ஆகையால் ஷிர்க் செய்யும் படியான இம்மனிதர்கள் ஷிர்க்கென்னும் இணையை வைப்பதல்லாமல், தாங்கள் உணர்ந்து கொள்ளாமலே பொய்யையும் கைக்கொண்டு வருகிறார்கள். ஏனெனின், பொய்யென்பது
ஷிர்க்கின் இணை பிரியாத அந்தரங்க நண்பனாயிருந்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக:
“விக்ரஹ வணக்கத்தினாலுண்டாகும் அசுத்தத்தினின்று தப்பிக் கொள்வீர்களாக; மேலும் பாபமான சொற்களினின்றும் தப்பிக்கொள்வீர்களாக. ஆண்டவனுக்கே வழிபடுங்கள்; அவனுக்கு எவரையும் இணையாக்காதீர்கள்” (குர்ஆன் 22: 30, 31) என்றொரு வேத வாக்கியம் காணக் கிடக்கின்றது. இதையொட்டியே நம் நாயகம் (ஸல்) அவர்கள், “பொய்ச் சாக்ஷியம் சொல்வது ஆண்டவனுக்கு இணை வைப்பதற்குச் சமமானதாயிருக்கிறது,” எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். இன்னம், அல்லாஹ்வின் மற்றொரு வாக்கியத்தைக் கவனிப்பீர்களாக:
“கன்றுக் குட்டியை (வணங்குவதற்காக)ப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் சமீபத்தில் தங்கள் ரப்பினிடத்திலிருந்து கோபத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; மேலுமவர்கள் இவ்வுலகத்தில் தாழ்மையையும் அடைவார்கள். இவ்வாறே பொய் சொல்லுபவர்களுக்குத் தண்டனையளிப்போம்” (குர்ஆன் 7:152).
மேலும், இது சம்பந்தமாய் ஹஜரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் சொல்லியிருக்கும் வாக்கியத்தை ஆண்டவன் தன் திருமறையில் பின் காணுமாறு கூறுகின்றான்:
“பொய்யாக அல்லாஹ் அல்லாத மற்றும் ஆண்டவர்களையா தேடுகின்றீர்கள்? உலக மடங்கலையும் படைத்து ரக்ஷிக்கும் அவ்வாண்டவனை நீங்கள் என்னென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்?” (குர்ஆன் 37: 86, 87).
எனவே, மேலே காட்டப்பட்ட குர்ஆன் வாக்கியங்களினாலும், நம் நாயகம் (ஸல்) அவர்களின் திருவாய்மொழியினாலும் ஷிர்க் செய்வதால் பொய் எவ்வாறு சேர்ந்து வருகிறதென்பதை ஒரு சிறிது உணர்ந்து கொண்டிருப்பீர்களென்றே யான் எண்ணுகிறேன். இவ்வாறு ஷிர்க் செய்து பொய் சொல்லும் இன்னவர்களின் வார்த்தையில் மற்றொன்றையும் கவனிப்பீர்களாக:
ஷைகு கிழக்குக் கோடியிலும் இவரிடம் முரீது பெற்ற சிஷ்யர் மேற்குக் கோடியிலுமாயிருப்பினும், ஷைகானவர் தம்முடைய கஷ்பினால் திரைகளையும் தடுப்புக்களையும் அப்புறப்படுத்தித் தம்முடைய சிஷ்யரைத் தம்மளவில் இழுத்துக் கொள்ளுவார்; இப்படிச் செய்ய முடியாதவர் உண்மையில் ஷைகாயிருப்பது முடியாது, என்று அன்னார் கூறுகின்றனர். இஃதோர் ஆச்சரியமான விஷயமன்று. ஆண்டவனை ஒப்புக் கொள்ளாத நாஸ்திகனொருவன் ஒரு மனிதனைக் கூண்டில் அடைத்து, அவனைக் காணாமற் போகும்படி செய்து மனிதர்களின் முன் காட்டுகிறான். ஒரு வினாடிக்குள், பல ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க முடியாத அத்தனை வேலைகளையும் இந்த நாஸ்திகன் செய்து காட்டுகிறான். ஆனால், இதைக் கண்கட்டு வித்தையென்று பொதுமக்கள் சொல்லுவார்களேயன்றி வேறன்று.
இவ்வண்ணமாகவே சில தாத்தாரிகளும் ஹிந்தீக்களும் சூடானைச் சேர்ந்தவர்களும் ஆண்டவனை வணங்காது, நக்ஷத்திரத்துக்கு வணக்கம் புரிந்துகொண்டு ஷைத்தான்களின் கைவசப்பட்டுப் பெரிய பெரிய ஆச்சரியத்துக்குரிய வியவகாரங்களையெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இம்மாதிரியான காரியங்களைச் செய்யக்கூடிய பெரியார்கள் இல்லையென்று சொல்வதாய்த் தப்பான தாத்பரியம் கொண்டு விடாதீர்கள். ஒன்று மறியாதவர்களும் ஆண்டவனுக்கு இணை வைத்து வணங்கும் மனிதர்களும் அல்லாஹ்வுக்கு எதிரியே போல் காணப்படும் சில பொய்யர்களும் இவ்வாறான காரியங்களை ஜாலவித்தைகளே போல் காட்டி ஒன்றுமறியாத பாமர மக்களை வழிக்கேட்டிலாக்கிவிடுகிறார்கள். ஆகையால், இந்த மாதிரியான வார்த்தையில் நம்பிக்கை கொண்டு ஏமாந்து பேகாதீர்கள், என்பதே இதன் முக்கியக் கருத்தாகும்.
