூறியுள்ளான்.
இரண்டாவதாக, இம்மாதிரியான முஷ்ரிகீன்களிடம் நாம் கேட்பது என்னவெனின், “நீங்கள் அழைக்கும்படியான கப்ருக்குள்ளிருக்கும் இவர்கள் உங்களின் நிலைமையை மிக்க அறிந்தவர்களாய் இருக்கின்றார்கள் என்றா எண்ணுகின்றீர்கள்? அல்லது உங்களின் நாட்டத்தை நிறைவேற்றி வைப்பதில் மிக்க திராணி பெற்றவர்களென்றா கருதுகின்றீர்கள்? அல்லது மற்றெல்லாவற்றையும் விட உங்கள்மீது இவர்கள் தாம் மிகுதியான தயாள முடையவர்கள் என்றா கொள்ளுகின்றீர்கள்?” என்பதுதான்.
இவ்வாறெல்லாம் நீங்கள் எண்ணங்கொள்ளுவீர்களாயின், இஃது உங்களின் அறியாத்தனமேயாகும். அன்றியும் இஃது உங்களின் வழிக்கேட்டையும், நீங்கள் ஆண்டவனுக்கு மாறு செய்கின்ற விதத்தையுமே எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனின், நீங்கள் உண்மையில் ஆண்டவனே சகல வஸ்துக்களின் நிலைமையையும் மற்றெல்லாரையும்விட அதிகம் அறிகிறவனாய் இருக்கிறானென்றும் உங்கள் நாட்டங்களை நிறைவேற்றி வைப்பதில் ஆண்டவனே அதிக திராணி பெற்றவனாய் இருக்கிறானென்றும் மேலும் மற்றவர்களைவிட உங்கள்மீது ஆண்டவனே அதிக தயாளமுடையவனாய் இருக்கிறானென்றும் எண்ணுவீர்களாயின், இவ்வாறு சகல விஷயத்திலும் உயர்ந்தவனாய்க் காணக்கிடக்கும் ஏக பராபரனான ஆண்டவனை விடுத்து, ஏனையவர்களிடம் நீங்கள் ஏன் செல்லுகின்றீர்கள்?
இது மற்றொரு பக்கல் கிடக்க. “ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென நாடுவீர்களாயின், முதன் முதலாய் இரண்டு ரக்ஆத் தொழுகையைப் பிரத்தியேகமாய்த் தொழுதுவிட்டு ஆண்டவனிடம் உங்களுடைய குறைகளையும் குற்றங்களையும் தேவைகளையும் மன நாட்டங்களையும் எடுத்துக் காட்டவேண்டும்,” என நம் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருப்பதையேனும் நீங்கள் கவனித்தல் கூடாதா?
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>