இனி, கப்ரினருகே சென்று தங்கள் கோரிக்கைகளைக் கோரிக்கொள்வதற்கு மூன்றாவது மார்க்க மென்னவெனின், “ஏ ஆண்டவனே! இன்னாரின் மரியாதைக்காக, அல்லது இன்னாரின் பொருட்டால் நீ என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றி வைப்பாயாக!” என்று சொல்வதாகும். இதைக் கவனிக்குமிடத்து, இம்மாதிரியாய் இவ்வகிலத்தின்கண் அனேக மனிதர்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சஹாபாக்களும் தாபியீன்களும் சலஃப்களான இமாம்களும் இம்மாதிரி எங்கேனும் செய்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்த்ததில் இதற்குரிய ஆதாரமொன்றும் குர்ஆனிலும, ஹதீதிலும் பெரியார்களின் நடக்கையிலும் யான் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பகீஹ் அபீமுஹம்மத் பின் அப்துஸ்ஸலாம் என்பவர் தம்முடைய ஃபத்வாவில் சில நாயக வாக்கியங்களைக் காட்டி இம்மாதிரி செய்வதாயின், நாயகம் (ஸல்) அவர்களைக்கொண்டு மாத்திரம் வேண்டுதல் செய்யலாம் என்று வரைந்திருகிறார். இவர் சொன்ன நாயக வாக்கியங்கள் உண்மையிலேயே மெய்யானவையாயிருப்பின், எம்பிரான் (ஸல்) அவர்களை மாத்திரம் வஸீலாவாய்க கொண்டு ஆண்டவனிடம் வேண்டுதல் செய்யலாமென ஏற்படுகிறது. எனவே, பகீஹ் அபீ முஹம்மத் பின் அப்துஸ்ஸலாம் என்ன பத்வாவைக்கொடுத்து விட்டாரோ என்றெண்ண வேண்டாம். அதைக் கீழே பார்த்துக் கொள்வீர்களாக; எவரோ ஒருவரின் வினாவுக்கு விடையில் சொன்னதாவது:
“திர்மதீ, நஸயீ முதலிய ஹதீது கிரந்தங்களில் காணப்படுவதாவது… ஆண்டவனே! உன்னிடமே யான் கேட்கிறேன். உன்னுடைய அருள்வாய்ந்த நபியின் பொருட்டால் உன்னிடம் நான் வஸீலா தேடுகிறேன். யா முஹம்மத்! யா ரசூலல்லாஹ்! என்னுடைய தேவைகள் நிறைவேற ரப்பளவில் தங்களை யான் வஸீலாவாய்க் கொண்டிருக்கிறேன். இதனால் ஆண்டவன் என்னுடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுவான். ஏ வல்லவனே! முஹம்மத் ஸல் அவர்களை எனக்கு ஸிபாரிஷ் செய்பவர்களாய்ச் செய்வாயாக!”
“இந்த ஹதீதினால் சில மனிதர்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஜீவித்திருந்த போதும் மரணமடைந்த பிறகும் மனிதர்கள் வஸீலாவாய்க் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். மேலும், எம்பிரான் (ஸல்) அவர்களை வஸீலாவாய்க் கொண்டு அல்லா(ஹ்) அல்லாத வேறெந்தச் சிருஷ்டிகளிடமேனும் தங்கள் கோரிக்கைகளைக் கேட்காது அந்த ஏகபராபரனான ஆண்டவனிடமே தான் தன்னுடைய குறைகளைச் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும் இந்த ஹதீதினால் நன்கு தெரிந்து கொள்ளுகிறோம்.”
“இன்னமும் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் தொழச் செல்லும்போது பின்காணுமாறு துஆ கேட்க வேண்டுமெனச் சொல்லி யிருக்கின்றார்கள்: ஆண்டவனே! உன்னிடம் தங்களின் குறைகளைத் தெரிவித்துக்கொள்ளும் மனிதர்களின் பாத்தியதையைக் கொண்டும் யான் நடக்கும் இந்நடையின் பொருட்டும், மேலும் நான் ஏதேனும் தீங்கு செய்வதற்காகவோ, அல்லது அக்கிரமம் செய்வதற்காகவோ மனிதர்களுக்குக் காட்டுவான் வேண்டியோ, நான் நல்லவனென்று சொல்லப்படுவேன் என்பதற்காகவோ வெளியில் புறப்பட்டேனில்லை. ஆனால், உன்னுடைய கோபத்துக்குள்ளாகாது, உன்னுடைய பொருத்தத்தைப் பெற்றுக்கொள்ளுவான் வேண்டியே யான் புறப்பட்டுள்ளேன். என்னை நரக வேதனையினின்றும் நீ காப்பாற்றி, என்னுடைய பாபமனைத்தையும் திரஸ்கரிப்பாயாக. ஏனெனின், உன்னைத் தவிர வேறு யாரும் பாபத்தை மன்னிப்பவரில்லை.”
“இந்த ஹதீதின் வாயிலாய் ஆண்டவன் சமுகம் வேண்டிக்கொள்பவர்களின் பொருட்டாகவும் தான் தொழுகைக்காக நடந்து செல்வதன் பொருட்டாகவும் வேண்டிக்கொள்ளலாமென்பது தெரிகின்றது. இதுவுமல்லாமல் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்குச் சில உதவியை (பாத்யதையை)க் கொடுப்பதாய் வாக்களித்துள்ளான், எப்படி எனின்:”
“மூஃமினானவர்களுக்கு உதவிசெய்வது எம்முடைய ஹக்காகும்.”
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>